துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.8.16

’வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமல்ல’


என் நாவல் ’’யாதுமாகி’’ குறித்த - மனதுக்கு அண்மையான- மற்றுமொரு கடிதம்...




லோகமாதேவி
தாவரவியல் பேராசிரியர்
பொள்ளாச்சி

அன்பின் சுசீலாம்மா

சென்ற வாரம் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த உங்களின் ’யாதுமாகி’ குறித்த என் அபிப்ராயங்களை எழுதுகிறேன் என்னால் ஆய்வு நோக்கில் எந்த படைப்பையும் வாசிக்கவோ அன்றி விமர்சிக்கவோஇயலாது. நான் ஒரு வாசகி அவ்வளவே. இலக்கிய மற்றும் நவீன இலக்கியப் படைப்புக்கள் எதுவாகினும் நேரடியாக அதன் சுவையையும் பொருளையும் அறிந்து இன்புறுவேன்,  

எனக்கு முதலில் இந்தத் தலைப்பு மிகவும் பிடித்தது,”யாதுமாகி”. எங்கும் நிறைந்ததல்லவா அன்னைமை? மிகப் பொருத்தமான தலைப்பு. 4 தலை முறைகளைக் காட்டி இருக்கிறீர்கள் இதில் அன்னம், அவர் மகள் தேவி, அவர் மகள், பின் அவரின் மகள் என்று. 4 தலைமுறைகளாக மாறாத பெண்மையின் துயரத்தைப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பால்ய விவாகத்தில் மணம்செய்துவைக்கப்பட்டு அடுப்படியே உலகமென வாழும் அன்னம்மாவைக்குறித்து மிக அதிகம் சொல்லப்படவில்லையெனினும் அவர்கள் தொடரும் அனைத்து நிகழ்வுகளயும் இணைக்கும் சரடாகவே  இருக்கிறார்கள். 

பின் இந்தக் கதையின் முக்கியமான ஆளுமை தேவி, காலம் காலமாகத் தொடரும் பெண்மையின் துயரமனைத்திற்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாகவே இருக்கிறார்கள் அவர்கள், இருப்பினும் அத்தனை இன்னல்களிலும் அசராத தன்னம்பிக்கையும் கம்பீரமும் தாய்மையும் அழகும் பெண்மையும் மிளிர்கின்றது அவர்களின் பாத்திரப்படைப்பில். அவர்களை அறிமுகப்படுத்துகையில் காட்டப்படும் நைட் குவின் மலர் விதவைக்கான  ஒரு குறியீடா? என்னைப்பொறுத்த வரையிலும்  எல்லா மலர்களையுமே  உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும்? தொடர்ந்து உலகம் இயங்குவதும் இவற்றால் மட்டுமே அல்லவா?

தேவியின் சிறுவயதுத் திருமணம், தொடரும் அறியாத வயதின் விதவைக் கோலம், சுப்புலட்சுமியின் அமைப்பில் சேர்க்கை, அப்பாவின் மரணம்,கிறிஸ்துவப் பள்ளியில்   பணி, மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியின் நட்பு, வளரும் தன்னம்பிக்கை,, விலகும் சில உறவுகள், அதனால் ஏற்படும் சில தடுமாற்றங்கள்,பின் மறுமணம், பெண்குழந்தைகள், மீண்டும் கணவரின் இழப்பு, புதிய பணி,அதில் அவரின் கண்டிப்பு, நேர்மை, மகளின் திருமணம் அதன் தோல்வி, அதில் ஏற்பட்ட உளவியல்  ரீதியான பாதிப்பு, சீர்குலையும் ஆரோக்யம் பின் அவரின் இறுதி, இப்படி ஒரு முழுமையான  life cycle மிக அழகாக சித்தரிக்கப்படுள்ளது. இது புனைவு வெளி அல்ல என்பதை நான் அறிவேன் சில புனைவுக் காட்சிகள் இருக்கலாம்.

