துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.8.10

வ.ராவின் 'உயர்' கனவு

நடப்புலகில் காண இயலாத கனவுச் சமூகம் , குறைகளே இல்லாத இலட்சியச் சமூகம் ஆகியன
 ‘உயர் கனவுச் சமுதாயம்’( Utopian Society) என்னும் தொடரால் குறிப்பிடப்படுகின்றன.

இச் சமுதாயம் பற்றிய சிந்தனை சித்தாந்த அளவில் ப்ளேட்டோவினால் உருவாக்கப்பட்டிருந்தபோதும் அக்கோட்பாட்டுக்குக் கலை வடிவம் தந்து முதன் முதலில் உருவாக்கியவர் சர் தாமஸ் மூர் என்பவர்.
‘யூடோபியா’ என்னும் பெயரைக் கொண்ட அவரது நாவல், அரசியல்,சமூக அமைப்புக்கள் அப்பழுக்கின்றிச் செயல்படும் ஓர் அதீத அற்புதத் தீவைக் கற்பனையாகப் படம் பிடித்துக் காட்டியது.
தாமஸ் மூரை முன்னோடியாகக் கொண்டு ஆங்கில மொழியில் பல உயர்கனவு நாவல்கள் வெளி வந்தன.

தமிழ்நாவல் வரலாற்றில் இவ்வரிசையில் வந்த முதல் நாவல் , பாரதியின் சீடராகிய வ.ரா.எழுதிய ‘கோதைத் தீவு’ என்னும் ஆக்கம்.


வ.ரா.,மணிக்கொடி குழுவைச் சார்ந்த எழுத்தாளர்.
விடுதலை இயக்கத்தையும்,சீர்திருத்த இயக்கத்தையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் , அதன் ஒரு பகுதியாகப் பெண்மைச் சமத்துவத்தை வலியுறுத்துவதைத் தம் நாவல்களின் கருப்பொருளாகத் தேர்ந்து கொண்டார் அவர்.

'சுந்தரி’,’சின்னச் சாம்பு’,’விஜயம்’என்ற தனது நாவல்களில் இளமை மணம், விதவைநிலைக் கொடுமை ஆகியவற்றை நடப்பியல் போக்கில் சித்தரித்த அவர் , பெண்மைக்கு முதன்மை அளிக்கும் ஒரு சமுதாய அமைப்பு ஏற்படுமானால் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதைக் கனவுப் போக்கில் காட்ட விழைந்ததன் விளைவே ,கோதைத் தீவு’ நாவல்.

நடப்பியற் சமூகத்தில் நிலவும் குறைகளுக்கு மாற்றுக் காணும் முயற்சியாகவே கனவுச் சமூகங்கள் படைக்கப்படுவதால் அவை,நடப்பியற் கட்டமைப்பை மாற்றிச் சமூக மீட்டுருவாக்கம் செய்வதை இலக்காய்க் கொண்டிருக்கின்றன.

‘கோதைத்தீவு’நாவலில் வ.ரா காட்டும் நடப்பியற் சமூகமும்,கனவுச் சமூகமும் இரு துருவங்கள் போலத் தமக்குள் மாறுபட்டவை.

மரபுவழிப்பட்ட இந்திய சமூகத்தில் நிலவும் குறைகளுக்கு மாற்றாகவே கோதைத்தீவு என்ற கற்பனைச் சமூகம் ஒன்று நாவலில் உருவாக்கப்படுகிறது.
ஆண்களின் ஆதிக்கப் போக்கினைக் கண்டு மனம் நொந்து அவர்களைப் புறக்கணிக்கும் நோக்குடனேயே கடவுளைத் தனது கணவனாகத் தேர்ந்து கொண்டவள் ஆண்டாள் எனக் கற்பனை செய்தவர் வ.ரா. ;
 (அது தனி ஒரு பதிவிற்கு உரியது)
அதனாலேயே தான் உருவாக்கும் பெண் முதன்மைச் சமூகத்துக்கும் 'கோதைத் தீவு' என ஆண்டாள் பெயரையே சூட்டி மகிழ்கிறார்.

கோதைத் தீவு காட்டும் கற்பனைச் சமூகத்தின் வாழ்க்கைத் தத்துவம் ,பெண் சுதந்திரத்தை மையமிட்டதாக அமைந்திருக்கிறது.
மரபுவழிச் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மாற்றாக இப் புதிய சமூகம் பெண்களாலேயே உருவாக்கப்பட்டதை நாவல் இவ்வாறு குறிப்பிடுகிறது;
''இந்தத் தீவுக்குத் துவக்கத்தில் நூறு பெண்கள் வந்தார்கள்; ......ஆண்மக்கள் பெண் மக்களைப் படுத்தும் பாட்டைப் பார்த்துப் பொறாதவர்களாய் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்தார்கள்.....பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்விடுதலையில் நாட்டமுள்ள ஆண்பிள்ளைகள் இங்கு வந்தனர்.அவர்கள் நூறு கன்னிமார் வகுத்த சட்ட திட்டங்களை ஒப்புக்கொண்டு வாழ்ந்து வந்து இவர்களுடன் மணம் செய்து கொண்டார்கள்''

கட்டாயத் திருமணம்,சீதனம்,.தேவதாசி முறை ஆகியவற்றை ஒழிப்பதோடு அக்காலகட்டச் சூழலில் நம்பவே முடியாத ஒரு புதுமையைச் செய்கிறது இந்நாவல்.
கோதைத் தீவின் சட்ட திட்டங்கள் , பயிர்த்தொழில், இராணுவம் ஆகிய துறைப் பயிற்சிகளை இரு பாலாருக்கும் கட்டாயமாக்கியது போலச்
சமையல் பயிற்சியையும் இருசாராருக்கும் பொதுவானதாக்குகின்றன கோதைத் தீவின் சட்ட திட்டங்கள் .

''இந்நாட்டிலே முதலாவதாக ஆண்களுக்கும்,பெண்களுக்கும் கட்டாயமாகச் சமையல்பழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.ஜெர்மனியில் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சி இருந்தது போல இந்த நாட்டில் முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு ஓராண்டு கட்டாயச் சமையல்பயிற்சி போதிக்கப்படுகின்றது...........எந்த வீட்டிலும் ஆணுக்குத் தோதில்லாத சமயத்தில் பெண்ணும், பெண்ணுக்குத் தோதில்லாத
சமயத்தில் ஆணும் சமைக்க வேண்டும்''

வீட்டுக் கடமைகளில் ஆண் பங்கேற்பது போலப் பெண்ணுக்குச் சமுதாயக் கடமைகளாகிய அரசியல் , சமயம், போர்த்தொழில் ஆகியவற்றில் சம பங்கு அளிக்கப்படுகிறது.

விதவைத் திருமணத்திலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் வ.ரா.
காலம் காலமாக விதவை என்ற சொல்வழக்கு பெண்ணுக்கு மட்டுமே வழங்கி வந்ததைக் கோதைத் தீவு மாற்றுகிறது .

கணவனை இழந்த பெண் 'மூளி ' என அழைக்கப்பட்டால் மனைவியை இழந்த ஆணுக்கு 'மோழை'என மாற்றுப் பெயரளிக்கிறார் வ.ரா.
மறுமணமும் கூட மோழைக்கும் மூளிக்கும் இடையில் மட்டுமே நடைபெறுகின்றன.

மரபுவழிப் புராணக் கதைகளுக்கும் பெண்ணுரிமை நோக்கில் புது விளக்கங்கள் தருகிறது நாவல்.
அகலிகையின் கதை புதுமைப் பித்தனால் 'சாப விமோசனமா’க மறு ஆக்கம் பெற்றது போல் கோதைத் தீவில் நிகழும் நாடகம் ஒன்றில் அகலிகை வழக்கு மறு ஆய்வு செய்யப்பட்டு அவளைக் கல்லாகுமாறு சபித்த கௌதமனே குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பெண்ணை இழிவுபடுத்தும் புராணங்கள்,  பட்டினத்தார் பாடல்கள் முதலியவை தீவில் தடை செய்யப்படுகின்றன.

பெண் தவிர்ந்த சமூகத்தின் பிற துறை மீட்டுருவாக்க முயற்சிகளும் தீவில் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்கள் அனைவருக்கும் ஒரே வகை வீடு,நில ஒதுக்கீடு,
கள் சாராய ஒழிப்பு,நிர்வாக சீர்திருத்தம் எனப் பல சீர்திருத்தங்கள் நாவலில் விவரிக்கப்படுகின்றன.

சமூகத் தேவைக்கேற்பவே இலக்கிய ஆக்கங்கள் உற்பத்தியாகின்றன
2010இன் இலக்கிய அளவுகோல்களைக் கொண்டும்,
இன்றைய பெண்ணியப் போக்குகளை மனதில் கொண்டும் 'கோதைத்தீவை' மதிப்பிட முயல்வது அபத்தமானது.
நாட்டடிமை பெண்ணடிமை ஆகியவை உச்ச கட்டத்தில் நிலவிய 1945இன் காலத் திரையின் பின் புலத்தில் பொருத்தி வைத்துப் பார்க்கும்போதுதான் தன் சம கால நாவலாசிரியர்களின் பிற்போக்குத் தனங்களையெல்லாம் விஞ்சி மேலெழுந்து விசுவ ரூபம் எடுத்து நிற்கும் வ.ராவின் தீர்க்கதரிசனப் பார்வை விளங்கும்.
பின் குறிப்பு;
'80 களில் இந்த நாவலத் தேடித்தேடிக் கோட்டையூர் ரோஜா முத்தையா அவர்களின் (அன்றைய)நூலகத்தில் கண்டடைந்து நாவல் முழுக்கக் குறிப்பெடுத்து வந்த நாளின் நினைவு , நெஞ்சில் பசுமையுடன் பதிந்திருக்கிறது.
இன்று அத்தகைய சிரமமான தேடலுக்குத் தேவையின்றி சென்னை செண்பகா பதிப்பகம் அதை மறு பதிப்புச்செய்திருக்கிறது.

 தன் எழுத்தாலும் சமூகக்கரிசனத்தாலும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும் வ.ராவின் அதிகம் படிக்கப்படாத இந்த நாவலை இதன் வடிவ அமைப்பாலும்,உள்ளடக்கப் புதுமையாலும் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே கொள்ள முடியும்.
அக்கிரகாரத்தின் அதிசய மனிதர் என்று போற்றப்பட்ட வ.ராவின் அதிசயத்தை....பெரியாருக்குச் சற்றும் சளைக்காத அவரது பெண்ணியச் சிந்தனைகளை அவரது அக்கிரகாரப் பின்னணியே இருட்டடிப்புச் செய்துவிட்டது சற்று வருத்தத்திற்குரியதுதான்..

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வ ரா பற்றி மிக அருமையான பகிர்வு அம்மா.. நான் கேள்விப்பட்டிராதது..

என்னுடைய வலைத்தளத்தில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கேனம்மா..
உடனடியாக உங்களைப் பற்றிப் படிக்க http://ladiesspecial.com என்ற லிங்க் இல் படிக்கவும் அம்மா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....