ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடான பெண் எழுத்து மாத இதழில் நான் எழுதி வரும் நினைவுத்திரை தொடரின் முதல் பகுதி...
(முழுவதும் படிக்க பின்னூட்டம் ஒன்று)
நினைவுகள் போர்த்திய நெடுந்திரையைச் சற்றே விலக்கிப் பார்த்துத் தமிழ் இலக்கியத்திற்குள் பயணம் செய்தால் சங்க இலக்கிய காலம் முதல் காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல் திரட்டுக்கள், தமிழில் உரைநடை இலக்கியம் தளர்நடை போடத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் என்று நவீன காலகட்டத்திற்கு முன்பு எழுந்த பல இலக்கியங்களிலேயும் கூடப் பல பெண்ணியக் குரல்கள் ஆங்காங்கே மின்னல் கீற்றுக்களாக - சிறு சிறு தெறிப்புகளாகவேனும் பதிவாகி இருப்பதைக் கண்டுகொள்ள இயலும்.
எண்பது, தொண்ணூறுகளில் கோட்பாட்டு ரீதியாக வளர்ச்சி பெற்ற பெண்ணியக் கருத்தாக்க அளவுகோல்களை அவற்றோடு பொருத்திப் பார்ப்பது சரியான மதிப்பீடாக இருக்க இயலாது என்றபோதும் பாதிப்புக்கு ஆளான பெண்களின் அக உணர்வுகளும், மனக் கொந்தளிப்புகளும் பால் பேதம் இன்றி ஆண் பெண் என இரு சாரார் எழுதிய எழுத்துக்களிலும் அந்தந்தக் காலச் சூழல்களுக்கு ஏற்பத் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கின்றன.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல"என்றபோதும் பழமை என்பதாலேயே அது நிராகரிக்கப்பட வேண்டியது, முற்போக்குவாதத்துக்கு முற்றிலும் முரணானது என்று எண்ணுவதும் பிழையானதே. அப்படிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு அந்த இலக்கியப் பக்கங்களுக்குள் பயணம் செய்தால் பெண்ணியம் என்ற சித்தாந்தம் வேரூன்றி வலுப்பெறுவதற்கு முன்பே பெண் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான பல குரல்களை- சில கலகக் குரல்கள் உட்பட - நம்மால் இனம் கண்டு கொள்ள இயலும். அந்தக் குரல்கள் எங்கோ ஒரு மூலையிலிருந்து , யாரோ ஒருவரிடம் இருந்து மெலிதாக மிக மெலிதாகவே ஒலித்தாலும் அவற்றுள் பலவும் எளிதில் புறந்தள்ளி விட்டுப் போய் விட முடியாத ஆழமான பல செய்திகளை உள்ளடக்கி இருப்பவை ; நமக்கும் அவற்றை உணர்த்துபவை.
புனைவெழுத்தில் உதித்த கற்பனைப் பாத்திரங்களின் குரல்கள்தானே என்று அவற்றை ஒதுக்கிவிடாமல், யதார்த்த வாழ்வில் நம் கண் முன்பு உயிருடன் உலவிய உண்மையான பல பெண்களின் மாதிரிகளே அவை என்பதை நினைவில் கொண்டால் அந்தக் குரல்களின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையும், நியாயமும் நமக்குப் புலனாகும்.
கால ஓட்டத்தில் மறந்து போன /அல்லது மறைக்கப்பட்ட /அல்லது மறக்கடிக்கப்பட்ட அப்படிப்பட்ட பெண்ணியத் தெறிப்புக்கள் சிலவற்றைப் பொதுவெளியில் கவனப்படுத்தி அசைபோடத் தூண்டுவதே இந்தத் தொடரின் நோக்கம்.
