எழுத்தாளர் ‘காவேரி’ லட்சுமி கண்ணன் அவர்களின்
‘முத்துக்கள் பத்து’ [தேர்ந்தெடுத்த சிறுகதைகள்]
சிறுகதைத் தொகுப்பு அம்ருதா பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்திருக்கிறது.
காவேரியின் ’’முத்துக்கள் பத்து’’க்கு நான் வழங்கியிருக்கும் முன்னுரை
‘முத்துக்கள் பத்து’ [தேர்ந்தெடுத்த சிறுகதைகள்]
சிறுகதைத் தொகுப்பு அம்ருதா பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்திருக்கிறது.
காவேரியின் ’’முத்துக்கள் பத்து’’க்கு நான் வழங்கியிருக்கும் முன்னுரை
காவேரியின் புனைவுலகம்
கண நேர மின்னலாய்த் தன்னுள் பளிச்சிடும் உன்னத தரிசனங்கள், சமூகம் மற்றும் தனி மனித இருப்புக் குறித்து எழும் கேள்விகள், தேடல்கள், மானுடத்தின் இலக்காகத் தான் வரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான விழுமியங்கள், இவற்றைத் தான் உணர்ந்த அதே அலைவரிசையில் வாசக மனங்களுக்கும் கடத்தும் படைப்பாளிகளின் எழுத்துக்களே காலம் கடந்து நிற்கும் தகுதியைப்பெறக்கூடியவை. ’ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் வழியாகவும் தமது சிறுகதைகள் மூலமும் அத்தகைய காலம் கடந்த நிலைப்பாட்டைத் தனது படைப்புக்களுக்குப்பெற்றுத் தந்திருப்பவர் ‘காவேரி’ என்ற புனைபெயரில் தமிழ்ப்புனைவுகள் பலவற்றை உருவாக்கியிருக்கும் திருமதி ‘காவேரி’லட்சுமி கண்ணன்.
கண நேர மின்னலாய்த் தன்னுள் பளிச்சிடும் உன்னத தரிசனங்கள், சமூகம் மற்றும் தனி மனித இருப்புக் குறித்து எழும் கேள்விகள், தேடல்கள், மானுடத்தின் இலக்காகத் தான் வரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான விழுமியங்கள், இவற்றைத் தான் உணர்ந்த அதே அலைவரிசையில் வாசக மனங்களுக்கும் கடத்தும் படைப்பாளிகளின் எழுத்துக்களே காலம் கடந்து நிற்கும் தகுதியைப்பெறக்கூடியவை. ’ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் வழியாகவும் தமது சிறுகதைகள் மூலமும் அத்தகைய காலம் கடந்த நிலைப்பாட்டைத் தனது படைப்புக்களுக்குப்பெற்றுத் தந்திருப்பவர் ‘காவேரி’ என்ற புனைபெயரில் தமிழ்ப்புனைவுகள் பலவற்றை உருவாக்கியிருக்கும் திருமதி ‘காவேரி’லட்சுமி கண்ணன்.
கன்னடத்துக் காவிரியின் மடியில் பிறந்து, அதே காவிரியால் வளம் கொழிக்கும் சோழமண்ணைப் புகுந்த வீடாகக்கொண்ட ’காவேரி’யின் பெயர்ப்பொருத்தத்துக்கு அது மட்டும் காரணமில்லை; ஆற்றொழுக்கைப்போன்ற சீரான நடை, நதிஅலைத் துள்ளல்களாய் ஆங்காங்கே தலை காட்டும் சொற்கோலங்கள், சில்லென்று தெறிக்கும் நீர்த்திவலைகளாய் எதிர்பாராத தருணங்களில் நம்மை நனைத்து விட்டுப்போகும் கவித்துவமான படிமங்கள்....இவற்றையும் கணக்கில் கொள்ளும்போதுதான் அவரது புனைபெயரின் பரிமாணம் மற்றொரு கோணத்திலும் நம்முள் தெளிவாகும்.
கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றதோடு, தொடர்ந்து அதிலேயே முனைவர் பட்டம் பெற்று,அதைக்கற்பித்தும் இருக்கும் ‘காவேரி’யின் படைப்பிலக்கிய வாழ்வும் ஆங்கிலக்கவிதை உருவாக்கத்தோடுதான் முதலில் தொடங்கியது. ஆங்கில இலக்கியப்பயிற்சியோடும், ஆங்கிலக்கல்வியின் பின்புலத்தோடும் தமிழ்ப்படைப்பிலக்கியத்தில் முனைந்து வெற்றி பெற்றிருக்கும் பல எழுத்தாளர்களிடம் தென்படும் ஆழமும்,அழுத்தமும்,பரிசோதனை முயற்சிகளும் இவரது தமிழ்ப்படைப்புக்களிலும் கைகூடியிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்றே மதிப்பிடலாம். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வந்த ’காவேரி’ ,அதற்கு இணையாகத் தமிழ் எழுதுகோலையும் ஏந்துவதற்கு இவரது கணவர் மிகப் பெரிய தூண்டுகோலாக அமைந்திருக்கிறார். ‘’தமிழில் எழுதும்படி என்னை ஊக்குவித்த என் கணவர் அருண் கண்ணனை நினைவு கூர்கிறேன்; அவருக்காகவே இந்த என் தமிழ்ப்பற்று’’என்று தன் சிறுகதைத்தொகுப்பொன்றின் முன்னுரையில் கூறும் காவேரி, தனக்கும் அது உகப்பானது என்றே கருதுகிறார். சொந்தத் தாய்மொழியில் படைப்புக்களை உருவாக்குவதென்பது , உள்ளார்ந்த ஒரு வகை நெகிழ்ச்சியைத் தன்னுள் கிளர்த்துவதாகவும், அந்தக் கசிவான மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே தான் தமிழில் படைப்புருவாக்கம் செய்ததாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாகப் புதுதில்லியில் வசித்து வரும் ’காவேரி’யைப் போன்ற ஒரு படைப்பாளியின் எழுத்துக்களில் அங்கு நிலவும் பன்னாட்டுப் பல மாநிலக்கலாச்சாரப் பாதிப்புக்கள் இருப்பது இயல்பானதே; அவை ஒரு புறமிருக்க , தில்லியில் வசித்த தி.ஜானகிராமன்,சிட்டி,இந்திரா பார்த்தசாரதி, கி.கஸ்தூரிரங்கன் போன்ற தமிழிலக்கிய ஜாம்பவான்களுடன் இவர் கொண்டிருந்த இலக்கியத் தொடர்பும், நட்பும் தனது தமிழ்ப்படைப்பிலக்கியத் திறனை கூடுதலாகக் கூர்தீட்டிக்கொள்ள இவருக்கு உதவியிருக்கின்றன. நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய நுட்பங்களையும் சூட்சுமங்களையும் அறிந்திருந்ததாலேயே தி.ஜாவின் ’மரப்பசு’, இ .பாவின் ‘திரைகளுக்கு அப்பால்’முதலிய ஆழமான நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது. இவரது சிறுகதைகள், கி.கஸ்தூரிரங்கன் , அசோகமித்திரன், தி.ஜானகிராமன் ஆகியோர் கௌரவ ஆசிரியர்களாகப் பணி புரிந்தபோது வெளியான ‘கணையாழி’ இதழ்களிலும்.கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’விலும்,அமுதசுரபி,கலைமகள் மற்றும் கோவை ஞானியின் ‘நிகழ்’இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. தனது சிறுகதைக்காக [சவ்யாயாசி சதுக்கம்] ‘இலக்கியச் சிந்தனை’விருதும் பெற்றவர் காவேரி.
காவேரியின் புனைவுலகம் தனித்தன்மை கொண்டதாக இருப்பதற்கான காரணம், வெவ்வேறான ’வகைமாதிரி’[types]களைக் கொண்டதாக அது இருப்பதே.
தான் ஒரு பெண் என்பதால் பெண்களின் சிக்கல்களை மையப்படுத்துவதோடு இவர் நின்று விடுவதில்லை. முதியோரின் தனிமை, மரணம் என்னும் நிகழ்வு மனிதனுக்குள் எழுப்பும் விடை தெரியாத வினாக்கள், வீட்டுப்பணியாளர்களாக,கடைநிலை ஊழியர்களாக,மீன்பிடிப்பவர்களாக வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சினைகள் ஆகிய பலவற்றையும் அவற்றின் அடியாழம் வரை துருவிப்பார்த்தபடி இவரது படைப்புக்கள் பதிவு செய்திருக்கின்றன.வெளிநாடுகள் பலவற்றில் நிகழ்ந்த சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்குகள், உறைவிடத் திட்டங்கள் , பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் எனப்பலவற்றில் பங்குபெற்ற செழுமையான அனுபவம் கொண்டிருக்கும் இவர் மிகவும் வேறுபாடான அந்தச்சூழலில் பெற்ற பல அனுபவங்களையும் கூடச் சிறுகதைகளாக்கியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘இருண்டதெல்லாம் பேய்’ என்னும் சிறுகதைக்கு ஐயோவா நாட்குறிப்பு என்ற பெயரும் இடம் பெற்றிருப்பது அதனாலேதான்.
