துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.3.24

’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் அறிமுக / விமரிசனம்

எனது அண்மை நாவலான   ’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் குறித்துப் பேராசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் எழுதியுள்ள அறிமுக / விமரிசனக்கட்டுரை

நன்றி.

Bookday

 

https://bookday.in/anjuthingalil-munjuthal-pizhaithum-book-review-by-vijayakumar-p/


பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறையில் முப்பதாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வூக்குப்பின் எழுத்துப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஏராளமான கதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதிவருகிறார். ரஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ’அசடன்’, ’வெண்இரவுகள்’, உள்ளிட்ட பதினோரு நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புத் திறனுக்காக கனடா இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி.யூ.போப் விருது ஆகியன பெற்றுள்ளார் .‘கண் திறந்திட வேண்டும்’ என்ற இவரின் சிறுகதை பாலு மகேந்திராவின் ‘கதைநேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. சமூகச் செயற்பாட்டாளரான சுசீலா ‘சிறந்த பெண்மணி’ விருது பெற்றுள்ளார். ’யாதுமாகி’ நாவல் ‘Devi the Boundless’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘கனலி’, ’சொல்வனம்’ போன்ற இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

‘யாதுமாகி’, ’தடயங்கள்’ நாவல்களைத் தொடர்ந்து தற்போது ‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ என்ற தனது மூன்றாவது நாவலைக் கொணர்ந்துள்ளார். குறு நாவலாக 130 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் குடும்ப உறவுகள் குறித்த ஆழ்ந்த விவாதத்தை மேற்கொள்கிறது. குடும்பம், பொதுவாழ்வு ஆகிய இரு தளங்களும் ஒன்றுக்கொன்று முரணானதா? இரண்டிலும் வெற்றிகரமாகப் பயணிக்க முடியாதா? பொதுவாழ்வில் தீவிரமாகப் பணியாற்றி சமூகம் மெச்சும் நபர்களாக ஆண்களால் வலம்வர முடிகின்ற போதிலும் பெண்களுக்கு அத்தகு வாழ்வு ஏன் சாத்தியப்படுவதில்லை? ஏதேனும் ஒரு துறையில் ஆர்வம், அர்ப்பணிப்பு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் குடும்பத்தையும் தக்கவைத்துக்கொண்டு ஆண்களால் செயல்பட முடிகிறது. ஆனால் ஒரு பெண்ணால் அவ்வாறு செயல்பட முடியாமல் போவது எதனால்? இத்தகு கேள்விகளை எழுப்பும் இந்நாவல் வாசகர்களை விடைகாணத் தூண்டுகிறது. நாவலாசிரியரிடமுள்ள பெண்ணியம் சார்ந்த கருத்துகள் இந்த நாவலில் சற்று வலுவாக வெளிப்படுவதைக் காண முடிகிறது.

ஒரு கவிதைக்கான ஒழுங்கு முறையுடன் மீரா, காயத்ரி எனும் இரண்டு பாகங்களாக இந்த நாவல் விரிந்து செல்கிறது. ஆக்டேவ்(Octave), செஸ்டே(Sestet) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்ட ’சானட்’ (sonnet) என்ற கவிதை வடிவம் ஆங்கில இலக்கியத்தில் உண்டு. ஆக்டேவ் எனும் எட்டு வரிகளைக் கொண்ட முதல் பகுதி பிரச்சனையைச் சொல்லிச் செல்லும். செஸ்டே என்ற ஆறு வரிகளைக் கொண்ட இரண்டாம் பகுதியில் அப்பிரச்சனைக்கான தீர்வைக் காணலாம். அதுபோல் இந்த நாவலில் ’மீரா’ எனும் முதல் பகுதி எழுப்புகின்ற கேள்விக்கான விடையை ‘காயத்ரி’ எனும் இரண்டாம் பகுதி வழங்குகிறது.

மகப்பேறு மருத்துவர் காயத்ரியை சிறந்த மருத்துவராக, மருத்துவ ஆய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக நாவலின் முதல் பகுதியில் காண்கிறோம். மருத்துவத் தொழிலை பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பார்க்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாகச் செய்து வருகிறார். உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளால் பிள்ளைப் பேறின்றித் தவிக்கும் தம்பதியர்களுக்கு மருத்துவ வழியிலான தீர்வைக் கொண்டு பிள்ளைபெற உதவி வருகிறார். கருவியல்துறையில் (Embryology) தீவிர ஆய்வை மேற்கொள்கிறார்.

குழந்தைப் பேறின்றித் தவிக்கும் சுமதி-ஈஸ்வரன் தம்பதியினர் டாக்டர் காயத்ரியின் உதவியை நாடி வருகின்றனர். In vitro Fertilization எனும் முறையில் (கருவை வெளியில் சோதனைக் குழாயில் உருவாக்கி பின்னர் அதை தாயின் கருப்பையில் வைத்து பத்து மாதங்கள் கழித்துப் பிள்ளை பெறுகின்ற முறை) குழந்தையைப் பெற்றெடுக்கும் வழிமுறையை தம்பதிகளுக்கு காயத்ரி முன்மொழிகிறார். பல ஆண்டுகளாகப் பிள்ளைப் பேறின்றித் தவித்து வரும் அந்த தம்பதிகள் அதற்குச் சம்மதிக்கின்றனர். டாக்டர் காயத்ரிக்கு அந்த முறையைக் கையாள்வது முதல் அனுபவமாக இருக்கிறது. அதனால் மிகுந்த மெனக்கெடலுடன் கண்ணும் கருத்துமாக இருந்து அவர் அந்த முயற்சியில் வெற்றியடைகிறார். சோதனைக்குட்பட்ட சுமதியின் பொறுமை, அவளுடைய பெற்றோரின் நம்பிக்கை ஆகியவையே வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன. தங்களுடைய நீண்டநாள் குறைக்குத் தீர்வு தந்த டாக்டர் காயத்ரியின் பெயரைத் தங்கள் மகளுக்கு சூட்டி மகிழும் பெற்றோர் அவளை மீரா எனச் செல்லமாக அழைக்கின்றனர்.


C:\Users\Chandraguru\Desktop\What-are-the-steps-involved-in-IVF-treatment-1024x659.jpg

மீரா என்ற காயத்ரி படித்து மருத்துவராகிறார். மருத்துவர் காயத்ரியின் பெருமைகள் பற்றி அறிந்திருந்த மீரா அவரைச் சந்திக்க விரும்புகிறார். மீரா பிறந்த அந்த மருத்துவமனை இப்போது பாழடைந்து கிடக்கிறது. டாக்டர் காயத்ரியின் இருப்பிடம் அறிய முடியாது கலங்குகிறார் மீரா. பயன்பாடின்றிக் கிடக்கும் அந்த மருத்துவமனையை விலைக்கு வாங்கி, புதுப்பித்து அவ்விடத்தில் காயத்ரியைப் போன்று தன்னலமற்ற மருத்துவராகத் தான் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார். அந்த மனையை வாங்க வேண்டும் என்று அவர் நினைத்த அதே வேளையில், அந்த மனையை விற்பதற்காக அமெரிக்காவிலிருந்து வருகிறார் மருத்துவர் காயத்ரியின் பேத்தி தாரா. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். மருத்துவமனையை மீரா வாங்கிக் கொள்வதும், தாரா விற்பதும் சிரமங்கள் ஏதுமின்றி எளிதாக முடிகிறது. அடுத்ததாக தன் பாட்டி காயத்ரியைப் பார்க்கப் புறப்படும் தாராவுடன் மீராவும் சேர்ந்து கொள்கிறார். தான் போற்றி வரும் மருத்துவர் காயத்ரியைச் சந்திக்கும் வாய்ப்பு தாராவின் மூலம் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார் இளம் மருத்துவரான மீரா என்ற காயத்ரி.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தன்னைக் காணவரும் தாரா மருத்துவர் மீராவையும் உடன் அழைத்து வருவது அந்தப் பாட்டியை ஆச்சரியத்தில், மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அங்கிருந்து துவங்குகிறது நாவலின் ‘காயத்ரி’ எனும் இரண்டாம் பாகம்.

In Vitro Fertilization (IVF) முறையைக் கடைப்பிடித்து தான் அடைந்த வெற்றியின் சாட்சியாக தனக்கு முன்னால் நிற்கும் மீராவைப் பார்த்துப் பரவசம் அடைகிறார் மருத்துவர் காயத்ரி. மீராவின் பெற்றோர் இறந்து போன செய்தி கேட்டு அவர் வருத்தம் கொள்கிறார். அன்று தான் பெற்ற வெற்றிக்கு மீராவின் தாய் சுமதியும், தந்தை ஈஸ்வரனுமே காரணம் என்று சொல்லி தனது மன நிறைவை மீராவிடம் வெளிப்படுத்துகிறார்.

மீரா அங்கிருந்து விடைபெற்றுச் சென்றதும், பாட்டிக்கும், பேத்திக்குமிடையே சுவையான உரையாடல் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் தன் பாட்டியுடன் தங்கும் சுட்டிப் பெண் தாரா பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விடை காண்கிறார். ஒரு திரில்லரைப்போல நாவல் சுவாரசியமாகச் செல்லத் துவங்குகிறது.

