நினைவுத்திரை-2
’’நான் பெண்களைப் பற்றியே நிறைய சிந்தித்தேன், அவர்களைப் பற்றியே எழுதியும் இருக்கிறேன். காரணம் அவர்களது கையாலாகாத நிலைமையை நான் கண்ணால் கண்டிருக்கிறேன், அதை நன்றாக அறிந்தும் இருக்கிறேன். காலம் செல்லச் செல்ல என்னுள் கவிந்து கொண்டே வந்த எதிர்ப்பு மேகங்களையே எனது நாவலின் கதாநாயகியான சத்தியவதியின் வாயிலாக, ஓர் எதிர்க் குரலாக நான் வெளிப்படுத்தினேன்’-ஆஷாபூர்ணாதேவி
பெண்ணின் தன்னுணர்வுகளும், தனிப்பட்ட விருப்பங்களும் குடும்பம்,சமூகம் இரண்டிலுமே அதிகம் பொருட்படுத்தப்பட்டதில்லை. அவளது தன்மதிப்போ பெரும்பாலும் அலட்சியத்துக்கும், அவமானத்துக்குமே உட்படுத்தப்பட்டு வருகிறது. கால மாற்றத்தால் இந்நிலையில் முன்னேற்றம் விளைந்திருப்பதற்கு சீர்திருத்த இயக்கங்களோடு கூடவே ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்த இலக்கியமும் தன் பங்களிப்பை ஆற்றி வருகிறது
தன் சுயம் மதிக்கப்படாமல் போனதற்காகவே குடும்ப அமைப்பைத் துறந்து வெளிநடப்பு செய்யத் துணியும் பெண்கள், இப்சனின் பொம்மை வீட்டிலும்( Doll’s house) , ராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ நாவலிலும் விரிவது போலவே சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதப்பட்டு, ஞானபீட பரிசுக்கும் உரியதான வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவியின் ‘பிரதமபிரதிசுருதி’ என்ற நாவலும் அத்தகைய எதிர்க்குரலை ‘முதல் சபத’ மாக 1964 இல் ஒலிக்க விட்டு (Prothom Protishruti - Pratham Pratishruti,English translation by Indira Chowdhury) வங்கத்தில் அதுவரை நிலவிய மரபுக்கட்டுமானங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
இந்த நாவலின் சம்பவங்கள் நிகழும் வங்காளப் பிரிவினைக்கு முன்னுள்ள (19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது ஒரு இளம்பெண்ணின் ஒற்றைத் தனிக் குரல் என்றாலும் அது நம்மை பிரமிக்க வைத்து வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. வங்காள கிராமங்களில் அப்போது நிலவிய கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை, மூச்சுத்திணற வைக்கும் அதன் இறுக்கமான நியதிகள், அவற்றுக்குள் மட்டுமே தேங்கிப்போய் உலகப்பார்வை அற்றவர்களாய்க் கிடக்கும் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை நாவலின் தலைவியாகிய சத்தியவதியின் நோக்கில் விரிவாகச் சித்தரிப்பதோடு, பல வினாக்களையும் நம்முள் எழுப்புகிறது இந்தப்படைப்பு. காலமும் களமும் பழையவை என்றாலும் அந்தக் கேள்விகள் பலவும் இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடியவையே.
எதிர்க்கேள்வி கேட்காமலே பழகிப்போய்விட்ட அடிமைப் புத்தியின் அறியாமையால் ஆண்களையும் பெண்களையும் பிணைத்திருக்கும் மூடக்கட்டுகளிலிருந்து தான் வெளியேற முயல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் , தன்னைச் சார்ந்த அனைவரையும் வெளியேற்ற சத்தியவதி மேற்கொள்ளும் முயற்சிகளும்,அதில் அவள் எதிர்ப்பட நேரும் தடைகளுமே இந்த 870 பக்க நாவலாக ‘முதல் சபத’ மாக உருப்பெற்றிருக்கின்றன.
