துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.3.21

துக்கம்-மொழிபெயர்ப்புச்சிறுகதை(சொல்வனம்)

 சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021

வங்கச்சிறப்பிதழாக  ( 2 ) வந்திருக்கும் சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் மொழிபெயர்ப்புச்சிறுகதை.

துக்கம்             வங்க மூலம் : ஆஷா பூர்ணா தேவி

            ஆங்கில வழி தமிழாக்கம்  : எம்.ஏ. சுசீலா

          அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய சக்திபோதோ ,வீட்டிலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கப்போகும் நேரம் பார்த்து கையில் பத்திரிகையையும் கடிதத்தையும் வைத்துக் கொண்டு அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் தபால்காரர். ஏற்கனவே கையில் இருந்த பொருள்களோடு இந்த இரண்டும்  வேறு சேர்ந்துவிட்டதால் அவர் இப்போது கட்டாயம் வீட்டுக்குள் திரும்பிப் போகத்தான் வேண்டும். அவற்றை பிரதிபாவிடம் சேர்த்தாக வேண்டும்.  பத்திரிகை என்னவென்று பார்க்க வேண்டிய அவசியமில்லை.  அது நிச்சயம் பிரதிபாவுக்குப் பிடித்தமான சினிமா இதழான ’சாயா-சௌபி’யாகத்தான் இருக்கும்.  அது ஒவ்வொரு புதன் கிழமையும் தவறாமல் வந்துவிடும்.

          அந்தக் கடிதமும் பிரதிபாவுக்கு வந்ததுதான்.  ஓர் அஞ்சலட்டையில் எழுதப்பட்ட ஒரு சில வரிகள்.  அஞ்சலட்டை, பிரதிபாவின் தந்தை வீட்டிலிருந்து - பர்தோமனிலிருந்து வந்திருந்தது.

     பரபரப்பான இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் பொதுவாக அவர் கடிதங்களைப் படிப்பதில்லை.  ஆனால் உள்ளே நடந்து சென்ற நேரத்தில் அவரது பார்வை அஞ்சலட்டையிலிருந்த ஒரு சில கறுப்பு நிற வரிகளின் மீது ஓடியது; உடனே அவரது கண்கள் இரண்டும் கல்லாய் இறுகிவிட்டன.  இமைக்க மறந்து கல்லாகிப் போன அந்த விழிகளைக் கொண்டு அவர் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்தார் ஆமாம்! இனிமேல் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை.  சுருக்கமாக, குறிப்பாக, தெளிவாக இருந்தது அந்தச் செய்தி.  பிரதிபாவின் சித்தப்பா தன் தெளிவான கையெழுத்தில் அதை எழுதியிருந்தார்.

          பிரதிபாவின் அன்னை இறந்துவிட்டார். 

ஒரு தந்தி அனுப்பலாமே என்று அந்தச் சித்தப்பா யோசித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

          ‘மரியாதைக்குரிய உன் அன்னை நேற்று இரவு, சொர்க்க லோக பதவி அடைந்துவிட்டாள்.  ஒரு சில நாள் காய்ச்சல் அடித்ததில் அவள் இப்படி நம்மை விட்டுச் சென்றுவிடுவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.  நாங்களெல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம்.  அண்ணா போய்விட்டார், இப்போது அண்ணியும் நம்மை விட்டுச் சென்று விட்டார்.  எங்களுக்குள்ள ஒரே ஆறுதல் நீ மட்டும்தான்.  எனவே உடனடியாக இங்கே கிளம்பி வந்து எங்களுக்குச் சிறிது மன அமைதியைக் கொடு’

என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் அவர். 

          தொடர்ந்து எழுதப்பட்டிருந்த அடுத்த இரண்டு வரி ஆசீர்வாதங்களை அதற்கு மேல் படிக்க சக்திபோதோவுக்குத் தெம்பில்லை.  தான் செய்ய வேண்டியது என்ன என்று தீர்மானிக்க முடியாதவர் போல இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்றார் அவர்.  அந்த நிலையில் அவரது மனக்கண்ணுக்குள் பல காட்சிகள் திரைப்படம் போல ஓடிக் கொண்டிருந்தன.  அவை, அவர் இதற்கு முன்பு பார்த்த காட்சிகள் அல்ல; அவராகக் கற்பனை செய்து கொண்ட காட்சிகள் அவை.  நெஞ்சைப் பிளக்கும் அந்தக் கடிதத்தை பிரதிபாவிடம் இப்போது சொன்னால் எந்த வகையான சிக்கலை அவர் எதிர்கொள்ள நேரும் என்பதையும், தொடர்ந்து எந்த வகையான காட்சிகள் வீட்டில் அரங்கேறும் என்பதையுமே அவர் அப்போது நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

          தன் மாமியார் மலேரியா காய்ச்சலில் இறந்துபோன செய்தி, சக்திபோதோவுக்கும் தாங்க முடியாத துயரத்தை அளித்தது என்பதைத் தனியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  ஆனாலும் தாயையே தன் உயிராக, வாழ்வாக எண்ணி வாழ்ந்துவரும் பிரதிபா, இந்தச் செய்தியைக் கேட்டால் என்ன ஆவாள் என்பதை எண்ணும்போது, அந்தப் பாவப்பட்ட மனிதர் உள்ளுக்குள் உலர்ந்து போனார்.

          அவரது மனதில் தோன்றிய முதல் எண்ணம், அவரது அலுவலகத்தைப் பற்றியதுதான்.  இந்த துக்கச் செய்தியைச் சொல்லிவிட்டால் அவ்வளவுதான், இன்று அலுவலகத்துக்குச் செல்ல முடியாது.  துரதிருஷ்டவசமாக இன்று மாதத்தின் முதல் நாள்.  சக்திபோதோவின் அலுவலகம் ஒரு மோசமான விதியைக் கடைப்பிடித்து வந்தது.  ஏதாவது ஒரு காரணத்தால் மாதத்தின் முதல் நாள் ஒருவர் வராமல் இருந்துவிட்டால் ஏழாம் தேதி வரை அவருக்குள்ள ஊதியம் கிடைக்காது.

          அப்புறம் பிரதிபாவை வேறு சமாளித்தாக வேண்டும்.

          பிரதிபாவின் இயற்கையான சுபாவத்தோடு அவளது தாய் இறந்த துக்கமும் சேர்ந்து கொண்டால் …., அதை நினைக்கும்போதே அந்த அப்பாவி மனிதரின் இதயம் சில்லிட ஆரம்பித்துவிட்டது.

          பிரதிபாவின் அம்மா இறந்தது ஒரு துக்கம் என்றால், அந்தச் செய்தி தந்த திடீர் அதிர்ச்சி எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை.

          முன்பின் எதிர்ப்பட்டிருக்காத பெரும் புயலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை யோசித்துப் பார்த்தபடி- தான் செய்ய வேண்டியது என்னவென்ற தீர்மானத்துக்கே வர முடியாதபடி தவித்துக்கொண்டிருந்த அந்த மனிதர், ‘சட்’டென்று ஒரு முடிவுக்கு வந்தார்.

          வேண்டாம்! இப்போது வேண்டாம்.  இப்போதைக்கு அந்தச் செய்தி மறைவாகவே இருக்கட்டும்.  திடீரென்று அதைப்போய் அவளிடம் சொல்வது சாத்தியமே இல்லாத ஒன்று.

          இப்போது அமைதியாக நழுவிப்போய் விடுவதுதான் நல்லது.  அவர் திரும்பி வந்த பிறகு என்ன நடக்க வேண்டுமோ, அது நடந்து கொள்ளட்டும்.  ‘நான் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன்’ என்று சொல்லிவிடலாம்.  ஆனால் கடவுளே… சக்திபோதோவுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?  பிரதிபாவின் அம்மா இறந்த செய்தி கிடைத்த பிறகும் அவர் அவசரமாய்க்கிளம்பி  அலுவலகத்துக்குப் போயிருக்கிறார்.  அவளிடம் போய் அப்படிச் சொல்வதா?  முடியவே முடியாது.  வேறென்ன செய்யலாம்? பேசாமல் தபாலட்டையை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு தன்னோடு கொண்டுபோய் விடலாமா? கிளம்பும் வழியில் அந்த கார்டை வாங்கிக் கொண்டதாகவும், படிக்காமல் அவசரமாக அப்படியே  சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு, பிறகு அதையே மறந்து விட்டதாகவும், வீடு திரும்பி உடை மாற்றும்போது பார்த்ததாகவும் சொல்லலாமா?

         இல்லை.  அதுவும் கூடக் கடினமானதுதான்.

     அந்தக் கடிதம் பர்தோமனிலிருந்து வந்திருப்பதைப் பார்த்த பிறகும் அலட்சியமாக அதை மறந்துவிட்டு நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாவது? அதென்ன மன்னிக்கக்கூடிய ஒரு குற்றமா?

          வெகு நாட்களாக அங்கிருந்து எந்தக் கடிதமுமே வரவில்லை என்று சமீபத்தில் பிரதிபா வேறு கவலைப்பட்டுக் கொண்டிருந்தாளே?

          என்ன செய்யலாமென்று யோசித்துப் பார்த்துக் கொண்டே வந்த அவருக்கு மின்னல் வெட்டுப் போல ஒரு எண்ணம் மனதில் ஓடியது. அதுதான் சரி! அது ஏன் அவருக்கு முதலிலேயே தோன்றியிருக்கவில்லை? தபால்காரர் சக்திபோதோவிடம் கடிதத்தைக் கொடுத்தார் என்பது உண்மைதான், ஆனால், அவரிடம்தான் அதைக் கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்ன ?

          பெரும்பாலான சமயங்களில் ஜன்னல் வழியாக வெளியிலிருந்தே கடிதங்களை வீசி எறிந்து விடுவார் அவர்.  இன்றும் அப்படித்தான் செய்திருப்பார்; ஆனால் எப்படியோ இன்று சக்திபோதோவைப் பார்த்து விட்டார்.  சே! இன்று அலுவலகத்துக்கு ஒரு நிமிடம் முன்னால் கிளம்பியிருந்தால் இப்படிப்பட்ட கவலைகளையெல்லாம் அவர் சுமக்க வேண்டியிருக்காதே?

          சரி…. போகட்டும்! இப்போது ஜன்னல் வழியாக சக்திபோதோ  அந்தக் கடிதத்தைப் போடப் போகிறார்.

          தனக்குள் உருவாகியிருந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னால் மீண்டும் அதைப்பற்றி யோசித்துப் பார்த்தார் அவர்.  இல்லை, அதுவும் சரியாக இருக்காது.  அக்கம் பக்கத்தில் உள்ள எல்லோருமே நன்றாகத் தெரிந்தவர்கள்.  யாராவது அவரைப் பார்த்துவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்கள்? வீட்டுக்குள் இருந்தபடியே ஜன்னலில் கடிதத்தை வைத்துவிடுவதுதான் நல்லது.  வீட்டுக்கூடத்துக்குள் சத்தமில்லாமல் நுழைந்து காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு அப்படியே சிறிதுநேரம் நின்று கொண்டிருந்தார் சக்திபோதோ.  இந்தக் கூடத்துக்குள்ளேதான் தபால்காரர் கடிதங்களை வீசிப் போடுவது வழக்கம்.

          பிரதிபா எங்கே இருக்கிறாள்? நிச்சயம் சமையலறையிலேதான்.  கரண்டியால் எதையோ கிளறும் சத்தம் அவருக்குக் கேட்டது.  மீன் வறுபடும் இனிமையான மணத்தை அவரால் நுகர முடிந்தது.  அதனால் இப்போதைக்கு அவள் இந்தப் பக்கம் வரப்போவதில்லை.

          மெதுவாக அந்தப் பத்திரிகையையும், கடிதத்தையும் ஜன்னல் திட்டின் மீது வைத்தார் அவர்.  பத்திரிகையின் மேல் கடிதம் இருந்துவிட்டுப் போகட்டும்! ஆமாம்! அதுதான் சரி.  இல்லையென்றால் அந்த ’சாயா-சௌபி’ பத்திரிகையைப் பார்த்ததுமே அவள் உலகத்தை மறந்து விடுவாள்.  அதற்குக் கீழே என்ன இருக்கிறது என்பதை அதற்கப்புறம்  பார்க்கப்போகிறாளா என்ன?

          கடிதம், அதிலுள்ள அந்தச்செய்தியோடு பத்திரிகைக்கு மேலேயே இருக்கட்டும்.  அந்தக் கெட்ட செய்தியை பிரதிபா தானாகவே அறிந்துகொள்ளட்டும்.  துயரமான விஷயங்களைத் தாங்கிக்கொண்டு அவற்றைச் சொல்லவேண்டிய கடினமான பொறுப்பிலிருந்து சக்திபோதோ விடுபடட்டும்! அழுவது, ஓலமிடுவது, ஒப்பாரி வைப்பது ஆகிய கடுமையான புயல்களெல்லாம் அவரது முதுகுக்கு பின்னால் அடித்து ஓயட்டும்.  சக்திபோதோ  திரும்பி வரும் நேரத்துக்குள் நிச்சயம் கொஞ்சமாவது ஒருநிலைப்பட்டிருப்பாள் பிரதிபா.

          ஆனால் இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்க அவருக்கு சில நொடிகளுக்கு மேல் ஆகவில்லை.  காற்றைப் போன்றதல்லவா சிந்தனை?

          ‘சாயா-சௌபி’ பத்திரிகை இருந்த கவரின் மீது கடிதத்தை வைத்து விட்டு, வீட்டுக்குள் எப்படி சத்தம் காட்டாமல் வந்தாரோ அதே போல வீட்டை விட்டு வெளியேறினார் சக்திபோதோ.  வெளியே வந்ததுமே மனதிலிருந்த பாரம் நீங்கி சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல லகுவாக உணர்ந்தார்.  தனக்குத் தோன்றிய யோசனை மிகவும் பிரமாதமானதென்று அவருக்குப் பட்டது.

          ஆனால் அலுவலகத்தை அடைந்ததுமே அந்த லகுவான உணர்வு அவரிடமிருந்து நீங்கிப் போய் விட்டது. இப்போது அவர் நெஞ்சில் ஒரு வகையான குற்ற உணர்வே சுமையாக அழுத்தத் தொடங்கியிருந்தது. நேரம் செல்லச் செல்ல அவர் மீண்டும் பலவாறு யோசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தார். பிரதிபா தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால் - அவளது கை கால்கள் சக்தியிழந்து போனால் அந்தப் பையனின் நிலை என்ன ஆகும்? பாவம்! அவனுக்கு நாள் முழுவதும் பால் கூடக்கிடைக்காமல் போய்விடுமே? வீட்டுக்கு சீக்கிரம் திரும்பிப்போய் விடலாமா என்று அவர் பல முறை யோசித்தார், ஆனால் அதற்கு எந்த வகையான விளக்கம் தரமுடியும்? அன்று அவர் ஏன் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்ற கேள்வி வருமே? அதனால் கண்களையும், காதுகளையும் இறுக அடைத்துக் கொண்டு அன்றைய நாளை அவர் ஓட்டியாக வேண்டியதுதான்.

          அவர் முதலில் செய்துவிட்டதை மாற்ற இனிமேல் எந்த வழியும் இல்லை.

                ***************************************

          பொரித்த மீனை உயரமான அலமாரியில் வைத்து விட்டு அடுப்படியில் பாக்கியிருந்த ஒன்றிரண்டு வேலைகளையும் முடித்துவிட்டு உள்ளே வந்தாள் பிரதிபா.  அவள் மனதில் ஏனோ அமைதியில்லை.   சக்திபோதோ கிளம்பிப்போய்     வெகுநேரமான பின்னும் வெளிக்கதவு இன்னும் அடைக்கப்பட்டிருக்கவில்லை.  ஆனாலும் குழந்தைப்பையன் அழாமல் இருப்பது அவளுக்கு ஒரு சின்ன ஆறுதல்.  வெளிக்கதவைத் தாளிட்டு விட்டுக் கூடத்துக்கு வந்ததும் அவளது பார்வை, ஜன்னல் திட்டின் மீது இருந்த பத்திரிகையின் மீதும், கடிதத்தின் மேலும் பதிந்தது.  ஓ, ‘சாயா-சௌபி’ வந்துவிட்டதா? இந்த வாரம் புகழ்பெற்ற நடிகைகளின் பேட்டி அதில் வெளிவரப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

          ஆமாம், இது எப்போது வந்தது? 

           சக்திபோதோ உடையணிந்துகொண்டு வெளியே கிளம்பத் தயாரானது வரை இது வரவில்லை.

          இப்பொழுது பார்த்தால் பர்தோமனிலிருந்து வேறு ஒரு கடிதம் வந்திருக்கிறது.  ஆனால் இது ஏன் சித்தப்பாவின் கையெழுத்தில் இருக்கிறது? விஜயதசமி சமயத்தில் வழக்கமாக எழுதும் கடிதம் தவிர சித்தப்பா ஒரு போதும் .….. ஐயோ… அம்மா நிச்சயம் நன்றாக இருப்பாள்தானே?

          கவலை, காற்றைவிட வேகமாக ஒவ்வொருவரையும் சுழற்றியடிப்பது.

          கையை நீட்டிக் கடிதத்தை எடுப்பதற்குள் இவ்வளவையும் யோசித்தாள் அவள்.  பிறகு கடிதத்தை எடுத்து அதன் மீது கண்களை ஓட்டிய பிறகு ஸ்தம்பித்துப்போய்ப் புழுதி படிந்த தரையில் அப்படியே அசந்து உட்கார்ந்துவிட்டாள்.

          என்ன இது? என்ன மாதிரி ஒரு செய்தி இது?

          மூன்று பைசா மதிப்புள்ள இந்த அஞ்சலட்டை எப்படிப்பட்ட ஒரு செய்தியை அவளுக்குக் கொண்டுவந்து சேர்த்தி ருக்கிறது?  நிஜமாகவே அம்மா இறந்து விட்டாளா? பிரதிபாவின் அம்மா இறந்து விட்டாளா?  இரண்டே வரிகள் கொண்ட மிகமிகச்சாதாரணமான அந்தக்கடிதமா, அம்மா போய்ச் சேர்ந்த செய்தியை சுமந்து வந்திருக்கிறது?

          பிரதிபா தன் தாயை இழந்துவிட்டாள் என்ற இந்தச் செய்தி, ஒருவருக்கு உடல் நலம் நன்றாக இருக்கிறது என்றோ, சுமாராக உள்ளதென்றோ அற்பமான செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைப் போன்றதுதானா? அதற்குரிய மதிப்பு இவ்வளவுதானா? மேலும் இப்படி ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், அவள் மட்டும் தனியாக இருக்கும்போதுதானா அம்மா போய்விட்டாள் என்ற செய்தியை அவள் அறிந்துகொள்ள வேண்டும்.  இந்தக் கடிதம் பத்து நிமிடங்களுக்கு முன்னால் வந்திருக்கக்கூடாதா? அப்போது சக்திபோதோவும் கூட இருந்திருப்பாரே?  பிரதிபா எவ்வளவு கொடுமையான துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் பார்ப்பதற்கு ஒரு சாட்சியாவது இருக்திருக்குமே ?  சக்திபோதோ மட்டும் அங்கே இருந்திருந்தால், இப்படிப்பட்ட கடும் துயரத்தால் பீடிக்கப்பட்டுக் கிறுக்குப் பிடித்தவளைப் போலிருக்கும் பிரதிபாவைக் கூட்டிக்கொண்டு உடனடியாக ஹௌரா ஸ்டேஷனுக்கல்லவா விரைந்திருப்பார்?

          ஒருவேளை ரயிலுக்கான நேரம் தவறியிருந்தால், அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்க பிரதிபா நிச்சயம் சம்மதித்திருக்கமாட்டாள்.  பைத்தியக்காரியைப் போல ஒரு வாடகைக் காரில் வேகமாய்ப் போய்ச் சேர வேண்டுமென்றே அவள் நினைத்திருப்பாள்.  சக்தி போதோவும் அதற்கு நிச்சயம் மறுப்பு சொல்லியிருக்க மாட்டார்.  பிரதிபா கடும் துயரத்தில் இருக்கும்போது கருமித்தனமாக நடந்து கொள்ளும் அளவுக்கு அவர் இதயமில்லாதவர் இல்லை. ‘டேக்ஸி’யிலிருந்து இறங்கியதுமே ஓடிப்போய் அம்மாவின் படுக்கைக்கருகே தரையில் விழுந்தபடி பிரதிபா கதறித் தீர்த்திருப்பாள்.  அவளது சித்தப்பா, சித்தி, பாட்டி என்று எல்லோரும் ஓடிவந்து அவளுக்கு ஆறுதல் சொல்லியிருப்பார்கள்.  அக்கம் பக்கத்திலிருக்கும் மனிதர்களெல்லாம் வந்திருப்பார்கள்.  அம்மாவைப் பறிகொடுப்பது என்பது பிரதிபாவை எந்த அளவு கடுமையாக பாதிக்குமென்பது அண்டை அயலில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

          ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன?  துக்கத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு அம்சம் – அதை முழுமையாக வெளிக்காட்டிக்  கொள்ளும் அந்த அம்சம், இப்போது முழுக்க முழுக்க அவிந்து போய்விட்டது.  இலேசாக ஒரு முறை கூச்சலிடவோ, அழ ஆரம்பிக்கவோ அவளால் முடியவில்லை.  அவற்றைச் செய்வதற்குத் தேவையான தூண்டுதல் கூட அவளுக்குக் கிடைக்கவில்லை.  வீட்டில் தன்னந்தனியாக இருக்கும்போது யாராவது அப்படி அழ முடியுமா என்ன?

     வயதில் பெரியவர்கள் செய்ய முடியாததைச் சிறியவர்கள் மிகவும் சுலபமாகச் செய்துவிடுவார்கள்.  பத்து மாதங்களே நிரம்பிய அவளது மகன் கோகோன் கட்டுப்படுத்த முடியாதபடி திடீரென்று அலற ஆரம்பித்தான். அதில் அக்கம்பக்கமெல்லாம் கிடுகிடுத்துப் போயிருக்கும். அறைக்குள் அவன் பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தானே? ‘சட்’டென்று அப்படி என்ன ஆகியிருக்கும்?

          வீட்டில் வேறு யாருமே இல்லாத நிலையில் - தன் மகனிடமிருந்து இப்படி ஒரு அலறலையும் கேட்டபிறகு அவனருகே ஓடுவதைத் தவிர அவளால் வேறென்ன செய்ய முடியும்? அந்த நிமிடம்தான் தன் தாயின் மரணச் செய்தியைக் கேட்டிருந்தாலும் கூட அவள் போய்த்தான் ஆக வேண்டும்.

          அது ஒரு பெரிய கறுப்பு எறும்பு. குழந்தையின் மென்மையான, சிறிய கால்விரல்களின் நுனிப்பகுதியை அது கடுமையாகக் கடித்திருந்தது.  பத்து மாதமே நிரம்பிய ஒரு குழந்தைக்கு இந்த எறும்புக்கடி, ஒரு தேள் கடியைப் போலத்தான்!   குழந்தை வலியை மறக்க வேண்டுமென்றால் அம்மாவை இழந்த துக்கத்தை அவள் மறந்தாக வேண்டும்.  ஒரு வழியாகக் குழந்தை அந்த வலியை மறந்துவிட்டபோது, வீட்டைச் சூழ்ந்து கொண்ட ஏதோ ஒரு கருகும் வாடை அவளைத் திடுக்கிட வைத்தது.  சாயங்கால வேலையைச் சற்று மிச்சம் பிடிக்க நினைத்தபடி கொஞ்சம் பருப்பை அடுப்பில் வேக வைத்திருந்தாள் அவள்.  சரி, பருப்பின் கதி அவ்வளவுதான்.  அணைந்து கொண்டிருக்கும் அடுப்புக் கூட சரியான நேரம் பார்த்து அவளைப் பழிவாங்குகிறது.

          பருப்பு போனால் போகட்டும், பருப்பு வைத்திருக்கும் பாத்திரம் அடிப்பிடித்துப் போனால்தான் ஆபத்து.  நான்கைந்து பழைய புடவைகளைக் கொடுத்து அவற்றுக்கு பதிலாக முதல்நாள்தான் அவள் அந்தப் பாத்திரத்தை வாங்கிக்கொண்டு வந்திருந்தாள்.

          குழந்தையை இடுப்பில் வைத்தபடி பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு சமையலறைக் கதவுக்குத் தாள் போட்டு விட்டுக் கடிதத்தின் அருகே வந்து உட்கார்ந்தாள் பிரதீபா.  அதை மறுபடியும் ஒருமுறை கையில் எடுத்துக் கொண்டாள்.  அதைத் திரும்பப் படிப்பதன் மூலம் அவள் ஏதோ ஒன்றை மறு கண்டுபிடிப்பு செய்ய முயல்வதைப் போலிருந்தது. இவ்வளவு நேரமும் தான் படித்தது ஒரு வேளை தவறாக இருக்குமோ என்று திடீரென்று சரிபார்க்க விரும்புபவள் போலிருந்தாள் அவள்.

          ஆனால், அப்படியெல்லாம் எதுவுமில்லை.  எந்தத் தவறும் எங்குமில்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.

          பிரதிபாவின் தாய் உண்மையிலேயே இறந்துபோய்விட்டாள்.  பர்தோமனில் இருக்கும் வீட்டுக்கே ஓடிப்போய் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாலும் பிரதிபாவால் அவளை மீண்டும் பார்க்க முடியப் போவதில்லை.  அவள் சிறு குழந்தையாக இருந்தபோதே அவளது தந்தை காலமாகி விட்டார்; அவரை அவளுக்குக் கொஞ்சம் கூட ஞாபகமில்லை; அம்மாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தாள்.

          …. ஆமாம், அது நடந்துவிட்டது உண்மைதான்.

          பிரதிபாவின் வாழ்க்கையில் அவள் எதிர்ப்படும் முதல் துக்கம் அது! மிகமிக ஆதாரமான, அடிப்படையான துக்கமும் கூட! ஆறிப்போன தண்ணீரைப்போல இப்படி அவளை வந்தடைந்திருக்கிறது அது !

          பிரதிபா தொடர்ந்து இப்படியே உட்கார்ந்திருக்க முடியாது; சீக்கிரமே வேலை பார்க்கும் பெண் வந்து விடுவாள், பால்காரர் வந்து விடுவார்.  அவள் எழுந்துகொண்டுதானாக வேண்டும்,  அவர்களோடு பேசித்தான் ஆகவேண்டும்.  குறைந்தபட்சம் வேலை பார்க்கும் பெண்ணிடத்திலாவது தன் வாழ்க்கையில் நேர்ந்திருக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வைப்பற்றி அவள் சொல்லிக்கொள்ளலாம்.. ஆனால் அவளேதான் அதைச்சொல்ல வேண்டியிருக்கும். இல்லையென்றால் அவளிடமும் சாதாரணமாக இருப்பதைப்போலத்தான் நடிக்க வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்லி  அது அவளுக்குத் தெரிய வந்துவிட்டால் அப்புறம் அவள் சும்மாவா இருப்பாள்? பிரதிபாவுக்கு  ஆறுதல் சொல்லவும் தேற்றவும் எண்ணியவளாய்க் கட்டாயம் பக்கத்தில் வந்து விடுவாள்.  அவள் மனம் நெகிழ்ந்து போயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்துக் கொண்டு தன் எஜமானியருகே நெருக்கமாக வந்து தலையைக் கோதி விடுவாள், கையைப் பிடித்துக் கொள்வாள்.  அதை நினைத்துப் பார்க்கவே பிரதிபாவுக்கு சகிக்கவில்லை.  உண்மையிலேயே அது சகிக்க முடியாததுதான். மேலும் தன் தாய் இறந்துபோன செய்தி வந்த பிறகும் கூட பிரதிபா வீட்டுக்குள் நடமாடியிருக்கிறாள், குழந்தைக்குப் பாலூட்டியிருக்கிறாள் என்பதை சக்திபாதோவும் அறிந்துகொண்டுவிடுவார்.

     அழுகையை நிறுத்தியபடி அந்தக் குழந்தைப் பையன் அம்மாவின் மடியில் அமைதியாக உறங்கி்ப் போனான்.  பிரதிபா, மடியில் தூங்கும் குழந்தையோடு ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

          நேரம் ஓடிக் கொண்டிருந்தது.  மூன்று மணியானபோது ஆட்டுப்பால் கொண்டு வந்து தருபவனின் மணி ஓசை கேட்டது.

          பிரதிபா ஒரு உறுதியான முடிவோடு எழுந்து நின்றாள்.

          ஆமாம்.  அதுதான் சரி! தபால்காரர் எந்த நேரம் வந்து கடிதத்தைக் கொடுத்தார் என்து பிரதிபாவுக்குத் தெரியாது.  எறும்பு கடித்த குழந்தையின் அழுகையோடு அவள் போராடிக் கொண்டிருந்தாள்.  குழந்தையோ முழுநாளும் அழுதபடி இருந்தது.  அதனால் ஜன்னல் பக்கமோ, கதவுப் பக்கமோ, அறைகளிலோ பார்வையை வெறுமே செலுத்தக்கூட பிரதிபாவுக்கு அன்று நேரம் கிடைக்கவில்லை.  அதற்கு சாட்சி ‘சாயா-சௌபி’ பத்திரிகையின் உறை இன்னும் பிரிக்கப்படாமல் இருப்பதுதான். பத்திரிகையையும் கடிதத்தையும் தபால்காரர் எப்படிப் போட்டிருப்பாரோ அதே மாதிரி வைத்துவிட்டு எழுந்திருந்தாள் பிரதிபா,.  ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு போய் ஆட்டுப்பால் கொண்டு வந்திருப்பவருக்காக லேசாகக் கதவைத் திறந்தாள்.  பாலைக் கொண்டுபோய் அதன் இடத்தில் வைத்துவிட்டு ‘அந்த இரண்’டையும் ஒரு தடவை திரும்பி்ப் பார்த்தாள்.  சட்’டென்று ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள்.  கடிதம் போய்ப் பத்திரிகைக்குப் பக்கத்திலா? வேண்டாம், கடிதம் புத்தகத்துக்கு அடியில் மறைவாகவே இருக்கட்டும்.  மேலே இருந்தால் உள்ளே வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் அவள் கண்ணில் ஒரு முறையாவது தட்டுப்பட்டிருக்காதா? கடிதத்தை மட்டும் பார்த்திருந்தால் உடனே அதை ஆசையாய் எடுத்துப் பார்த்திருப்பாளே பிரதிபா! சில நாட்களாக பர்தோனிலிருந்து கடிதமே வரவில்லை என்று அவளே கவலையோடுதானே இருந்தாள்?

          சாயா-செளபி’ ? அது  போய்த் தொலையட்டும்…. அது அப்படியே கிடக்கிறதே என்றால் அது அப்படித்தான் கிடக்கும்.  முழுநாளும் அழுதபடி அவளைப் பைத்தியம் பிடிக்கச் செய்து கொண்டிருக்கும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவளுக்கு சினிமா பத்திரிகை படிக்கவா நேரம் கிடைக்கும்?

          இன்று பிரதிபா தயாரித்த சோறு சமையலறையில் அப்படியே தொடப்படாமல் இருக்கிறது.  வேலைக்கு வந்த பணி்ப்பெண் அதைப் பார்த்துவிட்டுக் கத்தினாள்.  ஆனால் பிரதிபா அதற்கு என்ன செய்ய முடியும்? முழுநாளும் தலையையே  தூக்கமுடியாமல் வலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தபோது அவளால் எப்படி சாப்பிட முடியும்?  வேலைக்காரப் பெண், தன் மகன்களுக்கு அந்தச் சோற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான்.

          வழக்கமாக தினந்தோறும் நடப்பதைப் போலவே, அன்றும் அடுப்பு பற்ற வைக்கப்பட்டது.  இரவுச் சாப்பாடு செய்வதற்கான ஆயத்தங்கள் தொடங்கியிருந்தன. சூடான     பூரியுடன் கோவைக்காய் வறுவலையும், உருளைக்கிழங்கைப் பொடியாக வறுத்ததையும் சேர்த்து சாப்பிட சக்திபோதோவுக்கு   மிகவும் பிடிக்கும்.  சரி, அன்றைய சாப்பாடாகவும் அதுவே இருந்துவிட்டுப் போகட்டும்.  பிரதிபாவுக்கு எதுவும் ஆகிவிடவில்லை.  பிரதிபா நன்றாகத்தான் இருக்கிறாள்.

                 ****************************************

         

        தவருகே வந்த சக்திபோதோ,‘சட்’டென்று ஒரு நிமிடம் அப்படியே நின்றார்.

          உள்ளே அழுகைச் சத்தம் எதுவும் கேட்கிறதா?   

            உள்ளிருந்து ஏதாவது சத்தம் கேட்கிறதோ  என்று கற்பனை செய்தபடி, காதுகளைச் சிறிது நேரம் கூர் தீட்டி வைத்துக்கொண்டு கவனித்துக்கொண்டிருந்தார் அவர்.

          பிறகு தன் தவறை உணர்ந்து கொண்டார். அப்படி எதுவுமே கேட்கவில்லை.

          அப்படியென்றால் என்னதான் நடந்திருக்க முடியும்? இத்தனை துக்கமான ஒரு சூழ்நிலையில் அவள் நிச்சயம் தனியாக பர்தோமனுக்குச் சென்றிருக்க மாட்டாள்.  அவள் அப்படிப் போயிருந்தால் கதவு உள்ளேயிருந்து அடைத்திருக்குமா? ஆனால் ஏன் இவ்வளவு அமைதியாக.. எந்த சத்தமுமே இல்லாமல் இருக்கிறது? அப்படியென்றால் அவள் மயக்கம்  போட்டு விழுந்து விட்டாளா?

          யாருக்குத்தெரியும்? ஒருவேளை பிரதிபா மயக்கம் போட்டு விழுந்து கிடக்கலாம்.  குழந்தை கீழே விழுந்து மண்டையை உடைத்துக்கொண்டிருக்கலாம்.  சே சே….. சக்திபோதோ காலையில் நடந்து கொண்ட விதம்தான் எப்படி ஒரு முட்டாள்தனமானது?

          கதவின் மேலிருந்த மணியை அவர் முதலில் மென்மையாக அழுத்தினர்; பிறகு சற்று வலுவாக, அதன்பிறகு இன்னும் கூடுதல் சத்தம் வரும் வகையில்….

           இப்போது கதவு திறந்தது. கதவைத் திறந்தது பிரதிபாவேதான்.

          மிக மிக சாதாரணமான வழக்கமான குரலில்

          ‘‘இன்னிக்கு என்ன நீங்க லேட்டா’’

என்று கேட்டாள் அவள்.

          லேட்’.  ஆமாம் கொஞ்சம் லேட்டாகி விட்டதுதான்!

          வீட்டுக்குள் காலெடுத்து வைப்பதற்கு முன் சக்திபோதோ சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

          அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பது சக்தி போதோவுக்கு இன்னும் தெளிவாகவில்லை.  அதற்குள் பிரதிபா வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தாள்.

          ‘‘இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா? நீங்க போனப்புறம் நான் அடுப்படியிலே இருந்து வந்து வெளிக்கதவை சாத்தப் போனேன்.  திடீர்னு நம்ம கோகோன் கிட்டேயிருந்து பயங்கரமா ஒரு அலறல் சத்தம்.  நான் அவன்கிட்டே ஓட்டமா ஓடினேன்.  என்ன ஆகியிருந்தது தெரியுமா?  ஐயோ அம்மா! ஒரு பெரிய கறுப்பெறும்பு அவனைக் கடிச்சிட்டு அவனோட விரலிலேயே  ஊர்ந்துபோச்சு. அதை அவன்மேலே இருந்து அவ்வளவு சுலபமாப் பிச்சுக்கூட எடுக்க முடியலை.  கொஞ்சம் ரத்தம் கூட வந்தது.  குழந்தை என்னடான்னா விடாம அழறான்! இன்னிக்கு முழுசும் ‘ரெஸ்’டே இல்லை எனக்கு.  பொறுமையே போனமாதிரி ஆகிப்போச்சு.  வீட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன்.  நாள் முழுக்க வீட்டைப் பெருக்கக் கூட இல்லை, என் தலையை வாரிக்கலை.  சே…. எப்படிப்பட்ட தொந்தரவு பிடிச்ச ஒரு நாள்? கடைசியிலே ஒரு வழியா இப்பதான் பாபு விளையாடிக்கிட்டிருக்கான்’’.

          ஆனால் குழம்பிப்போயிருந்த சக்திபோதோவின் பார்வையோ குழந்தை மீது படியாமல் ஜன்னல் திட்டில் போய்ப் பசை வைத்த மாதிரி ஒட்டிக் கொண்டது.  அப்படியானால் சக்திபோதோ செய்த தந்திரமான முயற்சிகளெல்லாம் வீண்தானா?

          அது இன்னும் அங்கேதான் இருக்கிறதா? எப்படி வைக்கப்பட்டதோ – அதே நிலையில்? ஆனால், பத்திரிகைதான் இருக்கிறது! அந்தக்கடிதம்?

          கடிதம் எங்கே போயிற்று என்று இப்போது ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது.  திடீரென்று அதை எடுத்துப் பார்ப்பதுபோல நடிப்பதும் கூட இப்போது சரிவராது.  இப்போது அவர் முன்னுள்ள முக்கியமான காரியம் எறும்புக்கடிக்கு ஆளான குழந்தையை கவனிப்பதுதான்.  அதுதான் அவர்கள் இருவருக்கும் இப்போது ஏற்பட்டுள்ள பெரிய சிக்கல்.  அதனால் உடனே அவர் கை, கால் முகம் கழுவிக் கொண்டு குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டாக வேண்டும்.  சூடான பூரிகள் ஆறிக்கொண்டிருப்பதாக பிரதிபா வேறு எச்சரித்துக்கொண்டிருக்கிறாள். அவர் நிறைய சாப்பிடாமல் போனால் அவரைச் சும்மா விட மாட்டேன் என்றும் சொல்கிறாள்.

          சரி…. கொஞ்ச நேரம் கழித்து யாருமே பார்க்காத சமயத்தில், தபால்காரர் என்ன போட்டுவிட்டுப் போயிருக்கிறார் என்று பார்ப்பது போல அந்தப் பத்திரிகையையும், கடிதத்தையும் மெள்ளப்போய் எடுக்கலாம்.  ஆனால் பிரதிபா தன்னைப் பார்க்காமல் இருக்கும்போது மட்டுமே அதைச் செய்யவேண்டும்.  ஆனால் அந்தக் கடிதம் எங்கே போனது? அவர் இங்குமங்குமாய்க் கடிதத்தைத் தேடினார்.  ஆனால் பத்திரிகையை எடுத்த பிறகே கடிதம் எங்கே இருக்கிறது என்பது தெரிந்தது.

          ஆச்சரியமாக இருக்கிறதே?  சக்திபோதோ, தன் கைகளாலேயே அந்தக் கடிதத்தை எடுத்துப் பத்திரிகைக்கு மேலே வைத்திருக்கிறார்.  அதன் பிறகு யாருடைய கையும் தில் படவில்லையென்றால் அது பத்திரிகைக்கு அடியில் போனது எப்படி? அதோடு அந்தத் தபால் அட்டையின் மூலையில் இப்படி  ஒரு கறை படிந்திருப்பது எப்படி?

          இனிமேலும் இதை ஆராய்ந்து கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க முடியாது.

          கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்ட சக்திபோதோ, இடியால் தாக்கப்பட்டவர்போலக் குரல் நடுங்கக் கத்தினார்.

          ‘‘இதைப் பாரேன்…. கொஞ்சம் இங்கே வந்து நான் என்ன சொல்றேன்னு கேளேன்? என்னது இது? உங்க சித்தப்பா  இப்படி அபத்தமா என்னத்தையோ எழுதிவச்சிருக்காரே?”

          பிரதிபா எதுவுமே நடக்காதது  போல மிக இயல்பான முகபாவனையுடன் மெல்ல நடந்து வந்து அவர் சொல்வதைக் கேட்டாள்.  வழக்கமான ஆர்வத்துடன்  கேட்பதைப்  போலவே

          ‘‘என்ன சொல்றீங்க? பர்தோமன்லேயிருந்தா லெட்டர் வந்திருக்கு? சித்தப்பாவா எழுதியிருக்கார்? என்னது இது திடீர்னு இப்படியெல்லாம்  உதவி பண்ண ஆரம்பிச்சிருக்கார்? ஆமாம், அவர் அப்படி என்னதான் எழுதியிருக்கார்? நீங்க ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க? அவர் என்னதான் எழுதியிருக்கார்னு சொல்லுங்களேன்…. அதை முதல்லே சொல்லமாட்டீங்களா?’’

          தானும் படிப்பறிவு உள்ளவள் என்பதையே மறந்து விட்டவள் போல இப்படிப் பேசினாள் பிரதிபா.

          சக்திபோதோ, தரையில் உட்கார்ந்து கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டார்.

          ‘‘அவர் எழுதியிருக்கிறதை என்னாலே கொஞ்சம் கூட நம்ப முடியலை.  இது நிஜம்தானா…? இப்படிக் கூடவா நடந்திடும்?

          இப்போது பிரதிபா சற்றுக் கவலை தோய்ந்த முகத்துடன் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.  ஏதோ ஒரு வருத்தம் தன்னைத் தாக்க இருப்பது போல அரற்ற ஆரம்பித்தாள்.

          ‘‘கொஞ்சம் தெளிவாதான் சொல்லுங்களேன்! என்னதான் ஆச்சு… என்ன எழுதியிருக்குன்னு சொல்ல மாட்டீங்களா? எனக்கு எதுவுமே புரியலியே? ஒரு வேளை எங்கம்மாவுக்கு ஏதாவது…?”

          சக்திபோதோ, வருத்தத்தோடு பேசினார்.

          ‘‘ஆமாம் பிரதிபா! அம்மாதான் நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்க’’ ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியபோது அவரது நாடி நரம்புகளெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன.

          பிரதிபா நெஞ்சில் அடித்துக் கொண்டு வானமே இடிந்து விழும் அளவுக்கு உரத்து ஓலமிட்டாள்.

  ‘’ஐயையோ …நீங்க என்ன சொல்றீங்க? என் கிட்டேயா அப்படி சொல்றீங்க? வானத்திலே இருக்கிற இடி நேரா வந்து என் தலையிலே எறங்கிட்ட  மாதிரி இருக்கே?’’

-இப்படிப் பலவாறு கூச்சலிட்டு ஓய்ந்தபின் மயக்கம் போட்டுத் தரையில் விழுந்தாள் பிரதிபா. அவள் ஏன் அப்படி விழ மாட்டாள்? நாள் முழுவதுமே அப்படி ஒரு மயங்கிய நிலையில்தானே அவள் இருந்திருக்கிறாள்?

          தண்ணீர்ப்பானையிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்துக்கொண்டு வந்து அவள் முகத்தில் விசிறியடித்தபடியே அந்தக்கடிதம் இருந்த இடம் உண்மையிலேயே மாறிப்போனது எப்படி என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார் சக்திபோதோ. அந்த அஞ்சலட்டையின் ஒரு நுனியில் மஞ்சள் கறை படித்த ஒரு விரலின் அடையாளம் அத்தனை தெளிவாகப் படிந்திருப்பது எப்படி என்றும் கூடத்தான்!

            *********************************************

                      ***************

 

 

           


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....