துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.3.21

விரிசல்- சிறுகதை.

       


 விரிசல்

சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை.

கையில் வைத்திருந்த பனையோலை விசிறியால் வீசிக்கொண்டே ‘தோல் தலகாணி’யைத் தலைக்கு வைத்துக்கொண்டு வளவின் ஒரு பக்கம் கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாலாச்சி. அது ஆழ்துயில் இல்லை, அறிதுயில் என்பது அங்கிருந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

‘’ஏ தெவ்வி, இங்ஙனே கொஞ்சம் வா” என்று இரண்டாம் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்குக் குரல் கொடுத்தபடி தானும் அதை உறுதிப்படுத்தினாள் ஆச்சி.

கழுவிக்கொண்டிருந்த சாமானை அப்படியே போட்டு விட்டு முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்த தெய்வானை,

‘’என்ன ஆத்தா வேணும்? காப்பி போட்டுக் கொண்டாறவா..இல்லே வேற எதுவும் வேணுமா’’என்றாள்.

‘’அதெல்லாம் ஒரு எளவும் வேண்டாம். அந்தப் பட்டுக்கெடப்பான் ..அதுதான் அந்த சுப்புப்பய எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியல. அவன் எங்கேன்னு போய்ப் பாத்துக் கூட்டியா தெவ்வி. உன்னை ஒடனே ஆத்தா கூப்பிடறாகன்னு சொல்லு’’

‘’அந்தப் பட்டுக்கெடப்பான் எங்கேயும் போயிடல…, இங்ஙனயே… உங்க பக்கத்திலேயேதான் இருக்கேன் ஆச்சி. ஹ்ம்ம்..பொளுது விடிஞ்சா அடைஞ்சா ஆச்சி வாயிலேயிருந்து இந்த ஒரு வார்த்தைதான் வருது, ஆனா என்னோட ஆயுசு என்னமோ நீண்டுக்கிட்டேதான் போகுது’’ என்றபடி அவள் முன் வந்து நின்றான் சுப்பு என்ற சுப்பிரமணி.

‘’ஒனக்கென்னடா கொறச்சல்? உங்க அப்பனும் ஆத்தாவும் அந்தக் குன்னக்குடியானோட சன்னிதியிலே மொட்டைபோட்டுக் காதுகுத்தி அவன் பேரையே உனக்கு வச்சிருக்காக. இந்த வெள்ளச்சீல ஆச்சி, வாய் வார்த்தையா என்னத்தையோ சொன்னேன்னா அது உன் தலையெழுத்தை மாத்திடவா போகுது?’’

‘’அது கெடக்கு ஆச்சி, இப்ப எதுக்கு தாக்கீது’’

‘’தாக்கீது என்ன பெரிய தாக்கீது, நாங்க என்ன இங்கே வக்கீலாபீஸா வச்சு நடத்தறோம்’’

‘’ஆத்தி ! ஆச்சி என்ன பெரிய பேச்செல்லாம் பேசறீக? நம்ம அலமியாச்சி இத்தனை வருசம் களிச்சு மூணாம் பெறயப் பாக்கிறாப்பிலே வாராக. வீடு , மொத்தமும் ஒட்டற அடிச்சு எல்லா எடமும் சுத்தம் பண்ணியாச்சு. கரண்டெல்லாம் ஒளுங்கா இருக்கான்னு ஆளைக் கூப்பிட்டு சரிபாத்துப் புதுசா காத்தாடி மாட்டிக் கறுப்படிச்சுக் கெடந்த பளைய வாளத்தண்டு பல்பையெல்லாமும் மாத்தி மாட்டியாச்சு. செம்பு,வாளி, அண்டா எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுப்பிட்டுக் குளிக்கிற ரூமிலேயே அருவி கொட்டற மாதிரி சவரம் போட்டாச்சு’’

‘’அது சவரம் இல்லேண்ணே, சவர்’’ என்று திருத்தினாள் தெய்வானை.

‘’அது எப்படி வேணாலும் போய்த் தொலையட்டும் தங்கச்சி. இம்புட்டு பண்ணினப்பறமும் ஆச்சிக்கு இன்னும் என்ன மனத்தாங்கல்னுதான் எனக்கு வெளங்கலை’’

‘’ மனத்தாங்கல் எதுவுமில்லடா, நான் ஒண்ணுன்னா நீ ஒம்போது செஞ்சிடறே அது வாஸ்தவம்தான். ஆனாலும்..’’

‘’ ஆச்சி, இப்ப நீங்க எதைச்சொல்றீக, அந்தக் கண்ணாடி சமாச்சாரம்தானே? அதை என் கிட்டே விட்றுங்க. அவுக இத்தனை வருசம் எங்கெங்கேயோ சீமையெல்லாம் சுத்தி வந்திருக்காகளே அங்கெல்லாம் கூட இப்படிப் பார்த்திருக்க மாட்டாக. அது , அப்டியில்லை நிகு  நிகுன்னு மின்னிக்கிட்டுக் கெடக்கு! சும்மா வளவிலேயே படுத்துக் கெடக்காம எளுந்து வந்து நேரே பார்த்திட்டுச் சொல்லுங்க ஆச்சி’’

‘’பார்த்திட்டுத்தான் சொல்றேன் சுப்பு. நான் ஒன் மேலே குத்தஞ்சொல்லலை, நல்லாத் தொடச்சு வெளக்கித்தான் வச்சிருக்கே. ஆனாலும் கண்ணாடிக்கு நட்ட நடுவிலே கரும்புள்ளி மாதிரி ஒண்ணு குத்த வச்சு ஒக்காந்திருக்கே, அது எப்டி ஒன்னோட கண்ணுக்குத் தப்பிச்சுன்னுதான் எனக்குத் தெரியல’’

‘’அடப்போங்க ஆத்தா, அலமியாச்சி வரப்போறதா தாக்கல் வந்த நாளிலே இருந்து நானும் அதைச் சுத்தம் பண்றேன், சுத்தம் பண்றேன், அந்த ஒரு புள்ளி மட்டும் காட்டம்மன் கோயிலுக்குப்போற வளியிலே இருக்கிற கம்மாய்ச் சகதியிலே மாட்டிக்கிட்டு நகர முடியாம நட்டக்க நிக்கிற நம்ம கொப்பாத்தா தேரு மாதிரி அசைஞ்சு கொடுப்பேனாங்குதே..சரி ஆச்சி , நீங்க மொகம் கோணாதீங்க, அவுக வார வரைக்கும் நான் சொணங்காம தொடைச்சுக்கிட்டே இருக்கேன். நீங்க பதறாம இருந்தா அதுவே போதும்’’

தெய்வானையும் சுப்புவும் அங்கிருந்து போனபின் அதே இடத்தில் மீண்டும் படுத்துக் கண்களை மூடிக்கொண்ட சாலாச்சி இப்போது உண்மையிலேயே உறங்கிப்போனாள்.


லமுவின் குடும்பத்தில் ஒரு பின்னொட்டாக வந்து சேர்ந்து கொண்டவள்தான் சாலாச்சி என்கிற விசாலாட்சி. ப னா ழ னா குடும்பத்தின் வாரிசுகளான நாகப்பன்,நாச்சியப்பன் ஆகிய இரண்டு மகன்களில் ‘கொண்டு’ விற்பதற்காக் குடும்பத்தோடு ‘தொலை’க்குப் போயிருந்த நாகப்பன் ஏதோ மர்மக்காய்ச்சல் கண்டு இறந்து போய்விட, முகம் தெரியாத யாரையெல்லாமோ கெஞ்சிக்கூத்தாடி அவர்களின் துணையோடு ஒரே மகள் விசாலாட்சியைத் தன் கொழுந்தனார் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டு அதற்காகவே காத்திருந்தது போலக் கண்ணை மூடி விட்டாள் மீனாட்சி ஆச்சி.
சித்தப்பா நாச்சியப்ப செட்டியாரோடு, சின்னாத்தா வள்ளியம்மையும் சாலாவிடம் கூடுதல் கரிசனம் காட்டித் தன் பிள்ளைகளுக்கு மூத்த ஆச்சியாகவே அவளை முன்னிறுத்திவிட, அவள் அந்தக் குடும்பத்தின் செல்லப்பெண்ணாகவே ஆகிப்போயிருந்தாள்.

சிவன் கோயில் குளக்கரையிலிருந்த ஆண்கள் பள்ளிக்கு அழகப்பனையும் மெய்யப்பனையும் அதை ஒட்டியிருந்த எம் எஸ் எம் எம் பெண்கள் பள்ளிக்கு சாலா,அலமுவையும் அனுப்பி வைத்துவிட்டு விரல்களால் திட்டி கழித்துச் சொடுக்கிக்கொள்ள வள்ளியாச்சி ஒரு நாள் கூடத் தவறியதில்லை. ஆனாலும் சாலாவிடம் வராமல் சரஸ்வதி தேவியென்னவோ சண்டித்தனம் செய்து விட, சின்னாத்தாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வெள்ளைப்பணியாரம் சுடுவதிலும் கந்தரப்பம் செய்யக் கற்றுக்கொள்வதிலும் இருந்த அளவுக்குப் பள்ளிப்படிப்பில் அவள் நாட்டம் செல்லவில்லை.

‘’நான் தாயா புள்ளையா வளர்த்தாலும் அந்த அருமை ஊருக்குத் தெரியுமா,ஒலகத்துக்குப் புரியுமா? கொழுந்தனார் மகளை அடுப்படியிலே தள்ளிட்டேன்னு இல்லே அது பேசும்? என் கண்ணில்லே, அலமுவோட போய் நாலெழுத்து படி ஆத்தா’’ என்ற வள்ளியாச்சியின் கெஞ்சலோ சித்தப்பாவின் மிரட்டலோ – எதனாலும் அவளைப் பணிய வைக்க முடியவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்து நல்ல சம்பந்தமாய்க் கல்யாணம் பேசி சாலாவுக்குத் திருப்பூட்டி விட்டதில் நிம்மதிப்பெருமூச்சு விட்டு அவர்கள் நிமிர்வதற்குள் கார்விபத்தில் கணவனைப்பறிகொடுத்து விட்டு என்றென்றைக்கும் வெள்ளைச்சீலை ஆச்சியாய் மாறிப்போனபடி அந்த வீட்டிலேயே மீண்டும் வந்து தஞ்சம் புகுந்தாள் சாலா.

‘’ஒங்க மேலே தப்பில்லை செட்டியார்வாள், நீங்க இதுக்காக சங்கடப்பட்டுக்காதீங்கோ. அது ஒருவேளை ’குடும்ப’ தோஷமாக்கூட இருக்கலாம்’’ என்று ஜோதிடர் சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் நாச்சியப்பன் – வள்ளியம்மையின் குற்ற உணர்வு கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே ஒட்டிக்கொண்டு அவர்களின் சுகதுக்கங்களை மட்டுமே தனதாக்கிக் கொண்டுவிட்ட சாலா, தன்னைச் சுற்றி நடந்த எதையும் பெரிதாகப் பாராட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.


ஹால்வீட்டில் மாட்டியிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் நான்கு தரம் அடித்ததும் மெள்ளப் புரண்டு கொடுத்துத் தூக்கக் கலக்கத்தைப் போக்கிக்கொண்ட சாலாச்சி, வாளித் தண்ணீரை முகத்தில் வாரித் தெறித்துக்கொண்டு வளவிலிருந்த இரட்டை வீட்டின் முதல் அறையில்  அந்தக்கண்ணாடி இருந்த இடத்துக்குப்போய் நின்றாள். கண்ணாடி அவள் பிம்பத்தைக் காட்டுவதற்குப் பதிலாக அலமுவையே காட்டிக்கொண்டிருந்து. வெள்ளைச்சீலைதான் நிரந்தரம் என்று ஆவதற்கு முன்னால், துள்ளித் திரிந்து கொண்டிருந்த பதின்ம வயதிலும் கூட  அந்தக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சாலாவுக்கு ஏனோ ஒருபோதும் தோன்றியதில்லை. வித்தியாசம் பார்க்காமல் அலமுவுக்கும் சாலாவுக்கும் வள்ளியாச்சி ஒரே மாதிரி எல்லாம் செய்தாலும் தன் தோற்றத்தைப்பற்றிய அக்கறையோ தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமோ இல்லாதவளாகவே இருந்தாள் சாலா. அந்த வீட்டில் எங்கிருந்து எவர் எதற்காகக் குரல் கொடுத்தாலும் கேட்ட நொடியில் பறந்து போய் அதைச்செய்து கொடுத்தபடி சிட்டாய்ப் பறப்பதில் மட்டுமே அவளுக்கு சந்தோஷமும் திருப்தியும் இருந்தது.

