துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.4.14

பொதிகை தொலைக்காட்சியில் என் உரை....

தமிழ்ச்சிறுகதைகள் சிலவற்றை அறிமுகம் செய்து நான் ஆற்றியுள்ள உரை இன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மதியமும்-3 15 மணி அளவில்-பொதிகை தொலைக்காட்சி இலக்கிய நயம் பகுதியில் ஒளிபரப்பாகிறது. சங்க இலக்கியம்,காப்பிய இலக்கியம் ஆகிய பகுதிகளில் வேறு சிலர் வழங்கும் உரைகளைத் தொடர்ந்து தற்கால இலக்கியம் பகுதியில் என் உரை ஒளிபரப்பாகும்.
கு அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறா’ரில் தொடங்கி ஜெயகாந்தன்,நாஞ்சில்நாடன்,ஆர் சூடாமணி,ஜெயமோகன்[சோற்றுக்கணக்கு],வாஸந்தி,சுஜாதா,காவேரி லட்சுமி கண்ணன் ஆகியோரின் எட்டுசிறுகதைகள் குறித்து சிறிய அறிமுகம் தந்திருக்கிறேன்.இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் நிகழ்ச்சியைக் கண்டும் கேட்டும் கருத்துப்பதிவு செய்தால் அது என்னை மேலும் மேம்படுத்த உதவும்.
நவ,2013இலேயே மதுரை பொதிகையில் உரைகள் பதிவு செய்யப்பட்டு விட்டன;ஒளிபரப்பு தற்போது; இன்று ஏப்.1 முதல்...ஒவ்வொரு செவ்வாய் மதியமும் தொடர்ந்து 8 வாரங்கள்...
தமிழ்ச்சிறுகதையை அடுத்த தளத்துக்கு உயர்த்திச்சென்று படைப்பிலக்கியத்தில் சமூக உணர்வோடு அழகியலையும் இணைக்க முயன்ற இயக்கம் மணிக்கொடி இயக்கம்.அந்த இயக்கத்தின் வழி வந்த படைப்பாளிகளின் வரிசையில் தவிர்க்க இயலாத ஓர் எழுத்தாளர் கு அழகிரிசாமி.
‘ராஜா வந்திருக்கிறார்’சிறுகதையை அறிமுகம் செய்து நான் வழங்கியிருக்கும் உரை இன்று மதியம் 3 15 மணி அளவில் பொதிகை தொலைக்காட்சியில் வேறு சில இலக்கிய உரைகளைத் தொடர்ந்து - இக்கால இலக்கிய உரைத்தொடரில் ஒளிபரப்பாகிறது.கேட்டுக்கருத்துப்பதிவு செய்ய அழைக்கிறேன்....
ராஜா வந்திருக்கிறார் குறித்த என் வலைப்பதிவு
http://www.masusila.com/2012/08/2.html

20.2.14

உ வே சா அறக்கட்டளைப்பொழிவு-மதுரை

தமிழ் படித்தால் மதிப்பில்லை என்னும் பொய்யான பிம்பங்களைச் சென்ற நூற்றாண்டின் காலகட்டத்திலேயே தகர்த்து....தமிழால் தன்னைத்தகுதிப்படுத்திக் கொண்டு தமிழையும் தகுதிப்படுத்திய பெருமகனார் தமிழ்த்தாத்தா உ வே சாமிநாத ஐயர்.

தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த காதல் சொல்லுக்கடங்காதது.

தமிழ் அவரது தாகம் தணிக்கும் நன்னீர்;
தமிழ் அவரது பசியாற்றும் இனிய அமுது....
தமிழையும் தமிழ் ஆராய்ச்சியையும் தவிரப்பிற சிந்தனை அற்று வாழ்ந்த அவர் தொன்மைத் தமிழிலக்கியப்பதிப்பின் முன்னத்தி ஏர் .

பல காவதம்  நடந்து - பல நாள் பசித்திருந்தும் தனித்திருந்தும் தூக்கம் தொலைத்தவராய்த் தமிழ்ப்பசி ஆற்றும் ஒரே நோக்குடன் காலமும் கரையானும் அனலும் புனலும் அழித்து விட்ட-அழிக்கக்காத்திருந்த சுவடிகளைத் தேடிச் சீரமைத்து ஒப்புநோக்கித் திருத்தம் செய்து சிந்தாமணியையும் பத்துப்பாட்டையும் ,எட்டுத்தொகையையும்,சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையையும் மணிமேகலையையும் உரைக்குறிப்புக்களோடும், ஆசிரியர் வரலாற்றோடும் இன்னும் பல குறிப்புக்களோடும் அவர் அன்று பதிப்பிக்காமல் போயிருந்தால் இன்று செம்மொழித் தகுதி தமிழுக்குக்கிடைத்திருக்குமா என்பது சிந்தனைக்குரியது.
ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
     எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
     பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
     நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
     கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!
- இரா.இராகவையங்கார்

வ வே சு [அய்யர்] வுக்கும் உ வே சாவுக்கும் கூட வேறுபாடு தெரியாத நம் போலித் தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையிலே உ வே சா தன் பதிப்புப்பணிகளால்..
இயல்பான-மிகைகள் அற்ற - சரளமான தமிழ் உரைநடைக்கு அடிகோலிய தன் வாழ்க்கைவரலாற்று நூலான  ‘என் சரித்திரத்தால்’ நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

தன் தமிழ்க்காதல் பற்றி உ வே சா இப்படிச்சொல்கிறார்.....
’’கல்யாணத்திலும், பொருள் வருவாயிலும், ஊர்ப்
பிரயாணத்திலும் எனக்கு லாபம் இருந்ததாகத் தோற்றவில்லை. எனக்கு
ஒன்றுதான் நாட்டம். தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப்
பசிக்கு உணவு; எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை
அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம்,
நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி
உண்டாகின்றன. .அன்றும் சரி, இன்றும்சரி, இந்த நிலைமை மாறவே இல்லை...’’

உ வே சாவின் 160ஆம் பிறந்த நாளை ஒட்டி 
மதுரையிலுள்ள மதுரைக்கல்லூரியில்
‘’ உ வே சா - வாழ்வும் பணியும் ’’ 
என்னும் தலைப்பில் 
நான் நாளை [21/2/2014 ] காலை 11 மணி அளவில் அறக்கட்டளைச்சொற்பொழிவாற்றவிருக்கிறேன்.

அழைப்பு இத்துடன்...

மதுரை வாழ் தமிழ் ஆர்வலர் வருக என அன்புடன் அழைக்கிறேன்.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....