துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.10.18

''பரியேறும் பெருமாள்''-சிவந்தவானில் ஒருவிசுவரூபம்


செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே  விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபம் எடுத்து உலகளந்த பெருமாள் போல் நிற்கிறது பரியேறும் பெருமாள். பெரும்பாலும் நகர்மயமான சூழலுக்கே பழகிப்போன பார்வையாளர்கள் , காட்சி முடிந்த பின் ஓடிவிடாமல் இருக்கையிலிருந்து எழுந்து கைதட்டித் தங்கள் வரவேற்பைத் தந்து விட்டு வெளியேறியதையே பார்த்துக்கொண்டிருந்தேன்… உண்மையான எந்தக்கலையாவது  மனித மனச்சாட்சிக்குள் இம்மியளவு உறுத்தலையேனும் ஏற்படுத்தாமல் இருந்து விட முடியுமா என்ற நெகிழ்ச்சியில் நெஞ்சு பூரித்துப்பொங்கியது.

பரியன், அவன் தாய்- தந்தை , ஜோ மற்றும் அவள் குடும்பம், மேஸ்திரி என சகலரும் நம் கண் முன் உலவும் ரத்தமும் சதையுமான பாத்திரங்கள். அன்றாட நடப்பாகி விட்டிருக்கும் சாதி மேட்டிமையின் இலக்குகள் அல்லது அதன் பிரதிநிதிகள்.
சாதிரீதியான ஒடுக்குதலின் உருவகமாகக் கருப்பி சாகடிக்கப்படும் முதற்காட்சி தொடங்கி சாதி மேலாதிக்கத்தை வாழ்நாள் முழுவதும் தூக்கிப்பிடித்து விட்டு  மனதின் துரத்தல் தாங்க முடியாமல் அதே ரயிலின் முன் பாய்ந்து உயிர் விடும் மேஸ்திரி வரை தோலுரித்துக்காட்டப்படுபவை எத்தனை யதார்த்த உண்மைகள்,? முன்வைக்கப்படும் சமூக விமரிசனங்கள்தான் எத்தனை?

கேள்வி கேட்கக்கூட உரிமையற்ற சமூக அமைப்பிலிருந்து கேள்வி கேட்கும் வழக்கறிஞராகத் தன்னைத் தகுதிப்படுத்தி அதிகாரப்படுத்திக்கொள்வதற்காகவே சட்டக்கல்லூரியில் சேரும் பரியன் எதிர்ப்படும் சிறுமைகள் அனைத்தும் சமூகத்தின் கன்னத்தில் விழும் சவுக்கடிகள். ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும், சட்டம் மருத்துவம் போன்ற உயர்கல்விப்படிப்புக்களுக்குச் செல்லும்போது தமிழ்வழிக்கல்வி பயின்றதாலேயே [நானும் கூட உயர்நிலைப்பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவள் என்பதால் அதன் வலியும் வேதனையும் இன்று வரையிலும் கூட எனக்கும் மிகவும் அணுக்கமானவை]  உயர்கல்விக்கூடங்களில் எள்ளலுக்கு ஆட்படும் இளம் மாணவர்களின் மனநிலையை நையாண்டி கலந்த மெல்லிய நகைச்சுவையோடு மட்டுமல்லாமல், மனம் கனக்கச்செய்யும் தீவிரத்தோடும் இது வரை வேறெந்தத்  தமிழ்ப்படமும் பதிவு செய்திருப்பதாக எனக்கு நினைவில்லை.

பேராசிரியர்களையும்  முதல்வர்களையும் கிண்டலுக்கான பேசுபொருளாக மட்டுமே கொச்சைப்படுத்திக் காட்டிக்கொண்டிருக்கும் வழக்கமான தமிழ்ப்படங்களிலிருந்து மாறுபட்டு மாணவர்களிடம் அவர்கள் காட்டும் கரிசனத்தையும் மனித நேயத்தையும் முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்தப்படம்

சட்டக்கல்லூரிப்பின்னணி என்றாலும் பிற அரசியல் கலப்புக்களை இலை மறை காயாக மட்டுமே காட்டியபடி மையப்பொருளை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வகுப்பறையில் கடைசி வரிசையிலிருந்து முதல் வரிசை நோக்கி நகர்வதற்குள்[அதுவும் ஓர் உருவகமே]  பரியன் அனுபவிக்க நேரும் அவமானங்கள், எந்த உள் நோக்கமும் இல்லாத ஓர் அப்பாவியாக - அழைப்பாளியாகச் செல்லும் உயர்சாதித் திருமணவீட்டில் முகத்தில் தெறிக்க விடப்படும் சிறுநீர், கூத்தில் பெண்வேடம் கட்டும் தகப்பனைத் துகிலுரிந்து நடத்தும் கொக்கரிப்பு என்று படம் முன் வைக்கும் சமூகத்தின் கோர முகங்களின் வெளிப்பாடுகள் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றிப் பிசிறில்லாத தெளிவான கதைப்போக்கோடு போலிப்பாசாங்கோ பாவனையோ புனைந்து கொள்ளாதபடி இயல்பாக வெளிப்பட்டிருப்பது மாரி செல்வராஜ் என்ற இயக்குநர் வரித்துக்கொண்டிருக்கும் உண்மைக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி.

