லண்டன்,சிங்கப்பூர்,பாரீஸ் ஆகிய பெரு நகரங்களில் நகரத்தின் மையத்தில் ஆற்று சவாரி செய்து அந்தந்த ஊர்களைச் சுற்றிப் பார்த்த கணங்களிலெல்லாம் சென்னையின் கூவமும்
அப்படி இருந்தால் ...என்ற கனவு எழுவதுண்டு.
சென்னையும் கூவமும் அப்படித்தான் இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது ’மதராசபட்டினம்’.
எமியின் காதல், பரிதியின் வீரம் ஆகியவற்றை விடப் படத்தில் விஞ்சி நிற்பது அன்றைய சென்னையின் நிலக் காட்சிகளும்,கொச்சின் ஹனீபாவின் மிக நுட்பமான நகைச்சுவையும்தான்.
ஆள் புழக்கம் அதிகமில்லாத மெரீனாக் கடற்கரை....
வாகனப் போக்குவரத்துக்கள் அதிகமின்றித் துடைத்து விட்டது போலிருக்கும் மவுண்ட் ரோட்....
உல்லாசப் படகுப் பயணம் செய்ய ஏற்றதாய் நாற்றமில்லாத கூவம்
(எமி , மூதாட்டியாய்த் திரும்ப வருகையில் அதே நதிக் கரை அவளை மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது)
கை வண்டி மற்றும் கை ரிக்ஷாக்கள்,அந்தக் காலத்துக் கார்கள்
கவர்னர் மாளிகையாய்க் காட்டப்படும் ரிப்பன் கட்டிடம்....
ஸ்பென்ஸர்....செண்ட்ரல் ஸ்டேஷன்.....
ராணி மேரி கல்லூரியில் பயின்ற என் அம்மாவும்(’30களில்)
நிஜமாய்க் கண்டிருக்கக் கூடும்...
நான் ....நிழலாய்த் திரைப்பட வழி மட்டுமே....!
ஆனாலும் ஒரு காலகட்டத்தில் நிஜமாக இருந்ததை இன்றைய சூழலின் நெருக்கடியான சென்னையில் நிழலாக்கிக் காட்ட எத்தனை உழைப்பு உட்செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது வியக்க வைக்கிறது;படக் குழுவைப் பாராட்ட வைக்கிறது.
மதராச பட்டினத்தின் மற்றுமொரு மைய ஈர்ப்பு , காலம் சென்ற திரு ஹனீபா அவர்கள்.
எமி தன்னைப் புகைப்படம் எடுக்க முயலும்போதெல்லாம் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமான ஆர்வம்,
பிரிட்டிஷ் காலத்து துபாஷிகளை(மொழிபெயர்ப்பாளர்கள்) அப்பட்டமாகப் பிரதி எடுத்தது போன்ற மிகையற்ற சித்தரிப்பு,
ஆங்கிலேயனிடம் வாலைக் காட்டிக் குழையும் அடிமைப் புத்தி,
தேவையற்ற அங்க சேட்டை எதுவுமின்றிக் குரல் உயர்த்தாத நுண்ணிய நகைச்சுவையால் பார்வையாளர்களை வசப்படுத்தும் திறம்
என்று ஹனீபா படத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
படங்களில் அவரை இனிமேல் சந்திக்க முடியாத ஏக்கத்தையும் கிளர்த்துகிறார்.
தமிழ்ப் பட உலகில் இது வரவேற்கத்தக்க காலங்களின் மாற்றம்.
அதில் மதராசப்பட்டினத்துக்கும் குறிப்பிடத்தக்க ஓரிடம் உண்டு
மேலும் படங்கள் ;
http://www.kollywoodzone.com/img-madharasapattinam-01-83898.htm