துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.10.17

சில கேள்விகள்-1

 [இலக்கியம்...சமூகம்...மெய்யியல் தொடர்பாக அவ்வப்போது நெஞ்சுக்குள் எழும் சில கேள்விகளும் தேடல்களும் இங்கே..]

அன்பும் அழுகையும்...


ஒரு மாதம் முன்   மதுரைக் கோயிலில் சுற்றிக்கொண்டிருந்தபோது..
 மனதுக்குள்  சில திருவாசக வரிகள்..

‘’யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்பெறலாமே’’

எனக்குப்பிடித்த, என்னுள் எப்போதும் ஓடும் வரிகள்தான்..
ஆனால் மனம்  அன்றென்னவோ  வித்தியாசமாய் ஓடியது.

நெஞ்சும் ..அன்பும் ..நானும் பொய்  என்றால் என்னதான் சொல்ல வருகிறார்..
எதைத்தான் சொல்ல வருகிறார் இந்த மணிவாசகர் என்று மனம் துணுக்குற்றது  

மனிதர் மீதோ இறைச் சக்தி மீதோ நாம் காட்டும் அன்பும்... 
அப்படி ஓர் அன்பு இருப்பதாக நாம் பாவித்துக்கொள்வதும்... 
அந்த  பாவனையில் நம்மை ஆழ்த்துவதுமான  நெஞ்சும்... 
நெஞ்சை சுமந்திருக்கும் அந்த நானும் 
எல்லாமே பொய் என்கிறாரா..

அன்பு செய்தால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்பது தவிர என் அன்பால் நான் எதை ஏற்படுத்துகிறேன்....
 அன்பை எவர் மீது எதன் மீது செலுத்துகிறேனோ அவருக்கு அல்லது அதற்கு - அதனால் நான் சாதித்துத் தருவது எதை?
அந்த என் அன்பால் சக உயிருக்கோ...இறை சக்திக்கோ கிடைப்பது என்ன....

இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து  அன்பு செய்தால் அந்த அன்பே பொய்தானே...
தன்னெஞ்சறிந்து பொய்க்கும் முழுப்பொய்மையல்லவா அது...

மாறாக... வேறொரு இடத்தில் அவர்சொல்வது போல 
‘’அன்றே எனது ஆவியும் உயிரும் உடைமையும் எல்லாம்...
குன்றே அனையாய் எனை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ ....
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’’
என்று  முழுமையான சரணாகதியில் நம்மை ஒப்புவித்து விட்டால்.
நன்மைக்கும் தீமைக்கும் நீயே பொறுப்பு என்று ஒப்படைத்து விட்டால்......
அதன் பின் நான் அன்பு செய்கிறேன்...
நீ இதைத் தா என்ற எதிர்பார்ப்பு தோன்றாது இல்லையா...?

அப்படித் தப்பித் தவறிக்கூடத் தோன்றி விடக்கூடாதென்றே தன்னைத் தானே பழித்துக்கொள்கிறாரோ மணிவாசகர்?

ஒருவர் இறந்து விட்டால் ’’ஐயோ நான் எத்தனை அன்பு வைத்திருந்தேன் இவர் போய் விட்டாரே’’ என்று புலம்புகிறோம்..
எதை எதிர்பார்க்கிறோம் அங்கே..
அப்போதும் நம் சுயநலம்தான் அங்கே துருத்திக் கொண்டு வருகிறது.
எனக்கு அன்பு செய்ய அந்த ஆள் இல்லையே என்ற சுயநலம்..
அப்படித்தானோ...

எதுவும் புரியவில்லை...

ஆனால் மனித ஜீவிதத்தில் அன்பு என்ற ஒன்று  இல்லாமல் இருக்கவும் இயலவில்லை.
தரவும் பெறவுமாய் எல்லாம் வேண்டியும் இருக்கிறது...
நாம் வேண்டியது வேண்டிய விதத்தில் கிடைக்க வேண்டுமென்ற சுயநலமும் கூடவே...

 உண்மையான  அன்பை எதிர்பார்ப்பு  பொய்யாக்கி விடுகிறது...
எதையும் எதிர்பாராத கலப்பற்ற அன்பைச் செய்ய முடியாதபோது 
’நானும் பொய்
என் அன்பும் பொய் 
என் நெஞ்சும் பொய்’ என்றே  ஆகி விடுகிறது...

உடலின்... ஆத்மாவின் ஒவ்வோரு அணுவிலும் இதை உணர்ந்து 
 வேறைதையுமே   வேண்டாமல் 
காதலாகிக் கசிந்து உருகுவது மட்டும்தான் மெய்யன்போ..

 அந்த உருக்கமும் நெகிழ்வும் மட்டுமே போதும் என்று நம் அழுக்குகளைக் கரைத்துக்கொண்டு வெளியேறும் அந்தக் கண்ணீரைத்தான்...
அழுதால் உன்னைப்பெறலாமே’
என்கிறாரோ திருவாத ஊராரான மாணிக்க வாசகர்?

அந்தக்கண்ணீரில் பொய்மை இல்லை..கள்ளம் இல்லை. கசடு இல்லை.
எந்தப்பிரதிபலனும் இல்லாமல் அன்பை அன்புக்காக மட்டுமே செய்யும் ஒப்பற்ற அழுகை அது.
’’கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்...’’
என்று சேக்கிழார் சொல்லும் அன்பும் அதுதானே..?

தலைவனைப் பிரிந்து அவனைத் தவிர வேறு உலகியல் நினைவற்றவளாக இருக்கும் தலைவியின் மனநிலையை  நெடுநல்வாடையில்  சொல்லும் நக்கீரர்
அவள் உடுத்தியிருந்த ஆடையை
’’அம்மாசு ஊர்ந்த அவிர்நூற்கலிங்கம்’’ என்கிறார்.

அழகிய அழுக்குப் படிந்து – ’அம்’ மாசு ஊர்ந்து…  நூல் நூலாய் நைந்து கிடக்கும் ஒரு கிழிசலான கந்தலாடையை உடுத்திக்கொண்டு… அது பற்றிய தன்னுணர்வு கூட இல்லாமல் இருக்கிறாள் அரசியான அவள்..
[அம் என்பது இங்கே சுட்டுச்சொல்லாக அல்லாமல் அழகு என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது ]
  
அழகான அழுக்கு என்பது ஒரு முரண் தொடர்.

தன்னிலை மறந்தவளாய்த் தலைவன் மீது அவள் கொண்டிருக்கும் காதலே அவள் மனதை அழகாக்கியபடி அழுக்குப்படிந்த அவளது ஆடையையும் அழகாக்குகிறது……

பிரிவின் நாட்கள் ஊர்ந்து செல்வது போல ஒவ்வொரு நாளும் அவள் உடுத்தியிருக்கும் ஆடையில் அழுக்கு ஊர்ந்து கொண்டே போகிறது.
அவளின் அக எழில் கூடக்கூட ஆடையில் அழுக்குப்படிந்தாலும் அதன் எழிலும் கூடுகிறது..…

அன்பின் சன்னிதியில் அழுக்கு கூட அழகாகி விடுவது போல்...
தன்னை..தன் அன்பையே பொய் என்று சொல்லும்
 இந்த அழுகையும் தூயதுதான் ..
அற்ப எதிர்பார்ப்புக்களாகிய தூசுகளைக் கரைத்துக்கொண்டு வடிவதால்...




கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....