நம்பிக்கைக்கே வழியில்லாத மத்தியதர வர்க்கத்துக் கூட்டுக் குடும்பப் பெண்களின் அவல நிலையை - அவர்களது நிராதரவான சூழ்நிலையை- குறுகிய வட்டத்திற்குள், சில வரையறைகளுக்குள் மட்டுமே தங்கள் வாழ்க்கையை சிறைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டியிருக்கும் நிலையை நாவலில் விரிவாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆஷாபூர்ணாதேவி.
சத்தியவதியின் தந்தையான ராம்காளிசட்டர்ஜி, தன் துறையில் மட்டுமல்லாமல் பரந்த உலகியல் அறிவும் அனுபவமும் பெற்று, ஊர் மக்களின் மதிப்பைப் பெற்றிருக்கும் பண்டிதர், ஒரு மருத்துவரும் கூட. அவரது மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம் அத்தைகளாக, பாட்டிகளாக, இன்னும் பல உறவுப் பெண்களாக நிரம்பி வழியும் விதவைகள். அவர்களில் மரண வாயிலில் நிற்கும் மூத்தபெண்கள், தற்கொலைக்கும்,பிற வகையான பிறழ்பாலியல் உறவுகளுக்கும் முயலும் பதின்பருவத்துப் பெண்கள், உடல் என்ற பூதத்துக்கு வேலை தராவிட்டால் அது வேறுவகையாகத் திசை திரும்பி விடும் என்பதற்காகவே ‘மாவடுசீஸன்’, ‘மாம்பழ ஜாம் சீஸன்’, ‘துர்க்கா பூஜை’க்கான பலவகைப் பலகாரங்கள் செய்யும் சீஸன்,வடகம்,வற்றல்செய்யும் சீஸன் (அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையை நினைவுபடுத்துவது இது) என்று வருடம் முழுவதும் வெயிலில் காய்ந்து செத்துக் கொண்டிருக்கும் மோக்ஷதா அத்தையைப் போன்ற நடுவயதுப் பெண்கள் என்று பல வயதினரும் உண்டு.
விதவையல்லாத பிற பெண்களும் கூட, வீடே வாழ்க்கையாகப் பழகிப்போனவர்கள். கல்வி பெறவேண்டுமென்ற வேட்கை எதுவுமின்றி, சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு மரபின் தடத்தில் மட்டுமே நடைபோடப்பழகியவர்கள்; அதற்கு மாறான மிக இலேசான எதிர்க்குரலையும் கூடத் தாங்கமுடியாதவர்கள். அவர்களின் உணர்வுகள்,ஆழ்மன விருப்பங்கள் ஆகியவற்றைக்கணக்கிலெடுக்க எவருக்குமே நேரமில்லை; யாருக்கும் அது பற்றித் தோன்றுவதுமில்லை. ஆனால், வாய்ப்புக்கிடைக்கும் நேரத்திலெல்லாம் மிகப்பெரும் மேதையான தன் தந்தைக்கு-அவரது மனச்சாட்சியைப் போல இந்தக் கசப்பான உண்மையை உணர்த்திக் கொண்டே இருக்கிறாள் எட்டு வயதில் இளமை மணம் செய்விக்கப்பட்ட அவரது ஒரே மகளான சத்தியவதி. பிறரால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மரபு வழி நியதிகளோடு பொருந்திப்போக முடியாதபடி- தனக்கு விதிக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை எந்த மறுப்போ எதிர்ப்போ இன்றி, எளிதாக ஏற்க முடியாதபடி-அவள் மனம் முரண்டு பிடிக்கிறது. அவற்றோடு கூடவே அந்தக் கடமைகளையும் நியமங்களையும் தவறாமல் செய்தாக வேண்டிய பொறுப்பிலும் அவள் இயங்கியாக வேண்டியிருக்கிறது. இருந்தபோதும் தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதைச் செய்ய அவளிடம் தயக்கம் எதுவும் இல்லை; அதுபற்றி எவர் அனுமதியும் அவளுக்குத் தேவைப்படவும் இல்லை. கல்வியின் கடவுளாய்ச் சரஸ்வதியைச்சொல்லி விட்டுக் கையில் ஏட்டைத் தொட்டாலே பாவம் எனச் சொல்லும் முரண்பாட்டை இனம் கண்டு கொள்ளும் அவள் அதற்கு இரையாகி விடாமல் தன்னைத் தற்காத்துக்கொள்கிறாள். சுற்றியுள்ளோரின் எதிப்பையும் ஏளனத்தையும் பொருட்படுத்தாமல் சுய முயற்சியாலும், தந்தையின் ஆதரவோடும் கல்வி அறிவு பெறுவதோடு பிறருக்குக் கல்வி கற்பிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்கிறாள்.
பூப்படைந்த பின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கு செய்ய வேண்டியிருந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும், மாமனாரின் தவறான சில நடத்தைகளை அறிந்த பிறகு, அவரை வணங்க உறுதியாக மறுத்து விடுகிறது அவள் மனம். தன் பெற்றோரின் சித்திரவதையிலிருந்து அவளைக் காப்பாற்ற எண்ணும் கணவன் பிறந்த வீடு செல்லுமாறு சொன்னாலும் அதை மறுத்துத் தன் உரிமைகளுக்காக அங்கிருந்தபடி போராடவே எண்ணுகிறாள் அவள். கடுமையான காய்ச்சல் கண்ட கணவனின் உயிரைக் காக்க முடியாமல் நாட்டுப்புற மருத்துவம் தடுமாறும் கட்டத்தில், ஆங்கில மருத்துவரைக் கூட்டி வந்து குணப்படுத்துவதற்கு அந்தக் கூட்டுக்குடும்பச் சூழலில் யாருடைய அனுமதியும் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை. அதோடு அடுத்த கட்டத்துக்கும் அவள் நகர்கிறாள். ‘உட்கார்ந்து சாப்பிடலாம்’என்ற நிலக்கிழார் குடும்பத்து மேட்டிமை மனப்பான்மையிலிருது விடுவித்து சுய அறிவு பெற்ற ‘மனிதர்களாக’த் தன் குழந்தைகளை உருவாக்குவதற்காகவே ஓரளவு படித்திருக்கும் தன் கணவனையும்,குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு மாமனார் வீட்டு கிராமத்திலிருந்து கல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறாள். தனிக்குடித்தனம் என்பதே ஒரு அத்து மீறலென்று கருதப்பட்ட ஒரு காலகட்டத்தில், தான் செய்வது சரியானதே என்ற திடமான நம்பிக்கை அவளிடம் இருக்கிறது.
கல்கத்தா சென்றதும் அவள் பார்வை குடும்ப எல்லையைத் தாண்டி மேலும் விரிவு பெறுகிறது. ஓய்வுநேரத்தில் அங்குள்ள பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவும்,பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்களோடு தொடர்பு கொள்ளவும் தொடங்குகிறாள் அவள்.
கணவனின் வன் பாலுறவுக்கு இணங்காததால் பாலியமணம் செய்துவைக்கப்பட்ட ஒரு குழந்தைப்பெண், மாமனார் மாமியாரால் கொல்லப்பட்டாள் என்ற நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டதும், அவள் உள்ளம் அந்தக் குழந்தைக்காக மட்டுமன்றி ஊரிலுள்ள அத்தனை பெண்குழந்தைகளுக்காகவும் துடிக்கிறது. அது குறித்து, பிரிட்டிஷ் காவல்துறையை நாடிச் சென்று புகார் தரும் அளவுக்குத் துணிந்து விடும் அவளது செயலைக் கல்கத்தா முழுவதும் பாராட்டினாலும் அவள் கணவனுக்கும் அவளால் மனிதர்களாக்கப்பட்ட அவளது மகன்களுக்கும் அது உகப்பாக இல்லை. அவர்களுக்கு அதில் ஒப்புதல் இல்லை. தங்கள் குடும்பம் வீண் வம்பில் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை என்று சுயநலமாய் எண்ணும் அவர்களை அந்தக் கட்டம் முதல் தனக்கு அந்நியர்களாக உணரத் தொடங்குகிறாள் சத்தியவதி.
அதிர்ச்சியில் உறைந்து போய்க் காய்ச்சலின் பிடியில் சிக்கும் நிலையிலும் அவள் மனம் தன் ஒரே பெண் குழந்தையை மையமிட்டபடியே இருக்கிறது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மகளும் இரையாகி விடக்கூடாதென்பதிலும், தனக்கு மறுக்கப்பட்ட கல்விப் பயிற்சி மகளுக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறாள் சத்தியவதி. உயர் கல்வி வரை அவளைக்கொண்டு செல்ல வேண்டுமென்றும், அந்தக்குழந்தைக்கு ஒருபோதும் பாலிய மணம் செய்து விடக்கூடாது என்றும் திடமான சபதத்தையும் மேற்கொள்கிறாள். அதைக் கணவனிடம் உறுதிமொழியாகவும் கேட்கிறாள். அன்றைய சூழலில் அது பிறரின் எள்ளலுக்குரியதாகவே இருக்கிறது. ஏதோ ஜுர வேகத்தில் அவள் பிதற்றுவதாக எண்ணும் கணவனும் அப்போதைக்கு அரை மனதாக அதற்கு சம்மதமளிக்கிறான்.
சத்தியவதியின் விருப்பப்படியே இரண்டு மகன்களும் உயர்கல்வி பெறுகிறார்கள். எட்டு வயது மகளும் தன் கல்வியைத் தொடர வேண்டும் என்ற ஒன்றே அவளின் இலக்காக இருக்கிறது.
மூத்த மகனின் திருமணம் அவள் விருப்பத்துக்கு மாறாகக் கல்வியறிவு அதிகம் பெறாத ஒரு பெண்ணோடு முடிவாகி விட, அதற்கான ஏற்பாடு செய்ய விடுப்பில் செல்லும் கணவன், கோடைவிடுமுறையில் இருக்கும் மகளையும் உடனழைத்துச் செல்கிறான். காலமெல்லாம் எந்தக் கொடுமைக்கு எதிரான கொந்தளிப்பு சத்தியவதியிடம் இருந்ததோ, அந்தக்கொடுமை அந்தக் கட்டத்தில் அவள் வீட்டிலேயே நடந்து விடுகிறது. இத்தனை காலமாய்த் தன் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக நடந்து வந்த சத்தியவதியை எந்த வகையிலாவது புண்படுத்தத் துடிக்கும் தன் தாயின் தூண்டுதலுக்கு ஆளாகும் சத்தியவதியின் கணவன், மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறித் தன் மகளுக்கு பாலியமணம் செய்து வைத்து விடுகிறான். சத்தியவதியின் அனுமதியில்லாமல், அவளுக்கு ஒரு செய்தியாகக் கூடத் தெரிவிக்காமல் நடந்து முடிந்து விடும் திருமணத்தை அவளால் நிறுத்த முடியாமல் போகிறது. காலம் தாழ்ந்து வந்து சேரும் சத்தியவதி அதிர்ந்து போகிறாள். தன் குடும்பமும் கணவனும் இழைத்திருக்கும் அநீதி அவளை பலத்த அடியாகத் தாக்குகிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்து கல்யாணக் கோலத்திலிருக்கும் தன் செல்லமகளுக்கு ஆசிகள் கூட வழங்காமல்- தான் ஊன்றி நின்ற குடும்ப அமைப்பை அந்த நொடியிலேயே துறந்தபடி, தான் வந்த மாட்டு வண்டியிலேயே திரும்பிச் சென்று விடுகிறாள் அவள். பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணி செய்துஅந்த வருமானத்தில் தன் காலில் சுயமாக நின்று கொள்வதென்ற இறுதி முடிவொன்றையும் எடுக்கிறாள். தவறை ஒத்துக்கொண்டு கணவன், மாமியார் என எல்லோரும் அவளிடம் இறைஞ்சியும் அவள் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஆனாலும், தன் வேலையைத் தொடங்குவதற்கு முன்னால் தந்தையிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய சந்தேகங்களும்,கேள்விகளும் அவளிடம் எஞ்சியிருப்பதால்,அவற்றை மீண்டும் சுமந்தபடி அவரை நோக்கிப் பயணமாகிறாள் அவள்.
