துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.4.26

நினைவுத்திரை-5

பரத்தமை என்ற பாலியல் தொழிலும், பரத்தையை நாடி  ஆடவன் செல்லும் பரத்தையிற் பிரிவும் மிக இயல்பாக அங்கீகரிக்கப்பட்டு வந்த காலம் சங்க காலம்.

மனிதர்களின்  வாழ்க்கைமுறையைத்  தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் அகம்,புறம் என்று இரண்டாக வகைப்படுத்தியிருந்தன.காதலிக்கும்  காலகட்டத்துக்குக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னாலுள்ள காலத்துக்குக் கற்பு என்று பெயர் சூட்டியும் இருந்தன. மனைவியோடு இல்லறம் நடத்தும் கற்புக்காலத்தில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் ஆறு. அவற்றுள்,

கல்விக்காக, நண்பர்களோடு கூடி மகிழ்வதற்காக,

நாடுகாவலுக்காக,தூதுசெல்வதற்காக,

பொருள்தேடுவதற்காக ஆகிய ஐந்து காரணங்களை விடவும் அவன் பரத்தையிடம் பிரிந்து செல்வதே முதல் காரணமாக, முதன்மை தந்து சொல்லப்பட்டிருக்கிறது. பரத்தையிடம் சென்றுவருவது, கடை கண்ணிக்கோ,அலுவலகத்துக்கோ சென்று வருவது போல மிக இயல்பான ஒரு செயலாக - ஏன் ஓர் ஒழுக்கமாகவே கூட அந்த நூல்களில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. தலைவி அதற்காக ஊடல் கொள்ளும்போது வாயில் எனப்படும் தூதை அனுப்பி அவளை சமரசம் செய்து விடுவதும் மிகவும் சுலபமானதாக, எளியதொரு  செயலாகவே இருந்திருக்கிறது.


களவியலில் காதலியாக  முதன்மை பெற்றிருந்த தலைவி/ மனைவி, கற்புக்காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவனுக்குரிய வாரிசைப் பெற்று தரும் ஓர் இயந்திரமாக மட்டுமே ஆக்கப்பட்டு விடுகிறாள். ‘பரத்தையிற்பிரிவு’ சார்ந்த இலக்கிய வரிகளும் இலக்கண நூற்பாக்களும் நமக்கு  உணர்த்துவது அதை மட்டுமே.


ஒரு பெண்ணுக்கு மாதவிடாயைத் தொடர்ந்து வரும் சில நாட்கள் கருத்தரிக்க வாய்ப்புள்ள காலகட்டம் என்பதை நவீன அறிவியல் சொல்வது போலவே தொல்காப்பியமும் சொன்னாலும் அது பெண்ணின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடவும் அவளது கருப்பைக்கே முதன்மை இடத்தை அளித்திருக்கிறது.தலைவன் மாதக்கணக்கில் வேண்டுமானாலும்  பரத்தையிடம்  இருந்து கொள்ளலாம்,  ஆனால் கரு வயிற்றில் தங்கும் குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டும் அவன் தலைவியிடம் திரும்பியே ஆக வேண்டும் என்ற விதியை

‘பூப்பின் பிறப்பாடு ஈராறு நாளும்

நீத்து அகன்று உறையார்’என்மனார் புலவர் 

பரத்தையிற் பிரிந்த காலையான’- (தொல்,கற்பியல் 46)

என்று வகுத்திருக்கிறது தமிழ் இலக்கணம்.  பரத்தையிடம் பிரிந்திருக்கும் தலைவன், தலைவியின் மாதவிடாய்ச்  செய்தி கேட்டதும் காலம் தாழ்த்தாமல் உடனே தனது வீட்டுக்குச் சென்று, நான்காம் நாள் முதல் பன்னிரண்டு நாள் வரை அவளோடு உறவு கொண்டாக வேண்டும் 

(‘கூடியுறைய வேண்டும்’ )என்ற பொருள்பட அமைந்திருக்கும்  மேற்காணும்  தொல்காப்பிய நூற்பா, பலருக்கும் அதிர்ச்சியைத்தரக்கூடிய  ஒரு புதிய செய்தியாகக்கூட இருக்கலாம். 


மாதவிடாய்க்காலம் முடிந்து அவள் நீராடிய பின்,

   ‘கருவயிற்று உறூஉம் காலம் ஆதலின் 

    பிரியப் பெறாஅன் பரத்தையிற்பிரிவோன்’      (நம்பியகப்பொருள்-91)

என்று தொல்காப்பியத்துக்குப் பின்னால் எழுந்த நம்பியகப்பொருளும் அந்தக்  கருத்தையே தொடர்ந்து வழி மொழிகிறது.


கதை இதோடு முடிந்து விடவில்லை…

குறிப்பிட்ட அந்த நாட்களை அவனுக்கு நினைவுபடுத்தும் வகையில் தலைவி தன் தோழிக்குச் சிவப்பாடை அணிவித்துத் தலைவனிடம் அனுப்பியாக வேண்டும்.. (“ செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி”)  பரத்தையிடம் இருக்கும் தலைவன் உடனே  தலைவியிடம் திரும்பியாக வேண்டும் என்பதற்கான சங்கேதம் அது. அதேபோலக் குழந்தை  பிறந்த பிறகு அந்தச்  செய்தியை அவனிடம் அறிவிப்பதற்காக வெள்ளை உடை அணிந்தபடி தோழி செல்வாள்.அவன் வீடு திரும்புவதற்குத் தரப்படும் சமிக்ஞை அது. இவை வெறும்  இலக்கண விதிகளாக மட்டுமல்லாமல்  சங்கப் பாடல்களிலும் பதிவாகி இருப்பதால்  அன்றைய நடப்பியல் வாழ்வின் போக்கே அப்படித்தான்  இருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


“பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனியூரன்” என்று  பூத்த கரும்பாகப் பரத்தையையும், காய்த்த நெல்லாகத் தன்னையும் ஐங்குறுநூற்றுப்பாடலில் (பாடல் எண் 4) உருவகப்போக்கில்  குறியீடாகக் குறிப்பிடும் தலைவி, அவனது வம்சத்தைத் தொடர வைப்பதனால் மட்டுமே தனது முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறாள்.அதை அவள்  உணர்ந்தும் இருப்பதாலேயே குறிப்பிட்ட அந்த நேரத்தில் மட்டுமே  தோழியை அனுப்புவது,தனது தன்மதிப்புக்கு இழுக்கு என  எண்ணுவதில்லை.


