துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.5.13

தில்லியிலிருந்து கோவைக்கு...


பணிமாற்றம்,இடப்பெயர்வுகள் இவை இல்லாத கல்லூரிப் பேராசிரியப்பணியில் - ஒரே கல்லூரியில் -ஒரே ஊரான மதுரையில் - 36 ஆண்டுகள் நிலைப்பட்டுப்போயிருந்த எனக்கு அடுத்த தலைமுறையின் பணிச்சூழலால் 7 ஆண்டுக்காலம் தில்லியில் வாழும் வாய்ப்பு வாய்த்தது.

இப்போது அடுத்த பணி மாற்றம் தமிழகத்தில் கோவையில் அமைந்திருக்கிறது..தில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் இந்தக்கட்டத்தில் தில்லி வாழ்வை அசை போட்டு அது தந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

வைகையிலிருந்து யமுனைக்கு..என்ற கட்டுரை ஒன்றில் ஏற்கனவே தில்லி வாழ்க்கையின் அனுபவங்கள் சிலவற்றைப்பகிர்ந்து கொண்டிருக்கிறேன்...


தற்போது இங்கிருந்து விடைபெற்றுச் செல்லும் தருணத்தில் இன்னும் சில...

தில்லியின் கடுமையான வெயிலையும், நடுக்கும் குளிரையும் -ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்- உடல் ஏற்பது கடினமாக இருந்தபோதும் அதையெல்லாம் மீறி இங்குள்ள மக்கள் செலுத்திய அன்பும் நெருக்கமுமே அதைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தியை அளித்தது என்று சொல்லி விடலாம்..இங்கு வாழும் தமிழர்கள் மட்டுமன்றி...அடிக்கடி சென்று பழகிய கடைக்காரர்கள் முதல்...வீட்டில் தினமலர் போடும் வடநாட்டு இளைஞன் வரை - தில்லியை விட்டு நீங்கும் எங்களுக்கு உண்மையான பாசத்தோடு வழி கூட்டி அனுப்பி வைத்தது நெகிழச் செய்யும் ஓர் அனுபவம்.

சாகித்திய அகாதமி கருத்தரங்குகள், கதா போன்ற இலக்கிய அமைப்புகள், தேசிய நாடகப்பள்ளி நாடகங்கள், சர்வதேசத் திரை விழாக்கள் என்று தீவிர தளம் சார்ந்த நிகழ்வுகள்...

தில்லியிலிருந்து அதை ஒட்டியும் சற்றே விலகியும் இருக்கும் பல ஊர்களுக்கு [ சிம்லா, டேராடூன் , மஸூரி, நைனிடால்,பின்சார், ரிஷிகேஷ், ஹரித்வார், மதுரா, ஆக்ரா, குருட்சேத்திரம், பரத்பூர், பித்தோரகர், டல்ஹவுசி, அல்மோடா, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், சண்டிகர், அமிர்தசரஸ்,வாரணாசி, பத்ரிநாத் ] அவ்வப்போது பலமுறை மேற்கொண்ட பயணங்கள்..

தில்லி நகருக்கும், தமிழ்ச்சங்கத்துக்கும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் எழுத்தாளர்கள் பலரோடும் , இங்குள்ள எழுத்தாளர்களோடும் அதிக நேரம் ஊடாடி உரையாடும் வாய்ப்பு.....

அவர்களில் தேர்ந்தெடுத்த மிகச் சிலரோடு விளைந்திருக்கும் வாழ்நாள் நட்பு...

தில்லியில் என் இலக்கிய வாசலுக்கு இன்னுமொரு பொற்கதவு திறந்து வைத்து என் சிறுகதைகளையும், நூல்மதிப்புரைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த வடக்குவாசல் ...

 ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த் துறையோடு கொண்டிருந்த தொடர்புகள், அங்குள்ள நிகழ்ச்சிகளில் உரையாற்றிக்கருத்துப் பகிர்வு செய்து கொள்ளக் கிடைத்த வாய்ப்புக்கள்..அங்குள்ள பேராசிரியர்களும்,மாணவர்களும் காட்டிய அன்பு..

தில்லியின் தமிழ் வலைப்பதிவர்களான இளைஞர்கள் பலரும் வயது மறந்து என்னிடம் காட்டிய நெருக்கம்..நேசம்...என்னிடம் ஆலோசனை பெறக் காட்டிய ஆர்வம் துடிப்பு...

தில்லியின் அருங்காட்சியகங்களிலும், விண்கோள் அரங்கத்திலும் செலவிட்ட பொழுதுகள்....

தில்லியின் மறக்க முடியாத நினவுச் சின்னங்களில்- குறிப்பாக காந்தியடிகள் சுடப்பட்ட தீஸ் ஜனவரி மார்க்கிலிருக்கும் பிர்லா மாளிகை தந்த சிலிர்ப்பு...

