துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.3.21

முகமூடி-சிறுகதை

 சொல்வனம் 242 இணைய இதழில் என் சிறுகதை.

                                                     முகமூடி


சரிவான ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்திருந்த ஷெட் போன்ற ஒரு சின்னக் கட்டிடம். அதன் நுழைவுப்பகுதி, தகரக் கதவொன்றால் மூடப்பட்டிருக்க, தடுப்புக் கம்பிகள் இல்லாமல், ஒரு பெரிய பொந்தளவுக்கு மட்டுமே திறந்திருந்த ஜன்னலுக்குள் முடிந்தவரை தலையை நுழைத்துவிட எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதரும், கிட்டத்தட்ட அவரது மகன் வயது மதிப்பிடக்கூடிய நடுத்தர வயதுக்காரர் ஒருவரும் இரண்டு பக்கங்களிலிருந்தும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

அடர்ந்த வெண்பனி, திரையாய்ப் போர்த்தியிருந்த இமயத் தொடர் இடுக்குகளின் வழியே செவ்வொளியைக் கசிய விட்டபடி வெளியேற முயன்றுகொண்டிருந்த சூரியனைச் சிறைபிடிப்பதில் மும்முரமாக இருந்த நான், அக்காவின் குரலால் கவனம் கலைந்தேன்.

‘’இதுக்குத்தான் அம்மு உன்னோட வரணும்னாலே நான் ஆயிரம் தரம் யோசிப்பேன். வந்த வேலையை விட்டுட்டுப் பைத்தியக்காரி மாதிரி மரம், மட்டை, மலை, மனுஷன்னு பார்க்கிறதையெல்லாம் படம் எடுக்கப் போயிடுவே. அப்புறம் பிடிக்கவே முடியாது உன்னை.’’

‘’கூல் டவுன் அக்கா..! வந்த வேலை… அது பாட்டுக்கு அது ஒரு பக்கம்! அதுக்காக இவ்வளவு தூரம் வந்திட்டு இப்படி அபூர்வமான ஒரு நேரத்தைத் தவற விட்டுட முடியுமா? உன் கவலை, டென்ஷன் எல்லாத்தையும் கொஞ்சம் மூட்டை கட்டி வச்சிட்டு நீயும்தான் இந்தக் காட்சியைக் கொஞ்சம் பாரேன். சூரியனும் பனியும் ஒண்ணோட ஒண்ணு போட்டி போட்டுக்கிட்டிருக்கிற அபூர்வமான ஒரு சூரிய உதயத்தை வாழ்க்கையிலே இனிமே எப்ப பார்க்கக் கிடைக்கப் போகுதோ நமக்கு?’’

‘’என் கண்ணிலேயும் அது பட்டுக்கிட்டுதான் இருக்கு அம்மு. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. இயற்கையிலே இருக்கிற இந்த அழகை…, நமக்கு விடை தெரியாம இதிலே மறைஞ்சிருக்கிற எத்தனையோ புதிர்களை எவ்வளவுதான் ஹைடெக்கா இருந்தாலும் – உன்னோட காமரா வழியா கொண்டு வந்திட முடியும்னு நினைக்கிறியா நீ?’’

பெரும்பாலான நேரங்களில் ஒரு நடைமுறைவாதியாக மட்டுமே இருந்து வரும் அக்காவிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகள் அதிகம் வருவதில்லை என்பதால் நான் சற்றுநேரம் அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘’என்ன அப்படிப் பார்க்கிறே? உன்னோட சேர்ந்து சேர்ந்து நானும் பைத்தியமாயிட்டேன்னா? ஆரியக் கூத்தாடினாலும் காரியம் கையை விட்டுப் போயிடக்கூடாது. அம்மு, அந்த மானேஜர் ’பையா’ இருக்காரே-.. அவர் பேரென்ன பிரதீப்பா, பிரதாப்பா? இப்பதான் இடது பக்கமா எங்கேயோ போனதைப் பார்த்தேன். அவரோட தொத்திக்கிட்டே இன்னும் நாலு பேரும் கூடப் போறாங்க. நாமளும் முந்திக்கிட்டாகணும். அம்மு..! என் கண்ணு இல்லே? அந்தப் பக்கம் கொஞ்சம் போய்த்தான் பாரேன். ஒருவேளை இப்ப அவர் திரும்பிக்கூட வந்துக்கிட்டிருப்பாரா இருக்கும்’’

‘’ஏங்க்கா இப்படி அலட்டிக்கறே? அதுதான் உன்னோட செல்லப் பிள்ளை – அந்த ’முகமூடி’ கிட்டே குசுகுசுன்னு இந்தியிலே பேசி பக்காவா ஏதோ ஏற்பாடு பண்ணி வச்சிருக்கே போல இருக்கே.”

‘’பாவம் அம்மு..! அவனைப்போய் ஏன் இப்படிக் கரிச்சுக் கொட்டறே? இந்த இடத்தைப் பொருத்தவரைக்கும் அவன் ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். அந்த அளவிலே அவனுக்கு என்ன தெரியுதோ அதை வச்சு நமக்கு அப்பப்ப ஏதோ ஐடியா கொடுத்துக்கிட்டிருக்கான், நாமதானே அதை கேரிஅவுட் பண்ணணும்? இதோ பாரு அம்மு, நேத்து மத்தியானம் இங்கே வந்ததிலே இருந்து ரெண்டு மூணு தரம் அந்த மேனேஜரோட என் ஓட்டை இந்திய வச்சு நானும் பேசிப் பார்த்துட்டேன். நீயும்தான் ஒரு தரம் உன்னோட முகத்தைக் காட்டி இங்கிலீஷ்லே ட்ரை பண்ணிப் பாரேன். அந்த இடம் ரொம்ப மேடா இருக்கு, இந்த முழங்கால் வலியோட ஏறி ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு பார்க்கறேன். இல்லேன்னா நானே..’’

‘’நீ வேற அப்படியெல்லாம் விழுந்து புரண்டு சாகசம் பண்ணி வச்சுடாதேக்கா. பேசாம சூரியனைப் பார்த்தோமா, குளிர் காய்ஞ்சோமான்னு இங்கேயே உக்காந்திரு. நான் போய் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்’’ என்று அவளைத் தடுத்துவிட்டு இடதுபுற ஏற்றத்தில் பாதம் பதித்து மெள்ள ஏறிப்போனேன்.

மலை சார்ந்த சிற்றூரான ’ஃபட்டா’வின் ஒதுக்குப்புறத்தில் – ஒடுக்கமான சாலைகளுக்கும் மலைத்தொடர்களுக்கும் இடையே இருந்த அகலமான ஒரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததது கேதார்நாத் பயணத்துக்கான அந்த ஹெலிகாப்டர் நிலையம். பத்து நிமிடத்துக்கொரு தரம் அங்கும் இங்குமாய்ப் பறந்து கொண்டே இருக்கும் ஹெலிகாப்டர்களுக்கான ஹெலிபேட் ஓடுபாதைகள் இடதும் வலதுமாய் அமைந்திருக்க, இடையிலிருந்த டிக்கெட் ஷெட்டுக்கு முன்னால் போடப்பட்டிருந்த சோஃபா வடிவநாற்காலிகளில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.

பயணிகள் காத்திருக்கும் ஹாலும் அதை ஒட்டியே இருந்தாலும் டிக்கெட் ஷெட்டின் மீது பதிந்திருந்த எங்கள் பார்வை நொடிப்பொழுதும் அதை விட்டு விலகிவிடக்கூடாது என்றே அந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தோம்.

ஏதோ யோசனையில் கிட்டத்தட்ட இடதுபுற ஹெலிபேட் அருகே வரை ஏறிவிட்ட நான், சட்டென்று சறுக்கி விழப்பார்க்க, என்னைத் தாங்கிப் பிடித்துத் தூக்கிய கரம்…, அது மானேஜர் பிரதாப்பேதான்.

‘’சாவ்தான் பஹன்ஜி, சாவ்தான், டேக் கேர்’’

என்று இந்தியிலும் ஆங்கிலத்திலுமாய் அவர் சொல்லிக்கொண்டே போக – வாய்த்த சமயத்தை நழுவவிடாமல் நேற்றிலிருந்து காத்திருக்கும் மூத்த குடிமக்களாகிய எங்களுக்கு டிக்கெட்டில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற என் கோரிக்கையை சுருக்கமான நயமான ஆங்கிலத்தில் அவர் காதுக்குள் ஓதினேன்.

‘’சிந்தா மத்..பஹன் ஜி !.. வில் டேக் கேர். ஆராம் ஸே பைடியே,’’ என்று சொல்லிக்கொண்டே விரைவான காலடிகளில் ஷெட்டை நோக்கி நடந்தார் அவர்.

அக்காவைக் கேலி செய்துவிட்டு நானே சறுக்கிவிட்ட அந்தக்காட்சி எவர் கண்ணிலேனும் பட்டிருக்கக்கூடுமோ என்ற மெல்லிய கூச்சத்துடன் திரும்பிப் பார்த்தேன். அக்கா உட்பட நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த அத்தனை பேர் கண்களும் ஒரு இடத்தில் மட்டுமே நிலைகுத்தி இருந்தன. தான் அணிந்திருந்த முக மூடியைத் தற்காலிகமாகக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பீடி பிடித்துக்கொண்டிருந்த ‘முகமூடி’, அந்த பீடித்துண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு அக்காவை நெருங்கி வந்துகொண்டிருந்தான்.

………………………………………

நேற்று மதியம் ஃபட்டாவில் வந்து இறங்கியதுமே கண்ணில் பட்டவன் இந்த ’முகமூடி’தான். சுற்றுவட்டாரத்திலிருந்த அத்தனை ஹெலிகாப்டர் நிலையங்களையும் அலசிப்பார்த்து அத்தனையும் கைவிரித்துவிட்ட பிறகு, கடைசிப்புகலாக – ஒரு இரண்டாம் சுற்றாக இங்கே வந்து நாங்கள் இறங்கியபோது, ‘புக்கிங் க்ளோஸ்ட்’ என்று சாக் கட்டியால் எழுதப்பட்ட அறிவிப்புப்பலகை ஒன்றைப் பெருத்த ஓசையோடு அடைக்கப்பட்டிருந்த கதவுக்கு வெளியே நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தான் அந்த ’முகமூடி’. சுட்டுப்போட்டாலும் இந்தியே வராத என்னைப்போல் இல்லாமல், தன் கணவரின் பணி மாற்றத்தின்போது பல வட நாட்டு ஊர்களோடும் மொழிகளோடும் பரிச்சயம் கொண்டிருந்ததால் அவனருகே சென்று ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தாள் அக்கா. நான் சற்றுத் தள்ளியே நின்று கொண்டிருந்தேன்.

