[இந்த ஆண்டு மகளிர் தின மார்ச் 8 சிறப்பிதழுக்காக குங்குமத்திலிருந்து திரு நீலகண்டன் அவர்கள் என்னிடம் ஒரு நேர்காணல் எடுத்து வெளியிட்டிருந்தார்.வேறு சில வேலைகள் காரணமாக அதைஉடன் வெளியிட இயலவில்லை.இத்துடன் அந்த நேர்காணலின் சுருக்கப்படாத வடிவம்.திரு நீலகண்டனுக்கும் குங்குமம் இதழுக்கும் நன்றி]
1. மொழி சார்ந்து நிறைய படித்திருக்கிறீர்கள்.
வளமான மொழியென்று சொல்லத்தக்க அளவுக்கு தமிழில் இலக்கியங்கள் செய்யப்படுகின்றனவா?
வளமான மொழியென்று சொல்லத்தக்க அளவுக்கு தமிழில் இலக்கியங்கள் செய்யப்படுகின்றனவா?
நிச்சயமாக....!
ஜெயமோகனின் ‘கொற்றவை’ ஒன்று போதுமே...! அதை விட வேறென்ன சான்று வேண்டும்?
ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருவது மொழியின் இயல்பு...அந்தப்புதுமையின் மாற்றத்தை வளர்ச்சியை மனதுக்குள் நினைவு படுத்திக்கொண்டுதான் இன்றைய படைப்புக்களை நாம் எடை போட வேண்டும். அந்த நோக்கில் தமிழின் தொன்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் சிறப்புச்சேர்க்கும் படைப்புக்கள் சிறுகதைகளாக..நாவல்களாக..கவிதைகளாக இன்றைய சூழலில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மலிவான தொடர்கதைகளுக்குப்பின்னால் சென்றுகொண்டிருந்த காலம் மாறித் தரமானவற்றை மட்டுமே தேடிச்செல்லும் வாசகர்கள் -எண்ணிக்கையில்
குறைவாகவே இருந்தாலும் – அவர்கள் ஆர்வத்தோடும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடும் படித்து எதிர்வினை ஆற்றுவது இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
2. பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் அளவுக்கு தமிழில் இருந்து இலக்கியங்கள் வெளி மொழிகளுக்குச் செல்வதில்லையே? என்ன காரணம்?
பிற மொழிகளிலிருந்து தமிழில் பெயர்க்கும்போது - ரஷ்யன் போன்ற
மூலமொழிகள் தெரியாவிட்டாலும் கூட நம்பகத்தன்மை கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பை ஊடகமாகக்கொண்டு அதைச்செய்து விட முடிகிறது. தமிழிலிருந்து வேறு
மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்பவர்கள் குறிப்பிட்ட இரு மொழிகளிலும்
திறனுள்ளவர்களாக இருந்தாக வேண்டும். பன்மொழி ஆளுமையையும்
படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்கத்தா
சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிறைய தமிழ்ப் படைப்புகளை - சிலம்பு உட்பட- வங்காள
மொழிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.சங்கப்பாடல்கள் ஏ.கே.ராமானுஜன், ,வைதேஹி
ஹெர்பெர்ட் போன்றவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மௌனி,ஜெயகாந்தன்,இந்திரா
பார்த்தசாரதி ஆகியோரின் பல படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்யப்பட்டிருக்கின்றன. சாகித்திய அகாதமியும் கதா முதலிய அமைப்புக்களும் இதற்கான
முயற்சியில் முனைந்திருந்தபோதும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச்செல்லும் நூல்கள்
குறைவுதான்;அவற்றின் எண்ணிக்கையும்,தரமும் கூடுதலாகும்போதுதான் தமிழின் பெருமையைப்
பிற மொழி வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.
4. மொழிபெயர்ப்புத் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?
தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற மிகப்பெரிய ஓர் உலகப்பேரிலக்கியத்தை என் முதல்
மொழியாக்க முயற்சியாக நான் கொண்டது முழுமையான-முற்றிலுமான ஒரு இனிய தற்செயல். பேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெறும்போதே என் பணிநிறைவுக்காலத்தைப்
பொருள்ளுளதாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் அதை வெறுமையாகக்கழித்துவிடக்கூடாது என்றும்
உறுதியாக இருந்தேன். மிகச்சரியாக அதே நேரத்தில் மதுரை,பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்கள் "குற்றமும் தண்டனையும்" நாவலை மொழிபெயர்த்துத் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நெடுங்காலம் ஆற்றி வந்த பணியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலகியிருக்க நேர்ந்ததால் [பணி நிறைவுக்குப்பின் நான் 7 ஆண்டுக்காலம்-2006 முதல் 2013 வரை
தில்லியில் வசிக்க நேரிட்டது] விளைந்திருந்த வெறுமை உணர்வைப் புறம் தள்ளுவதற்கான ஆக்கபூர்வமான ஒரு துணையாக மட்டுமே தொடக்கத்தில் இந்த முயற்சிக்கு ஒப்புதலளித்தேன். எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், எழுத்துடனும், இலக்கியத்துடனுமான
உறவைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடாமல் தடுக்கவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது; பிறகு ஒரு கட்டத்தில் அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டது; குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்துக்கு வாசகர்கள், சக எழுத்தாளர்கள், மற்றும் திறனாய்வாளர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பு , அடுத்து அசடன் நாவலை மொழியாக்கும் தூண்டுதலை அளித்தது; தொடர்ந்து அதையும் செய்து முடித்தேன். ’அசடன்’ மொழியாக்கத்துக்கு கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி- திசை எட்டும் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி .யூ. போப் விருது என மூன்று விருதுகள் சென்ற ஆண்டு[2013] கிடைத்தன. இம்மொழியாக்கங்களில் ஈடுபட்டபோது கிடைத்த ஆத்ம
திருப்தியும், எதிர்வினைகளும் பணி ஓய்வுக்காலத்தைப்பயனுள்ள வகையில்
செலவிட்டதான மன நிறைவையும் மகிழ்வையும் என்னுள்
கிளர்த்தியிருக்கின்றன.
9. தற்போது செய்து கொண்டிருக்கும் மொழி பெயர்ப்பு பணி என்ன?
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘கீழுலகின் குறிப்புக்க’ளையும் [notes from the
underground] அவரது மிகச்சிறந்த நீண்ட சிறுகதைகள் சிலவற்றையும் மொழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன். சொந்தப்படைப்பாக சிறிய நாவல் ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். இடையிடையே சிறுகதைகள்,குறுநாவல் போன்ற சில படைப்புக்களை எழுதும் எண்ணமும் உண்டு
3. தமிழில் மொழி பெயர்க்கத்தக்க ஆகச்சிறந்த இலக்கியமாக நீங்கள் கருதுபவை எவை?
அவற்றை அத்தனை எளிதாக வரையறுத்து ஒரு எல்லைக்கோட்டுக்குள் அடக்கி விட முடியாது. ’குற்றமும் தண்டனையும்’ பலப்பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் என் மொழிபெயர்ப்பில்தான் தமிழில் முதலில் முழுமையாக வந்தது என அறிந்தபோது பெரும் வியப்படைந்தேன். நான் மொழிபெயர்த்த அசடனும் , கவிஞர் புவியரசு
அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான கரமசோவ் சகோதரர்களும் கூட இதற்கு முன் வார்த்தைக்கு வார்த்தை பெயர்க்கப்படாமல்
சுருங்கிய வடிவத்தில் மட்டுமே தமிழில் வெளிவந்திருக்கின்றன. செவ்விலக்கியங்களாகக்[ CLASSICAL] கருதப்படும் அனைத்து உலகப்பேரிலக்கியங்களும், தவற விட்டு விடக்கூடாதவை எனப்பட்டியலிடப்படும் எல்லா அ-புனைவு நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாக வேண்டும் என்பதும் ஆங்கிலத்திலோ பிறமொழிகளிலோ அவற்றை வாசிக்கும் வாய்ப்பற்ற - வாசிக்க அறியாத பலரும் அதனால் பயன்பெற வேண்டும் என்பதுமே என் விருப்பம்.
8. மொழி பெயர்ப்புக்கு தமிழில் ஏகப்பட்ட வரவேற்பு. மொழி பெயர்ப்பதில் உள்ள சவால்கள் என்ன?
அயல் மாநிலம்- அயல் நாடு என எதுவானாலும் அங்கிருந்து வரும் இலக்கியங்கள் மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து விலகி இருப்பவை. அதிலும் குறிப்பாக தல்ஸ்தோய்,தஸ்தயெவ்ஸ்கி போல சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய பெரும்படைப்பாளிகளின் படைப்புலகும் சூழலும் நம்மிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டவையாகவே இருக்கும். ஆனால் மொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும், மனிதர்களின் உணர்வுப்போராட்டங்கள், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்கள்
,மனிதச்சிறுமைகள்,மகத்துவங்கள் ஆகியவை உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவையே. அவற்றை மூலப்படைப்பிலிருந்து பிறழாமல் தரிசனப்படுத்துவதிலேயே மொழிபெயர்ப்பாளனின் வெற்றி அடங்கியிருக்கிறது.
அயல்நாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போதும்/மொழிபெயர்க்கும்போதும் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்களாகவும்-[surname]- சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்களாகவும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையாகப் பரவலாக நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். பலவகையான இந்த மாற்றுப்பெயர்களும், காலம்,தட்ப வெப்ப சூழல் பற்றிய குறிப்புக்களும்,உணவு வகைகள்,இடப் பெயர்கள் ஆகிய பலவும் நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கத்தையும்,மலைப்பையும்
ஏற்படுத்துவது இயல்பானதே. ஆனால், ’’விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’
மொழியாக்கம் முயல்கிறது’’ என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல,அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை விளங்கிக்கொண்டு விடலாம்.
மூலத்தைப்போன்ற
சரளமான இயல்பான ஓட்டத்துடன் அமையாமல் செயற்கைத்தன்மையுடன் கூடிய மொழிபெயப்பு
நூல்கள் வாசகர்களால்
மிக எளிதாக நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு மிகக்கூடுதலானதாகிறது. மூலநூல் போலவே அது தோன்ற வேண்டுமானால்- அதை உரிய முறையில் உள்வாங்கிக் கொள்வதற்காக- அதன் வாசிப்பு பல முறை நிகழ்த்தப்பட வேண்டும்; அப்போது மட்டுமே மூலநூலாசிரியனுக்கு மிக அணுக்கமாகச் செல்வதும், அவன் பெற்ற அகக்காட்சிகளை - அவன் உணர்த்த விரும்பிய செய்திகளை - அவனது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காண்பதும் சாத்தியமாகும்.
அந்த நுண்வாசிப்பு அளிக்கும் அனுபவத்தின் அடித்தளத்தில் காலூன்றி நிற்கும்போதே மூலமொழியாசிரியனை விட்டு விலகாத மொழிபெயர்ப்பு - இன்னொரு மொழிக்கு அதைக்கொண்டு செல்லும்போது மூலத்திற்கு துரோகம் செய்யாமல் அதிலிருக்கும் செய்தியை மழுங்கடிக்காமல் – மிகையும் படுத்தாமல் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக்கம் வசப்படும்.
தட்டையான-நேரடியான மொழியாக்கத்தைத்தவிர்த்து மூலப்படைப்பிலேயே பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் - அதுவே ஒரு தனிப்படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளன் சற்றுக்கூடுதலான உழைப்பைச் செலவிட்டே ஆக வேண்டும்.
எளிய சொற்களில் ,மிகச்சரளமான இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுவதே அந்நிய மொழிச் சூழல் கொண்ட ஒரு படைப்புக்குள்அலுப்புத் தட்டாமல்,சோர்வை ஏற்படுத்தாமல் வாசகனை ஆழ்த்தக்கூடியது.
நவீன- பின் நவீன வாசிப்புப்பழக்கம் கொண்ட வாசகனாயினும், நல்ல எழுத்துக்களைத் தேடிக்கண்டடையும் எளிய வாசகனாயினும் இன்றைய வாசகனை மொழியாக்கத்துக்குள் கொண்டுவர...அதில் அவனை ஈடுபடச்செய்யத் தேவைப்படுவது, இன்றைய காலகட்டத்தோடு ஒட்டிய தேய்வழக்குகள் தவிர்த்த- நவீன நடைமட்டுமே.
சமகாலப்புனைவுகள் அபுனைவுகள் இவற்றோடு மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்கும் தொடர்ந்த ஊடாட்டமும்,தொடர் வாசிப்புமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விட்டு, அத்தகைய மொழிநடையை நமக்கு வசப்படுத்துபவை.
11. அசடன், குற்றமும் தண்டனையும் மொழியாக்க அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மொழியாக்கமும் கூடப்படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலைதான் என்றாலும் சொந்தப் படைப்புத் திறனை மழுங்கடித்துவிடக்கூடிய இயந்திரத்தனமான ஒரு செயலாக அது ஆகிவிடுமோ என்னும் அச்சம் தொடக்க நிலையில் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தது. ‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பைத் தொடங்கி ஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே அத்தகைய பொய்யான பிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம் - அதிலும் குறிப்பாகப் புனைகதை சார்ந்த மொழிமாற்றம்
- சுயமான படைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே - நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும் அனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை. குறிப்பாக சிறுகதை நாவல் போன்றவற்றை மொழியாக்கம் செய்கையில் நமக்குள்ளும் ஒரு கதை சொல்லி இருந்து நம்மை இயக்கும்போது மட்டுமே வறட்டுத்தனமான-உயிரோட்டமற்ற மொழியாக்கங்களைத் தவிர்க்க முடியும்;மொழிபெயர்ப்புச் செய்பவர் படைப்பிலக்கியப்பயிற்சி உடையவராகவும் இருக்கும் தருணங்களிலேயே அது சாத்தியமாகும்.
பொதுவாக பிறமொழிப் படைப்புக்களுக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பதால்,’குற்றமும் தண்டனையும்’மற்றும் ‘அசடன்’நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்குஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,’நவில்தொறும் நூல் நயமாக’ இந்நாவல்களின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துகொண்டே வந்தன.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போன்ற மனமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.
ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன் படும் அவதிகளை-அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’.இடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types)பாத்திரங்களையும் கொண்டது.பல்வேறு முடிச்சுக்களும்,உணர்வுப் போராட்டங்களும் இணைந்தஒரு கலவையாய் இருப்பது. ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்டமனஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது. இடையிடையேஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது.இந்தக்காரணங்களால் கொஞ்சம் அதிகமான முயற்சி,உழைப்பு,நேரம் ஆகியவை இந்நூலின்மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்கத் தேவையாகி விட்டன.
குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தில் எட்டு மாதங்களும் அசடன்
மொழிபெயர்ப்பில் ஒன்றரை ஆண்டுகளுமாய்த் தொடர்ந்த இந்த இருபயணங்களையும்
மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின்எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது என்னுள் விளைந்த பரவசச் சிலிர்ப்புசொல்லுக்குள்
அடங்காத மகத்துவமும் உன்னதமும் வாய்ந்தது;
5. பெண்களின் பிரச்னைகளை நேர்மையாக மையப்படுத்தி தமிழில் இலக்கியங்கள் உருவாகின்றனவா?
உங்களுக்கு ஏன் இப்படி ஓர் ஐயம்? தமிழ் நாவலின் முன்னோடிகளில் ஒருவரான மாதவையாவில் தொடங்கி பாரதி,வ.ரா,புதுமைப்பித்தன், கல்கி ,ஜெயகாந்தன்- மேலும் இன்றைய நவீன எழுத்தாளர்களில் பலரும் பால் பேதமின்றிப் பெண்களின் பிரச்னைகளை நேர்மையாக மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்;எழுதியும் வருகிறார்கள். ஆர்.சூடாமணி,ராஜம்கிருஷ்ணன்,வாஸந்தி,அம்பை,காவேரி லட்சுமி கண்ணன்,திலகவதி ,பாமா,சிவகாமி ஆகிய புனைகதைப்படைப்பாளிகள் சித்தரித்த பெண்களின் பிரச்சினைகளை
இன்றைய கால மாற்றத்துக்கு ஏற்றபடி இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் தங்கள் படைப்புக்களில் பதிவு செய்துகொண்டுதான் வருகிறார்கள். இன்றைய மொழிநடைக்கும்,சமூகச்சிக்கல்களுக்கும் ஏற்றபடி சில
கோணங்கள்,போக்குகள் வேறுபடுகின்றன.அவ்வளவுதான்.
6. பெண்ணிய ஆய்வுகளிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. பெண்ணியம் என்பது இன்றைய சில பெண் படைப்பாளிகள் முன்வைக்கும் பாலியல் சுதந்திரத்தின் அடிப்படையில் ஆனதா? இன்றைக்கு எழுதுகிற பெண்ணியப் படைப்பாளிகளின் போக்கும் வேகமும் உங்களுக்கு உடன்பாடா? அல்லது என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
நான் எழுதி வெளிவந்திருக்கும் பல சிறுகதைகளும் பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியவைதான். பெண் சார்ந்த பல களப்போராட்டங்களிலும் நான் நேரடியாகப்பங்கேற்றதுண்டு. என் முனைவர் பட்ட ஆய்வும் நூறாண்டுக்காலத் தமிழ் நாவல்கள் காட்டியிருக்கும் பெண்களின் நிலை குறித்ததே. இத் துறை சார்ந்து பல ஆய்வுக்கட்டுரைகளும் மூன்று நூல்களும் கூட எழுதியிருக்கிறேன்.
அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு,பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு என்னும் இரண்டு காரணங்களைஅடிப்படையாக வைத்தே பெரும்பாலும் மனித இனத்தின் தகுதிப்பாடு தீர்மானிக்கப்படுகிறது.இவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும்,நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.
கல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது.அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.
பெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது
- அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ,தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர்
‘’பொருளாதார வசதியுள்ளபெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு’’
என்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார். ‘வேலைக்குப்போகும் பெண் விலைமகளுக்கு நிகரானவள்’என்று இன்னொரு ஆன்மீகவாதி திருவாய் மலர்ந்தளியிருந்தார் . இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும்,அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம். இயற்கையான உடற்கூற்று வேறுபாட்டையும்,
பாலின வேறுபாட்டையும்
புரிந்து கொள்ளத் தவறியதனாலேயே உடல் சார்ந்த ஒடுக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும்
பெண் ஆளாக நேர்ந்திருக்கிறது. இந்தப்போக்குகளை மாற்றும் வகையிலான பெண்ணெழுத்துக்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விழைவு.
இன்றைக்கு எழுதுகிற பெண்ணியப் படைப்பாளிகளின் போக்கும் வேகமும்
பெண்ணை,
உடல் சார்ந்தே பார்க்கும் பார்வை,
உடலாக மட்டுமே பார்க்கும் பார்வை,
உடலை வைத்தே அவளை மதிப்பீடு செய்யும் பார்வை
இவையெல்லாம் அறிவுத் தெளிவும் சிந்தனை உரமும் பெற்றுவிட்ட ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு அலுப்பூட்டுவதாக - மனக் கொதிப்பை ஏற்படுத்துவதாக
- அவளால் பொறுத்துக் கொள்ள இயலாததாகப் போனதன் விளைவாகவே பின் நவீனக் காலத்தின் எதிர் வினையாகப் பெண்மொழி பீறிட்டெழுந்திருக்கிறது.
அது, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல்.
தானனுபவித்துள்ள துன்பங்களைச் சொல்லத் தன் மொழியைத் தானே தேர்ந்தெடுக்கும் தலித் படைப்புக்களைப் போலப் பெண்ணும் தன் தளைகளை, வேதனைகளை, அவலங்களை, ஆற்றாமைகளைச் சொல்ல ஒரு தனிப்பட்ட மொழியை உருவாக்க வேண்டும் என்பதே பெண்மொழி குறித்த நேர்மையான புரிதலாக இருக்க முடியும். எனினும் பெண் அல்லது ஆண் பாலுறுப்புக்கள் குறித்த சொற் பிரயோகங்களைத் தங்கள் படைப்புக்களில் கலகத்தின் குரலாக வெளிப்படுத்துவதாகச் சில பெண் படைப்பாளிகள் சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.வரதட்சிணை, பெண் மீதான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, தனித்த இருப்பு மறுக்கப்படுவதன் மீதான கழிவிரக்கம் ஆகிய கருப்பொருள்களைத் தாங்கி வந்த கவிதைகளையும், சிறுகதைகளையும்
பெண்ணின் அந்தரங்க டயரிக் குறிப்புக்களாகவும், சோகப் புலம்பல்களாகவும் புறந்தள்ளி வந்த அறிவுஜீவி ஆண்கள் கூட்டம் இப்படிப்பட்ட பெண் கவிதைகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பதன் பின்னணியிலுள்ள நுட்பமான அரசியலைப் பெண் எழுத்தாளர்கள் காலம் தாழ்த்தாமல் புரிந்து கொண்டாக வேண்டும்.படைப்பின் தேவைக்கும், சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் பாலியல் வெளிப்பாடுகள்
மிகுதியாகக் கையாளப் படுகையில், பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான ஆத்மார்த்தமான நோக்கம் நீர்த்துப் போய்விடுவதுடன் கவிதையில் இடம் பெறும் பிறசெய்திகள் மட்டுமே மலிவான ரசனையுடன் எதிர்கொள்ளப்படுகின்றன.
பெண் மொழி என்பது காலத்தின் தேவை; ஆனால் பெண் குறித்த மரபு வழி சமூகக் கருத்து ஆக்கங்களுக்கு எதிராக அது கட்டமைக்கப்பட வேண்டும்; மனித சமத்துவம் மலினப்படாத - பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயல்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நகர்வுகளுக்கு அது பயன்பட்டாக வேண்டும்.
அதிர்ச்சி மதிப்பிற்காகவும்,
பிரமிப்பை ஏற்படுத்துவதற்காகவும் இன்று பெரும்பாலான பெண்கவிஞர்கள் கையாளும் பாலியல் படிமங்கள் இலக்கிய வளர்ச்சி, பெண்ணிய முன்னேற்றம் இரண்டுக்குமே ஊறு விளைக்கும் நச்சுத் தன்மை கொண்டவையாகவே எனக்குப்படுகின்றன. குடும்ப வன்முறையும் பாலியல் வன்முறையும் இரண்டாம் பாலினமாகப்பெண்ணைக்கருதும் போக்கும் இன்னும் நிலவும் இந்தச்சமூகத்தை
மாற்றக்கூடிய ஆக்க பூர்வமான பெண்ணிய நிலைப்பாட்டுக்குத்
துணை வரக்கூடியவையாக
இந்த எழுத்துக்கள் எனக்குத் தோன்றவில்லை.
7. உங்களின் அப்பா, அம்மா, உங்களின் படிப்பு அனுபவங்கள், எழுதத் தொடங்கிய தருணம், குடும்பம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்? (விரிவாக பகிர்ந்து கொண்டால் நல்லது)
நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற ஊர் தமிழும்,சைவமும் தழைத்திருக்கும் செட்டி நாட்டிலுள்ள காரைக்குடி. தந்தை காவல்துறை உயர் அதிகாரி. அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியை.
வீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்தும் இறைந்தும் கிடக்கும் சூழலில் படிப்பதில் ஆர்வமும்,. புத்தகங்களுடனான உறவும் இளமையிலேயே வாய்த்தது. மிகச்சிறிய வயதிலேயே ஒரு தாளும்
பென்சிலுமாய்த் தனியொரு மூலையைத் தேடிப்போய்க்கதை எழுதப்போவதாய்ச் சொல்லி எதையாவது
கிறுக்கிக்கொண்டிருப்பேன்.. என் பொழுதுகள் புத்தகங்களோடும்,இலங்கை
வானொலியோடும் மட்டுமே கழிந்த பொன்னாட்கள் அவை. என்றாவது ஒரு நாள் எழுத்தாளராய் மலர
வேண்டுமென்ற தாகம் மிக இளம் வயதிலிருந்தே என்னை ஆட்டிப்படைத்து அலைக்கழித்த
ஒன்றுதான்...இன்னும் கூட எழுதிப்பார்க்கும் முயற்சிகளாக மட்டுமே என் படைப்புக்களை
நான் கருதி வருகிறேன்....
காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழா, தமிழில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை மேலும் கூட்ட - முதலில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்த நான், பின்பு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் அறிஞர் வ.சு.ப. மாணிக்கத்தின் மாணவியாகித் தமிழ் முதுகலை பயிலத் தொடங்கினேன்.
எம்.ஏ., தமிழ் முடித்தவுடன் 1970இல் மதுரை பாத்திமா கல்லூரியில் வேலை கிடைத்தது.எனது முனைவர் பட்டப் படிப்பு எல்லாம் வேலை பார்த்துக் கொண்டே படித்ததுதான்.
பேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் மைய அரசுப்பணியில் இருக்கும் என் ஒரே மகளுடன் நான் வசித்து வருகிறேன்.அவளுக்கு இரு குழந்தைகள்; மருமகன் வனத் துறையிலிருப்பவர்.
மதுரைதான் என் நிலையான இருப்பிடம் என்றாலும் அவர்களுக்குப் பணி மாற்றல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் உடன் சென்று அவர்களோடு தங்கியிருக்கிறேன்.அவ்வாறு ஏழு ஆண்டுக்காலம் புதுதில்லியில் வசித்தபோதுதான் இரு பெரும் மொழியாக்கங்களையும் என்னால் மேற்கொண்டு நிறைவு செய்ய முடிந்தது. வேலைக்கும்,பள்ளிக்கும் எல்லோரும் சென்றபின் கிடைத்த தனிமையான சூழல் மன ஒருமைப்பாட்டுடன் இப்பணியில் ஈடுபட உகந்ததாக அமைந்தது. வாசிக்கப்பழகிய நாள் முதல் நான் எழுதும் ஒவ்வொரு படைப்பையும் முனைப்போடு படித்துத் திருத்தமும் சொல்லுபவள் என் மகள். குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தையும் அவ்வாறே செய்தாள். எனக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இலக்கியப்பணிகளில் - எழுத்துத் துறையில் நான் இயங்குவதை என் குடும்பச்சூழல் எப்போதும் வரவேற்றும் கொண்டாடியுமே வருகிறது.
10. நீங்கள் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்டும் கூட. அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்? நாடகத்துக்கும் சிறுகதைக்குமான இடைவெளி எது? இரண்டிலும் உங்களின் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்?
நாடகம்
பாத்திமாக்கல்லூரியில் பணி புரிந்து கொண்டிருந்தபோது- 1978ஆம்
ஆண்டு, கேரளத்திலுள்ள திருச்சூர் நாடகப்பள்ளி ஏற்பாடு செய்திருந்த நாடகப்பயிற்சி
முகாமில் மிகச்சிறந்த நாடக ஆசிரியரும் இயக்குநருமான திரு ஜி.சங்கரப்பிள்ளையிடமும்
திரு ராமானுஜம் அவர்களிடமும் நிகழ்த்துகலை நுணுக்கங்களை 28 நாட்கள் பாடம் கேட்கும்
அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முகாம் நாடகம் பற்றிய வேறொரு பரிமாணத்தை
என் முன் விரித்துக்காட்டியது. நாடகத்தாளை வகுப்பறையில் கற்பிக்க மட்டுமன்றி கல்லூரி நாடகங்களை இயக்குவதிலும் வேறுபாடான ஒரு புதிய நோக்கு ஏற்பட அது வழியமைத்துத் தந்தது. மதுரையில் அதே காலகட்டத்தில் அரும்பு விடத் தொடங்கியிருந்த திரு மு.இராமசுவாமியின் நிஜநாடக இயக்கமும், அவரது மனைவியும் என்னோடு அதே துறையில் பணியாற்றியவருமான பேரா.செண்பகம் ராமசுவாமியின் நட்பும் அந்த ஆர்வத்தைத் தக்கவைக்கத் துணை புரிந்தன. மு.இராமசுவாமியின் இயக்கத்தில் உருவான – மகாபாரதத்தைத்தழுவிய ‘இருள்யுகம்’ [அந்தாயுக்] என்னும் நாடகம் மதுரை இறையியல் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டபோது [1994] நானும் காந்தாரியாக அதில் வேடம் தரித்தேன்; அதே நாடகம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டபோது அதிலும் நான் பங்கேற்றேன். கல்லூரிப்பணிக்காலத்தில் தி.ஜானகிராமன், சி.சு செல்லப்பா, பி.எஸ் ராமையா, சோ, சுஜாதா ஆகியோரின் நாடகங்களை மாணவியரைக்கொண்டு நடிக்க வைத்து இயக்கியிருக்கிறேன்; ஒரு சில நாடகங்களை நானே எழுதி இயக்கியதும் உண்டு.குறிப்பிடத்தக்க நாவல்களையும் சிறுகதைகளையும் நாடகமாக்கியதும் உண்டு
சிறுகதை
சிறுகதை எழுதும் ஆர்வம் என் பதின்பருவத்தில் தொடங்கியது.
