துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.3.10

வஞ்சமகளும், குழந்தைக் குகனும்

முருகனின் திருநாளாகிய பங்குனி உத்தரம், இலக்கியஆர்வலர்களுக்குக் கம்பனின் திருநாள்.


தமிழின் மகத்தான இலக்கிய ஆளுமை கம்பன்.
கற்றவர் இதயங்களைத் தன் பொருள் வளத்தால் கனிய வைக்கும் கம்பநாடன் கவிதைகளின் சொல்வளம் வியக்கவும்,மலைக்கவும் வைக்கும் அளவுக்கு நயமும்,திறமும் வாய்ந்தது.
‘தேர்ந்தெடுத்த சொற்களின் தேர்ந்தெடுத்த வரிசையே கவிதை’
என்பது,
கவிதைக்குப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம்.

சொல்லவரும் கவிதைக்கேற்ற  சரியான ஒரு சொல் சிக்குவதற்காக மணிக்கணக்கில்.நாள்கணக்கில் தவமிருக்கும் கவிஞர்கள் பலர் இருக்கக் கம்பனின் கவிதைகளில் மடை திறந்த வெள்ளமாகச் சொல் பிரவாகமெடுக்கிறது.
தமிழ்மொழியின் சந்த அழகுகள்(ஓசை நயம்) அத்தனையும் அள்ளிக் கொண்டு ...செய்யுளே இசையாகவும்,நாட்டியமாகவும் மாறிக் கோலம் காட்டி நம்மைச் சுகமான  இலக்கிய போதையில் ஆழ்த்துகிறது.

சித்திரகூடத்திலிருக்கும் இராமன் மீது காதல் மோகம் கொண்ட சூர்ப்பனகை அவனை நோக்கி மென்னடை புரிந்து வரும் கீழ்க்காணும் பாடல் பலருக்கும் அறிமுகமானதுதான்.

’பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
   செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
   அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
   வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’’

(தாமரைப் பூப் போனற செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட தன் மெல்லிய பாதங்களைக் கொண்டு சின்னச் சின்னதாக அடி வைத்து,இளமையான மயிலைப் போல..அன்னத்தைப் போல அழகான வடிவு பூண்டு நஞ்ச மகளான சூர்ப்பனகை வந்தாள்)

வஞ்சத்தை நெஞ்சில் வைத்திருப்பவர்கள் ..பதுங்கிப் பாய்வதுதான் வாடிக்கை. 
இந்தப் பாடலின் சந்தமும் பூனையைப் போல மென்மையாக அடி வைத்து , மயில் போல ஒயில் காட்டிச் சாகசத்தோடு அவள் ஒசிந்துவரும் அழகைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட மென் தளிர் போன்ற பாதங்கள்....,சிவந்த தாமரை போன்ற சிற்றடிகள் ...,மயிலின் சாயல்....,அன்னத்தின் அழகு இத்தனையும் இருந்தபோதும் அவளது உள்ளத்தில் மென்மையில்லை !
அவள் மனத் தடாகத்தில் தூய்மையில்லை !
மயிலின் மடமைக் குண்மோ...,நல்லதை மட்டுமே கொள்ளும் அன்னத்தின் நற்பண்போ சிறிதும் இல்லை அவளிடம்.
அவள் நஞ்சே உருவான வஞ்ச மகள் என்று முத்தாய்ப்பாக முடிப்பதற்காகவே
தமிழின் மெல்லின எழுத்தாகிய ’ஞ’கரத்தை அதன் இன வல்லெழுத்தாகிய ‘ச’கரத்துடன் இணைத்து ’ஞ்ச்’என்ற எதுகையாக்கி ( இரண்டாம் எழுத்து ஒரே வகையில் ஒன்றி வரல்)
வஞ்சனை என்ற பண்புக்கு ஒரு வடிவம் இருக்குமானால் அதுவே நம் கண்முன்பு நிதரிசனமாகத்  தோற்றமளிக்கிற அளவுக்குச் சொல்லடுக்குகளால் இக் கவிதையில் ஓவியம் தீட்டுகிறான் கம்பன்.

பதுங்கி வரும் சூர்ப்பனகையைப் போலப் பாய்ந்து வரும் குகனின் வீர ஆவேசத்தை வெளிப்படுத்துவதற்கும் மேலே சொன்ன அதே எதுகையை (ஞ்ச்) வேறொரு ஓசை நயத்தில்..சந்த லயத்தில் கையாளுகிறான் கம்பன்.

காட்டில் இருக்கும் இராமனைக் காண வேறொரு நோக்கத்தில் வரும் பரதனைப் பிறழப் புரிந்து கொண்ட குகன் அவன் போர் தொடுக்க வந்திருப்பதாக எண்ணி ஆவேசம் கொண்டு வஞ்சினமிடுகிறான்.

‘’அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
   வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே
   வெஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
   உஞ்சிவர் போய்விடின் நாய்க் குகன் என்றெனைஓதாரோ’’
(எனது தலைவனாகிய இராமன் அரச பதவி பெறாமல் வஞ்சனையால் தடுத்தவன் , எனது இருப்பிடமாகிய இந்தக் காட்டுக்கும் வந்து விட்ட தருணத்தில் அவன் பிழைத்துப் போகுமாறு நான் விட்டு விட்டால் உலகம் என்னை நாய் எனப் பழிக்குமே எனத் துடிக்கிறான் குகன் என்பதே இப் பாடல்)

சூர்ப்பனகையின் வஞ்சத்தை எடுத்துக் காட்ட உதவிய அதே எதுகை , இங்கே குகனின் வன்மையை ...இராமன் மீது அவன் கொண்ட பாசப் பெருக்கைப் படம் பிடித்துக் காட்ட அற்புதமாக உதவுகிறது.

தீமையை...மெல்லியலான தன் தோற்றத்தில் மறைத்துக் கொண்டாள் சூர்ப்பனகை !
இங்கோ...குழந்தை போன்ற குகனின் மனதிற்குக் கவிஞனின் சந்த நயத்தால் கற்பாறை போன்ற வன் போர்வை போர்த்தப்படுகிறது!

இடம்,பொருள்,ஏவலுக்கேற்ப.....
பாத்திரங்களின் பண்புகளுக்கேற்பத்
தேர்ந்த சொல்லைத் தெரிந்து பயன்படுத்தியவன் கம்பன்.

அவனது கவி முற்றத்தில்
அவனது கடைப்பார்வை விழாதா என்று ஏங்கித் தவமிருந்து சொற்கள் காத்திருக்கும் !
சொற்களைத் தேடி அவன் என்றுமே சுற்றுலா சென்றதில்லை!
 கவிச் சக்கரவர்த்தியாகக் கம்பன் கொண்டாடப் படுவது,இந்தக் காரணத்தினாலேதான் !

கம்பன் வாழ்க!
கம்பன் புகழ் வாழ்க!
கன்னித் தமிழ் வாழ்க!
(நன்றி;காரைக்குடி கம்பன் கழகத்தின் முழக்கத்துக்கு)

22.3.10

பரிசுக்கு வாழ்த்து

மூத்த எழுத்தாளரும் , வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்புக்களைத் தமிழாக்கம் செய்து(மஹா ஸ்வேதா தேவி,ஆஷா பூர்ணாதேவி) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்திருப்பவருமான கொல்கத்தா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
’நான் கடந்து வந்த பாதை’
என்ற தனது தன் வரலாற்று நூலுக்காக
இவ்வாண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
(அந்நூல் குறித்த மதிப்புரையை இவ் வலைத் தளத்தில்
உழைப்பின் தன் வரலாறு’- http://masusila.blogspot.com/2009/11/blog-post_19.html
என்ற தலைப்பில் காணலாம்)
மிகச் சிறந்த எழுத்து உழைப்பாளியும்,நான்காவது முறையாக இலக்கியச் சிந்தனை பரிசு பெறுபவருமான திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

18.3.10

சங்கக் காதலில் தாய்மை(1)

காதல் என்றால் அங்கு இடம் பெறுவது, தலைவன்,தலைவியரின் உணர்வு மட்டுமில்லை.

காதல் என்பது குடும்பம் சம்பந்தப்பட்டது ; சமூகம் சம்பந்தப்பட்டது.

