துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.8.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 1


ஒரு முன் குறிப்பு:
பெண்ணியக் கோட்பாடுகள் பல்வேறு பரிமாணங்களை எட்டியபடி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட அது பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவர்களாகப் பலர் இருப்பதை அன்றாடச் சமூக நடப்பில் காண முடிகிறது.
அப்படிப்பட்டவர்களிலும் பல்வேறு சாரார் உண்டு.ஒரு வகையினர் உண்மையிலேயே அது பற்றிய தெளிவு அற்றவர்களாய்ப் புரிந்து கொள்ள முயற்சியும்,ஆசையும் கொள்பவர்கள்; பிறிதொரு சாராரோ அது பற்றிப் புரிந்து கொள்ளும் தேட்டம் எதுவுமின்றிப் போகிற போக்கில் அதன் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறவர்கள்; இன்னும் சிலர் ‘பெண்ணியம்’என்ற சொல்லையே ஏதோ தீட்டுப்பட்ட சொல் போல எண்ணிக் காத தூரம் ஓடிவிட்டுத் தொலைவிலிருந்து கொண்டு அதை எள்ளி நகையாடுபவர்கள்.

இவர்களுள் முதல் பிரிவைச் சேர்ந்த சில இணைய வாசகர்கள்
பெண்ணியம் பற்றிய அடிப்படை விளக்கங்கள் சிலவற்றை நாடி அவற்றைத் தெளிவுபடுத்துமாறு மடல் எழுதியதால் ,
அவர்களுக்காகவும் ,மற்றும் இத் துறையில் ஈடுபாடு கொண்டு இவ் வலையை நாடி வரும் வாசகர்களுக்காகவும்  
எளிமையான சில பெண்ணியப் புரிதல்கள் , தொடர் பதிவுகளாக
 ( ‘பெண்-இலக்கியம்-வாசிப்பு’,’தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழி’ஆகிய எனது நூல்களின் துணையோடு)
இந்த வலைப்பூவில் முன் வைக்கப்படவிருக்கின்றன.

இன்றைய பின் நவீனத்துவச் சூழலில் பெண்ணியச் சிந்தனைகள்  பலவகையாக முன்னிறுத்தப்பட்டாலும் அவற்றின் தொடக்கநிலைத் தோற்றுவாய்க்கான அடிப்படைஉண்மைகள் என்றும் மாறாதவை என்பதால் 
முதலில் ஒரு சில அடிப்படைகள் மட்டுமே தரப்படவிருக்கின்றன.
தொடர்ந்து வரும் வாசக எதிர்வினை,பங்கேற்பு ஆகியவற்றுக்கேற்ப அனைத்துப் பெண்ணியச் செய்திகளும் ஆராய்ச்சிக்கு உட்படுகையில்,வரிசை முறைப்படி,பின் நவீனத்துவப் பெண்ணியக் கருத்துக்களும் தவறாமல் இடம் பெறும்.



பெண்ணிய அடிப்படைகள் சில....-முன்னுரை;
சமுதாய நலனில் அக்கறையும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட எந்த மனித உயிரின் இறுதி இலக்கும் மானுட விடுதலை நோக்கியதாகவே அமைதல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை
ஆனாலும், காலம் காலமாக வருணம்,சாதி,இனம் முதலிய மேலாதிக்க உணர்வுகளால் நசுக்கப்பட்டுத் தலைமுறை தலைமுறையாய்த் தாழ்த்தப்பட்டவர்களாகவும்,ஒடுக்கப்பட்டவர்களாகவுமே நடத்தப்பட்டு வரும் தலித்துகள்....
சாதி,வர்க்கம் என்ற வேறுபாடு எதுவுமின்றி,ஆணாதிக்க சமூக அமைப்பின்போது பால் அடையாளமாகவும்,இரண்டாம் பாலினமாகவும் மட்டுமே எல்லைகள் குறுக்கப்பட்டுத் ‘தனி மனிதத் தகுதி’ என்ற ஒன்றே மறுக்கப்பட்ட பெண்கள்..
ஆகிய இரு சாராரும் இன்னமும் கூடப் பல்வேறு தளைகளில் பிணைப்புண்டு கிடக்கும் இன்றைய சூழலில் அவர்களின் விடுதலைக்காகச் சிந்திப்பதும்,அதற்காகக் குரல் கொடுப்பதும் ‘மனித விடுதலை’என்ற பேரிலக்கிற்கு அந்நியமானவை அல்ல என்பதால் தலித்தியம்,பெண்ணியம் ஆகிய இரண்டும் எழுத்தாளர்களால் கவனம் பெறும் அடிக் கருத்துக்களாகிப் படைப்பிலக்கியங்களில் ‘கோபக் குரல்’களாகவும்,’கலகக் குரல்’களாகவும் வெளிப்பாடு கொள்கின்றன.