‘’இப்படிப் பக்கி மாதிரி லாத்தாதே சாலா. அப்றம் ஒரு கண்ணிலே வெண்ணெயும் மறுகண்ணிலே சுண்ணாம்பும் வச்சிட்டேன்னு பாக்கிறவக என்னையத்தானே குத்தம் சொல்லுவாக’’என்று கடிந்து சொல்லிக்கூடப் பார்த்து விட்டாள் வள்ளியாச்சி.

இப்போதும் அந்தக் கண்ணாடியென்றாலே அலமுவைத் தவிர அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஞாபகம் விலகிப்போக மறுத்தது சாலாவுக்கு.

உயர்ரகத் தேக்கை இழைத்துச் செய்த அலங்கார வேலைப்பாட்டுச் சட்டத்தோடு சுவரின் முக்கால் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த அந்த பெல்ஜியம் கண்ணாடியை வீடு கட்டும்போதே ஐயா அந்த இடத்தில் அமைத்திருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து அதைத் தன் ஏகபோக சொத்தாகவே ஆக்கிக்கொண்டிருந்தாள் அலமு. அதில் போட்டி போடவும் ஆள் அதிகமில்லை. வளவிலும்,பட்டாலையிலும் இத்தனை பிரம்மாண்டமான கண்ணாடிகள் இல்லாவிட்டாலும் குளித்து முடித்துத் தலையை வெடுக் வெடுக்கென்று உதறிப்போட்டு சீப்பால் இரண்டு இழு இழுத்தபடி கொண்டை முடிந்து கொள்ளவோ, காலணா சைஸ் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்ளவோ அந்த பெல்ஜியம் கண்ணாடியைத் தேடிப்போக வேண்டிய அவசியம் வள்ளியாச்சிக்கோ, கண்ணாடியே பார்த்துக் கொள்ளாத சாலாவுக்கோ இல்லை. பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் அவசரத்தில் அந்தக் கண்ணாடியில் தலை சீவ அண்ணன்மார்கள் தற்செயலாக வந்து விட்டாலும் கூட..
‘’பாருங்க ஆத்தா அண்ணங்களை. அவுகளோட கிராப்புத் தலையைச் சீவ இவ்வளவு பெரிய கண்ணாடி கேக்குதாக்கும்’’ என்று ஒரு மூச்சு புலம்பித் தீர்த்து விடுவாள் அலமு.

ட்ரெஸ்ஸிங் டேபிள் கலாச்சாரமெல்லாம் பரவலாக இல்லாத அந்தக்கால கட்டத்தில் கண்ணாடிக்குக்கீழே சற்று உயரமும் அகலமுமான ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்து மலாயாவிலிருந்து முன்பு வந்திருந்த காலி ரொட்டிப்பெட்டிக்குள் எவர்சில்வர் புட்டாமாவுக்கிண்ணம், ஐடெக்ஸ் மைடப்பி,சாந்துக்குப்பி என்று எல்லாவற்றையும் அடுக்கித் தனக்கே உரிய சொத்துப்போல அதன் மீது வைத்துக் கொண்டிருந்தாள் அலமு.

அலமு ஒரு நாளில் எத்தனை முறை அந்தக்கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள் என்பதற்குக்கூட சாலாவிடம் கணக்கு இருந்தது. தூங்கி எழுந்து முகம் கழுவி ஒரு தடவை, குளித்துத் தலை சீவும்போது மட்டுமல்லாமல் வெளியே கிளம்பும்போது மின்வெட்டாக ஒரு நொடி, வீடு திரும்பியதும் ஒரு தரம், படுக்கும் முன் பிரிய மனமில்லாததைப்போல ஒரு பார்வை..இவை அவளின் குறைந்தபட்சக் கணக்குகள் மட்டும்தான்.

அலமுவுக்கும் அந்தக்கண்ணாடிக்கும் உள்ள பந்தத்தைப்பற்றி சரித்திரம் போன்ற செய்திகளைத் தன்னுள் சேமித்து வைத்திருந்த சாலாவுக்கு ‘இப்டி மாயமந்திரம் போட்ட மாதிரி இவ கெறங்கிக் கெடக்காளே, அப்படி என்ன எளவுதான் இருக்கு அதுக்குள்ளே’ என்று அப்போதெல்லாம் கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருந்தது.

