துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.4.21

ஐந்து பெண்கள் - மஹாஸ்வேதா தேவி,மொழிபெயர்ப்புச்சிறுகதை.

 


ஐந்து பெண்கள்

மஹாஸ்வேதா தேவி

சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் மொழிபெயர்ப்புச்சிறுகதை.


ர்ம யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. சிதைகளிலிருந்து மூண்டெரியும் நெருப்புச் சுவாலையில் போர்க்களமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. கௌரவ,பாண்டவ சேனைகளில் இறந்து போன தலைவர்கள் எல்லோரும் முறையான ஈமக்கடன்களோடு தகனம் செய்யப்பட்டு விட்டார்கள். எரிந்து கொண்டிருந்த சிதைகளுக்கு சற்று தூரத்தில் ஒரு பெண்கள் கூட்டம் நெருக்கியடித்து நின்றபடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது. துயரம் தோய்ந்த அந்தக் கூக்குரல்களுக்கு நடுவே ‘ஐயோ ஐயோ’ என்ற வார்த்தைகளுக்கு மேல் வேறேதும் காதில் விழவில்லை. 

அந்தப் பெண்கள் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை; வேலையாட்களோ பணிமகளிரோகூட இல்லை. போரில் கலந்து கொள்வதற்காக வெவ்வேறு சிற்றரசுகளிலிருந்து அனுப்பப்பட்டிருந்த காலாட்படை வீரர்களின் மனைவிகள் அவர்கள். அந்த வீரர்களுடைய வேலை, குதிரையில் ஆரோகணித்து வரும் தலைவர்களைப் பாதுகாப்பதுதான் என்பதால் நாள்தோறும் அவர்கள் ஆயிரக்கணக்கில் பலியானபடி இருந்தனர். அவர்களுக்கு எந்த ஆயுதமும் வழங்கப்படுவதில்லை; அதனாலேயே அவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் மடிந்து போய்க்கொண்டிருந்தனர்.

வீர்களின் சிதையில் தீ மூட்டப்பட்டபோது, இரை தின்ன வட்டமிடும் பறவைகளின் தொகுதியால் குருட்சேத்திரத்தின் வானம் முழுவதும் இருண்டு போயிற்று. தசைகள் கருகும் நாற்றம்…! எண்ணெயில் தோய்ந்த விறகுக்கட்டைகள், அழுகிக்கொண்டிருந்த பிணங்களின் மீது வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.  

சிதைகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தன. அந்தப் பெண்கள் மெள்ளப் பின்வாங்கியபடி இருளில் கரைந்து போனார்கள்.

போர் முகாமில் ஒரு முக்கியமான பகுதியான பணிமகளிருக்கான கூடாரம் இப்போது கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பெண்கள் இந்தக் கூடாரங்களுக்குள் தஞ்சம் புகுந்து விட்டார்களா, அல்லது வேறெங்கும் மறைந்து விட்டார்களா, யாருக்கும் தெரியவில்லை. 

இறந்தவர்களின் சதையும் எலும்புகளும் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்த சிதைகாக்கும் வெட்டியான்கள், அடிவானுக்கு அப்பாலிருந்து வரும் அழுகை ஓலங்களை,கூக்குரல்களை அச்சத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். துயரத்தின் ஆறு கட்டுக்கடங்காமல் பெருகி எழுந்து அதன் அலைகள் ஓங்கி உயர்ந்து இருளுக்குள் மடிந்து கொண்டிருப்பதைப்போல் இருந்தது.

போர்க்களத்தில் வெட்டியான்களுக்கு எந்த வேலையும் இல்லை. யுத்தம் முடிந்த பின்பு அவர்கள் வருவார்கள். கடந்த சில வாரங்களாக அவர்கள் விறகு சேகரித்துக்கொண்டிருந்தார்கள். பெருமளவில் விறகுகள் தேவைப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். பெயர் தெரியாதவர்களாய் மடிந்து போயிருக்கும் எண்ணற்ற வீர்களின் சிதைகளில் எரியும் ஈம நெருப்பைத் தாங்கள் அணைக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்களுக்குத் தெரியும். ஆனால்…இது அவர்களால் முடிக்கவே முடியாத வேலையாக இருந்தது. ‘ஆறு பெருக்கெடுத்து வந்து தீயை அணைத்துக்கொள்ளட்டும்’ என்று சொல்லியபடி அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்கள்.

இவ்வளவு நேரமும் இருளின் அடர்த்தியான சுவரைப்போல் தோன்றிய பகுதியைச் சுக்கல் சுக்கலாகப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட அந்தப் பெண்கள் எழுந்து நகர ஆரம்பித்தார்கள். நகரத்தின் வெளிப்பகுதியை நோக்கி அவர்கள் நடந்து சென்றார்கள். அந்த நிலப்பரப்பில் கறுப்பு உடை அணிந்த பெண்கள் ஓர் ஊர்வலம் போல் நடந்து சென்ற காட்சியை மறுநாளின் சூரிய உதயம் கண்டது.

ஈம நெருப்பால் தகித்துக்கொண்டிருந்த குருட்சேத்திர பூமி,பாறையாய் இறுகிப்போய் அனல் கக்கிக் கொண்டிருந்தது. வன்மமும் கோபமும் நெருப்பு அலைகளாய் மயான பூமி முழுவதையுமே சுற்றிச் சூழ்ந்திருக்க, கொடூரமான ஒரு வெம்மை! 

             ***********************************************

கருக்கு வெளியே ஒன்று கூடி நெருக்கியடித்துக்கொண்டு அந்த ஐந்து பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். முதுகுப் பகுதியில் முடிச்சுப்போட்ட கறுப்பு நிறக்கச்சைகளால் மார்பை மறைத்திருந்த அவர்கள், கறுப்புத் துணியால் தங்கள் தலையையும் உடலையும் சுற்றிப் போர்த்தியிருந்தார்கள்.

அரசகுலப் பெண்களின் அந்தப்புரத்துத் தலைமைத் தாதியான மத்ரஜா, பணியில் அமர்த்துவதற்காகப் புது ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அந்தப்புரத்தின் உள்ளிருந்த அறைகள் பலவும் எண்ணற்ற இளம் விதவைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. அவர்கள் வாழ்வில் இனிமேல் ஆடம்பரங்களுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் இடமில்லை. நறுமண மலர்ச்சரங்கள், மேனியில் பூசும் குங்கும சந்தனப்பொருட்கள், வாசனைத் தைலங்கள் தடவி விரிவாகச் செய்யப்படும் சிகை அலங்காரங்கள் – இவை எல்லாமே அவர்களது வாழ்விலிருந்து என்றென்றைக்குமாய் விலக்கப்பட்டுவிட்டன.

வைதவ்யம் காக்கும் கடுமையான விதிமுறைகள் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் ஆச்சாரியார்கள் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். துயரத்தில் உறைந்திருந்த அந்தப் பெண்கள் அமைதியாக அவர்கள் சொன்னபடி செய்து கொண்டிருந்தனர்.

குருஜங்கல் என்னும் பகுதியைச் சேர்ந்தவளான மத்ரஜா, அந்த ஐந்து பெண்களும் கூட அந்த இடத்திலிருந்துதான் வந்திருக்கிறார்கள் என்பதை ஒரே பார்வையில் அறிந்து கொண்டாள்.

‘’நீங்கள் இன்னும் கூட இளமையாகத்தான் இருக்கிறீர்கள்,’’ என்றாள்.

அந்தப் பெண்கள் அமைதியாக இருந்தனர்.

‘’திரும்பிச் சென்று விடுகிறீர்களா?’’

‘’இந்த பூமி எதையும் தாங்கிக்கொள்ளும் என்று சொல்கிறார்கள், ஆனால் அதெல்லாம் பொய்தான். அனல் காந்துகிறது…ஒரு பாறையைப்போலக் கடினமாக சூடாக இருக்கிறது.’’

‘’இவ்வளவு நடந்த பிறகும்..!’’

‘’பிறந்த மண் வெகு தூரம்…மிகக் கடுமையான பாதை. இருபது நாட்களாகும்…இதற்கு மேல் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது.’’

மத்ரஜா அவர்களது கால்,கை,தோள் என்று எல்லாவற்றையும் பார்வையிட்டாள். அவர்கள் இளமையானவர்கள், உண்மைதான். ஆனால் அவர்களது உடல்கள் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டிருப்பவை.

‘’இளம் விதவையான தன் மருமகள் உத்தரைக்கு உதவ இளம்பெண்கள் தேவைப்படுவதாக அரசி சுபத்திரை சொல்கிறாள்.’’

‘’ பணிமகளிராகவா..? வேலைக்காரிகளாகவா?’’

‘’அவள் துயர மிகுதியில் உணர்விழந்து ஊமையாய் இருக்கிறாள். கருவுற்றும் இருக்கிறாள்.’’

’’அதனால்..’’

‘’இப்படிப்பட்ட பேரழிவு நேர்ந்திருக்கும் சூழலில்..’’

‘’என்ன சொல்கிறாய்..? பேரழிவா? ஏ மூதாட்டியே, அது இயற்கையாக நேரிட்டிருக்கும் பேரழிவென்றா சொல்கிறாய்? அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான ஒரு சண்டயில் பெரிய பெரிய அரசர்களெல்லாம் பங்கெடுத்துக் கொண்டார்கள். சிலர் ஒரு பக்கம் இருந்தார்கள்; வேறு சிலர் எதிர்த் தரப்புக்குச் சென்று விட்டார்கள். இது சகோதரர்களுக்குள் நடக்கும் பூசலாக மட்டும்தானா இருந்தது? சண்டை, பொறாமை, போட்டி இவற்றையெல்லாம் நாங்களும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் ஓர் அரியணைக்குப் போய் இத்தனை பெரிய ஒரு யுத்தமா? இதைப்போய்ப் புனிதமான தர்ம யுத்தம் என்றா சொல்வது? இது, முழுக்க முழுக்கப் பேராசையால் மட்டுமே விளைந்த போர்.’’

‘’சரி,! நான் ஒத்துக்கொள்கிறேன், இப்போது என்னுடன் வாருங்கள்.’’

‘’நாங்கள் பணிமகளிராக இருக்க மாட்டோம்,அப்படி வாழவும் மாட்டோம்.’’

‘’இல்லையில்லை, நீங்கள் உத்தரைக்குத் தோழிகளாகத்தான் இருப்பீர்கள்.’’

இப்படிப்பட்ட அடிப்படையில்தான் அந்த ஐந்து பெண்களும் உத்தரையிடம் வந்து சேர்ந்தார்கள்.

சுபத்திரை மிகுந்த வருத்தத்தோடு அவர்களிடம் இப்படிச் சொன்னாள்.

‘’அறிமுகமான முகங்களைப் பார்த்தாலே அவள் சுருங்கிப்போகிறாள். துயரம் அவளை வாயடைக்க வைத்திருக்கிறது. நீங்கள் அரசதருமத்தைக் கடைப்பிடிக்காத வெளியுலகிலிருந்து- சாமானிய மனிதர்களின் உலகத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். அவளோடு கூட, அவளுக்குத் துணையாக இருங்கள்.’’

‘’எங்கள் வேலை என்ன?’’

