17.12.09
ஆண்டாளின் ’பெண்பேச்சு’
ஆணின் எழுதுகோலை இரவல் வாங்கி,அவன் உருவாக்கி வைத்த மதிப்பீடுகளையே வழிமொழிந்து கொண்டிருந்த சில சங்கப் பெண்பாற்புலவர்களைப் போலன்றி,
(சான்று; ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற பொன்முடியாரின் புறப்பாட்டு)
இயல்பான சுயேச்சையுடன்,தனித்த ஆளுமையுடன் தமிழ்க் கவிதை வெளியில் முகம் காட்டியவள் ஆண்டாள்.
பெண்ணின் அகவெளியைக் கட்டற்றுப் பதிவு செய்த அவள் பாடல்கள்
(காண்க;
ஆண்டாளின் பெண்மொழி -1
ஆண்டாளின் பெண்மொழி -2
ஆண்டாளின் பெண்மொழி -3)
பெண்கள் சஞ்சரிக்கும் புற வெளிகளையும்,அவ் வெளிகளில் கேட்கும் சிறு சிறு ஒலிகளையும் ,அங்கே பெண்களுக்கே உரியதாய் நிகழும் உரையாடல்கள்,கேலிப் பேச்சுக்கள்,சீண்டல்கள் ஆகியவற்றையும்,அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள்,தயாரிக்கும் உணவுகள்,அணியும் அணிகலன்கள்,ஈடுபடும் தொழில்கள் ,அவர்களுக்கே உரிய கலைத் திறன்கள் ஆகியவற்றையும் மிக நுட்பமாகப் படம் பிடித்திருப்பதைத் திருப்பாவைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
‘’ உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்...’’-தி.பாவை,7
‘’முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட..’’- 11
(பெண்ணின் வெளி)
‘’புள்ளும் சிலம்பின காண்’’ -6
‘’கீசுகீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ.....’’ -7
(வெளியின் ஒலிகள்)
‘’நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’’-5
(பெண்ணின் சடங்குகள்)
’’...பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழி வார....’’ -27
‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம்....’’ -7
‘’வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்’’ (நாச்சியார்திருமொழி -2.5)
(பெண்ணின் கலைத் திறன்,அவள் ஈடுபடும் தொழில்கள்)
‘’பெண்மொழியை உருவாக்கப் பேச்சுமொழி மரபில் தோய்வது பயனுள்ளதாக அமையலாம்’’
என்ற நவீனப் பெண்ணியக் கருத்தாக்கத்தை ஒட்டித் திருப்பாவைப் பாடல்களில் ’பெண்பேச்சு’என்பது மிக மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
ஒத்த வயதுள்ள இளம் சிறுமியர் ஒருவரை ஒருவர் செல்லமாகப் ‘பிள்ளை’ என அழைத்துக் கொள்ளும் தென்பாண்டித் தமிழும்,
‘’பிள்ளைகளெல்லாம் பாவைக் களம் புக்கார்’’-தி.பா-13
‘’மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை’’-8
‘எலே’என்ற பழகு தமிழ் விளியை ’‘எல்லே இளங்கிளியே’’ என ஆக்கி,அந்தப் பாடல் முழுவதையுமே இரண்டு பெண்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலாகவே அமைத்திருப்பதும் பேச்சுமொழி மரபில் ஆண்டாள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டும்.
‘பெண் பேச்சு’க்குரியதாகச் சுட்டப்படும் மற்றொரு பண்பான எளிமைத் தன்மையினையும் ஆண்டாளின் கவிதைகள் பெற்றிருக்கின்றன.
ஔவையின் கவித்திறன் பற்றித் தன் கட்டுரை ஒன்றில் விளக்கும் பாரதி,
‘’சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைத் தொழிலில் ஔவை ஒப்பற்றவள் ....அவள் நூல் ‘மிகத் தெளிந்த , மிக எளிய தமிழ் நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது’’என்பார்.
இதே தன்மைகளை ஆண்டாள் பாடல்களுக்கும் பொருத்திக் காட்ட முடியும்.
‘’கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்’’(நாச்சியார்திருமொழி-12.9)
என்ற நாச்சியார் திருமொழி வரிகளும்,பாவைப்பாடல்களின் பல பகுதிகளும் ஆண்டாளின் கவிதை எளிமைக்குக் கட்டியம் கூறுபவை.
ஆண்டாளின் கவிதைகள் தன்னுணர்வு வெளிப்பாட்டைப் பெரிதும் தாங்கியுள்ளபோதும்,உலகப் பொது நலன்,சமுதாயப் பொது நோக்கம் ஆகிய கருத்துக்களும் அவற்றில் தென்படாமலில்லை.
பாவை நோன்பு நோற்பதால், கண்ணனுக்கு ஆட்செய்யும் சுய லாபம் தனக்குக் கிடைப்பதோடு,
நீர்வளம்,பயிர்வளம்,பால்வளம் ஆகிய மூன்றும் உலகிற்குக் கிட்டவேண்டுமென்ற தணியாத வேட்கையையும் பாவைப் பாடல்களில் பதிவு செய்கிறாள் ஆண்டாள்.
‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல்’’ விளைந்திடவும்,
‘’வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்க’’ ளின் வழியே‘’நீங்காத செல்வம்’’
நிறைந்திடவும் அவாவுகிறது அவள் மனம்.(தி.பா-30)
மழை வேண்டி ‘’ஆழிமழைக் கண்ண’’னைப் பாடும்பொழுதும் கூட,மிகக் கவனமாக அந்த மழை ,அழிக்கும் மழையாக இருந்து விடாமல்,‘ஆக்கும் ‘மழையாகவே இருக்க விரும்பி,
‘’வாழ உலகினில் பெய்திடாய்’’(தி.பா-4)
என்று உலகைச் செழிக்க வைக்கும் மழையையே மனமார வரவேற்று வாழ்த்துப் பண் பாடுகிறாள் அவள்.
நோன்பு முடிந்து பாற்சோறு உண்ணும் கட்டத்திலும் கூட அனைவருமாய்க் ‘’கூடியிருந்து குளி’’ர்வதையே அவள் விரும்புகிறாள்.
‘’கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்’’(தி.பா -27)
ஆண்டாளின் உலகளாவிய இந்தப் பார்வையே அவளது தனித்த ஆளுமைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
மதமும்,சடங்குகளும் கடந்த புரிதலோடு ஆண்டாளின் பாடல்களை அணுகும்போது மேலும் புதிது புதிதான வாயில்கள் நமக்காகத் திறக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
1 கருத்து :
ஆண்டாளின் பாசுரங்கள் பக்தி என்பதையும் தாண்டி பல மானிட உண்மைகளைத் சுட்டி செல்வன என்று எப்பொழுதும் தோன்றும் எனக்கு. உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது அவை என் புரிதல்களை ஒட்டிசெல்கிறது என்பதை உணரமுடிகிறது. என் புரிதல்களும் ஒருவகையில் சரி தானோ என்ற நம்பிக்கை பிறக்கிறது.
கருத்துரையிடுக