தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதற்குள் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஒரு பழைய படமாகியிருக்கக் கூடும். ஆனால் தில்லி வாழ் தமிழர்களுக்கு இத்தனை சீக்கிரம் இப் படத்தை அகலத் திரையில் காண வாய்ப்புக் கிட்டியதே பேரதிசயம்தான்.
அங்காடித் தெருவை வெளியிட்ட சில நாட்களிலேயே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தையும் வரவழைத்து வெளியிட்டு இங்குள்ள தமிழ் மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது,தில்லி தமிழ்ச்சங்கம்.
படத்தைப் பற்றிய விமரிசனங்கள் எக்கச் சக்கமான வலைகளை ஏற்கனவே நிரப்பி முடித்துவிட்டதால் அதிகம் சொல்ல ஏதுமில்லை என்றாலும் ஓரிரு எதிர்வினைகளை வெளியிட்டே ஆக வேண்டும்.
எல்லை தாண்டி ,குடும்ப வரையறை தாண்டி...சில மனத்தடைகளைத் தாண்டி வர இயலாத பெண்ணின் மன அமைப்பை அதன் உளவியலை மிக நேர்த்தியாக இப்படம் பதிவு செய்திருக்கிறது.
அப்படித் தானும் அலைக்கழிவுபட்டு அவனையும் ஏன் அவள் அலைக்கழிக்கவேண்டும் என்ற சில எரிச்சலான முணுமுணுப்புக்களும் அரங்கிலும்,வெளியிலும் கேட்காமலில்லை.
அந்தக் கேள்விக்கு உடனே எனக்குத் துணை வந்தவர் தஸ்தயெவ்ஸ்கி.
தமிழ்ப்படத்துக்கும் தஸ்தயெவ்ஸ்கிக்கும் என்ன சம்பந்தம் என்றோ...தஸ்தயெவ்ஸ்கியைக் கொச்சைப்படுத்துகிறேன் என்றோ தீவிர தஸ்தயெவ்ஸ்கி ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட வேண்டாம்.
நடுநிலை ரசனையோடு பார்த்தால் நமக்கு தஸ்தயெவ்ஸ்கியும் வேண்டும் ; தரமான தமிழ்ப்படங்களும் வேண்டும் என்பதுதானே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் ?
தஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’நாவலை நான் முழுமையாக மொழிபெயர்த்து முடித்திருக்கும் இந்தத் தருணத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா நாயகியின் உளவியலை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
மிஷ்கின்
நஸ்டாஸ்யா
தனது இடியட் நாவலில் , மிஷ்கினை அலைக்கழிக்கும் இரண்டு பெண்களையும்....அவர்களின் மன அமைப்பையும் துருவித் துருவிப் படம் பிடித்து அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
ஒருத்தி ஒழுக்கத்தை அரணாகப் பூண்டு மிகப் பாதுகாப்பான சூழலில் வாழும் வாய்ப்புக் கிடைத்தவள்;(அக்லேயா இவாநோவ்னா)
மற்றொருத்தி, சந்தர்ப்ப சூழலால் சீரழிவுகளுக்கு ஆளாகி அதன் காரணமாகவே ஒருபுறம் வஞ்சத்தோடும் , மறுபுறம் தாழ்வு மனப்பான்மையோடும் தவித்துக் கொண்டிருப்பவள்.(நஸ்டாஸ்யா பிலிப்போவ்னா)
இருவருமே இடியட் மிஷ்கினை நேசிக்கவும் செய்கிறார்கள்; அவனை அலைக்கழிப்புக்கும் ஆளாக்குகிறார்கள்.
மிஷ்கினும் அவர்கள் இருவரையும் வெவ்வேறு கண்ணோட்டங்களோடு அணுகிப் பரிவும் பாசமும் காட்டுகிறான்.
ஆனால் ஏற்கனவே சற்று மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டிருந்த அவனை மேலும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்ப்பதே அவர்கள் இருவரின் வாடிக்கையாக இருக்கிறது.
ஒருத்தி திருமண நிச்சயம் வரை சென்றுவிட்டு அவனை மறுதலிக்கிறாள்.
இன்னொருத்தியோ மணமேடையில் அவனைக் காத்திருக்க வைத்து விட்டு ஓடிப் போகிறாள்.
மனித மனத்தின் புரியாத பக்கங்களை....இண்டு இடுக்குகளைப் புறவயப் பார்வையோடு வாசகர் முன் வைத்து விட்டுத் தீர்ப்பை அவரவர் ஏற்புத் திறனுக்கே விட்டு விடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.
விண்ணைத் தாண்டி வருவாயா நாயகியின் உள அமைப்பும் அது போன்றதுதான்.
அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்றால் ....
‘அவள் அப்படித்தான்’ என்பதற்கு மேல் பதிலில்லை.
‘காதலுக்கு மரியாதை’ ‘ராஜ பார்வை’ முதலிய படங்களைத் திரும்பப் பார்ப்பதான உணர்வு சில இடங்களில் தலை தூக்கினாலும் ....
அண்மைக் காலப் படங்களில் காதலின் தவிப்பை அவஸ்தையை அதனால் விளையும் பரிதவிப்புக்களை இந்த அளவு யதார்த்தத்தோடும்....கலைநயத்தோடும்...அழகியல் உணர்வோடும் பதிவு செய்துள்ள படம் ’விண்ணைத் தாண்டி வருவாயா’ மட்டுமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
கேரளத்துக் காட்சிகளின் பசுமை அழகுக்காக.....
தானும் ஒரு பாத்திரமாகவே மாறிப் போய்விட்டிருக்கும் ரஹ்மானின் இசை நுட்பத்தை முழுமையாக உணர்வதற்காக.....
இப் படத்தைக் காட்சி அரங்குகளில் மட்டுமே பார்த்தாக வேண்டும்.
5 கருத்துகள் :
அழகா சொல்லி இருக்கீங்க!
அருமை.. என்னுடைய கருத்தும் இதே...
உங்கள் கருத்து மிக அழகு....
//மனித மனத்தின் புரியாத பக்கங்களை....இண்டு இடுக்குகளைப் புறவயப் பார்வையோடு வாசகர் முன் வைத்து விட்டுத் தீர்ப்பை அவரவர் ஏற்புத் திறனுக்கே விட்டு விடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.//
என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறேன் சுசீலாம்மா.
//தன் மீது சந்தேகம் கொண்டு அதையே எதிரியைப் பிடிக்க வலையாய் விரித்த கணவனை ராகினி (ஐஸ்வர்யா) நிராகரித்துவிட்டுப்போவது போலக் குறிப்பாகவாவது இறுதியில் ஒரு காட்சி வந்திருந்தால் குறைந்த பட்சம் அந்தத் துணிவுக்காகவாவது படத்தைக் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.(அக்கினிப் பிரவேசம் செய்ய மறுக்கும் சீதையாக )
ஆனால் இயக்குனருக்கு யார் மீது அச்சமோ ....ராகினி உறைந்து நிற்பதோடு படம் முடிந்து விடுகிறது.//
இதுதான் நீங்கள் .ஆனாலும் ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.
கருத்துரையிடுக