‘’ரெண்டு மணியோட இன்னிக்கு புக்கிங் முடிஞ்சு போச்சாம். இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு புக்கிங் கிடைக்கறது கஷ்டம்தான், அதுக்கப்புறம் ஏதாவது ஒரு நாளிலே அமைஞ்சாதான் உண்டுங்கிறான்’’

‘’இதுக்குத்தான்..’’என்று ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு விட்ட நான்,

‘’அக்கா! நம்ம ரெண்டு பேரும் எல்லாத்துக்கும் மனசைத் தயாரா வச்சுக்குவோம்னு முதல்லியே முடிவு பண்ணிட்டுத்தானே கெளம்பி வந்திருக்கோம்..? அவசரப்படாம பொறுமையா இரு. என்ன ஏதுன்னு மெள்ள விசாரிப்போம். காலையிலே எட்டு மணிக்கு வழியிலே ஏதோ சாப்பிட்டது. இப்ப மூணாகப்போகுது. நீ சுகர் பேஷண்ட் வேற, பசி தாங்க மாட்டே. கொஞ்சம் காருக்குள்ளேயே உக்காரு. சாப்பிட ஏதாவது கிடைக்குமா பார்க்கிறேன்’’ என்று அவளை அமர்த்திவிட்டு காரோட்டி வந்த விஜயை அழைத்து சாப்பாட்டு வசதி பற்றி விசாரித்து வர அனுப்பினேன்.

அக்காவின் முகத்தில் களைப்போடு கவலையும் அப்பிக்கிடந்தது.

‘’தப்புப் பண்ணிட்டோமோ அம்மு’’ என்றாள்.

‘’அக்கா, முதல்லே சாப்பிட்டு முடிப்போமே. அது வரைக்கும் வேறெதையும் இப்ப நினைக்க வேண்டாம், சரியா’’

உணவு விடுதியைத் தேடிக்கொண்டு போன விஜய், தானும் அந்த ’முகமூடி’ மனிதனையே கூட்டிக்கொண்டு திரும்பி வந்தான். இங்கே அவன்தான் ’ஆல் இன் ஆல்’ போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அக்கா அளவுக்கு அவன்மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை என்பதோடு இனம் விளங்காத ஏதோ காரணத்தால் அவன்மீது ஒரு வகையான ஒவ்வாமையும் கொண்டிருந்தேன் நான். ஜன நெரிசல் அதிகமில்லாமல், தூய்மையான பனிக்காற்று மட்டுமே பரவியிருந்த அந்த இடத்தில் ஒரு பெரிய கைக்குட்டையால் அவன் தன் வாயையும் மூக்கையும் இறுகக் கட்டிக்கொண்டிருந்தது (அதுவும் கொரோனாவுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தில்) எனக்குப் புரியாத வினோதமாகவே இருந்தது. ஏனோ ஒரு மர்ம மனிதன் போலவே அவன் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தான்.

………………………………………

கங்கைக் கரையை ஒட்டிய ஆசிரமம் ஒன்றில் நடக்கும் இரண்டு வார தியானப் பயிற்சி முகாமுக்காக ரிஷிகேசம் செல்வதென்று முடிவெடுத்து, அக்காவும் நானும் அதற்கான முன்பதிவும் செய்துகொண்டிருந்தபோது எங்கள் பயணத் திட்டத்தில் கடைசிப் பின்னொட்டாகக் சேர்க்கப்பட்டதே இந்த கேதார்நாத். இட ஏற்பாட்டிலிருந்து சகலமும் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் விமான டிக்கெட்டுக்காகக் கணினியைத் திறந்தபோது அக்கா அந்த ஆசையை முன் வைத்தாள்.

‘’அம்மு, திடீர்னு இப்படி சொல்றேனேன்னு வள்ளுன்னு விழாதே. எனக்கொண்ணு தோணுது. நம்ம கேம்ப் முடிஞ்சு சாமானை அங்கேயே வச்சிட்டு கேதார்நாத் போயிட்டு வந்திடலாமா? ஆசிரமத்தைப் பார்த்துக்கற ஆச்சி உனக்குத் தெரிஞ்சவங்கதானே? ஒரு மூணு நாள் கூடுதலா தங்க ரூம் தர மாட்டாங்களா..? கேதார் போக ஹெலி டிக்கெட், கார் ஏற்பாடு எல்லாம் அவங்களையே கேட்டுப்பார்த்தா என்ன?’’

