துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.6.21

தீராப் பெரும்பசி- தி ஜானகிராமனின் ‘கொட்டுமேளம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து.

தீராப் பெரும்பசி

-எம்.ஏ. சுசீலா-


மானுடத்தின் ஆதார உணர்வாகி, தூலவடிவத்திலும், சூக்குமமாகவும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பசி என்ற பேருணர்ச்சிக்குத்தான் எத்தனை நிறங்கள்? எத்தனை முகங்கள்? பசிகொண்ட மானுடத்தின் பலதரப்பட்ட பக்கங்களையும் வெவ்வேறு கோணங்களில்– வாழ்நாள் முழுவதும் தாம் உருவாக்கிய சிறுகதைகளிலும், நாவல்களிலும் சளைக்காமல் எழுதினாலும், அதில் சற்றும் களைத்துப் போய்விடாத தீராப் பெரும்பசியோடு திரும்பத் திரும்பப் பதிவு செய்துகொண்டேயிருந்தவர் எழுத்தாளர் தி.ஜானகிராமன். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகிய ‘கொட்டுமேளம்’(1954), சோற்றுப் பசி, பொருள் தேட்டத்துக்கான பசி, வாழ்வியல் வெற்றிக்கான பசி, அழகு, அன்பு, பரிவு, காமம் எனக் கசிந்தும், பெருகியும் ஓடும் பல்வேறு உணர்ச்சிகளின் பசி என்று பசியின் பேரிரைச்சல்களால் மட்டுமே நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறது. தன் எழுத்து லாவகத்தால் அந்தச் சத்தத்தைச் சங்கீதமாக்கவும், கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் பசியின் குரல்களை அதனதன் தன்மைக்கேற்ப அடக்கிப் படிய வைக்கவும் முனைந்திருக்கிறது தி.ஜா.வின் எழுதுகோல். அவரது புகழ்பெற்ற நாவல்களான ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ தொடங்கி இறுதிப் படைப்பான ‘நளபாகம்’ வரை, ‘பசியும் பசியாற்றுதலும்’ நேர்ப்பொருளாக மட்டும் நின்றுவிடாமல் உருவகமாக, குறியீடுகளாகத் தொடர்ந்துகொண்டே சென்றதற்கான விதைகள், அவரது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அழுத்தமாக ஊன்றப்பட்டுவிட்டன என்றே சொல்லிவிடலாம்.

உலகுக்கெல்லாம் சோறூட்டும் சோழ வள நாட்டிலிருந்து வந்தவர் என்பதோடு, தினுசு தினுசான சாப்பாட்டு வகைகளின் மீது குன்றாத விரும்பம் கொண்டிருக்கும் தஞ்சை, கும்பகோணம் பகுதியைச் சார்ந்தவர் என்பதாலோ என்னவோ, அன்றாடச் சாப்பாட்டுக்கே அலைக்கழிவுபடும் மனிதர்களின்மீது தி.ஜா., எல்லையற்ற இரக்கமும் கருணையும் கொண்டிருக்கிறார்.எந்த வழியிலாவது, எப்படியாவது அந்த வயிற்றுப் பசி தீர்ந்துவிடலாகாதா என்று அந்தப் படைப்புள்ளம் பதைக்கிறது. கதைகளின்வழி அவர் முன்வைக்கும் வயிற்றுப் பசிகளிலேயும்கூட எத்தனை வகைகள்?

‘சிலிர்ப்பு’ சிறுகதையில் வரும் பத்து வயதுச் சிறுமி, “மத்தியானச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணாத” குடும்பத்தில், நான்கு அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை இவர்களோடு பிறந்தவள். தன் பசியோடு சேர்ந்து குடும்பத்தார் பசியையும் ஆற்றுவதற்காக அறிமுகம் அதிகமில்லாத ஒரு பெண்மணியோடு, முன்பின் தெரியாத கல்கத்தாவுக்குப் பயணப்படுகிறாள் அவள். மூன்றுவருடகாலம் ஒரு ஜட்ஜ் வீட்டில் “கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோச்சு, குழந்தை பார்த்து, தோசைக்கு அரைச்சு” எல்லாம் செய்தாலும், பசி தீராதவளாய்ப் பஞ்சத்தில் அடிபட்டதுபோலக் கண்கள் உள்ளொடுங்கிப் போய், ஒட்டி உலர்ந்து காட்சி தருகிறாள். சுரண்டிக் கறந்து அவளை வேலை வாங்கிய குடும்பம், கடைசியாக அவள் புறப்பட்டுச் செல்லும் வேளையிலும்கூடப் பழைய சோற்றுடன் மட்டுமே வழியனுப்பி வைத்திருக்கிறது.

