துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.10.10

வாசிப்பின் நாள்...

வாசிப்பின் நாளாகிய இன்று ...தற்செயலாக - முதன்முதலில் படிக்க வாய்த்த அருமையான ஆக்கம்...,.
’புத்தகம் பேசுது’,அக்.2010 இதழில் வெளிவந்துள்ள எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘’புத்தகம் படிப்பது எப்படி?’’என்ற அருமையான கட்டுரை.

தொடக்கநிலை வாசகர்களை மட்டுமன்றிப் பல்லாண்டுக் காலமாக வாசிப்பைத் தொடந்து கொண்டு வருபவர்களையும் கூடச் சற்றுச் சிந்திக்க வைக்கும் கட்டுரை அது.

எத்தனையோ காலங்களாய்...எதையாவது வாசித்துக்கொண்டே இருந்தாலும் கூட ஒரு நூலை முறைப்படி அணுகி அதற்குத் தர வேண்டிய மரியாதையோடு அதை வாசிக்கிறோமா என்று ஒரு கேள்வியை எழுப்பினால் பலராலும் அதற்குச் சரியான விடையை அளிக்க முடிவதில்லை.
மேலெழுந்தவாரியாக நுனிப்புல்மேய்வது...
நான்கு பக்கம் படித்துவிட்டுப் புரியவில்லை என்றோ வெறும் குப்பை என்றோ தூக்கிப் போடுவது..
முதல்,இடை,கடை என்று ஒரு சில பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்த்துவிட்டு முழு நூலையும் படித்துவிட்டதாகப் போலிப் பெருமை கொள்வது அல்லது அதைப் பற்றி மதிப்புரை எழுதும் தகுதி வந்து விட்டதாக மனமயக்கம் கொள்வது...,
நாவல்கள் என்றால் கதை ஓட்டத்தை மட்டும் அங்கங்கே பார்த்துவிட்டுக் கடைசிப் பக்கத்தில் முடிவைத் தெரிந்து கொள்வது
(பரபரப்பை நோக்கமாகக் கொண்டிராத இலக்கியப் படைப்புக்களில் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவுதான்)
என்று ஒரு நூலை எப்படியெல்லாம் கையாளக் கூடாதோஅப்படியெல்லாம் நம்மில் பலரும் கையாண்டு கொண்டிருக்கிறோம்.

நவில்தொறும் நூல்நயம்’என்பது பழகிப்போன பழைய குறள் வாசகமாக இருக்கலாம்;ஆனால் ஒரே நூலின் வாசிப்பும் கூட ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப் பொருள் தருவதாக... புதுமையாகக் காட்சியளிக்கும் அற்புத தரிசனத்தைச் சுட்டிக் காட்டும் அரியதொரு தொடர் அது.
அங்கே புத்தகம் மாறவில்லை;படைப்பாளியும் மாறவில்லை;வாசிப்புக் கலையில் வாசகன் பெறும் புதுப் புதுப் பரிணாமவளர்ச்சிகளுக்கு ஏற்பப் படைப்பும் புதுப் புது அர்த்தத் தளங்களுக்குள் அவனைக் கரம் பற்றி அழைத்துச் செல்கிறது.

மெய்யான படைப்புக்கள் வாசகப் புரிதலையோ,வாசகக் களிப்பூட்டலையோ முன்னிறுத்தி எழுதப்படுவதில்லை.தன் அந்தராத்மாவின்..அகக்குரலின் தேடலைத் தன் எழுத்துக்களில் பதித்து அதன் வழி தனக்கொரு வடிகால் தேடும் படைப்பாளியின் முயற்சியே இலக்கிய ஆக்கமாக உருவெடுக்கிறது.குறிப்பிட்ட அந்தப்படைப்பின் அலைவரிசை...வாசகனின் அலைவரிசையோடு ஒத்தியங்கும் வேளையில் - சுகமான சங்கீதத்தில் மனமுருகி லயித்து ஒன்று கலக்கும் இசை ரசிகனைப்போல வாசகமனமும் படைப்பில் ஒன்றிணைந்து லயம் காண்கிறது.ஆனால் அந்த ஒன்றிப்பைப் பெறுவதற்கும் கூடப் பயிற்சி தேவையாகத்தான் இருக்கிறது.
காலந்தோறும் மாறிவரும் மொழிக் கூறுகள்,எடுத்துரைப்பு உத்திகள்,கதை/கவிதை மொழியில் விளைந்து வரும் மாறுதல்கள்,உள்மடிப்புப் படிமங்கள் இவற்றையெல்லாம் தொடர்ந்த வாசிப்பு என்ற ஒன்றால் மட்டுமே எதிர்கொள்ளவும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்லவும் முடியும்.அதைச் செய்யாமல் விட்டு விட்டு என்றோ இளமைக் காலத்தில் ஆதர்சமாக விளங்கிய குறிப்பிட்ட ஒரு படைப்பாளியை மட்டுமே அளவுகோலாகப் பிடித்துக் கொண்டு ’அதைப்போல இது இல்லை ’என்று வறட்டுப்பிடிவாதம் காட்டினால் நாம் தேங்கிப் போய்விட்டோம் என்பதுதான் பொருள்.

