துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.6.11

வைகையிலிருந்து யமுனைக்கு...

ஜூன் 3ஆம் தேதி முதல் தில்லிப் பதிப்பாகவும் வரத் தொடங்கியுள்ள தினமணி நாளிதழ்,அந்நிகழ்வை ஒட்டித் தனியே சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதற்காக எழுதப்பட்ட ,சுருக்கப்படாத என் கட்டுரை..கீழே..


வைகையிலிருந்து யமுனைக்கு...

வைகைக் கரையிலிருந்த என்னை யமுனை நதி தீரத்தை நோக்கிக் காலம் இடப்பெயர்ச்சி செய்த ஆண்டு 2006.  
குடியமர்தல் சார்ந்த புறவசதித் தேடல்கள் ஒரு புறமிருக்கக் காலையில் கண் விழித்ததும்,கண்ணும் மனமும் அப்போது உடனடியாகத் தேடித் தவித்தது தினமணி நாளிதழை மட்டுமே!கடந்த ஐந்து ஆண்டுகளாக எவருடன் பழக நேர்ந்தாலும் தினமணி’யைத் தில்லியில் எப்படிப் பெறுவது என்பதே என் முதற்கேள்வியாக இருந்திருக்கிறது.கணினி வசப்பட்டிருக்காத தொடக்க நாட்களில்,தினமணியை இணையத்தில் படிக்கவும் அறியாமல்,நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாமல் தத்தளித்துத் தடுமாறிய அந்த நாட்களை நினைவுபடுத்திப் பார்க்கையில், இனி, இந்தியத் தலை நகரிலிருந்தே தினமணி வெளிவரப் போகிறது என்ற நற்செய்தி,காதில் தேன் பாய்ச்சுகிறது. தினமணி நிர்வாகத்தினருக்கும்,ஆசிரியர் குழுவுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

மாணவப் பதின் பருவத்தில்மாநில அளவிலான ஒரு போட்டியில் வெற்றி பெற்றுச் சக மாணவர் குழுவோடு 1969இல் முதன்முதலாகக் கால் பதித்த தில்லி..,பிறகு சொந்தக் காரணங்களுக்காகத் தொண்ணூறுகளின் இறுதிக் கட்டத்தில் அவ்வப்போது வந்து சென்ற தில்லி...அந்தந்தக் காலகட்டங்களுக்கே உரிய தன்மைகளோடு ஓரளவு வசீகரித்திருந்தபோதும் - வழிப்போக்கராக மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்த நிலை மாறி,வசிப்பதற்கென்று வரும்போது எந்தவகையில் வரவேற்கப் போகிறதோ என்ற பயங்கலந்த திகைப்பும்,மிரட்சியும் முதலில் என்னை ஆட்கொண்டிருந்தது உண்மை.


மிரட்சிக்கு முதல் காரணம் மொழி! இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திற்கு முன்பு,தமிழகத்தில் பரவலாகச் செயல்பட்டு வந்த தட்சிண பாரத இந்தி பிரசார சபாக்களின் துணையால் இளம் வயதில் சபாத்தேர்வுகள் நான்கில் வெற்றி பெற்றிருந்தபோதும்  மொழியைத் தொடர்ந்து பழகுவதில் நேர்ந்து விட்ட மிகப் பெரிய இடைவெளி-குறிப்பாகப் பேச்சு மொழியில் தன்னம்பிக்கையின்மை ஆகியவை,அங்கே தொடரப் போகும் வாழ்க்கைக்கு மிரட்டலான உட்குரல்களாக ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருந்தன.இப்போது ஓரளவு பழகி அரைகுறை இந்தியில் சமாளிக்கப் பழகி விட்டாலும்,கற்றுத் தரப்படும் இந்திக்கும்,பிஹாரி,பஞ்சாபி முதலிய பல வட இந்திய மொழிகளின் கலவையாக அமைந்திருக்கும் புதுதில்லியின் கொச்சைமொழிக்கும் இடையே செந்தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையிலிருப்பதைப்போன்ற பெருத்த வேறுபாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

