துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.3.10

அமுதமல்ல..ஆலகால விஷம்!

நித்யானந்தா பற்றிய எனது முந்தைய பதிவுக்கு (ஓர் எதிர்வினை)வந்த பின்னூட்டங்கள்  அனைத்துமே பெரும்பாலும் ஒத்த தளத்திலானவை.
தற்பொழுது அதே பதிவிற்குப்  பெயர் குறிப்பிடாத  கருத்துரை ஒன்று, வேறொரு கோணத்திலிருந்து ஆங்கிலத்தில் வந்திருக்கிறது.
மாற்றுத் தரப்புக் கூறும் அந்தக் கருத்தையும் வெளிப்படுத்தி, அதற்கான விடை தரும் நோக்கில் அக் கடிதத்தின் தமிழாக்கத்தையும்,அதற்கான என் பதிலையும் இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

பெயரில்லா எழுதியது...(கடிதத்தின் மொழியாக்கம்)
’’எதிர்ப்படும் சிக்கல்களையெல்லாம் உணர்ச்சி வேகத்துடன் மட்டுமே அணுகுவது தமிழர்களாகிய நமக்கு வாடிக்கையாகப் போய்விட்டிருக்கிறது. 
ஒன்றை ஆதரித்தாலும் சரி,எதிர்த்தாலும் சரி..அதே மாதிரியான உணர்ச்சிக் கொந்தளிப்புத்தான் நமக்கு.
உண்மையான பிரச்சினை என்று  வரும்போது மட்டும் நாம் சரியாகக் குரலெழுப்பத் தவறி விடுகிறோம்.
ஈழப் பிரச்சினையைக் கொஞ்சம்  எண்ணிப் பாருங்கள்.
முக்கியமில்லாத விஷங்களுக்கு மட்டும்தான் நாம் உச்சபட்சக் குரலை உயர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பது அப்போது தெளிவாகப் புரியும்.
மக்களைத் திசை திருப்புவதனாலும்,வேண்டாத விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாலும் இந்தத் தொலைக் காட்சி ஊடகங்கள் சாதித்ததுதான் என்ன.
ஆபாசமான வக்கிரமான காட்சிகளைப் பகிரங்கப் படுத்தி ஒளிபரப்பும்போது மட்டும் தமிழ்ப் பண்பாடு சுலபமாக மறக்கப்பட்டு விடுவது ஏன்.
ஈழப் போர் நடந்தபோதும் இதே ஊடகம், முதல்வரின் உண்ணாவிரதநாடகங்களுக்குத்தான் முதலிடம் தந்ததே தவிர அடிப்படையான செய்திகளுக்கு அல்ல.

குறிப்பிட்ட இந்த ஸ்வாமிஜி பற்பல ஆண்டுகளாக மிகத் தெளிவான நோக்கங்களுடன் ஆழமாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்;
அதை யாராலும் மறுக்க முடியாது.
வேண்டுமென்றால் அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்;இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்.
இப்போது இந்த வீடியோப் பதிவு மாத்திரம் வெளிவந்திருக்கவில்லையென்றால் அவரது அக வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரியப் போகிறதா என்ன?
அப்போது அது எவருடைய மனச்சாட்சியையும் காயப்படுத்தாது என்றால் அதற்கு என்ன பொருள்?பிறருக்குத் தெரியாமல் ஒன்றைச் செய்தால் நாம் அதை அங்கீகரிக்கிறோம் என்றுதானே அர்த்தம்?அதுதான் நமது பண்பாடா?

விஷயங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்கும் திறனை நம் கல்வி நமக்குத் தந்திருக்கவில்லை என்றால் அப்புறம் அதனால் என்ன பயன்?
இன்னமும் கூடக்...கற்பு,காவி,ஆண்பெண் உறவு ஆகியவற்றைப் பற்றிய ஏகப்பட்ட குழப்பங்களுடனும்,தவறான புரிதல்களுடனும்தான் நாம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆஹா!நமது தமிழ்ப் பண்பாடுதான் எத்தனை அற்புதமானது?!!!’’