மாறிவரும் காலகட்டங்களை மாற்றி மாற்றிப் பதிவு செய்திருந்தாலும் குழப்பமின்றிக் கதை கோர்வையாகவே செல்வது இந்த படைப்பின் சிறப்பம்சம். வெறும் வாழ்க்கைச் சரித்திரமாக மட்டுமாகவல்ல நீங்கள் அன்னையின் கதையை ஆவணப்படுத்தியது அதில் அந்தக் கால கட்டத்தின் அவலங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பெண்விடுதலைக்கான முயற்சிகள்,விதவா விவாகம்,அப்போதைய சாதி ரீதியான ஆதிக்கங்கள், ஆண் குழந்தையை நம்பி வாழும் வாழ்வு முறை,என்று பல முக்கிய விவரங்களைப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.
சகோதரி சுப்புலட்சுமி
தேவியைப் பற்றின விவரிப்புகளில் அவரின் காலந்தவறாமை பட்டுப்புடவைகளை மெத்தைக்கு அடியில் மடித்து வைப்பது, செடி கொடிகளின் மேலான அவரின் நேசம்,சிந்தால் சோப்பின் உறையை பத்திரப்படுத்துவது ஐஸ் ஹவுஸ் எதற்காக கட்டப்பட்டது,சகோதரி சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் குறிப்பு, பூணூல் கல்யாணம், பெண்கள் வேதமந்திரம் சொல்ல இருந்த தடை,பலாச்சுளைகளைத் தேனில் தடவி உண்டது என எத்தனை எத்தனை குட்டிகுட்டித் தகவல்கள்?

முன்னாள் ஐஸ் ஹவுஸ் கட்டிடம்
[இன்றைய விவேகானந்தர் இல்லம்]

சாம்பசிவத்தின் பழமையில் ஊறிய தாயார், (அன்னத்தின் மாமியாரையும்) கணக்கில் எடுத்துக்கொண்டால் 5 தலைமுறைகளை அல்லவா சொல்லி இருக்கிறீர்கள்? 5 தலைமுறையை சேர்ந்த பெண்களின் வாழ்வை இதனை சிறிய புத்தகத்தில் அடக்கியதே ஒரு சாதனைதான்


அதிலும் தேவியின் புடவை பற்றிய குறிப்புகளை நான் மிகவும் ரசித்தேன், அடர்ந்த கேசத்துடன் இருக்கும் அழகிய தேவி அணிந்திருப்பது பட்டுதான் என்று கருப்பு வெள்ளைப் புகைப்படத்திலும் தெளிவாகவே தெரிகிறது.முன்பு விதவையாயிருந்தபொழுது அணிந்த வெண்ணிற புடவை மறுமணத்திற்க்கு பிறகு அருமையான வண்ணங்களில் பட்டாக மாறினாலும் அதற்கும் வெள்ளை ரவிக்கையே அவர்கள் அணிந்தது அவர்  விதவையாயிருந்தவர்  என்பதை மறக்கமுடியாத, நினைவின் ஒரு சிறு நீட்சிதானோ என்னவோ ?


சுசீலாம்மா, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் விவரிப்பேன் அந்த அளவிற்கு இதை ஆழ்ந்து படித்தேன். உங்கள் தாய்க்கு இந்த புத்தகம் வெறும் அஞ்சலி மட்டுமல்ல பெரும் கெளரவமும் கூட. ,உங்களை நட்பாக்கிக்கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி.  அவரும் என்னைப்போலவே தாவரங்களை நேசித்தவர் என்பது கூடுதல் மகிழ்வை அளிப்பதாக இருந்தது..

சுகாவின் தாயர் சன்னிதி படிக்கக் கிடைக்கவில்லை என்பதை ஏனோ இப்போது இதை எழுதி முடிக்கையில் நினைவுகூர்கிறேன். வாங்கிப் படிக்கவேண்டும்.பிறக்கையிலேயெ கருவறையுடன் பிறப்பவர்களல்லவா நாமெல்லாம்? எல்லாஅன்னைகளுமே கருவறைகொண்ட சன்னதிதான். அவற்றின் முன்பு தலை வணங்கியே ஆகவேண்டும் தலைமுறைகள். 

நீங்கள் உங்கள் வணக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள் இந்தப் புத்தகம் வாயிலாக. நன்றி சுசீலாம்மா யாவற்றிற்கும்

மாறா அன்புடன்
லோகமாதேவி



கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....