குடும்ப உறவில் அச்சாணியாக விளங்கும் தாயை மகளின் காதல் உறவு பாதிக்கிறது.
தாயறியாத சூலில்லை என்பது பழமொழி!ஆனால் பாலூட்டிச் சீராட்டித் தான் வளர்த்த அருமை மகள் தனக்குத் தெரியாமல் ஓர் ஆடவனிடம்  காதல் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரும்போது அந்தத் தாய் அதிர்ந்து போகிறாள்.அதிலும் அந்தப் பெண் , தன் காதலனோடு ஊரை விட்டே ஓடிப்போகும்போது .தாயின் அதிர்ச்சி பன்மடங்காகிப் பெருகுகிறது.

 தன் மகளை இன்னும் கூட வளர்ச்சியடையாத ஒரு சிறு குழந்தையாகவே எண்ணியிருந்த தாய்மனம் , பெண்ணைப் பிரிந்த ஏக்கம் ஒரு புறமும் , அவள் தந்திருக்கும் அதிர்ச்சி மறுபுறமுமாகத் தத்தளிக்கிறது.

தன் செல்ல மகள் பிரியமாக விளையாடும் பொம்மை....,

பாலும் பழமும் தந்து அவள் பழக்கியிருந்த பசுங்கிளி...,

அவள் வளர்த்துக் கொண்டிருந்த பூவை என்ற பறவை...,

என்று இவைகளையெல்லாம் காண்தொறும்,காண்தொறும் ஏக்கம் கிளர்ந்து வரக் கலங்கிப் போகிறாள் அவள்.

முறைப்படி திருமணம் முடிந்து மகள் புகுந்தவீடு செல்லும்போதே பிரிவிவின் சுமையால் ஏங்குவது பெற்றோர் மனம்.
‘’ஒரு மகள் தன்னை உடையேன்
   உலகம் நிறைந்த புகழால்
   திருமகள் போல வளர்த்தேன்
   செங்கண்மால்தான் கொண்டு போனானே..’’
என்று ஆண்டாளைப் பிரிந்த ஏக்கத்தைத் தந்தை நிலையில் பதிவு செய்வார் பெரியாழ்வார்.

அவ்வாறிருக்கையில்,இங்கே.... இந்தச் சங்கப் பாடலில் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட மகளின் திடீர்ப் பிரிவை அந்தத் தாய்மனம் எப்படித் தாங்கும்?

பாவை போன்ற என் அழகான மகள் ஏந்தியிருந்த பாவை இதுதானே?
பூவையைப் போலக் கொஞ்சி விளையாடிய என் செல்லக் குழந்தை கொஞ்சி விளையாடிய கிளியும் இதுதானே?
கிளி போன்ற என் பெண் வளர்த்து வந்த கிளியும் இதுதானே?

நேசத்துக்குரிய இவற்றையும், பாசத்துக்குரிய இந்த அன்னையையும் விட்டுவிட்டுக் கல்மனதோடு காதலனுடன் போக அவள் எப்படித்தான் துணிந்தாளோ என்று துடிக்கிறாள் சங்கத் தாய்.

‘’இது என் பாவைக்க்கினிய நன் பாவை
  இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி
  இது என் பூவைக்கினிய சொற்பூவை என்று
  அலம்வரு நோக்கின் நலம் வரு சுடர்நுதல்
  காண்தொறும் காண்தொறும் கலங்க
  நீங்கினளோ என் பூங்கணோளே’’

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் பெற்ற மனம் பித்தாகும் தன்மையை நடப்பியல் போக்கில் நயம்படச் சித்திரிக்கிறது.

பி.கு;
‘’எங்கப்பனைப் போட்டுத் தள்ளிட்டு என்னத் தூக்கிட்டுப் போ’’ என்று காதலி காதலனிடம் கூறும் ‘வீர’ (!?) வசனங்களை மட்டுமே (நன்றி;பருத்தி வீரன்) கேட்டுப் பழகும் இன்றைய இளைய தலைமுறை ...பெற்றோராக மாற்றம் பெறும்போதுதான் மென்மையான இந்த உணர்வுகளை ஒரு வேளை விளங்கிக் கொள்ள முடியுமோ...என்னவோ?

7.3.10

கரு

ஒரு பெண்ணின் இருப்பு , அவளது மறு உற்பத்தித் திறனைக் கொண்டே சமூகத்தால் கணிக்கப்படுவதையும், ‘ஜனன உற்பத்தி சாலை’யாக மட்டுமே அவள் குறித்த நோக்கு நிலை சுருங்கிப் போவதையும் ஆழமாக உள்வாங்கிக் கொண்டு புனையப்பட்டுள்ள நீள் கதை உமாமஹேஸ்வரியின் ‘கரு’.
(கணையாழி இதழில் பரிசு பெற்ற குறுநாவலாகிய  இப் படைப்பு,’மரப்பாச்சி’ என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது)

கதையைக் கூறும் முறை இரு தள நகர்வுப் போக்கில் அமைந்திருப்பது, இப் புனைவுக்குக் கூடுதல் பரிமாணத்தையும்,கனத்தையும் சேர்க்கிறது.

கதை ஒன்றைக் கருக் கொண்ட ஒரு பெண்படைப்பாளி, தாய்மைக் கருவுறாத பெண்ணைப் பற்றி எழுதத் தொடங்குகிறாள்.
எழுத்தையும்,கற்பனையையும் சூல் கொண்டு பிரசவ வேதனையாய் அவற்றை இறக்கி வைக்கத் தவிக்கும் அவளுக்கு அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்.
கைக் குழந்தைக்குப் பாலூட்டல்,மூத்த குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பல்,கணவனுக்கும்,அத்தைக்குமான பணிவிடைகள்...என அனைத்தும் ஓய்ந்து பேனாவும்,அவளுமாய்த் தனித்திருக்கக் கிடைத்த வாய்ப்பிலும் தொடர்ச்சியாகக் கதையை நகர்த்திச் செல்ல இயலாமல் குடும்ப நெருக்கடிகள்....
மேலும்’’எழுதுகிறேன்,படிக்கிறேன் என்று குழந்தையைச் சரியாய்க் கவனிக்கலியோ’’என்ற குற்ற உணர்வின் குறுகுறுப்புக்கள்.

இவற்றுக்கிடையே அவள் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் பெண் ,கருத் தரிக்காத காரணத்தால் உறவுப் பழிக்கும்,ஊர்ப் பேச்சுக்கும் ஆளானவள்.
வெவ்வேறு மருத்துவச் சோதனைகளுக்கு வெள்ளெலியாக்கப்பட்டவள்.
உறவு வட்டங்களின் எள்ளலுக்கும்,நிராகரிப்புக்கும் ஆளானவள்.
‘உள் அறையில் தொட்டில் ஆடவில்லை’
என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு இந்தக் கதையை முதல் பெண் துண்டு துண்டாக எழுதிச் சேர்க்கிறாள்.
அதன் இறுதிக் கட்டத்தில் கதை,தன்னைத்தானே இவ்வாறு முடித்துக் கொள்கிறது.

‘’என் தலை கழன்று அறையின் மூலைக்கு உருண்டு போனது ; கை கால்கள் பக்கங்களில் பிய்ந்து விழுந்தன. இருதயம் உலர்ந்து சருகாகி நொறுங்கியது ; நான் ஒரு சிறிய பேரிக்காய் வடிவ - கிட்டத்தட்ட மூன்றங்குல நீளமும்,இரண்டங்குல அகலமும் உள்ள வெற்றுப் பையாக மட்டும் மாறித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்’’

இந்நீள் கதையின் இருதளக் கதை நகர்த்தலுக்கும் பொதுவானதாகப் பின் நவீனத் தன்மை கொண்ட இம் முடிவு அமைந்திருக்கிறது.
பெண்ணின் மூளையிலும்,இதயத்திலும் கருவாகி மலரும் சிந்தனைகள் ,விருப்பங்கள்,கலைத் திறன்கள் பற்றிக் கவலை கொள்ளாத சமூக அமைப்பு,மனிதக் கருவை வளர்த்தெடுப்பது பற்றிய எதிர்பார்ப்பை மட்டுமே அவளிடம் கொண்டிருக்கிறது.

இச் சூழலில்,இரு பெண்களும் வெறும் கருப்பையாக மட்டுமே மாறி முகமிழந்து போவதை நவீன உத்திகளோடு இணைந்த யதார்த்தச் சித்தரிப்பாக இப்புனைவு எடுத்துக் காட்டுகிறது.

பெண்ணின் படைப்பாக்க ஆர்வம் , அவளது பணிச் சுமையால் நடப்பியல் வாழ்வில் சாத்தியமற்றுப் போய் அரைகுறையாய்க் கருக்கலைப்பு செய்யப்படும் அவலத்தை மேற்குறித்த புனைகதை போன்றே வேறொரு கோணத்தில் நீலா என்பவர் எழுதிய பின்வரும் கவிதை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறது.

’பேனாவிற்குப் பதிலாய்க்
   கரண்டி பிடித்திருந்த
   காலைப் பொழுதின்
   கையறு நிலையில் அது தோன்றியது
   ‘அம்மா பால்’காரனில் துவங்கி
   ‘இன்னொரு கப்’பெரியவரின்
    ஆசையை நிறைவேற்றிப்
    பேனாவைத் தொட்டபோது...எங்கே அது?
    கருவுற்ற நொடியிலேயே கலைந்து போனதா?
    கண்ணாமூச்சி ஆசை கொண்டு ஒளிந்து கொண்டதா?
    என் மனக் கிடங்கிலா...இடுக்கிலா..
    ஆழத்தின் அடியிலா...எங்கே தேடுவேன்..?’’

(ஒரு பின் குறிப்பு;
இந்தக் கவிதையை எப்போதோ ஏதோ ஒரு இதழில் பார்த்துக் குறித்து வைத்திருந்தேன்.ஆனால் அதை எழுதிய ‘நீலா’ என்ற படைப்பாளியை...கவிஞரை அப்புறம் எழுத்துவழி எதிர்ப்படவே இல்லை.
தொலைத்து விட்ட தன் கற்பனைக் கருவைத் தேடும்  அவரது கவிதையைப் போலத் தொலைந்துவிட்ட அவரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இப்படி வாழ்க்கை ஓட்டத்தில் தொலைந்து போன ஆயிரம் ஆயிரம் பெண்படைப்பாளிகளுக்கு இந்த மகளிர்தினப் பதிவு சமர்ப்பணம்.

5.3.10

அமுதமல்ல..ஆலகால விஷம்!

நித்யானந்தா பற்றிய எனது முந்தைய பதிவுக்கு (ஓர் எதிர்வினை)வந்த பின்னூட்டங்கள்  அனைத்துமே பெரும்பாலும் ஒத்த தளத்திலானவை.
தற்பொழுது அதே பதிவிற்குப்  பெயர் குறிப்பிடாத  கருத்துரை ஒன்று, வேறொரு கோணத்திலிருந்து ஆங்கிலத்தில் வந்திருக்கிறது.
மாற்றுத் தரப்புக் கூறும் அந்தக் கருத்தையும் வெளிப்படுத்தி, அதற்கான விடை தரும் நோக்கில் அக் கடிதத்தின் தமிழாக்கத்தையும்,அதற்கான என் பதிலையும் இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

பெயரில்லா எழுதியது...(கடிதத்தின் மொழியாக்கம்)
’’எதிர்ப்படும் சிக்கல்களையெல்லாம் உணர்ச்சி வேகத்துடன் மட்டுமே அணுகுவது தமிழர்களாகிய நமக்கு வாடிக்கையாகப் போய்விட்டிருக்கிறது. 
ஒன்றை ஆதரித்தாலும் சரி,எதிர்த்தாலும் சரி..அதே மாதிரியான உணர்ச்சிக் கொந்தளிப்புத்தான் நமக்கு.
உண்மையான பிரச்சினை என்று  வரும்போது மட்டும் நாம் சரியாகக் குரலெழுப்பத் தவறி விடுகிறோம்.
ஈழப் பிரச்சினையைக் கொஞ்சம்  எண்ணிப் பாருங்கள்.
முக்கியமில்லாத விஷங்களுக்கு மட்டும்தான் நாம் உச்சபட்சக் குரலை உயர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பது அப்போது தெளிவாகப் புரியும்.
மக்களைத் திசை திருப்புவதனாலும்,வேண்டாத விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாலும் இந்தத் தொலைக் காட்சி ஊடகங்கள் சாதித்ததுதான் என்ன.
ஆபாசமான வக்கிரமான காட்சிகளைப் பகிரங்கப் படுத்தி ஒளிபரப்பும்போது மட்டும் தமிழ்ப் பண்பாடு சுலபமாக மறக்கப்பட்டு விடுவது ஏன்.
ஈழப் போர் நடந்தபோதும் இதே ஊடகம், முதல்வரின் உண்ணாவிரதநாடகங்களுக்குத்தான் முதலிடம் தந்ததே தவிர அடிப்படையான செய்திகளுக்கு அல்ல.