திறந்த மனம் கொண்ட ஒரு படைப்பாளிக்கு அரிதான அனுபவங்கள் மட்டும்தான் வாய்க்க வேண்டுமென்பதில்லை. நடப்பியல் வாழ்வில் அவை எப்போதும் சாத்தியப்படுவதும் இல்லை. ‘கதை மனம் மட்டும் வாய்த்து விட்டால் காணும் எல்லாக்காட்சிகளுக்குள்ளும் ஒரு கதையைக் கண்டறிந்து விட முடியும், பிறகு பார்வையில் படும் எல்லாமே நெஞ்சில் கதைப்பூக்களாய்ப் பூத்துச் சொரியத் தொடங்கி விடும்’ என்பார் ஜெயகாந்தன். அதே போலக் காவேரியின் எழுத்தும் கூட நம் அன்றாட வாழ்வில் - தெருவில்,கோயிலில், பயணத்தில் என்று...மிகச்சாதாரணமாகச் சிறு சிறு திவலைகளாகத் தட்டுப்படும் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கூட ஓவியம் போன்ற அற்புதமான பதிவுகளாக்கியிருக்கிறது. குரல் எழ வழியில்லாமல் கோயிலில் தவிக்கும் சிறுவன் [ஓசைகள்],நடைபாதைக்கடையில் கொய்யாப்பழம் விற்பவன்[சிவப்புக்கொய்யா] என்று தான் பார்க்கும் எல்லாவற்றிலுமே ஒரு கதையைக் கண்டடைந்திருக்கிறார் ‘காவேரி’.
பெண் எழுத்தாளர்கள் பலரைப் போலக் ‘காவேரி’யும் ஒரு பெண்ணியவாதியே; ஆனால் அப்படிப்பட்ட ஒரு பிரகடனத்தை எங்கும் காட்டிக்கொள்ளாத - பாலின சமத்துவத்தை மட்டுமே நாடும் ஒரு நடுநிலைப் பெண்ணியவாதியாகவே தன் படைப்புக்களில் அவர் வெளிப்பட்டிருக்கிறார். ‘முனியக்கா’ போன்ற அடித்தட்டுப்பெண்கள், குடும்ப வாழ்வில் சமத்துவம் கோரும் பத்மினி போன்ற நடுத்தர வர்க்கத்துப்பெண்கள் [இந்தியா கேட்], அயல்மண்ணுக்குச்சென்று இலக்கியம் படைக்கும் லட்சுமியைப் போன்ற அறிவுஜீவிப்பெண்கள்[‘இருண்டதெல்லாம் பேய்’] ,பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை நாடும் ஆன்மீகத் தேடல் கொண்ட காயத்ரிகள் [ஆத்துக்குப்போகணும்] என்று பல தளங்களிலும், வர்க்கங்களிலும்,அறிவுநிலைகளிலுமான பெண்கள் இவரது படைப்புக்களில் உலவுகிறார்கள்; ஆனால் எந்த மட்டத்தில் இருக்கும் பெண்ணுக்கும் முழுமையான விடுதலை என்பது இன்னும் கூட நிறைவு பெறாத ஒரு வெறுங்கனவாகத்தான் இருக்கிறது என்ற தன் முடிவையே, இந்தப் பாத்திரங்கள் வழி வாசகப்பார்வைக்கும்,சிந்தனைக்கும் அடங்கிய குரலில் முன் வைக்கிறார் ;காவேரி’.
நோபல்பரிசு பெற்ற இருப்பியல்வாதியான சால்பெல்லோவின் படைப்புக்களை ஆய்வு செய்தமைக்காக ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற காவேரி’யிடம் இருப்பியல்வாதத்தின்.சாயல்களையும் காண முடியும்;குறிப்பாக அவரது ’ஆத்துக்குப்போகணும்’ நாவல் பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை எழுப்பியிருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. முதியவர்களைப்பாத்திரங்களாகக்கொண்டிருக்கும் அவரது வேறு சில சிறுகதைகளிலும்[சவ்யாயாசி சதுக்கம்] ‘எக்ஸிஸ்டென்ஷியலிச’த்தின் பாதிப்பைக்காண முடியும். ’நம் சமூக வரலாற்றையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் ஒரு புதிய தெளிவான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான வரலாற்றுத் தேவை’என மார்க்சியம் பற்றிக்கருதும் ‘காவேரி’யின் ஆக்கங்கள் சிலவற்றில்[திருவாலீசுவர நடராசர் முறுவலித்தார்,முகம்]அதன் தாக்கத்தையும் காண முடியும். இவ்வாறு பெண்ணியம்,மார்க்சியம், இருப்பியல்வாதம் எனப் பலவகைப்பட்ட ’இச’ங்களை அவற்றின் ஆக்கபூர்வமான கூறுகளோடு வரவேற்று , அவற்றின் கலை வெளிப்பாடாகத் தன் சிறுகதைகள் சிலவற்றையும் உருவாக்கியிருந்தாலும் குறிப்பிட்ட எந்தக்கோட்பாட்டுச் சிமிழுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்திக்கொள்ளாமல் படைப்பியக்கத்தில் அதன் பூரண சுதந்திரத்தோடு இயங்குபவராகவே இருக்கிறார் ‘காவேரி’. எந்த உள்ளடக்கத்தை முன் வைத்தாலும் ’குரலை உயர்த்தாமல்,தணிந்த சொல் லாவகத்துடன்,கலைநயம் மிளிர’எழுதுபவர் என்று இவரது தொகுப்பு நூல் ஒன்றின் முன்னுரையில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டிருப்பதற்கு இவர் முற்றிலும் பொருத்தமானவர் என்பதை இவரது புனைவுலகில் பயணிக்கும்போது அறிந்து கொள்ள முடியும்.
அடிப்படையில் ஒரு கவிஞரான ‘காவேரி’யின் சிறுகதைச் சொல்லாட்சிகளிலும்,வருணனைகளிலும் கூட இவரது கவித்துவம் தன்னையறியாது பீறிட்டு வெளிப்படுகிறது; அங்கதச்சுவையோடு கதை கூறும் பாணியும் இவருக்குக் கை வந்திருக்கிறது.. சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மன் சிலை ஒன்று தன்னைத்தானே பிரதிஷ்டை செய்து கொண்டு விடுவதாக இவர் படைத்திருக்கும் ’தேவி வந்தாள்’ என்னும் சிறுகதை இவரது சமூக எள்ளலுக்கு சாட்சி பகரும் படைப்பு.
ஆங்கிலம்,தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே வேளையில் எழுதியபடி தன் தமிழ்க்கதைகளைத் தானே ஆங்கிலத்தில் பெயர்த்து வெளியிட்டிருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் காவேரி. இவர் எழுதும் ஆங்கிலக் கவிதைகளும், பாலின வேறுபாடு, பின் காலனீயம், மொழியாக்க நுட்பங்கள் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்ட இவரது பல ஆய்வுக் கட்டுரைகளும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் இப்போதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
‘’சில சமயம் என் கண் முன் ஏதோ ஒரு ஒளி பளிச்சிடுகிறது...கணநேரம் பளிச்சிட்டு மறையும் அந்த ஒளியை நான் எழுத்தில் சிறைப்பிடிக்க முயல்கிறேன்....மின்னி மறையக்கூடிய அந்த ’ஒன்றை’ மறையாமல் அழியாமல் பதிவு செய்யும் முயற்சியாகவே நான் எழுதுகிறேன்’’ என்று திருமதி ‘காவேரி’லட்சுமி கண்ணன் குறிப்பிடுவது ’உன்னதமான கணங்களை நித்தியத்துவப்படுத்த’த் துடித்த லா ச ராவின் தேடலையே நினைவூட்டுகிறது.தன் உள்ளொளியின் வழிகாட்டுதலில் கவிதை,சிறுகதை,நெடுங்கதை,நாவல்,மொழியாக்கம் என்று தன் நெடிதான இலக்கியப்பயணத்தைத் தொடர்ந்து வரும் ‘காவேரி’யின் முத்தான பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்து அமிர்தா பதிப்பகம் வெளியிடுவது அந்தப்படைப்பாளியின் நீண்ட நாள் இலக்கியப்பணிக்குத் தரப்பட்டிருக்கும் மிகவும் பொருத்தமான ஓர் அங்கீகாரம். அத்தகையதொரு வெளியீட்டை முன்னெடுத்திருக்கும் அமிர்தா பதிப்பகத்துக்கும், என் அன்புக்குரிய இலக்கியத் தோழியும் சகோதரியுமான ‘காவேரி’யின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்புக்கு முன்னுரை வழங்குமாறு அன்போடு என்னைப்பணித்திருக்கும் என் மதிப்புக்குரிய எழுத்தாளரான திருமதி திலகவதி அவர்களுக்கும் என் நெகிழ்வான நன்றிகள்.எம்.ஏ.சுசீலா
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக