துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.3.21

வெண் இரவுகள்-(WHITE NIGHTS) மொழியாக்கம்

 தொடர்ந்த என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள் வரிசையில்

(குற்றமும் தண்டனையும்,அசடன்,தஸ்தயெவ்ஸ்கி கதைகள்,நிலவறைக்குறிப்புகள்,இரட்டையர்)

இப்போது நடைபெறும் சென்னை புத்தகக்கண்காட்சியில் என் ஆறாவது தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பான ‘வெண் இரவுகள்’(WHITE NIGHTS)வெளிவந்திருக்கிறது 

அதற்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை பகிர்வுக்கு

             ‘இதயத்தைச் சில்லிட வைத்து…’

                   (என்னுரை)

 

    தஞ்சைப்பெரிய கோயில் நந்தியின் பிரம்மாண்டப் பேரழகும், குந்துமணிக்குள் நூற்றில் ஒன்றாக அடங்கியிருக்கும் மிகச்சிறிய தந்தச் சிற்பத்தின் நுண்ணிய நகாசு வேலைப்பாடும் அளவில் வேறுபட்டாலும் தரமதிப்பீட்டில் வேறுபடுவதில்லை. தஸ்தயெவ்ஸ்கியின் பெரும்படைப்புக்களான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையும், ‘அசட’னையும், மறிந்து வரும் பேரலைகளின் ஆர்ப்பரிப்புக் கொண்ட மகாசமுத்திரமாக மதிப்பிட்டால், ஒடுக்கமான கரைக்குள் பயணப்படும் அமைதியான சிற்றாறு போல அதே மேதையின் கற்பனையிலிருந்தும் கைவிரல்களிலிருந்தும் இனிதான - இலேசான சலசலப்புடன் பெருகி ஓடியிருக்கும் அற்புதமான குறும்படைப்பு ‘வெண்ணிரவுகள்’.

         

         இரண்டே இரண்டு பாத்திரங்கள், மிகச்சில பின்னோக்குச் சம்பவங்கள், உரையாடல்கள் கொண்ட இந்த ஆக்கத்தின் மைய இழை, காதல்தான் என்றபோதும் ‘காதல்கதை’ என்ற ஒற்றைப்பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாதபடி, ஒவ்வொரு இரவிலும் ஆழமான பல உளவியல் முடிச்சுக்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. உரையாட எவருமற்ற தனிமை கொண்டவனான கதைசொல்லி, தனக்குப் புத்துயிர்ப்புத்  தந்த தேவதையாய்க் கொண்டாடும் நஸ்டெங்காவிடம் தன் அக உலகைத் திறந்து காட்டி அன்றாடம் தான் மேற்கொள்ளும் கனவுலக சஞ்சாரத்தை வெள்ளமாய்ப் பொழியும் விவரணை ஒரு துருவமென்றால், எந்த வகையான உலகியல் அனுபவமும் அற்றவளாய்ப் பாட்டியோடு பிணைப்பூசி குத்தப்பட்டு வாழ்ந்து வரும் நஸ்டெங்கா, கபடமற்ற பிள்ளை மொழியில் தன் வாழ்க்கைச் சரிதத்தை அவன் முன் திறந்து காட்டுவது, நேர் எதிரான மற்றொரு துருவம்.

 

