துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.10.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 6

பெண்ணிய வகைகள்;
பெண்ணியக் கோட்பாட்டின் காலப்போக்கிலான வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு
மிதவாதம்,
சமத்துவம்/மார்க்ஸியம்,
தீவிரம்
ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக (இன்னும் சில உட்பிரிவுகளாகவும் கூட)
பெண்ணியத் திறனாய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
இப் பாகுபாடுகள் அனைத்துமே பெண் எழுச்சியையும்,மறுமலர்ச்சியையும் இலக்காய்க் கொண்டவை என்றபோதும் அவற்றின் அணுகுமுறைகளில் சில மாறுபாடுகள் உண்டு.
மிதவாதப்பெண்ணியம்..
உலக அளவிலும்,இந்தியச் சூழலிலும் பெண்ணியச் சிந்தனை முகம் கொண்ட
தொடக்க காலகட்டத்தில் அது மிதவாதப் போக்குடையதாகவே இருந்தது.
சமூகத்தில் காலங்காலமாக நிலைத்துப்போன மரபுவழி நிறுவனங்களையும்,மதிப்பீடுகளையும் பெரிய மாறுதல்களுக்கு உட்படுத்தாமல் - அதே வேளையில் பெண்ணின் நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டது மிதவாதப்பெண்ணியம்.
பெண்ணைப் பிணித்திருந்த மூடத் தளைகளிலிருந்து அவளுக்கு விடுதலை தருவதையும்,அவள் இழந்திருந்த அடிப்படை உரிமைகளை அவளுக்கு மீட்டுத் தருவதையும் அது பெரிதும் வலியுறுத்தியது.
இளமை மணம்,பொருந்தாமணம்,கைம்மைக் கொடுமை,கல்வி மறுப்பு ஆகிய  சிக்கல்களிலிருந்து பெண்ணுக்கு விடுபாடு வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டிய அளவுக்கு ஒட்டு மொத்த சமூக அமைப்பிலேயே மாற்றம் வேண்டுமென்பதற்கு மிதவாதப்பெண்ணியம் போதிய அழுத்தம் தரவில்லை.நிறுவனங்களாகி நிலைத்துப்போன கருத்து நிலைகளுக்கு ஆதரவாகவும்,மரபின் அடிப்படையிலான பழைய மதிப்பீடுகளை முன் மொழிவதாகவுமே மிதவாதப் பெண்ணியம் அமைந்தாலும்,பெண் சார்ந்த சிக்கல்களைப் பரிவோடு அணுக வேண்டும் என்ற மிதவாதப் பெண்ணியத்தின் குரலே பெண்ணியத்தின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது என்பதால் அதன் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட இயலாது.
சமத்துவப்பெண்ணியம்;
கல்வி போன்ற ஆதாரமான உரிமைகள் மீட்கப்படுவதனாலேயே பெண்ணின் பிரச்சினை முடிந்து விடுவதில்லை என்பதையும்,இளமை மணம்,விதவை நிலை ஆகிய கொடுமைகள் குறைந்தாலும் பாலின அடிப்படையில் நிலவும் சமத்துவமற்ற போக்கு மாற்றம்பெறும் வரை பெண் ஒரு ‘மனிதப்பிறவி’யாக ஏற்கப்படுதல் கடினம் என்பதையும் சுட்டிக் காட்டியது சமத்துவப்பெண்ணியம்.
பொருளாதார உற்பத்தி மதிப்பின் அடிப்படையிலும் பெண் சம மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்பது இவ்வகைப்பாட்டின் சாரமாக அமைந்தது.
திருமண-குடும்பஉறவுகள்,பரஸ்பரநட்பு,மரியாதை,,புரிதல்,விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல்,ஆண் செலுத்தும் மேலாதிக்கத்தின் அடிப்படையில் அமையும்போது குடும்ப நிறுவனத்தில் சமத்துவமின்மை ஏற்படுகிறது.குடும்பத்திற்குள் பெண்ணின் உழைப்பு மிகுதியாகச் சுரண்டப்பட்டு அளவுக்கு அதிகமான பணிக்குவிப்பு அவள் மீது சுமத்தப்பட்டாலும் வீட்டிற்குள் அவள் செய்யும் வேலைகளுக்கான பொருளாதார மதிப்பு,வெளி வேலையில் ஈடுபடும் கணவனுக்கு நிகரானதாகப் பொதுவாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை.குடும்ப சமூகக் களங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கும் உரிமைகள் பெரும்பாலும் ஆணுக்குரியனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.(இந்நிலைப்பாட்டில் சில விதி விலக்குகள் இருக்கலாம்.அவற்றின் விழுக்காடு மிகக் குறைவானதே).
இதற்கு நேர் மாறாகக் குடும்ப நன்மைக்காகப் பெண் தன் விருப்பங்களையும்,ஆர்வங்களையும் கள பலியாக்க வேண்டும் என்பதே சமூக எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆண்-பெண் இருவர் சம்பந்தப்பட்ட குடும்ப உறவில், பாலுறவை விரும்பாதபோது நிராகரிப்பதற்கும்,குழந்தைப் பேறு எப்பொழுது வேண்டும் என்று முடிவெடுப்பதற்கும் கூடச் சில சூழல்களில் பெண்ணுக்குச் சமபங்கு இருப்பதில்லை.
கருப்பை பெண்ணின் வயிற்றில் இருந்தாலும் அது அவள் வசத்தில் இல்லை என்பது வேதனையோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மையாகும்.
பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்ணுக்கு ஆணுக்கு நிகரான மதிப்பும்,மரியாதையும் தருவதில் தயக்கங்கள் நீடிப்பதையும்,அவள் இரண்டாந்தரப்பிரஜையாகவே நடத்தப்படுவதையும் இன்றைய கால கட்டத்திலும் கூட காண முடிகிறது.
இக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் சமத்துவப் பெண்ணியம் பாலின அடிப்படையில் நிலவும் அசமத்துவப் போக்கு சமூகத்திலிருந்து அகற்றப்பட்டாக வேண்டும் என்பதையும்,வெளி வேலைகளில் பெண்களும் பங்கு பெறத் தொடங்கி விட்டதால் இல்லறக் கடமைகளைப் பகிர்ந்து கொள்ள ஆண்களும் முன்வர வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தீவிரப் பெண்ணியம்;
பாலினச் சமத்துவம் என்பது அரசியல் அமைப்புச் சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தபோதும் நடைமுறையில் அது சரிவரச் செயலாக்கம் பெறாததால் அதனைக் 'காகிதச் சமத்துவம்'என்று பழிக்கும் தீவிரப் பெண்ணியம் தீவிரமான ஆண் எதிர்ப்பு நோக்குடையது.
பெண் என்பவள் ஓர் உடலாக மட்டுமே பார்க்கப்படுவதை எதிர்க்கும் இக் கோட்பாடு பால் அடிப்படையில் பெண்ணை ஒடுக்கு முறைகளுக்கு ஆளாக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் எதிராகத் தன் கருத்தை வைக்கிறது.
தேவை ஏற்பட்டால் குடும்ப அமைப்பு இன்றியும்,ஆணின் சார்பு இன்றியும் ஒரு பெண்ணால் தனித்த சுதந்திரத்துடன் வாழ முடியுமெனக் கூறும் தீவிரப் பெண்ணியம்,பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாதபோது மரபு வழி நிறுவனங்கள் உடைக்கப்படுவதில் தவறில்லை என்ற கருத்தோட்டத்தையும் கொண்டிருக்கிறது.உடலியற்கூற்றின் அடிப்படையில் பெண்ணுக்குத் தனி முத்திரை குத்துகிற அனைத்தையும் எதிர்ப்பது தீவிரப் பெண்ணியம்.
இயற்கைக்கு மாறான கருத்துக்களை இவ்வகைப் பெண்ணியம் பேசுகிறது என்ற கண்டனம் ஒருபுறம் எழுந்தாலும் பாலினச் சமன்பாடற்ற நிலையே பெண்ணை இத்தகைய தீவிர நிலைக்கு இட்டுச் செல்கிறது என்ற புரிதல்
 பிறந்தால் சமூகக் கோளாறுகளைச் சரி செய்ய இயலும்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரை பாரதி,வ.ரா.,மாதவையா ஆகியோர் மிதவாத மற்றும் சமத்துவப் பெண்ணியக் கருத்துக்களைத் தங்கள் படைப்புக்களில் முன் மொழிந்தவர்களில் சிறப்பானவர்கள்.

''நவீன காலத் தனிக் குடும்பம் என்பது பகிரங்கமாகவோ,மறைமுகமாகவோ உள்ள வீட்டடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது'''
எங்கல்ஸ்..
என்ற எங்கல்ஸின் கூற்றுக்கு மிகப் பொருத்தமான ஒரு தமிழ்க் குடும்பச் சூழலைத் தன் ,வீடு'நாவலில் சித்தரித்துச் சமத்துவப் பெண்ணியத்தை உயர்த்திப் பிடித்த ராஜம் கிருஷ்ணன் பெண்ணின் மன அழுத்தங்கள் எல்லை மீறுகையில் அது அவளைத் தீவிர நிலைக்கு இட்டுச் சென்று விடலாம் என்றும் தன் படைப்பின் வழி எச்சரிக்கை விடுக்கிறார்.
ஈ.வே.ரா.பெரியார்,வ.ரா.,ஆகியோர் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தீவிரப் பெண்ணியப் பொறிகளைப் பற்ற வைத்தபோதும் ,90களுக்குப் பின் தமிழ்ப் புனைவில் அம்பையின் வருகைக்குப் பின் அது புதிய வீச்சுக்களுடனும் பலவகைப் பரிமாணங்களுடனும் வெளிப்படத் தொடங்கி,இன்றைய பெண் கவிஞர்களாலும்,கதைப் படைப்பாளிகளாலும் 'பெண் மொழி'யாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

பி.கு;கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வகைக்கும் பல படைப்பாளிகளையும்,சிந்தனையாளர்களையும் இனம் காட்ட முடியும்;இக் கட்டுரை,கோட்பாட்டையே பெரிதும் முன்னிலைப்படுத்துவதால் சான்றுக்கு ஒரு சிலர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.மூன்று வகைமைகளும் சார்ந்த   படைப்பாளிகள் குறித்த விரிவான பார்வை,தனிப்பதிவிற்கு உரியது.
காண்க...

5 கருத்துகள் :

ஷஹி சொன்னது…

ரொம்பவும் எஜுகேடிவான பதிவு அம்மா, நானும் இன்று இது சம்பந்தமான ஒரு பதிவே இட்டு இருக்கிறேன். உமாமகேஸ்வரியின் "மரப்பாச்சி" நூல் பற்றியது...

என்னது நானு யாரா? சொன்னது…

கட்டுரை மிகவும் அருமையாக தந்திருக்கிறீர்கள்! விட்டுப்போன மற்ற பகுதிகளையும் படிக்கிறேன். இந்த புரிதல் எல்லோருக்கும் இருக்குமானால் பெண்கள் எவ்வளவோ சந்தோஷப்படுவார்கள்! நன்றி அக்கா!

suneel krishnan சொன்னது…

நேர்த்தியாக தொகுக்க பட்டுள்ள தகவல்கள் .மிக்க நன்றி , தொடர்ந்து மட்டற்ற பகுதிகளையும் படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்

சென்ஷி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் அம்மா..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி திரு சென்ஷி...வலைப்பூ என்னும் வரத்தையும் பாருங்கள்.கதைகளை அனுப்ப முகவரி தந்தால் அனுப்பி விடுகிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....