துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.11.16

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 7

தினமணி.காமில் நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பகுதி
சிதறிய இரத்தத் துளிகள்! அதன் மீது மீட்சிக்கான ஓர் ஆலயம் (Church of Resurrection on Spilled Blood)!  தான் கொண்டிருந்த வினோதமான பெயரைப் போலவேஎங்கள் கண்முன்னர் பிரம்மாண்டமாக விரிந்து நின்றிருந்த அந்தக் கட்டிடமும் கூடஅங்கிருந்த பிற ஆலய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டதாக, வித்தியாசமான, விசித்திரமான தோற்றத்தோடு, பல புதிர்களைத் தன்னுள் அடக்கியபடி காட்சி தந்து கொண்டிருந்தது.
            
நேவா ஆற்றிலிருந்து கிளைபிரிந்து செல்லும் கால்வாய்கள் பலவற்றில் ஒன்றின் கரை மீது பிரமிப்பூட்டும் அதிசயமாக அமைந்திருந்த அந்த பீட்டர்ஸ்பர்க் அற்புதம், 1800 களில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அலெக்ஸாண்டரின் ஆன்ம சாந்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம்.  ஃப்ரான்ஸ், பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளோடு நிகழ்ந்த கிரிமியப் போரில் (CRIMIAN WAR) ரஷ்யா அடைந்த மிக மோசமான தோல்விக்குப் பிறகு 1855 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர் இரண்டாம் அலெக்ஸாண்டர்.  ரஷ்யாவின் மன்னராட்சித் தொடர்ச்சியில் வித்தியாசமான ஓர் ஆளுமையாக விளங்கிய அவர், வேறெவரும் மேற்கொள்ளாத பலப்பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்.
 அடிமைமுறை [Serfdom ] என்னும் வழக்கம், ரஷ்யாவில் மிகக் கடுமையாக நிலவிவந்த காலகட்டம் அது.  நாட்டுப்புற மாகாணங்களின்  கிராமப்பகுதிகளில் வசதிக்குறைவோடு தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் பிரபுத்துவ சமூகத்தின் பிடியில் கொத்தடிமைகளைப்போல [Serfs] வைக்கப்பட்டிருந்த சூழல் அது. நிலக்கிழாராக இருக்கும் ஒரு பிரபுவின் தகுதி, அந்த மனிதன் எத்தனை அடிமைகளைத் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுவந்த அந்த சமூக அமைப்பைஅவ்வகை ஏற்றத்தாழ்வுகளை ரஷ்யப் படைப்பாளிகள் பலரும் தங்கள் படைப்புக்களில் விரிவாகச் சித்திரித்திருக்கிறார்கள்.  அவ்வாறு பரம்பரை அடிமைகளாகபிணைக் கைதிகளைப் போல மீட்சியற்றுக் கிடந்த மக்கள் பலரையும் அவர்களது எஜமானர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியை 1861 இல் மேற்கொண்டார் மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர்.

இராணுவம், நீதித்துறை ஆகியவற்றிலும், நகர்சார் சீரமைப்புக்களிலும் ரஷ்யாவில் இதுவரை கைக்கொள்ளப்பட்டிராத பல திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் அவர் முயற்சி மேற்கொண்டார். மெய்யான நல்லுள்ளத்தோடு அவர் ஈடுபாடு காட்டிய அந்த சீர்திருத்த முயற்சிகளே அவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் அவருக்குப் பல எதிரிகளைத் தேடித்தரப் பலமுறை அவர் மீது கொலைவெறித்தாக்குதல்கள் தொடர்ந்து நிகழத்தொடங்கின.  அரசர்கள் இளைப்பாறும் குளிர்கால அரண்மனையிலும், வேறு பல இடங்களிலும் வைத்து அவரைக் கொலை செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட, 1881இல் நேவா ஆற்றின் கரையோரமாகக் கோச்சுவண்டியில் சென்றுகொண்டிருந்த அவர்மீது புரட்சியாளர்கள் வெடிகுண்டு வீசினர்.  குண்டுவீச்சில் இரத்த வெள்ளத்தில் சரிந்து வீழ்ந்த  மன்னரின் இரத்தத் துளிகள் சிந்திய இடத்தில் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு அவரது மகனான மூன்றாம் அலெக்ஸாண்டர் முயற்சி மேற்கொள்ள இரண்டாம் நிகோலாஸ் மன்னனின் காலத்திலேயே அதற்கான பணிகள் முழுமையாக நிறைவுற்றன.
  
        
நான்கரைக் கோடி ரூபிள் பொருட் செலவில் பளிங்குக் கற்களாலும், சலவைக் கற்களாலும் இழைத்துக் கட்டப்பட்ட இதன் உட்புறச் சுவர்களையும், விதானங்களையும் அந்தக் காலகட்டத்தில் முதன்மையாக விளங்கிய பல ரஷ்யக் கலைஞர்கள் தங்கள் அற்புதமான ஓவியங்களால் அழகுபடுத்தினர்.


பின்னர் ரஷ்யப் புரட்சியின் உடனிகழ்வாக நேர்ந்த பல கலவரங்களால் ஆலயத்தின் உட்புறம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று.  1932 ஆம் ஆண்டில் சோவியத் அரசு இந்த ஆலயத்தை மூடியது.  இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜிப் படைகளால் லெனின் கிராட் முற்றுகையிடப்பட்ட தருணத்தில் பஞ்சத்தாலும், பிற சித்திரவதைகளாலும் இறந்துபோன மக்களின் பிணங்கள் கூட இங்கே வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆலயம் மறுபடி திறக்கப்பட்டாலும், ரஷ்யப் புரட்சிக்கு முன்பு இருந்தது போலப் பொதுவான வழிபாட்டுத்தலமாக அல்லாமல் இறந்துபோன ஜார் மன்னரின் நினைவைப் போற்றும் வழிபாடு மட்டுமே இப்போது இங்கே நிகழ்ந்து வருகிறது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் உச்சபட்சக் கவர்ச்சியாகவே விளங்கும் அந்த ஆலயத்திற்குள்திட்டிவாசல் போன்ற ஒரு சிறு கதவின் வழி உள்ளே சென்றோம்.  இயேசுவை மீட்பராகச் சித்திரிக்கும் வண்ண ஓவிங்களாலும், புனிதர்கள் மற்றும் தேவதைகளின் உருவச் சித்திரிப்புக்களாலும் ஆலய உட்புறச் சுவர்களும், மேற்கூரைகளும் நிறைந்து கிடந்தன