‘’குறிப்பாக எதுவும் இல்லை.அவளுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள், பாவம் என் குழந்தை, முழுமையாக மலர்ச்சியடைந்த தாமரையைப்போல் இருந்தாள், இப்போதோ…துக்கத்தின் கொடிய நெருப்பில் வாடி உதிர்ந்து கொண்டிருக்கிறாள்.’’

உத்தரை அப்படியே அசையாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். இலேசாக முகம் சுளித்தபடி வானத்தையே வெறித்துப் பார்த்தாள்.

‘’வருத்தம் அவளைக் கல்லாக்கி விட்டிருக்கிறது.’’

’’ஆமாம், எங்களுக்குப் புரிகிறது.’’

‘’நீங்கள் குருஜங்கலைச் சேர்ந்த பெண்களா?’’

‘’ஆமாம் தாயே, நாங்கள் குருஜங்கலைச் சேர்ந்த பெண்கள்தான், விதவைகள்.’’

மற்ற மூத்த அரசிகளும் உள்ளே வந்தார்கள்.

‘’உங்கள் பெயரென்ன,’’ என்றாள் துரௌபதி.

‘’நான் கௌதமி, இதோ என் கையைப்பிடித்துக்கொண்டிருக்கும் இவள் கோமதி. புருவங்களுக்கு நடுவே சிவப்புப் புள்ளியோடு இருப்பவள் யமுனா. தாடையில் கையை வைத்துக்கொண்டிருக்கும் இவள் விதாஸ்தா, இது விபாஷா, விதாஸ்தாவின் சின்னத் தங்கை.”

சட்டென்று பேச ஆரம்பித்தாள் உத்தரை.

”எல்லாமே நதிகளின் பெயர்கள்…என்ன அழகு..? அரசி, யார் இவர்கள்?”

துரௌபதி மிகுந்த பரிவோடு சொன்னாள்,

”இவர்களெல்லாம் உன் தோழிப்பெண்கள் கண்ணே. அவர்கள் உன்னுடனேயே இருப்பார்கள்,உனக்கு என்ன வேண்டுமோ சொல்,அவர்கள் செய்வார்கள்.”

அரண்மனை அந்தப்புரத்தில் உத்தரை இருக்குமிடத்துக்கு அந்த ஐந்து பெண்களும் வந்து சேர்ந்தது அப்படித்தான்.

காலம் செல்லச்செல்ல அவர்கள் பிரிக்க முடியாதவர்களாகி விட்டனர். அவர்களோடு அரட்டையடிப்பதிலும் பேசுவதிலும் உத்தரை படிப்படியாக சற்று இலகுவாக உணரத் தொடங்கினாள். எத்தனையோ நாட்களாக அவள் கடந்த காலத்திலேயே உறைந்து போனபடி, பேச்சற்றவளாய் மௌனமாகவே இருந்திருக்கிறாள். சிறுமிப்பருவம் இப்போதுதான் அவளிடமிருந்து நழுவிப்போயிருக்கிறது, அத்தனை இளம்பெண் அவள், மேலும் கருவை வேறு சுமந்து கொண்டிருப்பவள். அபிமன்யுவின் இழப்பை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

துரௌபதி, சுபத்திரை என்று அவளுடைய மாமியார்கள்தான் எத்தனை கவலையோடு இருந்தார்கள்?

உத்தரைக்கு ஒரு மகன் பிறந்தால் அவன் அரசனாகி விடுவான். அதனால் உத்தரையை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் தேவை. ஆனால்…அது எவ்வாறு சாத்தியம்?  அவள் ஒரு குழந்தையும் இல்லை, சிறுமியும் இல்லை..குறுகிய காலம்தான் என்றாலும் ஓர் ஆணின் காதலை வேறு சுவைத்துப் பார்த்திருப்பவள்.

அந்த ஐந்து பெண்களும் அங்கே வந்து சேர்ந்தது அவர்களுக்கு ஒரு வகையில் ஆறுதலாக,கொஞ்சம் கவலை குறைந்தது போல் இருந்தது.

அந்தச் செய்தியைக்கேட்டதும் குந்தியும் கூட,

”நல்லது, அவர்கள் முற்றிலும் வித்தியாசமான வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் துணையாக உடன் இருப்பதால் உத்தரையின் மனம் கொஞ்சம் இலேசாகும்,” என்றாள்.

காலப்போக்கில் அப்படித்தான் நடந்தது. அவர்கள் இல்லாமல் உத்தரையால் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. ஆற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் கொண்டுவந்தபிறகுதான் அவள் குளிப்பாள். அதுதான் ஆரோக்கியம் என்றார்கள் மாமியார்கள். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அதுவே நல்லது…இப்படி விதம் விதமான அறிவுரைகள்..! கருவுற்றிருக்கும் ஒரு தாய் அந்த ஆலோசனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டு அவற்றின்படியே நடக்க வேண்டும்.

கௌதமி கன்னத்தில் கை வைத்தபடி தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.

”அப்பாடி..! இத்தனை மாமியார்களா? எப்படித்தான் ஞாபகம் வைத்துக்கொள்கிறாயோ?”

”அது இருக்கட்டும், உங்கள் வழக்கத்தில் எப்படி..?’’

”ஒரே ஒரு மாமியார்தான். ஒருவன் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டால் அப்போது அவனது மருமகளுக்கு இரண்டு மாமியார்கள் இருப்பார்கள்.”

’’ஆமாம்… எனக்கு நிறைய மாமியார்கள்தான். மேலும் கௌரவர்களுடைய விதவை மனைவிகள் வேறு இருக்கிறார்களல்லவா? அவர்களையும் கூட நீங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.”

”அவர்களுமா உன் மாமியார்கள்?”

”நிச்சயமாய்..”

”சே…ஆனாலும் ரொம்ப அதிகம்தான். சரி.., இந்தப்புதிரை விடுவிக்க முடிகிறதா பார்.’’

’காலில்லை ஆனால் பறக்கும்

காதில்லை ஆனால் கேட்கும்

கண்ணில்லை ஆனால் பார்க்கும்”

என்ன தெரிகிறதா”

‘’இல்லை, என்னால் ஊகிக்க முடியவில்லை’’

அந்தப் பெண்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

‘’மனித மனம்தான் அது. அது எங்கே வேண்டுமானாலும் போகும்,எதையும் கேட்கும், எதைப்பற்றியும் புரிந்து கொள்ளும். நீ உன் கண்ணைக்கட்டி வைத்திருந்தாலும் கூட உன் மனத்தால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியும்.”

’’ஆமாம்..எவ்வளவு உண்மை! ”

உத்தரை கைகளைத் தட்டிக்கொண்டு குழந்தையைப்போல் சந்தோஷமாகச் சிரித்தாள்.

’’அரச குலத்து மருமகளே, நீ உண்மையிலேயே வளராத ஒரு குட்டிப்பெண்தான்,” என்று யமுனா பரிவோடு சொன்னாள்,

”எனக்கு இன்னும் கூட ஏதாவது சொல்லுங்களேன்”

”கோமதி, தான் சொல்வதாய்ச் சைகை காட்டினாள்.

”ம்..எல்லோரும் கேளுங்கள்,

முதலில் தண்ணீரில் பிறக்கிறது,

பிறகோ நிலத்தில் பிறக்கிறது,அது என்ன”

”பொறுங்கள்…பொறுங்கள், அது என்னவென்று சொல்ல முடியுமா பார்க்கிறேன்.”

”முட்டாள் பெண்ணே, அதுதான் முத்து. முதலில் அது தண்ணீரில் சிப்பிக்குள் ஜனிக்கிறது,பிறகு சிப்பியைப் பிளந்து வெளியில் எடுக்கும்போது அடுத்த தடவை நிலத்தில் பிறக்கிறது”

உத்தரையின் சிரிப்பொலி சுபத்திரைக்குப் பெரும் ஆறுதலளித்தது. அந்தப் பெண்களை அழைத்து வந்தது மத்ரஜா என்பதால் அவள் மத்ரஜாவுக்கு வைரம் பதித்த வளையைப் பரிசாகத் தந்தாள்.

”கௌதமிதான் கெட்டிக்காரியாக இருக்கிறாள். அவள் சொன்னால் அதை அவர்கள் எல்லோருமே கேட்கிறார்கள்,” என்றாள் மத்ரஜா.

”அப்படியே இருக்கட்டும்..அவர்களை நகையால் மூழ்கடித்து விடுகிறேன்..அவர்களுக்கு என்ன வேண்டுமோ கொடு.”

அவர்கள் பல வண்ண நூல்களைக் கேட்டார்கள். புல்பூண்டுகளையும் செடிகொடிகளையும் பறித்து வந்து தங்கள் திறமையான விரல்களால் கூடை முடைந்தார்கள், பாய் பின்னினார்கள்,கயிறு திரித்தார்கள்.

அவர்களின் தோல் நன்றாக விளைந்த கோதுமையின் நிறத்தில் இருந்தது; நீலக்கண்கள்; செம்பழுப்பு நிறமான முடி, அதை இறுகப் பின்னல் போட்டு வைத்திருந்தார்கள்; உடை மட்டும் கறுப்புத்தான். ஐந்து பேருமே அப்படித்தான். உள்ளே இருக்கும்போது அவர்கள் தலையை மூடிக்கொள்வதில்லை; தண்ணீரெடுக்க வெளியே செல்லும்போது முடியின் மீது ஒரு கறுப்புத் துணியைச் சுற்றிக்கொள்வார்கள்., தங்கம் போலப் பளபளக்கும் பித்தளைச்செம்புகளில் அவர்கள் தண்ணீர் கொண்டு வருவார்கள். நறுமணம் கொண்ட மூலிகைத் தைலங்களால் உத்தரையின் உடலில் தேய்த்து விடுவார்கள். அவர்களது தொடுகையே அவளது இறுக்கத்தைத் தளர்த்தி விடும். குளியலுக்குப் பிறகு, தாழ்வான படுக்கை ஒன்றில் அவள் படுத்துக்கொள்வாள்.

தன் மருமகளுக்குத் துணையாக இருப்பதற்கு சுபத்திரை வரும் நேரம் அதுதான். அப்போது அந்தப்பெண்கள் சாப்பிடப்போய் விடுவார்கள். பிறகு அந்தப்புரத் தோட்டத்தில் போய் உட்கார்ந்து விடுவார்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளிகளும், பூக்கள் நிறைந்த மாதவிக்கொடிகள் சுற்றிப் படர்ந்திருக்கும் ஒரு சில மாமரங்களும் கொண்ட அந்தத்தோட்டத்தில் அவர்கள் தங்கள் ஈரத் துணிகளை வெயிலில் காய வைத்துக்கொள்வார்கள். தலைமுடியை உலர்த்திக் காயவைத்தபடி ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

‘’என்னிடம் அவர்கள் இந்த அளவுக்குப் பேசுவதில்லை,’’ என்று வருத்தத்தோடு சொன்னாள் உத்தரை.

‘’உன்னிடம் அவர்கள் எத்தனை பிரியமாக இருந்தாலும் முழுமையான  சுதந்திரத்தோடு ஒருபோதும் இருக்க முடியாது.’’

‘’எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.’’

இன்று அந்தப் பெண்கள் வட்டமாக அமர்ந்தபடி ஈரத்தலையைக் கை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டே வானத்தைப் பார்த்தபடி ஏதோ ஒரு இராகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

உத்தரை அவர்களையே பார்த்தபடி இருந்தாள்..ஏதேதோ எண்ணங்கள் அவள் மனதுக்குள் மேகம் போல சஞ்சரித்துக்கொண்டிருந்தன. 