காதல் என்ற இயல்பான மென்மையான உணர்வை மிகைக் கற்பனாவாதத்தோடு மட்டுமே காட்டுவது,
கதைக்களத்துக்குத் தேவையற்ற வன்முறையை வேண்டுமென்றே விஸ்தாரப்படுத்திக்கொண்டு போவது,
பெண்ணை நுகர்பொருளாகவும் கவர்ச்சிப்பண்டமாகவுமே அரைகுறை ஆடையுடன்  சித்திரிப்பது
போன்ற சமகாலத் தமிழ்ப்பட இலக்கணங்களை  உடைத்து நொறுக்கிப்போட்டிருப்பதற்காகவே பரியேறும் பெருமாளை உச்சி முகர்ந்து பாராட்டலாம்
[மூத்த மாணவர்களின்  ராகிங் காட்சியில் கூடப் பெண்மாணவிகள் கேலி செய்யப்படுவது தவிர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்]  
பரியன் ஜோவிடம் பாடம் கற்கும் காட்சிகள், கற்றல் என்ற பாவனையில் காதலை வலிந்து திணிக்காதவை; அவன் கண்ணில் தெரிவது கற்றலின் தாகம்.. ஜோவின் கண்ணில் தெரிவது அவனது வெகுளித்தனத்தை ரசிக்கும் பாவம். 
படிப்படியாக அது காதல் என்ற கட்டத்தை எட்டினாலும் ,அது காதல் என்றுகூடத் தோன்றாதபடி மிக நுட்பமாக- மலரினும் மெல்லிதாக- சுண்டு விரல் கூட மேலே படாமல்.-.பட்டாலும் விரசமான எந்த உணர்வும் எழாமல் காட்டிக்கொண்டு போகிறார் இயக்குநர். அங்கும் கூட ஒரு சமூகச்செய்தியே பொதிந்திருக்கிறது… படத்தின் இறுதிக்கட்டத்தில் ஜோவின் தந்தை பரியனிடம் கேட்கிறார்..’’என் பொண்ணு உங்க மேலே அன்பு வைச்சிருக்கா… உங்க கூடவே வாழ ஆசைப்படறா அது தெரியுது....ஆனா அதைப்பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க தெரியலியே’’
பரியன் அதற்குச் சொல்லும் பதில் முக்கியமானது.’’அது என்னன்னு எனக்கே புரியறதுக்குள்ள நீங்கதான் என்னைக் கிழிச்சுத் தொங்க விட்டுட்டீங்களே சார்’’

கடைசி பெஞ்சில் உட்காருவதில் மட்டுமல்ல… …காதலைக் காதல் என்று மனதளவிலும் கூட ஏற்க முடியாத தயக்கத்தை, அச்சத்தை உண்டாக்கும் சாதி அடுக்கின் கீழ்மையை மிகக் கூர்மையாகச் சித்திரிக்கும் கட்டங்களில் இதுவும் ஒன்று

வன்முறையை விரிவான கிழியில் காட்டுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருந்தும், சொல்ல முற்படும்  சமூக நோக்கத்துக்காக மட்டுமே - ஒரு சிலவற்றை - அதுவும் குறிப்பாய்ச் சுட்டிக்காட்டிச்செல்லும் இயக்குநர் எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ள சிறிதும் முற்படவில்லை.  மேஸ்திரி செய்யும் சாதி அடிப்படைக்கொலைகள் எல்லாமே - பேருந்தின் கைப்பிடியில் தொங்கும் இளைஞனைப் பிடி நழுவ விடும் முதற்காட்சி தொடங்கி - மிகச் சுருக்கமான காட்சிகள் வழியாகவும் செய்தித்தாள் பெட்டிச்செய்திகள் வழியாகவும் மட்டுமே விரைவாகக் கடந்து சென்று விடுகின்றன.

படத்தின் கதையை வாசிக்காமலும் அது குறித்த எந்த முன் முடிவோடும் செல்லாமல் அதைக் காணச்சென்றதால் இயக்குநர் அதை எப்படி முடிக்கப் போகிறார் என்ற ஆவலோடு கூடிய எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. திடீர் மாற்றமாகக் கண்ணை உறுத்தும் ஒரு இலட்சியவாதம், அல்லது ஒட்டுமொத்த நம்பிக்கை வறட்சி… அல்லது ’டைட்டில் கார்டு’ போட்டு ஒரு போதனை இந்த மூன்றையுமே படத்தின் முடிவில் தவிர்த்திருப்பது ஓர் ஆச்சரியமூட்டும் அற்புதம். பரியனோடு சமதளத்தில் அமர்ந்து பேசும் அளவுக்கு இறங்கி வந்தாலும் ஜோவின் தந்தை முழுமையாக மாறிவிடவில்லை. ‘பாப்போம்..காலம் எப்படிப்போகுதுன்னு பொறுத்திருந்து பாப்போம்’’ என்று மட்டுமே சொல்கிறார் அவர் .’நீங்களும் நாங்களும் இப்ப இருக்கிற இடத்திலே …இப்படியே இருக்கிற வரை அது சாத்தியமில்லை’’ என்கிறது பரியனின் பதில்.

காலத்தின் தீர்ப்பை சாத்தியப்படுத்தக்கூடியது மனித மனங்களில் விளையும் மாற்றம் ஒன்றே..அதற்கான சிறுபொறியை வீரியமான பொறியாக ஆர்ப்பாட்டமின்றி விதைத்திருக்கும் மாரி செல்வராஜுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

படங்கள் பார்ப்பதும் கூட சலித்துப்போய்…,,அதிலிருந்தும் ஓய்வு பெற்று விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த என்னை மறு பரிசீலனை செய்ய வைத்து என் முடிவை மாற்றியிருக்கிறது அசலான நெல்லை மாவட்ட புளியங்குள நிலவியலையும் வாழ்நிலையையும் திரையில் சித்திரமாய்த் தீட்டியிருக்கும் பரியேறும் பெருமாள். .





கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....