துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.11.16

வண்ணதாசன் என்னும் கல்யாண்ஜி

’’தானாக இப்படித்
தட்டுப் பட்டது தவிர
நிலாப் பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று’’
நவீன தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் வண்ணதாசன் என்னும் கல்யாண்ஜி.


கல்யாண்ஜியாக அவரது   கவிதைகளும்
  வண்ணதாசனாக அவரது  சிறுகதைகளும்
 மனித மனங்களின் நுட்பமான இடங்களைத் தொட்டு விடும் தன்மை படைத்தவை.

நிலாபார்க்கும்போதெல்லாம்  நினைவில் எழும் அவரது கீழ்க்காணும் ’நிலாப்பார்த்தல்’ கவிதையையும் 
திருமண வீட்டுக்குச்செல்லும்போதெல்லாம் நினைவுக்கு வரும் அவரது ’கலைக்க முடியாதஒப்பனைகள்’ சிறுகதையையும் 
மறந்து விட முடியுமா என்ன?

மதுரை வங்கியில் அவர்பணி புரிந்த காலகட்டத்தில் எங்கள் பாத்திமா கல்லூரியின் படைப்பிலக்கிய மாணவியரோடு அவரது அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள நான் ஏற்பாடு செய்திருந்தேன். 
தன் மகள் ஆங்கில இலக்கியம் பயின்றஎங்கள் கல்லூரியின் மீதுஅவருக்கு எப்போதுமே ஒரு பரிவு உண்டு... 
அவர் கலந்து கொண்ட அந்தநிகழ்வின் நினைவுகள் பசுமையாக என்னுள்...
 
டிசம்பர் மாத இறுதியில் கோவையில் நிகழ இருக்கும் விஷ்ணுபுரம் விருது விழாவில் விஷ்ணுபுரம் விருது பெற  இருக்கும் திரு வண்ணதாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

வாசகப்பார்வைக்கு அவரது இந்தக்கவிதையும் கூட...
 
நிலாப்பார்த்தல் 

வரப்போகும் விருந்தினர்க்காக
அதிகப்படி காய்கறி
வாங்கிவரப் போகையில்
தற்செயலாக நிலா
தலைக்கு மேல் விழுந்தது.
*
ரயில்வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வழி
கலங்கித் தெரிந்தது
நீரற்ற ஆற்றுமணல் மேல்
நிலா.
*
மரணத்திலிருந்து
தப்பித்த கண்கள்
மருத்துவ மனைக் கட்டிலில்
உறங்க,
கனக்கும் மனத்துடன்
நிசியில் வெளிவந்து
நின்றபோது
வேப்பமரக் கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
*
நண்பனின் அறையிலிருந்து
திரும்பும்போது ஏற்பட்ட
திடீர் வெறுமையில்,
நிச்சயமற்ற தெருக்களில்
நீண்ட நேரம் நடந்து
வீட்டைத் தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது.
*
மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத் தேடி
இருட்டுக்குள் துளாவி
கைப்பிடிச் சுவரில்
முகம் பதித்த போது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை
*
தானாக இப்படித்
தட்டுப் பட்டது தவிர
நிலாப் பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....