துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.5.10

இரு அஞ்சலிகள்


அஞ்சலி 1


ஓவியராகத் தன் வாழ்வைத் தொடங்கி எழுத்தாளராகப் பிரபலமடைந்த திருமதி அனுராதா ரமணன் காலமான செய்தி வந்திருக்கிறது.
நவீன இலக்கிய அணுகுமுறை,மற்றும் அதன் போக்குகளை ஒட்டி மதிப்பீடு செய்கையில் அனுராதாரமணனின் படைப்புக்கள் மீது பல விமரிசனங்கள் உண்டென்றபோதும் சரளமான அவரது எழுத்துநடையும்,கதையைச் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு போகும் அவரது பாணியும் தமிழ்வாசகர்கள் பலரை அவர்பால் ஈர்த்தவை.
அச்சுஇயந்திரத்தின் அசுரத் தீனியாக...வணிகமயமாக மட்டுமே பெரும்பாலான அவரது எழுத்துக்கள் மாறிப்போய்விட்டது ஓர் அவலம்தான் என்றபோதும்  அவற்றிலிருந்தும் சில தரமான சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துவிட முடியும் ; அவையே அனுராதாரமணன் என்ற படைப்பாளியின் பெயரைக் காலத்துக்கும் கூறிக் கொண்டிருக்கும்.

உடல் நோய் மற்றும் பல சிக்கலான  வாழ்க்கைச் சூழல்களிலிருந்து தன் மன உறுதியின் துணையால் மட்டுமே மீண்டெழுந்தவர் அனுராதா ரமணன்.
புற அடையாளங்களால் கணவனை இழந்த பெண் என்று காட்டிக் கொள்ள வேண்டியது அவசியமற்றது என்று ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உரத்து முழங்கியதோடு தன் சொந்த வாழ்விலும் இறுதி வரை அதைக் கைக் கொண்டு வாழ்ந்தவர் அவர்.
அவர் பற்றிய சில நினைவுகளை மீட்டியபடி அவருக்கு அஞ்சலி.

...........................................................................
அஞ்சலி 2

கடந்த ஆண்டு இதே நாட்களின் நினைவில் தோய்ந்தபடி  .........
ஈழக் கவிஞர்களின் சில கவிதை வரிகளோடு ஒரு அஞ்சலி

மரணம்...
காரணம் அற்றது
நியாயம் அற்றது
கோட்பாடுகளும் விழுமியங்களும்
அவ்வவ்விடத்தே உறைந்துபோக
முடிவிலா அமைதி.
----------------------------
அன்றைக்குக் காற்றே இல்லை
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்

நன்றி; நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன்

மண்
என்னை
என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே
என் மண்ணை எங்கே புதைப்பாய்.
...............................
விடுதலை
சாகடிக்கப்படலாம்
நாங்கள்
தோற்கடிக்கப்படமாட்டோம்

நன்றி;நறுக்குகள்-காசி ஆனந்தன்.

6 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

மிகச் சிறந்த அஞ்சலி அம்மா.. என் சொல்ல..?

ஸாதிகா சொன்னது…

சிறப்பாக அஞ்சலி செய்து இருக்கின்றீர்கள் மேடம்.நானும் என் இடுகையில் அனுராதா ரமணன் பற்றி எழுதி இருக்கின்றேன்.நேரம் கிடைக்கும் பொழுது வந்து பாருங்கள்!http://shadiqah.blogspot.com/2010/05/blog-post_18.html

ஷர்புதீன் சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு!
என்னுடைய சிறுவயதில் ராஜேஸ்குமாரைத் தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் அம்மாவோ , திலகவதி, வாஸந்தி, அனுராதா ரமணன் என்று படித்துக்கொண்டிருப்பார். அவரின் எழுத்துக்களைப் படித்ததில்லையே தவிர அவரது எழுத்தில் மற்றும் அவரது உள்ளத்தில் உள்ள தைரியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் , அவரது மறைவுக்கு எனது அஞ்சலிகள்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

எனது அஞ்சலிகளை சேர்ப்பிக்கிறேன்.
சிறப்பாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல ஒரு எழுத்தாளருக்கு அருமையான அஞ்சலி.

தமிழ்நதி சொன்னது…

'அச்சுஇயந்திரத்தின் அசுரத் தீனியாக...வணிகமயமாக மட்டுமே பெரும்பாலான அவரது எழுத்துக்கள் மாறிப்போய்விட்டது ஓர் அவலம்தான் "

என்ற உங்கள் கருத்து பிடித்தது. இன்றும்கூட சிலர் அப்படித்தான் எழுதுகிறார்கள். இயந்திரவேகத்தில் ஆன்மாவைக் கொண்டுவர முடியுமா.. தெரியவில்லை. சிலருக்கு முடிகிறதோ என்னவோ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....