150 க்கு மேற்பட்ட நாவல்களையும், எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கும் ஆஷா பூர்ணாதேவியும் தன் கதாநாயகி சத்தியவதியைப் போலவே கல்விக்கூடத்துக்குச் சென்று முறையான கல்விப்பயிற்சி பெறாதவர். வீட்டுக்கு வந்து கற்பித்த ஆசிரியர் வழியாகவும் சுயமாகப் பல புத்தகங்களைப் படித்தும் மட்டுமே தன்னுடைய அறிவைக் கூர் தீட்டிக் கொண்டவர். அவரை ரவீந்திர பாரதி உட்படப் பல பல்கலைக்கழகங்கள் கௌரவ டி.லிட் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கின்றன என்பதும், பத்மஸ்ரீ விருதும், சாகித்கிய அகாடமியின் ஃபெலோஷிப்பும் பெற்றவர் அவர் என்பதும் வியப்பூட்டும் செய்திகள்.
சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சலி,மூன்று பகுதிகளாகத் தொடர்வதைப் போலவே ‘பிரதம பிரதி சுருதி’ (1964)நாவலைத் தொடர்ந்து, மகள் சொர்ணாவின் கதையாக ’சொர்ணலதா’ வும்(1967), பேத்தியின் கதையாக ’பஹுல் கதா’வும் (1974) அடுத்தடுத்துத் தொடர் நாவல்களாகத் தொடர்ந்து வெளியாகியிருக்கின்றன. ஆயினும் சத்தியவதியைப் போன்ற காத்திரமான மனத்திடம் கொண்ட பெண்கள் அந்த நாவல்களில் இல்லயென்றே திறனாய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள். (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, ’முதல் சபதம்’-புவனா நடராஜன், மட்டுமே).
“நான் பெண்களைப் பற்றியே நிறைய சிந்தித்தேன், அவர்களைப் பற்றியே எழுதியும் இருக்கிறேன். காரணம் அவர்களது கையாலாகாத நிலைமையை நான் கண்ணால் கண்டிருக்கிறேன், அதை நன்றாக அறிந்தும் இருக்கிறேன். காலம் செல்லச் செல்ல என்னுள் கவிந்து கொண்டே வந்த எதிர்ப்பு மேகங்களையே எனது நாவலின் கதாநாயகியான சத்தியவதியின் வாயிலாக, ஓர் எதிர்க் குரலாக நான் வெளிப்படுத்தினேன்” என்று பிரகடனம் செய்கிறார் ஆஷா பூர்ணாதேவி. குடும்ப வாழ்வு, அதன் சிக்கல்கள் ஆகியவையே அவரது கதைகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டிருப்பதால் அவரைக் குடும்ப எழுத்தாளர் என்ற வட்டத்துக்குள் மட்டுமே சுருக்கி இலேசான ஏளனத்துடன் விமரிசிப்பவர்களும் கூட உண்டு. பெண்ணின் எல்லைகள் குடும்பம் தாண்டி – குடும்பத்திலிருந்து சமூகம் நோக்கி- விரிவடைய வேண்டுமென்றால், அந்தக்குடும்பக் களம் முன் வைக்கும் சிக்கல்களிலிருந்து முதலில் அவள் விடுபட்டாக வேண்டும் என்பதையே தன் படைப்புக்கள் வழி உணர்த்தியிருக்கிறார் ஆஷா பூர்ணாதேவி.
குழந்தை மணத்திலிருந்து தன் பெண்ணை விடுவிப்பேன் என்ற சத்தியவதியின் முதல் சபதம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம், ஆனாலும் நியாயமான தன் விருப்பத்தைச் செயல்படுத்த உடன்படாத-- தன்னோடு அதற்குத் துணைவராத சுற்றத்துக்கு எதிர்ப்பாக ஒரு மறுப்பை அழுத்தமாகப் பதிவு செய்து விட்டுக் குடும்பத்தை எப்போதைக்குமாய்த் துறந்து செல்லும் சத்தியவதியின் குரல் இந்திய இலக்கியத்தளத்தில் ஆஷா பூர்ணாதேவியின் எழுத்தின் வழி என்றென்றும் ஒலித்தபடி அவள் செய்த முதல் சபதத்தை நினைவூட்டிக்கொண்டிருக்கும்.
*************************
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக