துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.12.15

’’வைகை பெருகி வர......’’

70களின் இறுதியில் மதுரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நான் எழுதிய ’’வைகை பெருகி வர......’’என்ற இந்தச்சிறுகதை இன்றைய சென்னைச் சூழலில் குடிசைவாசிகள் முதல் கோடீசுவரர் வரை அனைவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.

அதை இங்கே மறு பிரசுரம் செய்திருக்கிறேன்.

‘’ புள்ளே நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா..? வைகை அணையிலே தண்ணியைத் தொறந்து விடப்போறாங்க…சாயந்திரத்துக்குள்ளே ஊருக்குள்ளே தண்ணி வந்திடும்னு எத்தினி வாட்டி தமுக்கடிச்சு சொல்லிட்டுப் போறாங்க…நீ பாட்டுக்குக் குந்திக்கிட்டிருக்கே..’’
‘’இப்ப என்னை என்னய்யா செய்யணும்ங்கிறே..’’-அவள் கண்களின் தீனமான பார்வை அவனை ஒருகணம் நெகிழ்த்தி விட,கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.


‘’இத பாரு..நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்….சாமான்,சட்டி எல்லாத்தையும் நான் ஒரு சாக்குப்பையிலே தச்சு நம்ம வாத்தியார் வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன்.மேலத் தெருப்பள்ளிக்கூடத்திலே தங்கவும்,சாப்பிடவும் வசதி செஞ்சு கொடுக்கிறாங்களாம்….பேசாம புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’
‘’அப்ப..வீட்டை அப்படியே விட்டுட்டுப் போயிடறதா..’’
‘’ஆமாம்..பெரிய வீடு….செமெண்ட்டும் தேக்கும் எளச்சு நீ கட்டின பங்களா பாழாப்போகுதாக்கும்..பாத்துப்பாத்துக் கட்டி வச்சவங்க எல்லாருமே இன்னிக்கு உசிர் பொளச்சாப் போறும்னு ஆலாப்பறக்கிறாங்க..நீ என்னடான்னா இந்த மண்குச்சை நெனச்சு மூக்கைச் சிதிக்கிட்டுக் கெடக்கே..’’


மறு வார்த்தை பேசாமல் முத்தம்மா எழுந்து கொள்கிறாள். தந்தையின் தோளில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து கொள்கிறான் மூத்த பயல் ரங்கன். மாற்றுப்புடவையும்,குழந்தை துணிமணிகளும் அடங்கிய ஒரு கித்தான் பையைத் தூக்கிக் கொண்டு,இடுப்பில் கடைக்குட்டி செல்வியை இடுக்கியபடி அவள் புறப்படுகிறாள்.கிளம்புமுன்,தனக்கு இத்தனை நாள் புகலிடம் கொடுத்து அரவணைத்துக் காத்த அந்த மண்குடிசையை அன்போடு,ஆசையோடு..ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்கிறாள்.
அவளைப்பொறுத்தவரை வெறும் மண்குச்சு மட்டும்தானா அது….? 

அவள் கனவுகளின் சொர்க்கமாய்..சில நனவுகளின் நிஜமுமாய்..அவளுக்கென்று அமைந்த அந்தரங்கமான ஒரு அந்தப்புரமாய்..அவளே தனியொரு ராணியாய் அரசோச்சிய மாளிகையாய்…எல்லாமாய் இருந்த ஒன்றல்லவா அது…..?


கனக்கும் தலைச்சுமையுடன் கழுத்தளவு,இடுப்பளவு நீரில் நனைந்தபடி நிவாரணமுகாமை நோக்கி நடக்கும் கூட்டத்துடன் அவர்களும் சங்கமித்துப் போகிறார்கள்.கால்கள் இயந்திர கதியில் நடந்தாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிந்து விட்ட சோகம்..திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு வெறிச்சோடிப்போன மனத்தோடு திரும்பும் கையாலாகாத நிர்க்கதித்தன்மை இவையெல்லாம் நிரந்தரமாக அவளைத் தொடர்ந்து வருகின்றன.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’வாடி மருமவளே…வலது காலை எடுத்து வச்சு உள்ளாற வா..’’-புதுப்பொலிவோடு புது மருமகளாய் அவன் கரம் பற்றி அந்த வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த அந்த நாள் நினைவுகளில் அமிழ்ந்து போகிறாள்.
‘’அய்த்தே….நீங்க கொடுத்து வச்சவுகதான்…புது வீட்டுக்குக் குடி போன முகூர்த்தம் வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மருமவளையும் கொண்டாந்திட்டீங்களே..’’
‘’மாத்திச் சொல்லாதேடி கூறு கெட்டவளே…! எல்லாம் என் மருமவளை நிச்சயம் பண்ணின வேளைதான்….பொறம்போக்கு நெலத்திலே ஒரு குடிசையாவது போட்டுக்க முடிஞ்சது…அததுக்கு நேரம் காலம் வரணுமில்லே..’’


முத்தம்மா புகுந்த வேளை பொன்னாய்ப்பொழியா விட்டாலும் பொங்கித் தின்னச் சோறும் தங்கியிருக்க நிழலுமாவது நிரந்தரமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஏழைக்குடும்பம் நிறைவு காண்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ந்தா இந்த ரொட்டியை சாப்பிட்டுப் படுத்துக்க..அப்பறமா கனாக்காணலாம்’’
‘’எனக்கு வேணாம்’’
‘’என்னடா இது பெரிய ரோதனையாப்போச்சு…புள்ளைங்க,நான் எல்லாரும் பக்கத்திலேயே இருக்கோம்.அவங்கவங்க சொந்த ஜனங்களை சாமானங்களப் பறி கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.நமக்கு அந்தக்கவலையும் இல்லை….இதிலே உனக்கு என்ன எளக்காரமாப்போச்சுன்னு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கே நீ..’’
’’ஏன்யா மெய்யாலுமே சொல்லு…அத்தை மட்டும் உசிரோட இருந்தா அந்த வீட்டை முளுக விட்டுட்டு நாம மட்டும் வர்றதுக்கு சம்மதிச்சிருக்குமா..’’


’’இத பாரு முத்தம்மா சும்மா அதயே பெனாத்திக்கிட்டுத் திரியாதே.. ஒரு வகையிலே அந்த வீடு இடிஞ்சு போனாக் கூட நமக்கு லாபந்தான்…இந்தக் குச்சுக்கு நாம செலவளிச்சதை விட சாஸ்தியான பணத்தை சர்க்காரு கிட்டேயிருந்து ஈட்டுப்பணமா வாங்கிடலாம்.அதை வச்சு வேற இடத்திலே இன்னும் வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம்….அதையே நெனச்சு மறுகாம செத்தே படு’’
‘’மச்சான் நீ கூடவா இப்படிப்பேசறே…நம்ம குடும்பத்தோட ஒண்ணா ஒரு கொளந்தை மாதிரி பாத்துப் பாத்து நாம வளத்த அந்த வீட்டை விட இன்னிக்கு வரப்போற ஈட்டுப்பணம் பெரிசாப்போயிடிச்சா உனக்கு..’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வனும் அவளுமாய் வியர்வை நீரூற்றித்தான் அதை வளர்க்கிறார்கள்.அவள் வந்த புதிதில் நான்கு கம்புகளும் உயரமில்லாத தாழ்ந்த மண்சுவருமாய் இருந்த வீடு,அவர்கள் உழைப்பின் ஊக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கிறது.


வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் வேளையில் அவள் மண் சுமந்து வந்து தர,அவனும் அவளுமாய் சுவரை உயர்த்துகிறார்கள்.ஒரு காற்றடித்தால் பறந்து போய்விடும் ஓலைகளை மாற்றி விட்டு ஓடு வேய்வதற்குத் தன் பிறந்த வீட்டில் போட்ட இரண்டு பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைக்கச் சொல்கிறாள் அவள்.
‘’மண்ணு வீட்டுக்கு ஓடு போடறதுக்குத் தங்கச் சங்கிலியை வைக்கறதா…ஒங்கிட்டே உள்ளதே இந்த ஒரு நகைதான் நீ போட்டுக்க ஆத்தா..வேண்டாம்’’
அத்தை அவள் செயலைத் தீவிரமாய் மறுக்கிறாள்.
‘’அத்தை நாம எப்படியும் சங்கிலியை மீட்டுக்காம இருக்கப்போறதில்லை….அட..அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்சம் ஒடம்பு வணங்கி ஒளைச்சிட்டுப் போறோம்.ஆனா ஓடு போடறதுக்காக அப்படி ஒளைக்க வணங்குமா….இல்லே அப்படி சிறுக சிறுக சேத்து வச்சாதான் செலவளிக்காம ஊறுகா போட்டு வைக்க முடியுமா..’’
எப்படியோ மல்லுக்கு நின்று நினைத்ததைச் சாதித்து விடுகிறாள்.


‘’ஏன் மச்சான் பணக்காரங்க வீட்டுக்குப் பேர் வைக்கிற மாதிரி நாம கூட நம்ம வீட்டுக்குப் பேரு எதினாச்சும் வச்சா என்ன’’
‘’போடி பைத்தியக்காரி…அவங்க பேரு வைக்கிறது தங்களோட அந்தஸ்தைக் காட்டிக்க…நமக்கு அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிற மாதிரி என்ன இருக்கு’’

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’ந்தா முத்தம்மா…செல்லி அளுவுது பாரு…அதுக்குப் பாலு கூடக் குடுக்காம என்ன ரோசனை ஒனக்கு’’
-மூலைவீட்டு முனியம்மா பாட்டி முத்தம்மாவைக்கடிந்து கொள்கிறாள்.

சுய உணர்வு பெற்றவளாய்க் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். எங்கும் முகங்கள்! வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் !வீட்டை விடத் திருப்தியாக ஒருவேளையாவது சாப்பிட முடிந்ததே என்ற அற்ப சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற சில பிஞ்சு முகங்கள்….நாளைய கவலையை ஒதுக்கி விட்டு இன்றைய இந்தப் பொழுதில் நிம்மதி காணும் முகங்களுக்கிடையே முத்தம்மா மட்டும் வேறுபட்டு நிற்கிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டு வேயப்பட்டு உயரமாய் நிற்கும் அந்த வீட்டைப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் அவள்.சுற்றிலும் வேலிக்காத்தான் செடிகள் மதிலாய் வளர்ந்திருக்க படல்கதவு ஒன்றையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.என்றைக்கோ அத்தை சப்பிப்போட்ட மாங்கொட்டை செடியாகி,மரமாகிப்பூக்க ஆரம்பித்திருக்கிறது.தவிர அவளே கொத்திப்போட்ட கீரைப்பாத்திகள்,கொய்யா மரம்,இன்னும் மல்லிகைப்பந்தல்!

