துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.4.18

பாராட்டு விழா -தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களுக்கு

தமிழ்நாட்டின் சமகால எழுத்தாளுமைகளில் குறிப்பிடத்தவரான மதிப்புக்குரிய எழுத்தாளர்  திரு ஜெயமோகன் அவர்கள்  என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை கவனப்படுத்த சென்னையில் ஒரு விமரிசனக் கூட்டம் நடத்தப்போவதாக பிப்ரவரி மாதம் எனக்கு ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார்.கைபேசியிலும் அழைத்துச்சொன்னார். 
அப்போது கூட அது இத்தனை பெரிய அளவில் நடக்கும் என்றோ -   விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் ருஷ்யக்கலாசார மையமும் இணைந்து நடத்தும் பெருவிழாவாக- மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் தலைமையில் நிகழும் என்றோ  நான் கனவிலும் எண்ணவில்லை. இது என்னை சற்று கூச்சப்படுத்தியபோதும் விஷ்ணுபுரம் நண்பர்களும் திரு ஜெயமோகனும் என் இலக்கியக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்ப நபர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் மூத்த சகோதரிக்கு - மூதன்னைக்கு எடுக்கும் ஒரு விழாவாகவே இதைக்கொண்டு நண்பர்களின் ஆர்வத்திலும் அன்பிலும் நெகிழ்கிறேன். ஒருங்கிணைப்புப்பணிகளிலும்,மொழியாக்கங்களைப் படித்து ஆய்வுரை வழங்குவதிலும் தீவிர முனைப்போடு இயங்கி வரும் நண்பர்களுக்கு என் நன்றி.  

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும், ரஷ்ய அறிவியல் கலாச்சார மையமும் இணைந்து ருஷ்ய மேதையான எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்மொழியாக்கங்களுக்காக எனக்கு நடத்தும்  பாராட்டு  விழா. வரும் ஏப்ரல் ஏழாம் தேதி சனிக்கிழமை சென்னை ருஷ்ய அறிவியல் கலாச்சார நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்கிறது.திரு.மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்], எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கவிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றுகிறார்கள்.அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.

புது தில்லியில் வசித்தபோது
இந்திரா பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனுடன்
2012 ஊட்டி நாராயண குருகுலத்தில் நிகழ்ந்த காவிய முகாமில் ஜெயமோகனுடன்

மதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஏ.சுசீலா, ரஷ்ய இலக்கிய மேதை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்யாவுக்குப் பயணம்செய்து, கதை நிகழ்ந்த இடங்களையும் பார்த்துவந்திருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற இலக்கிய ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், சென்னையில் வருகின்ற ஏப்ரல் 7-ல் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தென்னக ரஷ்யக் கலாச்சார நிலைய துணைத் தலைவர் மிகயீல் கார்ப்பட்டோவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். எம்.ஏ. சுசீலாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜ கோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் பேசுகிறார்கள்.

ஆனந்தவிகடன் 11/4/18இல் அறிவிப்பு


மொழியாக்கங்கள் இது வரை...





[அச்சில் உள்ளது]

திரு ஜெயமோகன் அவர்களின் பதிவு
//சுசீலாவின் மொழியாக்கத்தின் சிறப்பம்சம் அவை சீரான வாசிப்புத்தன்மையுடன் மூலத்திற்கு நேர்மையானவையாக அமைந்துள்ளன என்பதுதான். தமிழில் வெளிவரும் மொழியாக்கங்களில் வாசிப்புத்தன்மை என்பது மிக அரிது என்பதே இங்குள்ள நிலை. எந்த மொழியாக்கத்தையும் ஐம்பது பக்கம் வாசிக்காமல் வாங்கக்கூடாது என்பதுதான் வாசகர்களுக்கு நான் கூறும் அறிவுரை. சமீபத்தைய மொழியாக்கங்கள் பல தடிமனாக என் நூலகத்தில் காத்திருக்கின்றன. காகிதப்பலகைகள் என்றுமட்டுமே அவற்றை சொல்லமுடியும். சுசீலாவின் குற்றமும் தண்டனையும் நாவலை வெறும் மூன்றுநாட்களில் வாசித்ததை நினைவுறுகிறேன்.
எம்.ஏ.சுசீலா பருவங்கள் மாறும் (1985), புதிய பிரவேசங்கள் (1994), தடை ஓட்டங்கள் (2001), தேவந்தி (2011) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் யாதுமாகி என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் (1996), பெண் இலக்கியம் – வாசிப்பு (2001), இலக்கிய இலக்குகள் (2004), தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006), ஆகிய கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இரண்டு தொடக்கங்கள் தேவை என்பது என் எண்ணம். பணி, குடும்பம் என ஒரு வாழ்க்கை. அது ஏறத்தாழ அறுபது வயதில் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓய்வு என நம் சூழல் சொல்கிறது. ஆனால் இன்று மேலும் இருபதாண்டு முப்பதாண்டு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. மீண்டுமொரு தொடக்கத்தை நிகழ்த்தி அதில் தீவிரமாக செல்லாவிட்டால் வெறுமையே எஞ்சும். பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கும் நரகம் அது.
எம்.ஏ.சுசீலாவின் வாழ்க்கையின் வெற்றிகரமான, மகிழ்வான காலகட்டம் என்பது இந்த இரண்டாவது தொடக்கத்திற்குப் பின்னர்தான். அவரை காலம் நினைவுகொள்ளப்போவது இந்த முகமாகத்தான். முதன்மையாக பேராசிரியராக, பேச்சாளராக அறியப்பட்டவர் இந்த இரண்டாவது காலகட்டத்தில்தான் மொழிபெயர்ப்பாளராக ஆனார். சுசீலாவின் வாழ்க்கை அவ்வகையில் இங்குள்ள அனைவருக்கும் ஒரு பாடம், வழிகாட்டி.
எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் ஏப்ரல் ஏழாம் தேதிசென்னை ருஷ்யக் கலாச்சார நிலையத்தில் மாலை 6 மணிக்கு விழா நிகழ்கிறது. மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்]  . இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எம்.ஏ.சுசீலாவை கௌரவிக்கிறார்கள். யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்.
நண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.//
எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறோம்.
நாள்:-ஏப்ரல் – 7 சனிக்கிழமை மாலை
இடம்:- ருஷ்யக் கலாச்சார மையம் 74 கஸ்தூரிரங்கன் சாலை ஆழ்வார்பேட்டை சென்னை
நேரம்:- 530
மிகயீல் கோர்ப்பட்டோவ், இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். சுசீலா ஏற்புரை வழங்குகிறார். சிறில் அலெக்ஸ் வரவேற்க, கவிதா ரவீந்திரன் தொகுத்துவழங்க அருணாச்சலம் மகராஜன் நன்றி கூறுகிறார்
நண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.

இணைப்புக்கள்

அசடன் வாசிப்பு- சௌந்தர்


அசடன்மொழிபெயர்ப்புஅருணாச்சலம் மகராஜன்










கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....