மணிரத்தினத்தின் படங்களின் மீது ஆங்காங்கே சில விமரிசனங்கள் இருந்தபோதும் வெவ்வேறான அவரது கதைக் களங்கள், சில வித்தியாசமான பார்வைகள், புத்திஜீவித் தனமான அணுகுமுறைகள்,காமரா கோணங்கள் ஆகியவற்றின் மீது ஓரளவு மதிப்பு இருந்து கொண்டிருந்தது உண்மைதான்.....!ஆனால் ஆயுத எழுத்தில் சிதைந்துபோகத் தொடங்கிய மணியின் பிம்பம் இராவணனில் அடியோடு சிதைந்து நொறுங்கிப் போகுமென்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இராவணன் வெளியீட்டை ஒட்டித் தமிழகப்பயணம் இருந்ததால் அதையும் ஒரு கை பார்த்துவிட எண்ணித் திரையரங்கின் உள்ளே நுழைந்துவிட்டுப் பிறகு ஒரு இயக்குநரின் வீழ்ச்சியை எண்ணி மனம் கனத்துப் போக.....வீணே வரவழைத்துக் கொண்ட சித்திரவதைதானே இது!
கர்ணன் கதையைத் தளபதியாக்கிய பாணியில் கூட ஒரு நயமும் நறுவிசும் இருந்தது. இராவணனிலோ குழப்பம் என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே மிச்சமில்லை.
சூர்ப்பனகையின் இடத்தில் சிறுமைப்பட்ட சகோதரிக்காகப் பழி வாங்க வேண்டித் தன் கணவனைக் கடவுளாக(ராமன்?) எண்ணும் ராகினியாகிய சீதையைக் கவர்ந்துவரும் வீரா என்ற இராவணன் , மனதுக்குள் சலனம் சம்பவித்தபோதும் அவளைத் தீண்டாமல் காட்டுச் சிறையில் வைக்க , வாலியை மறைந்து நின்று கொன்ற இராமனைப் போலத் தன மனைவியின் கற்பைக் கேள்விக் குறியாக்கி அந்தக் கவசத்துக்குள் மறைந்து நின்றபடி வீராவைக் கொன்று தீர்க்கிறான் ராகினியின் போலீஸ் கணவனாகிய இராமன்.
இடை இடையே கும்பகர்ணனை நினைவுபடுத்த ஒரு பிரபு ,அனுமனை நினைவுகூர ஒரு கார்த்திக் என்று அடுக்கடுக்கான கத்துக் குட்டித் தனங்கள்.
இப்படி ஒரு சிறுபிள்ளைத் தனமான கதைக்கு மணிரத்தினம் எதற்கு?
விக்கிரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் அற்புதமான நடிப்பும்,படக் குழுவினரின் கடும் உழைப்பும் காட்சிக்குக் காட்சி கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தாலும் சாரமில்லாத கதை பிற எல்லாவற்றையும் பொருளற்றதாக...கேலிக் கூத்தாக ஆக்கி விடுகிறதே?
படத்தின் ஒரே ஆறுதல் பிரம்மாண்டமான காட்சி அமைப்புக்களும், காடு மலை அருவிகளில் சுற்றி அலையும் காமராவும்தான் என்றாலும் அங்கேயும் ஒரு நெருடல்! காட்டின் அழகையும் அமைதியையும் ஒருபுறம் ரசித்தாலும் அவற்றைக் காட்சிப்படுத்தக் காட்டின் அமைதி எந்த அளவு குலைந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தாலும் கூட இயற்கையை நேசிப்பவர்களுக்கு மனம் அதிலிருந்தும் அன்னியமாகிவிடுவது உறுதி.
நாயகனில் படிப்படியாக வேலு நாயக்கரின் நாயக பிம்பத்தை வளர்த்தெடுத்த மணிரத்தினம்,வீராவின் நாயக பிம்பத்துக்கான காரணத்தை எங்குமே தெளிவாகக் காட்டவில்லை.
பொதுப்படையாக ஒரு போற்றிப் பாடல் ....ஒடுக்கப்பட்டவன்,மேட்டுக்குடி என்ற வசனம் ..அந்த அளவில் எந்த மண்வாசனையும் படத்தில் இனம் காணக் கூடியதாக இல்லை..
தன் மீது சந்தேகம் கொண்டு அதையே எதிரியைப் பிடிக்க வலையாய் விரித்த கணவனை ராகினி (ஐஸ்வர்யா) நிராகரித்துவிட்டுப்போவது போலக் குறிப்பாகவாவது இறுதியில் ஒரு காட்சி வந்திருந்தால் குறைந்த பட்சம் அந்தத் துணிவுக்காகவாவது படத்தைக் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.(அக்கினிப் பிரவேசம் செய்ய மறுக்கும் சீதையாக )
ஆனால் இயக்குனருக்கு யார் மீது அச்சமோ ....ராகினி உறைந்து நிற்பதோடு படம் முடிந்து விடுகிறது.
சண்டையும் கூச்சலுமாக ....இரைச்சலும் குத்துவெட்டுமாகப் படமெடுக்க நிறையப் பேர் உண்டு.
ஆனால் மௌன ராகம்,ரோஜா,பம்பாய்,அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் தந்த மணிரத்தினத்திடம் அவற்றை எதிர்பார்க்காததால் ஏமாற்றமே எஞ்சி நிற்கிறது.
மணிரத்தினத்தின் பழைய பொற்காலங்களில் இளைப்பாறிக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
7 கருத்துகள் :
இராவணனிலோ குழப்பம் என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே மிச்சமில்லை//
மிகச் சரியான கணிப்பு அம்மா..
எதிர்பார்த்துச் சென்று எதிர் கொண்ட இயலாமையை
இயல்பாய் எழுதியிருக்கிறீர்கள்.
அழகிய இயற்கைக்காட்சியை பார்க்கும் போதிலும்,
படமாக்கப்படும் போது, இயற்கை பட்ட பாட்டுக்காய்
உங்கள் இலவு மனசு ஏங்குவது மிகவும் வித்தியாமானதுதான்.
'எதிர்பார்க்காதே, குறைந்தது ஏமாற்றம் இருக்காது' என்பதை
உங்கள் இந்த அனுபவத்தால் புரிந்து கொண்டேன். நன்றி.
இத்தனை பதிவர்கள் எழுதிய பிறகும், ஏன் அந்த சித்திரவதையை விரும்பி பெற்று கொள்கிறீர்கள்.
அதுவும் பணத்தை செலவு செய்து திரை அரங்கு சென்று.
இந்த மாதிரி படங்களை நாம் இலவசமாக இணையத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். அதுதான் நாம் செய்யும் நன்றி கடன்.
உண்மைதான்.மணிரத்தினம் இனி ஓய்வு எடுத்தால் நல்லது
Hello there, I am Sathish Kumar from Madurai, working here in Dubai.
From May 14th to June 24th - I was on my vacation
Prior to depart from here, I have planned to watch movie RAVANAN with my family
As I decided this, I avoided all other movie which were release during this interval.
Just am wondering about your reivew in tamilish.com - you are reflecting my view
When we reached home and sharing the view of the movie to others
What you wrote on your column the same I told them too
Very good REVIEW - keep it up
Am composing this mail to appreciate and congratulate you
உங்கள் விமர்சனம் மிக அருமை..
மணிரத்தினம் பற்றி எனக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. இந்தியாவில் 'இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' களில் ஒருவர் மணி.
//தன் மீது சந்தேகம் கொண்டு அதையே எதிரியைப் பிடிக்க வலையாய் விரித்த கணவனை ராகினி (ஐஸ்வர்யா) நிராகரித்துவிட்டுப்போவது போலக் குறிப்பாகவாவது இறுதியில் ஒரு காட்சி வந்திருந்தால் குறைந்த பட்சம் அந்தத் துணிவுக்காகவாவது படத்தைக் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.(அக்கினிப் பிரவேசம் செய்ய மறுக்கும் சீதையாக )
ஆனால் இயக்குனருக்கு யார் மீது அச்சமோ ....ராகினி உறைந்து நிற்பதோடு படம் முடிந்து விடுகிறது//
இது தான் நீங்கள்,ஆனாலும் ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு சுசீலாம்மா.
கருத்துரையிடுக