புறவயமான பயன்பாடுகளை முன்னிறுத்தாமல் வாசிப்பதும் கூட
(பொதுவாகப் படிப்பு என்பது தேர்வு அல்லது பணித் தொடர்பாக மட்டுமே நிகழ்கிறது என்பது சமூகப்பொதுப் புத்தியில் படிந்து விட்டிருக்கும் ஒரு கருத்தாக்கம்)
இன்றைய சூழலில் ஒரு வியப்பிற்குரிய செயலாகத்தான் மதிப்பிடப்படுகிறது.
நாளிதழ்,வார இதழ்கள் தவிர வேறு தடிமனான புத்தகம் எதுவும் கையில் இருந்தால் ,
‘’இதெல்லாம் இன்னுமா படிச்சுக்கிட்டு இருக்கீங்க?’’
என்று ஏதோ தப்புக் காரியம் செய்கிறவரைப் பார்ப்பது போலப் பார்வையால் அளவெடுத்து விட்டுப் ‘பிழைக்கத் தெரியாத முட்டாள்’என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு போகும் கூட்டமும் இன்று இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இத்தனையையும் மீறி ....வாசிப்பு இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது.
நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் வாசகர்களும் இன்று அதிகரித்திருக்கிறார்கள் என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

ஆர்வமுள்ள அவ்வாறான வாசகர்கள் தவறவிடாமல் படித்தாக வேண்டிய கட்டுரை - இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகம் படிப்பது எப்படி? என்னும் ஆக்கம்.
.
1926 ஆம் ஆண்டில் வர்ஜீனியா வுல்ப் (Virginia Woolf) எழுதியிருக்கும் 'How Should One Read A Book'என்ற சிறு கட்டுரையை முன் வைக்கும் ராமகிருஷ்ணன்
’’83 வருடங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது’’
என்று குறிப்பிட்டபடி அதில் இடம் பெற்றுள்ள சில பரிந்துரைகளை எடுத்துக் காட்டுகிறார்.
எந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும்போதும் முன் முடிவுகள் இன்றித் திறந்த மனத்தோடு அதை அணுகுதல்,
வாசிப்பதன் ஜீவனை உள்வாங்கிக் கொள்ள,அதைக் கற்பிதம் செய்து கொள்ள,அதன் வழி ஏதோ ஒன்றைக் (தகவல்,அறிவுத் தொகுப்பு,உண்மை,வாழ்வியல் அனுபவம் )கற்றுக் கொள்ள முன் வருதல்
ஆகிய கண்ணோட்டங்களே படைப்புக்கு நெருக்கமாய் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவை என்பதே வர்ஜீனியா வுல்ப் முன் மொழியும் சிறப்பான பரிந்துரைகள்..

‘’என் வரையில்,ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது.மனித இருப்புக் குறித்த சில கவலைகள்,ஆதங்கங்கள்,வருத்தங்கள்,சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது....மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது.அதை மேம்படுத்தவும்,சக மனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது...மானுட நினைவுகள் காற்றில் காற்றில் கரைந்து போகாமல்  காப்பாற்றி வைக்கிறது.ஆகவே புத்தகங்கள் மனித வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள்’’
என்று புத்தக வாசிப்பு பற்றிய தனது சொந்த அனுபவத்தைக் கட்டுரையின் நிறைவாகப் பகிர்ந்து கொள்கிறார் எஸ் ரா.
தேர்ந்த எழுத்தாளராக இன்று அவர் உயர்ந்துள்ள நிலைக்கு அடித்தளமிட்டவை  அவரது பரவலான மிகச் சிறந்த வாசிப்புக்களே என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தண்ணீர்த் துறைக்கு வழிகாட்ட முடியும்..
கரம் பிடித்துக் கொண்டுபோய்ச் சேர்த்து விடவும் முடியும்..
நீரின் சுவையறிந்து திளைக்க அவரவர் ஆர்வமும் தன்முயற்சியும் மட்டுமே உடன் வரக்கூடும்.
நகர்ந்து போய்க் கொண்டிருக்கிற நதிநீரைப் போல இலக்கியமும் நமக்கு முன்னால் நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது.கையளவேனும் அள்ளிக் குடிக்கவில்லையென்றால் இழப்பு நமக்குத்தான்.

4 கருத்துகள் :

Unknown சொன்னது…

புத்தகத்தை வாசிக்கும் பொழுது , அந்த புத்தகம் புதிய உலகிற்கு நம்மை அழைத்து செல்கிறது. ஒவ்வொரு புத்தகமும் கடந்து போன வாழ்வின் பக்கங்களை நினைவு கொள்ள செய்கிறது.
புத்தகத்தின் மகத்துவத்தை நினைவு படுத்தும் தங்களது இந்த பத்தி , ஆழ் மனதில் வசந்தத்தை வீச செய்கிறது.
நன்றி..

தங்கள் படைப்புகளை நேசிக்கும் வாசகன்
தேவரஜ் விட்டலன்

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு,நன்றி மேடம்...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

சரவணகுமார்...
மிக்க மகிழ்ச்சி..இப்படித் தினம் தினம் என் எழுத்துக்களைவாசித்தபடியும் கருத்துரை எழுதியபடியும் இருக்கும் நீங்கள் உங்களைப் பற்றி அஞ்சலில் அறிமுகம் செய்து கொள்ளலாமே...

ethirparathathu சொன்னது…

வாசித்தல் என்பதே மீண்டும் நம்மை படிப்பது தான்...நம்மை நாம் தொடர்ந்து படித்து கொண்டே இருக்க படிக்கிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....