ஆங்காங்கே பல நிறம் கொண்ட பெல்ஜியம் கண்ணாடிப் பளபளப்புக்களும் காணத் திகட்டாத பேரழகோடு பொலிந்து கொண்டிருந்தன.  நாங்கள் சென்ற பிற ஆலயங்களை விடவும் இதைக் காணவரும் மக்கள் கூட்டமும் மிகுதியாகவே இருந்தது.
 பல்வேறு காலகட்டங்களில் பலவகையான பாதிப்புக்களுக்கு ஆளானபோதும் இன்னும் கூடக் கலையழகு குன்றாமலிருக்கும் அந்த இடத்தை மனம் கொண்ட வரை ரசித்துப் பார்த்த பிறகு மதிய உணவுக்காகச் சென்றோம்.
அகன்ற சாலை ஒன்றின் மிகப்பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சிக்கனமான எளிமையுடன் இருந்தது அந்த இந்திய உணவு விடுதி.  அதன் அருகே, அதை ஒட்டியிருக்கும் ஒரு இடத்திலேதான் என் நேசத்துக்குரிய நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி மிகக்குறுகிய காலம் வாழ்ந்தார் என்றும் அதைக் காட்டும் நினைவுச் சின்னம் ஒன்று  அங்கிருக்கிறது  என்றும் உணவுக்காக உள்ளே நுழையும்போது மெல்ல என் காதுக்குள் ஓதினார் வழிகாட்டி காதரீனா.  அடுத்த கணமே பசிக்களைப்பும், ஊர் சுற்றிய களைப்பும் எங்கோ ஓடிப்போய்விட உடனே அதைப் பார்த்தாக வேண்டும் என்ற உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது.  உடன் வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகளுக்கு அதில் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் ஐந்தே நிமிடத்தில் மிகச்சுருக்கமாகவிரைவாக உணவை முடித்துக் கொண்டேன்.  எங்கள் குழுவின் தலைவரிடமும், வழிகாட்டியிடமும் அந்தத் தெருமுனை வரை தனியே சென்று வர அனுமதி பெற்று வெளியே வந்தேன்.  அதே தெருவின் திருப்பத்தை ஒட்டிய பகுதியில்தான் அந்த நினைவுச்சின்னம் இருப்பதாக காத்தரீனா கூறியிருந்ததால்எங்கள் உணவு விடுதி இருந்த இடத்தை மட்டும் நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு நடைபாதை வழியே வேகநடை போட்டுத் திருப்பத்தை நெருங்கினேன்.  நான்கு அகலமான சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில் எவரிடம் எப்படிக் கேட்டுக் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தைத் தேட முடியும் என்பதறியாமல் சற்றுத் திகைக்க வேண்டியநிலை! மொழியும், வழியும் தெரியாத ஓர் இடத்தில் அதற்கு மேல் தொடர்ந்து செல்லவும் மனமின்றி எதிர்ப்பட்ட ஒரு சிலரிடம் விசாரிக்க முனைந்தால் மொழிச்சிக்கல்! பெரும்பாலான ரஷ்ய மக்களும்  தங்கள் மொழியையன்றி ஆங்கிலம் அறியாதவர்களாகவே இருப்பதால் நான் விசாரிக்க முனைந்த விஷயம் எவருக்கும் விளங்கவில்லை.  அந்தக் கணத்தில் எங்கிருந்தோ என்னிடம் பாய்ந்து வந்தார் ஒரு பருமனான பெண்மணி.  தஸ்தயெவ்ஸ்கி என்ற பெயர் மட்டுமே அவர் காதில் அரைகுறையாக விழுந்திருக்க வேண்டும், அதை மட்டுமே பற்றிக் கொண்டு என்னருகே வந்தவர், என் தேடல் குறித்து நல்ல ஆங்கிலத்தில் என்னிடம் வினவினார்.  நான் அதை விளக்கி முடித்ததும், அவரே என் கரத்தைப் பற்றிக்கொண்டு எங்கள் உணவு விடுதி இருந்த கட்டிடத்தின் அதே திசையில் என்னை நடத்திச் சென்றார்.  எனக்குள் ஒரே குழப்பம்!  நான் கூறியதை அவர் சரியாகத்தான் உள்வாங்கிக் கொண்டாரா என்பதிலேயே எனக்கு சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது.
எங்கள் உணவு விடுதிக்குக் கொஞ்சம் முன்பாகஅதே கட்டிடத்தில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பகுதிக்கு முன்பு என்னை நிறுத்திய அந்தப் பெண்மணி, சற்று உயரத்திலிருந்த ஒரு தளத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு கற்பலகையை எனக்குச் சுட்டிக்காட்டினார்.
 ‘நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி 1847ஆம் ஆண்டு முதல் 1849ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இடம்.’ என ரஷ்ய மொழியல் பொறிக்கப்பட்டிருந்த அந்தஎழுத்துக்களை எனக்கு ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லிய அவருக்கு நன்றி கூற வார்த்தை தேடி நான் தவித்தேன்; அவரோ தனது நாட்டின் இலக்கிய மேதை ஒருவரின் சுவடு தேடி இந்தியப் பெண்ணான நான் அலையும்போது எனக்கு உதவ முடிந்ததில் தனக்குப் பெருமகிழ்ச்சி என்று கூறியபடி விடைபெற்றுச் சென்றார்.  தஸ்தயெவ்ஸ்கி குறித்த அந்தக் கற்சின்னத்தை மகிழ்வோடு புகைப்படமெடுத்துக் கொண்டு மனநிறைவோடு உணவு விடுதிக்குத் திரும்பி எங்கள் குழுவினரோடு உரிய நேரத்திற்குள் இணைந்து கொண்டேன். காத்தரீனாவுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்றொரு பகுதியில் தஸ்தயெவ்ஸ்கி சற்று நீண்ட காலம் வாழ்ந்த இடம், தற்போது அவரது நினைவில்லமாகவே மாற்றப்பட்டிருப்பதாகவும், உரிய நேரம் வாய்த்தால் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு, ரஷ்யாவின் தனித்தன்மை கொண்ட நினைவுப் பரிசுகளை நண்பர்களுக்கு வாங்கிச் செல்ல விரும்பிய நாங்கள் ஒரு அங்காடிக்குச் சென்றோம்.  ‘வால் மார்ட்போன்ற அமைப்பில் சற்று சிறியதாக இருந்த அந்தப் பல்பொருள் விற்பனைக் கூடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நம்மை அன்போடு வரவேற்று உபசரித்து  முகப்பிலுள்ள மேசையிலிருக்கும் குப்பிகளில் நிறைக்கப்பட்டிருக்கும்சிவப்பு மது’ (Red wine) அல்லதுவோட்காவை (Vodka) அருந்தக் கொடுக்கிறார்கள்.  நம்மூர்த் துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் காப்பியோ, குளிர்பானமோ வழங்குவது போன்ற அவர்களது கலாச்சார மரபு அது! சர்க்கஸ் சென்றிருந்தபோதும் அதன் இடைவேளை நேரத்தில் அதே போன்ற உபசாரம் அளிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது.  விரும்பியவர்கள் அதை அருந்தநாங்கள் கடைக்குள் சென்றோம்.
 ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கடுக்காகப் பொதிந்துவைக்கப்படும் (Nesting dolls) மர பொம்மைகளே ரஷிய நாட்டின் தனித்தன்மையைக் காட்டும் கலைப்பொருட்கள்..  

பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பெண் வடிவத்தையே ( நம்மூர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல) கொண்டிருக்கும் அவைதற்போது வேறுபல வடிவங்களிலும் கூடக் (தலைவர் உருவங்கள், மதச்சார்புக் கதைகள்) கிடைக்கின்றன.  ‘மெட்ரியோஷ்காபொம்மை (Metriyoshka doll) ‘பபூஷ்காபொம்மை (Babushka doll) என்ற பெயராலும் வழங்கப்படும் அவை நாம் இங்கிருந்து நினைவுப்பரிசாக வாங்கிச் செல்வதற்கு உகந்த பொருட்கள்.  அதே போல வண்ண வேலைப்பாடுகளுடன்சற்று விலை கூடியதாக ஆபரண வேலைப்பாடுகளுடனும் அமைந்திருக்கும் பளிங்கிலான முட்டைகளும் (Feberge egg) ரஷ்யக் கலைப் பொருட்களில் தனித்துவம் கொண்டவை
 ஜார் மன்னர்களுக்காகத் தங்கம் இழைத்து உண்டாக்கப்பட்ட அந்த முட்டைகள் இப்போது அவரவர் வசதிக்கேற்ற வகையில் அழகிய வேறு பல வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அவரவர் விரும்பிய பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டபின் மாலை ஐந்துமணி அளவில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுப் பயணத்துக்காக நேவா ஆற்றின் துறையை வந்தடைந்தோம்.
 மாஸ்க்வா ஆற்றில் மேற்கொண்ட பிரம்மாண்டமான கப்பற்பயணம் போன்ற சவாரியாக இல்லாமல் இந்தப் படகுப் பயணம் எளிமையான அழகும், இனிமையும் கூடியதாக இருந்தது.  நேவா நதி தீரத்தில்தான் பீட்டர்ஸ்பர்க் நகரமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அதில் பயணம் செய்யும்போது நகரின் அதி அற்புதமான அத்தனை கட்டிடங்களையும் ஒரு சேரக் கண்டு ரசிக்க முடிவது சுகமான ஓர் அனுபவம்.