வாழ்க்கைப்பாட்டின் பற்றாக்குறை கிளர்த்தும் பசி இவ்வாறிருக்க, ‘வேண்டாம் பூசணி’யின் பாட்டியோ, பாசத்தின் பற்றாக்குறையால் வயிறு காய்ந்து கிடக்கிறாள். தான் பெற்ற மூன்று மகன்களுக்கும் இரண்டு பெண்களுக்கும் இடையே வேண்டாத உருப்படியாக அவள் பந்தாடப்படும் அவலமே சிறுகதையில் முதன்மைப்படுத்தப்பட்டாலும் தன் ‘வயிற்றுத் தீ’யைத் தணிப்பதற்காகப் பாட்டி படும் அவதிகளையும் இணையாகவே சொல்லிக்கொண்டு போகிறார் ஆசிரியர். எண்பத்திரண்டு வயது தனி வாழ்க்கையில், பாட்டியால் ‘பாதிநாள் ரசம் அல்லது வெறுங்குழம்பு ஏதாவது ஒன்று” மட்டுமே பண்ணிச் சாப்பிட முடிகிறது. வாய் ருசிக்க தோசை, இட்டிலி, மல்லித் துவையல் சாப்பிட்டதெல்லாம் பழங்கதையாய்ப் போய் முடிய, ‘’ஆறு மாதமாக ராத்திரிப் பலகாரம்கூடக் கிடையாது; மத்தியானம் பன்னிரண்டு மணி சுமாருக்குச் சாப்பிடுவதோடு சரி”. ஒருவகையில் பாட்டிக்கு இவ்வாறு விதிக்கப்பட்ட தனிவாழ்க்கைக்குச் சாப்பாடு என்பதே குரூரமான முகாந்திரமாகவும் ஆகிறது. அவள் இலையில் உட்கார்ந்த நேரம் பார்த்து, “அம்மாடியோவ். ஒண்ணரைப்படி சாதம் சாப்பிடறதே… உங்கம்மாவுக்குச் சாதம் என்னாலே போட முடியாது… இந்த மாதிரி பகாசுரத் தீனி திங்றதைப் பார்த்தா எனக்குப் பயமாயிருக்கு…. குழந்தைகள்ளாம் பயப்படறது” என்று மருமகள் இரைச்சல் போட, வாயில் வைத்த சோற்றுக் கவளத்தை விழுங்க முடியாமல் பாதியிலேயே எழுந்தபடி, ‘தின்கிற ஒரு பிடிச் சோற்றையும்’ அவள் அப்படிச் சொல்லிவிட்டாளே என்று குன்றிப் போகிறாள் பாட்டி.

தனிக்குடித்தனத்தில் தலையில் அடிபட்டுவிட, பாட்டியிடம் மிச்சமிருக்கும் பண்ட,பாத்திரங்களுக்காகவும், நகைகளுக்காகவும் தன்னுடன் கூட்டிச் செல்லும் மகள், “என்னம்மா? நீ சாப்பிட்டா இங்கே ஆயிடப் போறது?” என்று தன்பங்குக்குச் சாப்பாட்டையே குறிவைத்துக் குத்தல் மொழி பேசுகிறாள்.‘அன்பிலாள் இட்ட அமு’தே ஒவ்வொரு கட்டத்திலும் பாட்டிக்கு நஞ்சாகிக் கொண்டு வருவதைப் படிப்படியாகச் சொல்லிக்கொண்டு போகிறது கதை.

சோறே கிடைக்காதவர்களின் சோற்றுக் கவலை ஒருபுறமென்றால் – எல்லாம் இருந்தும் பசித்துக் கிடந்தாக வேண்டிய சூழ்நிலையும் சிலவேளைகளில் நேர்ந்து விடுகிறது. ‘செத்துப்போய்விடுவார்’ என்ற நினைப்பை ஐந்து முறை பொய்யாக்கிப் பிழைத்துக்கொண்ட வயதான கணக்குப்பிள்ளை மாமா ரேழியில் இழுத்துக்கொண்டே கிடக்க, ‘பிணம் விழுந்தால் சாப்பிட முடியாது’ என்று இரை மட்டுமே குறியான கழுகு போல் சாப்பாட்டுக் கடையைச் சீக்கிரம் முடித்துக்கொள்ள ஊரே பரபரக்கிறது (‘கழுகு’) “…..தாத்தா செத்துப் போகப் போறாங்க. செத்துப் போயிட்டாங்கன்னா பொணம் தூக்கற வரைக்கும் சோறு திங்கக்கூடாது…. அதுவரைக்கும் பட்டினி கிடக்க முடியாதில்லை” என்று மதியம் ஒன்றரை மணிக்குச் சாப்பிட்ட கணவனையும், குழந்தைகளையும் மூன்றரை மணிக்கே சாப்பிட்டு முடிக்குமாறு கட்டாயப்படுத்துகிறாள் அந்தக் குடும்பத் தலைவி. அத்தனை முன்னேற்பாடுகளும் பொய்த்துப்போய்க் கிழவர் பிழைத்துக் கொண்டுவிட, முதலில் பசியில்லாமல் சாப்பிட்ட வயிறுகளுக்கு நள்ளிரவில் மெய்யாகவே பசி எடுக்க, பழையதையும் உறிமோரையும் வைத்து அதைத் தீர்த்துக் கொள்கிறார்கள். சக மனித உயிர் பிரிந்துகொண்டிருக்கும் நிலையிலும் கூடப் பசியிலிருந்து தங்களைப் பத்திரப்படுத்திக்கொள்ளவே மனிதர்கள் முனைகிறார்கள் என்ற ‘கன’மான செய்தியைத் தாங்கியுள்ள கதையை நையாண்டியான எள்ளல் பாணியில் நகைமுரணாக இலகுவாகச் சொல்லிக்கொண்டு போகிறார் தி.ஜா. “முருகன் என்னை அளச்சிக்க மாட்டான்போல இருக்கு” என்று ஒப்புக்காகச் சொல்லிக்கொண்டாலும் வாழ்வில் பசி கொண்ட ‘கழு’காய்க் கிழவரும் பிழைத்துவிடுகிறார். அவர் இறக்கப்போகிறார் என்ற நினைப்பில் ஒப்பாரி வைக்கும் கூட்டத்தைப் பார்த்து, “மாமா என்ன குறைச்சலா வாழ்ந்தாங்களா?” என்று ஆவேசப்படும் மாடி வீட்டுக் காவேரியாத்தா, “கத்தரிக்காய் பச்சடி கொஞ்சமாச் சாப்பிட்டாங்களா? வாளக்காய் வதக்கல் கொஞ்சமாச் சாப்பிட்டாங்களா? அறுபது வயசுவர உறைகுத்தின தயிரும், நத்தத்துக் களத்து மாவடுவும் போட்டுக்கிட்டுப் பளயது சாப்பிட்டுக்கிட்ருந்தாங்க… அது மாதிரி யாருக்குச் சாப்பிட முடியும்? யாருக்குச் சாப்பிடத் தெரியும்? பரமக்குடிலேந்து பாவக்காய் வரவளைச்சு நெய்யிலே வதக்கச் சொல்லிப் பளயதுக்குத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. என்ன குறைச்சல் அவங்களுக்கு”என்று அடுக்கியபடி கிழவர் நன்றாக உணவு உண்டு ருசித்து வாழ்ந்திருக்கிறார் என்பதையே அவர் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக முன்வைக்கிறாள்.

இதற்கு நேரெதிரான தளத்தில், “பத்துவேலி நன் செய், ஆயிரம் மூங்கில் கொத்து, ஆயிரம் தென்னை மரம், இரண்டு ஏக்கர் கறிகாய்க் கொல்லை….. மாட்டுத் தரகு, கமிஷன், வியாபாரம்…” என்று கொழித்தாலும்….“சம்பாதிச்சாப் போறாது ஐயா. சாப்பிடக் கொடுத்துவைக்கணும்” என்று நெஞ்சடைத்துக் கண்ணீர் பெருக்குபவன் ‘இக்கரைப் பச்சை’, ‘அத்துவின் முடிவு’ என்ற இரண்டு கதைகளிலும் கதை நாயகனாக வரும் அத்து என்ற அர்த்தநாரீஸ்வரன். சமையலில் மகா சிக்கனம் காட்டும் அவன் மனைவி, சமையலுக்கு ஆளே வைத்துக்கொண்டாலும் கடுகையும், எண்ணெயையும்கூட அளந்தளந்து கொடுப்பவள். அத்துவுக்குக் கிடைப்பதெல்லாம் “கொத்தவரைக்காய் வதக்கல், அவரை வற்றல் குழம்பு இந்த இரண்டும்தான்… இரவு பட்ஜட் – கொல்லைக் கத்தரிக்காயைச் சுட்டு ஒரு தொகையல், மிளகு ரசம், காய்ச்சின அப்பளம்” மட்டுமே. பால்கோவாவும், பாதுஷாவுமாய்ச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை கொண்ட அத்துவுக்குக் ’குறும்பை வாங்கி’யால் நெய்யை அளந்துபோடுகிறாள் மனைவி. பாலும், தயிரும், போஷாக்கும் சேராத உடம்புக்குச் காசநோய் வந்துவிட, அது முற்றிய நிலையில் தனிப்பண்டபாத்திரங்களைத் தோட்டத்தில் வைத்தபடி உதவியாள் சிங்காரம் காய்ச்சும் கஞ்சியே அத்துவுக்குச் சாப்பாடாகிறது.‘மொட்டை’ சிறுகதை, தனிமனிதப் பாத்திரச் சித்தரிப்பாக மட்டுமே விரிந்துகொண்டு சென்றாலும் – ஊனத்தை வெற்றிகொள்ளப் போராடும் சன்னாசியின் கண் குருடானதற்கான காரணங்களில் ஒன்றாக இறந்துபோன அப்பனுக்காக விரதம் இருக்கும்போது பசி பொறுக்க முடியாமல் அவன் விழுங்கும் ஒரு தூக்குப் புளியங்காயே காட்டப்படுகிறது. பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் வயிற்றுப் பசிக்கு அடுத்தாற்போல, மனிதப் பிறவிகளை ஆட்டிப் படைக்கும் பெரும் பசியாக அழகும் காமமும் ‘கொட்டுமேளம்’ தொகுப்பின் பல கதைகளிலும் முன்னிறுத்தப்படுகின்றன.

பெண் அழகில் லயித்துக் கரைந்து அதை உபாசிக்கவும் செய்யும் மனித மாதிரிகள் வெளிப்படுவது தி.ஜா.வின் நாவல்களில் மட்டுமல்ல; அவரது சிறுகதைகளிலும் கூடத்தான் என்பதையே ‘சண்பகப்பூ’, ‘தவம்’, ’ரசிகரும் ரசிகையும்’ ஆகிய சிறுகதைகள் உறுதிப்படுத்துகின்றன.“அது என்ன பெண்ணா? முகம் நிறைய கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை; இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய நெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல்” என்று அந்தாதிபோல அடுக்கியபடி பெண்மை வனப்பின் மீது மோக வேட்கை கொள்ளும் மனிதர்களுக்கு வயதின் மூப்போ, திருமணம் என்ற தகுதியோகூடத் தடையாவதில்லை. ‘சண்பகப்பூ’வில் வரும் தாத்தாவுக்குத் தன்னோடு ஆடுபுலியாட வரும் பெண்ணின் அழகை ரசிப்பதென்பதே ஒரு தினசரிப் பொழுதுபோக்கு. “அந்தப் புதையலைக் கண்டு வியப்பது அவருக்கு முக்கியமான வேலை; பலனை நோக்கிச் செய்யாத நித்தியக் கடமைபோல அவருக்கு ஆச்சரியப்படுவது தினசரிக்கடமை” என்று விவரிக்கும் கதாசிரியர், அந்தச் செயலை, “வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்துப் பூரித்துச்” செய்துகொண்டிருந்தார் என்றும் சொல்லிக்கொண்டு போகிறார்.

‘ரசிகரும் ரசிகையும்’ கதையில் வரும் சங்கீத வித்வானுக்கோ – ஒரு பொது இடமான ரயில்வே பிளாட்பாரத்தில் கணவனோடு சேர்ந்து நிற்கும் பெண் என்பதுகூட, அந்த அழகை ரசிக்கத் தடையாக இருப்பதில்லை. “இந்த அழகைப் பார்க்காத கண்ணு இருந்தா என்ன, அவிஞ்சா என்ன? அழகைப்பார்த்து ரசிக்க எல்லாருக்கும் பாத்யமுண்டுய்யா, அப்படிச் சொன்னா படைச்சானே பிரம்மா அவனைத்தான் குறைகூறணும்”என்று தன் ரசனையை நியாயப்படுத்திக்கொள்பவர் அவர்.“வெண்தாழை முகம், பாதம், கை, முதுகில் தளர்ந்து புரளும் சிற்றலையோடும் கூந்தல்; அரக்குவர்ணப் புடவை; வலது கையில் பூஜைத் தட்டு; இடது கையில் முன்றானை; வாளிப்பும் வர்ணமும் ஒன்றி வடிந்த அழ’’காகத் தன் “அந்தரங்கத்தை நிறைத்து நின்ற வனப்பு வடிவ”த்தோடு ஒரே ஒரு நாள் செலவிடுவதற்காகப் பத்து வருடம் சிங்கப்பூரில் ஓடாய் உழைத்து வயிற்றைக் குறுக்கிப் பணம் சேர்க்கிறான் ‘தவம்’ சிறுகதையின் கோவிந்தவன்னி.

மேற்குறித்த மூன்று சிறுகதைகளுமே இயற்கையோடும், தெய்வீகத்தோடும், இசையோடும்… இன்னும் எதையெல்லாம் உயர்வாகவும் உன்னதமாகவும் மனிதன் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அவை எல்லாவற்றோடும் பெண்ணழகை ஒப்பிட்டுப் பார்த்து மாய்ந்து மாய்ந்து போற்றித் துதி பாடினாலும் மனநிறைவு பெற முடியாமல் தவிக்கும் மானுடத்தின் தீராத அழகுப் பசியையே பல கோணங்களில் விவரித்துக்கொண்டு செல்கின்றன. பெண்ணின் எழில் மீது எழும் பசி, அவளை ஆள வேண்டும் என்ற காமப் பசியாக, கனலும் வேட்கையாக ஆணுள்ளத்தில் பரிணாமம் கொள்ளும்போது, முறையானது, முறை பிறழ்ந்தது என்ற பாகுபாடுகளும்கூட அந்த மோக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடுவதைப் பார்க்க முடிகிறது. பெண்ணழகு ஆணுக்குத் திகிலூட்டும் அதேநேரம், அதைத் தனக்கு உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற பெருவிருப்பையும் ஒருசேரக் கிளர்த்துகிறது .“மனுஷப் பிறவி இவ்வளவு அழகா இருக்கமுடியுமா?..ஏதோ மோகினியா இருக்குமோன்னுகூட அச்சமாயிருந்திச்சு. பூ அழகாயிருந்தா அதுசகஜம்.. ஆனா மனுசப் பிறவி இப்படி இருந்தா?” என்று ஒருபக்கம் அதிசயித்துப்போனாலும் செல்லூர்ச் சொர்ணாம்பாளோடு ஒருநாள் வாழ்ந்தால்கூடப் போதும், “அப்புறம் உசிர் வாழணும்னுதான் என்னமுடை?” என்ற நினைப்போடு மட்டுமே இயங்கும் கோவிந்தவன்னி ,குடும்பத்துக்குக்கூடப் பணம் சேர்க்காமல், கண்காணாத சீமையில் ஒண்டியாக நாளை ஓட்டுகிறான்.

‘சண்பகப்பூ’வில் வரும் கிழவரும்கூட, “மண்ணில் பிறந்த பெண்ணும், ஆணும் முயங்கி வடித்த மனுஷ்யப் படைப்பா அது?”…“இந்த முழுமையைத் தனது என்று சொல்லிக்கொள்ளக் கொடுத்துவைத்தவன் இருக்கிறானா?... புருஷன் என்று சொல்லிக் கொண்டு வருகிறவனுக்கு இதைத் தொட்டு ஆள மனம் வருமா…. ரோஜாப் பூவை அரைத்துக் குல்கந்து தின்கிற நாசகார உலகத்தில் ஒருவன் இவளை வந்து தொட்டு ஆண்டு, தாயாக்கி, பாட்டியாக்கி எல்லாரையும்போல மனுஷியாக்கத்தான் போகிறான்..”என்றெல்லாம் அந்த அதிமானுட அழகைத் தனி உடைமையாக்கும் தகுதி அற்ப மானுடர்க்கில்லை என்றும், ரத்தப்பூவான அவளை முகர்ந்ததாலேயே அவள் கணவன் அகாலமாய் இறக்க நேரிட்டது என்றும் அங்கலாய்த்துக்கொள்கிறார்; இவையெல்லாம் வெளிப்பேச்சுகள் மட்டுமே என்பதையும் அபூர்வமான அந்த அழகு, தனக்குக் கிட்டாமல் போனதன் வெளிப்பாடுகளே அவை என்பதையும் சிறுகதையில் பூடகமாகவும் வெளிப்படையாகவும் தி ஜா., உணர்த்திக்கொண்டே போகிறார்.

‘தாரித்திரியத்தை அநாதையாக விட்டுவிட்டுப் போகிறோமோ’ என்று இறக்கும் வேளையில் புலம்பிய சாருதத்தனை நினைவுகூர்ந்தபடி ஐந்து ரூபாய் நன்கொடை தருவதற்குக்கூட ஆயிரம்முறை யோசிக்க வேண்டிருப்பவன் (’நானும் எம்டனும்’), “முப்பத்தாறு ரூபாய் சம்பளத்தில் பால் பணம், மோர்ப்பணம், வீட்டு வாடகை, மளிகைப் பற்று எல்லாம்போக மீதியிருந்த மூன்று ரூபாயை” வைத்து எந்தக் கடனை அடைப்பதென்று தெரியாமல், ஏக்கர் கணக்கில் நிலம் சேர்க்கும் அடுத்தவீட்டுப் பச்சையைப் பார்த்து நெடுமூச்செறிபவன் (’இக்கரைப் பச்சை’) என்று பொருள் இல்லாதவர்கள் படுகிற பசி, மருத்துவப் பட்டம் பெற்று டாக்டர் தொழிலே செய்தாலும் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஏமாற்றங்களையுமே சந்தித்தபடி-வாய்ப்புக்கள் தவறிப்போனதாலோ, அவற்றைத் தவற விட்டதாலோ வெற்றிக்கோட்டை எட்டும் பசியோடு இருப்பவன் (’கொட்டுமேளம்’), தற்செயலாக ஏற்பட்டுப்போன கண்பார்வைக் குறைபாட்டை மூர்க்கமான மனஉடல் உரத்தால் வெற்றிகொள்ளும் பசியோடு அலையும் ‘மொட்டை’என்று வேறுவகையான பசிகளையும்கூடக் ‘கொட்டுமேளம்’ தொகுப்பிலுள்ள கதைகள் சுட்டிக்காட்டினாலும், வயிற்றுப் பசியும், அழகு/காமப் பசியுமே அதிகமான உள்ளடக்கங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மானுடத்தின் நியாயமான பசிகளை ஆற்றாமல் அப்படியே விட்டுவிடவும் தி ஜா வுக்கு மனமில்லை. ‘சிலிர்ப்பு’ கதையில் வேலை தேடிச் செல்லும் சிறுமியின் நிலை கண்டு கசியும் கதைசொல்லியின் சிறுவயது மகன், கதையின் தொடக்கத்திலிருந்து எந்த ஆரஞ்சுப் பழத்துக்காக விடாமல் நச்சரித்து வந்தானோ, எந்தப் பழத்தை அம்மா உரித்துத்தந்து சாப்பிட வேண்டுமென்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டு வந்தானோ அந்தப் பழத்தைக் கதை முடியும் தருவாயில் அந்தச் சிறுமிக்குத் தர முன்வருகிறான்; ஆரஞ்சுப் பழம், இங்கே பசியாற்றும் குறியீடாக மட்டுமல்லாமல், அன்புக்கும், நேசத்துக்குமான பசியாற்றும் பருப்பொருள் வெளிப்பாடாகவும் ஆகிறது; அகிலத்தையே அன்பால் அரவணைக்கும் செயலாக அந்தத் தந்தைக்கு அது சிலிர்ப்பூட்டுவது அதனாலேதான்.