தில்லிவாழ் வடவர்கள்,தங்கள் மொழியின் மீது கொண்டிருக்கும் பிடிப்பு,பிரமிப்பூட்டுவது;அசாதாரணமானது. மொழியின் மீதான ஈடுபாட்டை முழக்கங்கள் அதிகமின்றித் தங்கள் செயல்பாடுகளைக் கொண்டு மட்டுமே வெளிப்படுத்துபவர்கள் அவர்கள். வீட்டுக் கருவிகளைப் பழுது பார்க்க வரும் பணியாளில் தொடங்கி, வங்கிகளில் பெரும்பதவி வகிக்கும் அலுவலர் வரை-ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி விட்டாலே ஏதோ வேற்றுக் கிரகவாசிகளைப் போல அவர்கள் நம்மைப் பார்க்கத் தொடங்கி விடுவது,அங்கே சென்ற புதிதில் எனக்கு மிகவும் வியப்பூட்டியது.நாம் பேசும் ஆங்கிலத்தை அவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளவே வாய்ப்பளிக்காதபடி தொடர்ந்து நிகழும் உரையாடலைத் தங்கள் போக்கிலேயே-இந்தியிலேயே கொண்டு சென்று அவர்கள் முடித்து விடும் பாணி,தேசிய மொழியைப் பேசத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ‘உன் குற்றம்’என்பதையே மறைமுகமான தொனியில் கறாராக நமக்குப் புரிய வைக்கிறது.

தமிழைக் கேட்கவும்,தமிழ்மக்களோடு ஊடாடவும் வாய்ப்பற்ற கொடும்பாலையாகப் புதுதில்லி இல்லை என்ற இனிய உண்மை,இங்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே தெளிவாகத் தொடங்கி விட்டது. அரசின் உயரதிகார மட்டத்தில் தொடங்கித் தொழில் முகவர்களாக,அலுவலர்களாக,சிறு-பெரு வணிகர்களாக,வீட்டு வேலைப் பணியாளர்களாக,அன்றாடக் கூலிகளாகப் பல தரப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் அங்கிங்கெனாதபடி தில்லி முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள்.திரும்பிய திசைகளிலெல்லாம் கேட்கும் தமிழ்க் குரல்கள் ஒரு புறம் ஆறுதல் அளித்தாலும்,வான் பொய்ப்பினும் தான் பொய்யாக்காவிரியும் கூடப் பொய்த்துப் போய்விட்டதால் தலைக்காவிரி தழைத்துப் பாயும் பிரதேசங்களிலிருந்தும் கூடப் பஞ்சம் பிழைப்பதற்காகப் பலதமிழர்கள்,பல தலைமுறைகளுக்கு முன்பே தலைநகரத்தை நோக்கிப் புலம் பெயர்ந்துவந்திருப்பதை அறிய நேர்ந்தபோது மனம் இலேசாகத் துணுக்குற்றது. குறிப்பாகப் பெரும்பான்மையான அடித்தட்டுத் தமிழர்கள் ஈரோடு,திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதன் சமூக,பொருளியல் காரணங்கள் கவனம் பெறத்தக்கவை.

கீழ்மத்தியதர மற்றும் அடித்தட்டுத் தமிழர்களின் கல்வி மேம்பாட்டுக்காக-மிகக் குறைவான கட்டணத்தில்-புதுதில்லி தமிழ்க்கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்ப்பள்ளிகள், இங்குள்ள சாமானியத் தமிழர்களுக்குக்  கிட்டியுள்ள பெருவரம். தமிழ்ப்பள்ளி என்று பெயர் இருந்தாலும் கற்பிக்கும் மொழியாக ஆங்கிலத்தையே கொண்டு,மையக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தின்படி(CBSE)கல்வி பயிற்றுவிக்கும் இப் பள்ளிகளின் சிறப்புத் தன்மை,பிற பாடங்களோடு தமிழும் ஒரு கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது என்பது மட்டுமே.(அதற்கான தமிழ்ப் பாட நூல்கள் தமிழக அரசின் பாடத் திட்டத்தை ஒட்டி அமைபவை;அந்த நூல்களை ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசே இப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியும் வருகிறது).புதுதில்லியில் முறைப்படுத்தப்பட்ட தமிழ்க் கல்வி கிடைக்கும் ஒரே இடம்,இப் பள்ளிகள் மட்டுமே. 

தில்லி வாழ் தமிழர்களின் ‘பாலைவனப் பசுஞ்சோலை’,இங்குள்ள தில்லி தமிழ்ச்சங்கம்.சனி,ஞாயிறு மாலை வேளைகளில் வீட்டில் நிதானமாக ஓய்வெடுத்தபடி தொலைக்காட்சி பார்ப்பதை விடவும் தில்லித் தமிழர்களை அதிகமும் ஈர்த்து வைத்திருப்பவை தமிழ்ச்சங்க நிகழ்வுகளே. இலக்கியம்,கர்நாடக-நாட்டுப்புற இசை,திரை மற்றும் நாடகம்,பட்டிமன்றம் எனத் தமிழகத்தின் பலதுறைப் பிரபலங்களையும் அவ்வப்போது இந்நிகழ்வுகளில் எளிதாகப் பார்த்து விட முடிகிறது.பத்மவிருதுகளையும்,சாகித்திய அகாதமி,ஞான பீடம் ஆகியவற்றையும் வென்ற சாதனைத் தமிழர்களுக்குப் பரிசு கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே கிடைக்கும் முதல் மரியாதை,தில்லி தமிழ்ச்சங்கத்தினுடையதுதான்! நிகழ்வுகளையும்,பிரபலங்களையும் பார்க்கும் ஆசை ஒரு புறமிருக்கத் தங்கள் நட்புக்களையும்,உறவுகளையும் விட்டுவிட்டுத் தொலைதூரம் வந்திருப்பவர்கள் இங்குள்ள பிற தமிழர்களைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளவும்,ஒருவரோடொருவர் ஊடாடவும் உதவும் இடமாக...,தன் பெயருக்கேற்றபடி தமிழர்கள் சங்கமித்து மகிழ வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் களமாக... விளங்கி வருகிறது தமிழ்ச்சங்கம். எந்த ஒரு விழா எனினும்,இங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் மட்டுமன்றி,அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவது இச்சங்கத்தின் தனிச் சிறப்பு. 

தமிழ் இலக்கிய விமரிசகர்களான க.நா.சு.,வெங்கட்சாமிநாதன் படைப்பாளிகளான கஸ்தூரிரங்கன்,தி.ஜானகிராமன்,இந்திராபார்த்தசாரதி,வாஸந்தி,காவேரி லக்ஷ்மி கண்ணன் ஆகியோர் தங்கள் அழுத்தமான சுவடுகளை..முத்திரைகளைப் பதித்திருக்கும் தில்லியின் தமிழ் இலக்கியக் களத்தைத் தொடர்ந்து தக்க வைத்து விட வேண்டுமென்பதற்காகவே-சிற்றிதழ்களுக்கே உரிய பல சிக்கல்களை எதிர்ப்பட நேர்ந்தபோதும்,விடாமுயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டபடி ‘வடக்கு வாசல்’என்னும் இலக்கிய இதழை நடத்தியபடி,தீவிர இலக்கிய வாசகர்களுக்கான மற்றொரு வாயிலைத் தில்லியில் திறந்து வைக்கத் தளராத முயற்சி மேற்கொண்டு வருகிறார் அதன் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன்.

