துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.12.15

பேராழிக்கன்று

நான் தமிழ்ப்பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தை முதன்மைப்பாடமாகக்கொண்ட மாணவிகளைப்போலவே-சிலவேளைகளில் அதற்கும் கூடுதலான ஆர்வத்துடன் பொதுத்தமிழ் வகுப்புக்களை நேசித்த ஆங்கிலம்,வேதியியல்,இயற்பியல்,மனையியல்,சமூகவியல் ஆகிய பிற துறை மாணவிகள் -பலரைக்கண்டிருக்கிறேன்.அவர்களில்  உள்ளார்ந்த தாகத்துடன் மரபுத் தமிழையும் நவீனத் தமிழையும் தேடித் தேடி வாசித்தவர்களும் பலர் உண்டு;பின்னாளில் தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிட்ட முத்திரைகளையும் சிலர் பதித்திருக்கிறார்கள்.
‘70களில் ஆங்கில இலக்கிய இளங்கலை மாணவியாக எனக்கு அறிமுகமான  ரங்கநாயகி,ஆங்கிலப்பேராசிரியராக மட்டுமன்றித் தன் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டபடி,  தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவராகவும் உருவானவர். ’சிநேகவனம்’என்னும் தனது அவரது முதல் கவிதைத் தொகுப்பை அடுத்து,
பேராழிக்கன்று’ என்னும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இப்போது காவ்யா வெளியீடாக வந்திருக்கிறது.கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தமிழ்ப்பேராசிரியராகப் பழக்கமான என்னைத் தன் நினைவில் இருத்தித்  தன் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு  பணித்த ரெங்கநாயகியின் அன்புக்கு நன்றி.

இன்னும் பல சிறந்த கவிதை நூல்கள் அவரிடமிருந்து வெளிப்பட வேண்டும் என்று என் மாணவி ரங்காவை அன்போடு வாழ்த்துகிறேன்.
பேராழிக்கன்று கவிதை நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை கீழே;



‘மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனியாய்’’….
[அணிந்துரை]
எம் ஏ சுசீலா

மானுட வாழ்வின் புறப்போராட்டங்கள், சமுதாயச்சிக்கல்கள் ஆகியவற்றைப் 

பதிவு செய்யும் புற உலகு சார்ந்த கவிதைகளின் உருவ உள்ளடக்கங்களும் 

அவற்றின் பயன்பாடும்  ஒரு வகைப்பாட்டைச் சேர்ந்தவை என்றால், தனிமனித 

உணர்வுக்கொந்தளிப்புகளை,,,, அக உளைச்சல்களை….., தன்னுள் தானே 

அமிழ்ந்தபடி நிகழும் மனிதத்தேடல்களைப் பொருளாகக் கொண்டமையும் 

தன்னுணர்வுக்கவிதைகள் முற்றிலும் வேறொரு தளத்திலானவை. 

முதல்வகைக்கவிதைகளின் இலக்குகள் வேறென்பதால் அவற்றைக் குறை கூற 

இயலாது என்றபோதும், கவிதை என்றொரு மகா அனுபவத்துக்குள் நம்மை 

ஆழ்த்தி, அனுபூதி நிலைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய தகுதி படைத்தவை 

அகமுகக் கவிதைகள் மட்டுமே. ’’அவரவர் தம தம அறி அறி வகை ‘’என்று 

நம்மாழ்வார் குறிப்பிடுவது போல அவரவரின் வாசிப்புக்கும் உணர்வு 

நிலைக்கும் ஏற்றபடி வெவ்வேறான அனுபவங்களையும் தரிசனங்களையும் 

வழங்குபவை இத்தகைய கவிதைகள். கவிதை வாசிப்பை இலகுவான ஒரு 

பொழுதுபோக்காகக் கொள்ளாமல் அதைத் தீவிரமான ஒரு பயிற்சியாக சாதகம் 

செய்வோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியவை இத் தரிசனங்கள். 

ஊன்றிப் படிப்பதற்கே உழைப்பைக்கோரும் இத்தகைய 

அகநோக்குக்கவிதைகளை உருவாக்குவதென்பது ஒரு வேள்வி ! ‘’வைகல் எண் 

தேர் செய்யும் தச்சன்’’’,  மாதம் முழுவதும் முயன்று உருவாக்கும் ஒரே ஒரு 

தேர்க்காலைப்போல மனமென்னும் தறியில் ஒவ்வொரு இழையாக நெய்வதில் 

தொல்லை இன்பத்து இறுதி காண்போர்க்கே கைவரும் கலை அது. 

அந்தக்கலையில் தேர்ந்திருக்கும் கவிஞர் ரங்கநாயகியின் முழுப்பரிமாணமும் 

வீரியத்தோடு கூடிய எழிலான சொல்வீச்சுக்களோடு அவரது ‘பேராழிக்கன்று’ 

என்ற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்திலும் சிறப்பாகப் 

பதிவாகியிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடும், வாசிப்பும், படைப்பிலக்கியப்பயிற்சியும் 

கொண்டிருப்பவர்களுக்கு ஆங்கில இலக்கியப்பின்னணியும் கூடச்சேரும்போது 

அவர்களின் படைப்புக்களில் கூடுதல் ஆழமும் செறிவும் கூடிவிடுவதைப் பல 

படைப்பாளிடமும் காணமுடியும். ரங்கநாயகிக்கும் அந்த வாய்ப்பு 

கிட்டியிருக்கிறது. ஆழ்வார்களின் பிரபந்தத் தமிழிலும் அவர் தோய்ந்து 

கலந்திருப்பதால் அவற்றில் கொழிக்கும் அழகையெல்லாமும் கூட நவீன 

வாசகர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன அவரது கவிதைகள். 

இந்தத் தொகுப்பின் தலைப்பான ’பேராழிக்கன்று’ என்ற மாறுபட்ட 

சொல்லாட்சியே அதை உறுதி செய்கிறது.

‘’இன்று தென்படும் நாளைகளின் 

நம்பிக்கைத் தொலைவுகள்

நாளைகளின் நாளைகளில் நீண்டபடி…’’

என மனித இருப்பின் சலிப்பான கணங்கள், அவற்றினூடே மாயம் காட்டும் 

உருவெளி பிரமைகள், வாழ்வின் முக்கிய கணங்களான பிறப்பும் இறப்பும் 

கிளர்த்தும் முடிவற்ற தேடல்கள் ஆகிய பலவற்றையும் இருப்பியல்வாத, 

சர்ரியலிச,நவீன-,பின் நவீனத்துவ பாணிகளில் கலைநயம் குன்றாமல் 

ரங்கநாயகியின் கவிதைகள் முன்வைத்துக்கொண்டே செல்கின்றன.

யாசித்துப்பெற விரும்பாத அன்பைப் 

‘’பொழிய மறுக்கும் மேகம் கண்டு நனைய மறுத்து முகம் திருப்பிக்கொள்ளும் 

நில’’மாகக் காட்டும் படிமம்,

சிலந்தி வலையைச் சிக்கலுக்குள் வலியச் சிக்கிக்கொள்ளும் மனித மனமாய்க் 

காட்டும் படிமம் என நவீன கவிதை வெளிக்கே உரித்தான வித்தியாசமான பல 

படிமங்கள் இவர் கவிதைகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

‘’மழைக்காலக் கதவிடுக்கில் சிக்கிய கைவிரலாய் நசுங்கிப்போகிறது மனம்’’, 

‘’பேராழி மூன்றும் திரும்பக்

பெற்றுக்கொண்டுவிடுவதான

அபாயத் தொங்கலாய்த் 

தென் இந்திய வரைபடம் போலத் தத்தளிக்கிறது’’

என இரசனைக்குரிய உவமைகளுக்கும் தொகுப்பில் குறைவில்லை.

சுனாமியின் பிணச்சூறாவளி பற்றிய பதிவுகள் குறும்,நெடும் கவிதைகளாகத் 

தொகுப்பில் மலிந்து கிடப்பது, இந்தக் குறிப்பிட்ட தொகுப்பின் மையத்தையே 

அந்த உள்ளடக்கம்தான் முடிவுசெய்திருக்கக்கூடுமோ என்று எண்ண 

வைக்கிறது. அந்த வரிசையில் ‘கன்னியாகுமரி கொண்டுபோய் விட்ட ஸதிக்கு’ 

ஒரு முக்கியமான கவிதை. ஊழிப்பெருவெள்ளத்தில் உலக ஓட்டமே ஓய்ந்து 

போகும் தருணத்தில் ஆலிலையில் மிதந்து வந்து அடுத்த யுகத்தை ஜனிக்க 

வைக்கும் திருமாலின் தொன்மத்தை நினைவூட்டுவது அதே வரிசையிலான 

’பேராழிக்கன்று’.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறிவதில்லை; அது போலத் தன் 

’’மீதேறி ஓடிப்பிடித்து

விளையாடும் அணிலிரண்டின்

உராய்தல்களில்

சலனமின்றி இருக்கிறது’’ 

ஜன்னல் வழி காட்சியாகும் தூங்குமூஞ்சி மரம். இது ஓர் அற்புதமான 

காட்சிப்படுத்தல்.

தன்னை விட்டு எப்போதைக்குமாய்ப் பிரிந்து போன ஒன்று இப்போது எந்த 

வடிவத்தில் எதுவாக இருக்கிறது..அல்லது அது எல்லா இடத்திலும் யாதுமாகி 

நிறைந்திருக்கிறதா என்று தவித்தபடி 

‘’எதுவாகிப்போனாய் நீ என்பதறிய

பதறுகிறது மனம்’’

என்று தேடும் ‘யாதுமாகி’. நாம் கற்பனை கூடச்செய்து பார்த்திராத 

’‘குளியலறை கரப்பான் விழிகளில்….சாம்பிராணி புகைக்கூண்டில், அரிவாள் 

மணைக்கூரிழை விளிம்பில்’’ என்று இவைகளிலெல்லாம் கூடத் தான் 

தொலைத்ததைக் கண்டடைய ஆதங்கம் கொள்கிறது . பிரிவின் துயரை 

மட்டுமன்றி அதன் பித்து நிலையினையும் அபாரமாகப் பதிவு செய்து இத் 

தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக நெஞ்சில் இடம் பிடிக்கிறது 

‘யாதுமாகி’ என்னும் இக்கவிதை.. 

தொகுப்பில் மேலோங்கித் தென்படும் நம்பிக்கை வறட்சிக்குரலுக்கு நடுவே

‘’நண்பகல் காக்கையின் அநாயாச ஒற்றைக்கூவல்…

 புரட்டும் விரல் புத்தக ஓசை

 எங்கோ தொட்டில் ஒன்றின் சிணுங்கல்’’

என ‘’அத்தனையும் இசையாய் இருக்கும்பிரதேச’’த்தையும் சொல்லும் 

‘கமகவெளி’ ஒரு சிறிய ஆறுதல். 

‘சிநேகவனம்’ என்ற முதல் தொகுப்புக்குப் பிறகு வரும் ரங்கநாயகியின் 

இரண்டாம் தொகுப்பு இது. 

‘’சுட்டிப்பெண் போல

மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனி போல’’

என இவர் கவிதைக்குச் சொல்லும் இலட்சணங்கள் பொருந்தி அமைந்து 

சொல்வளமும் அடர்த்தியும் எடுத்துரைப்புத் திறனும் கொண்ட கவிதைகள் 

பலவும் இத் தொகுப்பில் மெருகு கூடிப்பொலிகின்றன. படைப்பாக்கத் 

துறையில் ரங்கநாயகி அவர்கள் மேலும் பல முயற்சிகளை 

மேற்கொள்ளவேண்டுமென்றும், இருண்மையான கவிதைகள் நம் நலிவையும் 

சோர்வையுமே முன் வைப்பவை என்ற மாயையைத் தகர்த்து வாழ்க்கை 

நேசத்துக்குரியது, குதூகலத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது, 

அனைத்துக்கும் மேலாக நம்பிக்கைக்கு உரியது என்ற உத்வேகமூட்டும் 

கலைப்படைப்புக்களும் இவரிடமிருந்து வெளிப்பட வேண்டுமென நான் 

அன்பின் உரிமையோடு கோருகிறேன்.

என் அன்புக்குரிய முன்னாள் மாணவியும் கவிஞரும் பேராசிரியருமான 

ரங்கநாயகிக்கு என் உச்சிமுகர்ந்த பாராட்டுக்கள். இத்தொகுப்பை அழகுற 

வெளியிட முன் வந்திருக்கும் காவ்யாபதிப்பகத்தார்க்கு என் நன்றி.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....