26 ஜனவரியின் குடியரசு அணிவகுப்புக்கூட்டத்தில் நசுங்கிக் குலைந்தாலும் கூடியிருந்த மக்களின் நாட்டுப்பற்றைக்கண்டு பெருமிதம் கொண்ட பொழுது....
அதை ஒட்டிய ’’படைகள் பாசறைக்குத் திரும்பும்’’ BEATING THE RETREAT என்ற அற்புத நிகழ்வை கம்பீரமான விஜய் சௌக்கின்  ராஜ பாட்டையிலிருந்து- மிக நெருக்கமாகக் கண்டு மகிழ்ந்த நேரம்...

ராஷ்ட்ரபதி பவனத்தின் பூத்துக் குலுங்கும் முகலாயத் தோட்டம்...2007இல் அங்கே சென்றபோது உள்ளிருந்து சட்டென வெளிப்பட்டு மக்களோடு மக்களாய் இணைந்து கைகுலுக்கிச் சென்ற அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாமின் எளிமை....

தில்லி கடைத்தெருக்களில் - கோடைக்குத் தனியே..குளிருக்குத் தனியே எனத் தலை தெறிக்கப் பொருள் வாங்கிக் குவிக்கும் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி இலக்கற்றுச் சுற்றியலைந்த நாட்கள்...

தர்மபுரி,சேலம்,திருச்செங்கோடு,ஈரோடு ,தலைக்காவிரி என்று பலதரப்பட்ட தமிழக ஊர்களிலிருந்து பிழைப்பு நாடி தில்லியில்தஞ்சம் புகுந்திருக்கும் பல்வேறு பொருளாதார மட்டங்களிலான புலம்பெயர்ந்த தமிழர்களோடு பழகும் வாய்ப்பு....

ஆழியாறு யோகக்கலையை தில்லியில்வந்து கற்றுக் கொண்ட நாட்கள்...

பார்வையாளராகப் போன பொழுதுகளிலெல்லாம் கூடப்பங்கேற்பாளராக்கிப் பல முறை சொற்பொழிவாற்றவும் , தமிழ் 2010ன் கருத்தரங்கத் தலைமை ஏற்கவும் வைத்து இறுதியாக அமரர் சுஜாதா விருதையும் அளித்து அழகு பார்த்த தில்லி தமிழ்ச்சங்கம்..

தில்லியிலிருந்து தென்கோடி வாழ் தமிழர்களுக்காகப் பதிவு செய்து ஒலிபரப்பாகும் ’’திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’’ வானொலி நிகழ்வு வழி பல இலக்கிய உரைகளை ஆற்ற முடிந்தததும், இங்கு வரும் எழுத்தாளர்களை நேர்காணவுமாய்க் கிடைத்த  வாய்ப்பு....

என  தில்லி வாழ்க்கை தந்த கொடைகளையும் - கற்றுத் தந்த அனுபவங்களையும் சுமந்தபடி  இங்கிருந்து செல்கிறேன்....

 தில்லியில் கழித்த நாட்களில் குற்றமும் தண்டனையும் ,அசடன் என்ற இரு பெரும் மொழியாக்கங்களைச் செய்து முடித்திருக்கிறேன்…சில சிறுகதைகளையும்,கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களுக்கு எழுதியிருக்கிறேன்; என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது இங்குதான்! தற்போது ஒரு நாவலின் முதல் வடிவத்தை எழுதி முடித்து செம்மையாக்கும் நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இணையம் பழகி வலைப்பூ எழுதத் தொடங்கி என் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது இந்த தில்லி மண்ணிலேதான்!

கிடைத்த இடைவெளியில்....யோகக்கலையிலும் பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி வழி ஒரு முதுகலைப்பட்டம் பெற வாய்ப்பு விளைந்ததும் இங்கேதான்...

தில்லியில் என் பொழுதுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமாகவுமே கழிந்திருக்கின்றன  என்னும் மன நிறைவோடு....இங்கிருந்து விடைபெற்றுக்  கோவைக்குப் பெயர்கிறேன்....

தில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய வழியனுப்பு விழா...
19/05/2013









3 கருத்துகள் :

Vediyappan M சொன்னது…

தில்லியின் அனுபவம் பெரிதினும் பெரிது. தமிழ்நாட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். மகிழ்ச்சி. சென்னைக்கு வரும் பட்சத்தில் ஒரு நாள் டிஸ்கவரி புக் பேலஸ்-கும் தங்களின் வருகை அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிகுந்த மகிழ்ச்சி.புத்தகம் பார்ப்பதும்,வாங்குவதும் மட்டும் என்றும் அலுப்பதே இல்லை.கட்டாயம் வருகிறேன்.உங்கள் அன்புக்கு நன்றி.

NARAYAN சொன்னது…

தில்லியிலிருந்து கோவைக்குப் இடம் பெயரும் அம்மா அவர்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துகள்
தங்களின் எழுத்து வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....