தலைவன் பரத்தையிடம் பிரியும்போது தலைவி பிரிவுத்துன்பத்தால் வருந்துவதை  மட்டுமே அகப்பாடல்கள் சித்தரிக்கின்றனவே தவிர,அவ்வாறு அவன் சென்று வந்ததைத் தவறு என்பதை எந்தத்தலைவியும் எங்கும் சுட்டிக் காட்டுவதில்லை. அந்தச்செயலுக்கு எந்த எதிர்ப்பேச்சும் மறுப்பும் இல்லாமல்.. ஒரு சில நாட்களோ ஒரு சில மணி நேரங்களோ அவனோடு மிக இலேசான ஊடல்/ பிணக்கம் காட்டிவிட்டு  இணங்கிப் போவதே அவர்களின் விதி என்ற கோணத்திலேதான் இலக்கண இலக்கியங்கள் திருமணம் கடந்த உறவான(post marital)  தலைவனின் புறத்தொழுக்கத்தைப் பார்த்திருக்கின்றன. சங்கத்தைத் தொடர்ந்து வந்த காலகட்டங்களிலும் கூட அதிக மாற்றங்கள் இல்லாமல் பெண்ணின் நிலை இப்படியேதான் தொடர்ந்திருக்கிறது.


தலைவனின் புறத்தொழுக்கத்தைத்  தவறு என்று கூடச் சொல்லத் தயங்குபவர்களாய், அழுகிப்போன ஒரு பின்புலத்தோடு மறுகிக்கொண்டிருந்த பெண்களுக்கு நடுவே, அடங்கிப் போவதையும் பணிந்து போவதையும் அன்றி வேறு எதையும் அறிந்திராதவர்களும், முகமற்றவர்களும் - பல நேரங்களில் பெயரும் கூட அற்றவர்களுமான சமய இலக்கியங்கள் காட்டும் மகளிர் சிலரிடம் இருந்து மாற்றுக் குரல்களும் எதிர்க்குரல்களும் எழுந்திருப்பதைக் குறிப்பிட்ட இலக்கிய வரிகளில் ஆழ்ந்து பயணம் செய்யும்போது அறிந்து கொள்ள முடிகிறது.


பொதுவாகத் தமிழ்ச்சமய இலக்கியப் பரப்பில் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் தவிர ஓரளவு தனித்துவம் உடைய பெண்களாக வேறு யாரும் பெரிதும் முன்னிறுத்தப்படுவதில்லை. 63 சைவ நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லும் சேக்கிழாரின் பெரிய புராணம்,இறைவனுக்காக எதையும் துறக்கச் சித்தமாக இருக்கும் அடியவர்களின் புகழ் பாடுகிறதே தவிர அவர்களின் எல்லாச் செயல்களையும்.உடன்பட்டு, அவற்றை நிறைவு செய்து தரப்  பக்கத்துணையாக  உடன் நின்ற மனைவியரின் உணர்வுகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.


'இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன்' என்று போற்றப்படும் இயற்பகை நாயனார், தன் மனைவியையே  தருவதற்கும் கூட மறுப்புக்காட்டாமல்  முன் வருகிறார். தன் ஒப்புதல் இன்றி அவர் எடுத்த முடிவைக்  கேட்டு ஒரு கணம் மனம் கலங்கி நிற்பதைத்தவிர அதை எதிர்க்கவோ,மறுக்கவோ, தன் சம்மதமும் அதற்குத் தேவை என்று வலியுறுத்தவோ அவரது மனைவி துணிவதில்லை. தானே  ஒரு பண்டமாக,தானமாக  வழங்கப்படும்போதும் கூடக் கணவன் உரைத்ததை நிறைவேற்றுவதைத் தவிர,அதை மறுக்கும் உரிமை தனக்கு  இல்லையென்றே அவரது எண்ண ஓட்டம் செல்கிறது. 

" என் உயிருக்கு ஒரு நாதர் ,நீ  உரைத்தது ஒன்றை நான் செய்யும் அத்தனை அல்லால்  

உரிமை வேறு உளதோ  எனக்கு "

என்று அப்போது அவர் பேசும் வார்த்தைகள்,அந்தக் காலப் பெண்களின் வாழ்நிலைக்கு ஒரு பதச் சோறு.


மறுப்போ எதிர்ப்போ காட்டாமலோ / காட்ட முடியாமலோ அவலமான பிறிதொரு நெருக்கடிக்கு ஆட்பட்டுப் போனவர் சிறுத்தொண்டரின் மனைவியான திருவெண்காட்டு நங்கையார். (இவரும் திருவெண்காடு என்று ஊரால் மட்டுமே அறியப்படுபவர்). "வாளால்  மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்"என்று  பிள்ளைக்கறி தர முன்வந்த சிறுத்தொண்டரின் பெருமையையே  பட்டினத்தார் பாடலும் பேசுகிறதே தவிர, அதற்கு அந்தத் தாயின் சம்மதம் பெறப்பட்டது குறித்தோ ,தாய் பிடித்திருக்கத் தந்தை அதை வெட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அந்தப்பெண் உட்பட நேர்ந்தது பற்றியோ எங்கும் எவராலும் பெரிதுபடுத்திச் சொல்லப்படவில்லை. படையல் செய்வதற்காகக்  குழந்தையை  நீராட்டும்போது,அது  நிவேதனப்பொருளாகப் படைக்கப்படப் போகிறதே என்ற அச்சத்துடன் உச்சிமுகர்ந்து அதற்கு முத்தம் கொடுக்கக்கூடத் தயங்குகிறாள் அந்த அன்னை. ‘மையும் கண்ணின் மருங்கொதுக்கி, மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி’ என்று உள்ளுக்குள் புலம்புவதைத் தவிர வேறு எந்த வகையிலும் தன்  துன்பத்தை வெளிக்காட்டி ஆற்றிக்கொள்ள அந்தத்தாய்க்கு வழியில்லை.இங்கும் காப்பியம் முதன்மைப்படுத்துவது கணவர் சொல்லை மறுக்காமல் ஏற்ற  அவரது மனோதிடத்தை மட்டுமே.