தந்தை விசுவாமித்திரரால் தாய் மேனகை புறக்கணிக்கப்பட்டு விட,அந்தத் தாயால் அனாதையாகக் கானகத்தில் விடப்பட்டு கண்வ முனிவரின் பாதுகாப்பில் வளர்ந்தவள் சகுந்தலை .காட்டில் வேட்டையாட வந்த அரசன் துஷ்யந்தனும் அவளும் எவரும் அறியாமல் கந்தருவ மணம் செய்து கொள்கின்றனர். தங்கள் காதலின் அடையாளமாகவும், தங்கள் திருமணத்தை உறுதி செய்யும் வகையிலும் அரச முத்திரை உள்ள மோதிரம் ஒன்றை அவன் அவளுக்கு அணிவிக்கிறான். சிறிது காலம் கழித்து அரசியாக அவளை அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்ற அவன் நீண்ட காலமாகியும் திரும்பி வராதததால் அவனுக்குப் பிறந்த தன் ஆண் மகவை எடுத்துக்கொண்டு கண்வ முனிவர் மற்றும் அவரது சீடர்களின் துணையோடு அவனைத் தேடிச் செல்கிறாள் சகுந்தலை. அவனோ அவளை முழுவதுமாய் மறந்து விட்ட நிலையில் இருக்கிறான். துஷ்யந்தனைப் பிரிந்த காலத்தில் அவனது நினைவாகவே கனவுலகில் மிதந்து கொண்டிருந்த சகுந்தலை, ஆசிரமத்துக்கு வருகை புரிந்த துர்வாசருக்கு நல்ல முறையில் விருந்தோம்பல் செய்யத் தவறியதால் அவர் இட்ட சாபமே அதற்கான காரணம் என்கிறது சாகுந்தலம். எவனது நினைவு அவளது தன்மறதிக்குக் காரணமாயிருந்ததோ அவனே அவளை மறந்து விடுவான் என்பதே அவர் இட்ட சாபம். ஆசிரமத்தில் இருந்தோர் அவரிடம் அவள் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள, துஷ்யந்தன் அளித்த மோதிரத்தை அவனிடம் காட்டினால் பழைய நினைவு அவனுக்கு மீளும் என்று சாப விமோசனமும் அளித்திருக்கிறார் துர்வாசர்.ஆனால் சகுந்தலை அவனைத் தேடிப் படகில் பயணம் செல்லும்போது அந்த மோதிரம் ஆற்றில் விழுந்து விடுவதால், தன்னை யார் என்று நிறுவுவதற்கு எந்த சாட்சியமுமே இல்லாமல் போகிறது அவளுக்கு. அவன் தகாத வார்த்தைகளால் அவளைப் பழிக்க அங்கிருந்து திரும்பிச் செல்கிறாள் அவள். பின்னாளில் ஆற்றில் மீன் பிடிக்கும் ஒருவனிடம் அந்த மோதிரம் கிடைத்து அது அரசனின் கைக்கும் வந்து சேர, சகுந்தலை பற்றிய துஷ்யந்தனின் நினைவு மீள்கிறது. அவளைத் தேடி வரும் அவன், வீரனான தன்மகன் பரதனையும் கண்டுகொள்ள, பிரிந்த மூவரும் ஒன்றுசேர்வதாகக் கதை முடிகிறது.
இந்த முதல் அரண்மனைச் சந்திப்பில் சகுந்தலை பேசுவது மட்டுமே பாரதத்திலும் சாகுந்தலத்திலும் பதிவாகியிருக்க, துஷ்யந்தன் பேசிய அவதூறான பல சொற்களால் அவள் பட்ட காயங்களையும், அதற்கு அவள் ஆற்றிய எதிர்வினையையும் மட்டுமே மையப்படுத்தி, ஐம்பதுகளின் இறுதியில் ஓரங்க நாடகம் ஒன்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்பது பலருக்கு வியப்பூட்டும் புதிய செய்தியாக இருக்கலாம். மீனவன் வழி மோதிரத்தைக் கண்டு துஷ்யந்தன் நினைவு மீட்சி பெற்றதாகச் சொல்லப்பட்ட பிறகு துஷ்யந்தனும் சகுந்தலையும் சந்திக்கும் இறுதிக் கட்டம் மட்டுமே ’நினைவுத் திரை ‘ என்ற பெயர் கொண்ட அந்த நாடகத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை எழுதி இருப்பவர் தமிழ் மரபிலக்கியத்தில் - குறிப்பாகக் கம்பனில் மிகுந்த தேர்ச்சியும், புலமையும் கொண்ட அறிஞரும் - தூத்துக்குடி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான திரு அ சீனிவாசராகவன் என்பதும் பலரும் அறியாத செய்தியாகவே இருக்கக்கூடும்.
’’இன்று நீங்கள் சொல்வதை உடன்பட்டு நான் உங்களுக்கு மனைவியாகி விடலாம் . ஆனால் அன்று ஊரார் அனைவரும் நிறைந்திருந்த சபை நடுவே நீங்கள் என்னைப் பற்றிக் கூறிய கொடுமையான குரூரமான வார்த்தைகள் என் உள்ளத்தில் எப்போதும்,என்றென்றும் எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கும். மனமாரக் காதலித்த உங்களோடு இயல்பான, சராசரியான ஒரு மணவாழ்க்கை வாழ அது என்னை அனுமதிக்காது, அந்த நினைவுகள் ஒரு திரையாக மாறி என்னை அதிலிருந்து தடுத்துக் கொண்டே இருக்கும், அதை மீறி உங்களோடு வாழ்வது எனக்கு சாத்தியமில்லை’’என்று அமைதியாகச் சொன்னபடி தன் தாய் மேனகையோடு சகுந்தலை அங்கிருந்து கிளம்பிச் செல்வதாக முற்றுப் பெறுகிறது அந்த நாடகம்.
*************************
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக