நாடு,மதம்,மொழி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த மாபெரும் தவச் செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான ஆன்மீகப் பாதைக்குச் சென்ற நூற்றாண்டிலேயே அடித்தளம் அமைத்து விட்டுப் போன அறிவுச் செல்வர் அவர்.
தனி மனிதன் மட்டும் உய்வு பெறுவதற்கான ஆன்மீகமல்ல வேதாத்திரி மகரிஷிகளின் ஆன்மீகம்.
தனிமனிதனோடு இயற்கையையும்,சமூகத்தையும் ஒருங்கிணைத்து
அவற்றின் ஒத்திசைவில் விளையும் ஒருமைப்பாட்டை யோகமாகக் காணும் வழியே வேதாத்திரியம் காட்டும் வழி.
இயற்கைவளத்தைப் பேணிக் காக்க மகரிஷி விடுக்கும் கோரிக்கையும்,உலக நாடுகளின் ஒற்றுமை வேண்டி ஐ.நா அவையில் அவர் செய்த முழக்கமும் ,உலக சமுதாய சேவா சங்கம் என்ற உன்னதமான அமைப்பை மகரிஷி அவர்கள் தோற்றுவித்துவிட்டுப் போனதும் மேற்குறித்த அடித்தளத்தில் அமைந்தவைதான்..
அத்துவைதக் கோட்பாட்டுத் தளத்தில் வலுவாகக் காலூன்றி நின்றபடி அறிவுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் மெய்ஞ்ஞானம் வேதாத்திரியம்..
எல்லாம் வல்ல தெய்வத்தை..எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளை
‘’சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய் சிந்தித்தே தெளிவாய்’’
என்கிறார் மகரிஷி.
புவியியல்,வானியல்,உடற்கூற்றியல் ஆகிய
விஞ்ஞானக் கோட்பாடுகளை அடியொற்றி ,
அவற்றோடு முரண்படாத வகையில் ,
புலன்களுக்கெட்டாத இறைஞானத்தையும் புகட்ட முயலும் வேதாத்திரியக்கோட்பாட்டை
இறை விஞ்ஞானம்
என்றே குறிப்பிடலாம்.
நாத்திகவாதிகளும் கூட மறுப்புக் கூற முடியாதபடி,
எதிர்வாதம் புரிய இயலாதபடி
தெளிவான தர்க்கங்களோடும், அழுத்தமான அறிவியல் பின்புலத்தோடும் முன்வைக்கப்படுபவை வேதாத்திரியச் சிந்தனைகள்.
எளிய உடற்பயிற்சிகள்,
தியான முறைகள்,
மனத் தூய்மைக்கான அகத்தாய்வுப் பயிற்சிகள்,
உயிருக்கு உரம் சேர்க்கும் காயகல்பப் பயிற்சி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த வேதாத்திரிய யோகம்
எளியமுறைக் குண்டலினி யோகமாகவும்,
மனதுக்கு வளம் சேர்ப்பதால் மன வளக்கலையாகவும்
உலக நாடுகள் பலவற்றிலும் பரவலான வரவேற்புப் பெற்று வருவதோடு தமிழகத்தின் கல்வி,தொழிற்கூடங்களிலும் மதச் சார்பு துறந்த பெருவாரியான தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டு வருகிறது.
மகரிஷி அவர்களின் உரைகளும்,நூல்களும் ,
அவரிடம் பயின்றோர் நல்கும் நேரடிப்பயிற்சிகளும்
தொன்மை வாய்ந்த இந்தியக் கலையாகிய யோகக் கலையைச்
சிறப்பான ஒரு கல்வித் திட்டமாகவே ஆக்கித் தந்திருக்கின்றன.
