துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.7.17

கல்வி...நீதி..


சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் நியமனத்தில் நிகழ்ந்திருக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டி உயர்நீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, பின் வரும் செய்திக்குறிப்பாக ஆங்கில நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது.


கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்கும் பல்கலைக்கழக மானியக்குழு, பணி நியமனங்களில் நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளை அவ்வப்போது தெளிவாக வகுத்தும் புதுப்பித்தும் கண்காணித்தும் வருகிறது. புதுப்பிக்கப்பட்டிருக்கும் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்ளாமலோ,  அவை குறித்து சட்டை செய்யாதது போன்ற தன்னிச்சை மனப்போக்குடனோ செயல்படும் தனியார் நிர்வாகங்கள்…, அவற்றின் எதேச்சதிகாரத்துக்குக் கடிவாளம் போட முன்வராமல் தாமதிக்கும் அரசுக்கல்வித் துறைகள் இவை நீடிப்பதாலேயே பேராசிரியர்கள் நீதிமன்றங்களின் துணையை நாட வேண்டியிருக்கிறது. 

2010ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் கருத்தில் கொள்ளப்படாமல் -2000ஆம் ஆண்டுடன்- காலாவதியாகிப்போன பழைய விதிமுறைகளே முதல்வரின் நியமனத் தேர்வுக்குழுவால் பின்பற்றப்பட்டிருப்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். நீதி மன்றமும் அதையே வழிமொழிந்தபடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது..

தனியார் கல்வி நிறுவனங்களில் பொதுவாக நிலவும் பலவகைக் கெடுபிடிகள்..அழுத்தங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட நான்காண்டுக் காலமாக அறப்போரைத் துணிச்சலாகக் கையிலெடுத்துத் தொடர்ந்து போராடியிருக்கும் பேராசிரியத் தோழிகளுக்குப் பாராட்டுக்கள்.

மேற்குறித்த போக்குகள் எதிர்காலத்தில் தொடரும்போது ஒரு சிறிய வேகத் தடையையாவது ஏற்படுத்தக் கூடியவை இப்படிப்பட்ட போராட்டங்களும் அவற்றின் உடனிகழ்வான தீர்ப்புகளும்...

அந்த வகையில் இது கல்வித் துறை வரலாற்றின் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதைக்குறிப்பிடும் அதே வேளையில் மேற்குறித்த செய்தி வெளியாகி இருக்கும் தன்மையும், அதற்கு வந்திருக்கும் பின்னூட்ட எதிர்வினைகளும் சில கேள்விகளை எழுப்புகின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரிலிருக்கும் பழமையான ஒரு கல்லூரியோடு தொடர்புடைய இந்தத் தீர்ப்பைத் தமிழ் நாளிதழ்கள் வெளியிடத் தவறியது ஏன் என்பது முதலில் ஏற்படும் உறுத்தல். 

பிற மாவட்டப் பதிப்புகளில் வெளியிடப்படாமல் இருந்தாலும் கூட சென்னைப்பதிப்புக்களிலாவது இது வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானது. 

புலனாய்வு இதழ்கள் இச்செய்திக்குத் தரப்போகும் முக்கியத்துவம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

மிகப்பிரபலமான ஆங்கில நாளிதழ்களும் கூட இந்தச் செய்தியை முதலில் பிரசுரிக்கும்போது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கின்றன என்பது வேதனை அளிப்பது. வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரையே –முதல்வரின் பெயராக்கி செய்தி வெளியிட்ட அபத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் பதட்டத்தோடு அதற்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறார்;


தொடர்ந்து நாளிதழ்களிடம் உரிய திருத்தம் கோரிப் போராட்டக்குழுவாலும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் பிறகே வலைத்தளச் செய்தி திருத்தப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட விவரம் கீழே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


எனினும்
செய்தி திருத்தப்பட்டிருப்பதை மட்டும்தான் அடிக்குறிப்பு சுட்டிக் காட்டுகிறதே தவிர வழக்குத் தொடர்பான முக்கியத்துவத்தையே மாய்த்துப்போடுவதைப்போன்ற மிகப்பெரும் தவறு நேர்ந்திருப்பதற்கு ஒரு வார்த்தையில் கூட வருத்தம் தெரிவிக்கப்படவில்லை 
[மறுநாள் செய்தித்தாளிலும் திருத்தம் பற்றிய குறிப்பு வெளியானபோதும் அதைப்படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு தீர்ப்பு குறித்த விவரங்கள் உரிய முறையில் போய்ச் சேர்ந்திருக்கப்போவதில்லை]

கவனக்குறைவால் நேர்ந்தது அல்லது அச்சுப்பிழை என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாத தவறு இது.. 

