துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.6.11

கும்பகருணனும், ஒசாமாபின்லேடனும்..

ஒரு முன் குறிப்பு;
’’அறத்தின் குரலாய் ஒலித்து ஆழ்கடலில் மூழ்கிய கும்பகருணனுக்கும் ...
வன்முறையின் வடிவாய் வாழ்ந்து கடலுக்குள் ஆழ்த்தப்பட்ட பின்லேடனுக்கும் ..
கடலுக்குள் மூழ்கிப் போனவர்கள் என்பது தவிர....வேறு சம்பந்தம் எதுவுமில்லை’’

.கும்பகருணன் கம்பனில் ஒரு சுவையான பாத்திரம்.

’’ஆறு நூறு சகடத்து அடிசிலும் 
   நூறு நூறு நூறு குடம் கள்ளும் நுங்கினான்
   ஏறுகின்ற பசியை எழுப்பினான்..’’என,அவனது மிகையான உணவும் 
கும்பகருணன் உறங்கும்போது தலைப்பக்கமாக உலக்கை வைத்து இடித்து எழுப்பும் காட்சியைச் சித்தரிக்கும்
’’உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
  இறங்குகின்றது இன்று காண் ! எழுந்திராய் எழுந்திராய்!
  கறங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே
  உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்து உறங்குவாய்!’’என்ற பாடல் வழி அறியலாகும் அவனது உறக்கமுமே நகைச்சுவையோடு சொல்லப்பட்டு அவையே அதிகமும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
(அறுநூறு வண்டிச் சோறும்,நூற்றுக்கணக்கான குடம் கள்ளும் நுங்குதல் என்பதும்-அதுவும் அவை பசியைத் தூண்டும் ஒரு கருவி மட்டுமே என்பதும் மலைப்பூட்டுவது;இது,மனித..ஏன் ராட்சத யத்தனத்துக்கே அப்பாற்பட்டதுதான்.
ஆனாலும் கம்ப காவியத்தைப் பொறுத்தவரை,எல்லாமே பேரெல்லைதான்..தயரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர்,அவன் ஆண்டது அறுபதாயிரம் ஆண்டுகள் என. 
அதனால் அப்படியே...அவற்றைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள வேண்டியதில்லை;
அது போலவே உறக்கத்தை எழுப்பும் பாடலின் சந்த நயம் அருமையானது;உலக்கை இடிக்கும்போதான தாளகதியுடன் இயைந்தது என்பது தனி.).


ஆனால் கும்பகருணன் - வெறும் சதைப் பிண்டம் மட்டுமல்ல...
உணவையும் வசதியான சுகபோகங்களையும் தந்த அண்ணன் இராவணனுக்கு அவன் நன்றிக்கடன் பட்டிருந்தபோதும் - அதை உரிய வேளையில் காட்ட அவன் தவறவில்லை என்றபோதும் செஞ்சோற்றுக் கடன் என்னும் ஒரு பண்பால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட பாத்திரமில்லை கும்பகருணன்.
அவனிடம் அற உணர்வு இருக்கிறது.
தன்மதிப்பும் தன்மானமும் இருக்கிறது.

தான் பெற்ற வரத்தின்படி ஆறுமாதங்கள் உறங்கி விழித்ததும் இராவணனிடம் அவன் கேட்கும் முதற்கேள்வி....
கால நாகத்தின் திட்டிவிடம் போன்ற கற்பின் செல்வியாகிய சீதையை ‘நீ இன்னும் விட்டிலையோ?’என்பதுதான்!
(கற்பு , திட்டிவிடத்தின் நச்சுப் போலத் தீண்டியோரை அழிக்கும் வன்மை பெற்றது;
‘’உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சும்,
 சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக்
 கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்’
எனக் கம்பனின் இன்னொரு பாடலும் கற்பை விடமாகக் குறிப்பிடுகிறது)
‘’  ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச்
     சானகி துயர் இனம்(இன்னம்)தவிர்ந்ததில்லையோ?
     வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
     போனதோ ?புகுந்ததோ பொன்றும் காலமே ?’’
     ‘’திட்டியின் விடம் அன கற்பின் செல்வியை
       விட்டிலையோ இது விதியின் வன்மையே...’’
      (வன்மையே. என்பதற்கு வண்ணமே என்ற பாட பேதமும் உண்டு)என்று உறங்கி எழுந்தவுடன் இராவணனிடம் குமுறித் தீர்க்கிறான் கும்பகருணன்.
வையமும் வானமும் வளர்த்த வண்புகழ் அழிந்து பொன்றுங்காலம் வந்து விட்டதென்பதை உணர்ந்து மனப் பாரத்தோடு போர்க்களம் புகுந்தாலும் 
அந்தக் கடைசித் தருணத்திலும் கூட அறம் இன்னதென்பதை 
அண்ணனுக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை அவன்.

யுத்தகளம்!
அங்கேயும் கூடத் தனக்கு அறிவுரை கூறித் தடுக்க முன் வரும் வீடணனிடம் ‘நீர்க் கோலம் ‘போன்ற நிலையில்லாத வாழ்வை விரும்பித் தன் அண்ணனுக்கு மாறாக நடக்க மாட்டேன் என்றே உறுதிபடச் சொல்லிவிடுகிறான் கும்பகருணன்.
‘’நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்..’
இது தன் நிலைப்பாடு.ஆனால் கார்மேனி அண்ணலுடன் இருக்கும் வீடண்னின் முடிவையும் சற்றும் விமரிசிக்காமல் இராமனுடன் இருப்பதே வீடணனுக்கு நல்லது என இராமனிடம் செல்லுமாறு அவனை விரைவுபடுத்தவும் செய்கிறான் கும்பகருணன்.
‘’..என் துயர் தவிர்த்தி ஆகின்
    கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி.’’
தன் குலத்தில் ஒருவனாவது உயிர் பிழைத்து அறவழி வாழவும்,அரசாளவும் வேண்டும் என்ற அவனது விழைவுக்கும் இப் பாடல் சான்றாகிறது.

பிறகு களத்தில் நிகழும் உக்கிரமான போரில் இராமனோடு மோதிக் கை,கால்களை இழந்து குறையுடலோடு மூக்கும் அறுபட்ட நிலையில் 
அந்த நிலையில் இராமனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறான் அவன்.

அவற்றுள் ஒன்று வீடணன் சார்ந்தது.
தன் தம்பி ‘நீதியால் வந்த நெடுந்தரும நெறியல்லால் சாதியால் வந்தசிறு நெறி அறியான்’என்றும்,நடுநிலைமை தவறிப்போயிருக்கும் இராவணன்,தன் தம்பி என்று கூட எண்ணாது அவனைக் கொன்று விடக் கூடுமென்பதால் இராம இலக்குவர்களையும்,அனுமனையும் விட்டுத் தன்தம்பி வீடணன் கணப் பொழுது கூடப் பிரியக் கூடாது என்ற வரத்தையே முதலில் வைக்கிறான் கும்பகருணன்.

அடுத்து அவன் வைக்கும் கோரிக்கை அவனது சொந்த மான உணர்வு சார்ந்தது.
மூக்கில்லாத..கை,கால் இழந்த அந்தக் கோலத்தில் தன்னை எவரும் காணக் கூடாது என்பதால் தன்முகத்தைக் கடலுக்குள் ஆழ்த்தி விடுமாறு இராமனிடம் அவன் கேட்டுக் கொள்ளும் இடம் அவனது தன்மான உணர்வின் உச்சகட்டம்...
'' 'மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
  நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
  நீக்குவாய்; நீக்கிய பின் , நெடுந்தலையைக் கருங்கடலுள்
 போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்’ என்றான்’’

இறந்த பின்னும் கூடத் தன் மரணம் அவலமானதாக..அவமரியாதைக்குரியதாக அல்லாமல் - இறந்து கிடக்கும் தனது உடல் ஏளனத்துக்கும்,பரிகசிப்புக்கும் உரியதாக இருக்கலாகாது என நினைக்கும் கும்பகருணனன் ,அதையே ஒரு வரமாக வேண்ட,இராமனும் அப்படியே செய்து முடிக்கிறான்....

‘’ 'வரம் கொண்டான் ; இனி மறுத்தல் வழக்கு அன்று ‘ என்று ஒருவாளி(அம்பு)
   உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா
   சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் கடும்படையால்
   அரம்(அரவம்)கொண்ட கருங்கடலின் அழுவத்துள் அழுத்தினான்’’

அறத்தின் மீது பிடிப்பு.,சகோதரபாசம், செய்நன்றிக்கடன், மான உணர்வு என வேறுபட்ட பல ஆளுமைகளைக் காட்டும் கும்பகருணன் வெறும் சதைக் குன்று மாத்திரம் அல்ல...
காலம் கடந்து நிலைக்கும்படி கவிச் சக்கரவர்த்தி நம் உள்ளங்களில் அழியாமல் செதுக்கியிருக்கும் ஆளுமை அவன்...!

காண்க;


4 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

சம்பந்தம் இல்லை என்று தொடங்கினாலும் எங்கேயாவது ஒசாமா பற்றி எழுதியிருக்கிறீர்களோ என்று தேடத் தோன்றியது. ஒருவேளை அது தான் உங்கள் எழுத்தின் வெற்றியோ?

கம்பன் வரிகளும் உங்கள் விளக்கமும் அருமை.

tamizh virumpi pushpanathan சொன்னது…

அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.தங்களது வலை பூவை பார்த்தேன்.சில படங்களை தரவிறக்கினேன்.நன்றி.நான் கீழ் கண்ட முகவரியில் குறுந்தொகை பாடலுக்கு என் சிற்றறிவுக்கு தெரிந்த விளக்கம் எழுதி வருகிறேன்.தாங்கள் பார்வையிட்டு கருத்து சொல்லவும்.நன்றி
http://www.tamilearumai.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

தலைப்பு அசத்தல்! :)

பாடலும் விளக்கமும் பிரமாதம்! படித்ததும் உங்கள் மாணவியாக நான் இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம்தான் மனதில் மேலோங்கி நிற்கிறது.

பெயரில்லா சொன்னது…

தங்களின் வலைப்பதிவு மூலம் தமிழ் கற்று கொண்டு வருகிறேன், நன்றி மேடம். இப்படிக்கு என்றும் அன்புடன் உங்கள் மாணவன்.மா.சரவணக்குமார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....