கோவை பாரதியார் பல்கலைக் கழகம்,
மகரிஷி நிறுவியிருக்கும் ஆழியாறு அறிவுத் திருக் கோயிலுடன் இணைந்து
யோகக் கலையில் பட்டயம்,இளங்கலை,மற்றும் முதுகலை வகுப்புக்களைத் தொலைநிலைக் கல்வித் திட்டமாக்கி வழங்கிக் கொண்டிருக்கிறது என்றால் வேதாத்திரியத்தின் கல்வித் தகுதி எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’
என்னும் திருமூலர் வழியும்,
‘எல்லோரும் இன்புற்றிருக்க ’எண்ணும் தாயுமானார் வழியுமே வேதாத்திரி மகரிஷிகள் கைக் கொண்ட வழி.
‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ‘
என்னும் மந்திர வாசகத்தை....
எண்ணம் , சொல் ,செயலால் எவருக்கும் தீங்கு செய்யாத பெருவழியைக் காட்டி விட்டுப் போன அந்தப் பெருமகனாரின் நூற்றாண்டு ஆகஸ்டு14ஆம் நாள் தொடங்கவிருக்கிறது.
மைய அரசு , மகரிஷியின் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த மண்ணின் மைந்தருக்குப் பெருமை சேர்க்க முன் வந்திருக்கிறது.
இது வேதாத்திரி என்ற தனிமனிதருக்காகக் கிடைத்த மகத்துவம் இல்லை.
’கடையனுக்கும் கடைத்தேற்றம் ’ என்ற காந்திய வழியில்
யோகத்தையும் ஞானத்தையும் பண்டிதன் முதல் பாமரன் வரை கொண்டு சேர்த்து
அச்சத்துக்கும் ,இருண்மைக்கும் உரியதாக இருந்த தத்துவங்களை
இலகுவாகவும் தெளிவாகவும் மாற்றி
உலகப் பொது உடைமை ஆக்கியுள்ள அவரது அயராத உழைப்புக்கும்
உலக நலனில் அவர் கொண்டிருந்த மாறாத அக்கறைக்கும் கிட்டியிருக்கும் பெருஞ்சிறப்பு.
வாழும் காலத்திலேயே கோட்பாடுகளையும்,கொள்கைப் பிடிப்புக்களையும் கை நழுவ விட்டு விட்டுக் கேலிக்கிடமாக நடமாடும் போலிகளுக்கிடையே
வையகம் வாழ்வாங்கு வாழ்வதை மட்டுமே தனது முழு மூச்சாகக் கொண்டிருந்த வேதாத்திரி மகரிஷிகள்
வாராது வாய்த்ததொரு
மாமணியாகவே திகழ்கிறார்.
3 கருத்துகள் :
தகவலுக்கு நன்றி!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
நன்றிகள் வாழ்த்துக்கள்.
ஆனால் ஒரு ஆன்மீக, தியான குருவிற்கு தபால் தலை வெளியீடு, புகழுரை அவசியமா என்று என்னுள் கேள்வி எழுகிறது
அன்பின் ராம்ஜி,நானும் கூட அவ்வாறு நினைத்ததுண்டு.ஆனால் மகரிஷி பற்றிய அறிமுகம் எதுவுமின்றி அல்லது அதிகமின்றி இவ்விழா நிகழ்வுகளையும்,அஞ்சல் தலை வெளியீட்டையும் செய்தித் தாள் வழி அறியும் மனிதர்கள் தபால் தலை
வெளியிடும் அளவுக்கு இவரிடம் என்ன சிறப்பிருக்கிறது என்பதைத் தேடிச் செல்லும்போது இவரையும் இவரது கோட்பாடுகளையும் கொஞ்சமாவது அறிமுகப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறதல்லவா.அதுதான் இந்நிகழ்வுகளின் பயனாக இருக்க முடியும்.
மற்றொன்று புகழுரை என்பது மகரிஷி என்ற தனிமனிதருக்கல்ல.அவர் வகுத்த தத்துவத்துக்குத்தான்.அதனால்தான் வெறும் வாழ்த்தரங்கமாக மட்டும் அல்லாமல் கருத்தரங்கமாக நடக்கிறது.
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
கருத்துரையிடுக