கொலைப்பட்டவனையே கொலையாளி என்று மாற்றிக்கூறுவது போன்ற இத்தகைய ஆள் மாறாட்டப் பிழைகள் பத்திரிகைகளின் நம்பகத் தன்மையையே தகர்த்து விடக்கூடியவை.

அரசியல் உள்ளிட்ட பிற சமூகச்செய்திகளுக்குத் தரப்படும் இடமும் அவற்றை வெளியிடும்போது செலுத்தப்படும் கவனமும் கல்வித் துறை சார்ந்த செய்திகளுக்கு இல்லாமல் போகிறதோ என்ற கவலையை ஏற்படுத்தக்கூடியது இது.

குறிப்பிட்ட வலைத்தளச்செய்திக்குறிப்பிற்கு எதிர்வினையாற்றிருக்கும் சிலரும் கூட இந்தக் கவலைக்கு வலுச்சேர்த்திருக்கிறார்கள்.
கல்லூரி நிர்வாகமும் பல்கலைக்கழக மானியக்குழுவும் கல்வித்துறையும்  கருத்துச்செலுத்தித் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டிய பிரச்சினைகள் இவை என்றும், நீதிமன்றம் கவனிக்க வேண்டிய பிற சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் இதனால் தாமதமாகி நீதிமன்றத்துக்கு சுமை கூடுகிறது என்றும் இங்கே சிலர் பதிவு செய்திருக்கும் கருத்துக்களை முழுமையாக ஏற்க முடியவில்லை.. 



கிடைக்க வேண்டிய இடத்தில்- கிடைக்க வேண்டிய நேரத்தில்- கிடைக்க வேண்டிய முறையில் நீதி கிடைத்து விட்டால் எவரும் நீதிமன்றத்துக்குச் சென்று பொருளையும் நேரத்தையும் வீணாக்க விரும்புவதில்லை என்பது நிதரிசனமான உண்மை

வாழ்நாள் முழுவதையும் பணியாற்றும் இடத்துக்கே செலவிட்டு நேர்மையாகக் கடமை ஆற்றும் பேராசிரியர்களை- அதிலும் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியும் கொண்டவர்களை- அதே கல்வி நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பு செய்கையில் நீதியின் துணையை நாடுவது அவசியமாகி விடுகிறது.

இன்னும் சொல்லப்போனால் கல்வி சார் வழக்குகள் பிற வழக்குகளை விட எந்த வகையிலும் முக்கியத்துவத்தில் குறைந்தவை அல்ல.சாமானியன் வரை போய்ச்சேரும் சட்டத்தின் அரவணைப்பு கல்விக்கு மட்டும் அந்நியமான ஒன்றாகி விடுமா என்ன?

பி கு

அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டம். 
பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தபடி தனியார் கல்லூரிப் பேராசிரியர்களின் போராட்டம் அப்போதுதான் வலுப்பெறத் தொடங்கியிருந்தது. வழக்கு மன்றங்களின் உதவி நாடிப் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முற்பட்ட பேராசிரியர்களும் அவர்களுக்காகப் போராடிய இயக்கங்களும் மிகுந்திருந்த காலம் அது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு அதே போல அரசு உதவி பெற்றுவந்த தனியார் கல்லூரிப்பேராசிரியைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் அந்தச் சூழலிலேதான். அந்தச்செய்தி அப்போதைய முதலமைச்சர் எம் ஜி ஆருக்கு வியப்பூட்டுவதாக இருந்தது என்பதையும்  வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.  







கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....