துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.6.21

பறத்தல்-மொழியாக்கச் சிறுகதை, கனலி

 கனலி இலக்கிய இணைய இதழில்...


பறத்தல்

ஆங்கில மூலம்; டெம்சுலா ஆவ்

 (டெம்சுலா ஆவ்- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான ஷில்லாங்கைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். வடகிழக்கு மாநிலங்களுக்கே உரிய தனிப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துபவை இவரது படைப்புக்கள். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து [LABURNUM FOR MY HEAD] தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையே பறத்தல்’)

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

                      பறத்தல்

        முட்டைக்கோஸ் செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாலமான திறந்த வயல் வெளியில் என் வாழ்க்கை தொடங்கியது.   அதுவும் கூட வயல்களில் குறுக்கு நெடுக்காக வரிசையாக நடப்பட்டிருந்த செடிகளுக்கு இடையே ஒரு பெரிய இலைக்கு அடிப்பக்கத்திலேதான்.  எங்கும் தங்காமல் பறந்தபடி இருக்கும் ஓர் அன்னை விட்டுச் சென்ற மிகச் சிறிய துகள் போன்ற விதையிலிருந்து நான் படிப்படியாக நீளமாகப் பச்சை வண்ணத்தில் வளர்ந்திருந்தேன்.  நான் ஒட்டிக் கொண்டிருந்த பெரிய இலையோடு அந்த நிறம் மிகவும் பொருந்திப் போயிருந்தது.

          சூரிய ஒளி பிரகாசமாக அடித்துக் கொண்டிருந்த ஒரு நாள் காலையில் ‘கிறீச்சென்று துளைக்கும் ஒரு சத்தம் வயல் முழுவதையும் ஊடுருவிக் கொண்டு போயிற்று.  ‘‘ஏய்…. பாரு கம்பளிப்பூச்சி, கம்பளிப்பூச்சி’’

                    கலவையான பல குரல்களிலிருந்து எழுந்த முணுமுணுப்புக்கள்.  அந்தப் பெண்மணி இன்னும் கூடக் கிறீச்சிட்டுக் கொண்டுதான் இருந்தாள்.  அவள் குரலில் இருந்தது பயமா? வெறுப்பா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.  பிறகு ஒரு சின்னப் பெண் குரல்,

          ‘‘சே… இது ரொம்ப அசிங்கமா இருக்கு’’ என்றது.

          மற்றொரு குரல் இடையே நுழைந்தது.  ‘‘ஐயோ…. அதைப் பாருங்களேன், எவ்வளவு அழகா இருக்கு? அம்மா அதை நான் வச்சுக்கலாமா? அம்மா, தயவுசெஞ்சு அம்மா! நான் என்னோட ரூம்லே ஷூபெட்டியிலே போட்டு வச்சிப்பேன்; அது வேற யாரையுமே தொந்தரவு பண்ணாது, அதுக்கு நான் பொறுப்பு! அது என்னோடடிராகனா இருக்கும்’’

                    எல்லோரும் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் அப்படி ஓர் அமைதி அங்கே நிலவியது.  நான் கலவரமடைய ஆரம்பித்தேன்.  ஒரு வேளை இதுவே என் கடைசி நாளாகக் கூட இருந்து விடலாம்.

          பிறகு உணர்ச்சிகரமான ஒரு ஆண்குரல் இப்படிப் பேசியது.

          ‘‘சரி ஜானி! நீ அதை வச்சுக்கலாம்.  உன் படுக்கைக்குப் பக்கத்திலே உள்ள டிரஸ்ஸிங் டேபிள் மேலே உன் டிராகன் பாக்ஸை வச்சுக்கோ.  ஆனா இது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  அதனாலே ஏதாவது பாதகம் வந்ததுன்னா அப்புறம் நீதான் அதுக்குப் பொறுப்பேத்துக்கணும்’’

                    ‘‘ஹையா, தாங்க்யூ அப்பா’’ என்று அந்தப் பையன் கத்தினான்.  முட்டைக்கோஸின் அடிப்பக்கத்திலிருந்து யாரோ அந்த இலையைத் துண்டித்து எடுத்துப் பையனிடம் தந்தார்கள்.  அவனும் அதை கவனமாகப் பெற்றுக் கொண்டான்.

          ஜானி, தன் படுக்கையறைக்குச் சென்று என் புது வாழ்க்கைக்கான வித்தியாசமான இடத்தை ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது என்னை ஏதோ வேறொரு உலகத்துக்கு கொண்டு சென்று விட்டதைப் போலிருந்தது.  பொருட்களை இரைத்தும் கலைத்தும் போடும் சத்தம் கேட்டது.  கதவுகள் அறைந்து சாத்தப்பட்டன.  இறுதியில் அந்தச் சின்னப் பையன்

          ‘‘இங்கே இருக்கு’’

என்று குரல் கொடுத்தான்.  மென்மையான ஒரு பரப்பின் மீது அவன் என்னைக் கவனமாகக் கிடத்தியபோது அவன் அப்படி எதைக் கண்டுபிடித்தான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  என் ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் வித்தியாசமான வேறு சில விஷயங்களும் நடந்து கொண்டிருந்தன.  தாள்கள் கிழிக்கப்பட்டு வெட்டப்பட்டும்!

          ‘‘ம்…. இது போறும்’’

கடைசியாகத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் ஜானி.

          திடீரென்று என்னைத் தூக்கி இருட்டான ஒரு இடத்தில் தாழ்வாக வைத்தான் அவன்.  நான் நிமிர்ந்து பார்த்தபோது தன் முகத்தில் விசித்திரமான ஒரு புன்னகையோடு என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜானி,

          ‘‘டிராகன், தூங்கப்போ.  உன்னைக் காலையிலே பார்க்கிறேன்’’

-பிறகு அவன் பெட்டியை மூடிவிட்டதால் உள்ளே முழு இருட்டு கவிந்து கொண்டது.

          அந்தக் கணத்தில், அதுவரை விசாலமான திறந்த வெளிகளோடும், பிரகாசமான சூரிய ஒளியோடும் இருந்த என் பழைய வாழ்க்கை முடிந்துபோயிற்று.  இருளும், ஒளியும் மாறி மாறி வரும் ஒரு புதிய வாழ்க்கை தொடங்கியது.  மூடியைத் திறந்து ஜானி எட்டிப் பார்க்கும்போது வெளிச்சம்; அதை அவன் மூடிவிடும்போது இருட்டு.  இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையிலிருக்கும் நேர ஒழுங்கு ஆரம்பத்தில் சீராகத்தான் இருந்தது.  நாளாக ஆக இடைவெளிகள் கூடிக் கொண்டே வந்தன.  ஒரு நொடி கூட வெளிச்சம் படாத நாட்களும் சில வேளைகளில் இருந்தன.

          பிறகு ஒரு நாள் மாலை ஜானி உறங்கிக்கொண்டிருந்த படுக்கையறையை நெருங்கி வந்து கொண்டிருந்த சில காலடி ஓசைகளை என்னால் கேட்க முடிந்தது.  இப்போதெல்லாம் பகலோ, இரவோ பெரும்பாலான நேரங்களில் அவன் தூங்கிக்கொண்டேதான் இருந்தான்.  என் மீது இருந்த ஆர்வத்தை அவன் இழந்துவிட்டானோ என்று கூட எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.  காலடி ஓசைகள் அறைக்குள் கேட்டன.  ஒரு பெண்ணின் ஆடைஒருக்கால் பட்டாடையாக இருக்கலாம் – அது உரசும் ஓசை எனக்குக் கேட்டது.  இதுவரை நான் நுகர்ந்தே இராத வித்தியாசமான மெல்லிய மணத்தை என்னால் உணர முடிந்தது.  ஜானியின் பெற்றோர் இரகசியம் பேசுவது போன்ற குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அவனது அப்பா, பெட்டியின் மூடியைத் திறந்தபோது  அந்தப் பெண்மணியின் கழுத்தைச் சுற்றி ஒளிமயமான நட்சத்திர வரிசை இருப்பதை நான் பார்த்தேன்.

          ‘‘அவனோட டிராகனைப் பாரு’’

என்றார் அவர்.  அவள் இதயத்தைப் பிளக்கும் துயரத்தோடு விம்மினாள்.

          ‘‘ஷ்’’ என்றார் அவர்.

          ‘‘நீ தைரியமா இருக்கணும்.  அவனுக்கு இப்ப வலி எதுவும் தெரியாது’’

                    மூடி மறுபடியும் மூடப்பட்டுவி, இருட்டு மீண்டும் என்னை சுற்றி வளைத்துக் கொண்டது.  காலடிகள் இரவுக்குள் தேய்ந்து கரைந்தன.

          காலம், எனக்கு மங்கலான குழப்பமாகி இருந்தது.  என் உடலுக்குள் வினோதமான புலன் உணர்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.  அடையாளம் கண்டு கொள்ளமுடியாத ஏதோ ஒரு சுமை என்னை அழுத்தித் தடுமாற வைப்பதைப் போலிருந்தது.  வரையறுக்கப்பட்ட ஒரு சிறிய இருட்டு இடத்துக்குள் ஜானி ஆசையோடு சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த டிராகனாக நான் இப்போது இல்லை.  நான் இருப்புக் கொள்ளாமல் இருந்தேன்; என் பழைய வாழ்க்கையின் திறந்த வெளிகளுக்காக நான் ஏங்கினேன்.

          எனக்குள் நடந்து கொண்டிருந்த இந்தக் குழப்பங்கள் ஒரு புறம் இருக்க, ஒரு நாள் அந்த வீட்டில் மிகவும் கலவரமான ஒரு சூழல் நிலவியது.  மனிதர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும், சத்தம்போட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

          ‘‘ம் சீக்கிரம்! பார்த்து பத்திரமா! படிக்கட்டு இருக்கு ஞாபகம் இருக்கட்டும்’’

- இதற்கு நடுவே ஜானியின் பலவீனமான குரலும் கேட்டது.

          ‘‘எனக்கு என்னோட டிராகன் வேணும், என் டிராகன் வேணும்’’

                    முரட்டுத்தனமான, பொறுமையிழந்த சில கரங்கள் இருட்டான என் உலகத்தை ஒரு உலுக்கலோடு தூக்கி எடுத்தன.  அதைத் தொடர்ந்து நான் வேறொரு வித்தியாசமான இடத்தில் இருப்பது புரிந்தது.  அந்த அறை,  வேறுவகையான கடும் வாடைகளால் நிரம்பியிருந்தது.  குழந்தைகள் அழுது கொண்டிருந்தது எனக்குக் கேட்டது.  பெரியவர்களும் கூட வலியாலும் வேதனையாலும் முனகிக் கொண்டிருந்தார்கள்.  நாங்கள் அங்கே எவ்வளவு நேரம் இருந்தோம் என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால் ஜானியும் அங்கே இருந்தான் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.  அவன் மூச்சு விடுவதற்கே அன்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் ஒவ்வொரு முறை அவன் பெற்றோர் அறைக்குள் வரும்போதும் மற்ற இடங்களிலிருந்து கேட்கும் முணுமுணுப்பான ஓசைகளை வேதனையான விம்மல்கள் அடக்கிவிடும்.

          பிறகு ஒரு மதிய நேரத்தில், கடுமையான பீதியை வெளிப்படுத்தும் அமானுஷ்யமான ஓர் ஓசை அந்தத் தாயிடமிருந்து எழுந்தது.  காரணம் ஜானி, மூச்சிலிருந்த சலசலப்பான ஓசையும் கூட அப்போது முற்றாக இல்லாமல் போயிருந்தது.  அம்மா விடமிருந்து எழுந்த சத்தத்தின் எதிரொலி என்னை நடுநடுங்கவைத்தது.  அவனுக்கு பயங்கரமாக ஏதோ, ஒன்று நேர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  பிறகு மீண்டும் புதிதாக ஓர் அமைதி திரும்பியது.  ஜானியின் தொண்டையிலிருந்து பழைய சலசலப்பு கேட்கத் தொடங்கியிருந்ததே அதற்குக் காரணம்.  சிறிது நேரம் சென்றபின்

          ‘‘என் டிராகனைப் பாக்கணும்’’

என்ற ஜானியின் பலவீனமான குரல் கேட்டது.

          அவனது சகோதரி பெட்டியின் மூடியை மென்மையாகத் திறந்தபடி

          ‘‘பாருவண்ணத்துப் பூச்சி! எத்தனை அழகா இருக்கு பாரு அது’’ என்றாள்.  ஜானி மிகுந்த சிரமத்தோடு அருகில் நெருங்கியபடி அவ நம்பிக்கையோடும், வெறுப்போடும் என்னை உற்றுப் பார்த்தபடி அவளை மறுத்தான்.

