துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.4.10

'அங்காடித் தெரு’ - மந்தைகளும்,வதைக்கூடங்களும்


கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை.செய்தித்தாள்களில் எப்போதாவது அவை பற்றிய அதிர்ச்சித் தகவல்களைக் காண நேரும்போது மட்டும் ஒரு உச்சுக் கொட்டலோடு...கணநேர அனுதாபத்தை நம் பங்குக்குக் காணிக்கையாக்கியபடி அடுத்த நொடியே அதிலிருந்து நம் கவனத்தை மிகுந்த அவசரத்தோடு மீட்டுக் கொண்டு விடுகிறோம்.குறிப்பிட்ட அந்தக் களங்களின் உழைப்பாளிகள் படும் அவத்தைகளை ஓரளவு அறிந்திருந்தாலும் விரிவான பின்புலத்தோடும்,தகிக்கும் நிஜங்களோடும்- மெய்யான கள ஆய்வில் கிட்டிய தகவல்களோடும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவற்றை நாவலாக்கியபோது('கரிப்பு மணிகள்','கூட்டுக் குஞ்சுகள்') மனம் கனத்துப் போய்....மலிவான அந்தப் பொருட்களை  சரளமாக..சகஜமாகப் பயன்படுத்தக் கூட இயலாத கூச்சம் கலந்த ஒரு குற்ற உணர்வு நெடுநாள் இருந்து கொண்டிருந்தது.
திரு ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’நாவல் பிச்சைக்காரர்களின் குரூர வாழ்வியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியபோது - வழக்கமாக முன்பெல்லாம் செய்ததுபோல் சில சில்லறைக் காசுகளை மட்டும் வீசிவிட்டு அவர்களைக் கடந்து சென்றுவிடுவதென்பது இயலாமல் போயிற்று
(காண்க; ஏழாம் உலகமும் நான் கடவுளும்  http://masusila.blogspot.com/2009/02/blog-post_28.html ).

வசந்தபாலனின் இயக்கத்திலும், ஜெயமோகனின் உரையாடல் நயத்துடனும் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படமான ‘அங்காடித் தெரு’  பெருநகரங்களில் மட்டுமன்றிச் சிறு நகரங்களிலும் தற்போது வானுயர வளர்ந்து நிற்கும் பல்பொருள் அங்காடிகளைச் சற்றும் தயவு தாட்சணியமின்றிப் புறக்கணிக்கத் தூண்டும் உக்கிரமானதொரு மனநிலையை மனதிற்குள் அழுத்தமாகப் பதித்து விட்டிருக்கிறது.

‘திருமணத்துக்கு நாள் மட்டும் குறித்து விட்டுக் குறிப்பிட்ட கடைக்குள் நுழைந்தால் போதும்,திருமணத்தை முடித்து..சீர் செனத்தி செய்து தனிக்குடித்தனம் வைக்கும் வரை உள்ள எல்லாப் பொருட்களையும் வேறெங்கும் அலையத் தேவை இல்லாதபடி அந்த ஒரே இடத்தில் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்’
என்ற கவர்ச்சியான விளம்பரத் தூண்டிலுக்கு ஆளாகும் மக்கள்  பேரங்காடிகளில் மந்தையாய்க் குவிகிறார்கள்...குவிகிறார்கள்.....குவிந்து கொண்டே இருக்கிறார்கள்.
அது, முதல் குவியல்.....

பணத்தை மூட்டை கட்டி வைத்துக்கொண்டு நுகர்ச்சிக்கான பொருளை வாரிக் கொள்ளத் துடிக்கும்  அந்தக் கும்பலின் தேவைக்கேற்ற தீனி  சரக்கறையில் குவியல் குவியலாகக் கிடக்கிறது.
அது, இரண்டாம் குவியல்.

வாங்கும் கூட்டத்தின் ரசனையறிந்து தேவை உணர்ந்து சரக்குக் குவியலைத் தரம் பிரித்துக் கொடுக்க இன்னுமொரு கும்பல் தேவைப்படுகிறது. நிலம் வறண்டதால் வாழ்க்கை வறண்டு போனவர்களாய்ப் பஞ்சம் பிழைக்க வந்த பராரிகளின் கும்பல் அது.
குறிப்பிட்ட அந்தக் கூட்டத்துக்கு நேரும் உழைப்புச் சுரண்டலும்,அடிப்படை மனித உரிமை மீறல்களும்....அந்தச் சூழலையும் கடந்ததாய்  மானுட உணர்வுகள் இன்னும் கூட மரத்துப் போகாதபடி அதில் சஞ்சரிப்பவர்களுக்குள்  சம்பவிக்கும் மெல்லிய காதல்,ஆழ்ந்த நட்பு முதலிய உணர்வுகளுமே ‘அங்காடித் தெருவி’ன் அடிநாதங்கள்.

இவை தவிர இன்னும் சில குவியல்களும் கூடப் படத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

மிதமிஞ்சிய பொருள் நுகர்ச்சியால் எஞ்சும் அளவு மீறிய குப்பை கூளங்கள்.
படத்தின் முதல் காட்சிதொடங்கி இறுதி வரை அவற்றின் நெடி அடித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றையும் கூட ஜீவனத்துக்கு முதலாக்கும் சாமானியஜனங்கள்..!
 குப்பை பொறுக்கியும், குப்பைகளில் அரிதாய்க் கிடைக்கும் ஓரளவு நல்ல துணிகளைப் புதியதாக்கியும், பாழடைந்த கழிப்பறையைக் கட்டணக் கழிப்பறையாக்கியும் எப்படியோ பிழைப்பு நடத்தும் மனிதர்கள் !
(எப்படியும் பிழைத்துக் கொள்ளும் அந்தவகை உத்திகள்தான் கதையின் நாயக நாயகிக்கு நம்பிக்கையளித்து,  வாழ்ந்துவிடமுடியும் என்ற உத்வேகத்தை இறுதியில் அளிப்பவை.
‘’விக்கத் தெரிஞ்சவன் வாழத் தெரிஞ்சவன்’’என்கிறார் வசன நெசவுசெய்த ஜெயமோகன்)

வளரிளம் பருவத்தில் வறுமையால் பெருவணிக அங்காடிகளில் வேலைக்குச் சேர்ந்து...உடலின் சக்தி ஒட்டுமொத்தமாகப் பிழிந்தெடுக்கப்பட்டபின் குப்பையாகவே மாறித் தெருவில் வீழ்ந்து கிடக்கும் வேறு சில மனித மாதிரிகள்!

பல்பொருள் அங்காடிகளின் தினசரி ஓட்ட கோரப் பற்சக்கரங்களுக்கடியே  சிக்கிச் சிதறுண்டு கூழாய்ப் போகும் விற்பனைப் பையன்களுக்கும்,பெண்களுக்கும் வாய்த்திருக்கும்
இரண்டு வதைக்கூடங்களை நெஞ்சைச் சுடும் குரூர யதார்த்தமாக முன் வைத்திருப்பதே இத் திரைப்படத்தின் தனிப்பட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பு.

ஒரு வதைக்கூடம், அவர்களின் பணியிடம். அது அவர்களைக் கசக்கிப் பிழிவதோடு ...... அவர்கள் சோர்ந்து போகும் வேளைகளில் கங்காணிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வைக் கருங்காலிகளால் கொடூரக் கசையடிகளுக்கும் ஆட்படுத்துகிறது.
ஒவ்வொரு தளத்திலும் அதற்கென்றே உள்ள திரையிட்ட தடுப்பு.
அந்தத் திரை மறைவில் ஆண் தொழிலாளர்கள் அறை வாங்குகிறார்கள் ;
விற்பனைப் பெண்களோ பெண் என்ற அடையாளத்தாலேயே மானக் கேடான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுகிறார்கள்.
( வாடிக்கையாளரின் குறிப்பிட்ட ஒரு ரசனையைத் திருப்திப்படுத்த மேல்மாடியிலுள்ள சரக்கறை வரையில் பல முறை அலுக்காமல் ஓட வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்களைப் பார்த்த பிறகு ...அந்தக் காட்சியைக் கண்ட பிறகு  எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் இருப்பதில் ஒன்றை எடுத்துக் கொண்டு விரைவாக நடையைக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் மனச்சாட்சி உள்ள எவருக்கும் தோன்றாமலிருக்க முடியாது.)

அடுத்த வதைக்கூடம் , வறட்சியான கிராமங்களிலே இருந்து மந்தைகளாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கும் பணியாட்களின் தங்குமிடம்.
ஹிட்லரின் ‘கான்ஸண்ட்ரேஷன் கேம்ப்’பை நினைவூட்டும் அடைசலும் நெரிசலுமான பொதுக்கூடங்கள்,அடுத்தவரின் எச்சில் தட்டைக்கழுவக்கூட முடியாமல் அவசர கதியில் உணவை அள்ளிவிழுங்கும் சாப்பாட்டுக் கூடங்கள்.

இந்த இரு வதைக் கூடங்களை மட்டுமே சார்ந்து...அவற்றை மட்டுமே  நம்பியதாய் மனித வாழ்வு முடங்கிப் போய்விடக் கூடாது என்ற நம்பிக்கை ஒளியை விதைத்திருப்பதே இப் படத்தின் உச்ச கட்ட உணர்த்தல்.

‘யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழ்கிறது’ என்ற ஜெயமோகனின் வசனம் அங்காடித் தெருவின் முழுமையான சாரத்தையும் உள் பொதிந்திருக்கிறது.

கண் பார்வையற்ற நிலையிலும் தெருவோரமாய்ச் சிறு சிறு பொருட்களை விற்றுப் பிழைக்கும்
முதியவரில் தொடங்கி வாழ்வதற்கான பல வழிகளை ஒரு வகுப்பறைப் பாடம் போலப் போதிக்கும் அந்தத் தெருவே இந்தப் படத்தின் மையப் பாத்திரமுமாகிறது.

அந்தப் புரிதலும் தெளிதலும் இன்றி அடுத்தவரின் அடக்குமுறைக்கு ஆட்பட்டுக் கிடக்கும் அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சில அவலச் சம்பவங்களுக்குப் பிறகு, சுதந்திரமான சிறு வணிகர்களாகக் கதை மாந்தர்கள் மாற்றம் பெறுகிறார்கள்.

வாழ்வதற்கான உரத்தைச் சாமானியர்கள்  பெறும்போது அவர்கள் வாழ்வில் நிகழும் அவல நிகழ்வுகளை  நாடகத் தன்மையானவை  என்று புறந்தள்ளிவிடமுடியாதபடி இயல்பான யதார்த்த நிகழ்வுகளாகவே அவை  படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமான ஒரு காதல் கதைக்கு வித்தியாசமானதொரு பின்புலம்  என்று சில விமரிசனங்கள் இப் படம் பற்றிக் குறிப்பிட்டாலும்  அதை அவ்வாறு கொள்ள முடியாதென்றே சொல்லத் தோன்றுகிறது.
காதலை...நெகிழ்ச்சியை..நட்பை உணரும் பருவத்தில்  குடும்ப உறவுகளிலிருந்து வெகுதூரம் அந்நியப்பட்டுப் போய் -ஆணும் பெண்ணும் அடுத்தடுத்துப் பணியாற்ற வேண்டிய வேலைச் சூழலில் ஒருவருக்கொருவர் ஆதுரமாய் ஆதரவாய் இருப்பதும் அவர்களிடையே காதல் முகிழ்ப்பதும் கதைக் கருவை ஒட்டியதாகவே அமைந்திருக்கிறது.
சொல்லப் போனால் அனல் காற்று வீசும் அந்தச் சூழலில் காதல் ஒரு மெல்லிய பூங்காற்றாய் அந்த இளைஞர்களைத் தழுவி ஆர அணைத்தபடி ஆறுதல் தருகிறதென்றுகூடக் கூறலாம்.



மொத்தத்தில் இதுவரை சொல்லப்படாத களம் ..... !
முறைப்படுத்தப்படாத தொழிற்களத்தை வரித்துக் கொண்டிருக்கும் பேசப்படாத மனிதர்கள் !
சமூக மனச்சாட்சியை ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுத்துப் பிடரி பிடித்து உலுக்குகிறது அங்காடித் தெரு.

பின் குறிப்பு;
புது தில்லியின் சூழலில் புதிய தமிழ்ப்படங்களை சட்டத்துக்குப் புறம்பான...தரம் குறைவான சி.டிக்களில் மட்டுமே பொதுவாகப் பார்க்க முடியும்.
இம்முறை ‘அங்காடித் தெரு’ வெளிவந்த ஒரு சில வாரங்களிலேயே - சித்திரைத் திருநாளன்று - தில்லித் தமிழ்ச்சங்கம் அதைத் திரையிட்டுவிட்டதால் இத்தனை தரமான ஒரு படத்தைத் தெளிவான முறையில் பார்த்து விமரிசனம் எழுதுவது சாத்தியப்பட்டிருக்கிறது.அதற்காகத் தில்லி தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு கை கூப்பு.

படத்தில் பணியாட்களுக்கு அறை விழும்போதெல்லாம் அரங்கில் சின்னச் சலசலப்பும்
’இது கொஞ்சம் ஓவர்’போன்ற வார்த்தைகளும் காதில் விழுந்து கொண்டே இருந்தன.
கும்பமேளாவுக்காக அப்போது வடக்கில் இருந்த படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் திரு ஜெயமோகனோடு உடன் இது பற்றித் தொலைபேசியில் பகிர்ந்தபோது அவர் சிரித்தபடி ‘’நிஜத்திலே இன்னும் அதிகமாவே அடிப்பாங்க’’என்றார் சுருக்கமாக.

சோகத்தின் கனம் தாங்காமல் அரங்கைவிட்டுப் பாதியில் வெளியேறிய கூட்டமும் உண்டு.
ஜிகினா சுற்றிய சினிமாவையே நாடுபவர்களும்,பிறர் துன்பத்தைத் தாங்க முடியாத பேரருளாளர்களாகப் பாவனை செய்தபடி - உண்மையில் தங்களை வருத்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுமே இப்படிப்பட்ட எதிர்வினை ஆற்றுபவர்கள்.
இந்தக் கூட்டத்தில் மேல்மட்ட கீழ்மட்ட பேதங்களோ - வர்க்க வேறுபாடுகளோ இருப்பதில்லை .
இவர்கள் ஒரு தனி வர்க்கம்...அவ்வளவுதான்.
இந்தப் போக்கு தில்லிக்கு மட்டும் உரியதென்றும் சொல்லி விடமுடியாது.
மதுரையில் பல்லாண்டுகள் வசித்தபோதும் இப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்ட அனுபவம் உண்டு.
பம்பாய் படத்தில் அரவிந்தசாமிக்குக் கல்யாணம் முடிந்தவுடனும்,சேது படத்தில் சேதுவுக்கு மன நிலைப் பிறழ்ச்சி ஏற்பட்டவுடனும்...அடுத்த நிமிடமே அரங்கைக் காலி செய்து விடுபவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட பார்வையாளர்களே மிகுதியாக உள்ள தமிழ்ச் சூழலில்
 சுடும் உண்மைகளைத் துணிவாக முன் வைத்துக் குத்துப்பாட்டு..இரட்டை அர்த்தம்...அரிவாள்வீச்சு..தெருச்சண்டை தவிர்த்த நல்லதொரு யதார்த்தப் படமாக ‘அங்காடித் தெரு’வை உருவாக்கித் தமிழ்ப் படங்களின் தரம் ஓரளவேனும் உயர உதவியிருக்கும் படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

7.4.10

சங்கக் காதலில் தாய்மை(2)

காதல் வயப்படும் நிலையில் பெற்றோர் அதற்கு எதிராகவும்,தடையாகவுமே இருப்பார்கள் என்ற எண்ணமே பெரும்பாலான இளம் உள்ளங்களில் படிந்து போயிருக்கிறது.

(இன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் இதற்கு மாறான ஆரோக்கியமான சிந்தனைப்போக்கு முன்வைக்கப்பட்டு வருவதை வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் எனலாம்.)

சங்ககாலத் தலைவியும் இந்தப் போக்கிற்கு விலக்கானவள் அல்ல.


தாய்மைக்கே உரிய கரிசனத்தால், அக்கறையால் தலைவியை அவள் கண்காணிப்பதும் கூட அவளுக்குத் தவறாகவே படுகிறது.


இந்தத் தாய், பிறக்கும்போதே வயதில் மூத்தவளாகப் பிறந்து விட்டாளோ...அவளுக்கு இளமைப் பருவம் என்ற ஒன்றே இல்லையோ....காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை அவள் அறிந்ததே இல்லையோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகிறது அவளது நெஞ்சம்.


''இளையளாய் மூத்திலள் கொல்லோ அன்னை''என அவளின் உள்ளத்துக்குள் ஓடும் எண்ணத்தின் தடத்தைத் தாயும் கண்டுபிடித்துவிடுகிறாள்.


தலைவியின் நினைப்புக்கு முற்றிலும் வேறாகத் தான் இருப்பதை அவளுக்கு நிறுவிக் காட்டப் பல முயற்சிகள் செய்தபடி அவள் தவியாய்த் தவிப்பதைப் பல சங்கப் பாடல்கள் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கின்றன.

சான்றாக இரண்டு சங்கப் பாடல்கள் இங்கே....


காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் (வீட்டுக்குத் தெரியாமல்)சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை - அதற்கான  நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் 
 சங்கத் தாயைக் காட்டுகிறது ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.

‘’அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே ! உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன்....அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ!அதன் பிறகாவது...என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம்குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ !’’என்று லஞ்சம் கொடுப்பது போல
 அதைக் கூவி அழைக்கிறாள் அவள்.

‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
  அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
  பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
  பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
  வெஞ்சின விறல் வேல் காளையோடு
  அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’

தாய்மைப் பரிவிலும்,அன்பின் குழைவிலும் இந்தத் தாயையும் கூட விஞ்சுகிறாள் கபிலர் காட்டும் அகநானூற்றுத் தாய்.
மகளின் காதல் உறவை,அவ்வப்போது
அக்கம்பக்கத்தாரிடமிருந்து ஜாடைமாடையாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள் இவள்.

ஆனாலும் இப்படி ஒரு செயலுக்குத் தன் மகள் துணிய மாட்டாள் என்று தான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையால் அதைப் பற்றி அவளிடம் விசாரிப்பது கூட நாகரிகமற்ற செயலாக அவளுக்குப் படுகிறது.

மேலும்,அவ்வாறு கூறுவது தன் மகளை வருத்தப்படுத்திவிடுமோ என்று எண்ணியும் அதைச் செய்யாமல் தவிர்த்துவிடுகிறாள் அவள்.

மகளைப் பற்றி இந்த அளவுக்குக் கரிசனத்தோடும்,புரிதலோடும் தாய் இருக்க...மகளின் நினைவோ வேறொரு அலைவரிசையில் சஞ்சரிக்கிறது.தனது காதல் உறவு தாய்க்குத் தெரியவந்தால் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாளோ என்று நினைத்துக் கொண்டுவிடுகிறாள் அவள்.

அதனாலாயே காதலனோடு இணைந்து ஊரைத் தாண்டிச் செல்வதற்குத் துணிந்து விடுகிறாள் அவள்.
உண்மை வெளிப்பட்டதும் தாயின் உள்ளம் புழுவாய்த் துடிக்கிறது.

மகள் பிரிந்து போன துன்பத்தைக்காட்டிலும் அவள் தன்னைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே என்ற எண்ணமே அவளது நெஞ்சை வாள் கொண்டு அறுக்கிறது.

பெற்ற மகளுக்கோ அவளது காதலுக்கோ தான் எதிரியில்லை என்று நிரூபிப்பதற்காகவே அவள் ஒரு செயலைச் செய்ய முற்படுகிறாள்.

தன் காதலனோடு அந்தப் பெண் உடனாகச் செல்லும் காட்டு வழியில் ஆங்காங்கே சில வீடுகள் இருக்கும்.அங்கே உள்ளவர்கள் வழிப் பயணத்தில் களைத்துப்போன காதலர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்வது வழக்கம்.அப்படிப்பட்ட ஒரு விருந்துபசாரத்தைத் தன் மகளுக்கும் அவள் துணைவனுக்கும் தானே அளிக்க வேண்டுமென்று விரும்புகிறது அந்தத் தாய் உள்ளம்.
கல்லும்,முள்ளும் நிறைந்த அந்தக் காட்டு வழியில் காதலர்களுக்கு முன்பாகத் தான் சென்றுவிட வேண்டுமென்றும் ,அங்கே வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் மனையிலுள்ள விருந்தோம்பும் பெண்ணாகஇருந்தபடி அவர்களுக்குத் தன் கையால் முதல் விருந்து படைத்துப் பரிமாற வேண்டுமென்று விழைகிறது அந்தத் தாயின் உள்ளம்.



மகளின் காதலுக்குத் தான் எதிரியில்லை எனக் காட்டிக் கொள்ள இதைக்காட்டிலும் வேறு எந்த வழியும் அவளுக்குச் சிறந்ததாகத் தோன்றவில்லை.

அவளது விருப்பம் நிறைவேறுவதென்பது மிகவும் கடினமானதுதான் என்றபோதும் தன் மனதை மகளுக்குப் பிளந்து காட்ட அவள் படும் பரிதவிப்பும்,அன்பின் நெகிழ்வும் அவளது உணர்வை உன்னதப்படுத்திவிடுகின்றன.
மகளைப் பிரிந்த தாயின் மனத் தவிப்பை இவ்வாறு இதயத்தைத் தொடுமளவுக்கு எடுத்துக்காட்டும் நுட்பமான பாடல்கள் தமிழைத் தவிர வேறு எந்த உலக மொழியிலும் இல்லையென உறுதியாகக் கூறிவிட முடியும்.
கபிலரின் அந்தப்  பாடல்;

''நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் பேசாமல் தாய் பார்த்துக் கொள்ளட்டும் என்று சும்மா இருக்காமல்,வம்பு பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பெண்கள் பல நாட்களாகவே என்னிடம் வந்து'உன் மகள் இப்படி இருக்கிறாள் அப்படி இருக்கிறாள்'என்று பழிசொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்து கொண்டால் கூட நீ கூச்சப்படுவாய் என்பதால் உன்னிடம் சொல்லாமல் நாசூக்காக என் மனதுக்குள்ளேயே அதை ஒளித்து வைத்திருந்தேன்.


ஆனால் இப்படிப்பட்ட இந்த அன்னைக்குத் தெரிய வந்தால் நம் காதலுக்குத் தடை போட்டுவிடுவாளோ என்று பயந்து போன நீ ,மான்களைக் கூட வழி தடுமாற வைக்கும் மலைக் காட்டுப் பாதையில் உன் காதலனோடு சேர்ந்து எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடன்போக்காகப் போய்விட்டிருக்கிறாய்.

நீ பயப்படுவது போன்ற தாய் நான் இல்லை என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே நான் அந்த மலைப் பாதையை உனக்கு முன்பாகவே அடைந்து விட வேண்டும்....அங்கே உள்ள சில சின்னக் குடிசைகளில் களைத்து வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்காகவே பல மூத்த பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்;அவர்களில் ஒருத்தியாக நானும் மாறிப் போய் நீயும்,உன் காதலனும் அங்கு வந்து சேரும்போது உங்களுக்கு என் கையால் சமைத்த உணவை அளித்து விருந்து வைக்க வேண்டும்.அதுவே என் ஆசை ''என்கிறாள் அந்தத் தாய்.

மகளின் மனம் அப்போதாவது தன்னை விளங்கிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்போடு கூடிய ஏக்கத்தைப் பாசத்தின் மென்மையான இழையால் நெய்தபடி சித்திரமாக்குகிறது கபிலரின் குறிஞ்சித் திணை சார்ந்த இந்த அகநானூற்றுப் பாடல்.


''உவக்குநளாயினும் உடலுநளாயினும்

யாயறிந்து உணர்க என்னார் தீவாய்

அலர்வினை மேவல் அம்பற்பெண்டிர்

இன்னள் இனையள் நின் மகள் எனப் பன்னாள்

எனக்கு வந்துரைப்பவும் தனக்குரைப்பறியேன்

நாணுவள் இவள் என நனிகரந்துறையும்

யான் இவ்வறுமனை ஒழியத் தானே

அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை

எனக்கு எளிதாகல் இல்லெனக் கழற்கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்

பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்

அன்னேனன்மை நன்வாயாக

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

எய்திடை உறாஅதெய்தி முன்னர்ப்

புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்ச்

செல்விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனைகெழுபெண்டு யான் ஆகுக மன்னே''

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....