காதல் என்றால் அங்கு இடம் பெறுவது, தலைவன்,தலைவியரின் உணர்வு மட்டுமில்லை.
காதல் என்பது குடும்பம் சம்பந்தப்பட்டது ; சமூகம் சம்பந்தப்பட்டது.
குடும்ப உறவில் அச்சாணியாக விளங்கும் தாயை மகளின் காதல் உறவு பாதிக்கிறது.
தாயறியாத சூலில்லை என்பது பழமொழி!ஆனால் பாலூட்டிச் சீராட்டித் தான் வளர்த்த அருமை மகள் தனக்குத் தெரியாமல் ஓர் ஆடவனிடம் காதல் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரும்போது அந்தத் தாய் அதிர்ந்து போகிறாள்.அதிலும் அந்தப் பெண் , தன் காதலனோடு ஊரை விட்டே ஓடிப்போகும்போது .தாயின் அதிர்ச்சி பன்மடங்காகிப் பெருகுகிறது.
தன் மகளை இன்னும் கூட வளர்ச்சியடையாத ஒரு சிறு குழந்தையாகவே எண்ணியிருந்த தாய்மனம் , பெண்ணைப் பிரிந்த ஏக்கம் ஒரு புறமும் , அவள் தந்திருக்கும் அதிர்ச்சி மறுபுறமுமாகத் தத்தளிக்கிறது.
தன் செல்ல மகள் பிரியமாக விளையாடும் பொம்மை....,
பாலும் பழமும் தந்து அவள் பழக்கியிருந்த பசுங்கிளி...,
அவள் வளர்த்துக் கொண்டிருந்த பூவை என்ற பறவை...,
என்று இவைகளையெல்லாம் காண்தொறும்,காண்தொறும் ஏக்கம் கிளர்ந்து வரக் கலங்கிப் போகிறாள் அவள்.
முறைப்படி திருமணம் முடிந்து மகள் புகுந்தவீடு செல்லும்போதே பிரிவிவின் சுமையால் ஏங்குவது பெற்றோர் மனம்.
‘’ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால்தான் கொண்டு போனானே..’’
என்று ஆண்டாளைப் பிரிந்த ஏக்கத்தைத் தந்தை நிலையில் பதிவு செய்வார் பெரியாழ்வார்.
அவ்வாறிருக்கையில்,இங்கே.... இந்தச் சங்கப் பாடலில் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட மகளின் திடீர்ப் பிரிவை அந்தத் தாய்மனம் எப்படித் தாங்கும்?
பாவை போன்ற என் அழகான மகள் ஏந்தியிருந்த பாவை இதுதானே?
பூவையைப் போலக் கொஞ்சி விளையாடிய என் செல்லக் குழந்தை கொஞ்சி விளையாடிய கிளியும் இதுதானே?
கிளி போன்ற என் பெண் வளர்த்து வந்த கிளியும் இதுதானே?
நேசத்துக்குரிய இவற்றையும், பாசத்துக்குரிய இந்த அன்னையையும் விட்டுவிட்டுக் கல்மனதோடு காதலனுடன் போக அவள் எப்படித்தான் துணிந்தாளோ என்று துடிக்கிறாள் சங்கத் தாய்.
‘’இது என் பாவைக்க்கினிய நன் பாவை
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி
இது என் பூவைக்கினிய சொற்பூவை என்று
அலம்வரு நோக்கின் நலம் வரு சுடர்நுதல்
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கினளோ என் பூங்கணோளே’’
என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் பெற்ற மனம் பித்தாகும் தன்மையை நடப்பியல் போக்கில் நயம்படச் சித்திரிக்கிறது.
பி.கு;
‘’எங்கப்பனைப் போட்டுத் தள்ளிட்டு என்னத் தூக்கிட்டுப் போ’’ என்று காதலி காதலனிடம் கூறும் ‘வீர’ (!?) வசனங்களை மட்டுமே (நன்றி;பருத்தி வீரன்) கேட்டுப் பழகும் இன்றைய இளைய தலைமுறை ...பெற்றோராக மாற்றம் பெறும்போதுதான் மென்மையான இந்த உணர்வுகளை ஒரு வேளை விளங்கிக் கொள்ள முடியுமோ...என்னவோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
1 கருத்து :
அன்பின் திருமதி சுசீலா அவர்களே
மதுரையில் புகழ பெற்ற ஃபாத்திமா கல்லூரியில் தமிழ் பயிற்றுவித்ததாக அறிந்தேன் - புதுதில்லியில் இருந்து எப்பொழுது மதுரை வருவதாக உத்தேசம் ?
தாய்மை - பெருமை பாடும் சங்க இலக்கியங்கள்
வாழ்க வாழ்க !
கருத்துரையிடுக