செக்கில் ஆட்டியெடுத்த தேங்காய் எண்ணெயை வஞ்சகமில்லாமல் தலை நிறையப் பூசி ,வழித்து வாரி சில்க் ரிப்பன் வைத்து இறுக்கிக்கட்டி இரட்டைப் பின்னலாக மடக்கிப்போட்டிருந்தாலும் முதுகின் பாதி வரை எட்டிக்கொண்டிருந்த கூந்தலோடு தெரியும் பத்து வயது அலமு, இடுப்புக்குக் கீழ்வரை நீண்டு தொங்கும் கருநாகம் போன்ற ‘ஒத்தச்சடை’ யை லாவகமாய் முன் பக்கம் சுழற்றியபடி அழகு பார்க்கும் கல்லூரிக்காலத்து அலமு, கையில் பிடித்திருக்கும் சின்னக்கண்ணாடியின் துணையோடு மணக்க மணக்கத் தாழம்பூ வைத்து வள்ளியாச்சி தைத்து விட்ட சடையைப் பின்புறக்கண்ணாடியில் பார்த்து ரசித்துக்கொண்ட அலமு, திருமணக்கோலத்தின்போது செய்த தலையலங்காரம் திருத்தமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்ட அலமு என்று இப்போதும் விதம் விதமான தன் தோற்றங்களால் அந்தக்கண்ணாடியை நிறைத்துக்கொண்டு அலமுவே நிற்பதாகப் பிரமை தட்டியது சாலாச்சிக்கு.


நாளைப்பொழுது விடிந்து விட்டால் அலமு வந்து விடுவாள் என்ற உற்சாகத்துடன் துயில் கலைந்த சாலாச்சி, கிணற்றடி முதல் முகப்பு பட்டாசாலை வரை ஒருதரம் முழுசாகப் பார்வையிட்டுவிட்டுத் தயக்கத்தோடு இரட்டைவீட்டு அறைக்குள் நுழைந்தாள்.

‘ அது’ அப்படியேதான் இருந்தது.

சின்ன வயதில் ‘கப்பலோட்டிய தமிழன்’ முதல்ஷோ படம் பார்க்க, மகர்நோன்புப் பொட்டலுக்குப் பக்கத்திலிருக்கும் சரஸ்வதி டாக்கீஸுக்கு அப்பத்தாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவர்கள் இரண்டு பேரும் போயிருந்தார்கள். அப்போது வெளிறிப்போய்ப் பழுப்பேறிக்கிடந்த அந்த ‘வெள்ளித் திரை’க்கு மத்தியில் டிஸைன் போட்டது போல் அடைசல் கறுப்பாய் இருந்த அழுக்கைப்பார்த்து விட்டு  ‘’அது என்ன சாலாக்கா நடுவிலே? பூச்சி கீச்சி பறந்து வந்து ஒட்டிக்கிச்சா? சிவாஜி வந்து கப்பலோட்டும்போது அவரு கொரலக்கேட்ட ஒடனேயே அது பறந்து போயிரும் பாரு’’என்று சொல்லி விட்டுக் கலகலவென்று அலமு சிரித்தது இப்போது நினைவில் முட்டியது.

வெளி வாசலிலிருந்து யாரோ பெயர் சொல்லிக்கூப்பிட கவனம் கலைந்தாள் சாலா. பக்கத்து வீட்டு சிகப்பி ஆச்சிதான்.

‘’ வீடு  பிரமாதமா ஆயிறுச்சு சாலா, அந்தக் கானாடுகாத்தான் அரமனை வீடு கூடத் தோத்துப்போயிறும்.’’

‘’பின்னே…மூணுவருசம் களிச்சில்லே என்னோட தங்கச்சி வாரா.
ஏ தெவ்வி, தோப்பிலே இருந்து எறக்கிக் கொண்டுவந்து வச்சிருக்கோம் பாரு எளநி, அதிலே ஒண்ணை ஒடைச்சு லோட்டாவிலே ஊத்தி செகப்பி ஆச்சிக்குக் கொண்டா’’

‘’சும்மா சொல்லக்கூடாது சாலா, புதையலை பூதம் காக்கிற மாதிரியில்லே ஒத்தை ஆளா இந்த வீட்டை இத்தனை வருசமாப் பாதுகாத்துக்கிட்டிருக்கே நீ’’

சிகப்பி ஆச்சி முக தாட்சண்யத்துக்காகவோ சம்பிரதாயத்துக்காகவோ பேசுவதில்லை என்பதால் சாலாவும் மனம் திறந்தாள்.