குறிப்பிட்ட இந்த ஸ்வாமிஜி பற்பல ஆண்டுகளாக மிகத் தெளிவான நோக்கங்களுடன் ஆழமாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்;
அதை யாராலும் மறுக்க முடியாது.
வேண்டுமென்றால் அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்;இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்.
இப்போது இந்த வீடியோப் பதிவு மாத்திரம் வெளிவந்திருக்கவில்லையென்றால் அவரது அக வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரியப் போகிறதா என்ன?
அப்போது அது எவருடைய மனச்சாட்சியையும் காயப்படுத்தாது என்றால் அதற்கு என்ன பொருள்?பிறருக்குத் தெரியாமல் ஒன்றைச் செய்தால் நாம் அதை அங்கீகரிக்கிறோம் என்றுதானே அர்த்தம்?அதுதான் நமது பண்பாடா?

விஷயங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்கும் திறனை நம் கல்வி நமக்குத் தந்திருக்கவில்லை என்றால் அப்புறம் அதனால் என்ன பயன்?
இன்னமும் கூடக்...கற்பு,காவி,ஆண்பெண் உறவு ஆகியவற்றைப் பற்றிய ஏகப்பட்ட குழப்பங்களுடனும்,தவறான புரிதல்களுடனும்தான் நாம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆஹா!நமது தமிழ்ப் பண்பாடுதான் எத்தனை அற்புதமானது?!!!’’


பெயரில்லாமல் கருத்துச் சொன்ன நண்பருக்கு.....
அவரது எதிர்வினைக்கு என் மறு மொழிகள்;

1. உணர்ச்சி வேகத்தில் ஒருவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பதும்,பிம்பம் கலைந்ததும் தலைகுப்புறக் கவிழ்ப்பதும் பொதுவான சில மனித பலவீனங்கள்;
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோலத் தமிழர்களுக்கு அது சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.
சில அசாதாரணமான தருணங்களில் அதனால் நன்மையும் கூட விளைந்திருக்கிறது.
குறிப்பாக இலங்கைப் பிரச்சினையில் அதை நாடகமாக்காமல் வேகம் குறையாத நடுநிலையோடு ஆத்மார்த்தமாகக் கருத்துக்களை முன் வைத்தோரும் உண்டு.

2.அடுத்து நீங்கள் சொன்னதுபோல ஊடகங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைக் காட்டியது சரியில்லைதான்.
அது கண்டனத்திற்குரியது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

ஆனால்...அது அவர்களுக்கு ஒரு வியாபாரம் மட்டுமே.


ஆன்மீக வியாபாரத்துக்குக் கடை விரிப்பவர்களைப் போல


(’’கடை விரித்தேன் கொள்வாரிலையே ‘’என்று தவித்த மெய்யான ஆன்மீகவாதிகள் எங்கே?கோடிக் கணக்கில் கறுப்புப் பண முதலைகள் கொட்டும் பணத்தால் கொழிக்கும் இவர்கள் எங்கே?)

ஊடகக்காரர்களும் பரபரபரப்புக் கடை விரித்து வியாபாரம் செய்கிறார்கள்.
(அந்த ஊடகங்களைக் கூட..உபதேசப் போர்வையில் மட்டுமன்றிப் பணத்தாலும் வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் இந்தப் போலிகள்.)

3.மூன்றாவதுதான் முக்கியமானது.

முதல் இரண்டு தவறுகளும் குறிப்பிட்ட அந்த ஆன்மீகவாதி செய்த தவறை நியாயப்படுத்திவிட முடியும் என்று உங்களால் எப்படி எண்ண முடிகிறது?

எதிராளியின் மன ஒப்புதல் இல்லாமல் இது நடந்து விடவில்லை என்பது உண்மைதான் என்றபோதும் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குத் துளியும் பொருத்தமில்லாத ஒரு வேடம் புனையும் கபடதாரிகளைப் பார்க்கும்போது உண்மையான ஆன்மீக மார்க்கத்தின் மீது கூடக் கண நேரம் ஐயம் தோன்றிவிடுவது தவிர்க்க முடியாதது.