இறைப்பற்று என்ற குறிப்பிட்ட ஒரே  நோக்குடன் பெரும்பாலும் ஆண் அடியார்களின் பெருமையைச் சிறப்பிப்பதற்காக, ஆண் நோக்கில் -ஆண் புலவரால் பாடப்பட்ட ஒரு காப்பியத்தில் பெண்ணின் உணர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததில் வியப்பில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு பார்வையுடன் பக்திச்சுவை நனி  சொட்டச் சொட்டப் பாடும் சேக்கிழாராலும் கூட  ஒரு சில இடங்களில் பெண்களின் தன்மானக்குரல்களை முன் வைக்காமல்  முற்றாகத் தவிர்த்து விட முடியவில்லை..

முகம் கரைந்து போய்க் குரல் தேய்ந்து போன  அடியவர்களின் மனைவியரே அதிகமாக உள்ள அந்தக்கூட்டத்துக்கு நடுவிலிருந்து, பெயர் குறிப்பிடப்படாத திருநீலகண்டரின் மனைவியும், சுந்தரரின் இரண்டாவது மனைவியான பரவை நாச்சியாரும் தன்னுணர்வு கொண்ட உரமான பெண்களாக வெளிப்பட்டிருப்பது வியப்புக்குரியதுதான்.


மைந்தனைக்  காணிக்கையாக்க முன்வந்த சிறுத்தொண்டரைப் பாராட்டிய அதே தொனியில்...

"மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்"என்று திருநீல கண்டரையும் சிறப்பித்துப் பாடுகிறார் பட்டினத்தார். இளமை துறந்த  திருநீலகண்டரின் மன உறுதி ஒரு புறம் இருக்க, அதை அவர் துறக்குமாறு தூண்டிய அந்தப்பெண்ணின் மனத்திண்மையும்  

 உறுதியோடு அவர்  சொன்ன சூளுரையின் வீரியமுமே மந்தைக் கூட்டத்திலுள்ள பிறரிடமிருந்து அவரை வேறுபடுத்தி நம் கவனத்தைக் கவரக்கூடியவை.


மண்பாண்டங்கள் செய்வதோடு சிவத்தொண்டும் செய்து வந்தவர் திருநீலகண்டநாயனார். அருந்ததி போன்ற கற்புடைய மனைவியாருடன் இல் வாழ்க்கை நடத்தி வருகையில்   "இளமை மீதூர இன்பத் துறையில் எளியரானார்"  என்று போகிற போக்கில் மிக இயல்பானதொரு நடப்பாக அவர்  விலைமகளிரிடம் சென்ற செயலைச் சொல்லிவிட்டுப் போய் விடுகிறது  பெரியபுராணம். அதை அறிந்து கொண்ட அவரது மனைவி, இல்வாழ்க்கைக்குரிய பிற எல்லாக் கடமைகளையும்  செய்து விட்டு அவரோடு உடலுறவு  கொள்ள மட்டும் உறுதியாக மறுத்து விடுகிறார்.

“கற்புறு மனைவியாரும் கணவருக்கு ஆனவெல்லாம் பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய..”

என்று அந்த நிகழ்வைச் சித்தரிக்கிறது காப்பியம். இப்படிப்பட்ட தருணங்களில் பெண்கள் வழக்கமாகக் கொள்ளும் மிக இலேசான ஊடல்தான் அது என்று எண்ணும் கணவர், அவரை சமாதானப்படுத்தி அணைத்துக் கொள்ள முற்படுகையில்  'தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்' என்று சினத்தோடு ஆணையிட்டு விடுகிறார் மனைவி. கணவர்  தினமும் எந்தக்கடவுளின்  பெயரை  உச்சரிக்கிறாரோ அதே கடவுளின் பெயரால்  ஆணையிட்டபடி ஒரே நொடியில் தன் மறுப்பையும் எதிர்ப்பையும் அழுத்தமாக அவர் பதிவு செய்த பிறகு திருநீலகண்டருக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது.அதன் பிறகு முதுமை  வரும் வரையில் இருவரும் அந்தச் சூளுரையைக் காத்ததும், திருவோட்டை மறைத்து வைத்து இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலின்போதும் கூட மனைவியின் கையைத்தீண்டாமல் ஒரு  கழியின் இரண்டு நுனிகளையும் பிடித்து இருவரும் பிடித்து சத்தியம் செய்ததும், அது முடிந்ததும் கழிந்த இளமையை இருவரும் மீண்டும் பெற்று ஒன்றிணைந்ததும் புராணத் தொன்மங்கள்.  


அவற்றையெல்லாம் விட இந்த வரலாற்றில் நம்மை சுவாரசியப்படுத்துவது.  'தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்'  என்று அந்தப் பெண் இட்ட வஞ்சினமே.

“எம்மை என்றதனால் மற்றைய பெண்களையும் 

என் மனத்தினாலும் தீண்டேன்” என்று திருநீலகண்டரை சபதம் செய்யத் தூண்டுவதும், முதுமைப்பருவம் வரை அதே உறுதியோடு அவரை இருக்க வைத்ததும், ஓடு காணாமல் போன வழக்கில் மனைவியின் கரம் பற்றிக்குளத்தில் மூழ்கி சத்தியம்  செய்து தருமாறு பலரும்கேட்டுக்கொண்டபோதும்,

‘எங்களில் ஒரு சபதத்தால் இருவரும் இணைந்து கைகளைப் பிடித்துக்கொண்டு  மூழ்க வழியில்லை,குளத்தில் நான் மட்டும் மூழ்கிச் சத்தியம் செய்து தருவதே  போதும்’