இப்போது இந்தக் கணத்தில் யுதிஷ்டிரனே அரசன். கௌரவர்களின் மீதான வெற்றி, முழுக்க முழுக்க மூர்க்கத்தனமானது. கௌரவப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பேரழிவின் கலக்கம் நீங்காதவர்களாகத்தான் இன்னும் கூட இருக்கிறார்கள்.

குந்தி, ஒரு பிராயச்சித்தம் செய்வது போல காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் பணிவிடை செய்கிறாள். அப்போது அவள் கரங்கள் அவர்களிடமிருந்து மன்னிப்பை யாசிக்கின்றன. தன்னைத்தானே நாடு கடத்திக்கொண்டது போல, எங்கோ தொலைவிலிருந்து தன் மகனின் வெற்றிப் பெருமிதத்தைப்பார்க்கிறாள் அவள்.

கௌரவர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள். வெள்ளுடை தரித்த அவர்களது விதவை மனைவிகள் அமைதியான நிழலுருவங்கள் போலத் தங்கள் அன்றாட நியமங்களைச் செய்யபோகிறார்கள்.எண்ணற்ற விரதங்கள், பூஜைகள், அந்தணர்களுக்குச் செய்யும் பசு தானம்.! அத்தனை  இளம் வயதில் அவர்களது வாழ்க்கை வெறுமையாகிவிட்டது. இப்போது அவர்கள் முன்பு விரிந்து கிடப்பது, முடிவே இல்லாத ஒரு பாலை. அதில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் துயரத்தின் தகிப்புக் கொண்டதுதான்.

யுதிஷ்டிரன் அரசனான பின்பும் கௌரவர்களின் தந்திர வேலைகளையும்,அவர்கள் செய்த மிருகத்தனமான கொடூரங்களையும் பற்றித் தொடர்ந்து கசப்புணர்ச்சியோடு பேசிக்கொண்டே இருப்பாள் துரௌபதி.

ஒரு நாள் மெதுவான குரலில் குந்தி அவளிடம் இவ்வாறு சொன்னாள்.

‘’பாஞ்சாலி, இப்போதாவது சற்று அமைதி கொள். கணக்கற்ற அநீதிகளையும் அவமானங்களையும் நீ சுமந்தாய். அதற்குப் பழி வாங்கும் வகையில் கௌரவ குலம் முழுவதுமே பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது. உன் நெஞ்சில் கையை வைத்து இப்போது என்னிடம் சொல், நீ , உன் பழி உணர்ச்சியை முழுமையாகத்  தீர்த்துக் கொண்டுவிட்டாய்தானே? கௌரவ குலத்து ஆண்களெல்லோரும் அழிந்து விட்டார்கள். ஆனால்….தங்கள் கணவர்களையும் மகன்களையும் இழந்து அநாதைகளாக இருக்கும் கௌரவப் பெண்களை நீ எப்போதாவது ஏறெடுத்துப் பார்த்துண்டா? அவர்கள் இதற்கு எந்த வகையில் பொறுப்பாளிகள் ஆவார்கள் என்று என்னிடம் கொஞ்சம் சொல்லேன்’’

துரௌபதி அமைதியாகவே இருந்தாள்.

‘’அவர்களிடம் சற்றே பரிவு கொள்ளவும், இரக்கம் காட்டவும் முயற்சி செய். அவர்களிடம் கொஞ்சம் பிரியமாக இருக்கப் பார், அப்போது அது..,உன் இதயத்தை எப்படி மென்மையாக்குகிறது என்பதைப் புரிந்து கொள்வாய்.’’

இல்லை..! அப்படிப்பட்ட நிலையிலெல்லாம் துரௌபதி இல்லை. ஆனால் இப்போதெல்லாம் அவள் குறைவாகவே பேசினாள், பெரும்பாலும் மௌனமாகவே இருந்தாள். அமைதி என்ற திரையால் அவள் தன்னைப் போர்த்திக்கொண்டு விட்டாள்.

சுபத்திரையால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. தன் நெற்றியில் அறைந்து கொண்டு அழுது புலம்பினாள் அவள். மகன்களெல்லாம் மடிந்து போகத் தந்தைகள் மட்டும் உயிரோடு!  மருமகள்களெல்லாம் கணவர்களை இழந்திருக்க, மாமியார்கள் இன்னும் சுமங்கலிகளாக!

காந்தாரியின் சொற்கள் அவள் நினைவுக்கு வந்தன. மூர்க்கமான இந்த யுத்தத்துக்கு வாசுதேவ கிருஷ்ணரைப் பொறுப்பாக்கிப் பேசினாள் அவள். ’பேரரசி’ காந்தாரி சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் அவள். இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான போருக்குக் காரணமாக இருந்த பாவத்துக்காக யாதவ குலம் முழுவதுமே அழிந்து விடத்தான் போகிறது

‘’இறந்தகாலப் பெருமைகளை எதுவும் மீட்டெடுத்து விடப்போவதில்லை. இனிமேல் வரலாறு என்பதே சாவும் அழிவுமாக மட்டும்தான்  இருக்கப்போகிறது’’

உத்தரையுடன் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பேசுவாள் சுபத்திரை. அபிமன்யு இறந்து விட்டான். சுபத்திரைக்கோ இன்னமும் கணவனின் துணை இருக்கிறது. மேலும் உத்தரை அபிமன்யுவின் குழந்தையை வேறு வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.

’அது பெண்ணாக இருந்தால் நல்லது, பையனாக இருந்து விட்டால் அவனும் போருக்குப்போக வேண்டியதாகி விடும்’ என்று நினைத்துக்கொண்டாள் சுபத்திரை.

ஆனால் பிள்ளைப்பேறு பார்க்கும் அனுபவசாலியான மருத்துவச்சியோ, 

‘’அவளைப் பார்க்கும்போது உங்களுக்குப் பிறக்கப்போவது பேரனாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. நான் சொல்வது மட்டும் சரியாக இருந்து விட்டால் எனக்கு நீங்கள் செழிப்பான ஒரு துண்டு நிலம் தந்து விட வேண்டும். என் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை என் குழந்தைகளோடும் அவர்களது குடும்பத்தாரோடும் கழிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று சொன்னாள்.

உத்தரையால் தூங்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

‘’என்ன பார்க்கிறாய் கண்ணே?’’

‘’கௌதமியையும் மற்றவர்களையும்தான், அவர்கள்தான் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள் அம்மா!’’

‘’குடிமக்களும் ஆள்பவர்களும் எப்படியம்மா ஒரே மாதிரி இருக்க முடியும்?’’

‘’ஐந்து பேர், ஆனால் அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறார்கள். உறங்குவது,விழிப்பது,சாப்பிடுவது,குளிப்பது என்று எல்லாவற்றையுமே சேர்ந்து செய்கிறார்கள். விடியற்காலை நேரத்தில் என்னைத் தோட்டத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கே உள்ள புல்வெளியில் வெறுங்காலால் நடக்க வைக்கிறார்கள். துணி மடிக்கவும் துளசிச்செடிக்கு நீரூற்றவும் சொல்கிறார்கள். இதெல்லாம் ஏனென்று தெரியுமா?’’

‘’ஏன் கண்ணே’’

‘’கருவுற்ற பெண்கள் வெறுமே படுத்துக் கிடந்து ஓய்வெடுக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லை. சின்னச்சின்ன வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அவர்கள் சுறுசுறுப்பாகத்தான் இருப்பார்களாம். குழந்தைகளைக் கருச்சுமப்பது பெண்களுக்கு இயற்கை வகுத்திருக்கும் விதி மட்டும்தான், அதற்காக அவள் எப்போதும் தன் உடலைச் சீராட்டிக்கொண்டே பொழுது கழிக்க வேண்டுமென்பதில்லை என்று அவர்கள்  சொல்கிறார்கள். நான் சுறுசுறுப்பாக இருந்தால்தான் குழந்தைப் பேறு எனக்கு எளிதாக இருக்குமாம்…மருத்துவச்சியும்  அப்படித்தான் சொல்கிறார்.. சே..அவர்கள் ஐந்து பேரும்தான் எப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?’’

‘’குழந்தாய், அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமானது. அவர்களின் மொழியும் வித்தியாசமானதுதான். தங்கள் சொந்த மொழியில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடிவதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.’’

‘’அவர்கள் பாடுவது என்ன பாடல்? நானும் அது என்ன என்று கண்டுபிடிக்கப்பார்க்கிறேன்…ஆனால் ஐயோ ஐயோ என்பதற்கு மேல் எனக்கு வேறெதுவும் விளங்கவில்லை.’’

‘’அவர்கள் பாடவில்லை மகளே…அவர்கள் புலம்பி ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’’

‘’உங்களுக்கு அவர்கள் மொழி தெரியுமா?’’

‘’நம்முடைய தாதிமார்கள் பெரும்பாலும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள்தான், எனக்கு ஓரளவு அவர்கள் பேசுவது புரியும். அது ஒரு ஒப்பாரிதான்.’’

‘’ஆனால் பாட்டுப்போலத்தானே…?’’

‘’ஆமாம், இறந்தவர்களுக்காகப் புலம்புவதையும் கூடப் பாட்டாகப் பாடலாம், அதிலுள்ள வார்த்தைகள் உனக்கு விளங்குகிறதா.’’

‘’இல்லை அம்மா.’’

‘’அவர்களுடைய கணவர்களும் போரில் இறந்து விட்டார்கள்.’’

‘’அப்படியா? ஐயோ!’’

‘’அவர்களெல்லாம் விவசாயிகள்,பொன்னிறமான கோதுமை, நல்ல தரமான சோளம், எண்ணெய் வித்துக்கள்,கீரைவகைகள்,இஞ்சி, மஞ்சள், கரும்பு என்று பலவற்றையும் பயிர் செய்பவர்கள்.’’

சுபத்திரை தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டபடி சொன்னாள்.

‘’அவர்கள் உணவுப்பொருட்களை வாங்க வேண்டிய அவசியமே இல்லை.குருஜங்கலின் மண் அத்தனை வளமானது.’’

‘’ஆமாம்..அப்படித்தான் சொல்கிறார்கள்.’’

‘’இவர்கள் வயல்வேலைக்குச் செல்லும்போது இவர்களின் கணவர்கள் போர்க்களத்துக்குப் போய்ச் சண்டை போடுவார்கள், பிறகு வீடு திரும்புவார்கள். இந்த முறை யாருமே திரும்பி வரவில்லை. அதற்காக வருந்தும் சோகப் பாடலைத்தான் அவர்கள் பாடுகிறார்கள்.’’

’பொன்னிற கோதுமை வயல்கள்

உழவு செய்யப்படாமல் தரிசாய்….!!

ஐயோ ஐயோ!!

ஏரும் கலப்பையும் கொண்டு

அங்கே இனி போவது யார்?

ஐயோ ஐயோ!!

விதைப்பதற்குக் காத்திருக்கின்றன

எள்ளும் கோதுமையும்

ஐயோ ஐயோ!!

விதைக்கப்படவும் 

பச்சிலைகளோடு துளிர்த்து வரவும்

அறுவடை செய்யப்படவும்

அவை விழைகின்றன…

ஐயோ ஐயோ!!

