துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.10.16

ரஷ்யப்பயணம்- தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-5

நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரையின் ஐந்தாம் பகுதி
ரஷ்யப்பயணத்தின் மூன்றாம் நாளான அன்றுதான் [ஜூலை 25] மாஸ்கோவில் நாங்கள் செலவழிக்கும் கடைசி நாளும் கூட. மிகக்குறைவான அந்தக் காலகட்டத்திற்குள் மாபெரும் தேசம் ஒன்றின்  புகழ் வாய்ந்த தலைநகரில் இன்றியமையாத ஒரு சில இடங்களை முடிந்த வரை பார்க்க முடிந்ததோடு அந்நகரத்தின் உயிர்ப்பான ஜீவனையும் உள்வாங்கிக்கொள்ள முடிந்ததில் நிறைவு கொண்டிருந்தேன் நான்.

அன்றைய முற்பகல் முழுவதும் மாஸ்கோ மெட்ரோவில் பயணம் செய்வதும் மெட்ரோ நிலையங்கள் பலவற்றைக் காண்பதும் எங்கள் பயணத் திட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. மாஸ்கோ மெட்ரோவின் வினோதமான தனித்துவம் என்னவென்று அதுவரை அறிந்திராததால்  அன்றைய சுற்றுலாத் திட்டம் எனக்கு வியப்பையே அளித்தது. புதுதில்லியில் கழித்த ஏழாண்டுக்காலத்தில் மெட்ரோவில் பலமுறை பயணம் செய்திருந்ததாலும் தற்போது சென்னை மெட்ரோவிலும் கூடச் சென்றிருந்ததாலும், அப்படிக்குறிப்பாக  மெட்ரோ நிலையங்களை  மட்டுமே பார்க்க என்ன இருக்கப்போகிறது என்றே என் சிந்தனை சென்று கொண்டிருந்தது. .

டேன்யா [வழிகாட்டி] எங்களைப் படிப்படியாக வழி நடத்திக்கொண்டு கிட்டத்தட்ட இருபது வண்டிகள் மாறிமாறிச்சென்றபடி… தரைத் தளத்துக்குக் கீழே மட்டுமே அமைந்திருந்த மெட்ரோ பாதையில் பல  நிலையங்களைக் காட்டியபோதுதான்…அவை வெறும் போக்குவரத்துக்கானவை மட்டுமல்ல…சுரங்கத்துக்குள் இருப்பதைப் போன்ற அள்ள அள்ளக் குறையாத காட்சிகளும், ஆழமான பல  தகவல்களும் கூட அவற்றில் பொதிந்து கிடக்கின்றன என்பதை நான் புரிந்து கொண்டேன்.
உண்மையைச் சொல்லப்போனால் பரபரப்பான மாஸ்கோ வீதிகளுக்கு அடியில் மிகப்பிரம்மாண்டமும் அதிசயமுமான அருங்கலை வேலைப்பாடுகளும் வேறு பல இரகசியங்களும் நிரம்பிய இன்னொரு உலகமே மறைந்து கிடக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்…

கலைக்காட்சியகம் போலத் திகழும் இந்த மெட்ரோ நிலைய எழிற்களஞ்சியத்தை முதன்முதலாகப் படமெடுக்க அனுமதிக்கப்பட்டவர் கட்டிடக் கலைஞராக இருந்து பிறகு புகைப்பட நிபுணராகவும் பரிமாணம் பெற்ற கனடாவைச் சேர்ந்த டேவிட் பர்ட்னி என்பவர். மக்களின் போக்குவரத்து வசதிகளுக்கு இடையூறாக இருக்கலாகாது என்பதால் இரவு நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பிறகே அவருக்கும் அதற்கான அனுமதி கிடைத்தது.. மாஸ்கோ மெட்ரோவில் புதைந்து கிடக்கும் இரகசியமான அதிசய உலகம் உலகத்தின் பார்வைக்கு முன்  வைக்கப்பட்டது அப்போதுதான்.

தலைநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 1875 ஆம் ஆண்டிலேயே முன் மொழியப்பட்டு  1902 இல் விவாதிக்கப்பட்ட  இந்தத் திட்டம் அப்போதைய நகராட்சியால் நிராகரிக்கப்பட்டுவிட, சோவியத் யூனியன் உருவான பின் -1931ஆம் ஆண்டுக்குப்பிறகு - இதன் உருவாக்கம் தொடங்கிப் படிப்படியாக முழுமை பெறத் தொடங்கியது.