ஒரு பாணன் பொய் சொல்வதைப் பார்த்து எல்லாப் பாணர்களுமே இப்படித்தானோ(‘’ஒரு நின் பாணன் பொய்யனாக..’’ )என்று நினைக்க ஆரம்பித்து விடுவாள் ஒரு தலைவி என்பதாக ஒரு சங்கப் பாடல் கூட உண்டு.

4.ஒன்றை மறைவாகச் செய்வதால் அது சரியானது, ஏற்கக் கூடியது என்று யாருமே சொல்லவில்லை.

ஆனால்...அதற்காக,
இரட்டை வேடங்களின்
திரை விகாரமாக விலகி உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது பிறக்கும் நியாயமான எதிர்வினைகள் தவறானவை என்றோ...வெறும் ஆவேசமான உணர்வெழுச்சியில் பிறப்பவை என்றோ அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

ஒரு மனிதரைப் பீடத்தில் ஏற்றி ஆராதனை செய்தவர்களை விட .... இப்படிப்பட்ட ஒரு ஆளிடம் தங்கள் அறிவை அடகு வைத்து அவர்கள் மந்தைத்தனமாக ஏமாந்து போயிருக்கிறார்களே என்ற சமூகக் கவலைதான் இது சார்ந்த பல எதிர்வினைகளை வரவழைத்திருக்கிறது.

இது தொடர்பாகத் தார்மீகக் கோபத்துடன் (கவனியுங்கள்.அங்கலாய்ப்புடன் அல்ல.) கருத்துப் பதிவு செய்யும் பெரும்பான்மையோர்...அந்த நபரின் வழிபாட்டாளர்கள் அல்ல என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்.
இது ,தனி ஒரு மனிதனின் அறம் சார்ந்த பிரச்சினையாக,அவன் மட்டுமே சார்ந்த அந்தரங்கப் பிரச்சினையாக இருந்தால்...அதற்குள் மூக்கை நுழைப்பது நிச்சயம் தவறுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட நபர் பொதுவாழ்வின் வெளிச்சத்தில் குறிப்பிட்ட ஒரு ஸ்தானத்தில் நிறுத்தப்பட்டிருப்பவர்.
 பலரின் முன் மாதிரி என்றும்,வழிகாட்டி என்றும் தன்னைக் காட்டிக் கொண்டிருப்பவர்கள்
மறைவாகச் செய்து வரும் கள்ளத் தனங்களை அம்பலப்படுத்துவதிலும் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் புனித பிம்பங்களைக் கட்டுடைத்துப் போடுவதிலும்,அவை பற்றி விமரிசிப்பதிலும் என்ன பிழை இருக்கிறது?
அதற்கான உரிமை...பொறுப்புள்ள ஒவ்வொரு சமூகப் பிரஜைக்கும் உண்டு.

’ரிஷிமூலம்’பார்க்கக் கூடாது என்பது அந்தக் கால மதிப்பீடு;அதுவும் கூட ஆரம்பக் கட்டமான மூலத்தை மட்டும் குறிப்பதுதான்.இப்பொழுது நடந்திருப்பதைப் போன்ற நடுவழி நாடகத்தை அது குறிப்பிடவில்லை.

5.குறிப்பிட்ட நபர் சொன்ன உபதேசம்,மற்றும் நூல்களை மேன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்.
பரிமாறும் பண்டம் ருசியானதாக இருக்கிறது என்றாலும்,அது உருவான பாண்டம் எத்தனை அழுக்கானது என்பது கண்கூடாகப் புரிந்துவிட்ட பிறகு, அந்தப் பண்டம் எவருக்காவது ருசிக்குமா..? குமட்டிக் கொண்டு வந்து விடாதா என்ன.

மனம்,மொழி,மெய் மூன்றும் ஒத்து ஒரே தளத்தில் இயங்குவதே INTEGRITY.
அது இல்லாமல் போகும்போது அமுதத்தையே ஊற்றிக் கொடுத்தாலும் கூட அது ஆலகால விஷம்தான்.

2.3.10

ஓர் எதிர்வினை

'’கதவைத் திற காற்று வரட்டும்’’என்றார்.!காமராவும் கூடவே வந்தது!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....