பெண்ணியம்,தலித்தியம் ஆகிய இரண்டுமே சமூக இயக்கங்களாகவும் வேர் பிடித்து வளர்ந்திருப்பவை.
தங்களது வேறுபட்ட வடிகால்களில் ஒன்றாக இலக்கிய ஊடகத்தையும் கையாண்டவை.
வரலாறு விதைத்திருக்கும் பாதிப்பு வடுக்களைச் சுமந்து கொண்டு அனம் கனக்கச் செய்பவை.
இலக்கியப் படைப்புக்களில் கலைநயத்தையும்,அழகியலையும் சிதைத்து உட் பொருளை மட்டுமே முதன்மைப்படுத்திப் பிரச்சார நெடி வீசச் செய்பவை என்ற கண்டனத்துக்கு ஆளாக்கப்படுபவை.

இவற்றுள் பெண்ணியம் என்பது ஒரு கோட்பாடாக உருப் பெற்று ,இலக்கியத்திலும் வெளிப்படத் தொடங்கியபின் சற்றுக் காலதாமதமாகவே தலித்திய எழுத்துக்கள் தமிழில் இடம் பெறத் தொடங்கின. எனினும் யுக ய்காந்திரமாகத் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகளின் உட் கோபத்தைப் புரிந்து கொள்பவர்களும் கூடக் கிட்டத்தட்ட அதே போன்றதொரு படகில் பயணிக்கும் பெண்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதது போன்ற பொய்யான பாவனையுடன் அவற்றை மிக இலேசாக ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள்.

’பழைய அழுக்குகள் - அது 
   உன் மூளையிலும் என் மூளையிலும் 
   ஏராளம்!
   துடைத்தெறிந்து விட்டுப் புறப்படுவோம் வா’’
(’எந்தன் தோழா’-கவிதைத் தொகுப்பு)
என்ற கவிஞர் சுபத்ராவின் அறைகூவலைப்போலக் காலம் காலமாகப் பெண் என்ற பிம்பத்தின் மீது நமக்குள் படிந்து போயிருகும் கருத்துருவாக்கங்கள் மூளைச் சலவைகள் ,முன் அனுமானங்கள் ஆகிய அனைத்தையும் துறந்துவிட்டுத்
தேவையற்ற காழ்ப்புணர்வுகள்,ஏளனம் ,பரிகாசம் ஆகிய போலியான முகமூடிகளையும் களைந்து வீசிவிட்டுப் பெண் என்பவள் மானுட இனத்தின் செம்பாதி..,அவளே என் தாய்,தாரம்,சகோதரி என்ற கண்ணோட்டத்தோடு பெண்ணியத்தை அணுகினால் மட்டுமே அதன் நியாயத்தைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொள்ள இயலும்
அந்தத் தேடலும் உள்வாங்கலும் இத் தளத்தில் .நிகழக் கூடும் என்ற நம்பிக்கையோடு ..................             (அடுத்த பதிவில் மேலும்...)

3 கருத்துகள் :

Jeyapandian Karuppan சொன்னது…

நன்றி, அடுத்த பதிவை எதிர்நோக்கி - ஜெயபாண்டியன்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

\\தலித்துகளின் உட் கோபத்தைப் புரிந்து கொள்பவர்களும் கூடக் கிட்டத்தட்ட அதே போன்றதொரு படகில் பயணிக்கும் பெண்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதது போன்ற பொய்யான பாவனையுடன//

சரியாகச் சொன்னீர்கள் சுசீலாம்மா

Unknown சொன்னது…

இது என்னைத் தெளிவுறுத்த எழுதியதெனக் கொள்கிறேன். மிக்க நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....