தோல்விகளையே அடுக்கடுக்காய் சந்தித்து, எளிதாக ஏமாறக்கூடியவர் என்ற பெயரையும் எடுத்துவிட்ட ’கொட்டுமேளம்’ மருத்துவர் இலவச வைத்தியசாலை ஒன்றை அமைப்பதன் வழி தன் தோல்விகளையே வெற்றியாக மாற்றிக்கொண்டபடி வாய்ப்புக்கான பசியைப் புறத்தில் தேடிக்கொண்டிருக்காமல் தானாகவே அதை ஆற்றிக்கொண்டு விடுகிறார்.
பாதை பிறழ்நது வரும் பசிகளை (’தவம்’, ’ரசிகரும் ரசிகையும்’) இந்தத்தொகுப்பின் கதைகள் ஆற்ற முனைவதில்லை; கண்டிக்கவே செய்கின்றன. அதே வகையான பிறழ்வு, கடும்பசியாக இல்லாமல் கணநேரச் சலனமாக மட்டும் ஆகும்போது, அது ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுகிறது; மடைமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறது. காது கேட்காத கணவனால் மனத்துக்குள் எழும் இலேசான அதிருப்தி, அடுத்த வீட்டு மிலிட்டரி பையன் மீதான ஆர்வமாக மேலெழும்ப, நைவேத்தியப் பாத்திரத்தைத் தந்தபடி “ரொம்ப நாழி பண்ணிவிட்டேனோ? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு” என்ற பரிவும் கனிவுமான கணவனின் சொற்களாலும், நிர்மலமான அவனது பார்வையாலும் மாறிவிட, “அவளுக்கு எல்லாப் பசியும்” அதோடு “தீர்ந்துவிட்டது” என்கிறது ‘பசி ஆறிற்று’ சிறுகதை.
‘கொட்டுமேளம்’ தொகுப்பின் சிறுகதைகளில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள், பின்னாளில் உருவாக்கம் பெற்ற அவரது நாவல்களின் பெண்களை ஒத்தவர்களாக – அவர்களின் சுருங்கிய பதிப்புப் போலவே இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆட்கொள்ள முடியாத பிரமிக்க வைக்கும் பேரழகு கொண்டவர்களாக- காமத்துக்கான நுகர்பொருளாக ஆராதிக்கப்படுபவர்கள் என்ற வகைப்பாட்டிலேயே தன் பெரும்பான்மைப் பெண் படைப்புகளைப் புனையும் தனித்துவத்தைத் தி.ஜா. கைக்கொண்டிருக்கும்போது, அந்தப் பொதுப்போக்கிலிருந்து அவரது சிறுகதைகள் மட்டும் விலக்குப் பெற்றவையாய் இருக்க வழியில்லை. ‘கொட்டுமேளம்’ தொகுப்பைப் பொறுத்தவரை, மேற்குறித்த பெண்மாதிரிகளே மிகுதியாக வந்தாலும், அவர்களுக்கு நேர் எதிர்ப் பேரெல்லையாகக் கொடூரமே வடிவான சில பெண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எச்சில் இலையை மாமியார் தலையில் தூக்கி எறிந்து அவமானப்படுத்துபவர்கள் (’வேண்டாம் பூசணி’), கணவனை அடித்துத் துவைத்து அரைப்பட்டினிபோட்டுவிட்டு, வீட்டிலிருக்கும் குழந்தைகள்கூடச் சாப்பிட முடியாதபடி ‘’ஒரு பானைச் சோற்றிலும் சாணியைக் கரைத்து” ஊற்றுபவர்கள் (’இக்கரைப் பச்சை’). இத்தகைய இரு ‘மாதிரி’களுக்கும் இடைப்பட்டவர்களாய் வரும் பெண்கள் தனித்துவம் ஏதுமற்ற சராசரி ஜீவிகள். இந்தப் போக்குகளிலிருந்து வேறுபட்டு ஆக்கபூர்வமான தனித்தன்மையும், துணிச்சலும், சுய சிந்தனையும் கொண்ட பெண்களாகக் ‘கொட்டுமேளம்’ தொகுப்பில் வெளிப்பட்டிருக்கும் இருவருமே விலைமகளிர் என்பது ஆழ்ந்த அவதானிப்புக்குரியது.

தன்னைத் தேடிவரும் மனிதர்கள் பலர் இருக்க – ஒரு சங்கீத வித்துவானின் தனித்திறமைக்காக, தானாகவே அவரைக் கூப்பிட்டு அனுப்புகிறாள் ’ரசிகரும் ரசிகையும்’ சிறுகதையில் வரும் ரசிகையான விலைமகள் .“என் காதை ரொப்பறதுதான் பாட்டு… என மனசை ரொப்பணும், என் பிராணனைப் போய்க் கவ்வணும், இந்த தேகம், உயிர் எல்லாம் மறந்துபோகணும்… இந்த வீட்டுக்கு அப்படிப் பாடற ஆத்மாவை நான் வரவளைக்கணும்” என்று ஆசைப்பட்டுத் தியாகப் பிரம்ம ஆராதனைக்கு வந்த மார்க்கண்டத்தை வீட்டுக்கு வரவழைக்கிறாள். “போன வருஷத்திலேயிருந்துதான் நீங்க நெஜம்மாப் பாட ஆரம்பிச்சிருக்கீங்க. அதுக்கு முன்னாடி சும்மாச் சத்தம் போட்டுக்கிட்டிருந்தீங்க” என்று துணிவாக அவரது சங்கீதத்தையே விமரிசிப்பதோடு, அவரை உபசரிக்கவும் செய்கிறாள். மோகக்கிறக்கத்தில், அவள் தன்னை அழைத்திருப்பதற்கான அடிப்படையையே மறந்துவிட்டு – ஒரு பாவனைப் பேச்சாக அவளைத் தியாகய்யரோடும், அவரைவிடக்கூட உயர்வாகவும் தூக்கிவைத்துப் புகழத் தொடங்கிவிடும் வித்துவானின் பேச்சால், ஒருநொடியில் அவளது உள்ளத்திலிருந்து சரிந்துவிடுகிறார் அவர். “மனுஷப் பூச்சியெல்லாம் அரித்த இந்த உடம்பைத் தியாகையர் பாட்டோடு சரிக்கட்ட வேண்டாம்” என்று அவள் சொல்லச்சொல்ல, அவரது பைத்தியம் முற்றிக்கொண்டே போகும் நிலையில், “தாசியாப் பொறந்திட்டா இந்த மாதிரி முட்டாத்தனத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டுக் கிடக்கணும்னு மொடையில்லே… போய்யா எளுந்திரிச்சு” என்று அவரை விரட்டியும் விடுகிறாள்.
‘தவம்’ சிறுகதையின் விலைமகள் சொர்ணாம்பாளும்கூடத் தன்னோடு உடன் இருக்கப் பத்து வருடக் காலம் உழைப்புத் தவம் இருந்துவிட்டு வரும் கோவிந்தவன்னியின் தவத்தை மேன்மைப்படுத்துவதில்லை. ‘மோகமுள்’ யமுனாவின் ‘’இதுக்குத்தானா?’ என்ற புகழ் பெற்ற வார்த்தையையே வேறுவகையாகச் செயல்படுத்திக் காட்டுகிறாள் அவள்.“தவங் கிடக்கிறதுக்கு முறை உண்டு. கண்டதுக்கெல்லாம் தவம் கிடந்தா மனசுதான் ஒடியும், தண்டனைதான் கிடைக்கும். இப்படிவா” என்று அவனைத் தழுவி முத்தமிடுகிறாள்.“ நான் தாசி… ஒரு வருஷம். எனக்குப் பத்து வருஷம்… பார்த்த பேரெல்லாம் மடங்கி மடங்கி நெருப்பிலே விழுகிற மாதிரி விழுந்தாங்க. நெருப்பு எரிய எரியக் குப்பையும் அதிகமாத்தானே இருக்கும்” என்று பேசி அவனை அதிரவைக்கிறாள் அவள்.
சராசரிப் பெண்களிடம் காணக்கிடைக்காத இத்தகைய தனித்துவத்தை விலைமகளிருக்கு அளித்திருப்பவை இசை, நடனம், கல்வி என்று அவர்கள் பெற்றிருக்கும் துறைசார் தனித்தகுதிகளும், பொருளாதாரத் தற்சார்புமே என்பதையே தஞ்சைப் பின்புலம் சார்ந்தவரான தி.ஜா., இச்சித்தரிப்புக்களின் வழிகூர்மையாய், நுட்பமாய்ப் பதிவுசெய்திருக்கிறார்.
தி.ஜா.வின் நாவல்களைவிட, அவரது ஆழ்மனமும், கலையழகும், மனித மன நேர்த்திகளும், விகாரங்களும், மானுடத்தின் மீதான அவரது காருண்யமும் அதிகம் வெளிப்படுவது அவரது சிறுகதைப் படைப்புகளிலேதான் என்று சில தேர்ந்த எழுத்தாளர்களும், விமரிசகர்களும் தொடர்ந்து கூறிவந்தபோதும் அறுபதுகளுக்குப் பின் எழுந்த அவரது பெரிய நாவல்களின் சிறுசிறு தீப்பொறிகளை, கங்குகளையே அவரது ஆரம்பகாலச் சிறுகதைகளிலும் காணமுடிகிறது. சிறுகதைக்குத் தேவைப்படும் ஒருமைப்பாட்டின் நிமித்தம், அதற்குள் அடங்கி வாசித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதைச் சிறுகதை வடிவம் பற்றிய தன் கட்டுரை ஒன்றில் தி.ஜா.