தன்னுடைய பழைய மருத்துவமனையை பாழடைய விட்டுவிட்டு குற்றாலம் அருகில் ’பண்பொழிவு’ எனும் இயற்கை அழகு கொழிக்குமிடத்தில் ’இலவச மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மனை’யை மருத்துவர் காயத்ரி கட்டிவந்திருப்பதன் புதிரென்ன என்று புலன்விசாரணை நடத்துகிறார் பத்திரிகையாளரும், பேத்தியுமான தாரா. நாவலின் முதல் பகுதியில் நடந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை இரண்டாம் பகுதியில் வெளிக்கொணர்கிறார் பேத்தி தாரா.

டாக்டர் காயத்ரியின் குடும்ப வாழ்வில் நிகழும் சோகங்கள் படிப்பவர் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. மருத்துவத் தொழிலை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய காயத்ரிக்கு தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏதும் இருந்திடவில்லை. மருத்துவம் பார்ப்பது, மருத்துவத் துறையில் ஆய்வு செய்வது என்று அவரது வாழ்வு தங்குதடையில்லாமலே சென்றது. மருத்துவ தொழில் மீது காயத்ரிக்கு இருந்த அதீத ஆர்வத்தை மருத்துவரான அவரது கணவர் தினகரனாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மனைவியின் அறிவியல் ஆராய்ச்சியை மெச்சிப் புகழ்ந்து ஆதரவளிக்க அவர் ஒன்றும் பியர் கியூரி இல்லையே!. அவர் ஒரு சாதாரண மருத்துவராக மட்டுமே நடந்துகொள்கிறார். அவர்கள் இருவருக்கும் பொதுவான சிநேகிதி சுபா தலையிட்டும் அந்த தம்பதிகளை ஒன்று சேர்த்து வைக்க முடியவில்லை.

தன்னுடைய கனவுகளுக்கு எதிராக இருக்கும் கணவரைவிட்டுப் பிரிகிறார் காயத்ரி. குழந்தை வித்யாவுடன் தனது பெற்றோர்களிடம் அடைக்கலமாகிறார். தன்னுடைய பெற்றோர்கள் வித்யாவைக் கவனித்துக்கொண்ட காரணத்தால் மீண்டும் மருத்துவமனையிலேயே பொழுதும் உழைக்கிறார். அன்பு மகள் வித்யாவிடம் பாசத்தைப் பொழிகிறார். ஆனால் மகள் வித்யாவும் தந்தையைப்போலவே தன் தாயின் கனவுகளைப் புரிந்துகொள்ளவில்லை. அம்மா- மகள் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அம்மாவால் எந்நேரமும் தன்னுடன் இருக்க முடியவில்லை என்பது குறித்து கோபம் கொள்ளும் வித்யா அம்மா மீது வெறுப்படையத் தொடங்குகிறாள். மகளுக்கும், பேத்திக்கும் இடையிலான விரிசலைச் சரி செய்ய காயத்ரியின் பெற்றோர் எவ்வளவோ முயற்சி செய்தும் உடைந்த மனங்கள் ஒன்று சேர முடியாமலே போகிறது.

”பள்ளிப்படிப்பின் இறுதியில் நிறைய மார்க்குகள் வாங்கி மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றிருந்தபோதிலும் மருத்துவம் படிக்கமாட்டேன் என்று வித்யா உறுதியாகச் சொல்லிவிட்டாள். பெங்களூர் கல்லூரியில் சேர்ந்து கெமிஸ்டிரி படித்தாள். எம்.எஸ்சி முடித்ததும் உன் அம்மா வித்யா திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள்” என்று பழைய கதையைச் சொல்லிமுடித்த காயத்ரியை ”இதெல்லாம் பத்தாது பாட்டி! கிளினிக்கை மூடியதற்கான சரியான காரணம் இன்னும் உங்களிடமிருந்து வெளிவரவில்லை பாட்டி! அந்த வைட்டல் பாயிண்ட் இன்னும் மிஸ்ஸிங் பாட்டி!”, என்று மடக்குகிறாள் பேத்தி தாரா. கைதேர்ந்த பத்திரிகையாளர் தாராவை வெல்ல முடியாமல் தவித்த பாட்டி மேலும் தொடர்கிறார்.

”ஒரு சமயம் கோபத்தின் உச்சத்தில் உன் அம்மா என்னிடம் ‘ஊரெல்லாம் உங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் பணத்தைப் பறிக்கும் டாக்டர் என்றுதானே பேசுகிறது’ என்று கூறியதும் என் பெற்றோரும், நானும் திகைத்துப் போனோம். என்னுடைய மகளே எனது மருத்துவப் பணி மீது சந்தேகம் கொண்டிருக்கிறாள் என்றதும் நான் நிலைகுலைந்து போனேன். தவமாக நினைத்து நான் ஆற்றி வந்த பணியை எனது மகளே ’பிசினஸ்’ எனக் கொச்சைப்படுத்திய கணத்தில்தான் மருத்துவமனையை மூடிவிட்டு இங்கே வந்து சேவையைத் தொடங்குவது என முடிவெடுத்தேன்’ என்று பேத்திக்கு விளக்கம் கூறுகிறார் காயத்ரி பாட்டி.

”ஓவ்வொரு சிருஷ்டியும் ஏதோ ஒரு நோக்கத்துக்காகத்தான் இந்த மண்ணுக்கு வந்து சேருகிறது. அதைச் சரியா அடையாளம் கண்டுக்காம திசைமாறித் தடுமாறிப்போய் இந்தப் பிறவியை வீணடிப்பவர்களே உலகில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் நீ சரியாகக் கண்டுபிடிச்சிருக்க, உன் பிறவி நோக்கத்திற்கு உண்மையாகவும் இருந்திருக்க. இது லட்சத்தில் ஒரு சிலருக்குத்தான் சாத்தியம்” என்ற என் அம்மாவின் வார்த்தைகளே மனமுடைந்து போயிருந்த எனக்கு ஆறுதலைக் கொடுத்தன என்று பேத்தியிடம் சொல்லி முடிக்கிறார் காயத்ரி.

“உங்க அம்மா சொன்னது கரெக்ட்தான் பாட்டிம்மா. அதைப் புரிஞ்சுக்காமபோன எங்கம்மா சார்பிலே என்னோட ‘அப்பாலஜீஸ்’ என்று சொல்லி பாட்டியைக் கட்டிப்பிடிக்கிறாள் தாரா என்று நாவல் முடிகிறது.

’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்….’ என்ற நாவலின் தலைப்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் நான்காம் பகுதியான ‘போற்றித் திருஅகவலில்’ இடம் பெற்றுள்ளது. கருவுற்ற நாளிலிருந்து தொடங்கி குழந்தை பிறக்கும்வரை ஒவ்வொரு மாதமும் தாயின் கருப்பைக்குள் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அந்தக் கரு நிகழ்த்துகின்ற போராட்டத்தை வரிசையாக முறைப்படுத்தி பதினாறு வரிகளில் முன்வைத்திருக்கிறார் மாணிக்கவாசகர். அது மானுடப் பிறப்பு எத்தனை அரிதாக வாய்க்கக் கூடியது என்பதைக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பாடலின் இப்பகுதி முழுவதுமே நவீன மருத்துவம் சொல்லும் கருவியல்(Embryolgy) சார்ந்த அறிவியல் கருத்துகளை ஒட்டி அமைந்திருப்பது வியப்பளிக்கிறது. ‘அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும்’ எனும் வரி ஐந்தாம் மாதத்தில் தாய்க்கு ஏற்படும் உணவு ஒவ்வாமையால் (மசக்கை) மெலிவுற்ற கரு மீண்டு வருவதைக் குறிக்கிறது. அந்தப் பாடலின் பதினாறு வரிகளையும் நாவலின் கதாநாயகியான மருத்துவர் காயத்ரி தன்னுடைய மகப்பேறு மருத்துவமனையில் எழுதிவைத்திருப்பது சாலப் பொருத்தமுடையதாகவே இருக்கிறது.

எம்.ஏ.சுசீலாவின் இந்நாவலை மகப்பேறு மருத்துவர் ஆண்டாள் பாஸ்கரின் அணிந்துரையுடன் Her Stories பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘மருத்துவராக இல்லாவிட்டாலும் மருத்துவத்துறையின் மீதிருந்த அளவுகடந்த ஆர்வத்தால் மகப்பேறு சார்ந்த இந்நூலைத் துல்லியமான விவரங்களோடு சுசீலா எழுதியுள்ளார்’ என்று பாராட்டுகிறார் டாக்டர் ஆண்டாள் பாஸ்கர். நாவலைப் படிக்கும்போது இலட்சியமே வாழ்வாக சமுதாயத்தில் வாழையடி வாழையாக வாழும் மருத்துவர் கூட்டம் இன்னும் வளர்ந்து வரும் எனும் நம்பிக்கை துளிர்க்கிறது என்கிறார் மருத்துவர் ஆண்டாள்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....