எங்கள் ஊரின் மீது 

சவத்துணி போர்த்தியது யார்?

தீபங்கள் ஏற்றப்படாமல்

எங்கள் குடில்கள்

இருண்டு கிடக்கின்றன

குழந்தைகளின் கண்களில்..

தாய்மார்களின் விழிகளில்

விதவைகளின் இமையோரம்

உறைந்திருக்கும் துயரத்தைக் காணுங்கள்!

போர்

ஊரையே சுடுகாடாக்கி விட்டதே!

ஐயோ ஐயோ!!’’

உத்தரை குழப்பத்தோடு அவளைப் பார்த்துக் கேட்டாள்.

‘’ஆனால் அம்மா…! அந்த தர்மயுத்தத்தில் உயிர் கொடுத்தவர்கள் எல்லோருமே ’திவ்ய’ லோகத்துக்கு- சுவர்க்கத்துக்குத்தானே  போவார்கள்? இவர்களுடைய கணவர்கள் மட்டும் அங்கே போகவில்லையா என்ன?’’

’’யாருக்குத் தெரியும்..? எனக்கு உண்மையில் எதுவும் சொல்லத் தெரியவில்லை.’’

‘’என்னவோ புதிராகத்தான் இருக்கிறது. இவர்கள் இங்கே ஏன் வந்தார்கள்?’’

சுபத்திரை தன் கவனத்தை வேறெங்கொ லயிக்கவிட்டபடி பதிலளித்தாள்.

‘’ஒருவேளை அவர்கள் புதுமணப்பெண்களாக இருக்கலாம்,ஒருவேளை எங்கோ தள்ளி இருந்தபடி அவர்கள் போரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம், ஒருவேளை தங்கள் கணவர்களின் உடல்களைத் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். அரசதர்மத்தைச் சேர்ந்தவர்கள், அரச குலத்தவர்கள்…, சாமானிய மக்களின் வாழ்க்கை முறையைப்பற்றியோ… பொதுவான மனித குலத்தைப் பற்றியோ அறிந்து கொள்ள எப்போதுதான்  முயன்றிருக்கிறார்கள்?, அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டா என்ன.’’

‘’அப்படியானால் அவர்களின் கணவர்கள்….- அவர்கள் சுவர்க்கலோகத்துக்குப் போகவே இல்லையா?’’

‘’எனக்குத் தெரியவில்லை குழந்தாய். இப்படிப்பட்ட எண்ணங்களால் உன் மனதைத் தேவையில்லாமல் தொந்தரவு செய்து கொள்ளாதே அதுவும் நீ இப்போது இருக்கும் நிலையில்..’’

‘’அம்மா,அவர்கள் சொல்வது உண்மையா?’’

‘’என்ன சொல்கிறார்கள்?’’

‘’தீ மூட்டப்பட்ட சிதைகள் வெகுநாட்கள் எரிந்து கொண்டிருந்ததால் பூமி தகிக்கிறதென்றும் பாறையைப்போல இறுகிவிட்டதென்றும் சொல்கிறார்கள்.’’

‘’இருக்கலாம்.’’

‘அவர்கள் சுற்றுவழியாகத்தான் நதிக்குப் போகிறார்கள். நேர்வழியில் போனால் அவர்கள் பாதங்களால் அந்த வெம்மையைத் தாங்க முடியாது.’’

கண்ணீர் வற்றிப்போனவளாய் நடுங்கிக்கொண்டிருந்தாள் சுபத்திரை.

‘’சரி நீ போய்த் தூங்கு கண்ணே. சிறிது ஓய்வெடுத்துக்கொள்.’’

என்று மிகுந்த பிரியத்தோடு உத்தரையிடம் சொன்னாள் அவள்.

ஆரம்பத்திலெல்லாம் உத்தரையால் தூங்க முடிந்ததே இல்லை. விளக்குகள் எரியாவிட்டால் எவரோ உலுக்கி விட்டதைப்போல அவள் விழித்துக்கொண்டு விடுவாள். குருதியில் தோய்ந்த அபிமன்யுவின் உடலால் மட்டுமே அவள் கனவுகள் நிறைந்திருந்தன; கொஞ்சம் கூட சளைக்காமல் தன் புடவை முந்தானையால் அவனது காயங்களைத் துடைத்து விட்டுக்கொண்டே இருப்பாள் அவள்…

இப்போதெல்லாம் அவளால் இரவு முழுவதும் தூங்க முடிகிறது. அந்த ஐந்து பெண்களும் அவள் படுக்கைக்குக் கீழே தரையில் விரிப்பு போட்டுப் படுத்திருப்பார்கள். கௌதமியின் கைப்பிடி அவளை விட்டு ஒருபோதும் விலகாது. அவர்களுடைய கணவர்களும் இறந்துதான் போயிருக்கிறார்கள்,ஆனாலும் அவர்கள் உறங்கி விடுகிறார்கள்.

உறக்கத்தில் உத்தரை இப்படி முணுமுணுத்தாள், ‘’உங்கள் பெயர்கள்தான் எத்தனை அழகு?’’

‘’எல்லாம் நதிகளின் பெயர்கள், உணவு தானியங்களின் பெயர்கள்…ஆமாம் உத்தரைக்குப் பிறக்கப்போவது ஆணா பெண்ணா? அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் இருக்கும்?’’

‘’உன் குழந்தையை நீ எப்படிக் கூப்பிடப்போகிறாய்?’’

‘’அது என் கையில் இல்லை.’’

‘’வேறு யார் அதை முடிவு செய்வார்கள்?’’

‘’ஐயோ..அது மிகவும் விஸ்தாரமான ஒரு சடங்கு. பூஜைகள், யாகங்கள், அக்கினி தேவனுக்குக் காணிக்கைகள், நிவேதனங்களென்று…குடும்பத்தில் இருக்கும் மூத்த ஆண் உறுப்பினர்கள் கூடி உட்கார்ந்து அதைப்பற்றி விவாதிப்பார்கள்,சோதிடர்களும் ஆச்சாரியார்களும் அதன் ராசிபலனைக் கணித்து ஜாதகம் எழுதுவார்கள். அந்த முறையில்தான் குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள்.’’

‘’கடவுளே…உங்கள் வாழ்க்கைமுறைகள்தான் எவ்வளவு வித்தியாசமானவை?’’

’’இவையெல்லாம் சடங்குமுறைகள். இந்த மாதிரி எதுவும் உங்களுக்கும் உண்டா?’’

’’நிச்சயமாக எங்களுக்கும் உண்டு. தானியத்தைத் தராசின் ஒரு தட்டில் வைத்துக் குழந்தைக்கு எடை பார்ப்பார்கள். யாராவது ஒரு பாட்டனார் அதற்குரிய பெயரைத் தேர்ந்தெடுப்பார். அதன் தலை மொட்டையடிக்கப்படும். பிறகு சூரிய வெப்பத்தில் சூடேற்றிய நீரில் அதைக் குளிக்க வைப்பார்கள். இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைப்பார்கள், பெண்கள் பாடுவார்கள். பிறகு குழந்தையின் தாய்மாமா தன் சுண்டு விரலால் அதற்கு ஒரு துளி நெய்ப்பாயசம் ஊட்டி விடுவார்.’’

‘’அப்புறம்?’’

‘’குழந்தை பால் குடித்துவிட்டுத் தூங்கி விடும். கிராமத்திலுள்ளவர்களுக்கெல்லாம் விருந்து வைப்போம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பாட்டுப் பாடுவோம்,மகிழ்ச்சியாக இருப்போம்.’’

‘’பெண்களுமா?’’

‘’ஆமாம்…வேறென்ன.?.பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என்று எல்லோருமேதான். என் பெயர் ஏன் கௌதமி என்று இருக்கிறது தெரியுமா? நன்றாக விளைந்த கோதுமை நிறத்தில் நான் இருந்ததால் கௌதமி என்ற பெயர் எனக்கு இருக்கட்டும் என்றாளாம் என் பாட்டி.’’

’’உண்மையாகவே எனக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. ஆண்களும் பெண்களுமாய்ச் சேர்ந்து பாடுவதையெல்லாம் என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை,’’ என்றாள் உத்தரை.

‘’எங்கள் கிராமங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை? கோதுமைக் கதிர்கள் முற்றியதுமே அவற்றை உண்ணுவதற்காகப் பறவைகள் வந்து விடும். சிறுவர்களும் சிறுமிகளும் நாள் முழுவதும் கூச்சல் போட்டு அவற்றை விரட்டியடிப்பார்கள். பறவைகளுக்குப் பயம் காட்டுவதற்காகவே நாங்கள் மூங்கிலால் பெரிய பெரிய சோளக்கொல்லை பொம்மைகள் செய்து வைத்திருப்போம்,’’ என்று எங்கோ பார்த்தபடி தனக்குத்தானே பேசிக்கொண்டாள் கோமதி.

‘’இரவு முழுவதும் ஆண்கள் வயலில் காவல் காத்துக்கொண்டிருப்பார்கள்,’’ என்றாள் விபாஷா.

‘’அது எதற்கு?’’

‘’பயிர்களை மேய மான்கள் வந்து விடுமல்லவா, அதனால் வயலில் அவர்கள் காவல் இருக்க வேண்டும்.’’

‘’எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது.’’

‘’நீ உண்மையாகவே ஒரு அப்பாவிப்பெண்தான் ! விவசாயிகள் தானியம் தராவிட்டால் அரசர் வீட்டுக் குதிரும் கூடக் காலியாகத்தான் இருக்கும்.’’

‘’மிரண்டு விழிக்கும் ஒரு மான்…! பார்ப்பதற்கு அது எத்தனை அழகாக இருக்கும்?’’

’’வயலைக் காவல் காக்க ஆண்கள் மட்டுமல்ல,பெண்களும் போவதுண்டு. என் அம்மா ஒரு முறை ஈட்டி எறிந்து ஒரு மானைக் கொன்றிருக்கிறாள். என் அம்மா நிஜமாகவே வலிமையானவள். கனமான ஆட்டுரலைத் தனி ஒருத்தியாகவே தூக்கி விடுவாள்.’’

‘’ஆனால்…ஈட்டி, அது ஆண்களின் ஆயுதம் இல்லையா?’’

கோமதி வருத்தத்தோடு புன்னகைத்தபடி சொன்னாள்.

‘’அது காலாட்படை வீரனுக்குரிய ஆயுதம் இளவரசி. விவசாயிகள்தான் காலாட்படை வீர்களாய் வருபவர்கள்.’’

களிமண்ணால் செய்த ஒரு பறவைக்குச் சிறகுகளைச் செய்தபடியே, ‘’அது பெண்ணுக்குரிய ஆயுதமும் கூடத்தான்’’ என்றாள் விதாஸ்தா.

விதாஸ்தாவின் விரல்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பவை. ஆற்றங்கரையிலிருந்து களிமண் எடுத்து வந்து பறவைகள், குதிரைகள், மான், வண்டிகள், குழந்தைகளோடு இருக்கும் அம்மாக்கள் என்று சின்னச்சின்னக் களிமண் பொம்மைகளை அவள் செய்துகொண்டே இருப்பாள். அவற்றையெல்லாம் வெயிலில் காய வைத்து வண்ணம் தீட்டுவாள். உத்தரைக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்காக அந்தச் சிறிய பொம்மைகளைச் செய்து கொண்டிருந்தாள் அவள்.

கோமதி மறுபடி ஒரு தரம் சொன்னாள்.

‘’வில்லோ அம்போ வேறெந்த ஆயுதமோ இல்லை. காலாட்படை வீர்களின் ஒரே ஒரு ஆயுதம் ஈட்டி மட்டும்தான்.’’

பேசும்போது பார்வையைத் தாழ்த்தி வைத்துக்கொள்வது அவள் வழக்கம்.  இருள் திரை போர்த்தியது போல அவள் பார்வையும் ஏதோ ஒரு முக்காட்டைக் கொண்டு மூடி வைத்தது போலவே இருக்கும். இமயமலைப் பகுதிகளிலிருக்கும் ஆழங்காண முடியாத ஏரிகளைப்போன்றவை அவள் கண்கள். சலனமற்ற அமைதியோடு கூடிய அந்த ஏரிகளின் ஆழங்களை மனிதர்களால் ஒருபோதும் அளவிட முடிந்ததில்லை. குழந்தைப்பருவத்தில் தன்னை வளர்த்த செவிலித்தாயிடமிருந்து இத்தகைய ஏரிகளைப்பற்றி உத்தரை கேள்விப்பட்டதுண்டு.

‘’ஈட்டியை எப்படிப் பயன்படுத்துவது என்று பெண்களுக்குத் தெரியுமா?’’

‘’ஒவ்வொரு வீட்டிலும் அவை இருக்கும். ஆண்கள் போருக்குப் போகும்போது பெண்கள் வீட்டைப் பாதுகாப்போம்.’’

‘’ஆனாலும் கூட..பாவம், மானின் மீது போய் விதாஸ்தாவின் அம்மா ஈட்டி எறிந்து விட்டார்களே?’’

‘’இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது இளவரசி? அரண்மனை  அடுப்பங்கரையில் தினமும் மானிறைச்சி தயாராகிறது. மான்தோலைக் கொண்டுதான் காலணிகள், விரிப்புகள் எல்லாம் செய்கிறார்கள். அது போலவே நாங்களும் மான்களையும், பறவைகளையும் வேட்டையாடுகிறோம், அவற்றின் இறைச்சியையும் சாப்பிடுகிறோம்’’

‘’அப்படியா, இதோ பாருங்கள், எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது. அதனால்தான் இப்படிப்பட்ட முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறேன். என் மீது தயவு செய்து கோப்படாதீர்கள்.’’

‘’நீங்கள் ஏன் இளவரசி அந்தப்பெண்களோடு இவ்வளவு நெருக்கமாய்ப் பழக வேண்டும்? வரவர அவர்களின் துடுக்குத்தனம் அதிகமாகி விட்டது. அரசியிடம் சொல்லி உங்களுக்குப் புதிய பெண்களை ஏற்பாடு செய்கிறேன்,’’ என்றாள் மத்ரஜா.

‘’கூடவே கூடாது…அப்படிச்செய்ய வேண்டாம்.’’

‘’ஏற்கனவே வயிற்றில் குழந்தையோடு இருக்கிறீர்கள். சமீபத்தில்தான் விதவையாகவும் ஆகியிருக்கிறீர்கள்,…இந்த நேரத்தில் போய்..’’

’’உடனே வெளியே செல்லுங்கள்,என் முன் நிற்காதீர்கள்.’’

                       ******************************

விதவை என்ற வார்த்தையே அவளை அச்சுறுத்துவதாக இருந்து. வெள்ளுடை அணிந்திருக்கும் கௌரவ விதவைகளின் நினைவு வரும்போதெல்லாம் அவள் பயந்து நடுங்கினாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்து சீர் செய்து கொள்ளக்கூட அவளால் முடியவில்லை.

பிருகந்நளையிடம் நடனம் கற்றுக்கொண்டபோது அவள்தான் எப்படி சிரித்துக் களித்தபடி இருந்தாள்? சின்னச்சின்னக் குறும்புகள் செய்து கொண்டு…தன் பொம்மைகளுக்கு மிக நேர்த்தியான பட்டுத் துணியால்தான் உடை தைக்க வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த அந்த உத்தரை எங்கே?

அந்த உத்தரையின் நீளமான தலைமுடி தளர்வாகத் தொங்க விடப்பட்டிருக்கும், காற்றுப்போல அவள் சுழன்றாடும்போது அதுவும் அவளுடன் கூடவே ஆடும். அந்த உத்தரை, மணிக்கணக்கில் ஊஞ்சலாடவும், நேரம் போவது தெரியாமல் தோட்டத்தில் விளையாடவும் ஆசைப்படுவாள். அந்த உத்தரை பளீரென்ற வண்ணத்தில் சோளியும்,காக்ரா பாவாடையும்,துப்பட்டாவும் அணிந்திருப்பாள்.

இந்த உத்தரையோ வெண்மை நிறத்தில் ஆடை உடுத்திக்கொண்டு எந்த அணிகலன்களும் அணிந்து கொள்ளாமல் இருக்கிறாள். அவளது கூந்தல் அவள் தோள்களின் மீது ஒரு சுமை போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்த உத்தரையின் கண்களும் உதடுகளும் புன்னகை செய்யக்கூட மறந்து விட்டன. இவள் தன் காலடிகளைக்கூட பயத்தோடும் தயக்கத்தோடும் மட்டுமே எடுத்து வைக்கிறாள். இப்படி எத்தனை காலம்தான் இவளால் தாக்குப் பிடிக்க முடியப்போகிறது? கண்ணாடியில் தெரியும் வித்தியாசமான இந்த பிம்பம் எத்தனை காலம் விரட்டிக்கொண்டிருக்கப்போகிறது அவளை?

அவளுக்குப் பிறக்கும் குழந்தை அதிகபட்சம் போனால் ஒரு வருடம் வேண்டுமானால் அவளோடு இருக்கும். பிறகு பாலூட்டும் கைத்தாய்கள் அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.அரச குடும்பத்துக் குழந்தைகள் தங்கள் சொந்த அன்னையரால் ஒருபோதும் வளர்க்கப்பட்டதில்லை.

அதன் பிறகு அவள் அனுசரிக்க வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள், நோன்புகள், சுய விருப்பங்களைத் துறந்து விட்டுச்செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் என்று எல்லாம் வரிசையாக ஆரம்பிக்கும்.

ஆறே ஆறு மாத மண வாழ்க்கை ! அவளது சந்தோஷம்தான் எப்படிப் பறந்து போய்விட்டது?

எவ்வளவு இளமையான மணமகனும்,மணமகளும்! புதுமணப்பெண்ணாக அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தபோதுதான் எத்தனை ஆரவாரம்?

மாப்பிள்ளை,பெண் இருவரையும் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள் குந்தி.

‘’நான் குழந்தையாக இருந்தபோது மண் பொம்மைகளோடு விளையாட ஆசைப்படுவேன், இதோ என் உயிருள்ள பொம்மைகள்’’என்றாள்.

அங்கிருந்த அனைவருக்குமே உயிரான கண்மணியாக இருந்தாள் உத்தரை.

‘அது எப்படி ஒரு குதூகலமான திருமணம்? இப்போதோ எல்லாமே ஒரு கனவு மட்டும்தான். சிறுவயதில் கேட்ட மாயாஜாலக் கதைகளைப் போலத்தான்’ என்று தனக்குள் முனகிக் கொண்டாள்.

’அந்தத் திருமண மண்டபம்தான் எப்படிப்பட்ட ஒரு விழாக்கோலத்தைப் பூண்டிருந்தது? அங்கே ஒலித்த இசைதான் எத்தனை இனிமையாக இருந்தது? அரண்மனைக்கு வெளியே ஒரு உற்சவம் நடப்பதைப் போலல்லவா கொண்டாட்டமாக இருந்தது! நாடோடிப் பெண்களும் ஆண்களும் கவர்ச்சியான அழுத்தமான வண்ணங்களில் உடையணிந்து கொண்டு எப்படிக் களிப்போடு நடனமாடினார்கள்? கழைக்கூத்தாடுபவர்கள்,கரடியாட்டம் ஆடுபவர்கள்,அரக்கு வளையல் விற்பவர்கள் என்று ஒரு திருவிழாச் சந்தையைப்போல் அல்லவா அது இருந்தது?’

’திருமண மண்டபத்திற்குள் தீ மூட்டி வேள்விச்சடங்கு நடந்தது. நெய்யில் ஊறிய சுள்ளிகளால் தீச்சுவாலை காற்றில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அரசகுலத்துப் பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். பாண்டவர்களின் பட்டத்து அரசியான துரௌபதியிடமிருந்து உத்தரையால் தன் பார்வையை அகற்றிக்கொள்ள முடியவில்லை.அவளது பெருமிதம், கம்பீரம், நளினம், அழகு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மற்றவர்களைக் கூச்சமடைய வைத்துக்கொண்டிருப்பது போலிருந்தது.’

இவையெல்லாம் உத்தரையின் வாழ்க்கையிலேதான் நடந்திருக்கிறதா? அவளது தோட்டத்திலிருக்கும் பொய்கையில் அன்னங்கள், அரச கம்பீரத்தோடு நீந்திக்கொண்டு போகும். தந்தை வீட்டில் இருந்தபோது அவளும் கூட அவைகளைப்போலத்தானே சுதந்திரமாக பெருமிதத்தோடு இருந்திருக்கிறாள்

‘கனவு..! எல்லாமே வெறும் கனவுதான்!’

தந்தை வீட்டின் மேல்தளத்தில் இருந்தபடி அவளால் தொலை தூரத்து மலைத்தொடர்களைப் பார்க்க முடியும். அவர்களது நாட்டில் மலைகளும்,பாலைவனங்களும்,காடுகளும்,ஓடைகளும் இருந்தன. ஊர் ஊராய்ச் செல்லும் வியாபாரிகள், காந்தாரம்,கேகயம்,தக்‌ஷிலா,த்ரிகந்தா போலப் பல இடங்களிலிருந்து ஒட்டகங்களின் முதுகில் பொருட்களை எடுத்து வந்து விற்பார்கள். 

மந்திரவாதிகள் ,பாம்பாட்டிகள், நடனக்கலைஞர்கள், பொம்மலாட்டக்கார்கள் என்று பலவகைப்பட்டவர்களும் வீதிகளில் அலைந்து கொண்டிருப்பார்கள். பொம்மைகளை ஆட்டி வைத்தபடி விநோதமான கதைகளைச் சொல்லிக்கொண்டே பாட்டுப்பாடுவார்கள்.

அந்த மகிழ்ச்சியான நாட்களெல்லாம் இப்போது வெறுங்கனவாகத்தானே தோன்றுகின்றன..

சட்டென்று அவளுக்குக் கோபம் வந்து.

‘’அந்தப் பெண்கள் இங்கேதான் இருந்தாக வேண்டும்,’’ என்று மத்ரஜாவிடம்  ஆணையிட்டாள்.

அரண்மனை அந்தப்புரத்தில் தலைமைத் தாதியாக வெகுகாலமாக இருந்து வருபவள் மத்ரஜா. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழக்கப்பட்டிருப்பவள். சமயங்களில் பாண்டவ அரசிகளுக்கும் கூட ஆலோசனை சொல்பவள்.

‘’அவர்கள் உங்களை நிம்மதி இழக்கச்செய்து விடுகிறார்கள்,’’ என்றாள் அவள்.

‘’இல்லை… அவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. துக்கம் காத்துக்கொண்டிருக்கும் நிசப்தம் சூழ்ந்த இந்த அரண்மனையில்…’’

‘’துக்கமா?  இதில் துக்கம் எங்கே வந்தது அபிமன்யுவின் விதவையே! தர்மயுத்தத்தில் உயிர் விட்ட எல்லோரும் சுவர்க்கலோகத்துக்குச் சென்று விட்டார்கள். அங்கே வானுலகத்தில் எப்படி ஒரு கோலாகலமாக இருக்கும்…நினைத்துப்பாருங்கள்.’’

‘’ஓ அப்படி என்றால் தேவலோகத்திலிருந்து இங்கே இறங்கி வந்த ரதங்களை நீயே உன் கண்ணால் பார்த்தாயா என்ன? அவர்களின் ஆனந்த ஆரவாரத்தை நீயே உன் காதுகளால் கேட்டாயா?’’

‘’அதெப்படி..?’’

‘’குறைந்த பட்சம் வானலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்த ரதங்களையாவது.?.’’

‘’உன்னோடு பேச என்னால் முடியாது. அப்போது நான் உள்ளே இருந்தேன்.’’

‘’பிறகேன் இதையெல்லாம் சொல்கிறாய்?’’

‘’அது உண்மையென்பதுதான் எல்லோருக்குமே தெரியுமே!’’

‘’வெட்கம் மத்ரஜா!  குருஜங்கலிலிருந்து வந்திருக்கும் நீ போய் இப்படி அரச தருமங்களைப் பேசிக்கொண்டிருக்கலாமா’’

‘’நான் பச்சைக்குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்து விட்டார்கள். அது ஒன்றும் புது விஷயம் இல்லை, எப்போதுமே நாம்தான் அவர்களுக்குச் சிக்குவோம்.அந்தப்புரத்துத் தாதிகளாய், அரசவையில் பாடுபவர்களாய், நடனம் ஆடுபவர்களாய்… வீர்ர்களுக்குப் பணிமகளிராய்….! எல்லாம் உங்களைப் போலத்தான் பெண்களே.’’

’’இல்லை நாங்கள் இங்கே, உன்னைப்போல அழைத்து வரப்படவில்லை. அரச தர்மத்தோடு ஒன்றுகலந்துவிடுவதைப்பற்றி நாங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. நாங்கள்,விவசாயக் குடும்பங்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவர்கள். போர் செய்வதற்காக எங்கள் கணவர்கள் அனுப்பப்பட்டார்கள். காலாட்படை வீர்கள் அதிக எண்ணிக்கையில் இறந்து போக்கூடும் என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான். சற்று தூரத்தில் தள்ளி நின்றபடி போர் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருப்போம்.  ஒவ்வொரு நாளும் போர் முடிந்த பிறகு பயங்கரமான இருளுக்கு நடுவே சென்று எங்கள் கணவன்மார்களின் இறந்த உடல்களைத் தேடுவோம். சிறிய களிமண் விளக்குகளையோ, சுடர் விட்டெரியும் தேவதாருக் கட்டைகளையோ வெளிச்சத்துக்காகக் கைகளில் பிடித்துக்கொண்டிருப்போம். எங்கள் கணவன்மார், சகோதர்கள், மைத்துனன்மார்கள் என்று எல்லோரையும் தேடுவோம்….! அப்புறம் இதையும் கேள் மத்ரஜா.’’

‘’வானுலகத்திலிருந்து எந்த ரதமும் கீழே இறங்கி வரவும் இல்லை, அவர்கள் சுவர்க்கலோகம் செல்லவும் இல்லை. அதே தர்மயுத்தத்தில்தான் காலாட்படை வீர்களும் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆன்மா கடைத்தேறுவதற்காக எந்த ஒரு இறுதிச்சடங்கும் செய்யப்படவில்லை,’’ என்றாள் கௌதமி.

‘’நீங்கள் ஐவரும் எப்படி இங்கே..?’’

‘’எங்களால் வீடு திரும்ப முடியவில்லை.’’

கௌதமி பேசிய வார்த்தைகளில் மூர்க்கமான ஒரு தொனி உள்ளடங்கியிருந்ததை உத்தரை இனம் கண்டு கொண்டாள்.

‘வெளியே புலப்படும் நதியின் அமைதியான நீரோட்டத்துக்கு அடியில் விசையும் சுழிப்புமான வலுவான வேறொரு சக்தி மறைந்திருக்கிறது. இல்லையென்றால் மிகப்பெரிய யானையைக்கூட எப்படி அதனால் விழுங்கிக் கபளீகரம் செய்ய முடிகிறது ?’ என்று அபிமன்யுவும் கூட ஒருமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான்.

’’உங்களால் ஏன் திரும்பிப் போக முடியாது?’’என்று உண்மையான அக்கறையோடு கேட்டாள் உத்தரை.

‘’திரும்பிப் போவதற்கு அங்கே என்ன எஞ்சியிருக்கிறது இளவரசி? அஹிசத்ரா, மத்ஸ்யா, குருஜங்கல், கோசலம், துவைதம், பாஞ்சாலம், ப்ரச்யா என்று பற்பல இடங்களிலிருந்து காலாட்படை வீர்கள் வந்தார்கள். நாங்கள் குருஜங்கலைச் சேர்ந்தவர்கள். மற்ற இடங்களைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் எங்கள் வயல்கள்…, வளமான எங்கள் வயல்கள், ஆண்டு முழுவதும் ஆற்று நீர்ப்பெருக்கால் செழித்துக் கொழித்திருக்கும் எங்கள் பூமி பயிர்களின்றி வாடி வறண்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலாட்படை வீர்களைக் கொத்துக்கொத்தாய்க் கொன்று குவிக்கிறார்கள். எங்கள் வீட்டு ஆண்களெல்லாம் மொத்தமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள்.’’

அடுத்த பல்லவியை விதாஸ்தா தொடர்ந்தாள்

‘’கிராமத்து வீடுகள் விளக்குகள் ஏற்றப்படாமல் இருண்டு கிடக்கின்றன. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு கால்நடைகளை அவிழ்த்து விட்டுவிட்டு வந்தோம். இப்போது அவையெல்லாம் காட்டு மிருகங்களுக்கு இரையாகியிருக்கும்.’’

இப்போது விபாஷா பேச ஆரம்பித்தாள்

‘’கிராமத்திலிருக்கும் குடிசைகளில் யாரும் இப்போது கோதுமை மாவு அரைப்பதில்லை. எந்தப் பெண்ணும் பாலிலிருந்து வெண்ணெய் எடுப்பதில்லை,எண்ணெய் ஆட்டுவதில்லை. கிராமத்து ஓசைகளெல்லாம் அவிந்து போய்க் கிடக்கின்றன.’’

‘’நதிக்கரைகளில் பெண்கள் துணி துவைத்து உலர்த்துவதில்லை. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதில்லை.’’

‘’புதுமணப்பெண்ணை நீராட்ட ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்கப்போகும் பெண்களின் பாட்டுச்சத்தம் இப்போதெல்லாம் கேட்பதில்லை,’’என்றாள் கோமதி. அவளது குரலில் கடும் துயரம் தோய்ந்திருந்தது.

இப்போது ஐந்து பெண்களும் ஒரே குரலில் கேட்டார்கள்

‘’நாங்கள் எங்கேதான் செல்ல முடியும்?’’

‘’என்னோடு கூடவே இருந்து விடுங்கள்,’’ என்றாள் உத்தரை.

‘’இவையெல்லாம் நிசப்தம் நிலவும் சிறைக்கூடங்கள்.’’

‘’நிசப்தம்.?.’’

‘’ஆம்..பூஜைகள், சடங்குகள், அவற்றில் செய்யும் நிவேதனங்கள்,யாகங்கள் என்று இங்கே எல்லாமே பெண்கள் வசிக்கும் அந்தப்புரங்களுக்கு வெளியில்தானே நிகழ்கின்றன? ஆனால்..அங்கே…, எங்கள் உலகம் ஆரவாரங்களால்…,வேலை மும்முரங்களால் நிரம்பி வழியும். இங்கோ வெள்ளுடை அணிந்த விதவைகள் நிழலுருக்களைப் போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது நீங்கள் சிரித்ததுண்டா, உரத்துப் பேசியதுண்டா, வெறுங்காலோடு வீட்டுக்கு வெளியே ஓடியதுண்டா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.’’

‘’அது அப்படியில்லை,’’என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சுபத்திரை.

‘’அரச தர்மத்தின்படி அரசி குந்தியின் முன்மாதிரியைத்தான் விதவைகள் பின்பற்றியாக வேண்டும். நாம் வாழும் இக உலகமாகிய இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழும் உரிமை விதவைகளுக்கு இல்லை. நீங்கள் இனிமேல்  இங்கே இருக்க வேண்டாம், போய் விடுங்கள்.”

’’வேண்டாம் அம்மா. என்னைச் சுற்றி அவர்கள் இருப்பதால்தான் நான் கொஞ்சமாவது…’’என்று கத்தி விட்டாள் உத்தரை. தான் அப்படிக்கத்தி விட்டது பிறகு அவளுக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது.

அவளுக்கு அழுகை குமுறிக்கொண்டு வந்தது.

‘’அவர்களால்தான் நான் ஓரளவுக்காவது உயிரோடு இருப்பதாய் உணர்கிறேன்.’’

சுபத்திரை அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் தலையை இதமாகக் கோதி விட்டு அமைதிப்படுத்தினாள்.

’’அம்மா….நீங்கள் சொல்லுங்கள், மத்ரஜா இப்படியெல்லாம் ஆணையிட்டு அதிகாரம் செய்யக்கூடாது.’’

‘’விடு, அவள் அப்படிச் செய்ய மாட்டாள்..உஷ்…இதோ பார் கண்ணே. உன் வயிற்றில் இப்போது ஒரு குழந்தை இருப்பது நினைவிருக்கட்டும்.’’

‘’இங்கே நிலவும் நிசப்தம் எனக்கு மூச்சு முட்டுகிறது.’’

‘’கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள் மகளே.’’

இதயம் வெடிக்க அழுது தீர்த்தபின் படிப்படியாக சமநிலைக்கு வந்து சேர்ந்தாள் உத்தரை. சுபத்திரையின் மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவள் யாரைக் கேட்பது? என்னவென்று கேட்பது? ஆழ்ந்த வருத்தத்தோடு கெஞ்சும் தொனியில் அந்தப்பெண்களை அழைத்தாள் அவள்.

‘’சொல்லுங்கள் அரசி!’’

அப்போது வாசுதேவ கிருஷ்ணனின் பிரியத்துக்குரிய சகோதரி சுபத்திரையாக அவள் இல்லை. மற்ற எல்லோரையும் போல..அக்கறையுள்ள ஒரு தாயாக மட்டுமே அவள் பேசினாள்.