நீர்க் கொள்ளளவு அடிப்படையில் பெரிய ஐரோப்பிய நதிகளில் ஒன்றான நேவா ஆழம் மிகுந்து அலைகள் தளும்பியபடி இருந்தது.  லடோசா என்னும் ஏரியின் வழியாக பால்டிக் கடலோடு கலக்கும் நேவா ஆறு…, மாஸ்க்வாவை விடவும் கூட உயிரோட்டத்தோடும், துடிப்போடும் இருந்ததாகத் தோன்றியது.  ஆற்றிலிருந்து நகருக்குள் பிரிந்து செல்லும் பல கால்வாய்கள், அவற்றின் மீது அமைந்திருக்கும் வளைவான பாலங்கள் என வெனிஸின் படகுப் பயணத்தை மிகுதியாக நினைவூட்டியது நேவா நதிப் பயணம்.  வழியில் எதிர்ப்பட்ட பாலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டே வந்த காத்தரீனா…, ஒரு குறிப்பிட்ட பாலத்தின் மேலிருந்து முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்களுக்கு ஓராண்டில் திருமணம் நிகழ்வது உறுதி என்றும் அதன்பிறகு மணமக்களாக அவர்கள் அங்கே திரும்பிவந்து நன்றிக் கடன் செலுத்துவார்கள் என்றும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார்.  நாத்திகம் கோலோச்சும் நாட்டிலும் கூட இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மனித வாழ்வோடு கலந்திருப்பதை எண்ணி வியந்தபடி, குளிர் நீரின் சில்லிப்போடு வீசிய மென்காற்றின் தீண்டலை அனுபவித்து ரசித்துக் கொண்டே நேவா நதிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.

18.10.16

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 6

நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரையின் ஆறாவது பகுதி
சூரியனின் கதிர்கள் தங்களை மிக மிகத் தாமதமாகவே சுருக்கிக் கொள்ளும் கோடைகால பீட்டர்ஸ்பர்க் இரவுகள்...,  'வெண்ணிற இரவு’களாய்க் கொண்டாடப்படுவதே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் தனித்துவம். பொதுவாக அடர் கறுப்பு நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும் இரவுப் பொழுதுகள்..., நிலவொளியை விடவும் கூடுதல் பிரகாசமான சூரிய வெண்மையில் குளிக்கும் போது அவற்றுக்கு 'வெண்ணிற இரவுகள்'  [WHITE NIGHTS] என்று நகைமுரணாகப் பெயர் சூட்டி மகிழும் அந்த நகரத்து மக்களின் உள்ளம் தான் எவ்வளவு ரசனை மிக்கது?  ஆண்டின் பெரும்பாலான நாட்கள்துளிகளாகவும், வில்லைகளாகவும், கட்டிகளாகவும் விடாமல் பெய்துவரும் பனிப்பொழிவை மட்டுமே கண்டு அதற்காகவே  வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பீட்டர்ஸ்பர்க் வாசிகள்  உல்லாசமாக வெளியுலகில் சஞ்சரிக்க வழியமைத்துத் தருபவை இந்த வெண்ணிற இரவுகள்...!  குறிப்பாகக் காதல் வயப்பட்டவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்தப் பருவ காலத்தில், கருவுறும் பெண்களின் எண்ணிக்கையும் கூட மிகுதியாக இருக்கும் என்று பீட்டர்ஸ்பர்க் நகரின் வழிகாட்டியாக நேற்று எங்களோடு இணைந்து கொண்ட கேத்தரீனா கூறியதை நினைத்துக் கொண்டே உறங்கிப் போன நான் கண் விழித்தபோது,  மணி விடியற்காலை நான்கைக் கூடத் தொட்டிருக்கவில்லை.  அதற்குள் புலரியின் பொன்னொளிச் சாயல் அறைக்குள் படரத் தொடங்கி விட... அதற்கு மேல் உறக்கம் பிடிக்காதவளாக… பீட்டர்ஸ்பர்க் நகரத்தைப் பற்றி நான் குறித்துக் கொண்டு வந்திருந்த தகவல்களின் மீது கண்களை ஓட்டத் தொடங்கினேன்.

தாமரை மொட்டுப் போன்ற கோயில்.., அதைச் சுற்றியுள்ள அடுக்கடுக்கான இதழ்களைப் போன்ற சதுரம் சதுரமான வீதிகள் என அழகுற அமைந்திருக்கும் என் தென்மதுரையைப் போலவே இந்த பீட்டர்ஸ்பர்க் நகரமும் மிகுந்த சிரத்தையோடு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.   ரஷ்ய நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும். உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாகவும் திகழும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்சக்கரவர்த்தி மகாபீட்டர்  கண்ட மகத்தான ஒரு கனவின் எழிலார்ந்த புறவடிவம். மாஸ்கோவை விடவும் கூட இந்நகருக்கே முதன்மை தர எண்ணிய மகா பீட்டர். அங்குள்ள கட்டுமானப் பொருட்களையும் பணியாளர்களையும் இங்கே வருவித்து அழகான பல கட்டிட அமைப்புக்களை அசுர வேகத்தில் உருவாக்க முனைந்ததில் பிறந்ததே ரஷ்யநாட்டுக் கலாசாரத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்நகரம். 

இங்கிருந்து இரண்டரை மணி நேரத்துக்குள் கடல் வழியாக ஐரோப்பாவின் பின்லாந்து நாட்டுக்குச் சென்று விட முடியுமென்பதால்  இது ஒரு வகையில் ஐரோப்பாவின் நுழைவாயிலாகவும் சொல்லப்படுகிறது.   நேவா ஆறு, பால்டிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் பீட்டர்ஸ்பர்க் நகரில் ,  நகரக் கட்டுமானத்தோடு ரஷ்ய நாட்டின் கப்பற்படைத் தலைமை அலுவலகமும் (அட்மிரேலிடி) அப்போது முதலே உருவாக்கப்பட்டு இங்கே இயங்கி வருவதும் அதுபற்றியே. .

2003ஆம் ஆண்டில் தனது முந்நூறாவது ஆண்டுநிறைவைக் கொண்டாடிய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,  ரஷ்யநாட்டு நகரங்களிலேயே  பெரிதும் ஐரோப்பியத் தன்மை கொண்ட ஒன்றாக-அந்தப்பாணியில் அமைந்திருக்கிறது. 1713 – 1728, மற்றும் 1732 -1918 ஆகிய இரு காலகட்டங்களிலும் மன்னராட்சிக்கால ரஷ்யாவின் தலைநகராக விளங்கிய பெருமையும் இதற்கு உண்டு. 1918ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரம் மீண்டும் இங்கிருந்து மாஸ்கோவுக்கே மாற்றப்பட்டு அரசு அலுவலகங்களும் அங்கிருந்தே செயல்படத் தொடங்கின.
காலப்போக்கில் இந்த நகரத்தின் பெயர்கள், சில மாற்றங்களுக்கு உள்ளானதும் உண்டு.  1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரின் போது  பெட்ரோகிராட் என்றும். 1924 இல் தலைவர்  விளாடிமிர் லெனின் காலமான போது அவர் நினைவாக  லெனின் கிராட் என்றும் அழைக்கப்பட்டாலும் 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற தொன்மையான பெயரே இன்றளவும்  இந்நகருக்கு நின்று நிலைத்து  வழங்கி வருகிறது.

ஓவியம், இசைநடனம் (பாலே) முதலிய நுண்கலைகளின் இருப்பிடமாகவும். அலெக்ஸாண்டர் புஷ்கின். தஸ்தயெவ்ஸ்கி போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த இடமாகவும் விளங்கிய இந்த நகரம். மிகச் சிறந்த பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுடன் கல்வி வளர்ச்சிக்கும் கணிசமான பங்கை ஆற்றி வருகிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வசதியற்ற மாணவர்கள், குறைவான கட்டணத்தில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளரஷ்ய நாட்டின்-  குறிப்பாக பீட்டர்ஸ்பர்கின் மருத்துவக் கல்லூரிகள் வழி அமைத்துத் தருவதாலேயே அவ்வாறு பயின்று வரும் தமிழக மாணவர்களைப் பகுதி நேரப் பணியாளர்களாக நேற்றைய சுற்றுலாவின் போது நாங்கள் உணவு விடுதியில் சந்திக்க நேர்ந்தது.
               
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த பார்க் இன் விடுதி. மாஸ்கோவின்  அஸிமுட் விடுதியைப் போல அத்தனை விசாலமான அறைகளுடன் இல்லையென்றாலும். தேவைக்கேற்ற வசதிகளுடனும், கச்சிதமான ஒழுங்குடனுமே இருந்தது.  அது அமைந்திருந்த இடம். தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் வருணிக்கப்படும் வாஸிலெவ்ஸ்கி தீவு என்பதால், அந்த இடத்தின் மீதான ஒட்டுதல்  சற்றுக் கூடுதலாகவே  என்னைக் கிளர்ச்சியுறச் செய்து கொண்டிருந்தது.   ஆறுகள் கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிகளில் அவ்வாறான குட்டித் தீவுகளை மிகுதியாகக் காண முடிவதும் கூட இரசனைக்குரிய ஒரு காட்சிதான்!

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு காலை பத்து மணி அளவில் நகர் உலாவுக்குச்செல்ல ஆயத்தமானோம்.  ரஷ்யாவின் அரசியல் தலைநகராகக் கம்பீர மிடுக்குடன் – ஸ்டாலினிய பாணிக்கட்டிடங்களோடு தோற்றம் தந்த மாஸ்கோவுக்கு மாறாகப்  பன்முக எழில் உருவ அமைப்புக்கள் பலவற்றோடு  எங்களை  வரவேற்றது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.  இங்கும் கூட மாஸ்கோ போலவே அடுக்குமாடிக் குடியிருப்புக்களும், அலுவலகங்களும், வணிக வளாகங்களும் நிறைந்து கிடந்தாலும். மக்கள் நடமாட்டம்  கொஞ்சம் அதிகமான உயிர்ப்போடு இருந்ததைக்காண முடிந்தது. சாலைகளின் ஒட்டத்திலேயே  இடையிடையில் குறுக்கிடும் பசுமையும், தூய்மையுமான பூங்காக்கள்....! அங்கே  உள்ள இருக்கைகளில் , புல் தரைகளில் ஓய்வாக, உல்லாசமாகப்  பொழுதுபோக்கும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள்!


விடுதியிலிருந்து கிளம்பிய எங்கள் பேருந்து, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மையமாகக் கருதப்படும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் என்னும் மிகப் பெரிய விசாலமான வீதி வழியே சென்று கொண்டிருந்தது. உலகின் மிகப்பெரிய தெருக்களில் ஒன்றான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட், தேவலாயங்கள் உள்ளிட்ட எழிலார்ந்த பல கட்டிட அமைப்புக்களைக் கொண்டிருப்பது

அங்காடிகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் ஆகிய பலவற்றோடு அமைந்திருக்கும் இந்தத்தெரு. ’இரவு வாழ்க்கை’க்கும் பெயர் பெற்றிருப்பது..
நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் ஜுர வேகமான வாழ்க்கை ஓட்டத்தை, அந்தத் தலைப்பிலேயே புனைகதையாக்கித் தந்திருக்கிறார் , ரஷ்ய எழுத்தாளர் நிகோலாய்  கோகோல்.  ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலானகுற்றமும்தண்டனையும்’. மற்றும் 'பீட்டர்ஸ்பர்க் கவிதை' [ST PEETARSBARG POEM]  என்ற மாற்றுப் பெயர் கொண்ட அவரதுஇரட்டையர்’ [THE DOUBLE] நாவல் ஆகியவை பெரும்பாலும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டை  நிலைக்களனாக வைத்து  நிகழும் சம்பங்களையே மிகுதியாகக் கொண்டிருக்கின்றன.

அரைவட்ட வடிவம் கொண்டதும், நிறையத் தூண்களோடு கூடியதுமான  ஐசக் தேவாலயம், கம்பீரமான மேற்கூரையோடு பீட்டர்ஸ்பர்கின் தனித்த முத்திரையாகவே காட்சி தரும் கஸான் தேவாலயம் ஆகியவை, தங்கள்  கட்டிடக் கலை நுணுக்கங்களால் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் அழகுக்கு அழகு சேர்ப்பவை. .

தொடக்க காலகட்டத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய முதன்மையான தேவாலயமாக விளங்கியிருந்த  ஐசக் பேராலயம் 1818-1858 களில் ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. தங்க நிறத்தில் தகதகக்கும் இதன் மேற்கூரையே இன்றளவும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின்   வானளாவிய சிகரத்தைப்போன்ற அடையாளச்சின்னமாக  விளங்கி வருகிறது.