’’வேற என்ன பண்றது செகப்பியாச்சி, மேப்படிப்பு, உத்தியோகம், கல்யாணம்னு அழகு,மெய்யப்பன், அலமுன்னு மூணு பேருமே ஆளுக்கொரு தெசை போயி அங்ஙனயே இருந்திட்டாக. அப்பச்சி ஆத்தா இருந்தவரைக்கும் அவுகளைப் பார்த்துக்கறது சரியாப்போச்சு. அவுக காலம் முடிஞ்சப்பறம் ஒரு கல்யாணம் காச்சின்னாதானே சொந்த ஊரைத் தேடிப் புள்ளக இங்கே  வாராக’’

’’அதிலேயும் அலமு இங்க வந்து எம்புட்டு நாள் ஆயிருச்சு..?ஆமாம்…அவளுக்கு ஒரு மகதானே, அதையும்தான் கட்டிக்கொடுத்தாச்சே, அப்புறம் இங்கே வாரதுக்கு என்ன’’

‘’அதுதான் ரொம்ப நாளா என்னையப் போட்டுக் குடையுது செகப்பியாச்சி. பொண்ணுக்குப் பிரசவம் பார்க்க லண்டனுக்குப் போனாளே அந்த ஒரு வருசம் மட்டும்தான் அவ இங்கே வரல. மத்தபடி அவ செட்டியார் மெட்ராஸ்லே இருந்தாலும் பம்பாய்லே இருந்தாலும் வருசத்துக்கு ஒரு தரமாவது இந்த சாலாக்காவைப் பார்க்காம இருக்கவே முடியாது அவளாலே. இப்ப மூணு வருசமா என்ன ஆச்சுன்னே தெரியாமப் பேதலிச்சுக் கெடக்கேன் நான். இந்த செல்போன் வந்தப்பறம் விடாம என் கூடப் பேசறவ இப்ப அதையும் மாசம் ஒரு தடவை இரண்டு தடவைன்னு கொறைச்சுக்கிட்டா’’

‘’மனசைப் போட்டு அலட்டிக்காதே சாலா, அதுதான் நாளைக்கு அவளே வந்திடப்போறாளே அப்பறம் என்ன? அலமுவோட ‘ஆம்பிளையான்’ இருக்காரே .., அந்த எளையாத்தங்குடிச் செட்டியார் – அவரு ஒரு மாதிரி சிடுசிடுத்தவரு, கொணம் பத்தாதவருங்கிறது நமக்கெல்லாம் தெரிஞ்சதுதானே. நீ போய் வேலையைப்பாரு. நாளைக்கு அலமு வந்தப்பறம் நான் வந்து பார்க்கறேன்’’


லமுவின் வருகைக்காகவே செய்த சீப்பு சீடையையும் மணகோலத்தையும், மாவுருண்டையையும் ருசி பார்த்துக்கொண்டிருந்த சாலாச்சியைக் கைபேசியில் கூப்பிட்டான் மூத்த தம்பி அழகப்பன். ஆசைஆசையாய் போனை எடுத்த ஆச்சியின் முகம் அவன் பேசப்பேச இருண்டுகொண்டே வந்தது. அழைப்பு முடிந்தபோது திக்பிரமை பிடித்தவள் போல் ஆகி விட்டிருந்த அவள், வளவுத் தூணைப் பிடித்துக்கொண்டு அதில் அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். அடுப்படியிலிருந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்த தெய்வானை ஒரு சின்ன செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வேகமாக அவளிடம் வந்தாள்.

‘’இப்படி வேர்த்திருச்சே ஆச்சி…சரி சரி….எதுன்னாலும் மொதல்லே இதைக் குடிங்க’’
என்றபடி செம்பை அவள் கையில் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக்கொண்டு முழுச்செம்புத் தண்ணீரையும் தொண்டையில் அப்படியே சரித்துக்கொண்ட சாலாச்சி, முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைப்  புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு தன்னை ஓரளவுக்கு நிதானப்படுத்திக்கொண்டாள். கையெழுத்து மறையும் நேரத்தைக் காட்டுவது போல மாலை மங்கிக்கொண்டு வந்தது.