பெயரில்லாமல் கருத்துச் சொன்ன நண்பருக்கு.....
அவரது எதிர்வினைக்கு என் மறு மொழிகள்;

1. உணர்ச்சி வேகத்தில் ஒருவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பதும்,பிம்பம் கலைந்ததும் தலைகுப்புறக் கவிழ்ப்பதும் பொதுவான சில மனித பலவீனங்கள்;
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோலத் தமிழர்களுக்கு அது சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.
சில அசாதாரணமான தருணங்களில் அதனால் நன்மையும் கூட விளைந்திருக்கிறது.
குறிப்பாக இலங்கைப் பிரச்சினையில் அதை நாடகமாக்காமல் வேகம் குறையாத நடுநிலையோடு ஆத்மார்த்தமாகக் கருத்துக்களை முன் வைத்தோரும் உண்டு.

2.அடுத்து நீங்கள் சொன்னதுபோல ஊடகங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைக் காட்டியது சரியில்லைதான்.
அது கண்டனத்திற்குரியது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

ஆனால்...அது அவர்களுக்கு ஒரு வியாபாரம் மட்டுமே.


ஆன்மீக வியாபாரத்துக்குக் கடை விரிப்பவர்களைப் போல


(’’கடை விரித்தேன் கொள்வாரிலையே ‘’என்று தவித்த மெய்யான ஆன்மீகவாதிகள் எங்கே?கோடிக் கணக்கில் கறுப்புப் பண முதலைகள் கொட்டும் பணத்தால் கொழிக்கும் இவர்கள் எங்கே?)

ஊடகக்காரர்களும் பரபரபரப்புக் கடை விரித்து வியாபாரம் செய்கிறார்கள்.
(அந்த ஊடகங்களைக் கூட..உபதேசப் போர்வையில் மட்டுமன்றிப் பணத்தாலும் வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் இந்தப் போலிகள்.)

3.மூன்றாவதுதான் முக்கியமானது.

முதல் இரண்டு தவறுகளும் குறிப்பிட்ட அந்த ஆன்மீகவாதி செய்த தவறை நியாயப்படுத்திவிட முடியும் என்று உங்களால் எப்படி எண்ண முடிகிறது?

எதிராளியின் மன ஒப்புதல் இல்லாமல் இது நடந்து விடவில்லை என்பது உண்மைதான் என்றபோதும் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குத் துளியும் பொருத்தமில்லாத ஒரு வேடம் புனையும் கபடதாரிகளைப் பார்க்கும்போது உண்மையான ஆன்மீக மார்க்கத்தின் மீது கூடக் கண நேரம் ஐயம் தோன்றிவிடுவது தவிர்க்க முடியாதது.

ஒரு பாணன் பொய் சொல்வதைப் பார்த்து எல்லாப் பாணர்களுமே இப்படித்தானோ(‘’ஒரு நின் பாணன் பொய்யனாக..’’ )என்று நினைக்க ஆரம்பித்து விடுவாள் ஒரு தலைவி என்பதாக ஒரு சங்கப் பாடல் கூட உண்டு.

4.ஒன்றை மறைவாகச் செய்வதால் அது சரியானது, ஏற்கக் கூடியது என்று யாருமே சொல்லவில்லை.

ஆனால்...அதற்காக,
இரட்டை வேடங்களின்
திரை விகாரமாக விலகி உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது பிறக்கும் நியாயமான எதிர்வினைகள் தவறானவை என்றோ...வெறும் ஆவேசமான உணர்வெழுச்சியில் பிறப்பவை என்றோ அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

ஒரு மனிதரைப் பீடத்தில் ஏற்றி ஆராதனை செய்தவர்களை விட .... இப்படிப்பட்ட ஒரு ஆளிடம் தங்கள் அறிவை அடகு வைத்து அவர்கள் மந்தைத்தனமாக ஏமாந்து போயிருக்கிறார்களே என்ற சமூகக் கவலைதான் இது சார்ந்த பல எதிர்வினைகளை வரவழைத்திருக்கிறது.

இது தொடர்பாகத் தார்மீகக் கோபத்துடன் (கவனியுங்கள்.அங்கலாய்ப்புடன் அல்ல.) கருத்துப் பதிவு செய்யும் பெரும்பான்மையோர்...அந்த நபரின் வழிபாட்டாளர்கள் அல்ல என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்.
இது ,தனி ஒரு மனிதனின் அறம் சார்ந்த பிரச்சினையாக,அவன் மட்டுமே சார்ந்த அந்தரங்கப் பிரச்சினையாக இருந்தால்...அதற்குள் மூக்கை நுழைப்பது நிச்சயம் தவறுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட நபர் பொதுவாழ்வின் வெளிச்சத்தில் குறிப்பிட்ட ஒரு ஸ்தானத்தில் நிறுத்தப்பட்டிருப்பவர்.
 பலரின் முன் மாதிரி என்றும்,வழிகாட்டி என்றும் தன்னைக் காட்டிக் கொண்டிருப்பவர்கள்
மறைவாகச் செய்து வரும் கள்ளத் தனங்களை அம்பலப்படுத்துவதிலும் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் புனித பிம்பங்களைக் கட்டுடைத்துப் போடுவதிலும்,அவை பற்றி விமரிசிப்பதிலும் என்ன பிழை இருக்கிறது?
அதற்கான உரிமை...பொறுப்புள்ள ஒவ்வொரு சமூகப் பிரஜைக்கும் உண்டு.

’ரிஷிமூலம்’பார்க்கக் கூடாது என்பது அந்தக் கால மதிப்பீடு;அதுவும் கூட ஆரம்பக் கட்டமான மூலத்தை மட்டும் குறிப்பதுதான்.இப்பொழுது நடந்திருப்பதைப் போன்ற நடுவழி நாடகத்தை அது குறிப்பிடவில்லை.

5.குறிப்பிட்ட நபர் சொன்ன உபதேசம்,மற்றும் நூல்களை மேன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்.
பரிமாறும் பண்டம் ருசியானதாக இருக்கிறது என்றாலும்,அது உருவான பாண்டம் எத்தனை அழுக்கானது என்பது கண்கூடாகப் புரிந்துவிட்ட பிறகு, அந்தப் பண்டம் எவருக்காவது ருசிக்குமா..? குமட்டிக் கொண்டு வந்து விடாதா என்ன.

மனம்,மொழி,மெய் மூன்றும் ஒத்து ஒரே தளத்தில் இயங்குவதே INTEGRITY.
அது இல்லாமல் போகும்போது அமுதத்தையே ஊற்றிக் கொடுத்தாலும் கூட அது ஆலகால விஷம்தான்.

12 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

உண்மை தான் . நீங்கள் சொல்வது . ஆனால் மீண்டும் எனக்கொரு கேள்வி. இப்படியோரு திடீர் ஆசிரமம் எந்த ஒரு சமூக உதவியில்லாமல் ,துணையில்லாமல் வளருவது கஷ்டம் தான். நான்கு வருடங்களுக்கு முன்பே இதை பற்றியான கேள்விகளை கேட்டிருக்கலாம். நான்கு வருடங்கள் வேண்டாம் , இரண்டு வருடங்கள் முன்னே கேட்டிருக்கலாமே. எப்படி இப்படி வளர்ந்ததென்று. அப்போது இன்று கண்டனம் தெரிவிக்கும் தலைவர்களும், (மத மற்றும் அரசியல் ) மக்கள் அமைப்புகளும் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள் . அரசியல்வாதிகளின் மனைவிகளும் பிள்ளைகளும் அங்கு சென்று ஆனந்தம் பெற்றார்கள் தானே? இவர்களின் மூக்குக்கு கீழே நடந்த வளர்ந்த ஒரு நிறுவனத்தை கண்காணிக்க கூட தகுதியற்ற ஒரு அரசும், பொறுப்பில்லாமல் ஹிந்து மதம் வளர்கிறது என்று அவருக்கே மாலை அணிவித்து மகிழ்ந்த மத அமைப்புகளும் எந்த வகையில் உயர்ந்தவர்களாக இருக்க முடியும்,? அவர் செய்ததும் இவர்கள் செய்ததும் ஒன்று தானே. அவர் வளர்ந்தார். இவர்கள் வளர்த்தினார்கள். இப்போது வளர்த்தியவர்களே, அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், வளர்ந்தவரை இந்தியாவின் தேசீய பொழுதுபோக்கான பாலியல் சமாச்சாரங்களை வைத்தே தூக்கி எறிந்தனர்.
தயவு செய்து இதில் பாவம் பொது ஜனம் தான். சூத்திரதாரிகள் எப்போதும் போல தலைவர்கள் தான். இந்த சாமியாரும் ஒரு கருவி மட்டுமே. மீண்டும் இது போல பலபல சாமியார்களும் , நிதி நிறுவனங்களும், ரியல் எஸ்டேடுகளும், கல்வி நிறுவனகளும், மருத்துவ மனைகளும்
வளரும். அப்போதும் அதை வளர்த்துபவர்கள் இவர்களாக தான் இருப்பார்கள். மக்கள் கழுதைகள் என்று இவர்கள் நினைத்துக்கொண்டே அடுத்த பாலியல் காட்சிகளுடன் வருவார்கள் . பகுத்தறிவு ரீதியாக எந்த விதமான கல்வியோ பயிற்சியோ கிடைக்காத சமூகம் மீண்டும் உணர்ச்சி பொங்க கொதித்தெழுந்து தங்களின் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்து வருந்துவர். இதை தவிர்க்க என்ன செய்யலாம். இது போன்ற வியாபார நோக்குடனான விளம்பர செய்திகளுக்கு மக்கள் பெரிதாக நேரத்தை கொடுக்க வில்லை என்றால் . இதுபோன்ற பாலியல் காட்சிகள் வருவதும் குறையும். இவர்களுக்கு அப்படி ஒரு சீடி கிடைத்திருந்து நிஜமாகவே இவர்களுக்கு அதன் மேல் வெறுப்பிருந்து சமூகத்தின் பால் பற்றிருந்தது என்றால் அவர்கள் அதை போலீஸ் ஸ்டேஷனிலோ நீதிமன்ற ஊடகங்களிலோ , கொடுத்து சாமியார் ஊர் விட்டு ஓடுவதற்குள் பிடித்து மக்கள் முன் நிறுத்தியிருக்கலாமே.
அவர்களுக்கு தேவை இதொன்றுமல்ல. பணம். மலம் விற்றாலும் பணம் வர வேண்டும் அவ்வளவு தான். அதை தான் செய்தும் கொண்டிருக்கிறார்கள் . நுகர்வோர்கள் இருக்கும் வரை வியாபாரிக்கு என்ன கவலை

Thenammai Lakshmanan சொன்னது…

//இது தொடர்பாகத் தார்மீகக் கோபத்துடன் (கவனியுங்கள்.அங்கலாய்ப்புடன் அல்ல.) கருத்துப் பதிவு செய்யும் பெரும்பான்மையோர்...அந்த நபரின் வழிபாட்டாளர்கள் அல்ல என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்.
இது ,தனி ஒரு மனிதனின் அறம் சார்ந்த பிரச்சினையாக,அவன் மட்டுமே சார்ந்த அந்தரங்கப் பிரச்சினையாக இருந்தால்...அதற்குள் மூக்கை நுழைப்பது நிச்சயம் தவறுதான்.//

WELL SAID AMMA ....

அண்ணாமலையான் சொன்னது…

இது பற்றி விரிவாக பேச வேண்டும்... ஆனால் பேச வேண்டிய அவசியமில்லை, ஏனெனில், மக்களிடையே சுய விழிப்புணர்வு வராத வரை எதுவும் உபயோகமில்லை...

நிகழ்காலத்தில்... சொன்னது…

மறுமொழிகளில் எனக்கு உடன்பாடே..

வாழ்த்துகள் சகோ..

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

முளையிலே கிள்ளாதப் பிரச்சனை.. தும்பை விட்டு வாலைபிடிக்கும் கதை இதேல்லாம்.. இன்னும் இன்னும் நாம பல குரு க்களை சாமிகளாக கொண்டாடும்வரை எப்படி நிலை மாறும்.

திரு சொன்னது…

இதை ஏன் ஊதி ஊதி பெரிதாக்க வேண்டும்?
ஒருவரின் அந்தரங்க விஷயம் என்று விட வேண்டியதுதானே? ஒரு நீல படத்தை போல இதை ஒளிபரப்புவதால், பார்க்கும் மக்களின் ரசனையையும் அவர்கள் தாழ்த்தி விடுகிறார்களே!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

இந்த இரு கேள்விகளுக்குமான விடை பதிவிலேயே உள்ளது.

பெயரில்லா சொன்னது…

ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப் படுத்த முடியாது என்ற உங்கள் கருத்தினை நான் வரவேற்கின்றேன்!

//குறிப்பிட்ட நபர் சொன்ன உபதேசம்,மற்றும் நூல்களை மேன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்.
பரிமாறும் பண்டம் ருசியானதாக இருக்கிறது என்றாலும்,அது உருவான பாண்டம் எத்தனை அழுக்கானது என்பது கண்கூடாகப் புரிந்துவிட்ட பிறகு, அந்தப் பண்டம் எவருக்காவது ருசிக்குமா..? குமட்டிக் கொண்டு வந்து விடாதா என்ன. //

இன்றைய தேதியில் பல உணவகங்களில் சமையல் அறை வாடிக்கையாளர்கள் கண்பார்வையிலேயே அமைக்கப் பட்டிருப்பது, "ஒளிவு மறைவற்ற தன்மை" எவ்வளவு முக்கியமானது என்பதை உறுதி செய்கிறது. ஒரு துறவி தன்னை ஒரு அக ஒழுக்கங்கள் நிறைந்த பிரம்மச்சாரி என்றே மார்கெட்டிங் செய்திருக்கும் பட்சத்தில், அவரது இருண்ட பக்கங்கள் வெளிவரும் போது, மக்கள் கோபப் படுவது இயற்கையே என்று நினைக்கிறேன்.

கோபங்கள் நியாயமானவைதான் என்றாலும், வந்த வேகத்தில் மறைந்து போய் விடுவது நம்நாட்டின் துரதிர்ஷ்டம்தான்.

நன்றி அம்மா!

இரா.எட்வின் சொன்னது…

வணக்கம் தோழர்,
ஒரு வாரமாக உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். ஆல கால விஷம் வரைக்கும்.
பண்டங்கள் மாத்திரமல்ல பாண்டங்களும் சேர்த்துதான் பரிசீலிக்கப் படுமென்ற தங்களது கருத்துதான் எனக்கும்.

இமை சொன்னது…

மனிதன் எப்போதுமே கடவுளாக முடியாது என்பதே நிதரிசனம்.அப்படி இருக்கையில் ஒரு மனிதனை - அதாவது அவரைப் போன்றவரைக் கடவுளாகப் பார்த்து என் பக்தியைக் காட்ட வேண்டும்.
’அகம் பிரம்மாஸ்மி’’என்று கூறும்போதே கடவுள் தனக்குள்ளே இருக்கிறார் என்பது உறுதியாகிறது.
அதை ஏன் மக்கள் உணர்வதில்லை?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஒன்று அறியாமை.
மற்றொன்று மந்திரத்தால் மாங்காய் விழுவது போல இவர்களிடம் போனதுமே உலகியல் பயன்கள் - லௌகீக லாபங்கள் கிட்டிவிடாதா என்ற நப்பாசை.

raman சொன்னது…

ஒருவர் உயர்ந்த கருத்துகளைச் சொல்லிவிட்டு மிகத் தாழ்ந்த தரத்தில் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. அதனால், நல்ல கருத்துக்களைச் சொல்லும் எல்லாருமே அகத்தளவில் அவ்வளவு யோக்கியமில்லை எனும் கருத்துக்கு வலு சேர்த்தது போலாகிவிடும். ஜூலியஸ் சீஸரின் மனைவி சந்தேகங்களுக்கு இடமளிக்காத நிலை காக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல ஆன்மீகம் என்பதும் வெறும் உபதேசமாக இருக்க முடியாது இருக்கக் கூடாது. நான் சொல்வதைச் செய். நான் செய்வதைச் செய்யாதே என்று ஒரு அரசியல் பெரியவர் சொல்லிவந்ததாக நான் கேட்டிருக்கிறேன். அவரேதான் எனக்கு முட்டாள் பின்பற்றுபவர்தான் வேண்டும் கேள்வி கேட்கும் புத்திசாலி வேண்டாம் என்று சொன்னாராம். அரசியலில் / சமூகத்தில் இது இருக்கலாமோ என்னவோ. நிச்சயமாக ஆன்மீகம் என்பது வேறு தளம். அங்கே சொல்லுக்கும் செயலுக்கும் இசைவு ரொம்ப முக்கியம். அப்படி இல்லாமல் போன காவி கட்டின பலர் பட்ட பாடு இழந்த செல்வாக்கு நம் அனைவருக்கும் தெரிந்ததே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....