அவ்வப்போது இதழ்களுக்கு என் படைப்புக்களை அனுப்புவதும் அவை
திரும்பி வருவதுமாய் இருந்தாலும் மனம் தளராமல் என் முயற்சியைத் தொடர்ந்து
கொண்டிருந்தேன்.
1979 ஆம் ஆண்டுக்கான அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில்
அறிமுக எழுத்தாளரான ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் என் முதல் சிறுகதைக்கு முதல்
பரிசு வழங்கி என்னையும் ஓர் சிறுகதை எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்துக்கு
உரித்தாக்கியது கல்கி இதழ். அந்தக்கதைக்குக் கிடைத்த வரவேற்பும் நூற்றுக்கும் மேலான வாசகர்
கடிதங்களும் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதத் தூண்டுகோலாய் அமைந்தன.
70க்கும் மேற்பட்ட என் படைப்புக்கள் வெவ்வேறு கால இடைவெளியில் கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,அமுத சுரபி,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன;
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் முதல் சிறுகதை கன்னடத்திலும், ‘இம்மை மாறி..’என்னும் ஆக்கம் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் என் சிறுகதைகள் பலவும் தேர்வு செய்யப்பட்டு அவரது தொகுப்புக்களிலும் இடம் பெற்றுள்ளன.
"கண் திறந்திட வேண்டும்"என்னும் சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்'தொலைக்காட்சித்தொடர் வழி,’நான் படிக்கணும்’என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் முதல் சிறுகதை கன்னடத்திலும், ‘இம்மை மாறி..’என்னும் ஆக்கம் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் என் சிறுகதைகள் பலவும் தேர்வு செய்யப்பட்டு அவரது தொகுப்புக்களிலும் இடம் பெற்றுள்ளன.
"கண் திறந்திட வேண்டும்"என்னும் சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்'தொலைக்காட்சித்தொடர் வழி,’நான் படிக்கணும்’என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.
சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான ‘அமரர் சுஜாதா விருது, எனக்கு
ஏப்.6-2013இல் தில்லி தமிழ்ச்சங்கத்தால் அளிக்கப்பட்டது.
'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு,
'புதிய பிரவேசங்கள்'(1994),தழல் வெளியீடு
'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தக நிலையம் , தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி என்னும் 4 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.
'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தக நிலையம் , தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி என்னும் 4 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.
இறுதியாக வந்திருக்கும் ‘தேவந்தி’
தொகுப்பு தில்லி தமிழ்ச்சங்கத்தில் ‘வடக்கு வாசல்’ இதழ் நடத்திய வெளியீட்டு
விழாவில் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது.
நாடகமும் சிறுகதையும்..
என் இளமைக்கால நாடக ஆர்வமும் என் சிறுகதை ஆக்கங்களுக்கு அடித்தளமிட்டிருக்கலாம். சிறுகதை,நாவல் என
எந்தப் புனைவாயினும் அவற்றில் சம்பவங்களை அடுக்குவதும் காட்சிப்பகுப்புக்களை
அமைத்துக்கொள்வதும் தேவைதான். அந்த உணர்வை வளர்த்துக்கொள்ள
,மிகுதிப்படுத்திக்கொள்ள நாடகத் தோய்வும்,நல்ல தரமான திரைப்படங்கள் காண்பதும்
படைப்பாளிக்குப் பெரிதும் உதவுகின்றன. உதவுகிறது. மனக்கண்ணில்
சிறுகதையைக்காட்சிப்படுத்திக் கற்பனை செய்யும்போது அது நமக்குள்ளே நாடகமாகத்தானே
விரிகிறது ? நாடகம் திரைப்படம் ஆகியவை உரையாடல் வழியாகவும் காட்சிப்படுத்தல்
மூலமும் பார்வையாளனைச்சென்றடைகின்றன. சிறுகதை
போன்ற புனைவுகளில் உரையாடலோடு கூடவே கதாசிரியனின் வருணனை மற்றும்
படிமக்காட்சிகளும் விரிகின்றன; வாசிப்பின் வழி வாசகன் அதைக்கண்டடைகிறான்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக