(நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -1 என்னும் பதிவின் தொடர் இடுகை)
மரபின் செழுமையோடு,அதன் வேர்களை விட்டு விடாமல் நவீன இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைவானதுதான்.அந்தக் குறையை ஈடு செய்யும் முழுத் தகுதி பெற்ற நாஞ்சில் நாடன் தமிழின் மரபிலக்கியங்கள் பலவற்றில்
தோய்ந்து கலந்திருப்பவர்.
தோய்ந்து கலந்திருப்பவர்.
‘கொங்கு தேர் வாழ்க்கை,’யாம் உண்பேம்’,’பரிசில் வாழ்க்கை’,’சூடிய பூ சூடற்க!’என இத் தொகுப்பிலுள்ள கதைகளுக்கு மட்டுமன்றி
‘என்பிலதனை வெயில் காயும்’,’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ எனத் தனது நாவல்,மற்றும் கட்டுரைத் தொகுப்புக்களுக்கும் கூடப் பழந்தமிழ் இலக்கியச் சொற்றொடர்களை - அவற்றின் உள்ளார்ந்த பொருள் ஆழங்களின் புரிதலோடு தலைப்புக்களாகப் பயன்படுத்தியிருப்பவர் அவர்.
நெருக்கியடித்துக்கொண்டு வரிசையாக அமைந்திருக்கும் லைன் வீடுகள் !
அங்கே...தேனைத் தேடுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும்
(கொங்கு தேர் - தேனைத் தேடித் தேர்ந்து கொள்ளும்)தும்பிகளைப் போல் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கான பொருளைத் தேடுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு இயந்திர கதியில் உழலும் மனிதர்கள் !
எதற்குமே நேரமில்லாமல் இயந்திரமாய்ச் சுற்றும் அவர்களின் வாழ்வில், மனைவியை இழந்த சோகத்துக்கு மாற்றாக- வயதான ஒரு மனிதர் நாதசுரம் வாசிப்பதும் கூட ஒரு ஆடம்பரம்தான்! மற்ற குடியிருப்புக்களில் வாழ்பவர்களுக்குத் தொந்தரவு தரும் ஒரு செயல்தான்! அற்பமான அந்த வடிகாலுக்குக் கூட வழியில்லாமல் வாழ்க்கைக் கயிறு அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருப்பதைக் ‘கொங்கு தேர் வாழ்க்கை’என்ற தலைப்புத் தொடரே அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டி விடுகிறது.
குப்பையில் விளைந்த கீரையின் முற்றாத இளம் தளிரைக் கூடச் சுற்றத்தோடு கூடியிருந்து உண்ணும் சங்க இலக்கிய மரபின் சாயல் பதிவாகியிருக்கும் கதை,இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘யாம் உண்பேம் ’ என்னும் அற்புதமான ஆக்கம்.
தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அசலான அன்பவமே இக் கதைக்கான தூண்டுதல் என நாஞ்சில் நாடன் குறிப்பிடும்
இப் படைப்பு , உன்னதமான மனித இயல்புகளை முன் வைத்தபடி, மானுடத்தின் உன்னத உச்சங்களை நோக்கி வாசகர்களை இட்டுச் செல்கிறது.
கடும் பஞ்சமும் , வறட்சியும் வாட்டி வதைக்கும் ஒரு மராத்திய கிராமம்; அங்கே பட்டினி தாங்காமல் நிகழும் தற்கொலைச் சாவுகளாகத் தன் மகனது குடும்பம் முழுவதையுமே மொத்தமாகப் பறி கொடுத்த முதியவர் ஒருவர் , புகைவண்டி ஒன்றில் பயணிக்கிறார்.
குடும்ப உறுப்பினர்களின் சாவுத் துன்பம் ஒருபுறம் ஆட்டிப் படைத்தாலும்,பசிக் கொடுமையும் அவரை வாட்டி வதைக்காமலில்லை.
எதிர் இருக்கையில் அமர்ந்துள்ள விற்பனைப் பிரதிநிதி ஒருவர் உணவுப்பொட்டலத்தைப் பிரித்து ரொட்டி சாப்பிடுவதைப் பார்க்கிறார்.
.சாப்பிடும் பயணியிடம் மெள்ள நெருங்கி வரும் அந்த முதியவர்..
’’ அமி காணார்..அமி காணார் ‘’என்கிறார்.
’உணவை எனக்குப் பிச்சை இடுங்கள்’’என்று அவர் கேட்கவில்லை.
கடும்பசியிலும் ‘ஈயென இரத்தல் இழிவென்றே எண்ணும் அவர்
’’நாம் இருவருமாக அதை உண்ணலாமா...’’என்றே நாசூக்காகக் கேட்கிறார்.
.அந்தப் பயணியும் அதற்குச் சளைத்தவரில்லை.
‘ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று..’என்ற மரபின் நீட்சியாய்
கேட்பவரின் வயிற்றுப் பசியை முழுமையாய் ஆற்ற இன்னும் கொஞ்சம் உணவு.....இன்னும் சிறிது ரொட்டி இல்லாமல் போய்விட்டதே என்றே பரிதவிக்கிறார் அவர்.
இரப்பவர் ‘நாம் பகிர்ந்து உண்ணலாமா’எனக் கேட்க...
கொடுப்பவர் ‘இன்னும் சிறிது உணவு இல்லையே’என்று தவிக்க..அந்தக் காட்சியின் கணத்தை நாஞ்சில் நாடன் விவரித்துக் கொண்டு போகும் பாங்கில் நாம் நெகிழ்ந்து போகிறோம்.
’’தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினான்.அடுத்த ஸ்டேஷன் எப்போது வரும் என்று தெரியவில்லை.
வடாபாவ் கிடைக்கலாம்;பச்சை வாழைப்பழங்கள் கிடைக்கலாம்.
அவருக்கு இரண்டு வாங்கித் தர வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டான்.
காதில் தகப்பன்சாமியின் உபதேசம் போல ஒலித்துக் கொண்டிருந்தது நாத்ரேயின் குரல் ...மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல..
’யாம் உண்பேம்’..’’
என்று நம் உள்ளத்தில் அற எழுச்சியை அழுத்தமாகப் பதிவு செய்தபடி நிறைவு பெறுகிறது சிறுகதை.
’நல்லுணவும் நாப்பழக்கம்’என்ற கொள்கையைக் கொண்டிருப்பவர் நாஞ்சில்நாடன்.
நாஞ்சில்நாட்டு உணவு வகைகள் பற்றியே தனியாக ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கும் இவரது படைப்புக்களில் குமரி மாவட்ட உணவுப்பண்டங்கள் பற்றிய குறிப்புக்கள் மட்டுமன்றி அலுவல் நிமித்தமாக வாழ நேர்ந்த மகாராட்டிரம் முதலிய வடமாநிலங்களில் பழகிக் கொள்ள நேர்ந்த உணவு வகைகளின் விவரிப்பும் (அவற்றின் தயாரிப்பு முறை உட்பட விளக்கமான விவரணைகளுடன் ) இடம் பெற்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
லா.ச.ரா., கி.ராஜநாராயணன் ஆகியோரின் கதைகளில் உள்ளது போலவே இவரது சிறுகதைகளின் சிறப்புக் கூறுகளில் ஒன்றாகவும் இது அமைந்திருக்கிறது.
‘டால் சாவல்,உசல் சாவல்,டால் பாவ்,உசல் பாவ்,ரொட்டி சப்ஜி,
பட்டாட்டா வடா,டோக்ளா,ஷீரா,லஸ்ஸி...என்று வரிசையாக வடக்கத்திய உணவு வகைகளின் பட்டியல் (பாவ் என்பது நாட்டு பிரட் என்னும் விளக்கத்தோடு)’ ,
‘’மருமகள் அவல் ஊற வைத்து உருளைக் கிழங்கு வேக வைத்துப் பிதிர்த்துப் பச்சை மிளகாயும் வெங்காயமும் போட்டுத் தாளித்து ‘போஹா’ செய்து தருவாள்’’
என விளக்கமான செய்முறைக் குறிப்பு என்று கதை ஓட்டத்தோடு இயைந்தபடி வேற்றுப் புலத்தின் உணவுப் பண்பாட்டை நாஞ்சில் நாடன் விளக்கிக் கொண்டே செல்லும்போது ,
சொந்த மண்ணைத் தாண்டி வேறு இடங்களில் (தொழில்,அலுவல் நிமித்தமாகப்)புலம் பெயர்ந்து வாழ நேரும் அனைவருமே - உணவு உள்ளிட்ட அங்குள்ள பண்பாட்டுக்கூறுகளைக் கூர்ந்து அவதானிக்கவும் ரசிக்கவும் பயில வேண்டும் என ஒரு பாடத்மே நமக்குக் கிடைத்து விடுகிறது.
