துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.4.11

நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து....-1


முன் குறிப்பு;
நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற தில்லி வந்தபோது அவரது பரிசு பெற்ற படைப்பான ‘சூடிய பூ சூடற்க!’ தொகுப்பிலுள்ள கதைகளை முன் வைத்து வானொலியிலும்,தில்லிதமிழ்ச்சங்கத்திலும் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்.

கடந்த சில மாதங்களாகத் தற்காலத் தமிழ் ஆர்வலர்களின் மத்தியில் மட்டுமன்றிப் பரவலாகப் பல ஊடகங்களிலும் கூடப் புழங்கி வரும் ஒரு பெயர் நாஞ்சில் நாடன்..!
35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப்படைப்பிலக்கியம் சார்ந்த பல துறைகளிலும்(நாவல்,சிறுகதை,கவிதை,கட்டுரை)சிறப்பான பங்களிப்புச் செய்து வரும் நாஞ்சில் நாடன்,பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருந்தபோதும் அண்மையில் அவர் பெற்ற சாகித்திய அகாதமி பரிசு , பரவலான பல மட்டங்களைச் சேர்ந்த வாசகர்களும் அறிந்து கொள்ளும் ஒரு பொதுத் தளத்துக்கு அவரை இட்டு வந்திருக்கிறது.

தென்கோடியில் ஒதுங்கிக் கிடக்கும் நாஞ்சில்நாட்டுப் பிறந்த மண்ணின் வாழ்க்கை,பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்து வாழ நேர்ந்த மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள வடநாட்டுப் பகுதிகளின் வாழ்க்கை,தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கோவை மண்ணின் வாழ்க்கை எனத் தான் வாழ நேர்ந்த பிரதேசங்களை,அங்குள்ள பண்பாட்டை,அதன் புவியியல் அமைப்புக்களை,பழக்க வழக்கங்களை,அங்கு வாழும் எளிய மனிதர்களை,அவர்களுக்குள் உறைந்திருக்கும் ஆசாபாசங்களை,சுகதுக்கங்களை,அவர்கள் பேசும் மொழியின் வேறுபட்ட கூறுகளை,ஒவ்வொரு பகுதிக்குமென்று பிரத்தியேகமாய் வாய்த்திருக்கும் உணவுப் பழக்கங்களை - இவ்வாறு பலவற்றையும் புரிந்து கொள்ளும் முயற்சியாகவே தனது படைப்புக்களை உருவாக்கி வரும் நாஞ்சில் நாடன் விருது பெற்ற படைப்பான ‘சூடிய பூ சூடற்க!’என்னும் தொகுப்பிலுள்ள சிறுகதைகளிலும் தனது புரிதல்களையே சுவாரசியமான மொழியில் புனைவுகளாக்கி வாசகர்களுக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எளிய மனிதர்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும் நாஞ்சில் நாடனைப் பொறுத்தவரையில் ஒற்றைப் பார்வையில் புறந்தள்ளிவிட்டுப் போவதற்கானவை அல்ல.அவற்றின் அடியாழம் வரை துருவிக் கொண்டு சென்று தனது படைப்பாக்கத் திறமையால் அவர் தீட்டும் காட்சிச் சித்திரங்கள்,காலம் கரைத்துவிட முடியாதவை.

‘சூடிய பூ சூடற்க!’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘எலிகள்வளைகளுக்கானவை’என்னும் அவரது சிறுகதை ,மேற்குறித்த நோக்கில் கவனம் பெறத்தக்கது.

கோயில் சிறப்பு வாய்ந்த சில தமிழ் நாட்டு ரயில் நிலையங்களின் நீண்ட நடை மேடைகளில் - கல்லால் அடுப்பு மூட்டிக் கையால் ரொட்டி தட்டும் அழுக்கேறிய உடை அணிந்த வட இந்திய யாத்திரிகர்கள் பலரை நம்மில் பலரும் நாள்தோறும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம்;ஒற்றைப் பார்வையால் அவர்களைக் கடந்து சென்றுகொண்டும் இருக்கிறோம்.
 ஆனால் நாஞ்சில்நாடன் என்ற படைப்பாளியின் பார்வை ,
அவர்களது வாழ்க்கை முறையை,சமூகவியலை ஊடுருவித் துளைத்துக் கொண்டு போகிறது.
மராத்திய சட்டீஸ்கர் மாநில எல்லையோரக் கிராமங்களில் இருக்கும் வறட்சி மண்டிய பிரதேசங்களிலிருந்து இராமேஸ்வரத்துக்கும் மதுரைக்கும் அது போன்ற பிற தென்னகத் தலங்களுக்கும் பயணப்படுகிறது ஒரு பெரிய குழு.

நாஞ்சில்நாடனின் கதைகளில் எந்தச் சிரமமுமின்றி வெகு இயல்பாக வந்து அமர்ந்து கொள்ளும் கிண்டல்-அங்கதம் , இங்கும் தொடக்க கட்டத்திலேயே ’’500 பேர் புறப்பட்டார்கள்.தென்னாடு நோக்கி.படையெடுத்து அல்ல;கண்ணகிக்குக் கல்லெடுக்கக் கல் சுமந்த கனக விசயரின் அவமானம் துடைக்க அல்ல;கன்னியாகுமரியில் இருந்து மணல் எடுத்து சேர சோழ பாண்டியர்தலையில் ஏற்றி சந்த் துக்காராமுக்குக் கோயில் கட்டவும் அல்ல’’
என்று மிகப் பொருத்தமாக வந்து விழுந்து விடுகிறது.

