துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.10.10

எந்திரன்..தொழில்நுட்பத் தந்திரன்



வேட்டைய ராஜாவின் கணினியுகப் பதிப்பு..
பிரமிப்பூட்டும் வகையில் பிரம்மாண்டமானதொரு பின்புலத்தை முன் வைத்தபடி நீதிபோதனை செய்யும் சங்கரின் பழகிப்போன பழைய ஃபார்முலாவே இப்போதும் ரோபோ கோப்பையில் வைத்து ரஜினி,ஐஸ்வர்யாராய் ஆகிய கூடுதல் ஜோடனைகளுடன் பரிமாறப்பட்டிருக்கிறது
.


ஏராளமான பொருட்செலவும்,எக்கச்சக்கமான உழைப்பும் (ஓரளவு நடிப்பும் கூடத்தான்) இணைந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் இல்லாதது எதுவென்பதைத் தரமான திரைப்பட ரசனையில் ஓரளவு  பழகிப் போன பார்வையாளன் கூட எளிதாகக் கண்டு கொள்ள முடியும்.


படத்தின் இறுதியில் - ரோபோவாக வரும் சிட்டி ,தனது உடல் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வைத்துக் கொண்டே வருவதைப் போல நாமும் திரை அரங்கிற்குள் நுழையும்போதே சுயசிந்தனை,லாஜிக்,நல்ல திரைப்படம் பற்றி நமக்குள் ஊறிப்போயிருக்கும் முன்னனுமானங்கள் என்று எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் கழற்றி வைத்து விட்டுச் செல்ல முடிந்தால்  திரையில் நடப்பவற்றையெல்லாம்  கார்ட்டூனை ரசிக்கிற குழந்தைகளைப்போல ஒரு தமாஷாக எடுத்துக் கொண்டு மூன்று மணி நேரத்தை உற்சாமாகக் கொண்டாடிக் களிக்க முடியும்.(அப்படி எடுத்துக்கொள்ளமுடிந்ததனாலோ என்னவோ ...வழக்கமாக இப்படிப்பட்ட நேரங்களில் வரும் கோபம் இம்முறை எனக்கு வரவில்லை).


காதலியையும்,அபயக் குரல் எழுப்புபவர்களையும் காப்பாற்றும் பொறுப்பு சிட்டி ரோபோவிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ...சாகசம் மற்றும் ஸ்டைல் காட்டியாக வேண்டிய வேலை மனித ரஜினியாகியாகிய வசீகரனுக்கு இல்லை;காதலியிடம் கடற்கரையில் விஷமம் செய்ய வரும் ஆளைக் கண்டதும் மண்ணை வாரித்தூற்றிவிட்டுக் அவளது கையைப் பற்றிக்கொண்டு மூச்சிரைக்கப் புறங்காட்டி ஓடும் ரஜினியின் பிம்பம் சற்று low profile ஆக- தமிழ்த் திரைக்கும் ,அவரது ரசிகர்களுக்கும் புதிதாக இருப்பது இதனாலேதான்.படத்தில் ஓரளவுக்கு யதார்த்ததோடு ஒத்துவரும் ஆறுதலான விஷயம் இது.
முதல் பாதியில் வரும் சிட்டியின் பாவனைகளே நகைச்சுவைக்குப் போதுமானவையாக இருக்க...சந்தானமும் கருணாஸும் , அவர்களது அசட்டுத்தனங்களும் எதற்கு?(சில நேரங்களில் வில்லனின் அடியாட்களாகக் கூட அவர்கள் காட்சி தருகிறார்கள்)
மாறாக...ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் விஎம் சி ஹனீஃபா இடம் பெறும் காட்சி -அதில் அவரும் சிட்டிக்கும் நிகழும் உரையாடல் தரமான நகைச்சுவையை மிகவும் இய்ல்பாகத் தந்து விடுகிறது.


வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் சற்றே சுவாரசியமூட்டியபோதும்..
எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் 
என்பதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
பி.கு;
எங்கள்குடும்பத்தாரையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்த ஆரவாரமற்ற தில்லியின் திரையரங்கு ஒன்றில் எந்திரனைப் பார்த்த போது ....மதுரைத் திரையரங்குகளின் உற்சாகக் கூவலுடன் கூடிய பார்வையாளர்கள் ஒரு கணம் நெஞ்சுக்குள் மின்னலடித்ததைத் தவிர்க்க முடியவில்லை.
காரணம் இப்படிப்பட்ட படங்களைப் பொறுத்தவரை திரைப்படங்களை விடவும் சுவாரசியமானவை பார்வையாளர்களின் எதிர்வினைகள்.
தமிழ்ச் சமூகத்தின் மலினமாகிப் போய்விட்ட அரசியல் சமூக வரலாறுகளுக்கான உயிருள்ள ஆவணங்கள் அவை மட்டுமே. 

8 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நல்ல விமரிசனம்.நடுநிலையான பதிவு.

Radhakrishnan சொன்னது…

நல்ல பார்வை.

saravanakumar sps சொன்னது…

ந்ல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்

Jeyapandian Karuppan சொன்னது…

"எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் " -

நிஜ எந்திரன் ரசிகர்களை சொந்த லாபத்திற்காக பயன்படுத்தும் மிகப்பெரிய தந்திரன்!!!!.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இங்கே பெங்களூரில் 250 ரூபாயாம் டிக்கெட்!!! (அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாயாம்!, சினிமாவுக்கு கட்டணம் ஆயிரம் ரூபாயாம் தங்கதமிழ்நாட்டில்!!) ஏற்கனவே இந்த மாதிரி கழிசடைகளுக்கு (ஆயரத்தில் ஒருவன்) பணம் அழுததோடு வெறுத்துபோனேன். ஏனென்றல் காசு ஒரு பொருட்டு இல்லையென்றாலும், வரும்போது தலைவலியோடு திரும்ப வேண்டி இருக்கிறது. போதாகுறைக்கு இந்த சனியன்கள் கருத்து சொல்கிறேன் என்று கழுத்தை அறுக்கிறார்கள். ஈழத்தில் செத்தவர்கள் குருதி காயவில்லை இன்னும், நமது தன்மான தமிழருக்கும், முத்தமிழ் தலைவருக்கும் பொழுது போக இருக்கவே இருக்கிறான் தந்திரன்...

ஏதோ நீங்கள் குழந்தைகளோடு பொழுதுபோக்கிற்காக படம் பார்த்ததனால் உங்கள் நிலை புரிகிறது!! வேறென்ன சொல்ல!!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மந்தைக் கூட்டத்தின் சந்தை இரைச்சலில் இவ்வாறான விமரிசனமும் கவனம் பெற்றிருப்பது மகிழ்வளிக்கிறது.
ஜெயபாண்டியன்...உங்கள் கருத்தையேதான் நானும் எழுதியிருக்கிறேன்.கடைசி வரியைப் பாருங்கள்.தமிழ்ச் சமூகம் எத்தனை மலினமாகிப் போய்விட்டது என்ற ஆதங்கத்தை அதில் பதிவு செய்திருக்கிறேன்.

Jeyapandian Karuppan சொன்னது…

மன்னிக்கவும்! நான் என்னுடைய கோபத்தையும் உங்களோடு சேர்த்து பதிவு செய்திருகிறேனேயன்றி வேறொன்றுமில்லை அம்மா.

சுருக்கமாக கூறின், வழிமொழிந்தேன் அவ்வளவே!!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

\\வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் //

நல்ல உதாரணம் அம்மா :)

என்னது நானு யாரா? சொன்னது…

நல்ல விமர்சனம்! நானும் படம் பார்த்தேன். லாஜிக் எல்லாம் பார்க்கும் அறிவு இருந்தால் சுத்தமாக படத்தினை இரசிக்க முடியாது. சரியாக சொன்னீர்கள். உதாரணத்திற்கு குப்பைக்கூலத்தில் எல்லா பாகங்களும் தனித்தனியாக கிடக்கும் சிட்டி எப்படி ஒன்று சேர்ந்து வில்லனின் காரில் ஏறிக்கொள்கிறது உட்பட பல காட்சிகள் அபத்தமாக உள்ளன. சும்மா தமாஷாகப் பார்க்கவேண்டியது தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....