மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தைப்போல ரஷ்ய நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுக்கெல்லாம் களனாக, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் நடுநாயகமாக அமைந்திருப்பது அரண்மனைச்சதுக்கம் [ Palace Square ]. குளிர்கால அரண்மனைக்கு நேர் எதிரே 580 மீட்டர் பரப்பளவில் அரைவட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்தச் சதுக்கத்தில் வெற்றியைக் குறிக்கும் ஒரு தோரண வாயிலும் கூட உண்டு. பேரணிகளும் திருவிழாக்களும் நடைபெறுவதற்கு ஏற்ற இடமாகக் கருதப்படும் அரண்மனைச்சதுக்கத்தில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் புரட்சியாளர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால் இரத்த ஆறும் கூட ஓடியதுண்டு. இந்திய விடுதலைப்போரின்போது நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு நிகரான அந்தச்சம்பவம் ‘குருதிக்கறை படிந்த ஞாயிற்றுக்கிழமைப்படுகொலை’ [Bloody Sunday massacre] என்றே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. தற்போது புத்தாண்டு விழாக்கள்,வெற்றி விழாக்கள், வெண்ணிறஇரவு நாட்களின் களியாட்டங்கள் ஆகியவை நிகழும் இடமாக இருக்கும் இந்தச் சதுக்கத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவமைப்புக் கொண்ட அந்தக் காலத்துக் கோச்சு வண்டிகள் பலவும் கண்ணில் பட்டு மீண்டும் ரஷ்யப் புனைகதைகளுக்குள் சிறிது நேரம் பயணம் செய்ய வைத்தன. எல்லா சுற்றுலாப்பகுதிகளையும் போலப் பயணிகள் அவற்றில் ஏறி சவாரி செய்ய முந்திக்கொண்டும் இருந்தனர்.
ரஷ்யப்பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஷ்யப்பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
19.11.16
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-8
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த மூன்றாம் நாள்! அன்றைய எங்கள் பயணத் திட்டம் அங்கிருந்த மாளிகைகளுக்கானது. பீட்டர்ஸ்பர்க் நகரம், ஆலயங்கள் மற்றும் அழகான கட்டிடங்களின் இருப்பிடம் மட்டுமல்ல. எழில் வாய்ந்த மாளிகைகள் பலவற்றின் நகரமும் கூடத்தான். ஜார் மன்னர்களும் அவர்களின் சந்ததியரும் அரசாண்ட பல்வேறு காலகட்டங்களில் அவரவர் ரசனைக்கும் , கண்ணோட்டத்துக்கும் ஏற்றபடி - அந்தந்தப் பருவநிலை மாற்றங்களுக்கேற்பப் பல மாளிகைகளை உருவாக்கி அவற்றில் சுகபோகமான பகட்டான வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் பல இன்றளவும் நினைவுச்சின்னங்களாகவும் அருங்காட்சியகங்களாகவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மிக்கேலாவ்ஸ்கி மாளிகை, ஸ்டோகனோவ் மாளிகை, யுசுபோவ் மாளிகை, நிகோலெவ்ஸ்கி மாளிகை, மகா பீட்டரின் கோடைகால அரண்மனை, குளிர்கால அரண்மனை என்று நகருக்கு உள்ளேயும் அருகாமையிலும் நிறைந்து கிடக்கும் மாளிகைகளில், நகர்ப்புறத்திலிருந்த கோடைகால மாளிகை ஒன்றும் நகரின் மையப்பகுதியில் அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் குளிர்கால மாளிகை ஒன்றும் நாங்கள் காண்பதற்காகத் தேர்வு செய்யபட்டிருந்தன.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து அரை மணிநேரப் பயணத்தில் புறநகர்ப்பகுதி ஒன்றில் இருப்பவை பீட்டர்ஹாஃப் கோடை மாளிகைகளும் அதை ஒட்டிய அரண்மனைத் தோட்டங்களும். முதலில் அதைக் காண்பதற்காகச் சென்றோம்…
பெட்ரோட்வோரெட்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விஸ்தாரமான பகுதி இங்குள்ள அரசமாளிகைகளுக்கெல்லாம் உச்சமாய் அமைந்திருப்பது; கடல்மட்டத்திலிருந்து சற்றே உயரத்தில் செங்குத்தான மேட்டின் மீது கம்பீரமாக நின்றிருக்கும் ‘கிராண்ட் பேலஸ்’, அதற்குக் கீழே அடுக்கடுக்கடுக்காய்ச் சரிந்து செல்லும் மேடுகளிலும் கீழே உள்ள சமதரைகளிலும் இருக்கும் நேர்த்தியான வடிமைப்புடன் கூடிய புல்வெளிகள், வகை வகையான பூந்தோட்டங்கள்… கண்கவரும் நீரூற்றுக்கள், சின்னச் சின்ன நீர்வீழ்ச்சிகள்… அற்புதமான பல குட்டிக்குட்டி மாளிகைகள்..., தங்க முலாம் பூசப்பட்டுத் தகதகக்கும் பல சிலைவடிவங்கள்… இவற்றோடு காட்சி தரும் பீட்டர்ஹாஃப், ஃபிரான்ஸ் நாட்டிலிருக்கும் வர்செயில்ஸ் மாளிகைக்கு நிகரானதாக… ‘ரஷ்யாவின் வர்செயில்ஸ்’ என்றே வழங்கப்படுகிறது. கலை எழில் கொஞ்சும் இந்த இடம் யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சாரச்சின்னங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பெற்றிருக்கிறது.
பீட்டர்ஸ்பர்கின் நகர்ப்புறத்தில் வர்செயில்ஸ் போன்ற மாபெரும் அரசத் தோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சக்கரவர்த்தி பீட்டர் கொண்டிருந்த குன்றாத ஆர்வத்தாலும் அவரது இடையறாத உற்சாகத்தாலும் தொடங்கப்பட்ட இந்த மாளிகை அமைப்புக்களின் கட்டுமானப்பணி 1725இல் அவர் மரணமடந்ததற்குப் பிறகு நின்று போய் விட, கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றுவிட்ட பீட்டர்ஹாஃப், அவரது மகளான எலிஸபெத் ஆட்சிக்கு வந்த பிறகே [1740] புத்துயிர் பெறத் தொடங்கியது. 18,19ஆம் நூற்றாண்டுகளில் மேன்மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட இந்தப்பகுதி, காதரீன் பேரரசியின் ஆட்சிக்காலத்தில் அவரது ரசனைக்கேற்ற முத்திரைகளைத் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மானியத் துருப்புக்களால் சூறையாடப்பட்ட நகரின் பிற புறநகர்ப்பகுதிகளைப்போலவே பீட்டர்ஹாஃபும் சீர்குலைக்கப்பட்டபோதும் இராணுவப்பொறியாளர்களின் அயராத உழைப்பால் வெகு விரைவாகவே சீரமைக்கப்பட்டு 1945க்குள் இயல்புநிலைக்குத் திரும்பி விட்டது ஓர் அதிசயம் என்றே கூற வேண்டும்.
பீட்டஹாஃபின் பிற மாளிகைகளுக்கெல்லாம் நடுநாயகமாக அதன் இதயம் போன்றிருக்கும் ‘கிராண்ட் பேலஸை’ப் பார்த்தபின்பு வேறு இடங்களைப் பார்க்கலாம் என எங்கள் வழிகாட்டி கூறியபடி, முதலில் அந்த மாளிகைக்குள் நுழைந்தோம். மகாபீட்டரின் காலத்தில் நீளமும் குறுகலுமாய் அமைந்திருந்த அந்த அரண்மனையின் பழைய கட்டிடக்கலை அமைப்பை அதிகம் மாற்றாமல் தன் கலைநுட்பத்தேர்ச்சியால் அதற்கு அழகும் மெருகும் ஊட்டியவர் பார்டோலோமியோ ரஸ்ட்ரெல்லி என்னும் கட்டிடக்கலை நிபுணர்.
பீட்டர் சக்கரவர்த்தியின் மகள் எலிஸபெத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப்பணியை மேற்கொண்ட அவர் மூலக்கட்டிடத்தின் சிறகுகள் போல அதன் இரு புறமும் தங்க முலாமிட்ட அரங்குகளை அமைத்து அதற்கொரு கம்பீர வடிவம் அளித்தார். அதை ரசித்தபடியே மாளிகைக்குள் பிரவேசித்தால்…. ஜார் மன்னர்கள் நடத்தியிருக்கும் பகட்டும் படாடோபமுமான மித மிஞ்சிய செல்வச்செழிப்போடு கூடிய வாழ்க்கைக்கு சாட்சியாகவே க்ரேண்ட் பேலஸின் ஒவ்வொரு அறையும் அமைந்திருந்ததைக் காண முடிந்தது.
ரஸ்ட்ரெல்லியின் கைவண்ணத்தில் அலங்காரமான தோற்றப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளைவான மாடிப்படிகளே தொடர்ந்து நாம் காண இருக்கும் ஆடம்பரமான காட்சி அமைப்புக்களுக்குக் கட்டியம் கூறி விடும். படிகளில் மேலேறிச்சென்றதுமே நம்மை மலைப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்துவது ‘பால்’ நடனம் [ballroom dance] ஆடுவதற்கான மிகப்பெரிய கூடம். தங்கத்தின் மீது மிகப்பெரும் பித்துக்கொண்டிருந்தவளாகச் சொல்லப்படும் மகாபீட்டரின் மகள் எலிஸபெத், பொன்னாலேயே இழைத்து இழைத்து உருவாக்க வைத்திருக்கும் அந்த அறையைக் கடந்தால், வெண்மை கலந்த மயிற்கழுத்து நிறத்தோடு கூடிய ஆட்சிகட்டில் உள்ள அரங்கம், சீனப்பட்டில் செய்த திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் வரவேற்பறை, ஓக் மரத்தால் இழைத்துச் செய்யப்பட்ட இருக்கைகளும் சுவரலமாரிகளும் கொண்ட படிக்கும் அறை, மன்னர்கள்…அரசியர் ஆகியோரின் படுக்கை அறைகள் என்று காட்சிகள் தொடர்ந்து கொண்டேசெல்கின்றன. ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே நிகழ்ந்த கடற்போரைச் சித்தரிக்கும் ஓவியங்கள் பல ’செஸ்மா’ அரங்கை நிறைத்திருக்கின்றன. இவான் ஐவஸோவ்ஸ்கியால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ’ஓவியக்கூடம்’[picture hall] என்றே பெயர் பெற்றிருக்கும் ஓர் அரங்கம் முழுவதும் விதம் விதமான வண்ண உடையணிந்து வெவ்வேறு கோலங்களில் காட்சி தரும் 368 பெண்களின் வண்ண ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தனை ஓவியங்களுக்கும் ‘மாதிரி’யாக [model] இருந்தவர் ஒரே ஒரு பெண்தான் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.

பீட்டர் சக்கரவர்த்தியின் மகள் எலிஸபெத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப்பணியை மேற்கொண்ட அவர் மூலக்கட்டிடத்தின் சிறகுகள் போல அதன் இரு புறமும் தங்க முலாமிட்ட அரங்குகளை அமைத்து அதற்கொரு கம்பீர வடிவம் அளித்தார். அதை ரசித்தபடியே மாளிகைக்குள் பிரவேசித்தால்…. ஜார் மன்னர்கள் நடத்தியிருக்கும் பகட்டும் படாடோபமுமான மித மிஞ்சிய செல்வச்செழிப்போடு கூடிய வாழ்க்கைக்கு சாட்சியாகவே க்ரேண்ட் பேலஸின் ஒவ்வொரு அறையும் அமைந்திருந்ததைக் காண முடிந்தது.
ரஸ்ட்ரெல்லியின் கைவண்ணத்தில் அலங்காரமான தோற்றப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளைவான மாடிப்படிகளே தொடர்ந்து நாம் காண இருக்கும் ஆடம்பரமான காட்சி அமைப்புக்களுக்குக் கட்டியம் கூறி விடும். படிகளில் மேலேறிச்சென்றதுமே நம்மை மலைப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்துவது ‘பால்’ நடனம் [ballroom dance] ஆடுவதற்கான மிகப்பெரிய கூடம்.
தங்கத்தின் மீது மிகப்பெரும் பித்துக்கொண்டிருந்தவளாகச் சொல்லப்படும் மகாபீட்டரின் மகள் எலிஸபெத், பொன்னாலேயே இழைத்து இழைத்து உருவாக்க வைத்திருக்கும் அந்த அறையைக் கடந்தால், வெண்மை கலந்த மயிற்கழுத்து நிறத்தோடு கூடிய ஆட்சிகட்டில் உள்ள அரங்கம், சீனப்பட்டில் செய்த திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் வரவேற்பறை, ஓக் மரத்தால் இழைத்துச் செய்யப்பட்ட இருக்கைகளும் சுவரலமாரிகளும் கொண்ட படிக்கும் அறை, மன்னர்கள்…அரசியர் ஆகியோரின் படுக்கை அறைகள் என்று காட்சிகள் தொடர்ந்து கொண்டேசெல்கின்றன. ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே நிகழ்ந்த கடற்போரைச் சித்தரிக்கும் ஓவியங்கள் பல ’செஸ்மா’ அரங்கை நிறைத்திருக்கின்றன. இவான் ஐவஸோவ்ஸ்கியால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ’ஓவியக்கூடம்’[picture hall] என்றே பெயர் பெற்றிருக்கும் ஓர் அரங்கம் முழுவதும் விதம் விதமான வண்ண உடையணிந்து வெவ்வேறு கோலங்களில் காட்சி தரும் 368 பெண்களின் வண்ண ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தனை ஓவியங்களுக்கும் ‘மாதிரி’யாக [model] இருந்தவர் ஒரே ஒரு பெண்தான் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.
பீட்டர் பேரரசர் தொடங்கி அவரது மகள் எலிஸபெத், பிறகு வந்த பேரரசி காதரீன் எனப் பல்வேறு ஆட்சியாளர்களின் உருவப்படங்களும் ஓர் அரங்கில் இருந்தன… அவற்றைக் காட்டியபடியே அரச பரம்பரைக்குள் ஆட்சி பீடத்துக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கும் பதவிப்போட்டிகள்…அவற்றின் தொடர்ச்சியாக நிகழ்ந்த படுகொலைகள்..வேறுவகையான அவலங்கள் என்று வரலாற்றுச்சம்பவங்கள் பலவற்றையும் கதை போல சுவாரசியமாக விவரித்துக்கொண்டேசென்றுகொண்டிருந்தார் எங்கள் வழிகாட்டி….
மாளிகையிலிருந்து படி இறங்கி வெளிவந்தபோது என் உள்ளம் கலவையான உணர்வுகளால் நிரம்பிக்கிடந்தது… கலை…. அதன் எழிலார்ந்த வெளிப்பாடு இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் திகட்டும் செல்வச்செருக்கோடும் மிகையான படாடோபங்களோடும் அகந்தையான ஆடம்பரங்களோடும் அது வெளிப்படும்போது அதோடு ஒட்ட மனம் மறுக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்….
நடுப்பகல் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்க, பீட்டர்ஹாஃபில் நாங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டிய தோட்டங்களும் நீரூற்றுக்களும் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. நகரத்துக்குச்சென்று சேரவே நேரமாகும் என்பதால் பகல் உணவு நேரம் தவறுவதற்குள் நாங்கள் அவற்றைப் பார்க்காமல் கிளம்பி விடுவதே நல்லது என்று வழிகாட்டி சொல்ல அவருக்கும் சென்னையிலிருந்து உடன் வந்திருந்த எங்கள் சுற்றுலாக்குழுத் தலைவருக்கும் இடையே சிறியதாய் ஒரு வாக்கு வாதம் நிகழ்ந்தேறியது… பீட்டர்ஹாஃப் வரை வந்து விட்டு அங்கே தவறவிடாமல் பார்த்தாகவேண்டிய தோட்டங்களையும் நீரூற்று, நீர்வீழ்ச்சி முதலியவற்றையும் பார்க்காமல் எங்களைத் திரும்ப அழைத்துச்செல்ல எங்கள் குழுத் தலைவருக்குச் சற்றும் மனம் இல்லை; விடாப்பிடியாக உள்ளூர் வழிகாட்டி காதரீனாவிடம் அதற்காக வாதாடி எங்களுக்கு நாற்பது நிமிடங்களைப் பெற்றுத் தந்தார் அவர்… அந்த நாற்பது நிமிடங்களை மட்டும் நாங்கள் பெறத் தவறியிருந்தால் மிகச்சிறந்த காட்சி இன்பங்களை இழந்திருப்போம் என்பது மாளிகையிலிருந்து சரிந்து செல்லும் பாதைக்குள் கால் பதித்ததுமே புலனாகி விட்டது…
மைசூரிலுள்ள பிருந்தாவனத் தோட்டத்திலும் வேறு பல சுற்றுலாப் பகுதிகளிலும் வழக்கமாக நாம் பார்க்கும் நீரூற்றுக்களுக்கும், க்ரேண்ட் பேலசிலிருந்து கீழே தரைப்பரப்பு வரை பல்வேறு மட்டங்களில் பொங்கிப்பெருகிக்கொண்டிருக்கும் நீரூற்றுக்களுக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பீட்டர்ஹாஃபின் மிகச்சிறந்த தனித்துவம் என்றே குறிப்பிடும் அளவுக்குப் பல வகைகளிலும் படைப்புத் திறனின் வெளிப்பாடுகளாகவே இந்த நீரூற்றுக்கள் அமைந்திருக்கின்றன. நீரை மேல்நோக்கி எழச்செய்யும் செயற்கையான விசைக் குழாய்கள், அழுத்தும் பொறிகள் என ஏதும் இன்றி, எந்த உயரத்தில் - எந்த மட்டத்தில் ஒரு நீரூற்று உள்ளதோ அந்த உயரத்தின் ஏற்றத் தாழ்வு காரணமாக ஏற்படும் ஈர்ப்பு விசையால் மட்டுமே அந்த நீரூற்று தானாக இயங்குவதென்பது மிகவும் விந்தையானது. இங்குள்ள பெரும்பாலான நீரூற்றுக்களும் வடிவமைக்கப்பட்டிருப்பது அந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேதான். வினோதமான வடிவங்களில் அமைந்து பார்வையாளர்களை வியப்பில் மட்டும் அல்லாமல் நீர்க்குளியலிலும் ஆழ்த்தி விடும் ஊற்றுக்களும் இங்கே நிறையவே உண்டு.
செங்குத்தான அச்சில் வட்டவடிமாகச் சுழலும் தகட்டின் விளிம்புகளிலிருந்து தெறிக்கும் நீர்த் திவலைகள் சூரியக்கதிர் போலத் தோற்றமளிப்பதால் ‘சூரியன்’ என்ற பெயர் கொண்ட நீரூற்று, ’ஆதாம்’, ‘ஏவாள்’ பெயர்களைத் தாங்கியபடி தோட்டத்தின் இரு ஓரங்களிலும் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் நீரூற்றுக்கள், சிங்கத்தின் வாயை சாம்சன் பிளப்பது போன்ற தோற்றத்துடனிருக்கும் சாம்சன் நீரூற்று ஆகியவை நம்மை மலைக்கச் செய்பவை. ரஷ்யா ஸ்வீடனை வெற்றி கொண்டதன் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கும் சாம்சன் நீரூற்றில் பிளந்த சிங்கத்தின் வாயிலிருந்து இருபது மீட்டர் தொலைவு வரை நீர் செங்குத்தாகப் பீய்ச்சியடிக்கிறது…
மரங்களின் வடிவத்திலும் குடை போலவும் அமைக்கப்பட்டிருக்கும் சில நீரூற்றுக்கள் அவற்றை நெருங்கிய அளவிலேயே நம் மீது நீரை அள்ளிச்சொரிந்தபடி நம்மை மகிழ்வில் ஆழ்த்துபவை. பழக்கூடை தாங்கிய மேசை போன்ற ஒரு அமைப்பு……அதிலுள்ள பழத்தை எடுக்க முற்பட்டால் போதும்….உடனே ஒரு குட்டி நீர்வீழ்ச்சி நம்மை நனைத்துவிட்டுப்போகும்…
இவற்றையெல்லாம் விட இறுதியாக சம தளப்பகுதிக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் கண்ட நீரூற்று மிக மிக விசித்திரமானது…சிறிதும் பெரிதுமாய்க் கூழாங்கற்கள் பாவியிருக்கும் சதுரவடிவமான ஒரு தரைப்பகுதி…அந்தக்கற்களின் மீது நாம் கால் பதித்த மாத்திரத்தில் – அந்த அழுத்தம் ஒன்றினாலேயே கீழிருந்து மேல்நோக்கிப் பீறிட்டு வரும் நீர் நம்மை முழுமையாக நனைத்து விட்டுப்போகும்.அந்த நீர்விளையாட்டில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்த காட்சி கண்டு என் வயதை மறந்து நானும் கூடக் குழந்தையாகிப் போனேன்… ஈரம் படிந்த கல்லில் நான் வழுக்கிக்கொண்டு விடக்கூடாதே என்று எங்கள் குழு நண்பர்கள் கவலையோடு தடுத்தும் கேட்காமல் அந்த சதுரத்தரைக்கற்களில் கால் வைத்துப் பொங்கி வரும் நீரில் நனைந்து திளைத்தேன்… அப்போது அங்கே அடித்துக்கொண்டிருந்த கடும் வெயிலுக்கு அது வெகு சுகமாய் இருந்ததோடு……திரும்ப நெடுந்தூரம் நடந்து ஏறி மேற்பரப்பில் நின்றுகொண்டிருந்த எங்கள் பேருந்தை எட்டுவதற்குள் உடைகளும் கூட அதில் காய்ந்து போயிருந்தன.
தோட்டங்களும் நீரூற்றுக்களும் முடிவு பெறும் இடத்தில் கடலோடு கலக்கும் கால்வாய் பரந்து விரிந்த நீர்ப்பரப்போடு மிகப்பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது… ஃபின்லாந்து நாட்டுக்கு அதன் வழி எளிதாய்ச்சென்றுவிட முடியும் என்றார் வழிகாட்டி.
திட்டமிட்டதை விடவும் கூடுதலான நேரத்தை பீட்டர்ஹாஃஃப் எடுத்துக்கொண்டு விட்டதால் பேருந்தில் ஏறி பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்து அங்கு விரைவாக மதிய உணவை முடித்துக்கொண்டு குளிர்கால அரண்மனையைப் பார்க்கக் கிளம்பினோம். செல்லும் வழியில் பேருந்திலிருந்தே பீட்டர்-பால் கோட்டை அரண் கண்ணில் பட அது பற்றிப் படித்திருந்த செய்திகள் மனதுக்குள் விரிந்தன.
ரஷ்யாவின் மீது ஸ்வீடன் நிகழ்த்திய தரை மற்றும் கடல்வழிப் படைத் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்ள பீட்டர்பேரரசரால் கட்டப்பட்ட இந்த அரணின் ஒருபகுதியில்தான் அரசியல் கைதிகளுக்கான சிறைக்கூடமும் அமைந்திருந்தது. புரட்சிக்காரனாக விளங்கிய பீட்டர் பேரரசரின் மகன் அலெக்ஸியே இதில் முதன்முதலாகச் சிறை இருந்தவன் என்பது வியப்பூட்டும் செய்தி….படைப்பாளிகளான மாக்ஸிம் கார்க்கி, தஸ்தயெவ்ஸ்கி லெனின் மூத்த சகோதரரான அலெக்ஸாண்டர் ஆகியோரும் கூட இந்தச்சிறையில் இருந்திருக்கிறார்களென்ற தகவலை நான் அசைபோட்டபடி இருந்தபோது நகரின் மையப்பகுதியில் உள்ள அரண்மனைச் சதுக்கத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம்.
சதுக்கத்தின் மையப்பகுதியில் பிரம்மாண்டமான குதிரை வீரன் வடிவில் நின்று கொண்டிருந்த பீட்டர் பேரரசரின் வெண்கலச்சிலை, ரஷ்ய இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படும் அலெக்ஸாண்டர் புஷ்கினின் ‘வெண்கலக்குதிரை வீரன்’ (The Bronze Horseman) என்னும் கவிதையை நினைவூட்டியது.
மிகவும் கனம் வாய்ந்ததும் கடினமானதுமான கற்பாறைப் பீடத்தின் மீது காதரீன் பேரரசியால் நிறுவப்பட்ட இந்தச்சிலை, அந்தக் கவிதையின் பெயராலேயே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. நேவா ஆற்றில் வந்த வெள்ளத்தால் தன் காதலி அடித்துச்செல்லப்பட்டு விட… அவ்வாறான ஓரிடத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரை நிறுவியதற்காக அந்தச் சிலைக்கு முன் நின்று புலம்பியபடி அரசனைச் சபிக்கிறான் அந்தக்காதலன்… உயிர் பெற்றெழுந்து விட்ட அந்தச்சிலையின் குதிரை வீரன், காதலனைத் துரத்திக்கொண்டு ஓட… இறுதியில் ஆற்றோரமாய் உள்ள பாழடைந்த குடிசைப்பகுதி ஒன்றின் அருகே மிதக்கிறது அந்த அப்பாவியின் உடல். அரசாள்பவர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை… எப்போதும் நிலவும் சாஸ்வதமான போராட்டத்தைப் பதிவு செய்திருக்கும் இந்தக் கவிதை பீட்டர்ஸ்பர்க் நகரின் அழகு… மேன்மை இவற்றோடு அதன் மறு பக்கத்தையும் கூட மறக்கவிடாமல் நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறது…
தொடரும்...
2.11.16
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 7
தினமணி.காமில் நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பகுதி
சிதறிய இரத்தத் துளிகள்! அதன் மீது மீட்சிக்கான ஓர் ஆலயம் (Church of Resurrection on Spilled Blood)! தான் கொண்டிருந்த வினோதமான பெயரைப் போலவே – எங்கள் கண்முன்னர் பிரம்மாண்டமாக விரிந்து நின்றிருந்த அந்தக் கட்டிடமும் கூட – அங்கிருந்த பிற ஆலய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டதாக, வித்தியாசமான, விசித்திரமான தோற்றத்தோடு, பல புதிர்களைத் தன்னுள் அடக்கியபடி காட்சி தந்து கொண்டிருந்தது.
நேவா ஆற்றிலிருந்து
கிளைபிரிந்து செல்லும் கால்வாய்கள் பலவற்றில் ஒன்றின் கரை மீது பிரமிப்பூட்டும்
அதிசயமாக அமைந்திருந்த அந்த பீட்டர்ஸ்பர்க் அற்புதம், 1800 களில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அலெக்ஸாண்டரின் ஆன்ம சாந்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம். ஃப்ரான்ஸ், பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளோடு நிகழ்ந்த கிரிமியப் போரில் (CRIMIAN WAR) ரஷ்யா அடைந்த மிக மோசமான தோல்விக்குப் பிறகு 1855 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர் இரண்டாம் அலெக்ஸாண்டர். ரஷ்யாவின் மன்னராட்சித் தொடர்ச்சியில்
வித்தியாசமான ஓர் ஆளுமையாக விளங்கிய அவர், வேறெவரும் மேற்கொள்ளாத பலப்பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்.
அடிமைமுறை [Serfdom ] என்னும் வழக்கம், ரஷ்யாவில் மிகக் கடுமையாக நிலவிவந்த காலகட்டம் அது. நாட்டுப்புற மாகாணங்களின் கிராமப்பகுதிகளில்
வசதிக்குறைவோடு தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் பிரபுத்துவ சமூகத்தின் பிடியில் கொத்தடிமைகளைப்போல [Serfs] வைக்கப்பட்டிருந்த
சூழல் அது. நிலக்கிழாராக இருக்கும் ஒரு பிரபுவின் தகுதி, அந்த மனிதன் எத்தனை அடிமைகளைத் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிறான்
என்பதன் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுவந்த அந்த சமூக அமைப்பை – அவ்வகை ஏற்றத்தாழ்வுகளை ரஷ்யப் படைப்பாளிகள் பலரும் தங்கள் படைப்புக்களில்
விரிவாகச் சித்திரித்திருக்கிறார்கள். அவ்வாறு பரம்பரை அடிமைகளாக – பிணைக் கைதிகளைப் போல மீட்சியற்றுக் கிடந்த மக்கள் பலரையும் அவர்களது எஜமானர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியை 1861 இல் மேற்கொண்டார் மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர்.
இராணுவம், நீதித்துறை ஆகியவற்றிலும், நகர்சார் சீரமைப்புக்களிலும்
ரஷ்யாவில் இதுவரை கைக்கொள்ளப்பட்டிராத பல திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும்
அவர் முயற்சி மேற்கொண்டார். மெய்யான நல்லுள்ளத்தோடு
அவர் ஈடுபாடு காட்டிய அந்த சீர்திருத்த முயற்சிகளே அவரது ஆட்சிக்காலத்தின்
பிற்பகுதியில் அவருக்குப் பல எதிரிகளைத் தேடித்தரப் பலமுறை அவர் மீது கொலைவெறித்தாக்குதல்கள் தொடர்ந்து நிகழத்தொடங்கின. அரசர்கள் இளைப்பாறும் குளிர்கால அரண்மனையிலும்,
வேறு பல இடங்களிலும் வைத்து அவரைக் கொலை செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட, 1881இல் நேவா ஆற்றின் கரையோரமாகக் கோச்சுவண்டியில் சென்றுகொண்டிருந்த அவர்மீது புரட்சியாளர்கள் வெடிகுண்டு வீசினர். குண்டுவீச்சில் இரத்த வெள்ளத்தில் சரிந்து வீழ்ந்த மன்னரின் இரத்தத் துளிகள் சிந்திய இடத்தில் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு அவரது மகனான மூன்றாம் அலெக்ஸாண்டர் முயற்சி மேற்கொள்ள இரண்டாம் நிகோலாஸ் மன்னனின் காலத்திலேயே அதற்கான பணிகள் முழுமையாக நிறைவுற்றன.
நான்கரைக் கோடி ரூபிள் பொருட் செலவில் பளிங்குக் கற்களாலும், சலவைக் கற்களாலும் இழைத்துக் கட்டப்பட்ட இதன் உட்புறச் சுவர்களையும், விதானங்களையும் அந்தக் காலகட்டத்தில்
முதன்மையாக விளங்கிய பல ரஷ்யக் கலைஞர்கள் தங்கள் அற்புதமான ஓவியங்களால் அழகுபடுத்தினர்.
பின்னர் ரஷ்யப் புரட்சியின் உடனிகழ்வாக நேர்ந்த பல கலவரங்களால் ஆலயத்தின் உட்புறம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று. 1932 ஆம் ஆண்டில் சோவியத் அரசு இந்த ஆலயத்தை மூடியது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜிப் படைகளால் லெனின் கிராட் முற்றுகையிடப்பட்ட தருணத்தில் பஞ்சத்தாலும், பிற சித்திரவதைகளாலும் இறந்துபோன மக்களின் பிணங்கள் கூட இங்கே வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
1997ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆலயம் மறுபடி திறக்கப்பட்டாலும், ரஷ்யப் புரட்சிக்கு முன்பு இருந்தது போலப் பொதுவான வழிபாட்டுத்தலமாக
அல்லாமல் இறந்துபோன ஜார் மன்னரின் நினைவைப் போற்றும் வழிபாடு மட்டுமே இப்போது இங்கே நிகழ்ந்து வருகிறது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
நகரத்தின் உச்சபட்சக் கவர்ச்சியாகவே விளங்கும் அந்த ஆலயத்திற்குள் – திட்டிவாசல் போன்ற ஒரு சிறு கதவின் வழி உள்ளே சென்றோம். இயேசுவை மீட்பராகச் சித்திரிக்கும்
வண்ண ஓவிங்களாலும், புனிதர்கள் மற்றும் தேவதைகளின் உருவச் சித்திரிப்புக்களாலும் ஆலய உட்புறச் சுவர்களும், மேற்கூரைகளும்
நிறைந்து கிடந்தன;
ஆங்காங்கே பல நிறம் கொண்ட பெல்ஜியம் கண்ணாடிப் பளபளப்புக்களும் காணத் திகட்டாத பேரழகோடு பொலிந்து கொண்டிருந்தன. நாங்கள் சென்ற பிற ஆலயங்களை விடவும் இதைக் காணவரும் மக்கள் கூட்டமும் மிகுதியாகவே இருந்தது.
பல்வேறு காலகட்டங்களில்
பலவகையான பாதிப்புக்களுக்கு
ஆளானபோதும் இன்னும் கூடக் கலையழகு குன்றாமலிருக்கும்
அந்த இடத்தை மனம் கொண்ட வரை ரசித்துப் பார்த்த பிறகு மதிய உணவுக்காகச் சென்றோம்.
அகன்ற சாலை ஒன்றின் மிகப்பெரிய அடுக்குமாடிக்
கட்டிடத்தின் கீழ்த்தளத்தில்
சிக்கனமான எளிமையுடன் இருந்தது அந்த இந்திய உணவு விடுதி. அதன் அருகே, அதை ஒட்டியிருக்கும்
ஒரு இடத்திலேதான் என் நேசத்துக்குரிய நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி மிகக்குறுகிய காலம் வாழ்ந்தார் என்றும் அதைக் காட்டும் நினைவுச் சின்னம் ஒன்று அங்கிருக்கிறது என்றும் உணவுக்காக உள்ளே நுழையும்போது மெல்ல என் காதுக்குள் ஓதினார் வழிகாட்டி காதரீனா. அடுத்த கணமே பசிக்களைப்பும், ஊர் சுற்றிய களைப்பும் எங்கோ ஓடிப்போய்விட உடனே அதைப் பார்த்தாக வேண்டும் என்ற உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. உடன் வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகளுக்கு அதில் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் ஐந்தே நிமிடத்தில் மிகச்சுருக்கமாக… விரைவாக உணவை முடித்துக் கொண்டேன். எங்கள் குழுவின் தலைவரிடமும், வழிகாட்டியிடமும்
அந்தத் தெருமுனை வரை தனியே சென்று வர அனுமதி பெற்று வெளியே வந்தேன். அதே தெருவின் திருப்பத்தை ஒட்டிய பகுதியில்தான் அந்த நினைவுச்சின்னம்
இருப்பதாக காத்தரீனா கூறியிருந்ததால் – எங்கள் உணவு விடுதி இருந்த இடத்தை மட்டும் நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு நடைபாதை வழியே வேகநடை போட்டுத் திருப்பத்தை நெருங்கினேன். நான்கு அகலமான சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில் எவரிடம் எப்படிக் கேட்டுக் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தைத் தேட முடியும் என்பதறியாமல் சற்றுத் திகைக்க வேண்டியநிலை! மொழியும், வழியும் தெரியாத ஓர் இடத்தில் அதற்கு மேல் தொடர்ந்து செல்லவும் மனமின்றி எதிர்ப்பட்ட ஒரு சிலரிடம் விசாரிக்க முனைந்தால் மொழிச்சிக்கல்! பெரும்பாலான ரஷ்ய மக்களும் தங்கள் மொழியையன்றி ஆங்கிலம் அறியாதவர்களாகவே இருப்பதால் நான் விசாரிக்க முனைந்த விஷயம் எவருக்கும் விளங்கவில்லை. அந்தக் கணத்தில் எங்கிருந்தோ என்னிடம் பாய்ந்து வந்தார் ஒரு பருமனான பெண்மணி. தஸ்தயெவ்ஸ்கி என்ற பெயர் மட்டுமே அவர் காதில் அரைகுறையாக விழுந்திருக்க வேண்டும், அதை மட்டுமே பற்றிக் கொண்டு என்னருகே வந்தவர், என் தேடல் குறித்து நல்ல ஆங்கிலத்தில் என்னிடம் வினவினார். நான் அதை விளக்கி முடித்ததும், அவரே என் கரத்தைப் பற்றிக்கொண்டு எங்கள் உணவு விடுதி இருந்த கட்டிடத்தின் அதே திசையில் என்னை நடத்திச் சென்றார். எனக்குள் ஒரே குழப்பம்! நான் கூறியதை அவர் சரியாகத்தான் உள்வாங்கிக் கொண்டாரா என்பதிலேயே எனக்கு சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது.
எங்கள் உணவு விடுதிக்குக் கொஞ்சம் முன்பாக – அதே கட்டிடத்தில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பகுதிக்கு முன்பு என்னை நிறுத்திய அந்தப் பெண்மணி, சற்று உயரத்திலிருந்த ஒரு தளத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு கற்பலகையை எனக்குச் சுட்டிக்காட்டினார்.
‘நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி 1847ஆம் ஆண்டு முதல் 1849ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இடம்.’ என ரஷ்ய மொழியல் பொறிக்கப்பட்டிருந்த அந்தஎழுத்துக்களை எனக்கு ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லிய அவருக்கு நன்றி கூற வார்த்தை தேடி நான் தவித்தேன்; அவரோ தனது நாட்டின் இலக்கிய மேதை ஒருவரின் சுவடு தேடி இந்தியப் பெண்ணான நான் அலையும்போது எனக்கு உதவ முடிந்ததில் தனக்குப் பெருமகிழ்ச்சி
என்று கூறியபடி விடைபெற்றுச் சென்றார். தஸ்தயெவ்ஸ்கி குறித்த அந்தக் கற்சின்னத்தை மகிழ்வோடு புகைப்படமெடுத்துக் கொண்டு மனநிறைவோடு உணவு விடுதிக்குத் திரும்பி எங்கள் குழுவினரோடு உரிய நேரத்திற்குள் இணைந்து கொண்டேன். காத்தரீனாவுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்றொரு பகுதியில் தஸ்தயெவ்ஸ்கி சற்று நீண்ட காலம் வாழ்ந்த இடம், தற்போது அவரது நினைவில்லமாகவே
மாற்றப்பட்டிருப்பதாகவும், உரிய நேரம் வாய்த்தால் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.
உணவு இடைவேளைக்குப்
பிறகு, ரஷ்யாவின் தனித்தன்மை கொண்ட நினைவுப் பரிசுகளை நண்பர்களுக்கு வாங்கிச் செல்ல விரும்பிய நாங்கள் ஒரு அங்காடிக்குச் சென்றோம். ‘வால் மார்ட்’ போன்ற அமைப்பில் சற்று சிறியதாக இருந்த அந்தப் பல்பொருள் விற்பனைக் கூடத்திற்குள்
நுழைவதற்கு முன்பு, நம்மை அன்போடு வரவேற்று உபசரித்து முகப்பிலுள்ள மேசையிலிருக்கும்
குப்பிகளில் நிறைக்கப்பட்டிருக்கும் ‘சிவப்பு மது’ (Red wine) அல்லது ‘வோட்கா’வை (Vodka) அருந்தக் கொடுக்கிறார்கள். நம்மூர்த் துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் காப்பியோ, குளிர்பானமோ வழங்குவது போன்ற அவர்களது கலாச்சார மரபு அது! சர்க்கஸ் சென்றிருந்தபோதும்
அதன் இடைவேளை நேரத்தில் அதே போன்ற உபசாரம் அளிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது. விரும்பியவர்கள் அதை அருந்த… நாங்கள் கடைக்குள் சென்றோம்.
ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கடுக்காகப் பொதிந்துவைக்கப்படும் (Nesting dolls) மர பொம்மைகளே ரஷிய நாட்டின் தனித்தன்மையைக் காட்டும் கலைப்பொருட்கள்..
பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பெண் வடிவத்தையே ( நம்மூர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல) கொண்டிருக்கும் அவை… தற்போது வேறுபல வடிவங்களிலும் கூடக் (தலைவர் உருவங்கள், மதச்சார்புக் கதைகள்) கிடைக்கின்றன. ‘மெட்ரியோஷ்கா’ பொம்மை (Metriyoshka doll) ‘பபூஷ்கா’ பொம்மை (Babushka doll) என்ற பெயராலும் வழங்கப்படும் அவை நாம் இங்கிருந்து நினைவுப்பரிசாக வாங்கிச் செல்வதற்கு உகந்த பொருட்கள். அதே போல வண்ண வேலைப்பாடுகளுடன்… சற்று விலை கூடியதாக ஆபரண வேலைப்பாடுகளுடனும்
அமைந்திருக்கும் பளிங்கிலான முட்டைகளும் (Feberge egg) ரஷ்யக் கலைப் பொருட்களில் தனித்துவம் கொண்டவை.
ஜார் மன்னர்களுக்காகத் தங்கம் இழைத்து உண்டாக்கப்பட்ட அந்த முட்டைகள் இப்போது அவரவர் வசதிக்கேற்ற வகையில் அழகிய வேறு பல வேலைப்பாடுகளுடன்
கிடைக்கின்றன. அவரவர் விரும்பிய பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டபின் மாலை ஐந்துமணி அளவில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
படகுப் பயணத்துக்காக நேவா ஆற்றின் துறையை வந்தடைந்தோம்.
மாஸ்க்வா ஆற்றில் மேற்கொண்ட பிரம்மாண்டமான கப்பற்பயணம் போன்ற சவாரியாக இல்லாமல் இந்தப் படகுப் பயணம் எளிமையான அழகும், இனிமையும் கூடியதாக இருந்தது. நேவா நதி தீரத்தில்தான் பீட்டர்ஸ்பர்க்
நகரமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அதில் பயணம் செய்யும்போது நகரின் அதி அற்புதமான அத்தனை கட்டிடங்களையும் ஒரு சேரக் கண்டு ரசிக்க முடிவது சுகமான ஓர் அனுபவம்.
நீர்க் கொள்ளளவு அடிப்படையில் பெரிய ஐரோப்பிய நதிகளில் ஒன்றான நேவா ஆழம் மிகுந்து அலைகள் தளும்பியபடி இருந்தது. லடோசா என்னும் ஏரியின் வழியாக பால்டிக் கடலோடு கலக்கும் நேவா ஆறு…, மாஸ்க்வாவை விடவும் கூட உயிரோட்டத்தோடும், துடிப்போடும் இருந்ததாகத் தோன்றியது. ஆற்றிலிருந்து நகருக்குள் பிரிந்து செல்லும் பல கால்வாய்கள், அவற்றின் மீது அமைந்திருக்கும் வளைவான பாலங்கள் என வெனிஸின் படகுப் பயணத்தை மிகுதியாக நினைவூட்டியது நேவா நதிப் பயணம். வழியில் எதிர்ப்பட்ட பாலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டே வந்த காத்தரீனா…, ஒரு குறிப்பிட்ட பாலத்தின் மேலிருந்து முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்களுக்கு ஓராண்டில் திருமணம் நிகழ்வது உறுதி என்றும் அதன்பிறகு மணமக்களாக அவர்கள் அங்கே திரும்பிவந்து நன்றிக் கடன் செலுத்துவார்கள் என்றும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார். நாத்திகம் கோலோச்சும் நாட்டிலும் கூட இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மனித வாழ்வோடு கலந்திருப்பதை எண்ணி வியந்தபடி, குளிர் நீரின் சில்லிப்போடு வீசிய மென்காற்றின் தீண்டலை அனுபவித்து ரசித்துக் கொண்டே நேவா நதிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)