’’சாமர்த்தியக்காரிதாண்டி நீ…தம்மாத்தூண்டுக் குச்சைக் கோபுரமாக்கினதோட தோட்டமெல்லாம் போட்டுத் தோப்புக்கணக்கா ஆக்கி வச்சிருக்கியே...ஹ்ம்…உங்க அத்தை இப்ப இல்லாத்தது ஒண்ணுதான் குறை…’’
‘’செங்கல் சுவரெடுத்துத் தளம் போடணும்னு பாக்கிறேன் முடியலியே ஆயா..’’
‘’தளம் போடாட்டி என்னாடி? அதுதான் சாணம் போட்டுபோட்டுச் சிமிட்டியாட்டம் மொளுகி வச்சிருக்கியே தரையை..’’-முனியம்மா பாட்டி மூக்கில் விரல் வைத்து வியக்கிறாள்.
ஆயாவின் தலை மறைந்ததும் முத்தம்மா ஆத்திரத்துடன் வெடிக்கிறாள்.
‘’மொதல்லே ஒரு பூசனிக்கா வாங்கிட்டு வந்து மூஞ்சி வரைஞ்சு தொங்க விடணும் மச்சான்…அந்தப்பொம்பளையோட பேச்சு ஒண்ணும் சரியில்லை..’’
‘’ஆமா…அவ கண்ணேறு பட்டுதான் ஒன்னோட வசந்த மாளிகை ஆட்டம் கண்டிடப்போகுதாக்கும்’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகாமுக்குள் சில பேர் வேகமாக ஓடி வருகிறார்கள்.அரைத் தூக்கத்திலிருந்த முத்தம்மாவின் கணவன் உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறான்.
‘’ஓடைப்பட்டிக் கம்மா ஒடைப்பெடுத்து வாய்க்காத் தண்ணி நம்ம குப்பத்தைச் சுத்திக்கிடிச்சு அண்ணே..நல்ல வேளை நீ பொளுதோட வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு வந்தே.....நம்ம குப்பன் பய வேலை முடிஞ்சு வாறதுக்குள்ளே வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்திடிச்சு…சரித்தான்….உசிரு பொளச்ச மட்டிலே போறுமுன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு இங்கே ஓடியாந்துட்டான்’’
கண்மாய் வெள்ளம் தன் உயிரையே கொள்ளை கொண்டு போவது போன்ற மயக்கத்தில் சரிந்து விழுகிறாள் முத்தம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யற்கையின் ஊழித்தாண்டவம் ஒருவழியாகக்கொஞ்சம் ஓய்ந்திருக்கும் அந்தக் காலைப்பொழுதில் ஒரு பிச்சியைப்போலத் தன் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா . நீர்ச் சுழிப்பில் ஒதுங்கிய தென்னை மட்டைகள்,இளநீர்க்குலைகள்,வாழைத்தார்கள் எல்லாவற்றையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறியவள்,அங்கே தன் கனவு மாளிகையின் அஸ்தமனக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
ஓடைத் தண்ணீர் அகழியைப்போல நாலு புறமும் சூழ்ந்திருக்க…நடுவே நான்கு மூங்கில் கழிகள்…,மேலே இன்னும் பறக்காமல் பலங்காட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஓடுகள்,மத்தியில் குவிந்து கிடக்கிற உடைந்து போன ஓட்டுத் துண்டுகள்,மரச்சட்டங்கள்!அப்பளமாய் நொறுங்கிப்போக் கிடக்கிற தன் சாம்ராச்சியத்தின் கோர முகம் கண்டு அருவருப்போ வெறுப்போ கொள்ளாமல் அந்த முழங்காலளவு நீரில் அவள் மெள்ள அடியெடுத்து வைத்து வருகிறாள்.சாணமிட்டு மெழுகி அவள் கோலமிடுகிற முற்றம்,பத்து வீடு கேட்கிறாற்போல ரங்கன் பயல் வாய்ப்பாட்டை உருப்போடுகிற அந்த உயரமான திண்ணை,அவள் கணவன் ஆசையோடு வாங்கிப்போட்ட நார்க்கட்டில் கிடக்கிற மூலை,வாய்க்கு ருசியாய் அவள் பலகாரம் சுட்டுப்போடுகிற சமையலறை ஓரம், அத்தை தன் இறுதி மூச்சை விட்ட வீட்டின் கீழண்டைக்கோடி,ரங்கனையும்,செல்லியையும் ஈன்ற களைப்பை ஆற்றிக் கொள்ள அவள் இளைப்பாறியிருந்த வீட்டின் தெற்குப்பார்த்த வாயில்புறம்……இன்னும்,இன்னும்..இன்னும் மறக்க முடியாதபடி அவள் நினைவுச்சுவட்டில் பதிவாகியிருந்த வாழ்வின் சில கணங்கள்,அவற்றோடு பிணைந்த அந்த வீட்டின் பகுதிகள் எல்லாம் அந்தக் கூளத்தினூடே அவள் கண்ணுக்கு மட்டும் தனித்தனியே எழுதி வைத்த ஓவியங்களாய்க்காட்சி தருகின்றன.
‘’வீடுங்கிறது வெறும் உயிரில்லாத ஒருபொருள் மட்டும்தானா..நாம வேணுமானா உயிரில்லாத பொருள்களால அதைக் கட்டியிருக்கலாம்….ஆனா..மனுஷ உணர்வுகளினாலே அதுக்கு உயிரூட்டின பிறகும் சீவனே இல்லாத ஒரு மரக்கட்டையா……மண்ணாலேயும் கல்லாலேயும் ஆன ஒரு வெறும் பொருளா அதைப்பாக்க மனுசங்களாலே எப்படி முடியுது?’
இப்படியெல்லாம் பேசப் படிக்காத முத்தம்மாவின் பாமர மனது ஊமையாய்க் கண்ணீர் வடிக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’முத்தம்மா! ஒன்னத்தான் புள்ளே ம்…..கெளம்பு கெளம்பு…வெள்ளம் வடிஞ்சாச்சு இன்னும் எத்தினி நாளைக்கு இங்கே வச்சு சோறு போடுவாங்க….வூட்டுக்குப் போகலாம்..பொறப்படு’’

‘’வூடா அது எங்கே இருக்கு?’’

‘’என்னா நீ..கம்மாத் தண்ணி சுத்திக்கிட்டிருக்குதுன்னு அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து பூட்டியா..?நல்ல காலம்..மதகுக்கு அப்பால நம்ம சந்து இருக்கிறதால அதிலே உள்ள நம்ம குடிசைங்க மட்டும் பொளைச்சிடிச்சு’’

‘’………………………………………’’

‘’என்னா புள்ளெ அப்படிப் பாக்கிறே….நான் சொல்றது நெசந்தான்..! நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா?’’
வியப்போடு கணவனைப் பார்க்கிற முத்தம்மா..,குழந்தைகளை ஆசையோடு நெஞ்சில் அழுத்தியபடி தன் மண்குச்சை நோக்கி…வெறி பிடித்தவளாய் மாளாத காதலோடு ஓடுகிறாள்.


அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அப்போதைக்கு வேறு இடத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் வெள்ளம் வடிந்ததும் முத்தம்மா ஓடி வருவது என்னவோ இந்தக் குடிசையை நோக்கித்தான்! அவளுடைய உலகம் ஸ்தாபிதமாகி இருக்கிற இந்த வீடு மீளாத துன்பத்தையே மீண்ண்டும் மீண்டும் தந்தாலும் அவளைப் பொறுத்த வரை அது ஒரு மீண்ட சொர்க்கம்தான்!


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....