துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.12.09

சுகந்திடீச்சருக்கு வீரவணக்கம்


கல்விக் கொள்ளையர்கள் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வோடு விளையாடும் சாஸ்வதமான அவலம்,கும்பகோணத்தைப் போலவே நாகப்பட்டினத்துக்கு அருகே நிகழ்ந்த ‘வேன்’விபத்தின் மூலமும் சம்பவித்திருக்கும் சூழலில்,இன்னமும் கூட மனிதப் பண்புகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது அந்த விபத்தில் தன் உயிரைத் துறந்திருக்கும் ஆசிரியை சுகந்தியின் வீர மரணம்.

உண்மையில் சொல்லப்போனால்,அந்த ஆசிரியை ,தன் உயிரை வலியத் துறந்திருக்கிறார்என்றுதான் கூற வேண்டும்;அவர் நினைத்திருந்தால் வேன்,குளத்தில் நிலை தடுமாறி விழுந்த மறு விநாடியே அதிலிருந்து வெளிப்பட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அவரது தாய் மனம்- மாணவர்கள் மீது மெய்யான நேசம் கொண்டிருந்த அந்த நிஜமான ஆசிரிய உள்ளம் ,தன் துன்பத்தைவிட அந்தக் குழந்தைகளுக்கு நேர்ந்த அவலத்தை எண்ணியே கசிந்தது; கள்ளக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் காரியத்தில் முனைப்போடு இறங்கித் தன் உயிரையே காணிக்கையாக்கியது.

‘’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை சுகந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09

’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09

மிக எளியதொரு வாழ்க்கைப் பின்னணியிலிருந்து கல்வி என்ற பிடிமானத்தால் ஆசிரிய நிலைக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு படிப்படியாகத் தானும் உயர்ந்து,தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கு ஆயத்தமாகி வந்த சுகந்தியின் மரணம்,அந்தக் குடும்பத்திற்கு மட்டும் நேர்ந்த ஒரு இழப்பல்ல;மாணவர்களை மரக்கட்டை போல நடத்தி வரும் பல ஆசிரியக் கொடுமனங்களுக்கிடையே அத்தி பூத்தாற்போல எப்போதாவது தோன்றும் இப்படிப்பட்ட நல்லாசிரியர்களின் மறைவு கல்வித் துறைக்குமே கூட ஒரு பேரிழப்புத்தான்.

பள்ளியிலும்,கல்லூரியிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றிருந்த சுகந்தி,
’’உண்டாலம்ம இவ்வுலகம்.....
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’

(தனக்காக மட்டுமே வாழாமல் மற்றவர்களுக்காகவும் வாழும் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’களால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது)
என்ற புறநானூற்று வரிகளைப் படித்திருக்கலாம்;படிக்காமலும் இருந்திருக்கலாம்.
அது இங்கே முக்கியமில்லை.

வாழ்க்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் ஆக்கிக் கொண்டு விடாமல் தன் இன்னுயிரையே விலையாய் ஈந்து பல இளம் மழலைகளைக் கரை சேர்த்துக் குறைவான தன் ஆயுளுக்கு நிறைவான ஒரு பொருளை...அழியாத ஒரு புகழைத் தேடிக் கொண்டுவிட்டார் சுகந்தி.

வார்த்தைக்குள் அடங்காத அவரது மகத்தான தியாகத்துக்கு முன்பு மண்டியிட்டுக் கண்பனிக்க அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த வேளையில்.....இப்படிப்பட்ட இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் நாளும் விடியாதோ என்ற சிந்தனையில் இதயம் கனக்கிறது.

7 கருத்துகள் :

வடுவூர் குமார் சொன்னது…

அட! பாவமே.
பள்ளிக்குழந்தைகள் இழப்பு:நம்மூர் கொடுமைகளில் இதுவும் ஒன்று.

Rajeswari சொன்னது…

சுகந்தி டீச்சருக்கு என்னுடைய வீரவணக்கம் உரித்தாகுக...

ராஜசேகர் சொன்னது…

நல்ல உள்ளங்கள் என்றும் மறைவதில்லை, பலரோடு இணைந்து வாழ மற்றுமொரு வழியை தேடிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்

jothi சொன்னது…

//மாணவர்களை மரக்கட்டை போல நடத்தி வரும் பல ஆசிரியக் கொடுமனங்களுக்கிடையே அத்தி பூத்தாற்போல எப்போதாவது தோன்றும் இப்படிப்பட்ட நல்லாசிரியர்களின் மறைவு கல்வித் துறைக்குமே கூட ஒரு பேரிழப்புத்தான்.//

உண்மைதான்.

jothi சொன்னது…

//வாழ்க்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் ஆக்கிக் கொண்டு விடாமல் தன் இன்னுயிரையே விலையாய் ஈந்து பல இளம் மழலைகளைக் கரை சேர்த்துக் குறைவான தன் ஆயுளுக்கு நிறைவான ஒரு பொருளை...அழியாத ஒரு புகழைத் தேடிக் கொண்டுவிட்டார் சுகந்தி.//

வைரமான வார்த்தைகள். அருமையான பதிவு

Muruganandan M.K. சொன்னது…

சுகந்தி ரீச்சருடைய அன்பின் வியாபகம் அவரை என்று நினைவில் நிறுத்தி வைக்கும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

. அவருக்கு எங்களின் வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....