‘’தெவ்வி, முகப்பு இருட்டா இருக்கு பாரு. போய் வெளக்கைத்தட்டி விட்டுட்டு அந்த சுப்புவை மட்டும் இங்ஙனே கூட்டிக்கிட்டு வா’’ என்றாள்.

இருவரும் அவளருகே வந்தபின், சுற்றுமுற்றும் வேறு யாருமில்லை என்பதை மறுபடியும் உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு ‘’இப்ப என்கிட்டே என்ன ஏதுன்னெல்லாம் எதிர்க்கேள்வி போடாதீக, நான் சொல்லப்போறதை மட்டும் கேட்டுக்கங்க. நாளைக்கு அலமு வந்தப்பறம் அவளா வீட்டுக்குள்ளே எங்கே வேணுனாலும் போகட்டும் எதை வேணும்னாலும் பாத்துக்கட்டும்…நாமளா முந்திரிக்கொட்டை மாதிரி இங்கே வாங்க..இதைப் பாருங்கன்னு ஏதும் சொல்ல வேண்டாம்,புரியுதா’’ என்று மட்டும் சொன்னாள்.

எதையோ கேட்கத் துடித்த சுப்புவின் வாய், ஆச்சியின் உள் மனத்தைப் படித்து விட்டதைப் போல சட்டென்று மூடிக்கொண்டது.


ல்யாணக் கோலாகலம் முடிந்த இடம் போல வீடு மொத்தமும் சோவென்று நிசப்தம் காக்க, மின்னல் கீற்றைப்போலக் கழிந்து போன அந்த இரண்டு நாட்களையும் – வழக்கமான குதூகலத்துடன் இல்லாமல் மனபாரத்தோடு அசைபோட்டபடி துவைக்கிற கல் மீது உட்கார்ந்திருந்தாள் சாலாச்சி.

உதவிக்கு வந்த பெண்ணின் துணையோடு காரை விட்டு இறங்கினாலும் அவள் பிடியிலிருந்து உடனே தன்னை விடுவித்துக் கொண்டு ’’சாலாக்கா’’ என்று பாய்ந்து வந்து தழுவிக்கொண்ட அலமுவைத் தானும் அணைத்துக்கொண்டபடி, பொங்கி வந்த கண்ணீரை ஆனந்தக்கண்ணீராக மாற்றிக்கொள்ளப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்  சாலாச்சி. ஒரு காலத்தில் சந்தனத்தை நினைவுபடுத்திக்கொண்டிருந்த அலமுவின் மேனி இப்போது தழல் தின்று தீர்த்ததைப் போலக் கறுத்து மெலிந்து போயிருந்ததும், வேடு கட்டுவது போல அவள் தலையைச் சுற்றியிருந்த துணிப்பொதியும் முதல்நாள் மாலை அழகப்பன் எச்சரித்திருந்த கொடூர நோயின் சாட்சியங்களாக அவள் கண் முன்னால் நின்று கொண்டிருந்தன.

எதனாலோ செலுத்தப்பட்டது போல வலிய வருவித்துக்கொண்ட ஒரு உற்சாகத்தோடு, எதையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் அந்த இரண்டு நாட்களும் வளைய வந்து கொண்டிருந்தாள் அலமு. தோட்டத்துப்பக்கம் ஆத்தா வள்ளியாச்சி வளர்த்து வந்த துளசிச்செடியில் ஆரம்பித்துப் பின் வாசலில் நாலு பிள்ளைகளுமாய் நட்டு வைத்த மாங்கன்று காய்த்துக்குலுங்குவது வரை ஒவ்வொன்றையும் ஆசைதீரப் பார்த்துத் தன் உயிருக்குள் நிரப்பிக் கொள்வதைப்போலக் கண்களால் விழுங்கிக்கொண்டாள்.