தில்லியில் மையம் கொண்டிருக்கும் அரசியல் சூழல்களைப் போலவே  இங்கு நிலவும் தட்பவெப்பமும் துல்லியமாகக் கணித்துச்சொல்ல முடியாத ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாய் உச்சங்களை நோக்கியே பயணிக்கிறது.காடாறு மாதம் நாடாறு மாதமாய் அக்டோபர் இறுதியில் துவங்கும் குளிர்காலம்,டிசம்பர்,ஜனவரியில் அதன் உச்சம் தொட்டு மார்ச் வரைக்கும் நீண்டு கொண்டு போகிறது;உடன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட முடியாதபடி தகிக்கும் அனல் காற்று ஏப்ரலிலேயே தொடங்கி விடுகிறது.முந்தைய நாள் வரை ஸ்வெட்டரும் கோட்டுமாய்த் திரிந்து விட்டு,அடுத்த நாளிலிருந்தே குளிரூட்டும் சாதனங்களின் துணையை நாடியாக வேண்டிய விசித்திரம்! வெயில் காலங்களில் காணும் மற்றொரு வினோதம்,மிகத் தாமதமாக நிகழும் சூரிய அஸ்தமனமும்,மிக மிக விரைவாக நிகழ்ந்து விடும் சூரிய உதயமும்!காலை 5 மணிக்கே நம்மூரின் காலை 7 மணி நிலவரமும்,மாலை 7 மணிக்கு நம்மூரின் மாலை 5 மணி நிலவரமும் இருப்பது,இங்கு வந்த புதிதில் எனக்குப் பெரிதும் வியப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோயில்களில் நடை திறக்கும் நேரம் தொடங்கிப் பள்ளிச் சிறுவர்களின் சீருடை வரை -  இருவேறு வகையாக முடிவு செய்பவை இப் பருவ மாற்றங்கள்தான்!

ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஏற்றபடி,தங்கள்  முகங்களைச் சட்டென்று சுளுவாக மாற்றிக் கொள்ளும் அங்காடிவீதிகளாகிய‘மார்க்கெட்டுகள்’, புது தில்லியின் மாயக் கவர்ச்சிகள். கனாட்பிளேஸின் ‘பாலிகா பஜார்’, கரோல்பாக், சரோஜினி நகர் என நகரத்தின் முதன்மையான வணிக மையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சற்றும் குறையாத எண்ணிக்கையில் உள்ளூர்வாசிகளும் அலைமோதுவதையும்,எண்ணூறு ரூபாயில் தொடங்கும் பேரம்,நூறு ரூபாய்க்குக் கூடப் படிந்து விடும் அதிசயத்தையும் அந்த மார்க்கெட்டுகளில் மட்டுமே காண முடியும். மேனகையை மறுதலித்துக் கண்பொத்தும் விசுவாமித்திரராய் ‘எதுவுமே வாங்கக் கூடாது’என்ற திடமான வைராக்கியத்துடன் காலடி பதிப்பவர்களையும் கூட விழுங்கி ஏப்பமிட்டுப் பர்ஸின் கனத்தைக் கரைத்து விடும் வல்லமை பெற்றிருப்பவை,இந்த அங்காடி பூதங்கள்.மிகவும் நிதானமாகக் காலை பதினோரு மணிக்கு மேல் சோம்பல் முறித்து விழிக்கும் இக் கடைகள்,தில்லியில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்களால் இரவு வெகு சீக்கிரமாகவே அடைக்கப்பட்டுவிடுகின்றன என்றபோதும் இவை ஈட்டும் லாபத்தின் அளவு கற்பனைக்கும் எட்டாதது.

தூசும்,மாசும் மிகுந்த இந்திய நகரங்களில் முதலிடம் வகிக்கும் தில்லியில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாட்டு முயற்சிகள் அண்மைக்காலமாக முடுக்கி விடப்பட்டிருப்பதன் விளைவு,புகையில்லா எரிவாயுவின் துணை கொண்டு இயங்கும் போக்குவரத்து ஊர்திகள். பிற விலைவாசிகளெல்லாம் வானுயர வளர்ந்து நிற்கும் தலைநகரில்,ஆட்டோ வாகனக் கட்டணம் மட்டும் அளவுக்கு அடங்கியதாக இருப்பதற்கான காரணமும் இதுவே.

புது தில்லியின் இதயப்பகுதிகளான இந்தியாகேட்,நாடாளுமன்றம்,குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் தேசியக் கட்சித் தலைவர்கள்,அமைச்சர்கள் ஆகியோர் குடியிருக்கும் தெருக்கள் இவை தவிர நகரின் பெரும்பாலான இடங்கள்,சரியான பராமரிப்பு அற்றவையாய்...குப்பைகூளங்கள்,பான்பராக் எச்சங்கள் மண்டிக் கிடக்கும் அழுக்கேறிய இடங்களாய் அருவருப்பூட்டி இந்தியத் தலைநகருக்கு வருகை புரியும் அயல்நாட்டவரை மட்டுமன்றி அனைவரையுமே முகம் சுளிக்க வைத்துவிடுகின்றன.

குறிப்பாகச் செங்கோட்டை அமைந்திருக்கும் பழைய தில்லியின் பகுதிகளைக் காணும்போது அவை இன்னமும் அந்தப் புராதன காலத்திலேயே தொடர்ந்து கொண்டிருப்பதான எண்ணமே
மேலிடுகிறது.

அகலமும்,கம்பீரமுமான மேம்பாலங்கள்...,அதிவிரைவாகச் செல்ல வழியமைத்துத் தரும் சுற்றுச் சாலைகள், நேர்த்தியும் விரைவும் கூடிய மெட்ரோ தடங்கள்.., இவை - இன்றைய புது தில்லியின் சிறப்புக்கள் என்றால்..அதே பாலங்களுக்கடியில்...சாலை ஓரங்களில்...நாயினும் கீழாய் ஒடுங்கிக்கிடந்தபடி-கடும் வெயிலையும்,கொடும் குளிரையும் எதிர்கொண்டு வாழ்ந்து வரும் பிச்சைக்காரர்களின் கூட்டமும்,சின்னச்சின்னப் பொருட்களை வாங்கச் சொல்லிக் கெஞ்சியபடி,நம்மைத் துரத்திக் கொண்டே வரும் பிஞ்சுச் சிறார்களின் முகங்களில் சாஸ்வதமாக உறைந்து போயிருக்கும் ஏழ்மையின் சோகத் தடங்களும் நம்மைத் தூங்க விடாதபடி துரத்தி அலைக்கழிப்பவை.

தனிப்பட்ட முறையில் தில்லி வாழ்க்கை எனக்கு அரிய பல வாழ்வியல் தரிசனங்களைத் தந்திருக்கிறது; குளிருக்கும் வெயிலுக்கும் ஈடு கொடுத்தபடி தஸ்தயெவ்ஸ்கியின் உலகப் பேரிலக்கியங்கள் இரண்டை (குற்றமும் தண்டனையும்,இடியட்/அசடன்) மொழிபெயர்க்கும் மிகப் பெரும் பணி தில்லி மண்ணில் நிறைவுற்றுச் சிறப்பானதொரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த வேதாத்திரி மகரிஷியின் மன வளக் கலைப் பயிற்சியை இங்குள்ள மையத்தில் பெற முடிந்திருக்கிறது; இலக்கிய நண்பர்களின் வட்டம் விரிவு பெற,அரிய பல சந்தர்ப்பங்கள் இங்கே எனக்கு வாய்த்திருக்கின்றன;கணினியைப் பழகி வலைப்பூ ஒன்றும் எழுதி வருவதால் அந்த வட்டத்தின் இளம் நண்பர்களும் என்னுடன் நட்புக் கொண்டிருக்கின்றனர்;இவற்றையெல்லாம் அமைதியாக அசை போட்டுப் பார்க்கையில்,தில்லியில் கழித்த நாட்கள், வெறுமையாகக் கழிந்து விடவில்லை என்றே தோன்றுகிறது.

காண்க;

தில்லியிலிருந்து ’தினமணி..’





9 கருத்துகள் :

மதுரை சரவணன் சொன்னது…

நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

தில்லி வாழ்வை தித்திப்பாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

//மேனகையை மறுதலித்துக் கண்பொத்தும் விசுவாமித்திரராய் ‘எதுவுமே வாங்கக் கூடாது’என்ற திடமான வைராக்கியத்துடன் காலடி பதிப்பவர்களையும் கூட விழுங்கி ஏப்பமிட்டுப் பர்ஸின் கனத்தைக் கரைத்து விடும் வல்லமை பெற்றிருப்பவை,இந்த அங்காடி பூதங்கள்//
மிக ரசித்தேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

தில்லிப் பதிவர் வெங்க்ட்நாகராஜ் அனுப்பிய மின் அஞ்சல்;(எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது)
உங்களது "வைகையிலிருந்து யமுனைக்கு" கட்டுரையை தினமணி சிறப்பு மலரிலும், தற்போது உங்கள் இணையப் பக்கத்திலும் வாசித்தேன். வைகையிலிருந்து தில்லி வந்ததில் ஏற்பட்ட மாற்றங்கள், தில்லி வாழ்க்கை, இங்குள்ள நடைமுறைகள் என்று எல்லாவற்றையும் தொட்டு அழகாய் கட்டுரையை நகர்த்திச் சென்று உள்ளீர்கள். நன்றாக இருந்தது.

Unknown சொன்னது…

அன்புள்ளா அம்மாவிற்கு ..
தங்கள் கட்டுரையை இணையத்தில் வாசித்தேன் , பின் தமிழ்சங்கத்தில் எனக்கு தங்கள் கட்டுரை வந்த தினமணி நாளிதழ் கிடைத்தது , மீண்டும் ஒரு முறை வாசித்தேன் , அவ்வேளையில் இணையத்தில் வாசித்து உணர்ந்த உணர்வுகளை விட நெருக்கமான உணர்வைக் கண்டேன் . தில்லியில் உள்ள அனைத்து பகுதிகளையும் அழகாக தொகுத்துள்ளீர்கள் . அதே நேரம் பெருமை மிகுந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தில்லி நகரை அசுத்தமாக்கி கொண்டிருக்கிறோம் என்பதையும் நயம்பட சுட்டிக் காட்டியுள்ளீர்கள் .
தங்கள் சேவை தொடரட்டும் ..

வாசகன்
தேவராஜ் விட்டலன்

அப்பாதுரை சொன்னது…

சுவையான கட்டுரை.
படித்ததும், எத்தனையோ வருடங்களுக்கு முன் ஆர்கேபுரத்தில் தங்கிக் கொண்டாடிய ஒரு கோடையின் நினைவு வருகிறது. ஆங்கிலப் படங்கள் தில்லியில் மட்டுமே அதிகம் ஓடியதாக நினைவு. புத்தம்புது பாலிகா பஜாரின் ஏசி மணம் இன்றைக்கும் கொஞ்சம் சிலிர்க்கிறது. 'பாத் பன் ஜாயே' என்று புரியாமல் இடுப்பை ஒடித்து ஆடியதும், நிருலாசில் வெஜிபர்கர் சாப்பிட்டு மேல்நாட்டை மனதால் தொட்ட அனுபவமும் சுகம். தமிழ்ச்சங்கத்தின் தாக்கம் அன்றைக்கும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆர்கேபுரம் அருகில் ஒரு முருகர் கோவிலில் தமிழ்க்கூட்டம் அதிகமாக இருக்குமே?