சமையல் விவரங்களைப் போலவே தென்னாட்டு,வடநாட்டுப் புவியியல் விவரங்களும் நாஞ்சில் நாடனின் கதைகளில் புள்ளிவிவரத்துடன் கூடிய துல்லியத்தோடு உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
பஞ்சலிங்கபுரம்,வாரியூர்,ராஜாவூர்,ராஜாக்கமங்கலம்,தக்கலை,
இரணியல்,ஈத்தாமொழி,பறக்கை,சுசீந்திரம்
என நாஞ்சில் நாட்டு ஊர்களை விரல்நுனியில் வைத்திருப்பது போலவே வட இந்தியச் சிற்றூர்களின் இருப்பிடத்தையும், அவற்றுக்குச் சென்று சேரும் வழி மற்றும் தூரத்தையும் கூடச் சற்றும் பிசகாமல் அவரால் சொல்லி விட முடியும்.
அவரது சிறுகதை ஒன்றில் சூரத் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் பற்றிய குறிப்பு பின்வருமாறு விரிகிறது..
’’மும்பையிலிருந்து நவ்சாரி 230 கி.மீ ..மும்பையிலிருந்து போனால் விரைவு வண்டியானால் வாப்பி,வல்சாட்,பில்லிபோரா என்று நவ்சாரி தாண்டிப்போய் சூரத்தில் இறங்கித் திரும்பி வர வேண்டும்....வாப்பியின் அருகில் இருந்தது டாமன்....கோவா அரபிக் கடலில் என்றால் டையூ,டாமன் கம்பாட் வளைகுடாவில். கடல் வழியில் டாமண்டையூ இடையிலுள்ள தூரம் 200கி.மீ,தரை வழி 600 கி.மீ..’’
இவ்வாறு அடுக்கிக்கொண்டே போய்விட்டு இவ்வளவையும்,
‘’என் பூகோள அறிவைப் புகட்டுவதற்காக எழுதவில்லை....எப்போதும் பால் எடுத்த தேங்காய்ப்பூக் கோருகளைத்தானே பாடப் புத்தகங்கள் உண்ணத் தருகின்றன’’
என இன்றைய கல்வி அமைப்பின் மீது ஒரு குட்டையும் வைத்து விடுகிறார் நாஞ்சில்.
நாஞ்சில் நாடனின் கதைகளில் இழையோடும் முதன்மையான மற்றொரு சிறப்பு,எந்தச் சிரமமுமின்றி வெகு எளிதாக...வெகு லாவகமாக அவரது எழுத்துக்களில் வந்து அமர்ந்து கொள்ளும் மெலிதான கிண்டல் அல்லது அங்கதம்.
தீவிரமான..கடுமையான...சோகமான...உக்கிரமான..குதூகலமான
எந்த ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றாலும் நையாண்டியில்லாமல் சொல்ல முடிவதில்லை நாஞ்சில் நாடனுக்கு.
‘செம்பொருள் அங்கதம்’,’பழிகரப்பு அங்கதம்’என்ற பெயரிலேயே கூட இரு சிறுகதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
பரிகாசம்,கேலி என்ற எல்லைகளையும் தாண்டி அறச் சீற்றம் என்ற நிலைக்கு அவரது கோபம் பயணப்படுகையில் அதற்கு வடிகாலாக இவரது எழுத்துக்களில் உருவெடுக்கும் ஒரு பாத்திரமே ‘கும்பமுனி’.
‘’இப்போது கும்பமுனி நாஞ்சில் நாடனின் குரலாகவே மாறி விட்டிருக்கிறார்’’(கமண்டல நதி)
என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளதைப் போல நாஞ்சில் நாடனேதான் கும்பமுனியாகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொள்கிறாரோ என எண்ண வைக்கும் அந்தப் பாத்திரத்தையும் கூடத் தன்னைத்தானே பரிகாசம் செய்து கொள்வதைப்போலக் கேலி செய்து கொள்ளத் தவறுவதில்லை அவர்.
‘கதை எழுதுவதன் கதை’,’கும்பமுனி முறித்த குடைக் காம்பு’ என இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளிலும் கூடக் கும்பமுனியின் எள்ளலுடன் கூடிய ஆவேசத்தை நம்மால் காண இயலும்.
மூன்று கோயில்களுக்குப் பூசாரியாக இருந்தாலும் தனக்குக் கிடைக்கும் படிப்பணத்தில் தரித்திரத்தைப் போக்கிக்கொள்ள முடியாமல் வெண்கல உருளியில் மாம்பிஞ்சை வைத்து நிவேதனம் செய்யும் பூசாரி(‘பரிசில் வாழ்க்கை’),
அரசு அலுவலகங்களில் ஒப்புக்குக் கொடி ஏற்றிவிட்டுக் கொடியேற்றக் கொடுத்த பணத்திலும் பங்கு ஒதுக்கப் பார்க்கும் கூட்டத்துக்கு நடுவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ஒரு தியாகியின் சிலைக்கு முன்னால் நின்று நெஞ்சுருகித் துதிக்கும் பெரியவர் (’சூடிய பூ சூடற்க’)
என இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்திலும் நிரம்பித் தளும்பிக் கொண்டிருப்பது அசலான ஒரு வாழ்க்கை!
’’காலாணிப் புற்றோ வாதக் காலோ..வறுமையோ..வயோதிகமோ மனிதனைத் தோற்கடித்து விட முடிவதில்லை’’
என இத் தொகுப்பிலுள்ள சிறுகதை ஒன்றில் குறிப்பிடுகிறார் நாஞ்சில் நாடன்.
மனிதத்தை முன் வைக்கும் யதார்த்தவாதப் படைப்புக்களும் கூட என்றும் தோற்று விடுவதில்லை என்பதற்கு சாகித்திய அகாதமி விருதை வென்றுள்ள இத் தொகுப்பின் கதைகளே சான்றுகள்...
பி.கு;
நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற தில்லி வந்தபோது அவரது பரிசு பெற்ற படைப்பான ‘சூடிய பூ சூடற்க!’ தொகுப்பிலுள்ள கதைகளை முன் வைத்து வானொலியிலும்,தில்லிதமிழ்ச்சங்கத்திலும் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்
இணையத்தில் நாஞ்சிலின் படைப்புக்கள்..
5 கருத்துகள் :
சாகித்ய அகாதமி விருதை, நாஞ்சில் நாடன் அவர்களுக்கு அறிவித்த நாளில் இருந்தே அவருடைய படைப்புகளை பற்றிய விமர்சனங்கள், தின சரி பத்திரிக்கைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் , இணையம் என அனைத்திலும் பரவலாக வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அவருக்கு சாகித்ய அகாதமி விருதை பெற்று தந்த ”சூடிய பூ சூடற்க” என்ற புத்தகத்தை பற்றியும், அதில் வெளிவந்துள்ள சிறந்த கதைகளை பற்றியும் யாரும் அவ்வளவாக பேசவும், எழுதவும் இல்லை.
அத்தகைய குறைகளுக்கு முற்று புள்ளி வைத்து, விருது பெற்ற அசல் படைப்புகளை பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை தாங்கள்தான் விருது அறிவித்த நாளில் இருந்தே பேசியும் , எழுதியும் வருகிறீர்கள்.
இப்போது தங்கள் வலைதளத்திலும் நாஞ்சில் நாடன் அவர்களின் ஆளுமையை தங்களின் இயல்பான, தெளிவான எழுத்துக்களின் வழியாக உலகறிய செய்து வருகிறீர்கள் .
நன்றி
அன்புடன்
தேவராஜ் விட்டலன்
தரமான எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் என் போன்றவர்களுக்கு அறிமுகபடுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சாகித்ய அகடமி விருந்தை வென்ற 'சூடிய பூ சூடற்க' என்ற புத்தகத்தில் வெளிவந்துள்ள சிறுகதைகளை பற்றிய உங்கள் விமர்சனமே மிகவும் உயர்வாகவும், இந்த புத்தகத்தை படித்தே ஆகவேண்டும் என்ற பெரும் ஆவலையும் தூண்டி விட்டது. 'வளைகள் எலிகளுக்கானவை' இணையத்தில் படிக்க உங்களால் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நன்றி.
சமீப இந்தியப் பயணத்தில் நாஞ்சிலின் புத்தகங்கள் சில வாங்கினேன். அவ்வளவு பரவலாக புத்தகக் கடைகளில் விற்கப்படவில்லையே? இவர் எழுத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
காலாணிப் புற்றோ வாதக் காலோ..வறுமையோ..வயோதிகமோ மனிதனைத் தோற்கடித்து விட முடிவதில்லை’’//
நெகிழ்ச்சியான பகிர்வு..பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக