வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை- ஃபெட்னா- மலரில்
[31ஆவது தமிழ் விழா மலர்]
[Federation of Tamil Sangams of North America]
www.fetna.org
ஜூலை 2018
இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வெளியாகி இருக்கும் என் கட்டுரை
https://fetna.org/fetna-2018-
‘’பால்கணக்கு வண்ணான் கணக்கு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்தால் போதும்’’ என்று தந்தை சொல்லிவிட, திரைபோட்டு மறைத்திருக்கும் வண்டியில் ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள் அந்தச் சிறுமி. ஆறாம் வகுப்பு வரை தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்தவள், பத்துப்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கும் மெட்ரிகுலேஷன் தேர்வில் தன் முதல் வெற்றியைக் கையகப்படுத்துகிறாள். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதிகம் நுழைய முடியாத கல்லூரிப் படிப்பில் புதுக்கோட்டை அரசரின் சிறப்பு அனுமதியோடு கால் பதிக்கிறாள். 1912ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் முதல்மாணவியாக - இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்களில் ஒருத்தியாகி, பட்டம் பெறும் நேரத்தில் அவளை வகுப்பறையில் உட்காரக்கூட அனுமதிக்காமல் மட்டம் தட்டிப்பேசிய அதே ஐரோப்பிய மருத்துவப் பேராசிரியர் ’’ஐந்தே வருடங்களில் பதக்கங்கள், பாராட்டுக்களுடன் அவள் இந்தப் பட்டத்தைப் பெற்றிருப்பது ஒரு சாதனை’’ என்றும் ’’மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்’’ என்றும் மனமாரப் புகழ்கிறார். அந்தப் புகழாரத்துக்கு உரியவர், இந்திய நாட்டு சாதனைப் பெண்களின் பட்டியலில் முதன்மை இடம் பெறுபவரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான மருத்துவர் முத்துலட்சுமிரெட்டி.
தமிழ்நாட்டின் [அப்போதைய மெட்ராஸ் மாகாணம்] சட்ட மேலவைக்கு ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினர், சட்டப்பேரவையின் முதல் பெண்
துணை அவைத் தலைவர் சென்னை மாநகராட்சியில் ‘ஆல்டர்மேன்’ [துணை மேயர்] நிலைக்குத் தேர்வான முதல்பெண்; இந்தியமாதர்சங்கத்தின் முதல் தலைவர் என்பவை பொதுவெளியில் அவரைப்பற்றி வைக்கப்படும் தகவல்கள்… அசாத்தியமான இந்த உயரங்களைத் தனது அறிவுத் தெளிவாலும் அயராத உழைப்பாலும் மட்டுமே அவர் எட்டி விடவில்லை; அவற்றின் பின்னணியில் இருப்பவை அவரும் அவர் எதிர்ப்பட்ட சக மனிதர்களும் அனுபவித்த வலி, காயம், சிறுமை, அவமானம் இவைகளும் கூடத்தான்.
’’பிறிதின் நோயைத் தன் நோய்’’ போலக் கருதி ஏற்பதும் அதற்கு மாற்றான ஆக்கபூர்வமான வழிமுறை ஒன்றைக் கண்டடைவதுமே இலட்சியங்களை நோக்கிச் செலுத்தும் உந்துவிசைகளாக இளமைமுதல் முத்துலட்சுமிக்குத் துணை வந்திருக்கின்றன. தான் எதிர்ப்பட்ட எதிர்மறைகளை நேர்மறைகளாக மாற்றும் ஆற்றலை அவருக்கு அளித்தவை அவை மட்டுமே.
குழந்தைப்பருவம் முதல் இரத்தசோகை, கண்பார்வைக் குறைவு,ஆஸ்துமா எனப் பலப்பல நோய்களோடு போராடியபடியே வளர்ந்த அவர் அவற்றை வென்றெடுக்கும் வல்லமையினையும் அந்த அனுபவப் பதிவுகளிலிருந்தே அதிகம் பெற்றிருக்கிறார். வீட்டில் தன் குடும்பச் சூழலிலும்,வெளியில் ஒரு மருத்துவராகவும் குழந்தைகளிடத்திலும், பெண்களிடமும் அவர் கண்டுணர்ந்த உடல்நலப் பாதிப்புக்கள் அளித்த தூண்டுதலே வெளிநாடு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிற[ப்பு மருத்துவக்கல்வி பெறவும், தொடர்ந்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அவை சார்ந்த பணிகளில் முனையவும் அவருக்கு அடிப்படை அமைத்துத் தந்திருக்கின்றன.
இந்தியாவில் மிகக்குறைவான சிகிச்சை வசதிகள் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு சூழலில்-இருபத்து நான்கு வயதே ஆன தன் தங்கை மலக்குழல் புற்றுநோயால் இறந்து கொண்டிருப்பதைக் கண்ணெதிரே காண்கிறார் முத்துலட்சுமி. .’’மனிதனை ஆட்டிப்படைக்கும் இந்த பயங்கரமான வியாதிக்குத் தீர்வு தேடுவதில் அன்றிலிருந்து முனைப்பானேன்’’ என்று தன் வாழ்க்கை வரலாற்றில் அந்தக்கட்டத்தைப்
பதிவு செய்கிறார். மரண சோகத்தையும் விஞ்சியதாய்,
அந்த நோயைப்புறங்காண வேண்டுமென்று அவர் உள்ளம் கொண்ட உரமும் உறுதியுமே சென்னை அடையாறில் இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையமாக[1952] உருப்பெற்று அவர் பெயரை நிலைக்கச் செய்திருக்கின்றன.
தன் குழந்தையின் கல்விப்பயிற்சித் தொடக்கத்தை ஒட்டி ஒரு அனாதைக்குழந்தைகள் காப்பகத்துக்கு விருந்தளிக்கச் செல்கிறார் முத்துலட்சுமி. தன் வருங்கால வாழ்வையே மாற்றியதாக அவர் குறிப்பிடும் அந்த சம்பவத்தின் போது, அந்த இடத்தில் நிலவும் வசதியற்ற சுகாதாரமற்ற சூழ்நிலை அவரை வருத்தப்படுத்துகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும் ஒரு புகலிடமாகவும், அவர்களுக்குப் பயிற்சி அளித்து வாழ்வை எதிர்கொள்ளும் தற்சார்பு பெற்றவர்களாக உருவாக்கும் களமாகவும் கச்சிதமான சுகாதார வசதிகளோடு ஓர் இல்லத்தை உருவாக்கும் எண்ணம் அவர் சிந்தனையில் உதிக்கிறது. அப்போது தொடங்கப்பட்ட அந்த ’ஔவை இல்லம்’[1936] அவர் விட்டுச்சென்ற பணிகளை இன்றளவும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இந்திய மாதர் சங்கம், தேசியப் பெண்கள் மன்றம், இந்தியப் பெண்கள் குழு என அனைத்துப் பெண் அமைப்புக்களிலும் உறுப்பினராக இருந்ததோடு, அவை அனைத்தாலும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத் துணைத்தலைவரான முத்துலட்சுமி அவர்கள், பெண்கள் உயர் அதிகாரப் பொறுப்புக்களில் அமர்வதென்பது அவர்களின் நலனுக்கான சட்டங்களை முன்னெடுக்கவும் கூடத்தான் என்பதற்கு வாழும் சான்றாக விளங்கியவர். பெண்கல்வி மேம்பாடு, பெண்களையும் குழந்தைகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துவதைத் தடுக்கும் குற்றவியல் சட்டம் இயற்றல், இந்திய அளவில் கொண்டு வரப்பட்ட குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை வலுவுள்ளதாக்கல் என்று சட்டமன்றம் சார்ந்து அவர் செய்த பல பணிகளில் தலைமை இடம் பெறுவது தேவதாசி முறை ஒழிப்புக்கான வரைவை முன் மொழிந்ததும்[1930] அது அழுத்தமான சட்டமாக நிலை நிறுத்தப்படும் வரை[1947] பல முனைகளிலும் எதிர்கொள்ள வேண்டியிருந்த எதிர்ப்புக்களோடு போராடியதும்தான். குறிப்பிட்ட சில இனத்தைச் சேர்ந்த பெண்களைப் பொட்டுக் கட்டிக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம், மதம் பற்றிய கேள்வி அல்ல, சிறு பெண்களை முறையற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கும் கொடுமையே அது என்பதை அழுத்தமாக முன் வைத்து அறப்போர் நிகழ்த்திய அவரது பெயரை வரலாற்றின் பக்கங்கள் பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கின்றன.
’’அரசியலுக்காக மருத்துவப் பணியையும் ஆராய்ச்சியையும் விட்டுவிட முடியாது’’என்று அறிவித்தபடியே இத்தனை ஆக்கப் பணிகளையும் செய்து காட்டிய முத்துலட்சுமி அவர்கள் காந்தியடிகளின் கைதுக்கு எதிர்ப்புக் காட்டித் தன் அதிகாரத்தையே துறப்பதற்கும் தயங்கவில்லை.
’ஸ்த்ரீதர்மா’ இதழாசிரியர், உலகெங்கும் நிகழ்ந்த மகளிர் மாநாடுகளில் பங்கேற்றவர், விடுதலைப் போராட்டம், மொழிப்போராட்டம் ஆகிய பலவற்றில் ஈடுபட்டவர் என, முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சமூகச் செயல்பாடுகள் பன்முகம் கொண்டவை.
எல்லா மானுடர்களையும் போல மருத்துவர் முத்துலட்சுமிக்கு வாய்த்ததும் ஒருநாளில் இருபத்துநான்கு மணிகள்தான். கணவர் சந்திரரெட்டி, குடும்பம், மிகப்பெரிய சுற்றம், மருத்துவத் தொழில் என எல்லோருக்கும், எல்லாவற்றுக்குமாய்த் தன்னைப் பகிர்ந்து தந்தபடி பொதுச்சேவையிலும் ஆழமான சுவடுகளைப் பதித்து, இந்த மண்ணில் கழித்த ஒரு நொடியைக்கூட வீணாக்கி விடாமல் தனக்கும் பிறர்க்கும் பயனுள்ளதான பொருள் பொதிந்த ஒரு வாழ்வை அவர் வாழ்ந்திருப்பதைக் காணும்போது சிலிர்ப்பும் மலைப்புமே மேலிடுகிறது.
’'வெளிச்சத்தைப்பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்
விளக்கை ஏற்று’’
என்று கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை சொல்லும் செய்தியையே மருத்துவர் முத்துலட்சுமியின் வாழ்க்கையும் நமக்குப் பாடமாக்கிக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக