துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.11.16

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் – 9


மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தைப்போல ரஷ்ய நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுக்கெல்லாம் களனாக,  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் நடுநாயகமாக அமைந்திருப்பது அரண்மனைச்சதுக்கம் [ Palace Square  ]. குளிர்கால அரண்மனைக்கு நேர் எதிரே 580 மீட்டர் பரப்பளவில் அரைவட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்தச் சதுக்கத்தில் வெற்றியைக் குறிக்கும் ஒரு தோரண வாயிலும் கூட உண்டு. பேரணிகளும் திருவிழாக்களும் நடைபெறுவதற்கு ஏற்ற இடமாகக் கருதப்படும் அரண்மனைச்சதுக்கத்தில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் புரட்சியாளர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால் இரத்த ஆறும் கூட ஓடியதுண்டு. இந்திய விடுதலைப்போரின்போது நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு நிகரான அந்தச்சம்பவம் ‘குருதிக்கறை படிந்த ஞாயிற்றுக்கிழமைப்படுகொலை’ [Bloody Sunday massacre] என்றே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. தற்போது புத்தாண்டு விழாக்கள்,வெற்றி விழாக்கள், வெண்ணிறஇரவு நாட்களின் களியாட்டங்கள் ஆகியவை நிகழும் இடமாக இருக்கும் இந்தச் சதுக்கத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவமைப்புக் கொண்ட  அந்தக் காலத்துக் கோச்சு வண்டிகள் பலவும் கண்ணில் பட்டு மீண்டும் ரஷ்யப் புனைகதைகளுக்குள் சிறிது நேரம் பயணம் செய்ய வைத்தன. எல்லா சுற்றுலாப்பகுதிகளையும் போலப் பயணிகள் அவற்றில் ஏறி சவாரி செய்ய முந்திக்கொண்டும் இருந்தனர்.

சதுக்கத்தின் மையப்புள்ளியாக நின்றுகொண்டிருப்பது அலெக்ஸாண்டர் தூண்-[The Alexander Column.] எனப்படும் நினைவுச்சின்னம். ஃபிரான்ஸ் நாட்டு மன்னனான நெப்போலியனுடன் நிகழ்த்திய போரில் ரஷ்யா பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த நினைவுத்தூண் ரஷ்யநாட்டுமன்னர் முதலாம் அலெக்ஸாண்டரின் [1801 முதல் 1825 வரை] பெயரைக் கொண்டிருக்கிறது. ஒற்றை சிவப்பு க்ரேனைட் கல்லால் ஆகிய இந்தத் தூணை வடிவமைத்தவர் ஃப்ரென்ச் நாட்டைச் சேர்ந்த அகஸ்தே தெ மாண்ட்ஃபெர்ரேண்ட் என்னும் கலைஞர்.


தூணின் உச்சியில் மன்னர்  முதலாம் அலெக்ஸாண்டரின் முகச்சாயல் கொண்ட ஒரு தேவஉருவம் சிலுவையை ஏந்திக்கொண்டிருப்பது போல இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 500 டன்கள் எடையைக்கொண்டிருக்கும் இந்தத் தூண் நவீன பொறியியல் நுட்பங்கள் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் தூக்கி நிறுத்தும் கருவிகள் [modern cranes and engineering machines]  போன்ற எந்த வசதியும் இன்றி மனிதசக்தி ஒன்றை மட்டுமே கொண்டு இரண்டே மணி நேரத்தில் இதன் அடியிலுள்ள பீடத்தின்மீது நிறுத்தப்பட்டது என்பதும் இதன் இயல்பான  எடை காரணமாக மட்டுமே இது பீடத்தின் மீது மிக இயல்பாகப்பொருந்திக்கொண்டிருக்கிறதேயன்றி பீடத்தோடு இதைப் பொருத்த  செயற்கையான எந்த முறையும் கையாளப்படவில்லை என்பதும்  வியப்புக்குரிய செய்திகளாகும். அறிவும் வளமும் -  நீதியும் கருணையும் - அமைதியும் வெற்றியும் ஆகிய இவற்றின் குறியீடாக உருவகமாக செதுக்கப்பட்டிருக்கும் பல நுட்பமான வடிவங்களும் இராணுவ வெற்றிகளைச் சித்தரிக்கும் காட்சிகளும் அடிப்பீடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

வெயில் அடிக்கும் கோடை நாட்களில்  இரவுக்குச் சற்று முன்பான அந்திச்சூரியனின் கடைசிப் பொன்னொளிக்கிரணங்கள் வழவழுப்பான இந்தக் கற்தூணில் பட்டுப் பிரதிபலிக்கும் காட்சி மிகவும் அற்புதமானது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் எழில்மேனியின் மீது சூட்டப்பட்டிருக்கும் மணிமகுடம் போல – அலங்காரமான ஐரோப்பியக் கட்டிடக் கலைப்பாணியின் அற்புதங்களில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருப்பது அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் குளிர்கால அரண்மனை. இளம் பச்சையும் வெண்மையும் பிணைந்த வண்ணத்தில், செல்வச்செழிப்பைக் காட்டும் நேர்த்தியும் ஆடம்பரமுமான வேலைப்பாடுகளுடன் கூடியது இந்த  அரண்மனை. இதன் கட்டுமானப்பணிகள், பீட்டர் பேரரசரின் மகளும் அரசியுமான ராணி எலிஸபெத்தின் காலத்திலேயே [1754-62] தொடங்கப்பட்டபோதும், அரண்மனை ஒரு வடிவுக்கு வரும் முன்னமே அவர் இறந்து போனதால் சற்றுத் தேங்கி நின்று விட..பின்னாளில் ஆட்சிக்கு வந்த காதரீன் பேரரசியின் காலத்திலேயே முழுமையடைந்தன. அரசி காதரீனும் அவரது வழி வந்த அரச குடும்பத்து வாரிசுகளுமே இந்தக் குளிர்கால அரண்மனையின் சுகத்தில் திளைத்து இதை அணு அணுவாக அனுபவித்தவர்கள்.  1837ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப்பின்பு இதன் பல பகுதிகளும் சீரமைக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.


மூன்றுமாடிகள், 1050க்கும் மேற்பட்ட அறைகள்…. 1,786 கதவுகள்..,1,945 ஜன்னல்கள்…, 117படிக்கட்டுகள் எனக் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் இந்தக் குளிர்கால அரண்மனையின் ஒரு சில பகுதிகள் மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் அரசு ஹெர்மிடேஜ் மியூசியம்’ என்றபெயரில் ஓர் அருங்காட்சியகமாக விளங்கி வருகின்றன. ரஷ்ய நாட்டின் கலைச்சுரங்கம் என்றே குறிப்பிடக்கூடிய அளவுக்குச் சிறப்பு பெற்றிருக்கும் இந்தக் கலைக்காட்சியகம் உலகின் மிகப்பெரும் அருங்கலைக்காட்சியகங்களில் ஒன்று என்பதோடு என்றென்றும் மதித்துப் போற்றத்தக்க கலைக்கருவூலங்கள் பலவற்றைத் தன்னுள்செறித்து வைத்திருக்கும் பொக்கிஷமாகவும் திகழ்ந்து வருகிறது.


ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரத்திலிருந்து 255 வண்ண ஓவியங்களை விலைக்கு வாங்கி இதைக்காட்சியகமாக ஆக்க முற்பட்டவர் பேரரசி காதரீன். தொன்மையான எகிப்து நாட்டுக்கலாச்சாரம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பியக்கலாச்சாரம் வரை உலக வரலாற்றின் அனைத்துக் கலாச்சாரப்பதிவுகளையும் காட்டும் கோடிக்கணக்கான கலைத் தடயங்கள் இப்போது இங்கே குவிந்து கிடக்கின்றன.


லியனார்டோடாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், ராம்ப்ராண்ட் எனப் பல கலை மேதைகளால் உருவாக்கப்பட்ட இன்ப்ரஷனிச, நவீனசெவ்வியல் பாணியிலான மூன்று  கோடி கலைப்படைப்புக்கள் இங்கே இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர்.இங்கே இருக்கும் ஒரு படைப்பைக் காண ஒரு நிமிடம் செலவிடுவதாக வைத்துக்கொண்டாலும் கூட இங்குள்ள எல்லாக் கலைப்பொருட்களையும்  அதே போலக் காணக்  குறைந்தது 11 ஆண்டுகளாவது பிடிக்கும் என்று இந்தக்காட்சியகம் பற்றிச் சொல்லப்படும் கருத்து, உண்மை… வெறும் புகழ்ச்சி இல்லை….

காலையிலிருந்து கடும் வெயிலோடு பீட்டர்ஹாஃப் கோடை மாளிகை, அரண்மனைச்சதுக்கம்…….., குளிர்கால மாளிகை என்று அலைந்து கொண்டிருந்த எங்கள் கால்களுக்குச் சற்று ஓய்வு கொடுக்கும் வகையிலும் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையிலும் அன்றைய நாளின் இறுதி நிகழ்ச்சியாக ரஷ்ய நாட்டு நாட்டுப்புற நடனநிகழ்ச்சி ஒன்றுக்கு எங்களை அழைத்துச் சென்றார் வழிகாட்டி காதரீன். ரஷ்யநாட்டுக்கலாச்சாரத்தின் முக்கியமான அம்சமாக விளங்குபவை ரஷ்யப்பழங்குடி நடனங்கள். ரஷ்ய நாட்டுப்புற நடனங்களின் வேர்கள் ஸ்லோவேனியன் மற்றும் டாடார் பழங்குடி மக்களிடமே இருந்தபோதும் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளின் படையெடுப்புக்கள் இங்கே நிகழ்ந்திருப்பதால் வேறுபட்ட கலாச்சாரக்கூறுகள் இந் நடனங்களில் பின்னிக்கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. அரங்கில் இசைக்கப்பட்ட பாடல்களின் மொழியும் நடனங்களின் நுணுக்கமும் எங்களுக்குத் தெரிந்திராவிட்டாலும் கூட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் ரசித்துப்பார்த்த அந்தநாட்டுப்புற நடனம் உயிர்த்துடிப்போடு் உத்வேகத்தோடும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. உயரமான காலணிகள்…, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் ரஷ்யாவுக்கே உரித்தான சிவப்பு வண்ணம் கொண்ட  சரிகை உடைகள்….ஆகியவற்றை அணிந்த ஆண்களும் பெண்களும் சம அளவில் விரவியிருந்த அந்த நடனக்குழு எங்களைச் சிறிதும் அசையாமல் கொஞ்ச நேரம் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்பதே உண்மை.

மறு நாள்… ரஷ்யாவில் நாங்கள் கழிக்கும் இறுதி நாள்…! முன்பே திட்டமிட்டிருந்தபடி எங்கள் குழுவில் பத்துப்பேர் அங்கிருந்து ஸ்கேண்டினேவியாவை நோக்கிய  தங்கள் பயணத்தைக் காலையிலேயே தொடங்கி விட  நாங்கள் மாலை ஐந்து மணிக்கு இந்தியா திரும்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்குக் கூடுதலாக ஒரு முற்பகல் முழுவதும் சுற்றிப்பார்க்க வாய்ப்பிருந்ததால் வழிகாட்டி காதரீனாவிடம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் நினைவில்லத்தைப் பார்க்கும் என் கோரிக்கையை நான் மீண்டும் முன் வைக்க அவரும் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்……..காலையிலேயே விடுதியைக் காலி செய்து விட்டுப் பயணப்பொதிகளைப் பேருந்தில் வைத்தபடியே சுற்ற வேண்டும் என்பதால் பெட்டியைக் கட்டி ஆயத்தமாய் வைத்து விட்டுப் பின்னிரவுக்கு மேல் உறங்கச்சென்றோம்.

காலைச் சிற்றுண்டிக்காக நாங்கள் ஆயத்தமாகி வரும் முன்பே ஸ்கேண்டினேவியா செல்லும் எங்கள் பயணக்குழுவினர் ஒரு சிற்றுந்தில் கிளம்பி விட்டிருந்தனர். எஞ்சியிருந்த நாங்கள் ஐந்து பேர் மட்டும் எங்கள் வழிகாட்டியின் வரவுக்காகக் காத்திருந்தோம்…உணவு விடுதியோடு ஒட்டியிருந்த கடையிலேயே இறுதியாக மேலும் சில கலை, பரிசுப்பொருட்களையும் வாங்கிக்கொண்டோம்… வழிகாட்டி காதரீனாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எனக்கு மற்றொரு பெண் வழிகாட்டியான கேட்டி வந்து சேர்ந்தது சற்று அதிர்ச்சி அளித்தபோதும், என் விருப்பம் குறித்து காதரீனா முன் கூட்டியே கேட்டியுடன் பகிர்ந்திருந்தாரென்பது ஆறுதல் அளித்தது.…

எங்கள் குழுவில் என்னோடு எஞ்சியிருந்த பிற நால்வரும் அந்தக் குறுகிய காலத்திற்குள்  என்னோடு பழகி என் ஆர்வத்தையும் புரிந்து கொண்டு விட்டிருந்ததால் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தைக் காண வேண்டும் என்னும் என் விருப்பத்துக்குத் தடை போடவில்லை; எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இடங்களையும் காட்ட எண்ணிய கேட்டி, வரைபடத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டபின், நினைவில்லம் அருகிலுள்ள சில தேவாலயங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகக்கூற அவர்களும் அந்த ஆலோசனையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர்….நானும் என் ரஷ்யப்பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவு பெறப்போகும் மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்தேன்

முதலில் எங்கள் அனைவரையுமே ட்ரினிடி தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் கேட்டி. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இதுவரை நாங்கள் பார்த்திருந்த பிரம்மாண்டமான தேவாலயங்களைப்போல இல்லாவிட்டாலும் எளிமையான அழகோடு பொலிந்த ட்ரினிடி தேவாலயத்தில் அப்போது பூசையும் கூட நடந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் அந்த ஆலயம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியோடு தொடர்புடையதும் கூட என்று கூறிய கேட்டி அவரது திருமணம் அங்குதான் நிகழ்ந்தது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்…

உடன் என் மனம் தியாகத்தில் தோய்ந்த தஸ்தயெவ்ஸ்கியின் மனைவி அன்னாவிடம் தாவிச்சென்றது… கணவரின் எழுத்துப்பணிக்கு உறுதுணையாக இருந்ததோடு சூதாடியாகப் பணத்தையெல்லாம் அவர் தொலைத்த காலத்திலும் அவருக்குக் கை கொடுத்து நின்று கடனிலிருந்தும் மீட்டவரான அன்னா, இலக்கிய மேதையான தன் கணவர் பற்றிய நினைவுக் குறிப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்.

ட்ரினிடி தேவாலயத்தைப்பார்த்து முடித்தததும் குழுவிலிருந்த மற்றவர்களை வேறு இரண்டு தேவாலயங்களுக்கு அருகே விட்டு விட்டு என்னை மட்டும் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தை நோக்கி வழிநடத்திச் சென்றார் கேட்டி., நினைவில்லத்துக்குச் சற்று முன்பிருந்த அகன்ற தெரு ஒன்றில் மிகப்பெரிதாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த நாவலாசிரியரின் சிலை ஒன்றை எனக்குச் சுட்டிக் காட்டி அதோடு சேர்த்து என்னைப் புகைப்படம் எடுத்துத் தரவும் அவர் தவறவில்லை.


நினைவில்லத்தின் முகப்பு வரை என்னைக்கொண்டு போய் விட்டு விட்டு இருபதே  நிமிடங்களில் குழுவினரோடு நான் வந்து சேர்ந்தாகவேண்டும் என்ற நிபந்தனையோடு விடைபெற்றார் அவர்.

மிகப்பெரிய அடுக்கு மாடிக்கட்டிடத்தின் ஓரத்தில் சிறியதொரு கீழ்த்தளமும் மேல்தளமும் கொண்ட எளிமையான குடியிருப்பு ஒன்றில் அமைந்திருந்தது அந்த நினைவில்லம். கீழ்த்தளத்தில் இறங்கிச் சென்று அங்கிருந்த வரவேற்பகத்தில் இருநூறு ரூபிள் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மேல்தளம் நோக்கிச்சென்றபோது என் உள்ளம் கலவையான பல உணர்வுகளின் ஆக்கிரமிப்பால் நெகிழ்ந்து கிடந்தது….இலக்கிய முன்னோடிகள் வாழ்ந்த இல்லங்களில் கால் பதிக்கும் வேளையில் இயல்பாக ஏற்படும் புல்லரிப்பும் பூரிப்புமான பரவசநிலை அது !


கடந்த பத்தாண்டுக்காலமாக நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், அசடன், அவரது சிறுகதைகள், குறுங்கதைகள்,குறும்புதினங்கள் ஆகியவற்றைத் தமிழாக்கும் முயற்சியிலேயே பெரிதும் முனைந்திருக்கும் நான்…அப்படைப்புக்களை உருவாக்கிய அந்த மாமேதை வாழ்ந்து ஒரு சில பேராக்கங்களையும் உருவாக்கிய அந்த இடத்தில் சிறிது நேரம் உலவி வர முடிந்ததை என் வாழ்வின் அரிதான வாய்ப்புக்களில் ஒன்றாகவும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை என் வாழ்வின் ஆகச் சிறந்த கணங்களில் ஒன்றாகவும் கொண்ட மனச்சிலிர்ப்புடன் இருந்தேன்….

உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்என்கிறார் மொழிபெயர்ப்பாளரும் விமரிசகருமாகிய எம்..அப்பாஸ். ரஷ்ய சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய  சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற தஸ்தயெவ்ஸ்கி , உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞர் என விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட பெருமை கொண்டவர். ‘நானும் கற்றுக்கொள்ளக்கூடிய உளவியல் செய்திகள் நிறைந்து கிடப்பது தஸ்தயெவ்ஸ்கியிடம் மட்டும்தான்’என்று நீட்சேயும் கூட ஒரு முறை குறிப்பிட்டதுண்டு…மனித மனத்தின் ஆழம் காண முடியாத இருட்டு மூலைகளைத் தன் அகக்கண்ணால் துழாவிப்பார்த்துத் தன் படைப்புக்களின் வழி வாசகர்கள் அரிய தரிசனங்கள் பலவற்றைப்பெற வழி செய்திருப்பவர் அவர்.

மிகவும் எளிமையான அவரது குடியிருப்பு அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருக்க நான் நினைவில்லத்தின் ஒவ்வொரு அறையாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு கூடம் முழுவதும் எழுத்தாளர் பயன்படுத்திய பலவகையான பொருட்கள் [வயோலின், திசைகாட்டும் கருவி, அவர் படித்தநூல்கள்] கண்ணாடிப் பெட்டிகளுக்குள் நிறைந்திருந்தன. இராணுவத்தில் இருந்தபோதும் சைபீரியச்சிறையில் சில காலம் அவர் இருக்க நேர்ந்தபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவரது கையெழுத்துப்பிரதிகள், அவரது நூலின் முதல் பிரதிகள், குடும்பப் புகைப்படங்கள் ஆகியவையும் அங்கே பாதுகாக்கப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அந்தக்காட்சிக் கூடத்தை அடுத்து அவர் வாழ்ந்த இல்லத்தில் அவர் அமர்ந்து எழுதும் அறை [உலகப்புகழ்பெற்ற நாவலான ‘கரமசோவ் சகோதரர்க’ளை அங்கேதான் அவர் உருவாக்கியிருக்கிறார் என்ற குறிப்பை அந்த இடத்தில் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவில்லை] படிக்கும் அறை…, வரவேற்பறை ஆகிய அனைத்துமே அது ஒரு படிப்பாளியின், எழுத்தாளனின் இடம் என்பதை எடுத்துக்காட்டும் முறையில் மிகையும் பகட்டும் இல்லாத எளிய அழகுடன் பொலிந்து கொண்டிருந்தன….


முதல் நாள் முழுவதும் நாங்கள் பார்த்துப் பார்த்துத் திகட்டிப்போயிருந்த தங்கமும் பட்டும் இழைத்த மன்னர்களின் மாளிகைகளுக்கும் எழுதுகோலைச் செங்கோலாக்கிய இந்த நாவல் ஆசானின் வாழிடத்துக்கும் உள்ள வேறுபாட்டை என் மனம் ஒப்பிட்டு அசை போடத் தொடங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.இருபது நிமிடங்கள் நொடியில் கரைந்து போக…கேட்டி என்னைத் தேடி வரும் முன் நினைவில்லம் பற்றி அரிதாய்க் கிடைத்த ஆங்கிலநூல் ஒன்றை வாங்கிக்கொண்டு [ரஷ்யாவைப்பொறுத்தவரை ஆங்கிலநூல் விற்பனை என்பது மிகவும் அரிது; அங்கே கிடைப்பவை பெரும்பாலும் ரஷ்யமொழி நூல்கள் மட்டுமே]  எங்கள் குழுவினரைத் தேடி விரைந்து சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டேன்…

மதிய உணவுக்குப் பிறகு நேரே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விமானநிலையம் சென்று மாலை ஐந்து மணிக்கு துபாய் விமானம் ஏறி நள்ளிரவு துபாய் வந்தடைந்து அங்கிருந்து அதிகாலை விமானத்தில் கிளம்பிக் காலை எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்தோம்…

ரஷ்யாவில் கழித்ததென்னவோ ஐந்தே நாட்கள்தான்….ஆனாலும் அந்தமண்ணின்  அரசியல்…..கலை……கலாச்சாரம்…….இலக்கியம்…..என எல்லாவற்றின் சுவடுகளையுமே பதச்சோறாகச் சுவை பார்த்து முடித்து விட்டதால்…ஐம்பது ஆண்டுக்காலம் அங்கே கழித்தாற் போன்ற இனிய நினைவுகளின் சுகமான பிடியில் மனம் இன்னமும் கூட சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது.!!

[நிறைவு]

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....