‘’ வீடுன்னா இப்படி இருக்கணும் சாலாக்கா. என்னதான் வசதியிருந்தாலும் நாங்க இருக்கிறதெல்லாம் பொறாக்கூடு போலத்தானே…இங்கேதான் நிம்மதியா மூச்சு விடவே முடியுது’’ என்றபடி மூச்சு விடாமல் பேசவும் செய்தாள்.  குடும்பத்தோடு குற்றாலம் போய் அங்கே நாலு நாள் காட்டேஜ் எடுத்து சமைத்து சாப்பிட்டு நாளைக்கு ஒரு அருவியாய் ஆசை தீரக் குளித்தது,அப்போது அழகுவையும் தன்னையும் மட்டும் குரங்கு துரத்திக்கொண்டு வந்தது, டிரான்சிஸ்டர் ரேடியோவை மொட்டை மாடியில் மறைத்து வைத்துக்கொண்டு சிலோன் ரேடியோ கேட்டபடி தானும் சாலாக்காவும் அதோடு பாடிக் கொண்டிருந்தபோது வீட்டுப்பாடம் எழுதாமல் பாட்டுப் படித்துக்கொண்டிருந்த அவர்களைப் பிடித்து அப்பச்சி உக்கி போட வைத்தது……என்று தொடர்பே இல்லாமல் இன்னும் இன்னும் என்று எதையெல்லாமோ பேசிக்கொண்டு போனாள் அலமு. தன் உடல் நிலையை மறைக்க சக்திக்கு மீறி அவள் அப்படிச் செய்வது சாலாவுக்குப் புரிந்தது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அது பயமாகக் கூட இருந்தது.

‘’சாலாக்கா, நம்ம ஆத்தா கை சமையல் பக்குவமே தனிதான். ஆனாலும் பணியாரத்துக்கு நீ ஒரு வரமொளகாய்ச்சட்னி செய்வியே. அதோட ஒறைப்பு ஏறும்பாரு சுள்ளுன்னு..அதை வேற எதாலேயும் அடிச்சுக்க முடியாது. அதை எனக்கு செஞ்சு கொடுக்கா…! அப்பறம் நீ அவிக்கிற கவுனி அரிசி , கிண்டற கும்மாயம் எல்லாமே வேணும் எனக்கு, இப்பமே சொல்லிட்டேன்’’

ஆசை ஆசையாய்ப் பட்டியல் போட்டாலும் அரைத் தட்டுக்கு மேல் அவளால் எதையும் காலி செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சாலா. பேச நினைத்தை முழுவதுமாய்ப்பேசி முடிக்கும் முன் அரைக்கண் செருகி அவள் தன் மடியில் உறங்கிப்போவதையும்தான்! நாலாப்பு படிக்கும்போது வாய்ப்பாடு ஒப்பித்துப் பார்த்துக்கொண்டே தன் மடியில் தூங்கிப்போன அந்தச் சின்னஞ் சிறு அலமுவின் தலையைக் கோதி விட்டது போல் இப்போதும் மெள்ள அவளை வருடிக்கொடுத்துக் கொண்டே இருந்தாள் சாலாச்சி.

ஊருக்குப் புறப்படும் நேரத்தில் ‘’இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த வீட்டிலே ஒத்தையாவே இருக்கப்போறீக சாலாக்கா. உமையா அடுத்த வருஷமே லண்டனிலே இருந்து திரும்பிவந்திடப்போறா. அப்பறம் நீங்க அவளோட கூடப்போய் இருந்தீகன்னா புள்ள மொகத்தைப்பார்த்துக்கிட்டு ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கலாம். என்னாலேதான் இனிமே யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லேன்னு ஆகிப்போச்சு’’ என்று சொன்னபோது மட்டும் அவள் கண்கள் இலேசாகக் கலங்கியதைப் போலிருந்து.

இருந்த நாற்பத்தெட்டு மணி நேரமும் வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் தன் காலால் அளந்த அவள் , மறந்தவாக்கில் கூட இரட்டைவீட்டுப்பக்கம் போயிருக்கவில்லை.


லமு வந்து போய் மூன்றுமாதம் கடந்திருந்தது. ஒரு பின் மதிய வேளையில் அவள் காலமாகி விட்ட செய்தியைக் கைபேசியில் சாலாச்சிக்குச் சொல்லிக்கொண்டிருந்தான் சின்னத்தம்பி மெய்யப்பன். உள்ளே தூசி தட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த சுப்பு, தற்செயலாய் நிமிர்ந்து பார்த்தபோது, நடுவிலிருந்த கரும்புள்ளிக்கு நேர் கீழாக அந்தக் கண்ணாடி விரிசல் விட்டிருந்தது.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....