ஆச்சியோடு பேசியபோது, ’’வேறெதிலேயும் சிக்கலில்லைம்மா. ஆனா ஹெலிகாப்டர் டிக்கெட் மட்டும் மூணு நாலு மாசம் முன்னாடியே ஆன்லைன்லே புக் ஆயிடுது. ஒரு ஆளுக்குப் போகவர ரெண்டாயிரத்து ஐநூறுன்னு கவர்ன்மெண்ட் வச்சிருக்கிற ஹெலிகாப்டர் டிக்கெட்டை எட்டாயிரம், ஒம்பதாயிரம்னு எனக்குத் தெரிஞ்ச ஏஜண்ட் ஒருத்தர் ப்ளாக்கிலே வாங்கித் தராரு. ஆனா… அப்படிப்போக உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். பேசாம சாமி மேல பாரத்தப் போட்டுட்டு எதுக்கும் மூணுநாள் கூட இருக்கிற மாதிரியே வாங்க. ட்ரை பண்ணிப் பார்த்திடுவோம்’’ என்றார் ஆச்சி.

ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது முகாமுக்கு வந்து தியானத்தோடு கூடவே தினமும் இதையும் முயற்சி செய்து பார்த்த பிறகே புரிந்தது.

’’என்னோட வார்த்தையை நம்பி சந்தோஷமாக் கிளம்பிப் போங்கம்மா. நீங்க ரெண்டு பேருமே சீனியர் சிடிஸன்ஸ். கட்டாயம் உங்க முகத்தைப் பார்த்தே டிக்கெட் கொடுத்திடுவாங்க. தைரியமாப் போங்க.. நீங்க வேணும்னா பாருங்களேன், கட்டாயம் தரிசனம் பண்ணிட்டுத்தான் வருவீங்க’’ என்று உறுதி சொல்லி, ஹெலிகாப்டர் தளம் இருக்கும் ஊர் வரை சென்று வர வாகனமும் தந்து வழியனுப்பி வைத்த ஆச்சியின் வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு இப்படி நடு மத்தியான வேளையில் மலைகளுக்கு நடுவே வந்து நின்று கொண்டிருந்தோம் நாங்கள்.

பேச்சு வார்த்தையை ஒரு மாதிரி முடித்துக்கொண்டு என் பக்கத்தில் வந்தாள் அக்கா.

‘’அம்மு, நாம சீனியர் சிடிஸன்ஸ்ங்கிறதாலே ஆச்சி சொல்றதையேதான் அவனும் சொல்றான். ஆனா..கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணச் சொல்றான். ஹெலிபேட் பக்கத்திலே இருக்கு பார்த்தியா ஹோட்டல் சன்ரைஸ், அதிலேயே நாம சாப்பிட்டுக்கலாம். ராத்திரி தங்கவும் அங்கேயே ரூம் ஏற்பாடு பண்ணித் தரேன்னு சொல்றான். நாளைக்குக் காலையிலே இருந்து ட்ரை பண்ணினா நிச்சயம் மத்தியானத்துக்கு மேலேயாவது கட்டாயம் டிக்கெட் கிடைக்க சான்ஸ் இருக்கும்ங்கிறான்.’’

எனக்கென்னவோ அந்த வார்த்தைகளில் நம்பிக்கையில்லை.

’’நீ இப்படித்தாங்கா எல்லாரையுமே சட்சட்டுன்னு உடனே நம்பிடறே, அவன் மூஞ்சியும் முகமூடியும்…! பார்த்தாலே பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி’’

விஜய்க்கும் ’முகமூடி’க்கும் தமிழ் தெரியாதென்ற நம்பிக்கையில் அக்காவிடம் கத்தினேன்.

‘’நம்ம கிட்டேயிருந்து பணத்தைக் கறந்து ஹோட்டல்காரன் கிட்டே கமிஷன் அடிக்கத்தான் அவன் இப்படி வேலை பண்றான். நீயே யோசிச்சுப்பாரு, நாம வரும்போது மூணுநாள் புக்கிங் இல்லேன்னு போர்ட் வச்சவனே அவன்தானே?’’

’’அம்மு எதுக்கும் ஒரு சான்ஸ் எடுத்துத்தான் பார்ப்போமே? எப்படியும் நம்ம கைவசம் இன்னும் ரெண்டு நாள் முழுசா இருக்கு. நாளைக்கு மதியம் வரை பார்ப்போம். முடியலியா., .நாளைக்கு மறுநாள் ரிஷிகேஷ் திரும்பிடுவோம்’’

………………………………………

வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மனமில்லையென்றாலும் மலைப்பாங்கான அந்தச் சின்ன இடத்தில் ஹெலிபேடை ஒட்டியிருந்த அந்த அறை என்னவோ எளிமையான வசதிகளோடு நன்றாகவே இருந்தது. எண்ணெயில்லாத சப்பாத்தி, பன்னீர்,பருப்புக்கூட்டு,ஜீரக சாதம் என்று இரண்டாம் தளத்தில் இருந்த எங்கள் அறைக்கு விதம்விதமான சாப்பாட்டு வகைகளோடு கொதிக்கக்கொதிக்க ஃப்ளாஸ்கில் வெந்நீரையும் தன் குழந்தைகள் மூலம் அனுப்பிக்கொண்டே இருந்தார் கீழ்த்தளத்தில் இருந்த ஹோட்டல்காரர். பத்து வயதுக்கு உட்பட்ட அந்தப் பொடிசுகளிடம் அக்கா தன் மொழிப்புலமையைக்காட்டிக்கொண்டிருக்க, நான் அறையை ஒட்டிய வராந்தாவில் போய் நின்றபடி கண்ணெதிரே தெரியும் மலைகளை வெறித்துக்கொண்டிருந்தேன்.

வெள்ளியை உருக்கி ஊற்றி அந்த நிமிடம்தான் வார்த்தெடுத்த பூரண கலசங்களைப் போலப் பொலிந்து கொண்டிருந்த சிகரங்கள், அவற்றினூடே குறுக்கும் நெடுக்குமாய்ப் பறந்து கொண்டிருந்த இயந்திரப்பறவைகளாய் ஹெலிகாப்டர்கள். இவற்றில் ஏதோ ஒன்றில் ஏறி…, எந்தச் சிகரத்தின் பின்னாலேயோ ஒளிந்திருக்கும் அந்த கங்காதரனைப் பார்க்கமுடியப் போகிறதா எங்களுக்கு?

அறிமுகமில்லாத புது இடம், விறைக்கும் குளிர் என்று எல்லாவற்றையும் ஒரு வழியாக சமாளித்து விட்டுக் கண் செருகும் நேரம், யாரோ கதவு தட்டுவதைப் போலிருக்க அக்கா போய்ப் பேசி விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

‘’யாரு..? அந்த முகமூடிதானே? அக்கா, இப்போ நம்ம ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கொருத்தர் துணை. எதுன்னாலும் என் கிட்டே மறைக்காம சொல்லு. உன் கிட்டே ஏதாவது பணம் கிணம் கேட்டானா அவன்? இப்படி எவன் கிட்டேயோ கொடுத்து ஏமாறணும்னா பேசாம ப்ளாக்கிலேயே எட்டாயிரமோ ஒம்பதாயிரமோ டிக்கெட்டை வாங்கித் தொலைச்சிருக்கலாமே’’

‘’மனம் போன போக்கிலே நீயா ஏதாவது முடிவு பண்ணிக்காதே அம்மு. உன் கிட்ட எப்பவுமே உள்ள குணம் அதுதான். சில மனுஷங்களைப் பத்தி எடுத்த எடுப்பிலேயே இவங்க இப்படித்தான்னு ஏதாவது தீர்மானம் பண்ணிடுவே. இதோ பாரு.., சொல்லப்போனா அவன் எதுவுமே கேக்கலைங்கிறதுதான் நெஜம். நான் ஹேண்ட் பேகை எடுக்கப்போனபோது கூட சைகையால தடுத்து அந்த மாதிரி பேச்சே வேண்டாம்னு வாயிலே விரலை வச்சுக் காட்டினான் தெரியுமா?’’

‘’சரி, சரி, உன் கிட்டே நல்ல பேர் வாங்கிட்டான் இல்லே. விடு..அது போதும்! ஆமாம்..,அப்புறம் எதுக்கு இந்த ராத்திரியிலே இங்கே வந்தானாம்?’’

‘’குளிரிலே நம்மளை மறந்து தூங்கிப்போயிடாம- காலையிலே ரொம்ப சீக்கிரமே எழுந்து தயாராகி..கவுண்டருக்கு நேர் எதிரிலே- நம்ம மூஞ்சி நல்லா தெரியற மாதிரி காட்டிக்கிட்டு உக்காரணும்னு சொல்லி அலர்ட் பண்ணத்தான் வந்தான் அவன்’’

’’இந்த மாதிரி பண்ற சர்வீஸ் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு கடைசியிலே ஒரே தீட்டா தீட்டிடப் போறான்..பார்த்துக்கிட்டே இரு’’ என்று முனகியவாறே கம்பளிக்குள் என்னைப் பொதிந்து கொண்டேன்.

………………………………………

ஒடுக்கும் குளிரில் ஐந்து மணிக்கே எங்களை எழுப்பி ஆறுமணியிலிருந்து அங்கே உட்கார வைத்திருந்தது ’முகமூடி’யின் அந்த எச்சரிக்கை அலாரம்தான் என்பதை அசைபோட்டுக்கொண்டே சரிவில் இறங்கி அக்காவிடம் வந்தேன்.

‘’கருமம்..! பீடியைத் தூக்கிப்போட்டுட்டு நேரா உன் கிட்ட வந்து பேசறான் அவன். உனக்குத்தான் பீடி சிகரெட் நாத்தமே ஆகாதே? அந்த முகமூடிக்காரனை மட்டும் எப்படித்தாங்கா சகிச்சுக்கிறே நீ?’’

‘’அதிருக்கட்டும். நீ அந்த மானேஜர் கால்லே விழுந்து கும்பிட்டே போல இருக்கே? அதுக்கு ஏதாவது பலன் தெரிஞ்சதா?’’

அக்காவின் கண்கள் எதையும் தப்ப விட்டிருக்கவில்லை.

அவளது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,

‘’ரிலாக்ஸ்டா இருங்கன்னு சொல்றார். மனசிலே என்ன இருக்கோ தெரியல’’ என்றேன்.

‘’அதுக்குத்தான் நீ நிமிஷத்துக்கு நிமிஷம் முகமூடி முகமூடின்னு இடிச்சுக்காட்டறியே அவன் இப்ப வந்து ஐடியா கொடுத்துட்டுப்போறான். நம்மளை மாதிரி இங்கே நிறைய சீனியர் சிடிஸன்ஸ் தேறுவாங்க போலே.இருக்கு. ஆனா அவங்களோட சேர்ந்தாப்பிலே குறைஞ்ச வயசுள்ள ஆளுகளும் இருக்கிறதாலே வயசானவங்களை மட்டும் குடும்பத்திலே இருந்து பிரிச்சு அப்படித் துணையில்லாம தனியா அனுப்பி வைக்க மாட்டாங்க. ஆனா, நாம ரெண்டு பேரா மட்டுமே இருக்கிறதாலே நமக்கு டிக்கெட் தர்றது சுலபம்தானாம்.. ஆனா..ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஷெட்டுக்குள்ளே தலையை விட்டு நாம இங்கேதான் இருக்கோம்னு அவங்களுக்குக் காட்டிக்கிட்டே இருக்கணுமாம். இப்போ ஒரு சின்ன பிரேக்குங்கிறதாலே சீக்கிரம் டிஃபனை முடிச்சிட்டு வந்து உக்காரச் சொல்றான்’’

புதினா, கொத்துமல்லித் தழை தூவிய அந்த ஆலு பரோட்டாவைத் தயிரோடும் ஊறுகாயோடும் சேர்த்துச் சாப்பிட நன்றாகத்தான் இருந்தது.

‘’மூணு வேளையும் இப்படி ஆலு பரோட்டா, மேதி பரோட்டா, ஃபூல்கா சப்பாத்தின்னு எப்படித்தான் கோதுமையா சாப்பிடறாங்களோ?’’

‘’நாம இட்லி தோசைன்னு அரிசியா உள்ளே தள்றோம், அவங்களுக்கு கோதுமை’’ என்ற அக்கா, சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த ’முகமூடி’யைக் கைகாட்டி எங்களோடு சாப்பிட வருமாறு அழைத்தாள். நல்ல காலமாய் அவன் அதை மறுத்துக் கை அசைத்தபடி, வலது பக்க ஹெலிபேட் பக்கமாய் நகர்ந்து சென்றான்.

‘’நல்ல மனுஷன் அம்மு. ஏனோ உனக்குத்தான் அவனைக் கண்டா ஆகலை’’

’’அக்கா! நல்லா யோசிச்சுப் பாரேன். இங்கே இத்தனை பேர் காத்திருக்கும்போது நம்ம கிட்ட மட்டும் ஏன் அவனுக்கு இப்படி ஒரு கரிசனம்? ஒருவேளை நாம ரெண்டு பேருமா தனியா வந்திருக்கிறதாலே சுலபமா ஏமாத்திடலாம்னு பார்க்கிறானா’’

‘’சே சே அப்படியெல்லாம் இருக்காது,வா அங்கே போய் உக்காருவோம்’’ என்று கை கழுவிக்கொண்டாள் அக்கா.

இப்போது ஷெட் கதவு திறந்திருந்தது. கதவுக்குப் பக்கத்திலும், கவுண்டர் பொந்திலும் சின்னச் சின்னக் குழுக்களாக மனிதர்கள் கூடுதலாய் மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

‘’நாம உக்கார்றதுக்கு முன்னாடி ஒரு தரம் உள்ளே போய்ப் பார்த்துட்டு வந்துடு அம்மு. ஒரு வேளை கையோட டிக்கெட்கூட கிடைச்சுடலாம். எதுக்கும் ரெண்டு பேருக்கும் போக வர சேர்த்து அஞ்சாயிரத்தைத் தனியா எண்ணி எடுத்து வச்சுக்கோ’’

உள்ளேயிருந்த ஒழுங்கற்ற கும்பலுக்கு நடுவே மானேஜரின் பார்வை என்மீது படுவதற்காகக் காத்திருந்தேன். இருபது நிமிடங்களுக்குப் பிறகு தற்செயலாகப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தவர்

‘’வில் கால் யூ பஹன் ஜி, ப்ளீஸ் வெயிட் அவுட்சைட்’’என்றார்.

நான் எந்த பதிலோடு திரும்புவேன் என்பதை அக்கா முன்கூட்டியே அனுமானித்திருக்க வேண்டும். என் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் இளசும் பெரிசுமாய்ப் பத்துப்பேர் அடங்கிய தில்லிக் குடும்பம் ஒன்று ஒரு வாரமாய் அங்கே முகாமடித்தபடி டிக்கெட் தவம் இயற்றிக்கொண்டிருந்த கதையை சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிறைய தரம் கேட்டுப் பழகிய வார்த்தைகளை வைத்து அந்தக் கதையின் ஓட்டத்தை என்னாலும் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கள் ஒன்றரை நாள் முயற்சியும் வியர்த்தமாய்ப் போய்விட …, தொய்ந்து போன முகங்களோடு நாங்கள் மலை இறங்குவதான ஒரு மனக்காட்சி என்னுள்ளே ஓடத் தொடங்கியபோது வேகமாக எங்களை நோக்கி வந்தான் ’முகமூடி’.

‘’ஜாயியே அபீ. ஜல்தீ..’’

என் வேக நடைக்கு ஈடுகொடுத்தபடி அக்காவும் என்னைப் பின்தொடர்ந்தாள்.