அந்த வட மாநில மக்களின் யாத்திரை மேலும் தொடர்கிறது.

’இரயில் கட்டணத்துக்கு மட்டும் தலைக்கு 500 ரூபாய்;சாப்பாடு அவரவர் பாடு;தங்கல் ரயில் நிலைய ஆளற்ற பிளாட்பாரங்களில்;தண்ணீர் இருதால் குளிப்பு,துவைப்பு.ஒரு குழுவின் பொது உபயோகத்துக்கு அலுமினியப்பானை - தண்ணீர் பிடிக்க,குளிக்க,வெந்நீர் வைக்க..அகன்ற அலுமினியத் தாம்பாளம் ரொட்டிக்கு மாவு பிசைய..!சிறு உருண்டை மாவு எடுத்துக் கையால் ரொட்டி தட்டிக் கொள்வார்கள்.அடுப்பு என்பது மூன்று செங்கல் அல்லது கருங்கல் துண்டுகள்..இற்றுக் கிடக்கும் ரயில் தாங்கு கட்டைகளின் கீறிப் பிளந்த துண்டுகள் மதமத என்று எரியும்..’
என்று அந்தப் பயணக் காட்சி நாஞ்சில் நாடனின் கதை வழி நம் கண் முன்னே படமாக விரிந்து கொண்டே போகிறது.
தென்குமரியில் தீர்த்தமாடிவிட்டு நாகர்கோயிலிலிருந்து கோவை பாசஞ்சரைப் 
பிடித்து மதுரை செல்ல அந்தக் கூட்டம் எத்தனிக்கையில் வண்டிக்குள் நுழையும் உள்ளூர் ஆட்கள் பகைமையான மனோபாவத்துடன் அவர்களை எதிர்கொள்கின்றனர்.
‘’காட்டுமிராண்டிக் கூட்டம்..எங்கேருந்துதான் வாறானுவளோ?’’
‘’காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊரிலே கெடக்காம பொறப்பிட்டு வந்திருக்கானுகோ ஊரை நாற அடிக்கதுக்கு..’’
‘’டிக்கட் கூட வாங்க மாட்டானுவோ..’’
என்றெல்லாம் சரமாரியான வசைப் பொழிவுகள்.
ரயிலில் தங்களுக்கும் தங்கள் உடைமைகளுக்கும் இடம் கிடைக்காத ஆதங்கத்தில் அருகாமையிலுள்ள ஊர்களுக்குப் போக வேண்டிய ஜனங்களும் கூடப் பொங்கித் தீர்க்கின்றனர்.
தமிழ் தெரியாத மராத்திக்காரனுக்கும்,மராத்தி தெரியாத தமிழ்க்காரனுக்கும் சர்ச்சை வலுக்க ..காவல்துறையும் டிக்கட் பரிசோதகரும் தலையிடுகின்றனர்.
பிறகுதான் அந்தச் சுற்றுலாக் குழுத் தலைவரிடம் மொத்தப் பயணிகளுக்குமான பயணச்சீட்டு இருப்பது தெரிகிறது.

ஏழை விவசாயிகளாக இருந்தாலும் காசியும் காளிகட்டும்., திருப்பதியும் கன்னியாகுமரியும் பார்க்க ஆசைப்படும் வட நாட்டு மக்களையும் ..
சாதிசனங்களுக்குள்ளேயே வளைய வரும் தென்னாட்டு மக்களையும்
அவரவர் இயல்புகளுக்கேற்ப...எதிரும் புதிருமாக நிறுத்தி,
’’அவர்கள்,மேற்கில் மேலாங்கோடும்,கிழக்கில் முப்பந்தலும் தாண்டியதில்லை;தெற்கே கன்னியாகுமரிக் கடலையும்,வடக்கே காளிகேசம் மலைகளையும் அவர்களால் தாண்டவும் முடியாது’’
என்ற முத்தாய்ப்போடு,
வளைகள் எலிகளுக்கானவை’
என்று தீர்ப்பெழுதி முடிக்கிறார் நாஞ்சில் நாடன்.


(அடுத்த இடுகையில் நாஞ்சிலின் மேலும் சில கதைகள் பற்றிய பார்வை தொடரும்).


.
.

3 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

நாஞ்சிலாரின் கதையைப் படிக்கத் தூண்டியது. 'தொடரும்' போட்டிருக்கிறார். 'சூடிய பூ' புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டியது தான்..:)

Thiruvaazhmaarban சொன்னது…

Many a times i used to visit Rameswaram Express from Chennai To Trichy that too purposefully in Unreserved Coaches or SL coaches. There i can heard similar comments against NorthIndian Travellers with their usual turbans and devotional songs or bhajans in Chennai Egmore. But local travellers from Chennai to Chengelpet or Tambaram usually scold them or almost quarelling them with unparliamentary words in local language which is like barbaric culture. I worried why this much of inhuman or uncultured way of practices prevelant in our Tamil society while catching seats in trains or buses

சித்திரவீதிக்காரன் சொன்னது…

நாஞ்சில்நாடனின் கான்சாகிப் சிறுகதைத் தொகுப்பை சென்ற மாதம்தான் வாசித்தேன். மிகவும் நெருக்கமான நடை அவருடையது. சூடிய பூ சூடற்க! தொகுப்பை விரைவில் வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தந்தது தங்கள் பதிவு. பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....