‘’நாங்கள் சீக்கிரமே போய்விடுவோம் அரசி. இன்னும் கூட முன்னதாகவே இங்கிருந்து கிளம்பியிருப்போம். ஆனால் குருட்சேத்திரப் போர்க்களத்தைக் கடந்து செல்வது இன்னும் கூடக் கடினமான செயலாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நாட்கள்..கணக்கிலடங்காத சிதைகள் எரிந்து கொண்டே இருந்ததால் பூமி இறுகிப்போய்ப் பாறைபோல் கடினமாகிக் கொதித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் பாதங்களெல்லாம் புண்ணாய்ப்போய்விடும். அனல் கக்கும் அந்த மண்ணில் எங்களால் அவ்வளவு தூரம் எப்படி நடந்து செல்ல முடியும்’’

‘’இவர்களைப்போலவே இன்னும் சிலரும் கூடக் கிளம்பிப் போகாமல் நகருக்கு வெளியேதான் இருந்து கொண்டிருக்கிறார்கள்,’’ என்றாள் மத்ரஜா.

‘’சரி, என் மருமகளை வருத்தப்பட மட்டும் வைத்து விடாதீர்கள்’’

 இந்த வார்த்தைகளைச் சொல்ல நேர்ந்தபோது சராசரியான எல்லாப் பெண்களையும் போல சுபத்திரையின் இதயமும் வெடித்து விடும்போலிருந்தது.

அந்த ஐந்து பெண்களும் தங்களுக்குள் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டார்கள். அவள் சொன்னதற்குச் சம்மதம் தெரிவிப்பது போலத் தலையை அசைத்துப் பெருமூச்சு விட்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்கள்.

‘’நான் இவளுடனே இருக்கிறேன்,’’ என்றாள் சுபத்திரை.

அவர்கள் ஐவரும் ஒரேமாதிரி யோசித்தார்கள்; வார்த்தைகள் ஏதும் இல்லாமல், ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாமல் தங்கள் கண்களைக் கொண்டே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தனை நெருக்கமாக இருந்தார்கள். இப்போதும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டபடி எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்கள்.

‘’இப்போது பரவாயில்லையா…? நன்றாய் இருக்கிறாய்தானே,’’ என்று உத்தரையிடம் அவர்கள் கேட்க,

‘’ஆமாம்’’என்று பதிலளித்தாள் அவள்.

                   *********************************************

’இதோ பார்,அம்மாவும் குழந்தையுமாய் இருக்கும் இந்த பொம்மைகளை, இவைதான் எத்தனை அழகு என்று பாரேன்! விதாஸ்தாதான் செய்தாள்’’

‘’மண்பாண்டம் செய்பவர்கள் எங்கே இருக்கிறார்களென்று எனக்குத் தெரிந்திருந்தால் இவற்றைச் சூளையில் வைத்துச் சுட்டு வந்திருப்பேன். சுட்ட களிமண்ணில் வண்ணங்கள் இன்னும் கூட அழகாக இருக்கும்!’’

‘’உங்கள் வீடுகளிலும் கூட இந்த மாதிரி பொம்மைகளையெல்லாம் நீங்கள் செய்வதுண்டா?’’

‘’ஆமாம்,எங்கள் குழந்தைகளுக்கு அவைகளைத்தான் விளையாடத் தருவோம்.’’

‘’அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்!’’ இதைச்சொல்லும்போது உத்தரையின் விழிகள் கள்ளங்கபடமற்ற குழந்தையுடையது போலிருந்தன.

’’உன் குழந்தையும் இவற்றோடு சந்தோஷமாக விளையாடப்போகிறது உத்தரை,’’ என்றாள் விதாஸ்தா.

‘’ஆனால்..நீங்கள்…? உங்களுக்கெல்லாம்…?’’

அந்த ஐந்து பெண்களும் இல்லையென்று தலையசைத்தார்கள்.

அது ஒரு வித்தியாசமான கதை. அவர்கள் எல்லோருக்குமே ஒரே நாளில்தான் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டுக்குள் அப்போதுதான் அவர்கள் அடியெடுத்து வைத்திருந்தார்கள். இளைஞர்கள் எல்லோரும் போருக்கு வந்தாக வேண்டும் என்ற முழக்கம் உடனேயே ஒலிக்கத் தொடங்கி விட்டது. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன.

யமுனா மிகவும் அமைதியானவள்; ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுபவள்.

‘’எங்கள் கணவர்கள் முதலில் சென்று விட்டார்கள். தொடர்ந்து நாங்கள் அங்கேதான் இருந்தோம்’’ என்றாள் அவள்.

‘’கிராமத்தில் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?’’

‘’குடிசையையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தம் செய்வோம்; விறகு சேகரித்துக்கொண்டு வருவோம்; ஆற்றிலிருந்து நீர் சுமந்து வருவோம்.’’

‘’அப்படிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.’’

‘’அது உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் இளவரசி?’’

‘’வேலை செய்யும்போது நீங்கள் பாட்டுப் பாடுவீர்களா?’’

‘’ஆமாம் என் செல்லப்பெண்ணே.’’

‘’நான் எந்த கிராமத்தையும் பார்த்தில்லை. ஆனால் ஊர் ஊராகப்போகும் பாடகர்கள், நாட்டியமாடுபவர்கள், பொம்மலாட்டக்கலைஞர்கள் என்று இவர்களெல்லாம் அடிக்கடி வருவார்கள்.அவர்கள் பாடுவதும் ஆடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அதெல்லாம் என் கல்யாணத்துக்கு முன்னால்..’’

அந்தப் பெண்கள் தங்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள்.

‘’அந்த சமயத்தில் உன்னை வளர்த்த உன் செவிலி, உனக்கு என்ன கதைகளெல்லாம் சொன்னாள்? அதெல்லாம் நினைவிருக்கிறதா.’’

‘’எல்லாக் கதைகளும் ஞாபகமில்லை. ஒரு சில மட்டும் எப்போதாவது நினைவுக்கு வரும். உங்கள் வாழ்க்கையைப்பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பரிச்சயமில்லாததாக இருந்தது. எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவுதான்.’’

‘’எங்கள் ஜனங்களைப்பற்றிக் கேட்க ஆசையா உனக்கு?’’

‘’அவர்கள் என்ன செய்வார்கள்?’’

அவளது கேள்வியைக்கேட்துமே அந்தப்பெண்கள் வியப்போடு கையை ஆட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

’’வேலை செய்யும்போதெல்லாம் அவர்கள் கதையும் பாட்டுமாகத்தான் இருப்பார்கள், அவை எவ்வளவு அதிசயமான மாயாஜாலக்கதைகள் தெரியுமா, மாமியாரும் கூடவே பால் கறப்பாள். தயிர் கடைந்து வெண்ணெய்,நெய் ,மோர் எல்லாம் உண்டாக்குவார்கள், தங்கள் மருமகள்களுக்கு எண்ணெய் வைத்துத் தலை சீவிப் பின்னி விடுவார்கள், பேரக் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவார்கள்.’’

‘’நீங்கள் நகரத்துக்கே வந்தில்லையா?’’

’’இல்லை தங்கப்பெண்ணே, எங்களுக்கு நகரத்தைத் தெரியாது. அதற்கும் எங்களைத் தெரியாது. இனிமேல் இங்கே எவருமே வர மாட்டார்கள்.’’

’’ஏன்? ‘’

‘’நடந்து முடிந்திருப்பது எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான போர்? எவ்வளவு பேரழிவுகள்,சேதங்கள்? இதற்குப் பிறகு இங்கே…, இந்த நகரத்துக்கு யார் வருவார்கள்..நீயே சொல்லேன். எத்தனை கொடூரமான போர் இது? குடும்பத்திலுள்ள எல்லோருமே….! இது ஒரு கொடிய பாவம் இல்லையா?’’

‘’ஆனால் இது ஒரு தர்ம யுத்தம், நியாயத்துக்கான போர்!’’

‘’தர்மயுத்தம்…!!’’

‘’நூற்றுக்கணக்கில் விதவைகள்,பல வீடுகளில் பிள்ளைகளை இழந்த தாய்மார்கள்…!’’ என்று கௌதமி ஆழ்ந்த வருத்தோடு சொன்னாள்..

‘’ஆமாம் முதிய அரசியான காந்தாரியும் கூடத் தன் நூறு மகன்களை இழந்து விட்டாள். என் மாமியார்களும் கூடத் தங்கள்..’’

சட்டென்று அவள் பேச்சில் குறுக்கிட்ட கௌதமி

‘’இரு இரு…கொஞ்சம் எல்லோரும் கேளுங்கள். இது சாதகப்பறவையின் குரல்தானே?’’

அவர்கள் அனைவரும் உன்னிப்பாய்க் கவனித்தார்கள். உத்தரைக்கு அது ஒரு பறவையின் சத்தம் என்று மட்டுமே தெரிந்தது. ஆனால் அது என்ன பறவையோ.., அது யாருக்குத் தெரியும்? வெகு தொலைவிலிருந்து மிகவும் மெல்லிதாக அந்த சத்தம் கேட்டது.

‘’ஆமாம், சாதகப் பட்சியேதான்!’’

‘’அது கத்தினால் என்ன அர்த்தம்?’’

மிகவும் தொலைவிலிருந்து குரல் கொடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அந்தப் பறவையிடம் தானும் பறந்து சென்று விட்டவள் போலிருந்தாள் கௌதமி. கனவு காண்பது போலக் காணப்பட்ட அவள்,

‘’அது மழை நீரை மட்டுமே பருகும். எங்காவது மேகத்தைப் பார்த்திருக்கும்,அதுதான் இப்படிக்குரல் எழுப்புகிறது,’’என்றாள்.

‘’அதன் பிறகு என்ன ஆகும்?’’

’’அதன் பின்பு மழை பெய்யும்.’’

’’மழை பெய்தபின்?’’

‘’மண் குளிர்ந்து விடும்.’’

‘’குருட்சேத்திர பூமி ஆறிப்போய்க் குளிர்ச்சியடையும்.அங்கே வீசும் வெம்மையான அலைகள் அடங்கும். ஒருவேளை…- ஆமாம் ஒருவேளை மட்டும்தான்- ஏதோ ஒரு நாள் அங்கே மீண்டும் பசும்புல் தழைக்கும்,.

மிகப்பெரும் இடி முழக்கத்தோடு மழை பொழிந்தது; அவசர அவசரமாக வெறித்தனமாகப் பெய்து தீர்த்தது. அந்தப்புரத் தோட்டத்திலிருக்கும் மரங்களெல்லாம் மழையில் நன்றாகக் குளித்திருந்தன.

‘’இவ்வளவு பெரிய போர் நடந்து முடிந்தபிறகு கட்டாயம் மழை பெய்யும் என்று அறிஞர்கள் முன்பே சொல்லி வைத்திருக்கிறார்கள்.’’

தொடர்ந்து சில நாட்கள் மழை கொட்டித் தீர்த்தது. வறண்டு காய்ந்து சூடேறிக் கிடந்த பூமியின் தாகத்தைத் தணித்த பிறகு மேகங்கள் கிழக்குத் திசை நோக்கிக் கம்பீரமாய்,மெதுவாய் நகர்ந்து செல்ல ஆரம்பித்தன.

‘’காடுகள் வழியில் வந்தால் அப்போது அவை மழையைக் கொடுத்து விட்டுப் போகும்,’’ என்று யமுனா முணுமுணுத்தாள்.

‘’மழையைச் சூல் கொண்டிருக்கும் மேகங்களைப்பார்! அவை கிழக்குப் பக்கமாக அரசி சித்ராங்கதாவின் நாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. பருவமழை தவறப்போவதில்லை என்பதற்கு உறுதியான அறிகுறி இது.’’

                 *****************************************

ழை பெய்து ஓய்ந்த பிறகு ஐந்து பெண்களும் உத்தரையிடம் வந்தார்கள்.

‘’இளவரசி! பூமி குளிர்ந்து விட்டது. நாங்கள் விடைபெறும் நேரமும் வந்து விட்டது.’’

‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’

சுபத்திரையை அழைத்து வர விரைந்தாள் மத்ரஜா. அவள் துரௌபதிக்குச் சொல்லி அனுப்பினாள். அந்தப்புரம் முழுவதும் அந்தச்செய்தி பரவி விட, அரசியர் ஒவ்வொருவராய் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

சுபத்திரையின் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி, ‘’அவர்கள் போகப்போகிறார்களாம்’’ என்றாள் உத்தரை.

‘’நீங்கள் விடைபெற்றுக்கொள்ளப்போகிறீர்களா என்ன?’’

‘’ஆமாம் அரசி, இப்போது மண்ணின் சூடு தணிந்து குளிர்ச்சியாகி விட்து. இனிமேல் அந்த இடத்தைக் கடந்து செல்ல எங்களால் முடியும்.’’

‘’ஆனால்…நீங்கள் ஏன் போக வேண்டும்,’’ என்று கேட்டாள் உத்தரை.

‘’நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’’என்று பதிலளித்தாள் கௌதமி.

‘’திருமணமா…?ஆனால் நீங்களெல்லாம்….’’

‘’எங்கள் கணவர்கள் காலாட்படை வீர்கள். ஒவ்வொரு நாள் மாலையும் அவர்களது உடல்களைத் தேடித் தேடி நாங்கள் அலைவோம். இறுதியில் பதினெட்டு நாட்கள் கழித்து எல்லாக் காலாட்படை வீர்களையும் ஒன்றாகத் தீயிலிட்டுச் சிதை மூட்ட ஏற்பாடு செய்தார் மகாத்மா விதுரர். எத்தனை எத்தனை சிதைகள் மூண்டு எரிந்து கொண்டிருந்தன? பூமியே சூடான பாறை போல வெம்மையேறி இறுகிப்போய்க் கொதித்துக்கொண்டிருந்தது.’’

‘’அதற்காகாகத்தான் இங்கே வந்தீர்களா’’

‘’வெம்மை கக்கும் அந்த நிலப்பரப்பை எங்களால் தாண்டிச்செல்ல முடியவில்லை. நகரத்தின் வெளிப்பகுதிகள் முழுவதும் எங்களைப்போன்ற பெண்களே நிறைந்திருந்தார்கள். அறிமுகமான ஏதாவது சில முகங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம், அப்போதுதான் மத்ரஜா எங்களை இங்கே அழைத்து வந்தாள்.’’

‘’இப்போது ஏன் திரும்பிப் போகிறீர்கள்?’’

அந்த ஐந்து பெண்களும் கரம் கூப்பி வணங்கினார்கள்.

‘’நாங்கள் விதவையாகி விட்டால் கணவனின் சகோதரனைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும். அதுவே சாமானிய மக்களாகிய எங்களது வழக்கம்.’’

‘’அங்கே இளைஞர்கள் இன்னும் கூட எஞ்சியிருக்கிறார்களா?’’

‘’அது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது மழை பெய்திருப்பதால் உழவு செய்யப்படாமல் இருக்கும் எங்கள் வயல்களையும் கவனிப்பாரற்றுக்கிடக்கும் எங்கள் கிராமங்களையும் பார்க்க நாங்கள் கட்டாயம் போயாக வேண்டும்.’’

‘’முட்டாள் பெண்களே..! உங்களைப்போய் யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?’’

‘’அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது அரசி சுபத்திரா, ஆனால்…யாராவது ஒருவர் எங்களை மணம் செய்து கொள்ளலாம். நாங்கள் பூமித் தாயை வணங்குபவர்கள். நாசகரமான ஒரு பெரிய சீரழிவுக்குப் பிறகு, சூரியன் கட்டாயம் உதிக்கத்தான் செய்யும். கொடூரமான இந்தப் போருக்குப் பிறகும் கூட இயற்கை ஒன்றும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடப்போவதில்லை.’’

துரௌபதி நீண்ட பெருமூச்சு விட்டாள். நிசப்தம் நிலவிய அந்த அறைக்குள் அது துல்லியமாகக் கேட்டது. எல்லோரின் கண்களும் அந்த ஐந்து பெண்களை மட்டுமே வியப்போடு நோக்கியபடி இருந்தன.

இதுவரை அந்த அரசிகள் யாரையாவது அப்படிப் பார்த்திருக்கிறார்களா? ஏதோ வேலை பார்ப்பவர்கள்….நடமாடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறார்களே தவிர அவர்களை அதிகம் பொருட்படுத்தியிருக்கிறார்களா என்ன? ஆனால் இப்போதோ அவர்களது இருப்பு திடீரென்று எல்லோராலும் உணரப்பட்ட ஒன்றாகி விட்டது; அனைவரின் கவனத்தையும் கவர்வதாகவும் கூட!

அவர்கள் அடர்த்தியும் கருமையுமான தங்கள் கூந்தலை நன்றாகச் சீவிப் பின்னல் போட்டுப் பின்புறமாகத் தொங்க விட்டிருந்தார்கள். முதுகுப்பகுதியில் முடிச்சுப்போட்ட கறுப்பு நிறக்கச்சைகளால் மார்பை மறைத்திருந்த அவர்கள், கறுப்புத் துணியால் தங்கள் தலையையும் உடலையும் சுற்றியிருந்தார்கள். கழுத்து, தோள் பட்டை, கைகள், விரல்கள், கால்கள் என்று அவர்களது அங்கங்கள் அனைத்துமே அவர்கள் கடும் உழைப்பாளிகள் என்பதைக் காட்டிக்கொண்டிருந்தன.

‘’நாங்கள் போகவில்லையென்றால் வயல்கள் தரிசாய்ப் போகும்; கால்நடைகள் பரமரிப்பின்றி கவனிப்பாரற்றுப்போகும். நாங்கள் அங்கே திரும்பிப் போன பிறகு எல்லோருமாய்க் கூடி இறந்தவர்களுக்குச் செய்தாக வேண்டிய முக்கியமான சடங்குகளைச் செய்வோம். பிறகு குடும்பத்து மூத்தவர்கள் எங்களுக்குத் திருமண ஏற்பாடு செய்வார்கள். எங்களுக்குக் கணவர்கள் வேண்டும், குழந்தைகள் வேண்டும்,கிராமத்தில் எப்போதும் பேச்சும் சிரிப்பும் கேட்க வேண்டும். நாங்கள் புதிதாக ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வோம். இயற்கை எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் பாடம் அதுதான்..’’

‘’ஆனால்..’’

‘’வாழ்க்கைக்குத் தேவைப்படுவது அதுதான் அரசி சுபத்திரா! உயிரோடு இருக்கும் வரை நிறைவைக் கோருவதே வாழ்க்கை. எங்கள் குலத்தைச் சேர்ந்த விதவைகள் மறுமணம் செய்து கொண்டபிறகும் குடும்பத்தினரால் மதிக்கப்படுகிறார்கள், தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து வயலை உழுது  பாதுகாப்பாய்க் கொண்டுபோய்ச் சேர்ப்பது வரை எல்லாம் செய்கிறார்கள். நிசப்தம் போர்த்திய நிழல் உருவங்களாக வாழ்ந்தபடி வாழ்வின் தேவைகளை அவர்கள் மறுதலிப்பதில்லை. முன்பு எங்கள் கணவர்கள் உயிரோடு இருந்தார்கள், இப்போது அவர்கள் இல்லை,அவ்வளவுதான். அழுவதால் மட்டும் அவர்கள் மீண்டு வந்து விடப்போவதில்லை. அரசர்கள் நிகழ்த்திய யுத்தத்தில் போரிட்டு மடிந்திருக்கும் அவர்களுக்கு சுவர்க்க லோகமும் இல்லை. அவையெல்லாம் அரசகுலத்தவர்களுக்கு மட்டுமேயானவை.’’

‘’தர்மயுத்தத்தில் உயிர் துறப்பவர்களெல்லாம் வானுலகத்துக்குச் சென்று விடுவார்கள் பெண்களே.’’

‘’அது எங்களைப்பொறுத்தவரை தர்மயுத்தம் இல்லை. சகோதரர்கள் ஒருவரை ஒருவர் கொல்வது, மாமன் மருமகனைக் கொல்வது, சிஷ்யன் குருவைக் கொல்வது…இவையெல்லாம் தர்மயுத்தத்தைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமாக இருக்கலாம், ஆனால் அந்த யுத்தம் எங்களுடையது இல்லை.’’

இலைதழைகளால் தாங்கள் பின்னியிருந்த கூடை நிறைய களிமண் பொம்மைகளை எடுத்து வந்து உத்தரையின் காலடியில் வைத்தாள் விதாஸ்தா.

‘’அழாதே கண்ணே…! உன் குழந்தை இவற்றோடு விளையாடட்டும். என்றாவது ஒரு நாள் நீ எங்கேயாவது வெளியே போக நேரும்போது நன்றாக விளைந்திருக்கும் வயல்களின் மீது பறைவைகள் கூட்டமாய்ச் செல்வதையோ, கிராமத்துச் சமையலறை நெருப்பிலிருந்து மேலே புகையெழும்பி வருவதையோ பார்க்க நேர்ந்தால், கூட்டமாக உரத்துப்பாடும் சத்தத்தைக் கேட்க நேர்ந்தால் அதுதான் எங்கள் தாய்மண்ணாக இருக்கும் என்று நினைத்துக்கொள்.’’

அவர்கள் அரசிகளை வணங்கினார்கள். பட்டத்து அரசி துரௌபதி முன்னால் வந்து ஆசீர்வதிப்பதைப்போல் அவர்களது தலையைத் தொட்டாள்.

‘’சரி..சென்று வாருங்கள், உங்களை எது முழுமைப்படுத்துமோ அதை நோக்கிச் செல்லுங்கள்,’’ என்றவள்,

‘’உத்தரையின் குழந்தையைப் பார்க்க வருவீர்கள்தானே?’’என்று கேட்டாள்.

‘’கட்டாயம் வருவோம். இங்கே தோட்டத்தில் உட்கார்ந்து குழந்தைக்குப் பாட்டுக்கள் பாடுவோம்.’’

அவர்கள் கிளம்பத் தயாரானார்கள்.

‘’உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கட்டும், நிறைவான வாழ்க்கையை நீங்கள் கண்டடையுங்கள், அன்றாட உலகியல் வாழ்க்கைக்கு மீளுவது உங்களுக்கு வாய்க்கட்டும்,’’ என்றாள் துரௌபதி.

ஐந்து பெண்களும் அங்கிருந்து வெளியே சென்றார்கள்.

உத்தரையைத் திரும்பிப் பார்த்த கௌதமி, ‘’உன் குளியலுக்குத் தண்ணீர் தயாராக இருக்கிறது கண்ணே,’’என்றாள்.

உத்தரை, பொம்மைகள் இருந்த கூடையைத் தூக்கிக்கொண்டாள். 

‘நீங்கள் எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும்,’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....