2.8.09
ஆழியாறு தந்த அமுதம்
பொதுவான தளத்தில் ஆன்மீகம் என்பது தனிமனித அகமுகத் தேடலுக்கும்,மேம்பாட்டுக்கும் உரிய ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.இந்தப் பொதுப் போக்கை மாற்றி ஆன்மீகத் தேடல்களைச் சமூக நலனுக்கும்,வளத்திற்கும் உரியதாக மடை மாற்றம் செய்த ஞானியர் சிலரில் வேதாத்ரி மகரிஷி அவர்களும் ஒருவர்.
கூடுவாஞ்சேரி என்னும் சிற்றூரில் ,எளிய தறி நெசவுக் குடும்பத்தில் பிறந்து ,வறுமையின் கொடுமையை அணு அணுவாக நுகர்ந்து அதை மாற்றும் வழியை ஆன்மீகப் பாதையில் தேடியவர் அந்த மகான்.
‘வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்’என்று பரந்த உலகப் பொது நோக்கிலான தாரக மந்திரத்தை அளிப்பது அவருக்குச் சாத்தியமானது அதனால்தான்.
அரிதான யோகக் கலை, சாமானியர்களையும் எட்டும் வகையில் ,எளிய குண்டலினி யோகமுறையை(Simplified Kundalini Yoga)மனவளக்கலையாக வடித்துத் தந்து அறிவுத் திருக் கோயிலை ஆழியாறில் அமைத்தளித்த சிற்பி அவர்.
‘’யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’’ என்ற உயர் மரபின் தொடர்ச்சி அவர்.
மகரிஷி அவர்களின் ஜெயந்தி 14.08.09 கொண்டாடப்படுவதை ஒட்டி, அவர் நிறுவிய புதுதில்லி மனவளக்கலைமன்றத்தில் யோகம் பயிலும் பேற்றைப் பெற்றிருக்கும் நான் கீழ்வரும் சிறு கவிதையைக் குருகாணிக்கையாக்குகிறேன்.
என்னை அறியாமல்...
ஏதேதோ செய்திருந்தேன்
தன்னை அறியவில்லை
தன்னறியும் திறனுமில்லை
ஆசை வலைப்பட்டு
அகந்தையின் பிடியில் சிக்கி
மாயச் சுழலுக்குள்
மயங்கியே நான் கிடந்தேன்
சிற்றறிவில் சினம் கொண்டு
பேரறிவாம் பகுத்தறிவைச்
செயல்படுத்த அறிந்திடாமல்
செயலற்றுப் போய்க் கிடந்தேன்
மாயையெனும் பேய் பிடிக்க
மனிதத்தைத் துறந்துவிட்டு
ஆணவ அழுக்கு மூட்டை
அடுக்கடுக்காய்ச் சுமந்திருந்தேன்
உடம்பார் அழிந்துவிட்டால்
உயிராரும் போய்மடிவார்
திருமூலர் வாக்கு இது
திருத்தமான வாக்கு இது
உயிரார் உறைகின்ற
உன்னதமாம் கோயிலென
ஒருபோதும் என்னுடம்பை
உயர்வாய் எண்ணவில்லை
தூல உடல் பேணுகின்ற
சூக்குமம் விளங்கவில்லை
சூக்குமம் புரிந்தாலும்
சோம்பல் என்னை விடவில்லை
அன்றாடக் கவலைகளில்
அலைக்கழிந்து அலமந்து
இலக்குகளைத் தவறவிட்ட
தருணங்கள் ஏராளம்
சகமனிதம் சகித்திடாமல்
சாதனைகள் புரிந்தென்ன
பொறுமைதனைக் கொண்டிடாமல்
பெருமைகள்தான் சேர்ந்தாலென்ன
எண்ண அலை ஓயவில்லை
எதிலும் மனம் பதியவில்லை
ஓயாத உளைச்சலோடு
உழன்றபடி நானிருந்தேன்
வேதனையைத் தீர்க்க வந்த
வேதாத்ரி காணும் வரை
வேண்டாத பயங்களையே
கொண்டாடி வாழ்ந்திருந்தேன்
ஆழியாறு என்னுமொரு
அமுதத்தைக் காணுமட்டும்
அயர்ச்சியோடு சலித்தபடி
அன்றாடம் உளைந்திருந்தேன்
வளமுடன் வாழ்கவென்றே
வந்ததொரு மாமருந்து!
நலமுடனே சிறப்பதற்குக்
கண்கண்ட பெரு மருந்து!
கண் முற்றும் கெடுவதற்குள்
கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன்
காயகல்பக் கலை கொடுத்த
தவ யோகி கண்டுகொண்டேன்
ஆன்மீக வாழ்வென்றால்
அஞ்சியே ஓட வேண்டாம்
கற்றை முடிதரித்துக்
காட்டுக்குள் செல்ல வேண்டாம்
அவரவர் பணியினையே
அலுக்காமல் சளைக்காமல்
அன்புடனே ஆற்றிவந்தால்
அதுதான் தவமென்ற
தத்துவத்தைப் புரியவைத்துத்
தவம் செய்ய வைத்திட்ட
ஞான குரு நமக்கு வாய்த்தார்
உள்ளுக்குள் ஒடுங்கிப்போய்த்
தன்னிலை கண்டபோதும்
உலகப் பொது நன்மை
உன்னதமாய்ப் பேணுதற்காம்
கடப்பாடு நமக்கிருக்கும்
காரியத்தை எடுத்துக் காட்டி
வையகம் வாழ்கவென்ற
வாசகம் தன்னைத் தந்தார்
மனவளக்கலை தந்த
மாமருந்து ஏராளம்
சொல்லி முடியாது
சொல்லவும் நாள்போதாது
கைகளுக்கும் கால்களுக்கும்
கண்ணுக்கும் ஏற்றதுவாய்
மூச்சுப் பயிற்சிக்கும்
முதன்மைதரும் முறையினிலே
உடல்நலத்தைக் காப்பதற்காய்
உயர்ந்த பல பயிற்சிமுறை
வச்சிரம் மகரமென்று
வெவேறாய் ஆசனங்கள்
உடம்பென்ற கோயிலுக்குள்
உறைகின்ற ஆன்மாவைத்
தட்டியே எழுப்புதற்காய்த்
தனித்தனியே தியானமுறை
ஆக்கினையில் தொடங்குமது
துரியத்தில் தான் வளர்ந்து
துரியாதீதமென்றே
துரிதமாய் வளர்ந்துவரும்
ஒன்பதாம் கோள்களுமே
நல்வினையை நமக்களிக்க
நவக்கிரகத் தவமென்ற
நல்லதொரு தவமுமுண்டு
பஞ்ச பூதம் கண்டுநாமும்
அஞ்சியே வாழ்ந்திடாமல்
நிலம் வளி வான் காற்றோடு
நெருப்பான ஒன்றைச் சேர்த்து
ஐம்பூதம் மேல் செய்யும்
அரியதொரு தவமுமுண்டு.
ஐந்தடக்கல் ஆற்றி நன்றாய்
ஐம்புலனைக் காப்பதற்கே
ஐம்பொறிமேல் நாம் செய்யும்
அழகான தவமுமுண்டு
அகத்தாய்வு பல அளித்து
அகத்தூய்மை பெறுவதற்கு
அருமையான வழிகாட்டும்
படிநிலைகள் பலவுண்டு
முத்தாய்ப்பாய்ப் பிரமஞானம்
முக்தி வேறு தேவையில்லை
இத்தனையும் தந்து வைத்த
சித்தராம் மகரிஷியை........
வளமுடன் வாழ்கவென்ற
வாசகத்தை வடிவமைத்து
வேதத்தின் சாரத்தை
வெகுலகுவாய் ஆக்கிவைத்த
வேதாத்ரி மகரிஷியின்
விருப்பத்தை நெஞ்சில் வைத்து
நாம் பெற்ற இன்பத்தை
வையமெல்லாம் பெற்றிடவே
வேண்டியதைச் செய்திடுவோம்
அற வாழ்வின் நாட்டத்தில்
பிறழாமல் பணிசெய்து
ஆழியாறு அளித்தவாக்கை
அகிலமெங்கும் பரப்பிடுவோம்
லேபிள்கள்:
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
3 கருத்துகள் :
இரண்டு வருடங்களுக்குமுன்பு மகரிஷியின் ஆழியாறு ஆசிரமத்தில் சுமார் இரண்டு மணி நேரம் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. மிகவும் ரம்மியமான சூழல். மகரிஷிக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வந்தது. இப்போது முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கவிதை வடிவில் மிக அழகான குரு காணிக்கை. நன்றி.
ஆழியில் இல்லை ஆற்றிலும் இல்லை
ஆழ்துயிலும் அறிதுயிலும் கற்பதற்கு
இதுவும் கடந்து போக வேண்டும்!
ஆழியாறு அறிவுத்திருக்கோயில் அருமையான அமைதி சூழ்ந்த மலைச்சாரலின் அடிவாரத்தில் திகழும் ஓர் அறிவுக்கூடம்.
கருத்துரையிடுக