நீரின் குளிர்ச்சி..தீயின் தகிப்பு ஆகிய இரண்டும் அவற்றை நாம் உணரும்போது மட்டுமே உறைக்கும்.
அவற்றிடமிருந்து நீங்கியதுமே அவ்வெம்மையும்,தண்மையும் நம்மிடமிருந்து விலகிப் போய்விடும்;அதுவே உலக இயற்கை.
தலைவி,நீங்கினால் சுடுகிறாள்..அவளைப் பிரியும்போது விளையும்
பிரிவுத்துன்பம் சுட்டெரிக்கிறது.
அவளை நெருங்கினாலோ அளவற்ற தண்மை தருபவளாக அவள் ஆகி விடுகிறாள்.
நெருப்பு என்ற ஒன்றுக்குள்ளேயே... தண்மை,வெம்மை என்ற இரு முரண்பட்ட இயல்புகளும் பொதிந்து கிடப்பது எப்படி என்பதே அவன் வியப்பு!
’’நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீ யாண்டுப் பெற்றாள் இவள்’’
இந்தக் கருத்தையே சற்று வேறுபட்ட முறையில் வளர்த்தெடுக்கிறது மற்றொரு பாடல்.
இது,தலைவியின் கூற்று.
இங்கே நெருப்பு,நீர் இரண்டும் இணைந்து காதலுக்கு முற்றிலும் வேறான இன்னுமொரு பரிமாணத்தைத் தருகின்றன.
தலைவன் தன்னிடம் கொண்டுள்ள நட்பும் உறவும்,
நீரும்,நெருப்பும் போலச் சாரச் சார்ந்து தீரத் தீர்வதில்லை என ஆதங்கப்படுகிறாள் தலைவி..
மலைச் சாரலுக்குச் சொந்தக்காரனான தலைவனின் நட்பு-கேண்மை (சாரல் நாடன் கேண்மை)அவனைச் சார்ந்திருக்கும்போது அவளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது இயற்கைதான்!(சாரச் சாரச் சார்ந்து)
ஆனால் அவன் அகன்று போன பிறகும் கூட...அவனால் தன்னுள் நேர்ந்த அந்தப் .பாதிப்பு...நிழலாகக் கூடவே தங்கி விடுவதையும் அந்த உணர்வுகளின் பிடியில் தான் அலைக்கழிவுபடுவதையும் (தீரத் தீரத் தீர்பு ஒல்லாதே ) தலைவி கூற்றாகக் கீழ்க்காணும் பாடல் அற்புதமாகப் படம் பிடிக்கிறது.
’’நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே’’
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே’’
தலைவனின் உறவு..நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் போலச் சாரச் சார்ந்து தீரத் தீர்வதாக அல்லாமல்,அவன் சாரச் சாரத் தலைவியைச் சார்கிறது;ஆனால்...அவன் விட்டு விலக விலக - தீரத் தீர..- அப்போதும் அது அவளைச் சார்ந்து ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறதே தவிர அவளை விட்டு விலகுவதாயில்லை.
அவன் பிரிந்தாலும் அவனது சார்பு தீர்ந்து விடவில்லை....
அவனது உறவின் இழை அற்றுப் போய்விடவில்லை..
தன்னுள் அது எஞ்சிப் போய் உறைந்து கிடக்கிறது என்பதையே இவ்வரிகளில் புரிய வைக்கிறாள் தலைவி.
சுருக்கமாக நறுக்குத் தெறித்த கச்சிதத்துடன் காதலையும் பிரிவின் ஆற்றாமையையும் மிகையின்றிச் சொல்லும் இப் பாடல் சங்கப் பாடல்களின் தொனியுடன் இருந்தாலும்...சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கவில்லை என்பதும் பா வகைகள் பற்றிக் கூறும் யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூலில் எழுதியவர் பெயர் சுட்டாத மேற்கோளாக (இணைக் குறள் ஆசிரியப்பாவுக்குச் சான்றாக) மட்டுமே இடம் பெற்றிருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.
4 கருத்துகள் :
இனிமையான முரணைச் சொல்லும் இரண்டு பாடல்களும் சுவையானவை. குறள் தொனியின் காரணமாக இன்னும் சுவையாக இருப்பது போல் படுகிறது. பிரிந்த காதலனின் மணம் காற்றில் தொக்கி நிற்பதாக இன்னொரு பாடலில் படித்திருக்கிறேன் (பொதுவாக பெண்களை மையமாக வைத்து மணம் என்பார்கள்).
பகிர்வுக்கு நன்றி அம்மா.
இனிமையான பாடல்
அழகான விளக்கம்
பகிர்வுக்கு நன்றி அம்மா
\\தலைவி,நீங்கினால் சுடுகிறாள்..அவளைப் பிரியும்போது விளையும் பிரிவுத்துன்பம் சுட்டெரிக்கிறது.அவளை நெருங்கினாலோ அளவற்ற தண்மை தருபவளாக அவள் ஆகி விடுகிறாள்\\
‘நீயும் நானும் சேரும்போது, கோடையில் மார்கழி’
புதுக்கவிதை படத்தில் மேற்கண்ட அடி ‘வெள்ளைப்புறா ஒன்று’ என்ற பாடலில் வரும்.
இதே அடி ரஜினி நடித்த பணக்காரன் என்ற படத்தில் வரும் ‘இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது’ என்ற பாடலிலும் இடம் பெற்றுள்ளது!
கருத்துரையிடுக