………………………………………

தூரத்து மலைத் தொடர்கள் கோலப்புள்ளிகள் போலச் சிறுத்துக் கரைந்து கொண்டே வர, எங்கள் வாகனம் மலையிறங்கிக்கொண்டிருந்தது. சுழித்தும் நுரைத்தும் சீறியும் நெளிந்தும் – பச்சையும் நீலமும் நீலப்பச்சையுமாய்ப் பல நிறங்கள் காட்டியபடி- அலக் நந்தாவாக, பாகீரதியாக, தேவப் பிரயாகையாக, ருத்ரப் பிரயாகையாக எங்கள் வழித்துணை போலக் கூடவே வந்து கொண்டிருந்தாள் கங்கை.

மூன்று நாட்கள் தொடர்ந்த பயணக் களைப்போடு, ஏதோ சிகரத்தைத் தொட்டுவிட்டு வந்தது போன்ற நிறைவும் வெறுமையும் கலந்த ஓர் உணர்வு எங்கள் இருவரையுமே ஆட்கொண்டிருந்ததால், எதுவுமே பேசிக்கொள்ளத் தோன்றாமல் மௌனத்தில் உறைந்திருந்தோம். கூர்மையான கொண்டை ஊசித் திருப்பம் ஒன்றில் வண்டி இலேசாக உலுக்கிப்போட, உறக்கமும் விழிப்புமாய் இருந்த அக்கா நன்றாகவே விழித்துக்கொண்டாள்.

‘’என்னக்கா கனவு கண்டு முடிச்சு எழுந்தாச்சா?’’

‘’எல்லாமே கனவு மாதிரிதான் இருக்கு அம்மு. நிஜமாவே நாம மேலே போனோமா, கேதாரைப் பார்த்தோமா..? எல்லாம் எப்படி நடந்து முடிஞ்சது? எதை நம்பறது..எதை விடறது…? எதுவுமே சொல்லத் தெரியல எனக்கு’’

மதியம் இரண்டே முக்காலுக்குக் கிளம்பும் ஹெலிகாப்டருக்கு பன்னிரண்டு மணியளவில் டிக்கெட் கிடைத்ததும்…, ஏதோ அரக்கப்பரக்கச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளத்தாக்குகளுக்கும் மலைகளுக்கும் இடையிலான ஏழு நிமிடப் பறத்தலில் கேதாரை எட்டியதும்…, சின்னக் கோயிலை வளைவாகச் சூழ்ந்து அரண் போலிருந்த பனிமலைகளின் காட்சியை – தேவர்கள் கூடிக் குதூகலிக்கும் வட்டமான நாடக அரங்குபோலத் தோன்றிய இமயத்தின் அந்த அற்புதத்தை- சுற்றிச்சுற்றி வந்து பார்த்துக் களித்தபடி குழந்தைகள் போலப் பரவசமுற்றதும், மெல்லிய தூறல் நடுவே வடநாட்டுப் பூசாரி ஒருவரின் துணையோடு இளம் செவ்வண்ணத்தில் இருந்த சுயம்புலிங்கத்தைக் கண் குளிரக்கண்டதும்…- இவை எல்லாமே உண்மையில் நடந்து முடிந்திருக்கிறதா என்ன?

………………………………………

பயணச்சீட்டு கைக்கு வந்து சேர்ந்தபிறகு ஏனோ அந்த ‘முகமூடி’ எங்கள் கண்களில் படவே இல்லை. தங்கியிருந்த அறையைக் காலிசெய்தபோதும், சாமான்களைக் காரில் வைத்துவிட்டு நாங்கள் திரும்பி வரும்வரை காத்திருக்கச் சொல்லி ட்ரைவரிடம் சொன்னபோதும், சாப்பிடும்போதும் அக்காவின் கண்கள் அவனை மட்டுமே தேடிக்கொண்டிருக்க, அப்போதும் கூட ‘’கவலைப்படாதேக்கா. நாளைக்கு நாம ஊர் திரும்பறதுக்கு முன்னாடி உன் தத்துப்பிள்ளை கட்டாயமா ஒரு பெரிய தொகையைக் குறிச்சுக்கிட்டு ஆஜராயிடுவான்’’ என்றே அவளை கலாய்த்துக்கொண்டிருந்தேன் நான்.

ஆனால்… நாங்கள் கேதாரிலிருந்து திரும்பிவந்து, மலையிறங்குவதற்குத் தயாரான பிறகும்கூட அவன் எங்கேயுமே தென்படவில்லை.

‘’ரெண்டு நாளா இங்கேயே சுத்திக்கிட்டு கண்ணிலே பட்டுக்கிட்டே இருந்தானே. இப்போ எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டான்’’ என்று மாய்ந்து போனாள் அக்கா.

‘’அம்மு நீ என்ன நெனச்சாலும் சரி. முன்பின் தெரியாத நமக்கு அவன் செஞ்சிருக்கிற உதவிக்கு நாம ஏதாவது கொடுத்தே ஆகணும்னு நெனக்கிறேன். அது லஞ்சம்னெல்லாம் நெனச்சுக்க வேண்டாம். அது, நாம செஞ்சாக வேண்டிய ஒரு சின்னக் கடமை, அவ்வளவுதான்’’ என்றபடி விஜயை அழைத்து முகமூடி எங்கே இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுமாறு ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டோடு அவனை அனுப்பி வைத்தாள். நானும் இம்முறை அதற்கு மறுப்புச் சொல்லவில்லை.

இறுகிப்போன முகத்தோடு திரும்பி வந்த ட்ரைவர் விஜய், ரூபாய் நோட்டை அக்காவிடம் கொடுத்துவிட்டு ‘’இனிமேலும் மலையிறங்கத் தாமதித்தால் இருட்டிப்போய்க் கஷ்டமாகி விடக்கூடும்’’என்பதை அவளுக்குப் புரியவைத்தபடி காரை ஸ்டார்ட் செய்தான். சரியாக அந்த நேரம் பார்த்து எங்களை நோக்கி எங்கிருந்தோ ஓடி வந்தான் ’முகமூடி’.

‘’உங்களுக்கு சந்தோஷம்தானே… திருப்திதானே’’என்று இந்தியில் அவன் திரும்பத் திரும்பக் கேட்பது புரிந்தது. அக்கா அவனுக்குக் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டுக் காரணத்தோடு விஜயைப் பார்க்க, அவன் ’பின்னால் சொல்கிறேன்’ என்பதுபோல் சைகை செய்தான்.

‘’பஹன் ஜி.! ஏக் ஹீ ஆஷா ஹே மேரே பாஸ்’’ என்றபடி அழுக்கும் பிசுக்கும் ஏறிப்போயிருந்த கைபேசியைத் தன் உள்ளங்கையிலிருந்து எடுத்து விஜயிடம் தந்தபடி எங்கள் இருவரோடும் அதில் புகைப்படம் எடுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டான் ’முகமூடி’.

………………………………………

ருத்ரபிரயாகையை நாங்கள் நெருங்கிக்கொண்டிருந்தபோது விஜய்க்கு ஒரு அழைப்பு.

‘’பத்திரமா போறோமான்னு அந்த ’பாயி’தான் கேக்கறார்.. தங்கமானவர் மேடம் அவர். அப்ப அவருக்கு எதிரிலே என்னால இதை சொல்ல முடியல. இப்போ சொல்றேன். அவர் இந்த ஹெலி சர்வீஸ்லேயே வேலை பாக்கிறதால பயணிகள்கிட்ட பணம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியும். அது தெரிஞ்சா அவரோட வேலையேகூட போயிடலாம். அதனாலேதான் நீங்க பிரியப்பட்டுத் தந்த பணத்தை ஒதுக்குப்புறமா கூட்டிக்கிட்டுப் போய் அவர்கிட்ட கொடுத்தேன். ’அவங்க ரெண்டு பேரும் என்னோட மூத்த சகோதரிகள் மாதிரி.., நான் அதைத் தொடறதுகூட பாவம்’னுட்டார்! அஞ்சாறு வருஷமா அவரை எனக்குத் தெரியும் மேடம். பாவம் அந்த மனுஷன். டூரிஸ்ட் கைடா இருந்த அவரோட மகன் .கொஞ்ச வருஷத்துக்கு முன்னாலே கேதாரிலே மலைச்சரிவு வந்தப்ப எந்தப் பாதாளத்திலேயோ விழுந்து மறைஞ்சுபோன ஹெலிகாப்டரோட தானும் காணாமப் போயிட்டான். கடைசி வரைக்கும் அதைக் கண்டுபிடிக்கவே முடியல. தன்னோட வாய்க்கோணலை மறைக்கப் போட்டுக்கிட்டிருக்கிற முகமூடி மாதிரி எல்லாத்தையும் மனசுக்குள்ளே போட்டுப் புதைச்சுக்கிட்டுப் பொழப்புக்காக இதே ஹெலிகாப்டர்களோட காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கார் அவர். ஒருவேளை எந்த ஹெலிகாப்டரிலேயாவது தன்னோட மகன் வந்து இறங்கிடக்கூடாதான்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்காரோ என்னவோ..?’’ என்று தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் இடையிடையே இந்திக் கலப்போடு சொல்லி முடித்தபோது விஜயின் குரல் கம்மிப்போயிருந்தது..

ரிஷிகேசத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஆச்சியிடமிருந்து ஃபோன். ஸ்பீக்கரில் போட்டு அக்காவையும் கேட்க வைத்துக்கொண்டே ‘’ரொம்ப நல்ல தரிசனம் ஆச்சி’’ என்றபடி நடந்ததை சுருக்கமாய் விவரித்தேன்.

‘’எல்லாம் அந்தக் கேதார்நாதன் கருணைதான், வேறென்ன?’’ என்று சொல்லியபடி அவர் அழைப்பை முடித்துக்கொண்டபோது, அக்கா தன் கைபேசியில் வந்திருந்த அந்த வாட்ஸப் செய்தியை என்முன் நீட்டினாள். அக்காவின் எண்ணை சேவ் செய்து வைத்திருந்த ‘முகமூடி’ மலர்ந்த சிரிப்போடு எங்கள் இருவருக்கும் இடையே தான் நின்றுகொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தான். அதைத் தொடர்ந்த அடுத்த செய்தி ‘கங்காதரிடமிருந்து’ என்று அவன் பெயரையும் குறிப்பிட்டிருந்தது…

ஹெலிபேட் பின்னணியில் நின்றிருந்த கங்காதர், காரில் ஏறிய எங்களுக்கு வெகுநேரம் கையசைத்துக்கொண்டே விடைகொடுத்த அந்தக் காட்சி… பல இரவுகள் என்னை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....