இந்தி தேசிய மொழியா? என்ன இப்படி சொல்கிறீர்கள்? :)

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி திரு அப்பாதுரை.இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடென்பதால் வெளிப்படையாக இந்தி தேசிய மொழி எனச் சொல்லப்படாமல் இருக்கலாம்.ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையினர் பேசுவதாக அம்மொழி இருப்பதால் அம் மொழிக்காரர்கள் பெரும்பாலும் அவ்வகை உணர்வையே கொண்டிருக்கிறார்கள்.மைய அரசு அலுவலக்ங்களில் இந்தி கட்டாயம் படித்தாக வேண்டும் என்னும் நியதி இருக்கிறது.
மேலும் கீழ்க்காணும் விக்கிபீடியா பக்கத்தைப் பார்த்தால் தேசிய மொழிக்குப் பல அர்த்தத் தளங்கள் இருப்பதை அறியலாம்.
//A national language is a language (or language variant, i.e. dialect) which has some connection—de facto or de jure—with a people and perhaps by extension the territory they occupy. The term is used variously. A national language may for instance represent the national identity of a nation or country. National language may alternatively be a designation given to one or more languages spoken as first languages in the territory of a country.//-http://en.wikipedia.org/wiki/National_language

அப்பாதுரை சொன்னது…

அடடே.. எனக்கும் இந்தி மொழி மிகவும் பிடிக்கும். இருந்தாலும் தேசிய மொழி என்று அரைகுறையாகத் தான் ஏற்க முடிகிறது.

National language என்பதற்கும் Official language என்பதற்கும் வேறுபாடு உண்டே? switzerlandல் மூன்று official languageகள். அமெரிக்காவில் கூட ஆங்கிலம் official language தான். இங்கிலாந்தில் கூட ஆங்கிலம் official language என்று நினைக்கிறேன்.

பரவலான அரசாங்க மொழி எனலாமா இந்தியை? அரசாங்க மற்றும் சில வர்த்தக நிறுவனங்களில் பிற இடங்களிலும் தத்தம் மொழியை பாவிப்பதையே இந்தியாவில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மும்பையில் இந்தியை விட மராத்தியை விரும்புகிறார்கள். கேரளாவில் இந்தியை விட மலையாளத்தை விரும்புகிறார்கள். கர்னாடகாவில் கன்னட மொழியை ஒருபடி உயர்வாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்தியுடன் தமிழும் பிறவும் தேசிய மொழிகள் என்றே கருதுகிறேன். ஐம்பது நூறு வருடங்களில் ஒருவேளை நிலைமாறி பொது மொழி ஒன்று வரக்கூடும். வந்தாலும் அது ஆங்கிலமாக இருக்க சாத்தியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.

நீங்கள் இந்தியை தேசிய மொழி என்றதால் தமிழையோ தெலுங்கையோ தேசிய மொழி அல்ல என்று சொல்லவில்லையே? நான் தான் சும்மா கிடந்த சங்கை ஊதினேன். மன்னிக்க வேண்டும்.

Unknown சொன்னது…

தில்லியைப் பற்றி எனக்குத் தெரியாத விஷயங்களையும் உங்களது கட்டுரையைப் படித்து தெரிந்து கொண்டேன் அம்மா. கட்டுரை மிக நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் அம்மா.

பெயரில்லா சொன்னது…

அருமையான கட்டுரை. உங்கள் தமிழுக்காகவே இன்னொருமுறை படித்தேன். நம் நாடேதான் என்றாலும் மொழி தெரியாத, புரியாத புது நகரத்தில் ஏற்படும் அனுபவங்களை சுவைபட எழுதி இருக்கிறீர்கள். வெகு சுவாரசியத்துடன் படித்தேன்.
இது போன்ற அனுபவம் எனக்கும் நான் பெங்களூர் சென்றபோது ஏற்பட்டது. எதையுமே நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும், அணுகும் முறையின் மூலமும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் விரைவில்
பெங்களூரும் என் ஊராகிவிட்டது. தலைநகரிலும் இப்பொழுது 'தினமணி' வெளியாகிறதில் உள்ள திருப்தி உங்கள் எழுத்தில் தெரிகிறது. படியுங்கள் ஆனந்தமாய்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....