உலகின் பல நாடுகளில் பாதாள ரயில்கள் குறித்த சிந்தனைகள் கூட அரும்பியிராத ஒரு காலகட்டத்தில் மெட்ரோ வழி பற்றியும், அதன் நுணுக்கங்களையும் சிந்தித்துச் செயல்படுத்தியதோடு அதை ஒரு கலைக்கூடமாகவும் மாற்றிய பெருமை ரஷ்ய நாட்டின் தலைவர்களுக்கே உரியது. மாஸ்கோ மெட்ரோவைத் தனித் தன்மை பெற்றதாக - ஏனைய தரையடிப் போக்குவரத்து ரயில் அமைப்புக்களிலிருந்து மாறுபட்டதாக ஆக்குவது அதன் இந்த அம்சமே.. உலகிலேயே மிக மிக எழிலார்ந்ததாக எண்ணப்படும் இந்த மெட்ரோவைச் சேர்ந்த நாற்பத்து நான்கு நிலையங்கள்  உலகின்  பெருமை மிகு கலாச்சாரச்சின்னங்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்துக்கான சராசரி இரயில் நிலையங்களாக மட்டுமே சொல்ல முடியாதவையாக - சோஷலிஸ யதார்த்தவாதக் கொள்கையைச் சித்திரிக்கும் கலைக்கூடங்களாகவும் சோவியத் நாட்டின் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யும் அரங்கங்களாகவுமே இந்நிலையங்கள் திகழ்கின்றன. மிகப்பிரம்மாண்டமான மிக விரிவானவேலைப்பாடுகளுடன் கூடியதாகப்  பொலியும் இவை சோவியத் மண்ணின் ஒளி மிகுந்த எதிர்காலத்தை - ஸ்வெத்-ஒளி; ஸ்வெல்டோ புதுஷ்ஷே-பிரகாசமான வருங்காலம் [“svet” (light) and “sveltloe budushchee” (bright future).] என தேசத்தின் அடிப்படை நோக்கங்களை முன் நிறுத்துவனவாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.  

மாஸ்கோ மெட்ரோவின் வலைப்பின்னலில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட நிலையங்களில் நகரத்தின் அடி ஆழத்தில் தெருக்களுக்கு அடியே புதைமட்டத்தில் எழுபது நிலையங்களும் அதற்குச்சற்று மேல்மட்டத்தில் எண்பத்தேழு நிலையங்களும் தரை மட்டத்திலும் அதற்கு மேல் சற்று உயரத்தில் ஒரு சில நிலையங்களும் அமைந்திருக்கின்றன

இவற்றுள்  எண்பத்து நான்கு மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் பார்க் பொபெடி[Park Pobedy] என்னும் நிலையமே அதிகபட்ச ஆழத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம்.
பல நிலையங்களில் பலப்பல  ரயில்களில் மாறி மாறிப் பயணம் செல்லச் செல்ல நாங்கள் பல மட்டங்களிலும் இருக்கும் பல தளங்களையும் பார்த்து அதிசயத்திலும் பிரமிப்பிலும் ஆழ்ந்து போயிருந்தோம்...

விளாடிமிர் லெனின் அவர்களின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்த - அவர்நினைவாக அர்ப்பணிக்கப்பட்டிருந்த  தளம்..., 

ரஷ்யப்புரட்சியை சித்திரிக்கும் பிரம்மாண்டமான சுவரோவியத்தைக் கொண்டிருக்கும் தளம்,  


இரு பெரும் உலகப் போர்க்கொடுமைகளால்  பட்ட அவலங்களிலிருந்து விட்டு விடுதலையாகிஇந்த உலகம் முழுவதும் சமாதான சக வாழ்வில் திளைக்கட்டும்என்ற செய்தியை ரஷ்ய மொழி வாசகங்களுடன் எடுத்துக்காட்டும் வண்ணச் சித்திரம் கொண்ட தளம்., 

 இன்றும் கூடச் செயல்படும் நூலகமாக விளங்கிக்கொண்டிருக்கும்  குர்ஸ்கயா  மெட்ரோ நிலையம் [The Kurskaya metro station] என்று பலவற்றையும் ஆர்வத்துடன் பார்வையிட்டுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேசென்று கொண்டிருந்த எங்களைக்  கண்ணைக்கட்டி  நிறுத்தும் பளிங்கு மற்றும் மேற்கூரை வேலைப்பாடுகள் நிறைந்த  மாயாகோவ்ஸ்கயா [Mayakovskaya ] ரயில் நிலையம் பெரு வியப்பில் ஆழ்த்தியது, அதிலிருந்த பளிங்குச்சுவர்களையும் விதானங்களையும்  எத்தனை முறை எத்தனை கோணங்களில் படங்கள் எடுத்தாலும்  எங்கள் ஆவல் தீராமல் பெருகிக்கொண்டேசென்றது.

மாயாகோவ்ஸ்கயா  ரயில் நிலையத்துக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. 1941ஆம் ஆண்டு அக் 6ஆம் தேதி -  ரஷ்யப்புரட்சியின் ஆண்டு விழா நாளன்று  ஃபாஸிஸத்தின் வீழ்ச்சியைப் பிரகடனம் செய்தபடி அரசியல்வாதிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் இங்குள்ள அரங்கத்தில் இருந்தபடிதான்  உரையாற்றியிருக்கிறார்  ரஷ்யாவின்  மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஜோசஃப் ஸ்டாலின்.
மாஸ்கோ  மெட்ரோ  குறித்து  நாங்கள்  அறிந்து கொண்டதில் மிகவும் முக்கியமானதும்  சுவாரசியமானதுமான  மற்றொரு தகவலும் உண்டு.  இரண்டாவது  உலகப்போர்  நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - வான் வழித் தாக்குதல்கள் மிக அதிகமாக இருந்தபோது இந்தநிலையங்களில் இருந்த அரங்கங்கள், கூடங்கள் மற்றும் நடைமேடைகள் ஆகியவை,  வெடிகுண்டு வீச்சுக்களிலிருந்து பொது மக்களைக் காப்பாற்றும் புகலிடங்களாகப் பயன்பட்டிருக்கின்றன என்பதே அந்தச்செய்தி.  இரவு வேளைகளில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் வண்டிகளில் பெண்களும் குழந்தைகளும் பெருவாரியாக அடைக்கலம்  புகுந்திருக்கின்றனர். ஜெர்மானியர்கள் நடத்திய வான் தாக்குதல்கள் மிகுதியாக இருந்தபோது அந்த இடத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் தொகை மிகுதியானதால் அவர்களின் தேவையை  நிறைவு செய்வதற்காகவே பலபொருள் அங்காடிகளும் முடி திருத்தகங்களும் கூட அங்கே  அப்போது  செயல்பட்டிருந்திருக்கின்றன.

பிற நாடுகளின்  வெடிகுண்டுவீச்சுத் தாக்குதலிலிருந்து காக்கும் புகலிடமாக அமைந்ததோடு  ரஷ்யாவின் ஆயுதசேமிப்புக்கிடங்காகவும் கூட இந்த நிலையங்கள் பயன்பட்டிருக்கின்றன. இரும்புக்கோட்டை போன்ற ஒன்றை  இரு வீரர்கள்  காவல் புரிந்து கொண்டிருப்பதைப்போன்ற அமைப்பு ஒன்றைக்காண முடிந்தது. அதுவே இந்நாட்டின் ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சேமிக்கும் கிடங்காகப்  பயன்பட்டிருத்தல் கூடும்.

மெட்ரோ ரயில்கள் பலவற்றில் பயணித்தபடி மதியம் வரை சுற்றிக்கொண்டிருந்தோம். ரயில்பயணத்தைப்பொறுத்தவரையில் பிற மெட்ரோக்களைப்போலத்தான் அதுவும்  அதில்  புதுமைகள்  ஏதும்  இல்லை என்றாலும் மிக அதிக பட்சமான மக்கள் -கோடிக்கணக்கில் இதில் பயணம் செய்கிறார்களென்பதும் நேரம் தவறாதபோக்கை மாஸ்கோ மெட்ரோ ரயில்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் ஒழுங்காய்க்கடைப்பிடிக்கின்றன என்பதும்  கருத்தில் கொள்ள வேண்டியசெய்திகள்,

பிற்பகல் ஒருமணி அளவில் மாஸ்கோ மெட்ரோவிலிருந்து விடை பெற்று ஒருவட இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்ட பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. மாஸ்கோ ரயில் நிலையம் சென்று பீட்டர்ஸ்பர்க் செல்லும் விரைவு ரயிலில் ஏறிக்கொண்டோம்...விரைவாகச்சென்றாலும் செல்வதே தெரியாதபடி- - மிகுந்த தூய்மையோடு இருந்த  அந்தரயிலில் விமானப்பயணம் போலச்சென்று கொண்டிருந்தபோது, ரஷ்யாவின் புறநகர்ப்பகுதி சார்ந்த காட்சிகள் எங்கள் கண்களுக்கு விருந்து படைத்துக்கொண்டிருந்தன

மாஸ்கோவில் அடுக்கு மாடிக்கட்டிடங்களைத் தவிரத் தனி வீடுகள் குடியிருப்புக்கள் என்று  எதையும் பார்க்காமலிருந்த நாங்கள் ரஷ்யநாட்டுச் சிற்றூர்களையும் கிராமங்களையும் கோதுமை வயல்களையும் சின்னச்சின்ன அழகான வீடுகளையும் பண்ணை வீடுகளையும் பார்க்க முடிந்ததது அப்போதுதான்....

கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செல்வதே தெரியாமல் கழித்த அந்தப் பயண நினைவுகள் , வெகு சுவையும் இனிமையும் வாய்ந்தவை; பயணத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்த சகபயணிகளோடு மனம் விட்டுப்பேசியபடி பலவற்றைப்பகிர்ந்து கொள்ளமுடிவதற்கும் ஒருவரைப்பற்றி மற்றவர் அறிந்து கொள்ளவும் கூடநேரம் வாய்த்தது அப்போதுதான்....


செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் என்ற பெயரைக்கேட்டதுமே..-..அந்த நகரத்தில் கால் பதிக்கப்போகிறோமென்ற எண்ணம் எழுந்த மாத்திரத்திலேயே என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்த்தபடி நான் பரவசத்தின் உச்சநிலையில் இருந்தேன்...நான் மொழி பெயர்த்திருக்கும் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின்  கதைக்களன்கள் பெரும்பாலும் மையம் கொண்டிருப்பதும் அவரது நினைவகம் அமைந்திருப்பதும்   அங்கேதான்....அதனாலேயே அங்கு சென்று கொண்டிருப்பது என்னை ஆனந்தச் சிலிர்ப்பில் ஆழ்த்தி இருந்தது...ரயிலை விடவும் விரைவாக அங்கே  சென்று விட என் மனம் முந்திக் கொண்டிருந்தது.

ரஷ்ய நாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த மகா பீட்டரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த  நகரம் அரசரின் பிரியத்துக்கு   உரியவராய் விளங்கிய  புனிதரான அப்போஸ்தலர் பீட்டரின் பெயரையே சூடிக்கொண்டிருக்கிறது. உலகின் மிக அழகானநகரங்களில் ஒன்றான இது., நேவா ஆறு  பால்டிக் கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்திருக்கிறது.
 “பீட்டரின் கைவண்ணமே, உனை நேசிக்கிறேன்! / உனது எளிமையை நேசிக்கிறேன், உனது சமச்சீர் வடிவை நேசிக்கிறேன்; / பளபளக்கும் கருங்கல் பாவிய உனது கப்பற்துறை மேடைகளிடையே / எத்தனை மௌனமாய், நளினமாய் நேவா நதி நெளிந்தோடுகிறாள்!”   என்று இந்நகரைத் தன் கவிதையில் வருணிக்கிறார் ரஷ்யக்கவிஞர் அலெக்ஸாண்டர் புஷ்கின்.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை ஒட்டி  ரஷ்யா வளர்ச்சியடையாமல் பின்தங்கிப்போக... கடல்வழிப் போக்குவரத்து இல்லாதிருந்ததே அதற்குக் காரணம் எனக்கருதிய .ரஷ்ய இளம் சக்கரவர்த்தியான மகா பீட்டர் , ஒருகடல்  மார்க்கத்தை, - ரஷ்யாவுக்கான  “ஐரோப்பிய நுழைவாயில்” ஒன்றை  நிறுவ வேண்டுமென்பதைத் தன்  கனவாகக் கொண்டார்.  சுவீடன் வசமிருந்த பால்டிக் கடலோரப் பகுதியின் மீது அவரது பார்வை விழுந்தது..தன் கனவை நனவாக்க ஆகஸ்ட் 1700-இல், சுவீடன் மீது போர் தொடுத்தார் பீட்டர்,...பலப்பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக ஸ்வீடனை வெற்றி கொண்டு மே 16, 1703-இல், சுமார் 300 வருடங்களுக்கு முன், பீட்டர்-பால் கோட்டை என இன்று அழைக்கப்படும் கோட்டைக்கு மகா பீட்டர் அடிக்கல் நாட்டினார்.  செயிண்ட்பீட்டர்ஸ்பர்க்  நகரம், அதிகாரபூர்வமாக  நிறுவப்பட்ட நாளும் இதுவே..


ஒரு புதிய நகரமாக உருவாகிய செயிண்ட்பீட்டர்ஸ்பர்கின் அழகுக்குக் கூடுதல்  அழகு சேர்ப்பவை அங்குள்ள  ஏராளமான வாய்க்கால்கள் மீதும், கால்வாய்கள் மீதும் கட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள். இது பற்றியே . பீட்டர்ஸ்பர்க் “வடக்கு வெனிஸ்” என்றும் வருணிக்கப்பட்டிருக்கிறது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும், திறமைமிக்க ரஷ்ய கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும் சேர்ந்து பீட்டர்ஸ்பர்கை “ஐரோப்பாவிலுள்ள மிக அற்புதமான நகரங்களில் ஒன்றாகவும், நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரமாகவும்” உருவாக்கியிருக்கிறது.

தனது ‘இரட்டையர்’ [THE DOUBLE] நாவலுக்கு ’’பீட்டர்ஸ்பர்க் கவிதை’’  என்றே மாற்றுப்பெயர் தரும்அளவுக்கு தஸ்தயெவ்ஸ்கியின் மனம் கவர்ந்த அந்த அழகிய நகரத்தில் நாங்கள் நுழைந்தபோது மாலை ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தபோதும் அப்போது ’’வெண்ணிற இரவுகளின்’’ காலம் என்பதால் கதிரவனின் ஒளி மங்காமல் வீசிக்கொண்டிருந்தது....வெண்ணிற இரவுகள் என்பது தஸ்தயெவ்ஸ்கி  எழுதிய புகழ் பெற்றநாவல்....கோடை காலங்களில்  ஆறு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இருட்டையும் பட்டப்பகல் போன்ற வெளிச்சமான  இனிய  இரவுப்பொழுதையும் குறிக்கும் சொல் அது...அதைச்சார்ந்த பல சுவாரசியமானசெய்திகளைக் கூறியபடியே  எங்களை மிக அழகான நேவா ஆற்றுப்பாலம் ஒன்றின் கரையில் அமைந்திருந்த தெருவுக்குக் கூட்டி வந்து சேர்த்தார்..பீட்டர்ஸ்பர்கின் வழிகாட்டி. காதரினா. .பீட்டர்ஸ்பர்க் நகரின் உயிர்ப்பான இடங்களனைத்தையும் ஒருசேரக்காணும் வண்ணம் அமைந்திருந்த அந்த அழகிய அகன்ற  தெருவில் ஒரு புத்தகக்கண்காட்சியும் கூட நடைபெற்றுக்கொண்டிருந்தது... உணவு விடுதிகளின் வெளியே வண்ணக்குடைகளின் கீழ் அமர்ந்தபடி உணவையும் நட்பையும் ஒரு சேர ரசித்து அனுபவித்துக்கொண்டிருந்த மனிதர்கள்..!!..அங்கேயுள்ள ஜெய்ஹிந்த் என்னும் இந்திய  உணவு விடுதிக்கு நாங்கள் சென்றோம்...இந்தியாவிலிருந்து - குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அங்கே மருத்துவக் கல்வி பயில வந்து பகுதி நேரமாக உணவகப்பணி செய்து கொண்டிருந்த தமிழ்மாணவர்கள் எங்களை அன்போடு வரவேற்றதிலேயே பாதி வயிறு நிறைந்து போக உணவு வேலையை முடித்துக்கொண்டு வாஸிலெவ்ஸ்கி தீவுப்பகுதியில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதிக்குச்சென்றோம்...இன்று நள்ளிரவாகி இருக்கவில்லை என்றாலும் கதிரவனின் ஒளி மறையும் வரை வெண்ணிற இரவுகளில் மனதை அலைய விட்டபடி  கண்களை உறக்கம் தழுவ மறுத்துக்கொண்டுதான் இருந்தது,,,

5.10.16

ரஷ்யப்பயணம்- தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-4

நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரையின் நான்காம் பகுதி

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-4


செஞ்சதுக்கத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தபடி மதிய உணவுக்காக சிறப்புப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது எங்கள் குழுவினரிடம் ஒரு சிறு கவலையும் கூடக் குடியிருந்தது… குறிப்பாக மரக்கறி உணவை மட்டுமே உட்கொள்ளும் எனக்கு!
ரஷ்யப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பே - என் தோழியர் பலரும் அங்கே இந்திய உணவு - குறிப்பாக சைவ உணவு கிடைப்பது கடினம் என்று பல முறை என்னை பயம் காட்டியிருந்தனர். அதனால் நானும் கொதிக்கும் நீரில் போட்டு உடனடியாக உண்ணக்கூடிய ஆயத்த உணவு வகைகள் பலவற்றையும் உடன் எடுத்துச் சென்றிருந்தேன்… ஆனால் முதல் நாள் இரவு மாஸ்கோவில் நாங்கள்
தங்கியிருந்த அஸிமுட் விடுதியோடு இணைந்து இந்திய உணவகம் இருந்ததால் எப்படியோ தப்பி விட்டோம்.
இப்போது அந்த இடம் வரை மீண்டும் செல்வது இயலாதது என்பதால், உணவுக்காக  எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பது புரியாதவர்களாக நாங்கள் இருக்க, சென்னையிலிருந்து உடன் வந்த எங்கள் சுற்றுலாக்குழுவின் தலைவரும் உள்ளூர் வழிகாட்டியும் ஓர் இந்திய வடநாட்டு உணவகத்துக்கு எங்களைக் கொண்டு வந்து சேர்த்தபோது வியப்புக்கலந்த மகிழ்ச்சி எங்களை ஆட்கொண்டது. சுட்ட சுக்கா ரொட்டி… வெண்ணெய் தடவிய ரொட்டி, சீரகம் கலந்த பாசுமதிச் சோறு, பன்னீர்க்குழம்பு, ராய்தா எனப்படும் தயிர்ப்பச்சடி இவை பரிமாறப்பட்டபோது ஏதோ காணாதது கண்டது போல ஓர் உணர்வு! சோறு விரைத்துப் போய் விதை விதையாக இருந்தாலும் தயிரோடு கலந்து விழுங்கி விட்டு இரண்டு சுக்கா ரொட்டிகளையும் சாப்பிட்டு சுருக்கமாக மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன்.
மதிய உணவு மிகுதியானால் ஓய்வெடுக்க உள்ளம் தூண்டும், சுற்றுலாவிலிருந்து கவனம் சிதறும் என்ற என் வழக்கமான போக்கைப் பொதுவாக எல்லாப் பயணங்களிலும் சற்று  விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பது என் வழக்கம். குறிப்பாக இப்படிப்பட்ட அரிதான பயணங்களின்போது பசிக்களைப்பில்லாமல் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உணவைக் கருதவேண்டுமே தவிர, அதை ஒரு விருந்து போல ஆக்கிக்கொண்டு அசந்து போய்விடுவது பயண நோக்கத்தையே பாழ் செய்து விடக்கூடியது.
எங்கள் ரஷ்ய சுற்றுலாவின் இரண்டாம் நாளான அன்று (24ஜூலை) மாலை அருங்கலைக்காட்சியகம் ஒன்றைக் காண்பதும் மாலை ஏழு மணி அளவில் ரஷ்ய நாட்டின் சிறப்புக்களில் ஒன்றான ரஷிய சர்க்கஸ் காட்சிக்குச் செல்வதும் எங்கள் பயணத்திட்டத்தில் இருந்தவை.
உணவை முடித்துவிட்டுப் பேருந்தில் ஏறப்போகும் நேரம் பார்த்து என்னிடம் பாய்ந்து வந்தார் எங்கள் மாஸ்கோ வழிகாட்டியான டேன்யா. மாஸ்கோ வந்து சேர்ந்த கணம் முதல் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி குறித்து அவரிடம் நான் விடாமல் அரித்தெடுத்துத் துளைத்துக்கொண்டு வந்திருந்தேன். தனிப்பட்ட முறையிலோ கல்விச் சுற்றுலாவாகவோ இல்லாமல் இப்படிப்பட்ட சுற்றுலாக்குழுக்களுடன் செல்லும்போது - குழுவினரோடு மட்டுமே - அதிலும்  பயணத் திட்ட வடிவமைப்பை சார்ந்து மட்டுமே செல்ல முடியும் என்பதையும்  நம் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வது கடினம் என்பதையும் நான் உணர்ந்திருந்தாலும் அவ்வப்போது என் உள்மன விருப்பத்தை - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி சார்ந்த நினைவிடங்களைத் தொலைவிலிருந்தாவது எனக்குக் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் நான் தொடர்ந்து விடுத்தபடியே இருந்தேன்.
அதை நினைவில் கொண்டிருந்த டேன்யா, சாலையின் மறுபுறம் இருந்த ரஷ்ய தேசிய நூலகத்தையும் அதன் முன்பு கம்பீரமாக நின்றிருந்த தஸ்தயெவ்ஸ்கியின் சிலைவடிவையும் எனக்குக் காட்டினார்.



ரஷ்யப்பயணத்தை அந்த இலக்கிய ஆசானுக்காக மட்டுமே மேற்கொண்டிருந்த நான் தொலைவிலிருந்து அதைப் பார்த்தாலும் கூட மெய்சிலிர்த்துப் போனேன். இலக்கியத்தைக் கொண்டாடும் இந்த மண்ணில் - உலகஇலக்கியங்கள் பலவற்றின் ஊற்றுக்கண்ணான இந்த நாட்டில் - அதன் தேசியநூலகத்துக்கு முன்பாக ஒரு மாபெரும் நாவலாசிரியரின் சிலையை வடிவமைத்து வைத்திருந்தது தான் எத்தனை பொருத்தமானது.
சுற்றுலாவில் வழிகாட்டுவது என்பது, தான் மேற்கொண்ட பணியாக இருந்தாலும் அதை ஒப்புக்குச் செய்யாமல் மனம் கலந்து செய்பவர் என்பதைத் தான் அழைத்துச்செல்லும் ஒவ்வொரு இடத்திலும் நிரூபித்துக் கொண்டே வந்தார் டேன்யா. உயரமும் கம்பீரமுமான தோற்றம், ஒரு குழுவைத் தலைமையேற்று நடத்துவதற்கான மிடுக்கான ஆளுமை, அங்கங்கே நேரம் ஒதுக்குவதிலும் நேரக்கணக்கைத் தவறாமல் கடைப்பிடிப்பதிலும் கண்டிப்பு!
எடுப்பான குரலில் அங்கங்கே விரைவாக வழி நடத்திச்செல்லும் அவரது போக்கு, வயதில் மூத்த எங்கள் குழுவினர் சிலருக்கு அதிகார தோரணையாகத் தென்பட்டாலும் ஒரு வழிகாட்டிக்கே இருந்தாக வேண்டிய பொறுப்பையும், கடமையையும் அவர் மிகச் சரியாகச் செய்து வருவதாகவே எனக்குப் பட்டது. கல்லூரியில் பணியாற்றிய நாட்களில் மாணவியரோடு சுற்றுலாக்கள் பலவற்றை ஒழுங்கு செய்து வழி நடத்தியிருப்பதால், எந்த இடத்தையும் நேரம் பிசகாமல் காண்பதற்கும் எவரும் குழுவிலிருந்து பிரிந்து வழி விலகிப்போகாமல் இருப்பதற்கும் அவர் கையாண்ட அந்த வழிகளே முற்றிலும்
சரியானவை என்பதை நான் நன்கு புரிந்து வைத்திருந்தேன்.
இடங்களைக்காட்டி விளக்கம் தருவதோடு மட்டுமல்லாமல் தன் அளவு கடந்த நாட்டுப்பற்றையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் டேன்யா வெளிப்படுத்திக்கொண்டே இருந்ததும் என்னைக் கவர்வதாக இருந்தது.
கார்கி பூங்காவாகட்டும், செஞ்சதுக்கமாகட்டும்... எது பற்றிச்சொன்னாலும் ’இது என் தேசம்’ என்ற பெருமித உணர்வுடன் அதை வெளிப்படையாகச் சொன்னபடியே எங்களுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் கொண்டிருந்தார் அவர். தஸ்தயெவ்ஸ்கி சிலையை என்னிடம் சுட்டிக்காட்டிய அந்த வேளையிலும் கூட "இவர் எங்கள் நாட்டின் இலக்கியச்சொத்து" என்ற பெருமிதம் டேன்யாவிடம் கொப்பளித்துக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அதனாலேதான் அத்தனை நேர நெருக்கடியிலும் என் கோரிக்கையை மறக்காமல் நினைவில் கொண்டபடி தேசிய நூலகத்தின் வாயிலிலுள்ள தஸ்தயெவ்ஸ்கியை அவரால் எனக்கு இனம் காட்ட முடிந்தது. தன் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த அந்த இலக்கிய மேதையின் மீது மொழிதெரியாத  ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்த ஒருவர் அத்தனை ஆர்வம் காட்டுவது அவரை நெகிழ்த்தியிருக்க வேண்டும்.
அடுத்தாற்போல அவர் எங்களை அழைத்துச்சென்ற இடம், மாஸ்கோவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ’ட்ரெட்யகோவ் நுண்கலை அருங்காட்சியகம்’. ரஷ்ய நாட்டு நுண்கலை வேலைப்பாடுகளின் களஞ்சியமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சியகத்துக்குப் பேருந்தை நிறுத்திய இடத்திலிருந்து சற்று நடந்து சென்றபோது காட்சியகத்தில் காணப்போகும் அரிய செய்திகளில் முதன்மையான சிலவற்றைத் தட்டிகளில் எழுதி அந்த வீதியின் குறுக்காக வைத்திருந்தார்கள். தகவல்கள் ரஷ்ய மொழியிலேயே தரப்பட்டிருந்தாலும் நாங்கள் எவற்றையெல்லாம் காணப்போகிறோம் என்பது பற்றிய  முன்னோட்டமாகவே அது அமைந்து விட்டது.


மாஸ்கோ இந்நாட்டின் தலைநகராக இருந்தபோதும், பலநாட்டவரும் பல மொழி பேசுவோரும் வருகை புரியும் இடமாக இருந்தபோதும் அங்கிருந்த எல்லாஅறிவிப்புப் பலகைகளிலும் ரஷ்ய மொழியை மட்டுமே காண முடிந்ததே தவிர அதற்கு இணையான ஆங்கிலச் சொல் உடன் தரப்பட்டிருக்கவில்லை. மின் தூக்கிகள், ஓய்வு/ஒப்பனை அறைகள் ஆகியவை குறித்த அறிவிப்புக்களும் கூட அப்படித்தான். தங்கள் தாய்மொழியை எந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்களென்பதை அது எடுத்துக்காட்டிய போதும் அந்த மொழி தெரியாத பிறநாட்டுப் பயணிகளுக்கு – குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு அது சிக்கலளிப்பதாக இருப்பதை உணர்ந்து ஆங்கிலச் சொற்களையும் அவர்கள்  சேர்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ட்ரெட்யகோவ் அருங்காட்சியகத்துக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது எங்கள் குழுவில் சிலர் காலை முதல் கடும் வெயிலில் வெகு தூரம் சுற்றி அலைந்ததால் களைத்துப் போனவர்களாய் வெளியில் இருந்தபடியே ஓய்வு கொள்வதாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டனர். உள்ளே சென்ற நாங்கள் திரும்பி வந்து அது குறித்த வருணனைகளை அடுக்கிய பிறகுதான் தாங்கள் எதையோ இழந்து விட்டதான உணர்வு அவர்களை ஆட்கொண்டது.
மாஸ்கோ நகரில் பல அருங்காட்சியகங்கள் இருந்தபோதும் அவற்றையெல்லாம் தன்னிடமுள்ள கலைக்கருவூலங்களால் விஞ்சக்கூடிய தன்மை படைத்ததாக விளங்குவது ட்ரெட்யகோவ் நுண்கலை அருங்காட்சியகம்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரிலுள்ள லூவ் அருங்காட்சியகத்துக்கு ஓரளவு சமமாகும் தன்மை கொண்ட இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க ஓரிரு மணிநேரம் மட்டுமே செலவிடுவது நிச்சயமாக அதற்கு நியாயம் சேர்க்க முடியாது என்றாலும் எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறைந்த பட்ச நேரத்தில் முடிந்தவரை சுற்றிப்பார்த்து அங்கிருந்த அருங்கலைப் பொக்கிஷங்களைக் கண்டு ரசிக்க நாங்கள் தவறவில்லை. 
மாஸ்கோ நகரைச் சேர்ந்த பேவல் மிகேலோவிச் ட்ரெட்யகோவ், ஒரு வணிகர்; அதே நேரத்தில் அவர் கலைகளின் காதலரும் கூட! 1856 இல் தொடங்கி ரஷ்யநாட்டுக் கலைஞர்களிடமிருந்து  விலை கொடுத்து வாங்கித் தான் சேமித்து வந்த கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை இந்நாட்டுக்கே உரியசொத்தாக 1892 இல் அவர் வழங்கி விட ரஷ்ய பாணிக் கலைகளின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஒரு காட்சியகம்  உருப்பெறத் தொடங்கியது. க்ரெம்லினின் தெற்குப் பகுதியில் ரஷ்ய நாட்டு தேவதைக் கதைகளில் இடம் பெறும் வீடுகளின் பாணியில் 1902–04 காலகட்டத்தில் இக்கட்டிடம் முழுமையாக வடிவமைக்கப்பட்டுக் காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் வாழும் பெரும்பாலோருக்கும் ரஷ்யக்கலைப் பெருமைகள் இருபதாம் நூற்றாண்டு வரை மூடப்பட்ட புத்தகம் போலவே இருந்தன. உலகத்தாரால் மிகுதியும் அறியப்படாததாக இருந்த அவையனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது இந்தக்காட்சியகம் உருவான பிறகுதான்.
10 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரையிலான  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களும் சிற்பங்களும் ரஷ்யக்கலையின் படிப்படியான வளர்ச்சியையும் வெவ்வேறு காலகட்டங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கங்களில் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் வெளிப்படுத்தியபடி  காட்சியகத்தில் உள்ள 62 அரங்குகளையும் அலங்கரித்து வருகின்றன. முழுக்க முழுக்க ரஷ்யத் தன்மை கொண்டவை என்றே அவற்றைக் கூறி விடலாம்.  மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்தவை, போர்க்கொடுமைகளைக் காட்டுபவை,

இம்ப்ரஷினிச பாணி ஓவியங்கள், நிலப்புரபுத்துவ கால கட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய  அடிமை முறையை வெளிக்காட்டி அதன்  அவலங்களைச் சித்திரிக்கும் ஓவியங்கள், செவ்வியல் மற்றும் கற்பனாவாத பாணியைச் சேர்ந்தவை எனப் பலதரப்பட்ட
வகைப்பாடுகள் கொண்டவை அவை.

ட்ரெட்யகோவ் இயற்கையை மிகவும் நேசித்தவரென்பதால் பனி மூடிய மலைச்சிகரங்கள், குமுறும்கடல், பசுமை போர்த்தியிருக்கும் காடுகள், ஆறுகள், வானத்தின் பல வண்ணங்கள் என இயற்கைக் காட்சிகளுக்கும் அங்கே பஞ்சம் இல்லை. அருங்கலைப்பொருட்களை நேசித்ததோடு மட்டுமன்றி சிறந்த ஓவியத்திறமை கொண்டவர்களைத் தன்னிடம் அழைத்து அவர்களுக்கு உரிய சன்மானம் தந்து இந்நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளான தல்ஸ்தோய், தஸ்தயெவ்ஸ்கி, துர்கனேவ் ஆகியோரின் ஓவியங்களையும் வரையப் பணித்தார் ட்ரெட்யகோவ். அந்தப் படைப்பாளிகளின் புத்தக முகப்பட்டைகள் பலவற்றை இன்றுவரையிலும் அலங்கரித்து வருபவை அந்த ஓவியங்களே.


ரஷ்யப்புரட்சி மலர்ந்து சோவியத் யூனியன் உருவான பின்பு சோஷலிசக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்புக்களும் நவீன பாணிக் கலைப்படைப்புக்களும் கூட இந்தக்காட்சியகத்தில் இடம் பெறத் தொடங்கின.
சமயச்சார்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் காட்சியகத்தின் முதல் தளத்தில் திருமுழுக்கு செய்பவரான ஜான் என்னும் புனிதர், மீட்பர் ஏசுவின் வரவைச் சுட்டிக்காட்டுவதான மிகப்பெரிய ஓவியம் ஒரு சுவர் முழுவதையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் தீட்டப்பட்டிருக்கும் அந்த வண்ண ஓவியத்தின் அருகே எங்கள் குழுவினர் பலரும் ஆர்வத்தோடு புகைப்படம்  எடுத்துக்கொண்டனர். 

காட்சியகத்தின் இரண்டாம்  தளம் இயற்கைச் சித்திரிப்புக்களுக்கானது.
2012ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தும் போரிஸ் ஜெஃப்லேண்டும் பங்கு பெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியும் கூட இந்தக்காட்சியகத்தின் ஓர் அரங்கிலே நடைபெற்றிருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
அருங்காட்சியகத்தைப்பார்த்து முடித்து வெளியே வந்தபின் சிறிது நேரம் அருகிலிருந்த கலைப்பொருள் விற்பனைக் கடை ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தது. ரஷ்யாவுக்குச்சென்று வந்ததன் அடையாளமாக ஏதேனும் வாங்கிச் செல்ல நினைத்தால் அவை பொம்மைகள் மட்டும்தான். மரத்தில் செய்யப்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக அடக்கப்பட்டிருக்கும் வினோத அமைப்புக்கொண்ட அந்த பொம்மைகள் பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமாகக் கடைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன.
இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக நாங்கள் காண இருந்தது ரஷ்யநாட்டு சர்க்கஸ் காட்சி. சர்க்கஸ் கலைக்கும், அதை மிக நுட்பமாகப் பயின்று லாவகமாக வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கும் பெயர் பெற்ற நாடு ரஷ்யா. என் இளம் வயதில் நான் வசித்த சிறு நகரத்தில் மணல் பரப்பிய பொட்டல் வெளியில் கூடாரம் அடித்தபடி எந்தக் குழுவினர் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினாலும் அது ரஷ்யன் சர்க்கஸ் என்றே விளம்பரப்படுத்தப்படும்; அந்த அளவுக்கு  இந்தநாட்டின் இன்னொரு தனித் தன்மையாக விளங்குவது சர்க்கஸ் கலை. 
நாங்கள் சென்ற சர்க்கஸ் அரங்கம் குளிரூட்டப்பட்ட ஓர் உள்ளரங்கம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

குழுவில் என்னுடன் வந்திருந்த தோழி ஒருவர் மிகுந்த ரசனையோடு அவற்றில் லயித்திருக்க… எனக்கோ, காலை முதல் சுற்றி அலைந்த களைப்பில் கண் செருகிக் கொண்டு செல்ல, பயங்கரமான  தூக்கத்தின்
வயப்பட்டிருந்தேன்; அந்தத் தோழி பல முறை பல விதமாகச் சுண்டி எழுப்பிப் பார்த்தும் என் துயில் கலைவதாக இல்லை. அதற்கு இன்னொரு காரணமும் கூட உண்டு. சிறுவயது முதலே சர்க்கஸ் காட்சிகள் எனக்கு உகப்பானதாக இருந்ததில்லை; அதுவும் ஒரு கலையே என்ற அளவில் அதை மதித்தாலும் கூட மனிதர்கள் இவ்வாறு தங்களையும் துன்பப்படுத்திக் கொண்டு வாயில்லா ஜீவன்களையும் துன்புறுத்துவதை சகிக்க முடியாததால் பள்ளி நாட்களிலேயே சர்க்கஸ் செல்வதை நான் தவிர்த்து விடுவேன்… இங்கும் கூட யானை, குரங்கு, பூனை, நாய் ஆகியவற்றை வைத்து வினோத வினோதமாய் வித்தை காட்டும் விளையாட்டுக்கள் பலவும்  அரங்கேறிக் கொண்டிருந்தன.
ஒரு வழியாகப் பத்தரைக்கு அது நிறைவுக்கு வர நாங்கள் அஸிமுட் விடுதியோடு இணைந்த இந்திய உணவகத்துக்குச் சென்றோம். திருநெல்வேலியைச் சேர்ந்த அந்த உணவகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவர் சூடான சோறு, மிளகு ரசம், இட்லி ஆகியவற்றுடன் எங்களை வரவேற்றபோது நாம் இருப்பது ரஷ்யாவில் தானா! என்று கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது...
இன்றும் அறைக்குச் சென்று பொருட்களை ஒழுங்கு படுத்தி உறங்கும்போது நள்ளிரவாகி விட்டிருந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....