வே குறிப்பிட்டிருந்தாலும், தான் எண்ணியதில் ஒரு தெறிப்பை மட்டுமே காட்ட…., தன் எழுத்தின் வெளிச்சம் ஒரு புள்ளியை நோக்கியதாக மட்டுமே அமைய அவர் பெரிதும் பிரயத்தனம் மேற்கொண்டிருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. சிறுகதையின் வடிவ ஒழுங்கையும், கட்டுக்கோப்புகளையும் பொங்கிவரும் புதுவெள்ளக் காவிரியாய் உடைத்துத் தகர்த்தபடி, தோற்றத்தாலும் குணநலன்களாலும் மனிதர்களையும் - காட்சிப்படுத்தல்களால் பின்புலங்களையும் விரிவான ஆலாபனைகளால் அவர் விஸ்தரித்துக் கொண்டே செல்லுவதைக் காணும்போது, சிறுகதை எழுதும்போதும்கூட நாவலுக்கான மன அமைப்பே தி.ஜா.வுக்குள் கூடுதலாய்க் கூடி இருந்திருக்க வேண்டும் என்றே அனுமானிக்க முடிகிறது.
மானுடத்தின் உன்னதங்களோடு, மனித மனக் கோணல்களையும், வக்கிரங்களையும், உடல்/ உள்ளம் சார்ந்த பலவகைப் பிறழ்வுநிலைகளையும் – தன் நாவல்களைப் போலவே சிறுகதைகளிலும் கருப்பொருளாக்கியிருக்கும் தி.ஜா., அவற்றைப் புறநிலையிலிருந்து மட்டுமே காட்டிவிட்டு விலகிவிடுகிறார் என்பது உண்மைதான். ஒருசில கதைகளில் அவற்றின் குறைபாட்டைக் குறிப்பாகவோ மறை பொருளாகவோ சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. ஆனாலும் பலவீனங்களின் குரூர அழகு, விரிந்துகொண்டே செல்லும்போது, சாமர்த்தியமான ஜாலங்கள் காட்டும் தி.ஜா.வின் மொழி அழகாலும், கதைக்கூற்று முறையில் அவர் கையாளும் சுவாரசியங்களாலும், லாகிரியூட்டும் வருணனைகளாலும் தன்வசமிழந்து போய்விடும் வாசகன், அவர் உணர்த்த நினைக்கும் இறுதிப் புள்ளியைக் கோட்டை விட்டுவிட்டு ‘அவை மட்டுமே அவர்’ என்று எண்ணிவிடுவதே தி.ஜா.வின் பலமும் பலவீனமுமாகிறது.
****……………………………………………………………………………………………***

1 கருத்து :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனிடமிருந்து வந்த எதிர்வினை:

M.A. Susila's "Theerap Perumpasi" is an excellent, comprehensive critique on Thi Ja's collection Kottu Melam. . In it, hunger fans out like a menacing metaphor, bringing out the worst in men and women. Right from the starving poor girl in "Silirppu", to the old woman "Vendam Poosani" who is unwanted by everybody like that lonely old woman in Satyajit Ray's iconic film "Pather Panchali", on to the rich Atthu (Arthanareeswran) whose wife is a strange miser denying food to her own husband, to the people whose first thoughts are about food, if the dying old man becomes a corpse, because then nobody would be allowed to eat...we see all this juxtaposed with the other kind of "hunger", man's lust for a woman's body. Whether she is a married woman or not,men are lecherous, like the musician who visits a courtesan in "Rasikarum Rasikaiyum". What an unexpected twist to the story when the woman gets disgusted with the musician and orders him out of her house!
Thi Ja is an expert in showing these distortions in the human mind. Does anyone remember the woman in 'Nalapaakam' who hides fruits inside her box till they rot? It was both a pleasure and a learning experience to read Susila's article. Lakshmi Kannan

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....