ரோமாபுரியின் வத்திகான் நகரில்  இருக்கும் செயிண்ட் பீட்டர் பசிலிக்கா பேராலயத்தின்  வடிவமைப்பால் தூண்டுதல் பெற்று,  அதை இன்னொரு பிரதி எடுத்ததைப்போலக் காட்சி தரும் கசான்மாதாவுக்கான (LADY OF KAZAN) தேவாலயம் கட்டிடக் கலையின் அற்புதமாய்ப் பொலிந்து கொண்டிருப்பதும் இங்கேதான்..ரஷ்ய ஆசார மரபை ஒட்டிய  தேவாலயங்களில் முக்கியமானதாக எண்ணப்படும்  இந்த ஆலயம் , 1812 ஆம் ஆண்டு, நெப்போலியனோடு நிகழ்ந்த போரில் - அவன் தோற்கடிக்கப்பட்ட பிறகு  இந்த நாட்டின் வெற்றிச் சின்னமாகவே கருதப்படலாயிற்று- அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் திறன் படைத்தகஸான் மாதா’வின் பெயரால் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்குள்ளேதான்  நெப்போலியனுடனான போரைத் தலைமையேற்று நடத்திய படைத்தலைவர் மிக்கேல் குடுசோவின் கல்லறையும் அமைந்திருக்கிறது. 1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவின் சமயம் சார்ந்த வரலாற்றையும், அதன் நாத்திக வாதக் கோட்பாடுகளையும் கூட வெளிக்காட்டும் காட்சியகம் இதனுள் உருவாக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு நிறுத்தப்பட்டு விட்ட பூசனைகள்  அண்மைக்காலமாக  மீண்டும் நிகழத் தொடங்கியிருந்தாலும் ஆத்திக, நாத்திகக் காட்சியகம் இன்னும் கூட இங்கே இயங்கி வருகிறது. பிரம்மாண்டமான வெண்கலக் கதவுகளும், அரண்மனை போன்ற எடுப்பான தோற்றப் பொலிவும் கொண்ட இந்த ஆலயத்தை நேவா ஆற்றின் பின்னணியில் பொருத்திக் காண்பது சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி.


இளநீலப் பணிவண்ணத்தில் தங்க மயமான ஐந்து மேற்கூரைகளுடன் ஜொலிக்கும் மற்றொரு கட்டிடம் செயிண்ட் நிக்கோலஸ் தேவாலயம், கடற்படை வீரர்களுக்கும், மாலுமிகளுக்கும், பயணிகளுக்கும் வழிகாட்டிப் பாதுகாப்புத் தரும் செயிண்ட் நிக்கோலஸ் என்ற தெய்வத்தின் ஆலயமாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தின்  நுட்பமான வேலைப்பாடுகளும்... கண்ணுக்கினிய வண்ணச் சேர்க்கையும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு மேன்மேலும் அழகூட்டுபவை.

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்யக் கலைப்பாணிக்குச் கட்டியம் கூறும் செயிண்ட் நிக்கோலஸ் ஆலயத்தை உருவாக்கும் கனவு, பீட்டர் பேரரசரின் உள்ளத்தில் உதித்த போதும் அவரது மகள் எலிசபெத்தால் தொடங்கப்பட்ட பணி, பின்னர் இரண்டாம் காதரினின் காலகட்டத்திலேயே நிறைவு பெற்றிருக்கிறது.  ஆலயத்தின் நேர் எதிரில் இருக்கும் அழகான மணிதாங்கிய கோபுரம் (BELL TOWER) இதன் எழிலை மேலும் எடுப்பாக்கிக் காட்டுகிறது.


விதம் விதமான கட்டிடக் கலை அமைப்புக்களுடன் கூடிய பேரலாயங்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தவற விடாமல் பார்த்தாக வேண்டிய முக்கியமான ஓர் இடமாக எங்கள் வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்ற இடம்... 'சிதறிய இரத்தத்துளிகளின் மீதான மீட்பரின் ஆலயம்’! (The Church of the Savior on Spilled Blood) அந்தப் பெயருக்குள்ளேயே அரிதான ஒரு கதையும் கூட ஒளிந்து கிடந்ததை இனம் கண்டு கொண்டவளாய்…அதை அறியும் ஆர்வத் துடிப்பில் இருந்தேன் நான்….!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....