          ‘‘என்னது அழகா இருக்கா? டிராகன், உனக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்கே’’

-இவ்வாறு சொல்லியபடியே பின்னால் சரிந்தவன், அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

          புதிதாக வளர்ந்திருந்த என் சிறகுகளைக் கவனமாக அசைத்துக் கொண்ட நான், புதிதாக முளைத்திருந்த  கால்களைக் கொண்டு ஒரு அடி எடுத்து வைக்கப்பார்த்தேன்.  பிறகு என் இருட்சிறையை விட்டுப் புது வேகத்தோடு வெளியே வந்தேன்.  ஜன்னல் திட்டின் மீது உட்கார்ந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தேன்.  கசங்கிய துணிக்குவியல்களுக்கிடையே படுத்துக் கிடந்தான் ஜானி.  அவனது தொண்டையிலிருந்து எழுந்த நெடுமூச்சின் ஒலி அந்த நிசப்தமான சூழலில் கடுமையாக ஒலித்தபடி அங்கிருந்த எல்லோரையும் நிலைகுத்திப் போக வைத்திருப்பது போலிருந்தது.  அவன் படுத்திருந்த இடத்துக்கு வெளியேதான் எத்தனை வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும்  இருந்தது?  ஜானியின் சகோதரி என்னைப் பிடிக்க முயல்பவளைப் போல் சற்று முன்னோக்கி வந்தாள்; நான் உடனே சற்று உயரமான ஜன்னல் விளிம்பில் மாறி அமர்ந்து கொண்டேன்ஜானியின் உலகத்திலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கும் வேறொரு வெளியில் சஞ்சரிக்க நான் ஆயத்தமாகிவிட்டதை அந்தக் கணத்தில் உணர்ந்து கொண்டேன்.

          இறுதியாகப் பறந்து செல்ல நான் சிறகுகளை அசைத்தபோது

          ‘‘கொஞ்சம் இரு.  ஜானியை நினைத்துப் பார்க்க வேண்டாமா?  அவனைத் தனியாக விட்டு விட்டா போகப் போகிறாய்’’

என்று மெலிதான உட்குரல் என்னுள் கேட்டது.  நான் சற்றே தயங்கினாலும், மடிந்து கொண்டிருக்கும் அவனுடைய உலகத்தைவிட்டு நான் விலகி விட வேண்டும் என்பதை அறிந்திருந்தேன்.  வெளிறிப்போய் வருத்தம் தோய்ந்தபடி இருந்த அவன் முகத்தைப் பார்த்தேன்.  ஆனால் அவன் கண்களில் இருந்த கோரிக்கையை விட, என்னுள் இருந்த தீர்மானம் அதிக உறுதியாக இருந்தது.  கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டது போல என் சிறகுகளை அசைத்தபடி திரும்பிக் கூடப் பார்க்காமல் விரைவாகப் பறந்து கொண்டிருந்தேன் நான்.

          ‘‘பறந்து போ.  நீ இப்போது உனக்கான -  உன்னுடைய உலகத்தில் இருக்கிறாய்.  உன் விதியை நோக்கி நீ பறந்து செல்’’

என்று என்னுள் இருந்த புழு என்னைத் தூண்டிக் கொண்டிருந்தது.

            **************************************************

கனலியில் தங்களின் மொழிபெயர்ப்பில் பறத்தல் சிறுகதையை வாசித்தேன். மிக நல்ல கதை. பெரும்பாலான மொழிபெயர்ப்பு கதை வாசிப்பில் ஏற்படும் தடையேதும் இல்லாத சிறந்த மொழிபெயர்ப்பு. கதையின் கனம் மொழிபெயர்ப்பால் சிறிதும் சிதைவுறவில்லை. கனத்த மனநிலையுடனே கதையை வாசித்து முடித்தேன். உயிருக்கு போராடும் சிறுவன் வாழ்வை விட்டுப் போகப் போகிறான். கம்பளிப் பூச்சியிலிருந்து உருமாற்றம் அடைந்து பறந்துவிடும் பட்டாம் பூச்சியோ விடுதலை பெற்று அதற்கான வாழ்வை நோக்கி பறக்கிறது. தன்னிடம் அக்கறை கொண்டிருக்கும் சிறுவனுக்காக தன் வாழ்வைத் துறக்க முடியாத பட்டாம் பூச்சி நம் எல்லோருள்ளும் படபடத்துக் கொண்டிருக்கிறது.


நன்றி
கிருஷ்ணா

           


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....