        இரவா பகலா என்று இனம் பிரித்துச்சொல்ல முடியாத மேகமூட்டம் கொண்ட குளிச்சியான பகற்பொழுதுகளைப் போல நீண்டநேரம் மெல்லொளி வீசிக்கொண்டிருக்கும் வெண்மையான இரவுகள், செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் கோடைகால இரவுகள். அந்த இரவுகளின் பின்னணியில் சந்திக்கும் இந்த இருவரின் உணர்வுநிலைகளும் கூட மாறி மாறி அடிக்கும் வெயிலும்,மழையும் போலக் கணத்துக்குக் கணம் பாசம் பரிவு, நேசம் இரக்கம், காதல், கருணை என்று – குறிப்பிட்ட எந்தச்சிமிழுக்குள்ளும் அடக்கமுடியாதபடி- மாறி மாறி சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கின்றன. மங்கலான இருட்டாய்த் தெரியும் கற்பனையான மாய உலகத்துக்கும், வெயில் போலச் சுளீரென்று முகத்தில் அறையும் யதார்த்தத்துக்கும் இடையே சிக்கி அலைப்புறும் இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் தம்மிடையே கொண்டிருக்கும் நேசத்தைக் காதல் என்ற ஒரு சொல்லால் மட்டுமே வரையறுத்துச்சொல்லி விட முடியாதபடி அதற்குத்தான் எத்தனை முகங்கள்? அன்புக்கு நெருக்கமானதாக எத்தனை வகையான சொற்கள் நம் சொற்களஞ்சியத்தில் இருக்குமோ அத்தனைக்கும் பொருத்தமான சூழல்களை நாவலின் உரையாடல்களிலும், விவரிப்புக்களிலும்,சம்பவங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பட்டுக்கொண்டே செல்லும்போது, அந்த இருவருக்கும்இடையிலுள்ள குறிப்பிட்ட அந்த உணர்வை -இன்னும் கூட எந்தச் சொல்லால்தான் சரியாகக் கடத்தி விட முடியும் என்று நம்மை மலைக்க வைத்து விடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

       

     அப்படிப்பட்ட பிரியம், இதயத்தைச் சில்லிட வைத்து ஆன்மாவை கனக்கச் செய்து விடுகிறதுஎன்று இந்த நாவலின் கதைசொல்லி ஓரித்தில் குறிப்பிடுவது போல ’வெண்ணிரவுக’ளின் மொழிபெயர்ப்புப் பணியும் கூட ஒரு வகையில் என் இதயத்தைச் சில்லிட வைத்து ஆன்மாவை கனக்கச் செய்ததுதான். இந்தக் குறு நாவலைத் தமிழில் மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்தில் படித்ததோடு நின்றிருந்தால், இந்தப்பிரதிக்குள் இவ்வளவு துல்லியமாக ஊடுருவிப்போகும் அரிதான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன். குறுகத்தரித்த குறள் போலக் கிட்டத்தட்ட 40 பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கும் இந்தக் குறுநாவலைத் தமிழில் பெயர்ப்பது, 1000,2000 பக்கங்கள் நீளும் முந்தைய நாவல்களுக்கு நிகரான,அவற்றை விடக் கூடுதலான உழைப்பையும், சவால்களையும் என் முன் வைக்கக்கூடும் என்பதை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் இனிமையான அந்தச் சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொண்டபடி, அவற்றைக்  கடந்து சென்ற தருணங்கள், புதிர் போர்த்திய ஒவ்வொரு திரையையும் - ஒவ்வொன்றாக விலக்கிக்கொண்டே செல்வதைப்போன்ற மகிழ்ச்சியை என்னுள் மின்னலடிக்கச்செய்த கணங்களும் ஆயின. மனதுக்குப் பிடித்தமான ஒரு சங்கீதத் துணுக்கின் ரீங்காரம் போல இந்தப் படைப்பை மொழிமாற்றம் செய்த பொழுதுகள் என்னுள் என்றும் ரீங்கரித்துக் கொண்டிருக்கும்.

      என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை செம்பதிப்புக்களாக, மிகுந்த செய்நேர்த்தியுடன் தொடர்ந்து வெளியிட்டு வருவதோடு, ’வெண்ணிரவுக’ளைத் தமிழாக்கம் செய்ய வேண்டுமென்று எனக்கு வலுவான அன்புத் தூண்டுதல் அளித்து , நூலை வெளியிடவும் முன்வந்திருக்கும் நண்பர் யுகன் அவர்களுக்கும்,நற்றிணைப் பதிப்பகத்தார்க்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எம்  சுசீலா

மதுரை

15.12.2020

susila27@gmail.com

 


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....