என்று திருநீலகண்டரைத் தயக்கத்தோடு சொல்ல வைத்ததும், இறுதியில் மிகவும் வற்புறுத்தப்பட்ட கட்டத்தில் தண்டின் நுனிகளை இருவரும் பிடித்து சத்தியம் செய்யலாம்  என்று முடிவெடுக்க வைத்ததும் - இவை அனைத்துக்கும் காரணம் உள்ளத் திண்மையோடு அந்தப்பெண்ணிடமிருந்து வெடித்துத்தெறித்த உறுதியான மறுப்பும் அவர் இட்ட ஆணையுமே. இறைவன் மீது ஆணையிட்டதால் அவர் அஞ்சியிருப்பார் என்ற வாதம் ஒருபுறம் இருக்க…,தான் செய்த செயலுக்கு  மனைவியிடமிருந்து அப்படிப்பட்ட காட்டமான ஓர் எதிர்வினையை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். வீட்டுக்கு வீடு தினசரி  நடப்பாக,மிகவும் சாதாரணமான-அற்ப விஷயமாக  எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த ஒரு நிகழ்வுக்கு மனைவி காட்டிய  மிகக்கடுமையான அந்த அறச்சீற்றம்,அசாதாரணமானதாக…அவரை அச்சுறுத்துவதாகக்கூட இருந்திருக்க வேண்டும். கணவனாகவே இருந்தாலும்  தன் சம்மதம் இன்றி - தான் இசைவளிக்காமல் தன்னைத் தீண்ட முடியாது என்ற உறுதியான மறுப்பைத் தமிழ் இலக்கிய வெளியில் முதன் முதலாகப் பதிவு செய்து ஒற்றைத்  தனிக்குரலாக அதை ஒலிக்க விட்டிருப்பவர்  திருமதி திருநீலகண்டர் என்றே துணிந்து சொல்லி விட முடியும்.


அயல் ஒருத்தியிடம் சென்று வந்த கணவரை ஏற்க எதிர்ப்புக் காட்டிய மற்றொரு பெரிய புராணப்பெண், சுந்தரரின் முதல் மனைவியாகிய பரவை நாச்சியார். தேவர் உலகப் பெண்களாகிய  கமலினியும்,அநிந்திதையும் ஒரு சாபத்தால் மண்ணுலகில் பரவை,சங்கிலி என்று பிறப்பெடுத்து வந்து சுந்தரருக்கு மனைவியாகிறார்கள் என்கிறது தொன்மம். இவர்கள் இருவரில் முதலில் திருவாரூரில் பரவையை மணந்து கொண்ட சுந்தரர் பல  சிவத்தலங்களை சுற்றிவிட்டு திருவொற்றியூரில் சங்கிலியைத் திருமணம் செய்து கொள்கிறார்.அது பரவையை எட்டிவிடப் பலகாலம் கழித்து சுந்தரர் தன்னை நாடி வரும்போது அவரை ஏற்பதற்குக் கடும் எதிர்ப்புக் காட்டுகிறார் பரவை. உலக நடப்புத் தெரிந்த ஒரு    சிலரைப் பரவைக்கு புத்திமதி சொல்லுமாறு சுந்தரர் அனுப்பி வைக்கிறார்.  “எம்பிராட்டிக்கு இது தகுமோ” என்ற ரீதியில் அவர்களும் பலவாறு பரவைக்கு ‘நீதி’ புகட்ட முயல, எடுத்த எடுப்பிலேயே அதை நிராகரித்து விடுகிறார் பரவை. ‘இன்னும் ஒரு தடவை அவரை ஏற்குமாறு சொன்னால் என்  உயிரைப்போக்கிக் கொண்டு விடுவேன்’  என்று அவர்  திட்டவட்டமாகச் சொல்லிவிட, அவர்களும் அச்சத்தோடு திரும்பி வந்து சுந்தரரிடம் அந்தச் செய்தியைச் சொல்கிறார்கள். தம்பிரான் தோழராகக் கருதப்படும் சுந்தரர் சிவபெருமானையே தனக்குத் தூதாகப் பரவையிடம் செல்லுமாறு வேண்டிக் கொள்ள, அவரும் இருமுறை தூது செல்கிறார். முதல் முறை சிவனடியார் கோலத்தில் செல்லும்போது அவரை உபசரித்து,அவர் அங்கே வந்த காரணம் பற்றிக்கேட்கிறார் பரவை. ‘நீ மறுக்காமல் ஏறுக்கொண்டால் சொல்வேன் ” என்று வந்தவர் சொல்ல, அது இன்னதென்பதை  உடனே ஊகித்து விடும் பரவை, “அது  எனக்கு இசையுமாகில் செய்வேன் “என்று மட்டுமே சொல்கிறார். சிவனடியார் கோலத்தில் எவர் வந்து எது கேட்டாலும், எதைப்பற்றியும் சிந்திக்காமல் அதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டு ஒத்துப் போகும் ஆண் நாயன்மார்களுக்கு நடுவே, ‘எனக்கு ஒத்து வந்தால் மட்டுமே செய்வேன்’ என்ற உள்ள உறுதியைக் காட்டுவதன் வழி  தான் ஒரு தனித்த ஆளுமை என்பதை வெளிக்காட்டி விடுகிறார் பரவை. சிவனடியார் கோலத்தில் வந்த இறைவன்,சுந்தரரின் கோரிக்கையை முன்வைக்க, ‘திருவொற்றியூரில் சங்கிலியோடு தொடர்பு வைத்துக்கொண்டிருப்பவருக்கு இங்கென்ன வேலை’ என்று சினத்தோடு பதிலடி தந்தபடி

அதை உறுதியாக நிராகரித்தும் விடுகிறார். 


சுந்தரருக்காக இரண்டாவது முறையும் தன் உண்மை உருவிலேயே சிவபெருமான் தூது சென்றதாகவும் அது இறைவன் என்று அறிந்த பிறகு, தன் பக்தனுக்காக, நண்பனுக்காகப் பாதம் வருந்த இரவு முழுவதும் அவர் உழன்றதைக்கண்டு  “என் செய்கேன்  இசையாது” என்று அரை மனதோடு பரவை அதை ஒத்துக் கொண்டதாகவும் வரலாறு முடிவடைகிறது.கணவரின் புறத்தொழுக்கத்தை ஏற்கச்சொல்லித் தூது வந்த ஊர்ப் பெரியவர்களிடமும் சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானிடமும் மூன்று முறை மறுப்புச்சொல்லியபடி  கணவரின் புறத்தொழுக்கத்தை ஏற்க மறுக்கும் தனது மன உறுதியைத் திட்டவட்டமாகக் காட்டும் பரவை, பெரியபுராணப் பெண்மாதிரிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு நிற்கிறார்.


பொதுவாகத் திருமணம் கடந்த பந்தத்தில் கணவன் இருப்பதை அறிய நேரும் எந்தப்பெண்ணும் அதற்கு 

எதிர்ப்புக் காட்டுவதும்,அவனிடமிருந்து விலக்கம் காட்டுவதும் - நிலைமை தீவிரமாகும் அடுத்த கட்டத்தில்  சட்டத்தின் துணையை நாடி விவாகரத்து வரை செல்வதும் மிக இயல்பாக ஏற்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் பரவையும்,திருநீலகண்டரின் மனைவியும் காட்டியுள்ள குறைந்தபட்ச எதிர்ப்புக்களில் பெரிதுபடுத்திச் சொல்ல ஏதுமில்லை என்று நமக்குத் தோன்றக்கூடும். 

எனினும் குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தின் பின்புலங்களை, அவற்றின் முன்வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளும்போதுதான் அந்த மிகச் சிறிய எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் கூட அந்தப் பெண்களின் வாழ்நிலையில் எப்படிப்பட்ட அசாத்தியமான ஒரு செயலாக இருந்திருக்க முடியும் என்பதையும்,தங்கள் சுயத்தைக் காத்துகொள்ள  அவர்கள் எந்த அளவு போராடி இருப்பார்கள் என்பதையும்  புரிந்து கொள்ளமுடியும்.

இயற்கைக்கு மாறான நிகழ்வுகளைப் புனைந்தபடி அவர்கள் எடுத்த முடிவுகளில் காப்பியம் சில மாற்றங்களைச்  செய்திருந்தபோதும் பரத்தமைக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களே கேட்காத ஒரு காலச்சூழலில், மாற்றுச்சிந்தனையின் முதல் அடியை அழுத்தமாக எடுத்து வைத்திருப்பவர்கள் என்ற வகையில் அவ்விருவருவரும் முக்கியத்துவமும்,தனித்துவமும் பெற்றுப் பெண்ணிய வரலாற்றில் நிலைபெற்றிருக்கும் தகுதி பெறுகிறார்கள்.


                  *****************************


18.3.26

நினைவுத்திரை- 4

பெண்கள் முன்னிலைப்படுத்தப்படும் - பெண் முதன்மைப்பட்ட ஒரு சமூக அமைப்பு (தாய் வழிச்சமூகம் அல்ல) உருவானால் அது எவ்வாறு இருக்கக்கூடும் என்பதைக் கற்பனையில் கண்டு, அத்தகையதொரு  கனவு மயமான  குறிக்கோள் (Utopian)சமுதாயத்தை 1945 காலகட்டத்திலேயே தனது நாவல் வழி முன்வைத்திருப்பவர்  மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான வ.ரா எனப்படும் வ.இராமசாமி ஐயங்கார் என்பது பரவலாகப் பலரும் அறியாத ஒரு செய்தியாக இருக்கலாம். நடப்பியல் தன்மையிலிருந்து மிகவும் வேறுபட்டதாக,அதிபுனைவு நிலையில் எழுதப்பட்டிருக்கும் அவரது   ‘கோதைத் தீவு’, தமிழ் நாவல் வரலாற்றில் ‘உயர் கனவு’ நாவல்  வகைப்பாட்டில் முதலாவது என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கிறது.


இந்திய நாட்டின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான  வ.ரா., பாரதியின்

சீடர். முதலில் மணிக்கொடி இதழின் ஆசிரியராகவும் பிறகு வீரகேசரியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவராகத்தான் வ.ரா., பெரும்பாலும் அறியப்படுகிறாரரே அன்றி ஒரு படைப்பாளி என்ற அவரது பக்கம் -ஒரு சில ஆய்வுகள் தவிர- பொதுவான இலக்கியப் பரப்பில் மிகவும்  குறைவாகவே கவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுந்தரி (1917), விஜயம்(1934), சின்னச்சாம்பு(1942) என இவர் எழுதிய அனைத்துப் புதினங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளே முன்னுரிமை பெற்றிருக்கின்றன. இவற்றைப் பிரச்சாரப் போக்குடையவை என்று திறனாய்வாளர்கள்  மதிப்பிட்டாலும் சமூக மாற்றத்தில் கொண்டிருந்த தீவிரமான நாட்டமே அத்தகைய போக்கைக் கைக்கொள்ள இவருக்குத் தூண்டுதல் அளித்திருக்க வேண்டும். “சமூக சீர்திருத்தத்தில் நம்பிக்கையோ விதவைக் கதைகளில் அனுதாபமோ அற்ற தன்னைக் கூட சுந்தரி என்ற நாவலின் நோக்கம் நெகிழச் செய்து விட்டது” என்பார் விமரிசகரான க.நா. சுப்ரமண்யம்.


தன் காலகட்டத்தில் நிலவிய பெண்களின் அவல  நிலையை  மேற்குறித்த நாவல்களில் நடப்பியல் போக்கில் காட்டியதோடு வ.ராவின் உள்ளம் அமைதியுறவில்லை. எதிர்காலத்தில் பெண் உயர்நிலை அடைவதை ,ஆட்சி செலுத்துவதை, பெண் ஆதிக்கம் முதன்மை பெறும் சமூக அமைப்பு உருவாவதைக் கற்பனையிலாவது கண்டாக வேண்டும் என்று  அவர் கொண்ட விழைவின் விளைவாக உருவான படைப்பே கோதைத்தீவு என்னும் ‘உயர் கனவு’ நாவல். 


‘இலட்சிய சித்திரம்’ என்று ‘கோதைத்தீ'வை மதிப்பிடும் தமிழ் நாவல் ஆராய்ச்சியாளர்களான திரு சிட்டியும், சிவபாதசுந்தரமும் "இலக்கிய உணர்வின் பயனாக நாவல்கள் பிறந்து வந்த ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமையை இலட்சியப்படுத்தி ஒரு சோதனை நாவலாகக் கோதைத் தீவை எழுதியவர் வ.ரா" என்று குறிப்பிடுகின்றனர். புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதி கண்ட கனவு  கவிதையாக உருப்பெற்றது போலவே 

வ.ரா. கண்ட கனவு, நாவலாக  வடிவம் பெற்றிருக்கிறது. 


நாடு விடுதலை பெற வேண்டுமென்றால்,சமூக விடுதலை- குறிப்பாகப் பெண் விடுதலையே அதற்கு  அடிப்படையாக  அமையக்கூடியது என்ற நிலைப்பாட்டிலும் பாரதியை அடியொற்றிச் செல்லும் வ.ரா.,

‘ஆணோடு பெண் சரி நிகர் சமானமாக வாழ்ந்திருந்தால் இந்த நாட்டின் ஆட்சி நம்மவர்களின் கையை விட்டுப் போயிருக்காது’என்ற தனது    ஆதங்கத்தை நாவலின் முன்னுரையில் பதிவு செய்கிறார். புனைவின் வழியாகவாவது அந்த ஏக்கத்தைப்  போக்கிக்கொள்ள அவருள் விளைந்த அகத்தூண்டுதலும், மன எழுச்சியுமே ‘கோதைத்தீவு’  எழுந்ததற்கான அடிப்படைக் காரணிகள்.


"கோதைத் தீவு என் நீண்ட கால முயற்சி, 

நம் நாட்டில் பெண் அடிமையாகப் பிறக்கிறாள் வளர்கிறாள், இறக்கிறாள் அவளுக்கு சொத்துரிமை கிடையாது. இளமையிலேயே தாலி இழந்தால் மறு விவாக பாத்தியம் கிடையாது. மேல்படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகங்களுக்கு அவர்கள் வர முடியாது. வாய்விட்டு சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில் பெண்கள் என்ன சொல்வார்கள் என்பதையும்,என்ன செய்வார்கள் என்பதையும் ‘கோதைத்தீவு’ என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண்மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனித்திருக்கிறேன்.” என்று தன் நோக்கத்தைப் படைப்பின் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார் வ.ரா.


இந்த நாவலின்  கதை மிகவும் சுருக்கமானது. நாடோடியாய் அலையும் கணபதிராயன்,  தன்னைப்போலவே ஊர் ஊராய்ச் சஞ்சரிக்கும் பூபதிராயனைத் தற்செயலாய் எதிர்ப்படுகிறான்.  பெண் விடுதலையில் ஆர்வம் கொண்டிருக்கும் பூபதிராயன், பெண் ஆட்சி செய்யும் நாடு உண்டா என்று தேடிக் கண்டுபிடிக்க விருப்பம் தெரிவிக்க, இருவருமாய்க் கூச்சல்பட்டி என்ற ஊரை வந்து அடைகிறார்கள். அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் கோதைத்தீவைச்  சேர்ந்த மாணிக்கக் கோதையாரின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, அந்தத் தீவுக்குச் செல்கிறார்கள். அங்கே அவர்கள் காணும் காட்சிகள், கலந்து கொள்ளும் நிகழ்வுகள்,அங்கே நிலவும் பழக்க வழக்கங்கள்  ஆகியவற்றின் வழியே கோதைத் தீவில் நிலவும் மாறுபட்ட சமூக அமைப்பை எடுத்துக்காட்டுகிறார் வ.ரா.


கற்பனைச் சமூகமான கோதைத் தீவின் வாழ்க்கைத் தத்துவமே பெண் சுதந்திரத்தை மையம் இட்டதாக அமைந்திருக்கிறது.மரபு வழிச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மாற்றாக இந்தப் புதிய சமுதாயம் பெண்களாலேயே உருவாக்கப்படுவதை நாவல் இவ்வாறு விவரித்துக்கொண்டு போகிறது.


" இந்தத்  தீவுக்குத் துவக்கத்தில் நூறு பெண்கள் வந்தார்கள் அவர்கள் உழைத்துப் பாடுபட்டு நாரிபுரியின்(தீவின் தலைநகரம்)அடித்தளத்தை உண்டாக்கினார்கள். இந்த நூறு பெண்களும்  ஏன் இங்கு தனியாக-  துண்டாக ஆண்களைக் கூடக் கூட்டிக்கொள்ளாமல் வரவேண்டும்? ஆண் மக்கள் பெண்களைப் படுத்தும் பாட்டைப் பொறாதவர்களாய் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்தார்கள். பத்து ஆண்டுகள் வரை தாங்களே உழைத்துப் பயிர் செய்து நாரிபுரியைக் கண்டார்கள்.  பத்து ஆண்டுகளுக்குப் பின், பெண் விடுதலையில் நாட்டம் உள்ள ஆண் பிள்ளைகள் இங்கு வந்தனர். அவர்கள் நூறு கன்னிமார் வகுத்த சட்ட திட்டங்களை ஒப்புக்கொண்டு வாழ்ந்து வந்து இவர்களுடன் மண உறவு செய்து கொண்டார்கள்."


பெண் விடுதலைக்கு ஆண்டாளையே முன்னோடியாகக்  கொள்ளும் கோதைத் தீவு மக்கள், அவள் பெயரையே அந்தத் தீவுக்குச் சூட்டியிருக்கிறார்கள். 

ஆண்களின் ஆதிக்கப் போக்கையும் சிறுமைக் குணத்தையும் கண்டு மனம் நொந்து அவர்களைப் புறக்கணிப்பதற்காகவே ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்  கண்டாய்’ என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடியதாக நாவலில் மீள்வாசிப்பு செய்கிறார் ஆசிரியர். இந்தக்காரணத்தினாலேயே புதியதாக உருவான பெண்ணாதிக்கம் நிலவும் சமூக அமைப்பு அவள் பெயரால் கோதைத் தீவு என்று வழங்கப்படுகிறது.


பெண் விடுதலை பற்றிய ஆசிரியரின் எண்ணங்கள் குறிக்கோள் நிலையில் வெளிப்படப்பட்டபோதும், பெண்மைச் சமத்துவமற்ற நிலையினை நடப்பியல் கண்ணோட்டத்திலும் நாவல் சித்தரிக்கிறது. 

"பெண்ணை இந்த தேசத்திலே மனுஷ ஜென்மம் கொண்டவளாகவே கருதவில்லை. அவள் ஆண் பிள்ளையின் சொத்தாகத்தான் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறாள்" என்று கணபதிராயனும் பூபதிராயனும் நிகழ்த்தும் உரையாடலில் சுட்டும் ஆசிரியர்,அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்ட காரணத்தினாலேயே கணவனுக்குத் துணையாக இருக்க இயலாமல் சுமையாக மாறிப் போகிறாள் பெண்  என்றும்  குறிப்பிடுகிறார்.


நடப்பியல் சமூகத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டதையும்,பொருளாதாரப் பாதுகாப்பு இன்மையால் முறை பிறழ்ந்த உறவு கொள்ளும் நிலைக்கு அவள் தாழ்ந்ததையும், பெண்ணைத் தேவதாசி ஆக்கும் கொடுமையையும் விரிவாக எடுத்துக்காட்டி அவளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையை விளக்கும் நாவல், அத்தகைய சமூகத்துக்கு மாற்றாக  ஒரு இலட்சிய சமூகத்தை நம் கண்  முன் விரித்துக்கொண்டு போகிறது. முழுவதும் குறைகளே  நிரம்பிய ஒரு சமூகத்தை நடப்பியல் நிலையிலும்,குறைகள் சிறிதும் அற்ற பூரணத்துவம் பெற்ற ஒரு சமூகத்தைக் கனவு நிலையிலும் நாவல் சித்தரிக்கிறது. நடப்பியல்  ஆணாதிக்க சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் களையப்பட்டுப் பெண்ணுரிமைத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதை விரிவான பல கோணங்களில் வ.ரா விவரித்துக் காட்டுகிறார்.


கோதைத்தீவில், பெண் சார்ந்தவையே முதன்மை பெற்றாலும் ஆணினத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கும் போக்கு இல்லை. ஆனால் இங்கே வாழும் ஆண்கள் பெண்களை மதிப்பவர்களாக ,அவளது சுதந்திரப்போக்கை ஏற்பவர்களாக இருந்தாக வேண்டும் என்பது மட்டும் கட்டாய விதிமுறையாக  வலியுறுத்தப்படுகிறது. நடப்பியல் சமூகத்தில் பெண் இழிவு படுத்தப்படுவது போலக்  கற்பனைச் சமூகத்தில் ஆண் இழிவுபடுத்தப்படுவதில்லை. பெண்ணைப் போலவே அவனும் சமூகத்தில் உரிய அந்தஸ்தும் கௌரவமும் பெறுகிறான்.


கட்டாயத் திருமணம், சீதனம் ஆகிய கொடுமைகள் இந்தச்சமூகத்தில் இல்லை. திருமணங்கள் அவரவர் விருப்பப்படியே நிகழ்கின்றன. திருமண வயது 20 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. காதல்,கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை, திருமணங்கள் சுயம்வர முறையில் நடைபெறுகின்றன. அத்துடன் கூடவே பெற்றோர் சம்மதமும் கேட்டுப் பெறப்படுகிறது. கணவனை இழந்த   மனைவியும், மனைவியைஇழந்த கணவனும் திருமணம் செய்து கொள்வதற்குத் தீவின்  சட்டம் அனுமதிக்கிறது. விதவை என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் அது தவிர்க்கப்பட்டுக் கணவனை இழந்த பெண் மூளி என்றும் மனைவியை இழந்த கணவன் மோழை எனவும் ஒத்த நிலையில் அங்கே அழைக்கப்படுகின்றனர்..

"கைம்பெண் நிலைமை சாஸ்வதமான நிலைமை. எனவே அதற்கு சொல் ஏற்பட்டுவிட்டது. தாரம் இழந்த புருஷன் நீண்ட காலத்துக்கு மறு விவாகம் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே அந்த நிலைமை சாஸ்வதம் இல்லை, ஆகவே அதற்குத் தனியாக சொல் தேவையாக இருக்கவில்லை" என்று மனைவியை இழந்த கணவனுக்குத் தனிப்பெயர் எதுவும் வழங்கப்படாததற்குக் காரணமும் சொல்லப்படுகிறது. மறுமணம் புரியும் உரிமை இருபாலருக்கும் அளிக்கப்படுகிறது.


குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஒத்த பங்கு அளிக்கப்படுகிறது. அரசியல் பொறுப்பிலும், சமயக் கடமைகளிலும் போர்த் தொழில் பயிர்த் தொழில் ஆகியவற்றிலும் பெண்ணும் பொறுப்பேற்கிறாள். நாவல் எழுதப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆணுக்கு மட்டுமே உரியது என மரபு வழி சமூகத்தில் கருதப்பட்ட பல செயல்களைப் (படகோட்டுதல்,காவல் துறையில் பங்கு ,அரசியல் நிர்வாகம், பயிர்த்தொழில் பயிற்சி, போர்ப் பயிற்சி, தேகப் பயிற்சி, நீச்சல், கோயில் பூசை, குஸ்தி விளையாட்டு) பெண்களும் மேற்கொள்கிறார்கள். அதே போலப் பெண்ணுக்கு மட்டுமே உரியவை என ஒதுக்கப்பட்டு இருந்த பொறுப்புக்கள் - குறிப்பாக சமையல் முதலியவை ஆணுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

"இந்த நாட்டில் முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு ஓராண்டு கட்டாய சமையல் பயிற்சி போதிக்கப்படுகிறது. எந்த வீட்டிலும் ஆணுக்குத் தோதில்லாத சமயத்தில் பெண்ணும் பெண்ணுக்குத் தோதில்லாத சமயத்தில் ஆணும் சமைக்க வேண்டும். ஒருவரும் முணுமுணுக்கலாகாது.”

இரு பாலாருக்குமே கட்டாய இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது.


 "சுதந்திரமுள்ள பெண்களுடன் பிறவி முதல் பழகி வரும் ஆண் குழந்தைகள் திமிருடனும் பொய் கவுரவத்துடனும் வளர மாட்டார்கள்" என்ற நோக்கத்துடன் இளமைப் பருவம் முதலாகவே ஆண் பெண் குழந்தைகள் வேறுபாடு இன்றி வளர்க்கப்படுகிறார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயிலும் பள்ளிகளே சமூகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு இன்றியமையாமல் இருக்க வேண்டிய உணர்வுகளாகச் சொல்லப்படும் போலி நாணம்,பொய்க்கூச்சம் முதலிய உணர்வுகள் இங்கே முற்றிலுமாய் அகற்றப்படுகின்றன.

‘ நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று கவி பாடிய பாரதி போல,  'நாணம் என்று சொல்லே இந்த நாட்டில் வழங்கப்படுவதில்லை அதற்கு தேவையான சந்தர்ப்பமும் உணர்ச்சியும் இந்த நாட்டில் கிடையாது’ என்கிறது நாவல். கூச்சப்பட்டுக் கொண்டு ஆண்களோடு பழகுவதைத் தவிர்க்காமல் வயதொத்த ஆண்களும் பெண்களும் மரியாதையுடனும், கூச்சம் இல்லாமலும் பேசிக்கொள்வார்கள். பெண்களை ஏளனப்படுத்தும் இழிவுபடுத்தும் ஆண்கள் மட்டுமே இங்கு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.


பெண்ணினத்தை இழிவு படுத்தும் இலக்கியங்கள் தீவில் உறுதியாகத் தடை செய்யப்படுகின்றன. 

" பெண்ணுக்கு உயர் உதவி கிடையாது என்று கூறும் நூல்களும் புராணங்களும் இந்த நாட்டில் தலை காட்ட முடியாது. பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களை இந்த நாட்டில் எவரும் படிக்கலாகாது என்பது கண்டிப்பான உத்தரவு.கம்பன் புகழேந்தி தாயுமானவர் எழுதிய நூல்கள் பரிசோதிக்கப்பட்டுப் புதிய பதிப்புகள் இயற்றப்பட்டு  வருகின்றன’’ என்பது நாவல் முன் வைக்கும் ஒரு தனித்துவம். தையலை உயர்வு செய்யும் பாரதிக்கும் ஔவைக்கும் ஆண்டாளுக்கும் இங்கே விழா எடுக்கப்படுகிறது.

 

பெண்ணிய நோக்கில் பழைய புராணக் கதைகளுக்குப் புது விளக்கங்களும்,  மறுவாசிப்புக்களும் தரப்படுகின்றன. பொது இடங்களில்  நடைபெறும் நாடகங்களிலும் கூட  அவற்றுக்கே முதன்மை தரப்படுகிறது. இராமாயணத்தில் இடம்பெறும் துணைப்பாத்திரமான  அகலிகையின் கிளைக்கதை, மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தனால் சாப விமோசனம் என்ற சிறுகதையாகக் கற்பனை வடிவம் பெற்றது போலவே பிறிதொரு மணிக்கொடி எழுத்தாளரான 

வ.ராவின் வழியாக நாவலில் பெண்ணியக் கண்ணோட்டத்தில்  மாற்றம் பெறுகிறது.  தீவில்  நிகழும் நாடகம் ஒன்றில் அகலிகையின் வழக்கு மறு ஆய்வு செய்யப்படுவதாகவும், அகலிகையின் இளமையைத் தன் தவவாழ்க்கையால் வீணாக்கியதோடு அவளைக் கல்லாகுமாறும் சபித்த கௌதமனே குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் தன் படைப்பில் கற்பனை செய்கிறார் வ ரா.


ஆணாதிக்க சமூகம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு மாறாகப் பெண்ணாதிக்கம் பெற்ற சமூகம் பொதுவான பிற வகைகளிலும் முன்னேற்றம் அடைந்து தன்னிறைவு பெற்றிருப்பதையும் நாவல் விரிவாக விளக்குகிறது. ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்புக்கு எடுத்துக்காட்டாக எல்லோருக்கும் ஒரே வகையான வீடுகள், சாராயக்கடைகள் இல்லாமல் இருப்பது, காவல் நிலையங்களில் குற்றவாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவது, கல்விச்செலவை அரசே ஏற்பது , ஒவ்வொருவருக்கும் நிலம் வீட்டு மனை ஆகியவை ஒதுக்கப்படுவது , அவரவர் நிலங்களை அவரவரே உழுது பயிரிடுவது,திருமணம் மரணம் ஆகிய இரண்டு செலவுகளும் ஊர்ப் பொதுச் செலவாகப்பகிர்ந்து கொள்ளப்படுவது என்பது போன்ற பல சீர்திருத்தங்கள்,  பெண் முதன்மை பெற்ற கோதைத்தீவின் சமூக அமைப்பில் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. வீட்டுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த பெண், தலைமைப் பொறுப்பேற்றுச் செயல்படும்போது பெண் சமூகம் மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகமே சீர்மையும் செம்மையும் பெறும் என்பதே நூலாசிரியர் இதன் வழி உணர்த்த விரும்பும் செய்தி.


மாற்றங்கள் பல நேர்ந்திருக்கும் இன்றைய சூழலில் வைத்துப்பார்க்கும்போது  வ.ரா முன் வைத்திருக்கும்  பல சீர்திருத்தங்கள் நமக்கு மிக எளிதானவையாக.., பொருட்படுத்த வேண்டாதவையாக,ஏன்…வேடிக்கையானவையாகக்கூடத் தோன்றலாம்.  ஆனால் இன்றைய நிலையிலும் பெண்ணியவாதிகளால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டுச் செயலாக்கம் பெறாமலிருக்கும் பல திட்டங்கள், முற்போக்கு நிலைப்பாடுகள் ஆகியவற்றை - இந்திய விடுதலைக்கும் முற்பட்ட ஒரு காலகட்டத்திலேயே கூரிய எதிர்கால நோக்குடன் சிந்தித்து, வித்தியாசமான தனது படைப்பின் வழியாக அவர் முன்னெடுத்திருப்பதும், இன்றைய பின் நவீனச்சிந்தனைகளில் ஒன்றான புராண மறுவாசிப்புக்கள் போன்றவை நாவலில் இடம்பெற்றிருப்பதும் அந்தப்படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நிராகரிக்க முடியாத ஒன்றாக அதை ஆக்கிவிடுகின்றன. 


அரசியல் சமூக அமைப்புக்கள் அப்பழுக்கின்றிச் செயல்படும் ஓர் அதீத அற்புதத் தீவை 1516 ஆம் ஆண்டில் கற்பனையாகப் படைத்துக் காட்டிய சர் தாமஸ் மூரின் Utopia வைப் போலவே எல்லா வகையிலும் மேம்பட்ட ,உயர் நிலை எய்திய  ஒரு பெண்முதன்மைச்  சமூகத்தின் இலட்சிய உருவகமாக- ஒரு பரிசோதனை முயற்சியைப்போல  வ.ரா உருவாக்கிய  கோதைத் தீவும்

பெண்ணிய இலக்கிய வரலாற்றில் என்றென்றும் பதிவு செய்யப்பட வேண்டிய அரிதானதொரு ஆவணமாக, அவரது கனவைச்சுமந்தபடி  நிலைத்திருக்கும். 


           **************************



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....